காற்றில் சுழன்ற ரப்பர் பந்து அடிக்கப்பட்ட திசையில் உயர்ந்து தாழ்ந்து பறந்து நெளிவதை கல்லூரி மைதானத்திலிருந்த கேலரியின் கீழிருந்த கடைசி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். பிடிக்கப்படாத அந்த பந்து பௌண்டரி லைனுக்கு அருகில் நின்றவனின் வலக்கையின் ஆள்காட்டி விரலை தாக்கிவிட்டு லைனை தாண்டி சென்றுவிட்டது. பந்து பட்ட விரலின் கடைசி கணு சட்டென ரத்தம் கட்டி புடைத்து விண்விண் என வலி துடித்ததை தாங்கிக்கொண்டு மீண்டும் தன்னிடத்திற்கே வந்து அடுத்த பந்திற்காக காத்திருந்தான். என் இடக்கையின் நடுவிரலில் அதே போன்றதொரு வீக்கம் இன்னும் தணியாமல் லேசான வலியுடன் அப்படியே அங்கேயே தங்கிவிட்டது. மெல்ல அழுத்திப்பார்த்தால் சுகமான ஒற்றை வலியின் நெருடல் மூளையில் பட்டுத் தெறித்து அடங்குகிறது. மைதானத்தின் மூலையில் குவித்துவைத்திருந்த காய்ந்த தேக்கிலைகளின் குவியல் எரிந்து அடங்கி கனன்று சாம்பல் காற்றுக்கு சுழன்று பறந்து எனக்கு நிகரான உயரத்தில் எழுந்தது. மௌனமான அந்த பறத்தலின் ஒலியின் ஊடே சிதை முறியும் ஒலி சன்னமாக ஒலித்தது. அவனை சிதையில் மூடிவைத்து எரிய வைத்தபின் எழுந்த , என் காதுகளில் கிசிகிசுத்த ஒலி.

ஆற்றின் சுழலில் இலையின் நெளிவென அவனுடல் ஒரேயிடத்தில் சுழல்வதை பார்த்ததாக சற்றே கம்மிய குரலில் அழத்தயாராக இருந்த மணி சொல்லும்போது எனக்கு அது வெறும் செய்தியாக மட்டுமே இருந்தது. கால்கள் தளர்ச்சியடையவில்லை , உடல் குளிரவில்லை , தலை சுற்றவில்லை. என்னால் அமைதியாக அதுவரை இரும்புக்கட்டிலில் படுத்தபடி பார்த்துக்கொண்டிருந்த படத்தை தொடரமுடிந்தது. அதில் ஓடிக்கொண்டிருந்த பாடலில் ஆடிய நடிகையின் உடல் அசைவுகளில் எண்ணங்கள் சாதாரணமாக லயித்தது. நாங்காவது மாடியில் கழிப்பறைக்கு அருகிலிருந்த அந்த அறையிலிருந்து எழுந்த பாடலின் ஒலி அடுத்தடுத்த அறைகளிலும் கேட்டிருக்க வேண்டும். அங்கிருப்பவர்கள் அதை பொருட்படுத்தாது கொடியில் காய்ந்த துணிகளை பைக்குள் திணிப்பதையும் யாரெல்லாம் வருகிறீர்கள் என்ற கணக்கெடுப்பும் கேட்டுக்கொண்டிருந்தது. அமைதியாக புரண்டு படுத்தபடி விட்டத்தில் சுழலும் விசிறியின் சுழற்சியின் எண்ணிக்கையை கணக்கெடுத்தேன். அறைக்குள் மீண்டும் நுழைந்த மணி “எல்லாரும் போறாங்கடா , நீயும் வா போயிட்டு வந்துரலாம்” என்றது எனக்குள் பதிலெதையும் உருவாக்கவில்லை. “அப்போ வர்ரலையா நீ ? என்னடா இப்புடி இருக்க. சீ…” என்ற அருவருப்பான குரல் என்னுள் எதையோ குத்தியிருக்கவேண்டும். அவனிடம் எதையும் சொல்லாமல் துணிகளை பைக்குள் திணித்துவைக்க ஆரம்பித்ததும் அவன் வெளியேறினான்.

இறந்தவனை என் நண்பன் எனச்சொல்ல முடியாது. எங்கள் ஊரின் வளமும் பொருளாதாரமும் மிக்க இடத்திலிருந்து வந்தவன் , ஊரிலிருந்து கல்லூரிக்கு வரும்பொழுது ரயிலில் முன்பதிவு செய்கிறான் , ரயில் நிலையத்திலிருந்து கல்லூரிக்கு வர டாக்சியொன்றை பிடிக்கிறான் என்பது சாதாரணமாகவே அவனை என்னிலிருந்து விலக்கிவைத்தது. விடுதியின் மெஸ்ஸில் , வராண்டாவில் காணக்கிடைக்கையில் வாய்விரியாமல் புருவம் மட்டும் உயரும் சிரிப்பை கொடுத்துவிட்டு தள்ளிச்சென்றுவிடும் அவனை நான் எக்காலத்திலும் நண்பனாக நினைத்ததில்லை. அவன் இறந்த செய்தி கல்லூரியில் எழுந்ததும் தெரிந்தவர் தெரியாதவர் என அனேகம் பேர் சுற்றுலா செல்லும் பாணியில் பொருட்களை எடுத்துவைத்துவிட்டு கிளம்பி , காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் எதிரிலிருக்கும் சாராயக்கடையில் காரணத்துடன் கண்கள் சிவக்க கண்டதை குடித்துவிட்டு சங்ககிரிக்கு பஸ் ஏறினர்.

இறந்து நதியின் கரையில் ஒதுங்கியிருந்த உப்பிய உடலை பெட்டியில் சங்ககிரிக்கு எடுத்துவந்த காரில் சொந்த ஊர்க்காரன் என்பதால் எனக்கும் ஓர் இருக்கை இருப்பதாக சொன்னதற்கு போனில் நான் “அங்க வந்து என்னால அவங்க அம்மா அப்பா அழுறத பாக்க முடியாதுடா , நீங்களே போயிட்டு வந்துருங்க” என்று மெல்ல விசும்பியது வெறும் வார்த்தைகள் என்பதை எதிரில் கேட்டுக்கொண்டிருப்பவன் சந்தேகிக்கிறானா என கூர்மையாக மனம் யோசித்துக்கொண்டிருந்தது. “செரி” என்ற எதிர் குரல் போனை வைத்துவிட்டதால் என் சந்தேகம் சந்தேகமில்லாமல் உண்மையானது.

வெயிலில் நனைந்த , நெடுஞ்சாலையின் இருபக்கமும் வளைந்த மரக்கிளைகளுக்குள் குகைக்குள் செல்வது போல பஸ் சென்றுகொண்டிருந்தது. ஜன்னலின் வழி வந்த வெந்த காற்று முகத்திலறைந்து மூச்சுவிட சிரமப்படுத்தியது , ஆனால் சாத்தப்பட்ட ஜன்னல்களில் சாய்ந்து பஸ்ஸில் அனைவரும் கண்மூடி உறங்க முயன்றுகொண்டிருந்தனர். அர்த்தமற்ற செயல்களில் ஈடுபடும்போது மனம் அதிலிருக்கும் விலகலை நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது ஆனால் அதேநேரம் அதில் நம்மை நிறுவி நம் இருப்பிடத்தை காட்டிகொள்ளவும் முயல்கிறது. நான் இறந்தவனை பற்றிய என் கற்பனையான துக்கத்தை என்னுடலில் அச்சமயம் முயன்றுகொண்டிருந்தேன். அருகிலிருந்த நண்பன் தூங்கிய கண்களை துடைத்தபடி என் முகத்தை உற்றுப்பார்த்து அதில் தெரிந்த வருத்தத்தின் படலத்தை உணர்ந்தவனாய் என் தோளில் கைவைத்து தேற்ற முயன்று நெருங்கி அமர்ந்துகொண்டான். இடமற்ற இருக்கையில் இன்னும் நெருங்கி அமர்ந்ததில் என் கால்கள் இன்னும் கடுக்க ஆரம்பித்தன.

ஆபாசமான மதிய வெயில் படிந்த நிலத்தில் பஸ் நின்று அசைந்த அடுத்த கணம் சிரித்தபடி சந்தோசமான முகத்துடன் இறங்கிய நண்பர்கள் அங்கிருந்த டீக்கடைக்குள் சென்று நேற்றிரவு நடந்த இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியின் தோல்வியான முடிவை வேகமாக சண்டையிட்டபடி விவாதத்தில் காலியான டீ கிளாஸ்களை வைத்துவிட்டு இறந்த வீட்டின் வாசலுக்குள் நுழைவதற்கான முகத்தை வார்த்தைகளை உருவாக்கிவிட்டு நடக்க ஆரம்பித்தனர். முச்சந்தியில் வைத்திருந்த பெரிய பேனரில் இறந்தவனின் உருவம் பெரிதாக அச்சிடப்பட்டு இருபக்கமும் கண்ணீர் சிந்தும் பொய் கண்கள் பெருந்துளிகளுடன் விரிந்திருந்தன. அதைப்பார்த்து அழ ஆரம்பித்த நண்பனொருவனை பார்க்க விசித்திரமாக இருந்தது. ஒரு நொடி முன்னே வாந்தியெடுக்க வைக்கும் நீலப்படம் ஒன்றின் காட்சியை விளக்கிக்கொண்டிருந்தவன் ஐந்தாறு நிமிடங்களில் மீண்டும் அந்த காட்சியைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டான்.

இளம் வயதில் இறப்பு தனித்துவமான பாவனைகளை உருவாக்கி அளிப்பதை நாங்கள் சென்ற சாலையில் நடந்த எல்லா செயல்களைச் செய்த அனைவரிலும் காணமுடிந்தது. டிசம்பர் பனிவிழுந்து ஈரமான சாலையின் இருபுறமும் நின்றிருந்த மரங்கள் அதன் சாட்சியங்கள் அற்று வெந்து எரிந்து நிற்பதாக தோன்றியது. ஓலைக்கூரை பந்தல் கட்டி வைக்கப்பட்ட வீட்டின் முன் களத்தின் கிடந்த பிளாஸ்டிக் சேர்களில் சிந்திய நீர்த்துளிகள் வியர்வையென இறைந்து கிடந்தன. மூச்சையடைக்கும் கெட்ட நாற்றம் இன்னதென்று அடையாளம் காணமுடியாதபடி வீசியது. ஆழமான மூச்சொலிகளுடன் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் எங்கள் வருகையை விரும்பாதது போல எழுந்து சென்றனர். எங்களை வரவேற்க பெண்களின் கைகளில் தூக்கமின்மையின் நடுக்கம் தெரிந்தது. அவர்கள் இறந்தவனின் உடலை எதிர்பார்த்து உறங்குவதகாக காத்திருந்தனர். பைகளை பத்திரமாக வைத்து பந்தலின் மூலைகளில் இடம்பிடித்து நின்றவர்களிலொருவன் தன்னையும் மீறி மகிழ்ச்சியான முகத்துடன் தனக்கு மட்டும் கிடைத்த காதலியின் உடலின் வெம்மையை இறந்தவனிடமிருந்து பெற்றுக்கொண்டதை யாரிடமாவது சொல்ல முயல்வது அப்பட்டமாக தெரிந்தது. இடம் காலம் கருதி அவன் அமைதியாக இருந்தது அங்கிருந்த அனைவருக்கும் நிம்மதியைக்கொடுத்தது.

உடல் கொண்டுவரும் வாகனத்தின் நிலையை நண்பர்கள் கேட்க சொந்த ஊர்க்காரன் என்ற மேலதிகமான உரிமையில் செய்த போனுக்கு அவர்கள் பதிலாக மதியம் இரண்டு இரண்டரை ஆகும் என்றனர். தூக்கக் கலக்கத்தில் பதில் சொன்னவனின் குரல் குழறி ஒலித்தது. முட்டியில் தட்டும் பெட்டியில் நீண்டு கிடக்கும் உடலின் குளிர்ச்சியை மூளையில் ஏற்றிக்கொண்டு தூங்க முடியாமல் கண்விழித்து இறந்தவனின் மூடிய கண்களில் தெரியும் உயிர்த்தன்மையை பயத்துடன் கற்பனை செய்தபடி அந்த வண்டியில் வந்துகொண்டிருப்பவர்கள் விழித்திருக்க கட்டாயப்படுத்தப் பட்டிருப்பார்கள்.

வெயில் உச்சியில் ஏறி விழ ஆரம்பித்தும் வந்தவர்கள் வீட்டிலிருந்து நூறு மீட்டர் தூரத்தில் ஓடிய காவிரியின் கிளையாற்றில் குளிக்க முடிவு செய்தனர். இழுத்தோடிய நீரின் ஆற்றல் அவர்களின் சோகச்சாயலை அழித்து நிதர்சனம் பூசிக்கொள்ளச் செய்தது. ஆடைகள் களைந்த உடல்கள் நீரில் விழுந்த கற்களென மூழ்கி திளைத்தன. நான் கரையிலிருந்த பாறையொன்றில் அமர்ந்தபடி அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். செத்தவீட்டிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு மூங்கில் கம்புப்பாடையில் உடலை தூக்கிச்செல்ல முடியுமா என்ற விவாதத்தின் உறவினர் கூட்டமொன்றின் சண்டைச் சத்தம் தெளிவாக கேட்டது

“பொணத்தோட கனம் சாதாரணமில்லை. அங்கவர தூக்கிட்டு போக முடியுமா? யோசிச்சு பேசுங்க”

“அதெல்லாம் கொண்டு போயிரலாம். வலுவான ஆட்கள் தூக்குனா போதும்”

“பாதி வழியில இறக்கி வச்சிட்டு நிக்கக்கூடாது ஆமா…”

“அதெல்லாம் சத்தில்லாதவன் செய்யுறது. நம்ம கூட்டமென்ன அந்த அளவுக்கு ஆகிப்போச்சா. நான் இளசா இருக்கும் போதுல்லாம் என்ன என்ன காரியம் செஞ்சிருக்கோம். இப்போ நர விழுந்துட்டுன்னு பாக்காதீங்கப்பா”

“பழங்கதப்பேச்ச விடுங்க. அப்பன் ஆத்தாள ஒருதரம் கேட்டுக்கது நல்லது”

“அவங்களெ ஒத்த பிள்ளைய கொடுத்துட்டு செத்து போனது மாதிரி இருக்காங்க”

“அப்பன் செத்துப்போன பய தனக்கே பொறக்கலன்னு சொல்றானே”

“வாயிருக்குன்னு போசாத , கம்பெடுத்து வாய்க்குள்ள விட்டு குண்டி வழியா எடுத்துருவேன்”

“அவனும் இல்லாதத சொல்லலையே. உண்மதான. அவ மொதத்தாரத்த விட்டுட்டு இவனுக்கூட வாழ ஆரம்பிச்சது எல்லாருக்கும் தெரியாமலா இருக்கு”

“நீ போயி வெளக்கு புடிச்சியாக்கும்”

“அனாவசியமா எதுக்கு பேசிட்டு , பாட கெட்டுறமா இல்லையா. அதப்பேசுவோம்”

“பாட கெட்டுங்க இல்ல அப்புடியே கொண்டு போயி சுட்டு தின்னுங்க. வயசாளி பேச்சுக்கு ஒரு மரியாத இல்ல”

“இங்கையே வீட்டுக்கு பின்னால மண்ணெண்ண ஊத்தி எரிக்க போறேன். ஒத்த பிள்ள செத்தாச்சு, இனி எந்திச்சி வரவா போறான். அப்புறம் எங்கண கொண்டுபோயி எரிச்சா என்ன?” என வீட்டினுள்ளிருந்து குரல் வந்த திசையை பார்த்தபடி நின்ற அனைவரும் அமைதியாக அவரவர் வேலையை பார்க்க செல்லவும் மீண்டும் வீட்டின் முன் களம் அமைதியடைந்தது. அங்கிருந்து பிரிந்து வந்த இருவர் ஆற்றின் நீரோட்டத்தை பார்த்து நின்று ஒருவன் மற்றொருவனிடம் “அவள பாத்தியா , ஒண்ணுமில்லாம வந்து இப்போ மொத்த வீட்டையும் ஜாக்கொட்டுக்குள்ள பொதிஞ்சுவச்ச மாதிரி போசுறா கழுத. எல்லாம் அவன் கொடுத்த இடம்” என்று என் முகத்தை பார்த்து சிரித்தான். என்னாலும் சிரிக்க முடிந்தது.

ஆற்றிலிருந்து தெறித்த நீர் செருப்பை அசௌகரியப்படுத்தவும் எழுந்து வீட்டின் களம் பார்த்து நடந்தேன். ஓட்டுக்கூரையிலிருந்த ஆடியின் வழி விழுந்த ஒளியில் அமர்ந்திருந்த இறந்தவனின் அம்மா தலையில் கைவைத்தபடி அழுது வீங்கியிருந்த முகத்தை மறைத்திருந்தாள். என் நிழலின் மாற்றத்தை வாசலில் உணர்ந்தவள் காகத்தின் தலை திருப்பலென திரும்பி எனைப்பார்த்ததும் மீண்டும் அழுதபடி அமர்ந்தவாறே நகர்ந்து அருகில் வந்தாள்.

அவள் “உனக்கு அவன தெரியும்ல , காலா காலாத்துல எல்லாம் சரியா நடந்து கஷ்டமெல்லாம் தீரும்னு நெனச்சே வளத்தேன். கஷ்டமெதும் தீந்த பாடில்ல. இருந்த எல்லாத்தையும் ஏத்திவிட்டுட்டு சாதாரணமா போயிட்டான். அவன் படிக்கதுக்கே ஏழு லட்சம் இல்லாததுக்கு பைக்கு ட்ரெஸஸு. காசு காசுன்னு பிச்சு தின்னுட்டான். இனி அவனா வந்து எல்லாத்தையும் தீக்கப் போறான். அவன் பொறந்ததுல இருந்தே ஏதாவது பிரச்சன. வீடு போச்சு நெலம் போச்சு வந்தது கடன் மட்டுந்தான். இப்போ இவனும் போயிட்டான். அதுக்கு காடாத்து செலவும் இருக்கு” என்றதும் அழுகையற்ற குரலில் எழுந்த வசை போன்ற சொல்லுடன் வந்தவர் என்னைப் பார்க்காமல் அவளிடம் “எத்தன தடவ இதையே சொல்லுவ ? , இல்ல கேக்குறேன் எத்தன தடவ ? பொலம்பி பொலம்பி காதெல்லாம் வலிக்குது , செத்தான்…எல்லாம் முடிஞ்சது…கொள்ளி வச்சிட்டு வந்து பாக்க ஆயிரம் சோலி கெடக்குது” என்று ஆழ்ந்து மூக்கைச் சிந்தி சுவறில் தேய்த்து “நீயே சொல்லுப்பா , இவன் ஊருசுத்தி அலைஞ்சி சொன்ன சொல்லு கேக்காம செத்து போனதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்” என்று என் முகத்தை உற்றுப்பார்த்தார். நான் அமைதியாக நிற்கவும் பதில் எதிர்பார்க்காமல் வாசலுக்கு நேராக போடப்பட்ட ஈசி சேரில் மீண்டும் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டதும் அவரது வாய் வசை போன்ற சொற்களை முனக ஆரம்பித்தது. நாங்கள் பந்தலுக்குள் நுழைய ஆரம்பித்தபோது நொதித்த கெட்ட நாற்றம் இன்னும் மோசமாக வீச ஆரம்பித்தது. ஆற்றிலிருந்து கிளம்பி வந்த அனைவருக்கும் வயிற்றினுள் சதையை சதையே தின்னுமளவுக்கு பசித்தது. இறந்த வீட்டில் சோறில்லை என தெரிந்ததும் கூட்டம் உணவைத்தேடி வேகமாக வெளியேறியது.

வெயில் மொத்தமும் இறங்கி இரவு எழும்ப ஆரம்பித்ததும் தனியாக விடப்பட்ட என்னிடம் ஊர்க்காரர்கள் வீட்டைச்சுற்றி ஆங்காங்கே பேசமால் அமைதியாக நின்றனர். அந்த மோசமான நாற்றம் அடங்கியிருந்தது. இறந்தவனின் அம்மா , அப்பா , பகலில் பேசிய அனைவரும் மூச்சின்றி இறுகிய கற்சிலைகளென வீட்டினுள்ளும் வெளியிலும் ஓருரு கொண்டு முடியாது நீண்ட வருத்தத்தின் எல்லையற்ற சாயலுடன் கண் விழித்து நின்றனர். வானம் மூடிய இருண்ட மேகங்கள் நிலத்தின் ஒளியை மறைத்து இருளின் கரங்களால் அள்ள அனுமதி கொடுத்தது. அசைவற்ற செயலற்ற இடம் காலமற்றதாக ஆகியதை நான் உணரும் போது கல்லூரியிலிருந்து வந்தவர்கள் அனைவரும் என்னருகில் நின்றிருந்தனர். ஒரு கணம் நானும் இறந்துவிட்டதாக உணர்ந்து கற்சிலையென ஆனேன்.

தூய மென் நீல அழகிய வாசனை அங்கிருந்தவர்களை சூழ்ந்ததும் சத்தமின்றி வந்த வண்டியின் பக்கவாட்டுக் கதவு திறக்கும் போது உடல் காற்றில் மிதக்கும் காட்டுப்பஞ்சுத் துகளென தாங்கிக் கொண்டுவரப்பட்டு பந்தலின் கீழிருந்த ஒற்றை உடலுக்கு மட்டும் ஏற்றதான மரக்கட்டிலில் வைக்கபட்டது. பார்க்கப்பட்ட உடல் பார்க்காத இறப்பை காட்டிலும் பன்மடங்கு பெரியதாக இருப்பதை நான் உணருவது போலவே அங்கிருந்த மற்றவர்களும் உணர்ந்திருக்க வேண்டும். ஒருவர் ஆரம்பித்து வைக்க வேண்டிய ஒற்றை அழுகைக் குரலை நானே ஆரம்பித்து வைத்தபோது இறந்தவனின் அம்மா என்னைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் உடலின் வியர்வையுடன் சேர்ந்து வந்தது என் குழந்தைமை அறிந்த திரவத்தின் மணம். அப்பாவின் வாய் , வசையின் மொழியை மறந்து இளகி பின் அழுந்தி விரிய மறுத்து அடக்கி வைக்கப்பட்ட கண்ணீர் முகத்தில் வழிந்து அவர் பெருவிரல் நகத்தில் பெருந்துளியென விழுந்து தெறித்தது.
நண்பர்கள் மேலும் மேலும் இறந்தவனின் கடந்தகாலத்தை நிகழ்கால ஏக்கங்களைச் சொல்லி அழுதனர். இறந்த உடலைச்சுற்றி அழும் நாய்க்கூட்டமென எங்களின் அழுகை விண் நோக்கி இறைஞ்சியது.

கூட்டமென்பதை துறந்து ஒவ்வொருவரும் இருளின் பிரிவில் தனியர்களாக இறந்த உடலின் தலைமாட்டில் எரிந்த ஒற்றை தீபத்தின் ஒளியில் மேலும் கீழும் முன்னும் பின்னும் ஆடினர். எங்கிருந்தோ எடுத்து வரப்பட்ட மூங்கில் களிகள் தென்னை ஓலைகள் ஒன்றிணைக்கப்பட்டு பாடை யாருடையதென்று அறியாத கைகள் உருவாக்கின. அவன் தலைமாட்டில் அமர்ந்த அம்மா கரம் கூப்பி இறந்த உடலுக்குள் உயிரைப்பாய்ச்சுமாறும் , தன்னுடல் கிழிந்து வந்த உயிரை அங்கொரு இடத்தில் பத்திரமாக பாதுகாக்கவாவது முடியுமா என வேண்டினாள்.

இருள் ஏற ஏற உடலின் முன் சப்பணமிட்டு அமர்ந்திருந்த பெண்கள் விரிந்த சிவந்த கண்கள் விளக்கின் ஒரு துளி தீபத்தில் சிவக்க கலைந்த கூந்தல் உடலில் புரள ஒற்றை அச்சில் சுழலும் சக்கரமென மேலுடல் சுழல ஒப்பாரி வைத்தனர். பந்தலுக்கு வெளியே ஒருங்கியிருந்த பறையடிப்பவர்கள் அடித்த இசைக்கு ஆண்கள் கூட்டம் தங்கள் உடலை இழந்து ஆடிக்கொண்டிருந்தன.

இறந்த உடலற்று தனித்து விடப்பட்ட பெண்கள் பந்தலின் கீழ் சுடுகாட்டின் திசையை இமைக்கா கண் கொண்டு பார்த்தபடி நின்றனர். பாடையில் துயின்ற எடையற்ற உடலை தாங்கி காற்றில் கால்படாமல் இருபக்கமும் நெடுக வளர்ந்திருந்த சப்பாத்திக் கள்ளிக் கூட்டங்களைக் கடந்து தூக்கிச்சென்றனர்.

சிதைக்கருகில் நாங்கள் சுற்றி நிற்க கட்டைகளுக்குள் அதக்கி வைக்கப்பட்ட உடல் நிமிர்ந்து கிடந்தது. பற்ற வைக்கப்ப்ட்ட ஒற்றைக் கட்டையில் மெல்ல படர்ந்த நெருப்பு ஊரும் உயிரின் நகர்தலென எல்லா பக்கங்களிலும் பரவி கிசுகிசுத்தது. நிலையின்றி எரிந்த நெருப்பில் பிறந்த மின் மினிகளென பறந்த கங்குத்துளிகள் சிதறி மறைந்தன. நெருப்பின் சுவாலைகள் தணிய ஆரம்பித்த நேரம் இரவு விடிய ஆரம்பித்தது. சுழன்ற காற்றில் பறந்த சாம்பல் துளிகள் விண் நோக்கி யாத்திரை சென்றன. இறந்தவுடலால் உந்தி அழுத்தப்பட்ட எரியின் சிதறல் என் ஆட்காட்டி விரலில் கடைசி கணுவை அடித்து மாறாத செம்மை கொள்ளச் செய்தது.

வியர்வை வடியும் உடல்கள் , இருளில் முடிவில் தூய துக்கத்தின் கடைசி துளியைத்தாங்கி காலைப்பனியில் நனைந்த இலைகளற்ற கிளைகொண்ட மரங்களென அழுது வடிந்தன.

வெளிச்சத்தின் முதல் கிரணம் பட்டவுடன் இரவின் தன்மையிழந்து ஆபாசமான வேறொன்றின் சாயல் பூசப்பட்ட முகங்களுடன் தூய்மை இழந்து மீண்டும் பகலின் பிடிக்குள் சென்றோம். அதன் பிறகான பகற்பொழுதுகளில் என் ஆட்காட்டி விரலின் சிவந்து பின் கருத்த கடைசி கணுவை அழுத்தி சிதையில் ஒளிர்ந்த இரவை கற்பனையில் உருவகித்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

***

-இவான் கார்த்திக்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *