சிங்கள மொழியும், பண்பாடும் இன்று நோக்கும் போது இலங்கையில் மட்டுமே உள்ளது. வரலாற்றுரீதியாக சிங்களமும், சிங்களப் பண்பாடும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாகும். இன்று இலங்கையின் பெரும்பாலான மக்களின் மொழியாகவும் பண்பாடாகவும் அதுவே இருக்கிறது. இலங்கையில் முப்பது ஆண்டுகளாக இடம்பெற்ற இனப்போர் சிங்கள மொழி இலக்கியம், பண்பாடு குறித்து ஒரு பரவலான பார்வைக்கும் தேடலுக்குமான ஆர்வத் தளத்தை தமிழ் தரப்புக்குள் குறைத்துவிட்டது. சொல்லப்போனால் அறவே இல்லை எனுமளவுக்கு ஆர்வமற்ற சூழலே இலங்கைத் தமிழ்ச் சூழலில் நிலவுகிறது. அதேபோன்று, சிங்கள சமூகத்துக்குள்ளும் தமிழர் பண்பாடு, முஸ்லிம் பண்பாடு, இலக்கியம் குறித்த தேடலை, உரையாடலை இந்த சூழல் இல்லாமலாக்கிவிட்டது.
ஆனால் இன்றைய நிலையில்- ‘Gota go home’ போராட்டத்துக்குப் பின்னர் சிங்கள சமூகத்துக்குள்ளிருந்து சிங்கள-தமிழ்-முஸ்லிம் பண்பாட்டுப் பரிவர்த்தனையில் அக்கறை உள்ள ஓர் இளம் இலக்கிய சமூகம் உருவாகி இருப்பதை நான் அவதானிக்கிறேன். அரசியலுக்கும் போருக்கும் அப்பால் அந்தப் புதிய தோற்றப்பாட்டை, அவர்களின் இலக்கியப் படைப்புகளை நாம் புரிந்துகொள்வதன் மூலம் அந்த சமூகத்தை சற்று ஆழமாக நம்மால் புரிந்துகொள்ளவும், நம் பக்கத்திலிருந்து நாம் செய்ய வேண்டியதை இலகுவில் அடையாளம் காணவும் உதவும்.
தமிழ் மக்களின், முஸ்லிம் மக்களின் அரசியல்- சமூகவியல்- இலக்கியம் சார்ந்த புரிதலை நோக்கி, அக்கறையுடன் மேலெழுகிற ஒரு தலைமுறை சிங்கள சமூக அமைப்புக்குள் உருவாகி இருப்பது போன்று தமிழ்-முஸ்லிம் சமூக அமைப்புக்குள்ளிருந்து ஒரு தலைமுறை ஒப்பீட்டளவில் பெரிதாக உருவாகவில்லை என்பதும் கவனத்துக்குரியது. இங்கு (தமிழ்ச்சூழலில்) மிகச் சிறுவட்டத்துள் செயற்படுகின்ற இலக்கிய சமூகமே இந்தத் தளத்தில் ஓரளவு இயங்கி வருகிறது.
இந்த சிங்களப் புதிய தலைமுறையினர் சில குறுகிய அரசியல் நலன் கொண்ட சிங்கள அரசியல் தலைமைகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று இன்று தமிழ் மக்களின் இலக்கியம் பண்பாடு, மொழி குறித்தும், முஸ்லிம் பண்பாடு குறித்தும் புரிந்து கொள்ள முற்படுகின்றனர். தேடிக்கற்கின்றனர். திறந்த உரையாடலுக்கு தயாராகின்றனர். சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் சயந்தனின் ஆதிரை பதிப்பகமும், வனம் இணைய இலக்கிய இதழும் இணைந்து இலங்கையின் அக்கரைப்பற்றில் ஏற்பாடு செய்திருந்த மொழிவழிக்கூடுகையில் கலந்துகொண்டிருந்த சிங்கள எழுத்தாளர்களுடன் ஈழத் தமிழ் வாழ்வியல்-முஸ்லிம் வாழ்வியல் குறித்து சிங்கள இலக்கியங்களில் என்னவெல்லாம் பேசப்பட்டிருக்கிறது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. போர்ச் சூழல் குறித்த சிங்கள இலக்கியங்களில் பெரும்பாலானவை தமிழர்களையும் சிங்களவர்களையும் தூரப்படுத்தக்கூடிய உள்ளடக்கத்தையே அதிகம் கொண்டிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். சமஅளவில், தமிழ்ப்புனைவுகளும் கூட இராணுவ அடக்குமுறையும், வன்முறையும் தமிழர் வாழ்வை எப்படி ஈவிரக்கமின்றிச் சிதைத்தது என்பதையே மையமாகப் பேசுகின்றன.
இந்தப் பார்வைகளுக்கு அப்பால், இலங்கை அரசின் போலித்தன்மைகள், தமிழர் போராட்டம் குறித்த அரசின் புனைவுகள் குறித்து ஓரளவு திறந்த மனதோடு பேசக்கூடிய படைப்புகளும் சிங்கள இலக்கியச் சூழலில் ஆங்காங்கே வெளிவந்துள்ளன. அத்தகைய இலக்கியப் படைப்புகள் சிங்கள மக்களின் உளவியலில் மனப்பாங்கில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அத்தகைய படைப்புகளுக்கு சிங்கள சூழலிலிருந்து வந்த எதிர்வினைகளிலிருந்து நான் அதைப் புரிந்துகொள்கிறேன். தவிர ஆதிரை பதிப்பகமும் சில முக்கியமான தமிழ் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. இது சிங்கள சமூக மனப்பாங்கில், புலமைத்துவ வட்டாரத்தில் மிக முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளன. நாம் எதிர்பார்த்த மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய மனப்பாங்கு கொண்டவர்களே சிங்கள இலக்கியப் புலத்தில் அதிகம் வினைபுரிந்துள்ளனர். மார்ட்டின் விக்ரமசிங்கவில் தொடங்கி இன்றைய தக்ஷிலா ஸ்வர்ணமாலி, இசுறுசோமவீர வரைக்கும் நாம் இத்தகையவர்களைக் காண்கிறோம்.
இத்தகையதொரு தலைமுறை தமிழ்ச்சூழலிருந்து ஏன் பெரியளவில் உருவாகவில்லை? என்ற கேள்வி நமது படைப்புலகின் மீதும், வாசிப்பு அனுபவங்களின் மீதும் ஒரு வாள்வீச்சுப் போல வந்து விழுகிறது. எனவே நமது புறத்திலிருந்து சிங்கள இலக்கிய உலகு குறித்த உரையாடல்கள் தொடங்கப்பட வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பாக இருக்கிறது. தமிழர்கள்-இஸ்லாமியர்கள் குறித்தெல்லாம் எத்தகைய பார்வையை சிங்கள இலக்கியங்கள் சமகாலத்தில் முன்வைக்கின்றன என்ற புரிதல் நமக்கு அவசியமாக இருக்கிறது. சில சிங்கள அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல் எல்லைகளைத் தாண்டி மக்களுக்கிடையிலான ஒரு திறந்த உரையாடலும் புரிதலும் இதன் மூலம் நிகழச் சாத்தியமுள்ளது. இதற்கு பரஸ்பர இலக்கியப் பரிவர்த்தனைகள் நமக்குத் தேவையாக உள்ளன. இலங்கையின் ஆங்கில இலக்கியச் சூழலில் சமீபத்தில் வெளியான, பேராசிரியர் மதுபாஷினி திசாநாயக்க ரத்நாயகவின் The Routledge Companion to Sinhala Fiction from Post-War Sri Lanka எனும் நூல் மிக முக்கியமானது.
ஈழப் போருக்குப் பின்னரான நமது (தமிழர்-இஸ்லாமியர்களின்) அரசியல், சமூக உளவியல், பண்பாட்டு முரண்கள், (ஓரளவு) வரலாறு போன்ற தளங்கள் சமகால சிங்களப் புனைவுகளில் எவ்வாறு பேசப்படுகின்றன, சிங்கள இலக்கியம் போருக்குப் பின் நமது பிரச்சினைகளை-நம்மைப் பற்றிய விசயங்களை எந்தக் கோணத்தில் மக்கள் மயப்படுத்துகின்றன என்பதற்கும்- சிங்கள இலக்கிய உலகு தமிழ்ச் சூழலை நோக்கி நிகழ்த்த விரும்பும் பண்பாட்டு உரையாடலுக்குமான மிக முக்கிய திறப்பு இந்நூல்.
சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவரும் பேராசிரியருமான மதுபாஷினி திஸாநாயக ரத்நாயக மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கும் இந்நூல் ஈழத் தமிழர்களும், இஸ்லாமியரும் தங்களைக் குறித்து போருக்குப் பின்னரான சிங்கள இலக்கிய உலகு கொண்டிருக்கும் கவனமும், நோக்கும் என்ன என்பதைப் புரியவும், இந்தத் தளத்தில் உரையாடவும் இந்நூலின் பக்கமாக தங்கள் பார்வையைச் செலுத்த வேண்டி இருக்கிறது.
இந்த விடயம் சார்ந்து பேசும் முக்கியமான சிங்கள எழுத்தாளர்களின் சில கதைகளையும், நாவலின் சில அத்தியாயங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அறிமுகக் கட்டுரைகளோடு இந்நூலில் தந்திருக்கிறார்.
இதன் முதல் அத்தியாயமே ‘Tamil identity, ethnic politics and violence’ என்ற தளத்தில் பேசும் முக்கியமான சிங்களைக் கதைகளை தொகுத்துப் பேசுகிறது- கதைகளை, நாவல் பகுதிகளை முழுமையாகவும் முன்வைக்கிறது. மூன்றாவது அத்தியாயம் ‘Sinhala and Muslim identity politics’ சார்ந்த கதைகளை, நாவல் பகுதிகளை முன்வைக்கிறது. தவிர, போருக்குப் பின்னரான சிங்கள சமூகத்தின் பல்வேறு நெருக்கடிகளையும் பேசும் கதைகள் ஏனைய அத்தியாயங்களில் பேசப்படுகின்றன.
எனவே, போருக்குப் பின் இலங்கையில் வெளியான முக்கியமான வெகுசில நூல்களுள் ஒன்று இது. ஆனாலும், இதுவரை ஈழத் தமிழ்ச் சூழலில் உரையாடல் வெளிக்கு இந்நூல் வரவில்லை என்பது துயரமானது. தமிழர் வாழ்வும் அரசியலும், முஸ்லிம் அரசியலும் வாழ்வும் குறித்து சிங்கள சூழலில் நிகழ்ந்துள்ள கவனத்துக்குரிய புனைவுகள் பற்றிய உரையாடலைத் தொங்கி வைக்கிறது. இத்தகைய சிங்கள கதைகள், நாவல்களை அவர் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார். அதனூடாக சமகால சிங்கள இலக்கிய சூழலில் நம்மைப் பற்றி (தமிழர்கள்-இஸ்லாமியர்கள்) அங்கு எத்தகைய மனவெளிப்பாடுகள் உள்ளன. புனைவுகளில் நமது அரசியல், பண்பாடு, மத நம்பிக்கைகள் பற்றி எத்தகைய பார்வைகள் உள்ளன என்பதை இதனூடே நமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது.
00
கத்யானா அமரசிங்கவின் தரணி நாவல் இந்தப் புலத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று. மதுபாஷினி இந்நாவலிலிருந்து ஒரு பகுதியை மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார். தரணி நாவலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த நாவல் பகுதி, மூன்று தசாப்த கால ஈழப்போரின் பின்னர் யாழ்ப்பாணமும் அதன் மக்களும் நடைமுறையில் அழிந்து போய் இருந்ததை விபரிக்கிறது.
நிஸ்ஸங்க விஜயமான்ன வின் நாவலான தாரா தமிழ்-சிங்கள உறவை தமிழ் அடையாளத்தைப் பேசும் முக்கிய நாவல்.
இந்நாவல் இரண்டு பகுதிகளாக எழுதப்பட்டிருக்கிறது. இதன் முதல் பகுதி கலப்பினத்திருமணத்தில் பிறந்த மகளின் குரலில் கதைசொல்லப்படுகிறது. இன்னொரு பகுதி ஒரு சிங்கள இளைஞனால் சொல்லப்படுகிறது. நாவலின் இந்தப் பகுதியில் அவர்கள் இருவராலும் ஏன் காதலர்களாக இணைய முடியவில்லை என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் மொத்த கதையின் சாரமும் தாரா எனப்படும் பெண் தெய்வத்தின் சிலையைத் தேடும் ஒரு மனிதனைப் பற்றியதாகவே இருக்கிறது. நாவலின் பெண் கதைசொல்லியின் கதைப் பகுதியையே இந்நூலில் மதுபாஷினி தருகிறார். இப்பகுதி 1983 வன்முறையுடன் தொடர்புபடுகிறது.
நாவலில் ஓரிடத்தில் சந்துன் தாராவிடம் சொல்கிறான்
“மன்னித்துக்கொள். எனக்குத் தெரியாது. நான் நினைத்தேன் நீ சிங்களமென்று” அவள் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். சந்துன் தொடர்ந்தான்.
“நீயும் எங்களப் போலத்தான் இருக்காய். இல்லையா? வித்தியாசம் எங்க இருக்கு? நான் நினெச்சன் தமிழ்ப் புள்ளைகள் நீண்ட முடியும் கறுப்பாவும் இருக்குமெண்டு. ஆனா..நீ அப்புடி இல்லையே..”
அவள் சொல்கிறாள் “என்ட அப்பா ஒரு ஆசிரியர். யாழ்ப்பாணத் தமிழர். அம்மா சிங்களம்..” என அவள் தன்னை சுய அறிமுகம்செய்துகொள்ளும் போது தமிழர்கள் பற்றிய சிங்களப் புரிதல் என்ன என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
நாவலின் மற்றொரு இடத்தில் தாரா யோசிக்கிறாள். “என் நடத்தையிலுள்ள சிங்களப் பண்புகள் என்ன? தமிழ்ப் பண்புகள் என்ன?” என்று. ஈழப்போர் நடந்த சூழலில் எல்லா பக்கமும், எல்லா சமூகங்களும் பாரிய அழிவைச் சந்தித்திருந்த போதிலும், பரஸ்பர சந்தேகங்களும், மனக்காயங்களும் இருந்த போதிலும், சிங்கள-தமிழ் உறவு ஆழமான அர்த்தத்தில் சமூக மட்டத்தில் உள்ளோடி இருந்ததை இந்நாவல் நமக்குச் சொல்கிறது. அனைத்து இழப்புகள், மனக்காயங்களுக்கு மத்தியிலும் சிங்கள சமூகத்துக்குள்ளிருந்த அன்பை, பரஸ்பரப் புரிந்துணர்வைப் பேசும் படைப்புகள் கணிசமானளவில் வந்திருப்பது உண்மையில் ஆச்சரியமளிக்கிறது. தமிழ்ச் சூழலில் சிங்கள சமூகம் குறித்த இத்தகைய படைப்புகளை பெருமளவில் காண முடியவில்லை.
ஜயதிலக கம்மல்வீரவின் Are you alright? போருக்குப் பின்னரான தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதை. கிரமாங்களினதும், வாழ்க்கை முறைகளினதும் முழுமையான இழப்பை இக்கதை பேசுகிறது. எந்த விதத்திலும் ஈடுசெய்ய முடியாத காதலின், நம்பிக்கையின் இழப்பை கதையின் மையச் சித்திரமாக கொண்டு வருகிறார் ஜயதிலக.
பியல் காரியவசத்தின் “கடற்கரையில் ராதா” இலங்கையின் பொருளாதார நெருக்கடியையும் அதன் அரசியலையும், சீனமயமாதலையும் மையமாகப் பேசும் இக்கதைக்குள் தமிழர் அரசியலும், பிரச்சினையும் கொண்டுவரப்படுகிறது. கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையின் ஒரு பகுதியை மூடி சீனக் கம்பனி ஒன்று மேற்கொண்ட அபிவிருத்தித்திட்டத்தினுள் காணப்பட்ட ஊழல் ஒன்றால் அதிருப்தியுற்று அதிலிருந்து விலகிச்செல்லும் ஒரு தமிழ் யுவதியின் நிலைப்பாடுகளும் போர் அவளது வாழ்க்கையைக் கொண்டு சேர்த்த இடம் போன்றவ போருக்குப் பின்னரான தமிழ் வாழ்க்கையின் சூழ்நிலைமைகளையும் கதை சித்தரிக்கிறது.
நிஸ்ஸங்க விஜயமான்னவின் Handa paluva thani tharuva (தேய்பிறையும் தனித்த நட்சத்திரமும்) கதை சிங்கள முஸ்லிம் உறவையும், அதன் வண்ணங்களையும் பேசும் கதை. ஜலாப்தீன் என்கிற முஸ்லிம் நபருக்கும் அயேஷா என்கிற சிங்களப் பெண்ணுக்குமிடையிலான உறவை கதை மையமாகக் கொண்டு நகர்கிறது.
இந்தத் தளத்தில் கவனிக்கத்தக்க நிஸ்ஸங்க விஜயமான்னவின் மற்றொரு கதை தம்பி ஹாமதுருவோ. இக்கதை சிங்கள-முஸ்லிம் உறவை, இரு பண்பாடுகளின் ஊடட்டத்தை பேசும் கதை. இக்கதை ஹாமதுரு ஒருவரின் வாழ்வியலைப் பேசுவதினூடாக பௌத்த பண்பாட்டையும், துறவறத்தையும், அதன் தனிமையையும் முன்வைக்கிறது. தம்பி ஹாமதுருவோ என்பது முஸ்லிம் ஹாமதுரு என்பதாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. கதைக்குள் ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது சிங்கள சமூகத்தில் முஸ்லிம்கள் குறித்த எத்தகைய பார்வைகள் நிலவுகின்றன என்பதைக் குறித்த உரையாடலைத் திறந்து விடுகிறது என நினைக்கிறேன்.
இது ஒரு பௌத்த பிக்குவுக்கும், ஒரு முஸ்லிம் நபருக்கும் இடையிலான நட்பை பேசும் கதை. சமகால இலங்கையின் அரசியல் களத்தில் தூரமாகியுள்ள சிங்கள-முஸ்லிம் உறவின் கொதிப்பான சூழலில் நாம் கற்பனையும் செய்யது பார்க்க முடியாத ஒரு கதை இது. இவர்கள் இருவரும் மிக நீண்டகால நண்பர்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டவர்கள். பிற பண்பாடுகளைப் பற்றியும் அறிந்துகொண்டவர்கள். பிக்கு ஒரு சந்தர்ப்பத்தில் குர்ஆன் வசனங்களை ஆதாரமாக வைத்துப் பேசுகிறார். கதையில் வரும் முஸ்லிம் நபர் புத்தரின் போதனைகளை முன்வைக்கிறார். இருவரும் மற்றவரின் மதங்களைப் பற்றிய தேடலும் புதிய நோக்குகளையும் கொண்டவர்கள்.
எரிக் இல்லியப்பஆராய்ச்சியின் “பிக்கு வார்ட்“ கதையும் இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் சிங்கள –முஸ்லிம் உறவையும் விரிசலையும் பேசும் கதை. ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை கதையின் மையமாக கொண்டு செல்லும் இல்லியப்ப ஆராய்ச்சி இந்தத் தாக்தலின் பின் பல்வேறு அரசியல் நலன்களுக்காக முஸ்லிம்கள் குறித்து பரப்படட புனைவுகளையும் கதைக்குள் கவனப்படுத்துகிறார். குறிப்பாக சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சத்திரசிக்கிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்படும் முஸ்லிம் வைத்தியருக்கும் கதைக்குள் இடம் தரப்பட்டிருக்கிறது.
சமகால சிங்கள இலக்கியத்தில் இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் பற்றிய இந்த உள்ளீடுகள் ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து உருவாகுபவைதான். ஆனாலும் அவை சிங்களப் பொதுச் சமூகவெளியிலும் உளவியலிலும் மாற்றத்தையும் கருத்தியலையும் உருவாக்குவதில் பங்களிக்கின்றன. பொதுவாக இங்கு நான் முன்வைத்திருக்கும் படைப்புகளும், படைப்பாளிகளும், சிறுபான்மைச் சமூகத்தின் மீதான நேர்மறைத்தன்மையுடன் பிரச்சினைகளை கையாண்டுள்ளனர். சிறுபான்மைச் சமூகங்கள் பற்றிய எதிர்மறைத்தன்மையான படைப்புகளும் அதேயளவில் சிங்கள இலக்கியவெளியில் உள்ளன என்பதைப் பற்றியும் நாம் உரையாட வேண்டியுள்ளது.
***
-ஜிஃப்ரி ஹாசன்