1. கோடுகள்

ஒரு கோட்டைக் கிழிக்கிறது குழந்தை
அர்த்தமற்ற கிறுக்கலில்தான்
நிகழ்கிறது காலம்
கடிகாரக் கோடுகளின்
பாவனையில்
பிரபஞ்சத்தின் முட்கள்
பால்வெளியெங்கும்
அழித்துச் செல்லும் கருந்துளை
குழந்தையின் கோடுகளின்படியே
தன் மர்மக் கோடுகளைக்
கிழிக்கிறது.

 

2. சாலை

நடந்து கொண்டிருக்கிறது.
அதன் தனிமை
அதன் நலிவு
அதன் தளர்வு
எல்லாம் கடந்து
நானும் போய்க் கொண்டிருந்தேன்
நெடுந்தொலைவு
என்னுடன் வருகிறது
நெடுங்காலம்
என்னில் கடக்கிறது
எப்போதும் என் தனிமையின்
மேல்பட்டு அதன் நிழல்
கடக்கையில்
அந்தச் சாலையில்
நான் நடக்கிறேன்
என் கண் மறையும்வரை
அது திரும்பிப் பார்த்தபடி
பயணிக்கிறது
தன் வலியையும் மீறி
என் வாலாடுகிறது
சிலுவையிலிருந்து
ஸரீரம் இறக்கப்பட்டு
மடியில் கிடத்தப்பட்டு
கண்களின் ஓரத்தில்
ஒழுகும் திரவம்
கொட்டும் மழையாக
நாள் வடிகிறது.

 

3. மாய நகரம்

வாக்கிங் போகும்போது
சட்டென நின்ற ஜீனோ
பின்னால் திரும்பிப் பார்த்தான்
ஒரு கணம்தான்
நானும் திரும்பினேன்
எங்களையே பார்த்தபடி
காது விறைத்த கலை மான்
ஜீனோவைப் பார்த்தேன்
அவன் என்னைப் பார்த்தான்
நாங்கள் எதையும்
சொல்லிக் கொள்ளவில்லை
வேட்டை விலங்குகளின்
நினைவு வினோதமானதுதான்.

 

4. தீபாவளி

மாடியிலிருந்தவன்
முதலில் ஜீனோவையும்
பிறகு என்னையும் குறிபார்த்துச்
துப்பாக்கியால் சுட்டான்
நானும் எனது
புதிய துப்பாக்கியை எடுத்தேன்
ஜீனோ என்னை அடையாளம்
தெரியாமல் குழம்பினான்
வண்ணமயமாக
ஒரு சூப்பர்நோவா வெடித்தது
மற்றொரு யுகத்தில்.

 

5. நிலவு

என்றைக்குமான
பறவை ஒன்றை வரைந்தான்
அது நீல வண்ணத்தில்
பல பறவைகளின்
சாயல் கொண்டிருந்தது
அநாதி காலம் தொட்டு
பறந்து கொண்டிருக்கும்
பறவையது இரவுகளில்
காகமாகி வெளியைக் கீறி
துளையிட்டபடி பூமியிலிடுகிறது
ஓர் எச்சம்.

 

6. வேடிக்கை

இடப்புறமாகத் திரும்பக் காத்திருந்த
வாகனத்தை மோதி வீழ்த்திய
ஒரு கவனப் பிசகு
என்னை அந்தரத்தில் வீச
தார்ச்சாலை வாரியணைத்தது
ஓடி வந்து தூக்கியவர்கள்
நான் வலப்பக்கமாக திரும்பியிருந்தால்
இது நடந்திருக்காது என்றனர்.
எனது பாதை இடப்பக்கம்தானே
என்ற எனது நினைவுதப்பலில்
இடமோ வலமோ
என்னையறியாமல்
எனக்கு நிகழ்வதை
வேடிக்கைப் பார்க்கிறது
இடமும் வலமும்.

 

***

-சாகிப்கிரான்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *