புற்றீசல்களென சடைத்துப் பரவும் இந்திய சினிமாவில் விளையாட்டுக்களை பேசுகின்ற திரைப்படங்கள் அவ்வப்போது தலை காட்டுவதும் அடங்குவதுமாய் இருப்பது கால வழமை. கபடி,கிறிக்கட், உதை பந்து, ஓட்டம்…..என நீள்கின்ற விளையாட்டுக்களில் தொடர்ச்சியில் குத்துச் சண்டையையும் உள்ளடககமாகியிருக்கும் திரைப்படங்களும் வராமலில்லை. பத்ரி,பூலோகம்,எம்.குமரன்,மா
இந்திய குத்துச் சண்டைக்கு ஒரு தொன்ம வரலாறு உண்டு. கிரிஸ் நாட்டில் கி.மு.688இல் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் இந்த விளையாட்டு சங்க காலத்தில் இந்தியாவிலும் புளங்கியதாக அறியக் கிடைக்கிறது.சங்க காலத்தில் புகார் நகரில் போட்டி விளையாட்டுக்கென ஒரு மன்றம் இருந்ததையும் அதில் கையுறையணியாது வெறுங்கையால் ஒருவர் மீது ஒருவர் கோபாவேசத்தேடு பொருதி விளையாடியதாய் சிதறலான தகவல்களை ஆங்காங்கே காணக் கிடைக்கிறது .
மலர் தலை மன்றத்துப் பலர்
உடன் குழீஇ
கையினும் கலத்தினும் மெய்
உறத் தீண்டி
பெருஞ் சினத்தால்
புறக் கொடா அது
இருஞ் செரிவின்
இகல்
மொய்ம்பினோர்
என்ற சங்கப் பாடல் குத்துச் சண்டையின் ஒழுங்குபடுத்தப்படா வடிவமொன்று புளங்கியதை காட்டுகிறது. 1925களில் மும்பாயில் அரச அனுமதியோடு அமைக்கப்பட்ட குத்துச் சண்டை அமையம் முறையாக அமைக்கப்பட்ட தகவலும் உண்டு.இவ்வாறு மன்றங்களும் பரம்பரைகளும் ஆட்கொண்டு வந்த குத்துச் சண்டை வரலாற்று ஒழுங்குகளில் கடத்தப்பட்டு வரும் சரிதத்தின் 1970களினதும் அவற்றை அண்மித்த கால சூழலின் களத்தை உரத்துப் பேச சார்பட்டா.முனைந்திருக்கிறது. தமிழ்ச் சினிமா காட்டும் குத்துச் சண்டை இதுதான் என்ற தமிழ் மன பொது விளிம்பிலிருந்து ரசிகர்களை வெளித்தள்ளி தனி மனித இயங்குதலை தூண்டிவிடுகிற ஒரு மையத்திலிருந்துதான் இந்தப்படம் இயங்கத் தொடங்குகின்றது.
அந்தந்த காலங்களில் குத்துச் சண்டை பயிற்சி மையங்களை அமைத்து ஆக்ரோசமாக தங்களுக்கிடையேயும் ஆங்கிலோ இந்தியர்களிடையேயும் மோதிக் கொண்டசார்பேட்டா பரம்பரை,இடியப்ப நாயக்கர் பரம்பரை,கறியார பாபு பாய் பரம்பரை,இரும்பு மனிதர் ராசமாணிக்கம் என நீள்கின்ற பரம்பரைகளில் சார்பட்டா பரம்பரைக்கும் இடியப்ப நாயக்கர் பரம்பரைக்குமிடையேயுள்ள தீராப்பகையுடைய வரலாற்றை இப்படம் பேச முற்படுகிறது. வரலாற்றை அடியொற்றிய செய்தியை படமாக்கும்போது நேர்ந்து விடுகிற மிகப் பெரும் ஆபத்து அது விவரணமாக அமைந்து விடுவதுதான்.அத்தகைய ஆபத்துக்களிலிருந்து தப்பி பிழைத்திருக்கிறது சார்பட்டா. நிகழ்வுகளின் மூலத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதை தன் இஷ்டத்துக்கு அசைத்து புனைவுக்கும் அல் புனைவுக்கமிடையிலான நிகழ்தளத்தில் உருப்போட்டு வணிக நிர்ப்பந்தங்களை நாகரிகமாக அனுசரித்து நகர்ந்திருக்கிறார் பா.இரஞ்சித்.
‘கபிலன்’ பாத்திரம் உரிமை முழுதாய் வந்து சேராத ஒடுக்கப்பட்ட ஒரு பரம்பரையின் குறியீடு.தாங்கள் சார்ந்த பரம்பரையின் நைந்து போன அடங்குதலை பிதுக்கிக்கொண்டு வெளித் தெறிக்கும் விதமாக இயக்குனர் அப்பாத்திரத்தை கையாள முனைகிறார்.வீரம், அஞ்சாமை, போர்க் குணம்,மூர்க்கம்,எல்லை மீறிய சுய நம்பிக்கை என்ற கபிலனின் பாத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் பொதுமனப்பினை ஒரு தனி மனப்பரப்பில் ஏற்றி தன் உள்ளாற்றாமையை வெளிப்படுத்தும் இரஞ்சித்தின் வார்ப்புத்தான்.அப் பாத்திரம் உடைப்பெடுத்து வலிமையுற்று பெருகி பேரெடுத்த பரம்பரையை அடித்து வீழ்த்துகிறபோது ஏற்படுகின்ற நேர் வழியான ஆறுதலைத்தான் கபிலன் பாத்திரம் மூலம் இரஞ்சித் உருவாக்கியிருக்கிறார்.
இந்தப்படத்தில் ‘ரோஷமான ஆங்கில குத்துச் சண்டை’ என்ற வாக்கியம் படத்தின் உள்ளேயும் விளிம்புகளிலும் இரு தொங்கல்களிலும் காணக்கிடைக்கிறது.என்னைப் பொறுத்தவரை இது குத்துச் சண்டைக்கு மட்டுமான வாக்கியமல்ல. படத்தின் மைய இழையே ரோஷம்தான். ரோஷமும் வீராப்பும் பொருந்திய மாந்தர்கள்தான் இந்த படம் நெடுகிலும் உலாவுகிறார்கள். வேம்புலி என்ற இடியப்ப நாயக்கனால் சார்பட்டா பரம்பரையினர் சாயத் தொடங்குகிறபோது ரங்கன் வாத்தியார் தன் இனத்தையே அடகு வைத்து ஆடத்துணியும் ரோஷம், இயலுமை இயலாமையை புரிந்து கொள்ளாமல் வேம்புலியுடன் பொருத உள்ளூற ஆசைப்படும் வெற்றியின் ரோஷம்,ரங்கனால் வேமபுலியோடு மோத நியமிக்கப்படும்போது மறுப்பேதும் சொல்லாது ஒத்துக் கொள்கின்ற ரோஷம், தன் நேசத்துக்குரிய ரங்கன் வாத்தியார் அவமானப்படும்போது எந்தவித முறையான பயிற்சியுமில்லாத கபிலன் ராமன எதிர்க்க கிளர்ந்தெழுகிற ரோஷம், தன் பிள்ளையை பொக்ஸிங்கின் பக்கம் அண்டவொண்ணாது அறச் சீற்றத்தோடு எல்லோரையும் தெனாவெட்டாய் அலட்சியப்படுத்தும் பாக்கியத்தின் ரோஷம், தன் கணவன் இயலாதவனாய் பிறர் எள்ளும்போது வார்த்தைளா் உந்தி நிமிர்த்தி விடுகிற மாரியம்மாளின் ரோஷம் படம் ரோசமும் வீராப்பும் நிறைந்தவர்களின் உலகமாக இருக்கிறது.
கதை ஒரு சின்னப் புள்ளியிலிருந்து கிளைத்து அதனைச் சுற்றியே அசைகிறது. கதை உலாவும் தளமும் தட்டையானதுதான்.ஒரு பொக்ஸிங் மேடையும் அதனை அண்டிய குடியிருப்புகளும் அவ்வளவே. இதனை வைத்துக் கொண்டு மிகச் சுவாரசிமாக கதையை இடைவேளை நகர்த்தி செல்கிறார். பின்பு கதைக் களம் தடம்மாறி அரசியல் உலகம், சாராயம் காய்ச்சும் பக்கம், கடல்., காடு என அலைந்து மீண்டும் பொக்ஸிங் மேடைக்கே வந்து விடுகிறது. படத்தின் பிரதான பலம் வடசென்னையின் பின்புலத்தின் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் வார்த்தையாடல்கள்தான். அன்பை மூர்க்கத்தோடு வெளிப்படுத்துகின்ற அந்த வார்த்தைகள்,எந்த அதிர்வையும் அலட்சியமாக கடந்து விடுகிற அவ் வார்த்தைகள்,உறவுகள் ஒழுங்குகள் மேன்மைகள் சிறுத்தல்கள் என வேறுப்படுத்தாது எல்லா உருவங்களையுமபார்த்து் பொருமி வெடிக்கிற அவ்வார்த்தைகள், அநாகரிகம் என அகராதிகள் நாகரிமென வழமை கொள்கிற அவ் வார்த்தைகள், தன்னம்பிக்கை ஒளியாய் பாவுகின்ற அவ் வார்த்தைகள் படத்தின் கதைக்களத்தோடு அச்சு அசலாய் பொருந்துகிறது. தமிழ் பிரபாவும் ரஞ்சித்தும் நேர்த்தியாய் உழைத்திருக்கிறார்கள்.
திரையில் உலாவும் மாந்தர்கள் அத்தனை பேரும் வீணடிக்காமல் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்
இது பீரியட் பிலிம்.அந்தந்த காலத்தின் அசலை அச்சொட்டாக கொண்டு வரும் நிர்ப்பந்தங்களை வெல்ல வேண்டியது அவசியம். அதனை கலை இயக்குனர் தா.ராமலிங்கம் சரியாகவே செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் சூழல் பிரதிபலிப்பை அவர் கண் முன் நிழலாட விடுகிறார். கிடுகாலான பொக்ஸிங் பயிற்சி மையங்கள், பழமையான கயிற்றுபின்னலான ரிங் தளங்கள், சுவரில் ஒட்டப்பட்ட எம்.ஜிஆர்,சிவாஜி போஸ்டர்கள், தி.மு.கவின் இலட்ச அந்தக் காலத்தில்னை வரையப்பட்ட ரங்கன் வாத்தியாரின் வீட்டுச் சுவர், ரோஜா பாக்கு உட்பட பிரபல்யமாகியிருந்த விளம்பரங்கள், பழமயைின் சாயல் கொண்ட மணிக்கூட்டு கோபுரம்,சாந்தி தியேட்டர், காறை உதிர்த்த சுவர்கள்,பழைய ஓடு,வைக்கோல் வேய்ந்த குடித்தனங்கள்,சமுதாய நலன் சார்ந்து அறப்பணிகள் ஆற்றும் நிறுவனங்ளின் பெயர் தாங்கிய சுவர், ரிங் பேனர்கள், பழைய எழுத்து முறையிலான பயிற்சி நிலைய பலகைகள் என துல்லியமான மெனக்கடல் நிகழ்ந்துள்ளது.
ஆடை வடிவமைப்பும் அப்படியே பெல்போட்டமும் கொலர் பருத்த இறுக்காய உடம்பை கவ்விக் கொள்கிற ஆடையும் கொசுவச் சாரியும் என மிக கவனம் பெறுகிறது. அந்தக் கால சிகைகயலங்காரமும் மீசையும் தலைப்பின்னலும் நெஞ்சுப் பொத்தாளன திறந்து அணிகிற ஃபெஷனும் படத்தில் பதிவாகியுள்ளது. முரளி.ஜியின் ஒளிப்பதிவும் பேசும் பொருளாகியிருக்கிறது.மிக குறைந்த தளப்பரப்பில் இயங்குகின்ற கதைக்கு ஒல்வொரு சொட்டையும் புதிது புதிதாக காட்ட வேண்டியது பெரும் சவால்தான்.அதனை அவர் கணித்து வெவ்வேறு கோணங்களில் கமராவை நிறுத்தி செய்து பார்த்திருக்கிறார். அந்தக்காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு குறைவு அதனையுணர்ந்து சிக்கன வெளிச்சத்தில் இரவை காட்டுகிறார். படத்தில் குளோசப் காட்சிகள் ரிங் மேடையில் மோதிக் கொள்கிற வீரர்கள் முகபாவனையையும் உணர்வுகடத்தல்களையும் வெளிப்படுத்த இது அவசியம் என இயக்குனர் உணர்ந்திருப்பார் போலும். அதனை ஒளிப்பதிவாளர் உண்மைப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் பெரும்பாலான பகுதி குத்துச் சண்டைபின்புலத்தில் நகர்வதால் சனங்களின் ஓங்கார ஒலி படத்தை நிறைக்கிறது. இதனை தாண்டி இசையமைப்பாளர் உழைத்திருக்கிறார். வழமைபோலவே சந்தோஷ் நராயணன் தேவையான இடத்துக்கு மட்டும் பின்னணி இசையை புகுத்தியிருக்கிறார் மற்றைய இடங்களை உறுத்தாத மெல்லொலிகளாலும் மௌனங்களாலும் நிறைத்திருக்கிறார். ♦ படத்தில் குறைபாடுகளும் எட்டிப்பார்க்கிறது. தான் சார்ந்த கருத்து நிலையை இயக்குனர் வலிந்து திணிக்கும்போது இக் குறைபாடுகள் தவிர்க்க முடியாததாகிறது. சார்பட்டா பரம்பரையின் அசைக்க முடியாது கோலோச்சியவர்கள் கடலையும் கடல் சார் மரபையும் வாழ்வாக கொண்ட மீனவர்கள்தான் இப் பரம்பரையில் பின்னாட்களில் வேற்றவர்கள் இணைந்தாலும் .சார்பட்டா என்றால் ‘மீனவர் கோதா’என அழைக்கும் வழமை இருப்பதாக தகவல்கள் காட்டுகின்றன. இது படத்தில் காட்டப்படாமல் பின்பாதியில் பீடி ராயப்பன் என்ற கஜபதியின் பாத்திரத்தினூடாக தொட்டுக் கடக்கிறது.சார்பட்டா பரம்பரையில் ஆங்கிலோ இந்நிய வீரரை முதலில் வீழ்த்திய கித்தேரி முத்து, டாமிகன் முத்து,சுந்தர் ராஜன், அன்பு முத்து, அருமை முத்து என்ற பரம்பரை தொடர்ச்சியிருப்பதாக கூறப்படுகிறது. அது படத்தில் பேசப்படவீல்லை. சார்பட்டா பரம்பரையில் dancing ஏழுமலை எனும் ஒருவர் இருந்ததாக அறியக் கிடைக்கிறதுஅதன் வழிச் சிந்தனையாகத்தான் டான்சிங் ரோஸ் நுழைக்கப்பட்டிருக்கலாம்.
படம் பாதி வரை குத்துச் சண்டைகளத்தினை மைய முனையாக்கி நகர்கிறது. பிறகு தடாலென சரிந்து கட்சி அரசியல் பிறழ்வு சாராயக் கலாசாரம் வெட்டு, குத்து, பழி தீர்த்தல் எனச் வேறு திசை பார்த்து ஓடத் தொடங்குகிறது.ஒரே விசயத்தை தொடர்ந்து மூன்று மணி நேரம் ஓடச் செய்வதை ரசிகர்கள் எவ்வாறு மனம் கொள்வர் என்ற குழப்பம் கலந்த பரிசோதனையை தவிர்த்தல் அல்லது தான்சார்ந்த சமுதாயப் பார்வைகள், அரசியல் அக்கறைகள், இசங்களை ஊன்றச் செய்வதற்காக அப்படியொரு யுக்தியை செய்து பார்த்திருக்கக் கூடும். படத்தின் கடைசி காற் கூறில் நொந்து பே்ான கபிலனை மீட்டுருவாக்கம் செய்து மீண்டும் குத்துச் சண்டைக் களத்தில் நுழைவிப்பது மீனவன் பீடி ராயப்பனாக வரும் கஜபதி. ஆனால் சண்டையிட்டு மல்லாக்க வேம்புலி கிடக்கும்போது ரங்கன் வாத்தியாரே கபிலன் எல்லா வித்தைக்கும் சொந்தக் காரராக முன்னிலைப்படுத்தப்படுகிறார். தான் சார்ந்த சமுக அக்கறை ரஞ்சித்தை இவ்வாறு செய்ய தூண்டியிருக்கலாம்.
வேம்புலி கபிலனும் மோதிக் கொள்கிறார்கள் வேம்புலியின் இடி வாகாக இறங்கி கபிலனின் தாடைச் சதை சிதைந்து அறுந்து விடுகிறது.கண்கள் சொருகத் தொடங்குகிறது.மேலே மின் விளக்குகள் மங்கத் தொடங்குகிறது. ஒரு ஒற்றை விளக்கு மட்டும் ஒளிர்வாய் தெரிகிறது. ரங்கன் வாத்தியார் வார்த்தைகளால் உசுப்புகிறார். கபிலன் முக்கி முனகி எழும்புகிறார். பதினோராவதும் கடைசியுமான ரவுண்ட் கபிலன் இடியொன்றை இறக்குகிறார் வேம்புலி பட்டமரமாய் சரிகிறார்.எம்.குமரன் கால ரெக்னிக் ரஞ்சித்தும் தமிழ் சினிமாவின் தர்மத்தை காப்பாற்றிவிட்டார்.
கதை வரலாற்றுப் பின்புலத்திலான புனைவு என்பதால் சர்ச்சைகளும் தர்க்கங்களும் நேராயும் எதிராயும் குவியலாம். அவைகள் எழுந்து பின்னடங்கும். ஆனால் சார்பட்டா பரம்பரை காலத்துக்கும் பேசப்படும்.
***
-ஏ.எம்.குர்ஷித்