“ஆதியில் புத்தகங்களே இருந்தன. அவை என் புத்தகங்களாய் மட்டுமே இருந்தன. அவை இலக்கியத் தரமானவை/தரமற்றவை, அரசியல் சரித்தன்மை கொண்டவை/அற்றவை என்ற பிரிவினைகள் இல்லாதிருந்தது. அப்போது எனக்கு புரிந்தவை/புரியாதவை என்ற இரு வகைமைகளே இருந்தன. புரிந்தவற்றுள்ளிருந்து பிடித்தவை/பிடிக்காதவை என்ற வகைமைகள் தோன்றலாயின. பிடித்தவற்றுள்ளிருந்தே எனக்கான வாசிப்பு பிறந்தது.”

விக்னேஷ் 1:1-18

பதின் பருவத்தில் இலக்கியம், வாசிப்பின்பம், தரிசனம், முற்போக்கு, பிற்போக்கு போன்ற சொற்கள் அறிமுகமாவதற்கு முன் நாம் வாசிக்கும் புத்தகங்களுடனான நம்முடைய உறவு மிகவும் அந்தரங்கமானது.  அந்த வயதிற்கே உரிய அசட்டுத்தனமான தன்முனைப்பையும், தற்பெருமையையும் விளக்கிவிட்டுப் பார்த்தால் முழுக்க முழுக்க உணர்வுப்பூர்வமானது. உண்மையில், அத்தகைய வயதில் நமக்கு அறிமுகமாகும் புத்தகங்களில் இருந்தே நம்முடைய வாசிப்பு சார்ந்த அடிப்படை ரசனைகள் உருவாவதாக எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. சில நேரங்களில் அவை வாசிப்பு சார்ந்த ரசனைகளாக மட்டுமின்றி வாழ்க்கை சார்ந்த நம்பிக்கைகளாக மாறுவதும் உண்டு. எனவே ஹேரி பாட்டரும் (Harry Potter), கேம் ஆஃப் த்ரோன்ஸும் (Game of Thrones) கோலோச்சிக்கொண்டிருந்த பள்ளிக்கூடத்தில் “ஜிம் கார்பெட் (Jim Corbet) படிச்சிருக்கியா?” என்று கேட்பவன் எதிர் காலத்தில் தீவிர இலக்கிய வாசகன் ஆகாமல், வேறு என்ன ஆவான்?

பள்ளி நூலகத்தில் யதேச்சையாக கைக்குக் கிடைத்த ருத்ரபிரயாகின் ஆட்கொல்லி சிறுத்தை (The Maneating Leopard of Rudraprayag) எனும் குறுநாவலில் இருந்து தொடங்கியது ஜிம் கார்பெட் உடனான என் உறவும் கானுயிர்கள் மீதான என் ஆர்வமும். அன்று முதல் இன்று வரை மனதிற்கு மிக நெருக்கமான எழுத்தாளராக இருப்பவர் கார்பெட். ஆனால் என் பதின் பருவ ஆதர்ச நாயகன் எனும் அளவிற்கு அப்பாலும் கார்பெட் எனக்கு பலவற்றை அளித்திருக்கிறார் என்பதை இந்த சில ஆண்டு கால தீவிர இலக்கிய வாசிப்பிற்குப் பிறகு உணர முடிகிறது. அவற்றுள் பிரதானமானது மொழி வழியே உருவாக்கக்கூடிய மெய்நிகர் அனுபவங்களுக்கான சாத்தியம் சார்ந்த புரிதலே. மொழி வழியே என் கண் முன் இருக்கும் புத்தகத்தை மறையச் செய்து என்னை இமைய மலையின் காடுகளுக்கு கடத்திச் செல்ல முடியும் என்று முதன் முதலாக எனக்கு உணர்த்தியவர் கார்பெட். அடிப்படையில் ஒரு இலக்கியப் படைப்பின் வேலை, மொழியின் கூர்மையான பயன்பாட்டின் வழியே ஒரு தீவிரமான நிகர் அனுபவத்தை வாசகனுக்கு அளிப்பதுதானே தவிர அந்த அனுபவம் சார்ந்த வியாக்கியானங்களை அளிப்பது அல்ல எனும் புரிதலையும் எனக்கு முதன் முதலில் அளித்தவர் கார்பெட்தான். கார்பெட்டின் அறிமுகத்திற்குப் பிறகான இந்த சில ஆண்டு கால தொடர் வாசிப்பில் கார்பெட் அளவிற்கு வாசிப்பின்பத்தையும் தீவிரமான மெய்நிகர் அனுபவங்களையும் அளித்த எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். இதற்கான முதல் காரணமாக நான் நினைப்பது கார்பெட்டின் மொழி. அத்தனை கூர்மையான, எளிய மொழியும் அதன் பிரயோகம் சார்ந்த பிரஞையையும் ஒன்றாகப் பெறுவது ஒரு வரம். அந்த மொழியின் காரணமாகவே அவரால் அத்தனை தீவிரமான அனுபவங்களை வாசகர்களுக்கு அளிக்க முடிந்தது. இரண்டாவது காரணம் அவர் தேர்ந்தெடுத்த களம். இருபதாம் நூற்றாண்டின் இமய மலைக் காடுகளும், பழங்குடி மக்களும், ஆட்கொல்லி விலங்குகளுமென அத்தனை புறவயமான ஒரு களத்தை அவர் கையாண்டார். ஆனால் அந்த காட்டின் ஒவ்வொரு புல்லையும் ஒவ்வொரு புலியையும் அவரால் தன் மொழியில் தத்ரூபமாக உயிர்ப்பிக்க முடிந்தது. அத்தனை புறவயமான காட்டை வெறும் தகவல்களாக மட்டுமின்றி அத்தனை அகவயமான அனுபவமாக வாசகனின் மனதில் நிகழ்த்த முடிந்த புனைவெழுத்தாளர்கள் அரிதானவர்கள். எனவே கானுயிர்கள் சார்ந்து எழுதப்படும் எந்தவொரு புனைவிற்கும் (சொல்லப்போனால் எதைச் சார்ந்து எழுதப்படும் எந்தவொரு புனைவிற்கும்) என்னிடம் இருக்கும் அளவுகோல்களில் ஒன்று கார்பெட்டின் அளவுகோல். அந்த அளவுகோலில் கார்பெட்டை தாண்டிச் சென்ற வெகு சில அரிதான படைப்புகளுள் ஒன்று எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் சமீபத்திய நாவலான “வேங்கை வனம்”.

ஒரு வகையில் புலிகளைப் பற்றிய புனைவுகள் எனும் அளவிற்கு அப்பால் கார்பெட்டுக்கும் வேங்கை வனத்திற்கும் இடையில் எந்தவொரு ஒற்றுமையும் இல்லை என்று எளிதாக வாதிட முடியும். தன் வேட்டை அனுபவங்களை புனைவுகளாக்கிய கார்பெட்டின் படைப்புகளுக்கும். ரணதம்போரின் ஆயிரமாண்டுகால வரலாற்றை காடுகள், தெய்வங்கள், கோட்டைகள், அரசர்கள், சாமானியர்கள், விலங்குகள், வேட்டையர்கள் என காலம் காலமாக தொடர்ந்து, செவ்வியல் தன்மையோடு முன்வைக்கும் வேங்கை வனம் நாவலுக்கும் இடையில் ஒப்புமைகளை உருவாக்குவது உண்மையில் சற்று சிக்கலானதுதான். ஆனால் புனைவின் பேசுபொருள் சார்ந்து மட்டுமின்றி, புனைவாக்கச் செயல்பாடு எனும் அடிப்படை சார்ந்தும், கானுயிர் வாழ்வின் நுட்பமான விவரணைகள் சார்ந்தும், தொய்வில்லாத வாசிப்பின்பம் சார்ந்தும், அனைத்திற்கும் அப்பால் படைப்பின் மொழி வழியே நம் அகத்தில் உருவாக்கப்படும் இயற்கையின் பிரம்மாண்டம் சார்ந்தும் ஒப்புநோக்கத்தக்கவை இப்படைப்புகள். ஆனால் நாவல் எனும் கலைவடிவம் அளிக்கும் சாத்தியங்களின் காரணமாகவும் அதன் மீதான எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் அசாத்தியமான கட்டுப்பாட்டின் காரணமாகவும் வேங்கை வனம் கார்பெட்டின் அனுபவத்தளத்தைக் கடந்த வலுவான இலக்கியமாக நிலைபெறுகிறது. (குட்டிப்புலி 16 அடி பாய்வதுதானே நியாயம்?)                  

10ஆம் நூற்றாண்டில் ரணதம்போர் கோட்டையை உருவாக்கிய ஜெயந்த் சௌஹானில் தொடங்கி, அலாவுதீன் கீல்ஜியின் படையெடுப்பு, முகலாயர்களின் காலம், ஆங்கிலேய ஆட்சிக் காலம், சுதந்திர இந்தியாவின் 2014 வரையிலான காலகட்டம் என ரணதம்போரின் ஆயிரம் ஆண்டு கால வரலாற்றை பின்புலமாகக் கொண்ட நாவலில் கோட்டைகளும், கொடிகளும், அரசர்களும் நாடகத் திரைச்சீலைகள் போல் மாற்றமடைய, காலாதீதமாக அந்நிலத்தில் ஆட்சி செய்கின்றன புலிகள். எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் படைப்புகளின் பிரதான அம்சமாக கருதப்படும் நுட்பமான சித்தரிப்புகள், குறிப்பாக பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்புகள், இந்த நாவலில் ரணதம்போரை ஆளும் புலிகளின் வடிவில் வெளிப்படுகிறது. சுபுத்ரி, மோஹினி, பத்மினி, நூர்ஜஹான் என காலாதீதமாக நீளும் அந்த காட்டரசிகளின் நிறையில் தோன்றுகிறாள் மச்லி. நாவலின் கதாநாயகி என்று சொல்லத்தக்கவள். காலம் காலமாக பிறந்து வந்துகொண்டே இருக்கும் ரணதம்போரின் ஆன்மா அவள். மச்லியும் அவள் தலைமுறைகளும் காலாதீதமாக ஆட்சி செய்யும் காட்டில் ரானாக்களும், சுல்தான்களும், அரசர்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சிறிது காலம் தங்கிவிட்டுச் செல்கிறார்கள். அவ்வளவே.

உலகிலேயே அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட புலி என்ற பெருமையை கொண்ட மச்லியை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் உருவாக்கும் மச்லியின் புனைவுக் கதாபாத்திரம் ஒரு தேர்ந்த புனைவாசிரியனின் கைகளில் ஒரு தகவல் எத்தனை நுட்பமாக உயிர்ப்பெறக்கூடும் என்பதற்கான எடுத்துக்காட்டாகவே விளங்குகிறது. காலாதீதமாக பிறந்து வந்துகொண்டே இருக்கும் மச்லி ரணதம்போரின் உருவகமாக மட்டுமின்றி ஒட்டுமொத்த இயற்கையின் உருவகமாகவும் வெளிப்படுகிறாள். அந்த இயற்கை புறவயமான காடும் கானுயிர்களும் சார்ந்தது மட்டுமின்றி சமூகத்தின் அரிதாரங்களுக்கு அப்பால் வெளிப்படும் மனிதர்களின் அகம் சார்ந்ததும்தான். நாவலில் நாம் காணும் மனிதர்கள் அனைவரும் வெளியுலகின் வேஷங்கள் அனைத்தையும் களைந்த பிறகே ரணதம்போரில் பிரவேசிக்கிறார்கள். அந்த பேரியற்கையின் ஒரு பகுதியாகவே தங்கள் அகத்தையும் திறந்து வைத்திருக்கிறார்கள். அதன் கட்டற்ற சுதந்திரத்தில் தங்களை முழுமையாக வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் காதலும், காமமும், குரோதமும், வஞ்சமும், கருணையும், கீழ்மைகளும், மேன்மைகளும், எவ்வித வேஷங்களுமின்றி அங்கு வெளிப்படுகின்றன. அரசர்களும், அதிகாரிகளும், ஆண்களும், பெண்களும், காவலர்களும், வேட்டைக்காரர்களும் தங்களை தீவிரமாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்துகிறார்கள். அத்தகைய நாகரீகக் கட்டமைப்புகளுக்கு அப்பால் செயல்படும் ஆதி இயற்கையின் உருவகங்களாகவே நாவலில் மச்லியும் ரணதம்போர் காடும் வெளிப்படுகின்றன.

இத்தகைய உருவகத்தை நாம் நாவலில் கண்டடைகையில் மச்லி நாவலில் கூறப்படும் புலிகளின் வம்சத்தவளாக மட்டுமின்றி ஈராயிரமாண்டு கால சங்கப்பாடல்களின் மரபில் பிறந்தவளாகவும் நம்முள் எழுகிறாள். ஓயாது யானைகளோடு பொருதியும், பிற விலங்குகளை வேட்டையாடியும், குகைகளில் அடைந்தும், ஊனென நாறியும், இடியென முழங்கியும் அந்த கவிஞர்களின் பாடல்களில் நிலைபெற்றவள் அவள். அவர்களின் அகம் கொந்தளித்தபோதெல்லாம்‌ சொற்களில் எழுந்தவள். களிறுகளை வேட்டையாடும் கொலை மிருகமானாலும் உதிர்ந்து கிடக்கும் வேங்கைப் பூக்களைப்போன்ற குருளைக் குட்டிதான் அவள். காமமும், கொலை வெறியும், தாய்மையும், கம்பீரமும் ஒன்றென ஆனவள். மனமெனும் பெருங்காட்டின் அரசி. அவளது சித்தரிப்பிலேயே நாவல் மகத்தான தளங்களை எட்டுகிறது.

அத்தகைய மச்லியின் சித்தரிப்புகளின் அடிப்படையாக அமைவது நாவலில் வெளிப்படும் நுட்பமான கானுயிர் சார்ந்த அவதானங்களே. வேங்கை வனம் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், காட்டைப் பற்றிய ஒரு நாவல் ஒரு நாளும் ஒற்றை உயிரினத்தைப் பற்றியதாக மட்டும் இருக்க முடியாது. காடு என்பது கோடிக்கணக்கான உயிர்களின் கூட்டுத்தொகையாக அமைந்த ஒற்றைப் பேருயிர். அதில் ஒற்றை உயிரினத்தை மட்டுமே பின் தொடர முயல்வது குருடன் யானையை அறிவதற்கு சமமானதுதான். மேலும் காடு முழுக்க முழுக்க புறவயமானது. அதன் அகத்திற்குள் மனிதர்கள் ஊடுருவுவதில்லை. எனவே ஒரு கானுயிர் சார்ந்த புனைவு என்பது சராசரி மனிதர்கள் சார்ந்த புனைவுகளை விடவும் பன்மடங்கு நுட்பமான சித்தரிப்புகளையும் அவதானங்களையும் கோரக்கூடியது. கண் முன் இருக்கும் எழுத்துக்களிலிருந்து ஒரு காட்டை உருவாக்கி அந்தக் காட்டின் புறவயமான செயல்பாடுகளின் வழியே அதை வாசகனுக்கான அகவயமான அனுபவமாக நிலைபெறச் செய்யும் மந்திர வித்தை அது. அப்படி உருவாக்கப்படும் காடு எழுத்தாளனால் உருவாக்கப்பட்டதாக இல்லாமல் உண்மையான காட்டின் கட்டற்ற தன்மையையும், முடிவற்ற முரண்களையும், கணிக்க முடியாத தன்மையையும் கொண்டிருக்க வேண்டும். இதன் காரணமாகவே அதனை வெற்றிகரமாக எழுதிய எழுத்தாளர்கள் மிகவும் குறைவாக இருக்கின்றனர் என்று நினைக்கிறேன். மேலும் இன்று எழுதப்படும் கானுயிர் சார்ந்த புனைவென்பது காட்சி ஊடகங்களின் துல்லியமான ஒளிப்பதிவு கருவிகளால் கண்டடைய முடியாத நுட்பமான சித்திரங்களையும் அவதானங்களையும் அவற்றின் வழியே உருவாகும் பிரத்தியேகமான கதையாடல்களையும் முன்வைக்க வேண்டும். அவ்வகையில் இந்நாவல் நம் கண் முன் ரணதம்போரை உருவாக்கிக் காட்டுகிறது. அது கட்டற்றது, விதிகளற்றது அதனாலேயே மகத்தானது. அதில் ஒவ்வொரு பஞ்சுருட்டானும், சிட்டுக்குருவியும், குரங்கும், மானும், முதலையும், கரடியும், புலியும் தத்ரூபமாக உயிர்ப்பெறுகின்றன. அவை அனைத்திற்கும் அந்தப் புனைவுக்காட்டில் கட்டற்ற சுதந்திரமும், வரையறுக்கப்பட்ட பணிகளும் கலந்தே வழங்கப்படுகின்றன. அவற்றின் அரசியான மச்லி அக்காட்டின் உருவகமாகவே கட்டற்றவளாகவும், புரிந்துகொள்ளப்பட முடியாதவளாகவும் இருக்கிறாள். குட்டிகளுக்காக உயிரியல் தர்க்கங்களை மீறி முதலையைக் கொல்பவள் அவள். ஆனால் தாயை வீழ்த்தி அதன் இடத்தை கைப்பற்றும் இயற்கையின் விதிக்குத் தப்பாதவள். எவராலும் நெருங்க முடியாத அரசியென கோட்டையில் கொலு வீற்றிருப்பவள். ஆனாலும் மனிதர்களோடு இயைந்து வாழக் கற்றவள்.

அவள் வழியே எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் உருவாக்கும் காடு சார்ந்த சித்திரமும், இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு சார்ந்த சித்திரமும் மிக நுட்பமானது. எளிய சூத்திரங்களுக்குள் அடங்காதது. அந்த உறவின் முரண்களையும் அழகையும் ஒரே சமயத்தில் முன் நிறுத்துவது. உதாரணமாக, நூற்றாண்டுகளாக நிகழும் மனிதர்களுக்கும் இயற்கைக்குமான மோதலை மிக விரிவாக சித்தரிக்கும் இதே நாவலில்தான் ஒற்றை ஆளாக ரணதம்போரை மீட்டு உருவாக்கும் பகதூர் சிங்கும் இருக்கிறார். இத்தகைய முரண்களே நாவலின் சித்தரிப்புகளை நுட்பமானதாக்குகிறது. அதன் விளைவாக நாவல் அதன் முடிவிற்குப் பிறகும் வாசகனின் மனதில் விரிந்து, முடிவின்மையை நோக்கிச் செல்கிறது.

மேலும் இத்தனை விரிவான காலத்தையும் பின்னணியையும் கொண்ட நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு தனி நாவலாக விரித்து எழுதக்கூடிய சாத்தியத்துடனே இருக்கிறது. அத்தனை விரிவான கதைகளும் காலங்களும் அத்தியாயங்களாக சுருக்கப்படும்பொழுது அவை வாசகனிடம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத மேம்போக்கான அத்தியாயங்களாக மாறிவிடக்கூடிய ஆபத்து உள்ளது. ஆனால் நாவலில் அவை மிகக் கச்சிதமான அத்தியாயங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக நாவல் பல்வேறு உச்சத் தருணங்களை கோர்த்து உருவாக்கப்பட்டச் சர மாலையாக வெளிப்படுகிறது. உதாரணமாக ஒரு தனி நாவலின் சாத்தியத்தைக்கொண்ட கீல்ஜியின் படையெடுப்பு சார்ந்த அத்தியாயம், அந்த அத்தியாயத்தின் அளவிலேயே முழுமையாகவும் தீவிரமாகவும் வெளிப்படுகிறது. அந்த தீவிரத்தின் விளைவாக அந்த அத்தியாயத்திற்கு முன்னும் பின்னுமான காலத்தை வாசகனின் மனதில் முழுமையாக வளர்த்தெடுக்க முடிகிறது. இது நாவலெனும் வடிவத்தின் அடிப்படையாகக் கருதப்படும் முடிவின்மையை நோக்கிய சுட்டுதலை வாசகனின் மனதில் உருவாக்குகிறது. குறிப்பாக அந்த அத்தியாயத்தின் பிரதான கதாபாத்திரங்களில் ஒருவனான மாஹிம் ஷா ஒட்டுமொத்தமாக சில வரிகளே எழுதப்பட்டிருந்தாலும் அவன் உருவாக்கும் தாக்கமே நாவலின் கச்சிதமான அத்தியாய வடிவமைப்பிற்கு சாட்சி. இத்தகைய தருணங்களும் கதாபாத்திரங்களும் நாவல் முழுவதும் விரவியிருக்கின்றன. இத்தகைய கச்சிதமான கட்டமைப்பின் விளைவாக ஆங்கிலத்தில் பேஜ் டர்னர் (page turner) என்று சொல்லத்தக்க நாவலாகிறது வேங்கை வனம்.

ஒவ்வொரு அத்தியாயமும் தன்னளவில் முழுமை பெற்றிருந்தாலும் அவை ஒட்டுமொத்த நாவலின் அமைப்பில் மிகக் கச்சிதமாகவே பொருந்துகின்றன. அந்தந்த அத்தியாயங்களில் தொடங்கி முழுமை பெரும் கதாபாத்திரங்களுக்கு இணையாகவே நாவல் முழுவதும் அத்தியாயங்களுக்கிடையில் ஊடாடும் கதாபாத்திரங்களும், தலைமுறைகளும், சமூகங்களும் நிறைந்திருக்கின்றனர். காலாதீதமான புலிகளுக்கு நிகராகவே ரணதம்போரின் மக்களும் தலைமுறைகளாக பயணிக்கின்றனர். காலத்தின் மாற்றத்திலும், சமூக/அதிகாரக் கட்டமைப்பின் ராட்டிணத்திலும் அவர்கள் மேலும் கீழுமாக ஊடாடியும் உருமாறியும் வருகின்றனர். ஆனால் இத்தகைய கதாபாத்திரங்களின் தொடர்ச்சி என்பது நாவலில் வெளிப்படையாக இன்றி வாசகன் கவனமாகக் கண்டடைய வேண்டிய புதையல் வேட்டை (treasure hunt) விளையாட்டாகவே முன்வைக்கப்படுகிறது. அந்த தொடர்ச்சிகளை கண்டடைவது என்பது பல வருடங்களுக்கு முன் பிரிந்து சென்ற பள்ளித் தோழனின் மகனை அந்த நண்பனின் முகச்சாயலைக்கொண்டு அடையாளம் கண்டுகொள்வதற்கு நிகரானது. எனவே கவனமாக வாசிக்கும் எந்தவொரு வாசகனுக்கும் நாவல் அளிக்கும் இந்த சாத்தியம் பெரும் வாசிப்பின்பத்தை அளிக்கிறது. அந்த வாசிப்பின்பத்திற்கும் அப்பால் அந்த ஊடாட்டங்களின் பின்புலத்தில் அமையும் காரணிகளை நோக்கி பயணிக்க விரும்பும் வாசகனுக்கோ நாவல் அதன் அரசியல் சார்ந்தும் வரலாறு சார்ந்தும் மேலும் ஆழமாக திறக்கிறது. உதாரணமாக நாவலின் முதற்பகுதியில் வரும் போலா எனும் சமூகம் பிற்பகுதியில் வேறு ஒன்றாக மாறுவதன் பின்புலமும் அவர்கள் மீண்டும் போலாக்களாகும் பயணமும் நாவலின் உச்சங்களுள் ஒன்று.

அலாவுதீன் கீல்ஜி, நூர்ஜஹான், ஜஹாங்கீர், ராணி காயத்ரி தேவி, ரணதம்போரை இந்தியாவின் முதன்மையான தேசியப் பூங்காவாக உருவாக்கிய ஃபதே சிங் ராத்தோர், உலகிலேயே அதிகமாக புகைப்படமெடுக்கப்பட்ட புலியான மச்லி என நிஜமான வரலாற்று மாந்தர்களை கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நாவல், தகவல்களுக்கும் புனைவுகளுக்கும் இடையிலான உறவு சார்ந்த புரிதல் அருகி வரும் நம் சமகாலச் சூழலில், புனைவாக்கச் செயல்பாடு குறித்த ஒர் வழிகாட்டி நூல் என சொல்லத்தக்க வகையில் எழுதப்பட்டிருக்கிறது. நாவலில் இடம்பெறும் வரலாற்று ஆளுமைகள் குறித்த தகவல்களையும் புகைப்படங்களையும் நொடிப்பொழுதில் நமக்களிக்கக்கூடிய இணையத்தால் நமக்கு ஒரு நாளும் அளிக்க முடியாதது அவர்களின் ஆளுமைகளையும் அவர்களை இணைக்கும் ஒரு தனித்துவமான கதையாடலையுமே. ஆனால் புனைவுகளோ அத்தகைய ஆளுமைகளாலும் கதையாடல்களாலுமே நிலைநிறுத்தப்படுபவை. எனவே தகவல்களின் துணுக்குகளில் இருந்து அந்த ஆளுமைகளை நம்பகத்தன்மையோடு புனைந்து, அவர்களை நுட்பமாக இணைக்கும் கச்சிதமான கதையாடலையும் உருவாக்குவதே புனைவெழுத்தாளனின் கடமை. அதில் இந்த நாவல் அடையும் வெற்றி பிரம்மிக்கத்தக்கது. நூர்ஜஹானை குறித்த ஆயிரம் தகவல்கள் அளிக்க முடியாத சித்திரத்தை அவர் மும்தாஜை சந்திக்கும் ஒரு புனைவுத் தருணம் நம் மனதில் உருவாக்கிவிடுகிறது. அந்த புனைவின் சாத்தியத்தை மிகக் கச்சிதமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் பயன்படுத்தியிருக்கிறது நாவல். ஃபத்தே சிங் ராதோரின் ஒரு வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பயங்கரக் கனவைப் புனைந்து, அதிலிருந்து நாவலையும், ரணதம்போரின் வரலாற்றையும் தொடங்குவது எனும் எழுத்தாளரின் முடிவில் வெளிப்படும் மனோதர்மமே தமிழின் முதன்மையான நாவலாசிரியரின் படைப்பு இது என்பதற்கான சாட்சி.

இத்தனை உச்சத் தருணங்களின் தொகுப்பாக உருவாகும் நாவல் அத்தருணங்களுக்கே உரிய சில எல்லைகளையும் தன்னளவில் கொண்டிருக்கிறது. அவற்றுள் முதன்மையானது நாவலின் பருந்துப் பார்வையின் விளைவாக வாசகர்களுக்கும் நாவலின் கதாபாத்திரங்களுக்கும் இடையில் உருவாகும் விலக்கம்.  நாவலின் பருந்துப் பார்வை ரணதம்போரின் ஒவ்வொரு புல்லையும் நம் கண்முன் கொண்டு வந்தாலும் அது கதாபாத்திரங்களை நாம் அணுகி அறிவதற்கான அவகாசத்தை அளிப்பதில்லை. நாம் காணும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் உச்சத் தருணங்களிலேயே வெளிப்படுகின்றன. அவர்களின் அன்றாடம் நம்மிடமிருந்து விலக்கியே வைக்கப்படுகிறது. இதன் விளைவாக நாம் அக்கதாபாத்திரங்களின் வாழ்வோடு நம்மை அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. மாறாக நாம் அவர்களின் வாழ்வை வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அதே நேரத்தில் இந்த பருந்துப்பார்வையின் விளைவாகவே நாம் மச்லியையும் பிற புலிகளையும் நெருங்கி அறிகிறோம். மேற்கூறப்பட்ட பருந்துப் பார்வையின் விலக்கமே ஆசிரியர் தன் பிரஞையை அவ்விலங்குகளின் மீது ஏற்றாமல் இருக்க உதவுகிறது. அதன் விளைவாக அவை முழு விலங்குகளாக புறவயமான செயல்பாடு மட்டுமே கொண்டு வெளிப்படுகின்றன. அவற்றின் சிந்தனை/பிரஞை சார்ந்த அவதானங்கள் அனைத்துமே வாசகர்கள் அவற்றின் புறச்செயல்பாடுகளின் அடிப்படையில் தங்கள் மனதில் உருவாக்கிக் கொள்பவையே. இதன் விளைவாகவே நாவல் வலுவான நம்பகத்தன்மையையும் கார்பெட்டுக்கு நிகரான தீவிரமான புறவய அனுபவத் தன்மையையும் பெறுகிறது.

சீன எழுத்தாளர் கென் லியுவின் (Ken Liu) Paper Menagerie (காகித விலங்குகள்) எனும் சிறுகதையில், புலம்பெயர் குடும்பத்தைச் சேர்ந்த கதைசொல்லியின் அம்மா, தன் தாய்நாட்டில் கற்ற ஓரிகாமி கலையையும் சில மந்திரங்களையும் பயன்படுத்தி, ஒரு பழைய காகிதத்தில் பொம்மைப் புலி ஒன்றைச் செய்து, அதை கதைசொல்லிக்காக உயிர்ப்பிப்பார். அந்த காகிதப் புலி நிஜப் புலியைப் போலவே உறுமும். கதைசொல்லியோடு நாளெல்லாம் விளையாடும். விலை உயர்ந்த பொம்மைகளோடு விளையாடும் அவன் பள்ளித் தோழர்களிடம் அவன் கொள்ளும் தாழ்வுணர்ச்சியைப் போக்கும். கதையின் முடிவில் பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவனோடு விளையாடியபடியே ஒரு மகத்தான செய்தியை அவனுக்கு அளித்துவிட்டு அது உயிர்விடும். உண்மையில் புனைவெழுத்தை புரிந்துகொள்வதற்கு இதை விட வலுவான உருவகம் இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு புனைவெழுத்தாளனும் ஒரு ஓரிகாமி கலைஞன்தான். ஆனால் சிறந்த புனைவெழுத்தாளர்கள் அனைவரும் அந்த காகிதப் புலிகளை உயிர்ப்பிக்கும் மந்திரம் தெரிந்தவர்கள். அந்த காகிதப் புலிகள் நிஜப் புலிகள் அல்ல. ஆனால் அவை வாசகனுக்கான சில பிரத்தியேகமான செய்திகளை சுமந்து வாழும் நம் விளையாட்டுத் தோழர்கள். அவற்றில் உயிர் பெற்று எழுவது வெரும் மந்திரமல்ல. அந்த நிலம். அவ்வாறு நான் சமீபத்தில் கண்டடைந்த மகத்தான காகிதப் புலிகளுள் ஒன்று எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் “வேங்கை வனம்”.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கவிதையை ஆட்சி செய்து அடங்காமல், ஜிம் கார்பெட்டின் துப்பாக்கியில் புகுந்து பேனா முனை வழியே வெளியேறி உலகை ஆண்ட புலி அது. இன்று மீண்டும் தமிழின் முதன்மையான நாவலாசிரியர்களுள் ஒருவரின் எழுத்தின் வழியே நவீன தமிழ் இலக்கியத்திற்குள் பிரவேசித்திருக்கிறது.          

 

***

விக்னேஷ் ஹரிஹரன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *