சாகிப்கிரான்

1. யுகம்

பக்கத்து வீட்டில்
தினமும்
ஒரு மணிநேரம்
அந்த டி- ரெக்ஸ்
கத்தித் தொலைக்கிறது.
மாலை அல்லது
அற்புதமான காலையில்.

கடந்த யுகத்திலிருந்து
கடத்தி வந்தாற்போல
எதிர் காலத்திலிருந்து
நிர்மானித்திருக்கிறார்கள்

ஆனால் நாங்கள்
எதையும் விட்டுத்தரத்
தயாராயில்லை.

ஜடாமுடியின்
பிறை நிலா பக்கத்தில்
வீழும் கங்கைதான்
ஒவ்வொரு முறையும்
அந்தக் கத்தலை
அடக்குகிறாள்.

பட்டினியாகப் போட்டு
விடாமல் கத்தவிடும்
இவர்களுக்குத் தெரியாமல்
ஒரு நாள்
ஏறிக் குதித்து
அரை லிட்டர் ஆயிலை
அந்த யுகப் பிராணியின்
வாயில் ஊற்றப் போவேன்

விடியலில்
அந்தக் கிளியின்
கேள்விக்கு
நிகழப்போகிறது
ஒரு நீண்ட
பகல்.

2. புதிய ஆதி

ஒவ்வொரு
குழந்தையுடனேதான் பிறக்கிறது
பெருவெடிப்பு

அது அந்தக்
குழந்தையுடனே விரிந்து…
ஒரே வெடிப்பாக
குழந்தைகளைத் துப்பிவிடுகிறது.

துப்பப்பட்டக் குழந்தைகள்
பெருவெடிப்புகளைப்
பொறுக்கிக் கொண்டு
மீண்டும்
வெளியைப் பிடித்து
எழுந்து
நடக்கத் துவங்கும்போது
காலம் அங்கே
சுழியமாகிவிட
கருந்துளையொன்று
தன் முதுகைத் தானே
பார்த்துக் கொள்வதை
வேடிக்கைப் பார்த்துக்
குழந்தைகள் சிரிக்கின்றன.

அப்போதுதான்
திரள்கிறது
கடவுளின்
ஒலி
அல்லது
ஒளி.

 

 

3. பல்பொருளங்காடி

கூட்டம்
அலைமோதுகிறது
சாகக் கிடக்கும்
சந்தர்ப்பங்கள்
கொட்டிக் கிடக்கின்றன.
பூமியின் எடை
விலைக் கழிவுகளின்
பக்கம் இறங்குகிறது
நிலைப்படுத்த நிறையாக
உங்கள் நுகர்வை
வைக்கிறீர்கள்
இதற்கு முரணாக
மேட்டை நோக்கிய
அகத்தியரின் கமண்டலத்திலிருந்து
பூமிப் பந்தின்
மூன்று பங்கு சுருங்குகிறது
வாயேஜர் காணும்
நீலப் புள்ளியிலிருந்து
ஒரு சாரங்கியின்
வில் எய்யும் அம்பு
அடி முடி காண விரைகிறது

நான் தாழம்பூ
பத்தி பாக்கெட்யொன்றை
பள்ளத்தின் மேட்டிலிருந்து
உருவுகிறேன்

எனது பூமி
நிலைக்கு வருகிறது.

 

 

4. முரண்களின் பொருத்தப்பாடு (Paradox Effect)

காணொளியில்
அந்த லேப்ரடார்
அழுது கொண்டே
தானும் குளத்தில்
குதித்து
அவரைக் காப்பாற்ற
முயல்கிறது.

என்னருகே
ஜீனோ படுத்திருக்கிறான்

அவன் இதுவரை
ஒரு நீர்ப்பரப்பையும்
பார்த்ததில்லை
நானும்
குளித்ததில்லை

மூழ்குபவனாக நானும்
அழுபவனாக அவனும்
பொருந்திப்போகிற
தேவையாகிவிடும்
மிகுவன்பின் தழுவல்
ஒரு மனப்பாடு.

 

 

 

 

5. ஒரு முத்தம் 2.05 மணி நேரம்

கால் நூற்றாண்டுக்குப்
பிறகு
பார்க்கிறேன்.

மிக அருகில்
வந்தொரு
முத்தம் தருகிறாள்.

ஸ்மார்ட் வாட்ச்
அன்றிரவு
எனது ரெம் தூக்கம்
2.05 மணித்தியாலளங்கள்
என்று
காட்டும் நிகழ்…

காலாதீதத்தின்
ஒரு புழுத்துளை.

 

 

***

-சாகிப்கிரான்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *