தெருவோரமாய் நின்றிருந்த அந்தப் பெண் அணிந்திருந்த சாம்பெயின் நிற உள்ளாடை எந்த நோக்கமும் இல்லாமல் கடந்துபோய்க் கொண்டிருந்த ரகுவை மீண்டும் ஒரு முறை திரும்பிப்
பார்க்க வைத்தது. அந்தி நேரத்தில் கவியத் தொடங்கியிருந்த சுடர்மிகுந்த நிழல்களைக் காதுகளாய் மெல்ல அசைத்து நெற்றியிலிருந்து வழியும் வெளிச்சத் தும்பிக்கைகளால் தெருவைத் துழாவும் யானைகளாய்ச் சாயம் உதிர்ந்துபோன வெளிர் மஞ்சள் கடைவீடுகளின் வரிசை. ஒவ்வொரு கடைவீட்டிற்கு முன்னாலும் பிரம்மாண்டமான முகப்புத் தூண்கள்.இரண்டாம் உலகப் போருக்கு முந்திய காலத்தில் கட்டப்பட்டவை. வழக்கமாய் அந்தத் தெருவில் இயங்கும் மின்சார விளக்குகள் விற்கும் கடைகளும், கார் பழுதுபார்ப்புப் பட்டறைகளும், பழைய வானொலி, மின்சாரச் சாமான்கள் விற்கும் வியாபாரங்களும் பெருந்தொற்றுக் காலக் கட்டுப்பாடுகளால் மூடப்பட்டிருந்ததால் தெரு வெளிச்சமும் சத்தமும் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. கடை வீட்டின் முகப்புத் தூணில் கொட்டிக் கிடந்த அந்த நாளின் கடைசிச் சூரிய வெளிச்சத்தில் அவள் இடது பாதத்தை ஏற்றி வைத்துச் சாய்ந்தபடி நின்றிருந்தாள்.

தோளிலிருந்து பாதங்கள்வரை ஒரே அகலத்தில் வெறும் உருண்டைகளாலும் உடைக்குக் கட்டுப்படாத சதைப் பிதுக்கல்களாலும் மட்டுமே செய்யப்பட்டிருந்தது போன்ற உருவம். காய்ந்த புல்லின் நிறத்தில் தலையைச் சுற்றித் தொப்பிப்போல் கத்தரிக்கப்பட்டிருந்த தலை மயிர். குறுகலான நெற்றிக்குக் கீழ் ஒன்றுக்கொன்று மிக அதிகமான இடைவெளியோடு மாம்பழத்தைக் கீறி வைத்ததுபோல் மஞ்சள் நிறக் கண்கள். தவளைகளுக்கு உள்ளதுபோன்ற சப்பை மூக்கு. மொத்தமும் மாநிறத்துக்கு கொஞ்சம் மட்டமான நிறம். ஆனால் அந்த முகத்தில் தந்திரங்களாலும் சூதினாலும் தொட முடியாத குழந்தைத்தனம் ஒன்று இருந்தது. பிருஷ்டங்களை நன்றாகத் தூக்கிப் பிடிக்கும்படி தடித்த தொடைகளைத் தாண்டி இறுக்கமான டெனிம் அரைக்கால்
சட்டையை அணிந்திருந்தாள். உடம்புக்கு முன்னால் வழிந்து இரண்டு விரலால் வழித்து வைத்தது போன்ற மார்புப் பிளவைக் காட்டிக் கொண்டிருந்த சாயம்போன மலிவான இளம்சிவப்பு நிற
மேல்சட்டை. அதன் உட்புற விளிம்புகளிலிருந்து துருத்திக் கொண்டிருந்த அவளது குட்டையான உருவத்துக்குச் சம்பந்தமே இல்லாத விலையுயர்ந்த, சாம்பெயின் நிற ப்ராவின் நீண்ட
பட்டைகள்.

ரகு தன்னைக் கவனிப்பதை உணர்ந்தவள் தன் உடம்பின் கனத்தை ஒரு பிருஷ்டத்திலிருந்து மறு பிருஷ்டத்துக்கு மாற்றிச் சற்றே நிமிர்ந்து நின்றாள். மெல்லச் செத்துக் கொண்டிருக்கும் மாலை வெளிச்சத்தில் அவளது அழுக்கு மஞ்சள் கண்கள் விஷமம் நிறைந்த உள்ளார்ந்த புரிதலுடன் ஜ்வலித்தன.

“வேணுமா?”

தோள்பட்டையிலிருந்து நழுவிப்போய் அமர்ந்திருந்த மேலாடையை அலட்சியமாகச் சரி செய்து கொண்டே அவள் ரகுவிடம் கேட்டாள். அவள் பேசியதில் அதுவரை முகக்கவசத்தின் அசைவில் அதன் பின்னால் மறைந்திருந்த அவளது பெரிய வாயும், தடித்த உதடுகளும் ரகுவிற்குத் தெளிவாய்த் தெரிந்தன. சாலையில் தொடர்ந்து நடக்க எத்தனித்து காலடி எடுத்து வைத்த ரகு தயங்கி நின்றான். தூரத்தில் தெரிந்த உணவுக் கடைகளின் வெளிச்சத்தையும் அந்தி நேர நிழல்களுக்குள் சாய்ந்து கொண்டிருந்த பெண்ணின் கறுத்த உடம்பில் சுடர்விட்ட சாம்பெயின் நிற உள்ளாடைப் பட்டையையும் அவன் மாறி மாறிப் பார்த்தான். அவள் முகத்தில்
எந்தவிதமான சலனத்தையும் காட்டாமல் ரகுவையே பார்த்துக் கொண்டிருந்தாள். சாலையில் கடந்து போன வாகனம் சின்னக் கமறலுடன் தெருவில் நின்றிருந்த ரகுவை எச்சரிக்கும் வகையில்
மெல்லிய ஹாரன் ஒலியை எழுப்பிவிட்டுப் போனது.

கடைவீட்டின் அகலமான முகப்புக் கதவுகளுக்கு ஓரமாய் ஓராள் அகலத்துக்கு மரக்கதவு வைத்த வாசல். அதற்குப் பின்னால் இரண்டாம் மாடிக்கு ஏறுவதற்காக அரைப்பாதம் மட்டுமே வைத்து
ஏறக் கூடிய வகையில் இருட்டுக்குள் போய் மறையும் குறுகலான படிக்கட்டுகள். மெல்லிய அடிக்குரலில் ரகு கேட்ட கேள்விக்கு ‘லீஸா’ என்று கொஞ்சம் ராகத்தோடு பதில் சொன்னவள் பெரிய பிருஷ்டங்கள் அசைய அவனுக்கு முன்னால் படிகளில் ஏறிப் போனாள். இரண்டாவது மாடியில் ஏதோ ஒரு மூலையிலிருந்து தாய்லாந்து மொழிப்பாடல் மெல்லியதாய்க் கேட்டது. காதல் பாட்டு போலும். எவனோ மூக்கினால் உருகி உருகிப் பாடிக் கொண்டிருந்தான். இரண்டாம் மாடியில் எரிந்து கொண்டிருந்த குழாய் விளக்குகளின் வெளிச்சம் படிக்கட்டுகளின் ஓரமாகப்
போடப்பட்டிருந்த கைப்பிடியின் இடைவெளிகளின் வழியாகப் படிகளில் தடித்த பிரம்பங்குச்சிகளாகச் சிதறிக் கிடந்தது. மாறி மாறி தனக்கு முன்னால் விழுந்திருந்த வெளிச்சத்தில் ரகுவிற்கு வீடடங்குக் காலம் என்பதால் அவனை மட்டும் தோசை வாங்க
அனுப்பிவிட்டு வீட்டில் காத்திருந்த யமுனாவும் குழந்தைகளும் நினைவுக்கு வந்தார்கள். பழைய படிக்கட்டுகளில் ஏற்பட்டிருந்த சிறு குழியில் கால் வைக்காமல் கால் அகட்டி வைத்துக் கவனமாகக் கடந்தபோது அடுத்த நாள் காலை இணையம் வழியாக அவன் செய்யவிருக்கும் சமய இலக்கியச் சொற்பொழிவும் அதன் முக்கிய வாக்கியக் கோர்வைகளும் நினைவுக்கு வந்தன. ரகு அவன் நின்றிருந்த இடத்திற்கும் அவன் பேசப் போகும் உன்னதக் கருத்துகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதுபோலவே நாளைய பேச்சுக்காகத் தயாரித்து வைத்திருந்த வார்த்தைகளை வாய்க்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான். கடைசிப் படியில் ஏறி இரண்டாவது மாடியில் கால் வைக்கும் நேரத்தில் இதுவரை கால்விரல் நுனி மட்டும் பதிய படிகளில் ஏறியதால் கடைசி அடி தப்பி படிக்கட்டுகளின் ஓரத்தில் இருந்த கொண்டைபோல் உருண்ட கைப்பிடியை இறுகப் பற்றிக் கொண்டபோது காலையிலும் மாலையிலும் குளித்துவிட்டு ப்ராவும் பாவாடையும் மட்டும் அணிந்து உடைமாற்றிக் கொள்ளும் யமுனா நினைவுக்கு வந்தாள். லீஸா அணிந்திருப்பதைப் போன்ற சுடர்விடும் சாம்பெயின் நிற உள்ளாடையில் யமுனாவைப் பார்த்ததே இல்லை என்று ரகுவிற்குத் தோன்றியது. கறுப்பும் நீலமும்தான் யமுனாவுக்குப் பிடித்த நிறங்கள். தோள் பட்டைகள் சுருண்டு தளர்ந்துபோய், ஊக்குகள் வளைந்து துருத்திக் கொண்டிருக்கும் ப்ராக்களில் தவிர அந்தத் தருணங்களில் வேறு நேர்த்தியான
உள்ளாடைகள் யமுனா அணிந்து ரகு பார்த்ததே இல்லை.

படி தடுக்கிக் கீழே விழப் போனவனைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த லீஸா அவன் விழ மாட்டான் என்று அறிந்ததும் உடம்பைச் சின்ன குலுக்கலுடன் அலட்சியமாய்த் திருப்பி
நடக்க ஆரம்பித்தாள். இரண்டாம் மாடியின் அமைப்பு நீண்ட தாழ்வாரத்தை ஒத்திருந்தது. தாழ்வாரத்தின் ஒரு முனையில் தெருவைப் பார்க்கும் பெரிய சன்னல்கள். அடுத்த முனையில்
கடைவீடுகளில் பின்புறத்தைப் பார்க்கும் வண்ணமாக சிறிய சமையலறையும் அதன் அருகில் குளியலறையும் இருந்தன. சமையலறை வரைக்கும் தாழ்வாரத்தின் ஒரு பக்கம் மொத்தமும்
தடுப்புக்கள் நிறுத்தி சிறு சிறு அறைகாளாக மாற்றியிருந்தார்கள். மே மாதச் சாயங்காலத்தின் வெக்கையிலும் அரையிருட்டிலும் இரண்டாம் மாடி முழுவதும் சமையலறை ரைஸ் குக்கரில்
கொதித்துக் கொண்டிருந்த தாய்லாந்து அரிசியில் பழுத்த மணம் நிறைந்திருந்தது. ஆயிரம் ஆயிரம் காலடிகள் நடந்து தரையில் பதிக்கப்பட்டிருந்த சீனப் பீங்கான் கற்களில் மீது வரையப்பட்டிருந்த மலர்ச் சித்திரங்களின் பச்சையும் இளஞ்சிவப்பும் மிகவும்
மங்கலாய்த் தெரிந்தன.

ஒவ்வொரு தடுப்பறையாகப் பார்த்துவந்த லீஸா சன்னலுக்கு அடுத்தாற்போல் இருந்த அறைக்கு முன்னாலிருந்த அறையை ரகுவிடம் கைக்காட்டினாள். ஆறடிக்கு மூன்றடி அறை. நடுவாந்திரமாய் தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தை. உடைகளை மாட்ட தடுப்புக்களில் இறக்கப்பட்டிருந்த இரண்டு ஆணிகள். அதற்கடுத்தாற்போல் ஒரே நேரத்தில் இரண்டு கன்னங்களில் ஏதோ ஒன்றை மட்டும் பார்க்கக் கூடிய அளவுக்குச் சின்ன முகம் பார்க்கும்
கண்ணாடி. அறையின் உச்சியின் குளிரூட்டும் சாதனம். அதற்கடியில் கூம்பிய மலரின் வடிவத்தின் மங்கலான மஞ்சள் நிற வெளிச்சத்தைக் கக்கும் ஒற்றைப் பல்பு விளக்கு. கதவுக்குப் பதில் தடுப்பின் வாசலின்மேல் பதிக்கப்பட்டிருந்த நீண்ட குழாயில்
தொங்கிக் கொண்டிருந்த பூப்போட்ட திரைச்சீலை.

சன்னலோரமாக இருக்கும் அறையைப் பார்த்தபடி தயங்கி நின்ற ரகுவைக் கவனித்தவள் இரண்டாவது அறைக்குள் இருந்த குளிரூட்டும் பெட்டியை விரலால் சுட்டிக் காட்டியபடி தன்
மேலாடையின் முன்புறத்தைப் பலமுறை இழுத்து விட்டுக் கொண்டு பலமுறை சைகை செய்தாள். சில தடுப்புகள் தள்ளியிருந்த அறையிலிருந்து இந்திய உச்சரிப்போடு கரகரப்பான பேச்சுக் குரலும் அதைத் தொடர்ந்து ஏதோ ஒரு பெண்ணின் சிரிப்பொலியும் கேட்டு,
கேட்ட மாத்திரத்திலேயே அடங்கியும் போனது. அதன் பிறகு யாரோ மூன்று முறை இரண்டு உள்ளங்கைகளையும் குவித்து வைத்து வெற்று முதுகின்மீது பலமாய் அடிக்கும் ‘சளப் சளப்’ சத்தம் கேட்டது. பின்பு அதுவும் அடங்கிப் போக மீண்டும் நிசப்தம்.

தடுப்பறைக்குள் நுழைந்த லீஸா குளிரூட்டும் சாதனத்தை இயக்கிவிட்டு, பூக்குழாய் விளக்கின் வெளிச்சத்தை ஒரு குமிழைத் திருகி மங்கலாக்கினாள். வெளியே வந்தவள் வியர்வையில் பளபளத்துக் கிடந்த ரகுவின் தொண்டைக் குழிக்கு அருகிலிருந்த சட்டைக் காலரை விரல்களால் பிடித்து முன்னும் பின்னும் ஆட்டியபடியே “குளிக்கிறியா?” என்று கேட்டாள்.

ரகு தூரத்தில் வெள்ளை நிற வெளிச்சத்தில் வெறிச்சோடிக் கிடந்த சமையலறையயையும் அதன் ஓரமாய் இருந்த குளியறையையும் அருவருப்புடன் பார்த்தான். குளியலறை ஷவரின் தாமிரக் குழாய்களில் பச்சை நிறப் பூஞ்சை படிந்து தண்ணீர் ஒழுகித் வெள்ளைக் கல் பதித்த தரை முழுவதும் பளபளத்தது. ஷவரின் ஓரமாய் பதிக்கப்பட்டிருந்த கைப்பிடியில் சின்ன வெள்ளைச் சோப்புக் கட்டிகள் ரேப்பர்களில் பாதி சுற்றப்பட்டுக் கிடந்தன. பொங்கிக் கொண்டிருந்த சோற்றின் கூர்மையான வாசத்தோடு இப்போது அடுப்பில் மெல்லிய முனகலோடு வெந்து கொண்டிருந்த காய்கறிகளின் புளிப்பு வாசனையும் சேர்ந்திருந்தது. சமையலறைக்கு
ஓரமாய் இருந்த தடுப்புக்கு வெளியே முன்பு கவனிக்கத் தவறிய இரு ஜோடி காலணிகளின் நிழல் உருவம்.

“இல்லை, வேண்டாம்.”

“துண்டு இருக்கு. துவட்டிக்கலாம். வேணும்னா தரேன்.” லீஸா வார்த்தைகளை இழுத்து இழுத்து ராகத்தோடு ஆனால் சின்னச் சீறலாக அடிக்குரலில் பேசினாள்.

“வேண்டாம்.”

குமட்ட வைக்கும் இத்தனை அருவருப்பின் நடுவினில்கூட மனிதனின் அடிவயிற்றின் ஆழத்தில் சுடர்மிக்கக் கறுப்பு நிறப் பந்தாய் சுருண்டு கிடந்து அவ்வப்போது ஐந்து தலைகள் படமெடுக்க
நிமிர்ந்து சீறும் ஆசையில்தான் இந்த உலக நாடகமே நடக்கிறது என்பது புரிந்துபோக ரகு ஆச்சரியத்தில் ஆழ்ந்தவனாக லீஸாவின் விகாரமான உருவத்தைப் பார்த்தபடி அறையின் வாசலிலேயே நின்றான். அவன் கண்களுக்கு முன்னால் சுருங்கித் தளர்ந்த உள்ளாடையோடு குளித்துவிட்டு உடை மாற்றிக் கொள்ளும் யமுனா நினைவுக்கு வந்தாள்.

ரகு குளிக்க மறுத்ததை ‘இச்’ என்ற மெல்லிய சத்தத்தோடு அலட்சியப்படுத்தியவள் ரகுவின் காலணிகளை விரலால் சுட்டிப் பின்பு அறையின் வாசலை அதே விரலால் காட்டிவிட்டு, தடுப்புப்
பலகையில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளையும் காட்டிவிட்டு சமையலறைப் பக்கமாக எங்கோ போனாள்.

உடுப்புகளை எல்லாம் களைந்துவிட்டுப் படுக்கையின் தலைமாட்டில் மடித்து வைக்கப்பட்டிருந்த துண்டை இடுப்பில் கட்டி ரகு படுக்கையில் மல்லாந்து படுத்த போது படுக்கையில் படுப்பதற்கும் தரையில் படுப்பதற்கும் இடையே வித்தியாசம் தெரியாத வகையில்தான் படுக்கை மெலிந்து போயிருந்தது. படுக்கை உறையின் முனையில் மூட்டைப்பூச்சிகளை விரலால் நசுக்கியதைப்போல் தீற்றலாய்ச் சில பழுப்பு நிறக் கறைகள் தெரிந்தன. அதுவரை மாடிவீட்டின் பின்புறத்தில் எங்கோ கரைந்து போயிருந்த லீஸா மீண்டும் அறைக்குள் நுழைந்து வாசலில்
தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலையை இழுத்து மூடினாள். படுக்கையின் தலைமாட்டில் தன்னோடு எடுத்து வந்திருந்த கைப்பையையும், அலைபேசியையும், பெட்டி நிறைய டிஷ்யூ
தாள்களையும் வரிசையாக வைத்து படுக்கைக்கு ஓரமாக முட்டி போட்டு அமர்ந்தாள். முன்பு விரிக்கப்பட்டிருந்த அவள் தலைமயிர் இப்போது ரப்பர் வளையத்துக்குள் முடியப்பட்டிருந்தது. அவள்மீது புதிதாய் பூக்களின் நறுமணம் வீசியது. லீஸாவின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே ரகு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பசியோடு பிரகாசமான கறுப்பு நிற ரப்பர் பந்தாகச் சுருண்டு கிடக்கும் நாகத்தை நினைத்துக் கொண்டான்.
லீஸா கைப்பைக்குள்ளிருந்து வாசனை எண்ணெய் நிறைந்த சின்னப் புட்டியை எடுத்து அதைக் கையில் வைத்துப் பலமாகக் குலுக்கினாள். பின்பு மல்லாக்கப் படுத்திருந்த ரகுவின் மடியில்
கிடந்த துண்டின் மடிப்பை விலக்கி அவன் நிர்வாணத்தை உறுதி செய்து கொண்டாள். அவள் வாயின் கடையோரங்களில் மெல்லிய ஏளனச் சிரிப்பு எழுந்து அடங்கியது. ஆனால் ரகு அதனைப்
பொருட்படுத்தவில்லை. ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு என்று கட்டணம் வசூலித்தாலும் இந்த இதர சேவைகளால் வருவதுதான் லீஸாவுக்கு நிகர சம்பாத்தியம் என்று வேறு ஒரு பெண் முன்பு
ரகுவிடம் சொல்லியிருந்தாள். ரகு தன் வாயை மூடியிருந்த முகக் கவசத்தைக் கழற்றி பக்கத்தில் வீசியபோது லீஸா தயங்கினாள். பின்பு சின்னப் பெருமூச்சோடு தான் அணிந்திருந்த முகக்
கவசத்தையும் கழற்றி அதைத் தனது கைப்பையின் பக்கத்தில் கவனமாக மடித்து வைத்துக் கொண்டாள். அப்போதுதான் லீஸா தனது வாய்க்குள் வெற்றிலையை அடக்கிக் குதப்பிக் கொண்டிருப்பது ரகுவிற்குத் தெரிந்தது. அறையின் மங்கிய வெளிச்சத்தில் வெற்றிலைச் சாற்றின் கறை படிந்திருந்த அவளது உதடுகள் கறுப்பாய்க் காய்த்துக் கிடந்தன.

பலவிதமான ஆடவர்களின் உடல் நாற்றத்தைச் சகித்துக்கொள்ள வெற்றிலை போட்டுக் கொள்வது மலிபவான உபாயம் என்று அதே பெண் ரகுவிடம் சொல்லியிருக்கிறாள்.
ரகு ஆசையோடு லீஸாவின் தோளில் சுடர்விட்டுக் கொண்டிருந்த சாம்பெயின் நிற உள்ளாடைப் பட்டைமீது கை வைத்தான். ஆனால் அதை அவசரமாக விலக்கியவள் அவனைக் குப்புறப் படுக்கச் சொல்லி உள்ளங்கையைத் திருப்பிச் சைகை காட்டினாள்.

“போடி பெரிய பத்தினியாட்டம்,” என்று கறுவியபடியே ரகு குப்புறப் படுத்தான். காமத்திற்கும் வன்முறைக்கும் இடையே மெல்லிய நூலிழை அளவுதான் வித்தியாசம். இத்தகைய இடங்களிலும் செயல்பாடுகளிலும் தெளிவான சம்பிரதாயங்களும் முறைமைகளும் உண்டு. அவற்றை ரகு, லீஸா இருவரும் நன்கு அறிந்திருந்தார்கள். லீஸா ரகுவின் இடுப்புப் பகுதியைத்
தொடும்வரைதான் என்று இருவரும் அறிந்திருந்தார்கள். காமம் என்பது ஐந்துதலை நாகம், இந்தச் சம்பிரதாயங்களும் முறைமைகளும் படம் விரித்தாடும் நாகத்தின் மெல்லிய அசைவுகள். எல்லாத் திசையிலும் தலைகளைத் திருப்பியபடி ஆடும் நாகம் கொத்தியே தீரும். மெல்ல எழுந்து ஆட ஆரம்பித்திருக்கும் நாகப்பாம்பு உரிய நேரத்தில் கொத்தட்டும் என்று இருவரும்
பொறுமையாய்க் காத்திருந்தார்கள், குப்புறப் படுத்திருந்த ரகுவின் பாதங்களைப் பிடித்து
விட்டபடியே லீஸா அவனுடைய ஊர், வேலை, குடும்பம், மனைவி பற்றிய சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டாள். ரகுவும் அடுக்கடுக்காகப் பொய்களைச் சொன்னான். அவன் பொய்கள்
அத்தனையும் லீஸா என்ற பெண்ணைத் தனது ஆற்றலையும், வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளையும் எடுத்துக் காட்டிக் கவர்வதற்காகவே சொல்லப்பட்டன. அதில் இந்தப் பெண்ணுக்கு எங்கே உண்மை தெரியப் போகிறது என்ற விசித்திரமான கர்வமும்
இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் லீஸாவிடம் பொய்களைச் சொல்லச் சொல்ல அவன் சொன்ன பொய்களையே உண்மைகளென்று ரகு நம்பத் தொடங்கியிருந்ததுதான்.
லீஸா ரகுவின் பருத்த தொடைகளை விரல்களால் அமுக்கத் தொடங்கியபோது அது நடந்தது. அவள் விரல்கள் இன்னும் மேலேறட்டும் என்று காத்திருந்த ரகுவின் இடுப்பில் ரோமங்கள்
நிறைந்த ஏதோ உயிரினம் ஒன்று தடவிக் கொண்டு ஓடியது. பழைய கடைவீட்டில் குடியிருக்கும் ஏதோ ஒரு பெருச்சாளிதான் ஓடுகிறது என்ற பயத்தோடும் அருவருப்போதும் தலைக்கு
அருகிலிருந்த கைத்தொலைப்பேசியைக் கையில் எடுத்துக் கொண்டு தன்னைத் தடவிக் கொண்டோடிய பிராணிமீது விசிறி அடிப்பதற்காக

‘ஏய்’ என்ற பெருங்குரலோடு ரகு இடுப்பில் துண்டு நெகிழ எழுந்து
உட்கார்ந்தான். ஆனால் திரும்பிப் பார்த்தபோது ரகுவின் கால்களுக்கு அருகே
தரையில் முட்டிக்கால் போட்டு அமர்ந்திருந்த லீஸாவின் தொடைமீது முக்கோண முகமும், கூர்மையான காதுகளும், கொடிக் கம்பத்தைப் போன்று தூக்கிப் பிடித்த இத்தூனுண்டு வாலையும் உடைய ஒரு பூனைக்குட்டி உரசிக் கொண்டிருந்தது. அறையின் மங்கலான வெளிச்சத்தில் பூனைக்குட்டியின் கண்கள் விலையுயர்ந்த புஷ்பராகக் கற்களாகச் சுடர் தந்தன. அதன் உடம்பின் சாம்பல் நிறம் லீஸா அணிந்திருந்த உள்ளாடைபோலவே சாம்பெயின் நிறமாக
மாறியிருந்தது. ரகு பார்த்துக் கொண்டிருக்கும்போதே தோற்றத்தில் முதல் பூனைக்குட்டியைப் போலவே இருந்த வேறு இரண்டு பூனைக்குட்டிகள் திரைச்சீலையை விலக்கி அறைக்குள் வந்து
லீஸாவிடம் குழைய ஆரம்பித்தன. பூனைக்குட்டிகளின் வருகையால் லீஸாவின் தோற்றத்தில்
ஆச்சரியப்படத்தக்க மாற்றம் ஏற்பட்டிருந்தது. அவள் தனது மார்புக் கோட்டுக்குக் கீழ் நழுவி நின்ற சாயம்போன இளம்சிவப்பு நிற மேலாடையைத் தாண்டி, வலுக்காட்டாயமாக அவளுடைய
மார்புகளை ஏற்றி நிற்க வைத்திருக்கும் சாம்பெயின் நிற உள்ளாடையைத் தாண்டி, மூட்டைப்பூச்சிகளை விரல்களால் நசுக்கிய கறைகளும், வெந்து கொண்டிருந்த மலிவான அரிசியின் பழுத்த வாசமும் படைப்பின் தொடக்கத்திலிருந்தே பொங்கிப் பெருகிய
மாபெரும் காம நதியின் கிளைநதியாய் ஆயிரமாயிரம் ஆடவர்களின் விந்துச் சிதறல்களும் நிறைந்திருந்த இந்த அறையைத் தாண்டி, தொற்று நோயால் வெறிச்சோடிப் போன இந்தத் தெரு தாண்டி, தன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்த நகரம் தாண்டி மறுரூபமாகிப் போயிருந்தாள். முன்பு விஷமும் விகாரமும் அலட்சியமும் கலந்திருந்த அவளுடைய முகம் மென்மையாகிப் பெரும் பிரகாசத்தால் நிறைந்திருந்தது. தன்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த பூனைக்குட்டிகளின் நெற்றியில் விரல் மடக்கித் தேய்த்தபடியே அவள் வெகு கொஞ்சலாய்ப் பேச ஆரம்பித்திருந்தாள்.

“நொங்-நொங். நொங்-நொங்குக்குப் பசிக்குதா? மியூ-மியூ, ஷான் ஷான். எல்லாருமும் மம்மியப் பார்க்க வந்திங்களா? கொஞ்சம் பொறுத்திருங்க. கொஞ்ச நேரத்துல மம்மி வேலை முடிச்சுட்டு வந்து உங்களுக்கெல்லாம் சாப்பாடு தரேன்.”

ஏறெடுத்துப் பார்த்தவளின் முகம் ரகு கைத்தொலைப்பேசியைப் பூனைக்குட்டிகளின் மீது தூக்கி எறியப் போவதுபோல் ஓங்கி இருப்பதைப் பார்த்ததும் கலவரத்தில் இறுகிப் போனது.

“வேணாம் மிஸ்டர், ப்ளீஸ். பூனைக்குட்டிகள், பாவம்.”

“ஏதேது இந்தப் பூனைக்குட்டிகள்?” இடுப்பில் நழுவியிருந்த துண்டைத் தொடைகளுக்கு நடுவில் நன்கு செருகியபடி ரகு கேட்டான்.

“இங்க ஒரு அம்மா பூனை இருக்குது. இதுவரைக்கும் மூணு தடவை குட்டிப் போட்டது. எங்களப் பார்த்துக்குற ஆண்டிக்குப் பூனைகளைக் கண்டால பிடிக்காது. முதல் தடவ அம்மா பூனை
குட்டி போட்டப்ப குட்டிகள் மேல கொதிக்குற தண்ணிய ஊத்தி அம்மா பூனை கண் முன்னாலயே கொன்னுட்டா. ரெண்டாம் தடவை குட்டிகள எல்லாம் ஒரு சாக்குல போட்டு ரோட்டுல இருக்குற
பாறாங்கல்லுல ஓங்கி ஓங்கிச் சாகடிச்சா.”

லிஸா தன் இரண்டு கைகளையும் தோளுக்கு மேல் ஓங்கி மீண்டும் மீண்டும் துணிகளை அடித்துத் துவைப்பதைப்போல் ஜாடை காட்டினாள்.

“மூணாம் தடவை அம்மா பூனை கர்ப்பமானப்ப நான் பார்த்துகிட்டே இருந்தேன். அது குட்டி போட்டதும் குட்டிகளைப் பத்திரமா எடுத்து வச்சுகிட்டேன். அம்மா பூனைக்கும் நான்தான்
சாப்பாடு போடுறேன்.”

“அம்மா பூனை எங்க இருக்கு?”

லீஸா தலையை வளைத்துக் கையால் கூரையிருக்கும் திசையில் எங்கோ வளைத்து வளைத்துக் காட்டினாள்.

“ஆண்டி குட்டிகளப் பார்த்தா கொன்னுடுவா. தயவுசெய்து சத்தம் போடாதீங்க.”

“பூனைக்குட்டிகளை நல்ல வீடா பார்த்து வளர்க்கக் கொடுத்துட்டா அது பொழைச்சுக்கும் இல்லையா?” லீஸா தன்னைச் சுற்றி வந்து கொண்டிருந்த பூனைக்குட்டிகளை வருடிக் கொடுத்தபடியே உதடு பிதுக்கி யோசித்தாள். அவள் மனப்போராட்டம் ரகுவுக்குப் புரிந்தது.
பின்னர் முகத்தில் பிரகாசம் நிறைந்தவளாக ரகுவை ஏறெடுத்துப் பார்த்தாள்.

“நீங்க நொங்-நொங்குக்கும் அவன் தம்பிகளுக்கும் நல்ல வீடா பார்த்துத் தர முடியுமா?”

“அது என்ன பிரமாதம்?”

ரகு தான் சொல்வதை எல்லாம் உண்மையென்று நம்ப ஆரம்பித்திருந்த நேரம் அது. அவன் மடியில் கிடந்த துண்டிலிருந்து தலைதூக்கிப் பார்த்து வயிறு மார்பு என்று நிழலாய்
படமெடுத்திருந்த ஐந்துதலை நாகம் எல்லாத் திசைகளிலும் தன் தலைகளால் திருப்பிப் பார்த்து அந்தக் கணத்தின் சகல விதமான சாத்தியங்களையும் அதன் மின்னும் மணி விழிகளால் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. அதுவரை ரகுவை அலட்சியத்தோடும் ஏளனத்தோடுமே பார்த்த லீஸா படுக்கைக்கு முன்னேறி அவனை ஆரத் தழுவிக் கொண்டாள்.
குதூகலமான பெண் நல்ல தரமுள்ள திராட்சைகளால் தயாரித்த சாம்பெயின் மதுவைப்போல் கொண்டாட்டங்கள் நிறைந்தவள். மற்ற எல்லா மதுவகைகளையும்விட ஆனந்த வெறி கொப்பளிக்கச் செய்யும் தன்மை சாம்பெயினிடம் உண்டு.

லீஸா அந்த அறையை முழுக்க நிரப்பும் சாம்பெயின் நிற நதியானாள். அவள் அரவணைத்தாலும் நெடு நேரம் கரைகளைப் பற்றிக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்த ரகு
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கரைகளை விட்டுக் கைகளை எடுத்தவனாய் அந்த ஆச்சரியம் மிகுந்த வெள்ளத்தில் மூழ்கிப் போனான்.

ஒரு மணி நேரத்துக்குப் பின் ரகு உடுப்பை எடுத்து மாட்டிக் கொண்டபோது லீஸா வலிய முன்வந்து அவன் தலையைக் கோதி விட்டாள். அவன் சட்டையைக் கால்சட்டைக்குள் இன் செய்ய
உதவினாள். அவன் இடுப்பிலிருந்த பெல்ட்டை சரியான அளவுக்கு இறுக்கி ரகுவின் இடுப்பைச் சுற்றி அதனை மாட்டி விட்டாள். பணத்துக்காகத்தான் லீஸா தன்னைச் சுற்றி வருகிறாள் என்று
நினைத்த ரகு தனது பணப்பையை எடுக்கப் போனான். லீஸா அவன் கைமீது தனது கையை வைத்துத் தடுத்தாள்.

“வேணாம்.”

“இது வழக்கம்தான.”

“நீங்கதான் நொங்-நொங்குக்கும் அவன் தம்பிகளுக்கும் நல்ல
வீடா பார்த்துத் தரப் போறிங்களே.” அவள் கண்களில் நம்பிக்கையும் நன்றியும் சுடர்விட்டன.

“உங்க கைத்தொலைப்பேசி நம்பர நான் எடுத்துக்கலாமா? நான் மெசேஜ் அனுப்புறேன். நொங்-நொங்குக்கும் அவன் வீடு கிடைச்சா சொல்லுங்க. ஒரு வேளை நான் நொங்-நொங்கை மட்டும்
வச்சுகிட்டாலும் வச்சுப்பேன்.”

“…”

“உங்க நம்பர் வாங்கிக்கலாம் இல்லையா?”

ரகு மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் ஒவ்வொரு எண்ணாய்த் தவறான எண்ணைச் சொன்னான். இப்போது கைத்தொலைப்பேசியில் சார்ஜ் இல்லை என்றும் நாளை குறுஞ்செய்தி அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டான். லீஸா மிகுந்த உற்சாகத்தோடு ரகுவுக்குக் கையாட்டி வழியனுப்பி வைத்தாள்.சாம்பெயின் மதுவைப் பற்றி வேறொன்றும் சொல்வார்கள். உண்மையில் பார்க்கப் போனால் சாம்பெயின் மதுவில் பெரும்பாலும் நுரைதான் இருக்கிறது. மிச்சமிருக்கும் மதுவில் மிகப் பெரும்பகுதி வெறும் மயக்கமாகவும் நெருப்பின் வெப்பமுமாகவே காற்றில் கலப்பதுபோல் உடம்பில் உடனே கலந்து காணாமல் போகிறது. ரகு அந்தக் கடைவீட்டை விட்டு வெளியே வந்தபோது தெருவிளக்குகளின் வெளிச்சத்தில் இரவும் சாம்பெயின் நிறமாகத்தான் இருந்தது. ஆனால் இது நாகம். சாம்பெயின் நிற நாகம். ரகு லிட்டில் இந்தியாவின் உணவங்காடிகளைத் தேடிப் பசியோடு நடந்து போக அவனைச் சுற்றியிருந்த இரவு தந்திரம் மிகுந்த சாம்பெயின் நிற பாம்பாக ஐந்து தலைகள் விரிய எழுந்து அந்த இரவை, அதன்
கீழிருந்த நகரத்தை, அந்த நகரத்தின் வெறும் கருவிகளாகச் சுழன்று கொண்டிருந்த மனிதர்களைத் தனது பிரகாசமான நாகப்படத்தால் மறைத்துக் கொண்டது.

 

***

 

 

 

-சித்துராஜ் பொன்ராஜ்

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *