1.பெருவெடிப்பு

ஒரு மழைக்காலம். இரவு மழை கொட்டித்தீர்த்திருந்தது.  நகரம் சுத்தமாகி, மிகக் கண்ணியமான ஒரு கதியில் நகர்ந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைக்கே உரிய நிதானம் வந்து ஒட்டிக்கொண்டது. இயல்பானதோ அல்லது ஒரு புரிந்துணர்தலாகவோ, பகுக்க முடியாத ஒரு மனநிலையாகவோ உணர்ந்தேன். வழக்கம்போல எல்லா ஞாயிறும் தூங்கிக் கழிக்கும் ஒன்றாகவோ, இலக்கிய நண்பர்களைச் சென்று பார்ப்பதாகவோ, இலக்கிய கூட்டமொன்றிற்குச் செல்லும் குதூகலமாகவோ, ஏதாவது பிற மொழிப் படம் பார்ப்பதாகவோ இருந்து கொண்டிருந்தது. இத்தகைய இலக்கிய செயல்பாடானது விளக்க முடியாத ஒரு மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது. அது எத்தகைய ஒரு பயன்பாடும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சமயத்தில் எல்லா அன்றாடச் செயல்களையும் ஒருவித கவனிப்புடன் ஈடற்ற கருணையோ, கரிசனமோ பொங்கும் ஒருத்தப் பார்வைக் கொண்டதாக மாற்றுவதாக அமைந்துவிடுகிறது. இது புற நோக்காளிக்கு போக்கற்ற செயலாக, வெட்டி வேலையாக, அல்லது இதுதான் அவன் இயல்பு என்று வகைப்படுத்திவிடும் ஒரு எளிய செயலாகத் தோற்றம் கொண்டுவிடுகிறது.

சொன்னபடி சீனிவாசன் நண்பகல் பதினொன்றிற்கு வீட்டிற்கு வந்துவிட்டார். யாரைப் பார்க்க என்றதற்கு, ‘அது ரகசியம் அல்லது பூடகமான ஒன்று’ என்றார். இரு சக்கர வாகனத்தில் அம்மாபேட்டை செளண்டம்மன் கோவில் தெரு, முப்பத்தி நாலாம் கதவிலக்கம் கொண்ட வீட்டைத் தட்டினோம்.

சார் இருக்கிறாரா? கேட்டது சீனி.
தூங்குகிறார். பன்னிரண்டு மணிக்கு மேல் வாங்க . . .

யாரு, சீனி?
சி. மணி.

அதிர்ந்துபோனேன். பதற்றம் தொற்றிக்கொண்டது. ஒரு கட்டத்திற்கு மேல், நான் வரவில்லை என்றேன். அவரைப் பார்க்க இது சரியான தருணமாகத் தோன்றவில்லை. தேர்வுக்குப் போவதைப்போல எந்த ஏற்பாடும் இல்லாமல், எதையும் படிக்காமல், மிக தட்டையான ஒரு நிலையுடன் வந்துவிட்டதாகத் தோன்றியது.

சீனி ஆசுவாசப்படுத்தினார். அருகிலிருந்த ஒரு தேனீர் விடுதியில் தேனீர் குடித்தோம். மிக ஆழமாகப் புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் சீனி, நல்லத் தயாரிப்புடன் வந்த ஒரு மாணவனைப்போல தோன்றினார். மணி பன்னிரெண்டைத் தொட்டது. எனக்கு சில நினைவுகள் மின்னலிட்டன. மீட்பு கவிதையே சி. மணியை எனக்கு இணக்கமான ஒரு கவியாக இனம் காண வைத்தது. அந்தக் கவிதை வெறும் மூன்று வரிதான்.

கம்பிகள் கூறு போட்ட
கீழ்வான ஆரஞ்சை
சன்னல் நெருங்கி மீட்டேன்.

இந்தப் படிமமும் அது கொண்டிருக்கும் பொருட்திணிவும் என்னைப் பாடாய்ப் படுத்தியிருக்கின்றன. நிறைய நாட்கள் இந்தக் கவிதைக் குறித்த எண்ணங்களிலேயே என்னை முற்றாக இழந்ததுண்டு. ஆனால் மிகக் குறைந்த வாசிப்பே கொண்டிருந்த எனக்கு சி. மணி சேலம்தான் என்பதோ, அவரைப் பார்ப்பதற்கான சாத்தியமோ தெரியாமல் இருந்தது. இதை பின்னாளில் ஒரு குறைபாடாக்கூட மனம் கசந்ததுண்டு. இந்தக் கவிதையைக் குறிப்பிட்டுத்தான் சுஜாதா சி. மணியை ஏதோ ஒரு வார ஏட்டில் எழுதியிருந்தார்.

மீண்டும் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினோம். மிகப் பதட்டமாக இருந்தது.

அவரை, ஏற்கனவே ஒருமுறை சீனி பார்த்திருப்பார் போல. தாழ்வாரத்தில் அவரது வருகைக்காகக் காத்திருந்தோம். மிகத் தேய்ப்பான ஒரு செருப்பணிந்தக் காலடி ஓசை உள்ளறையிலிருந்து வெளிப்பட்டது. எனது இதயம் வேகமாக இயங்கத் துவங்கியது. மெலிந்த தேகமாக, முகம் ஒட்டிப்போய், மிக உயரமானதால் கூன் விழுந்த கழுத்துடன் அறுபது வயதில் ஒருவர், சி. மணி எங்களை வரவேற்றார். உள்ளறைக்குச் சென்று உட்கார்ந்தோம்.

என்ன சாப்பிடரிங்க, காபி?

நான் அமைதியாகவே இருந்தேன். அல்லது எனக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லாமலிருந்து. மிக நிதானமான உரையாடல். அடுத்து என்முறை. மிகத் தயக்கத்துடன் பதிலளித்தேன். அவரது கேள்விகள் பெயரில் ஆரம்பித்து, பல கிளைகளாக கிளைத்து வளர்ந்தன. ஒரு கட்டத்தில் என்னைப் பற்றியே என்னால் தெளிவாகச் சொல்ல முடியாமல் இருந்தது. நிலம் சார்ந்து, தொழில் சார்ந்து, குடும்பம் சார்ந்து, கல்வி சார்ந்து விரிந்தது. என்னைப் பற்றிய ஒவ்வொரு விஷயத்திற்கும் எனக்குத் தெரியாத ஒரு அல்லது பல கேள்விகளை அவர் வைத்திருந்தார். மிகக் கவனமாக எனது வார்த்தைகளைக் கவனித்தார். நான் பேசும்போது அமைதியாகக் கேட்டுக்கொண்டார். ஆனால் நிறைய சமயங்களில் அவர் கேள்விகளை முடிப்பதற்கு முன்பாகவே அதற்கான பதிலாக நான் அனுமானித்ததை உளரிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு கணம் சற்றே கோபப்பட்டதைப் போல, நிதானித்து கேள்வியை முடித்தபோது, எனது பதில் சற்றும் தொடர்பற்ற ஒன்றாக இருந்தது. தடுமாறினேன். சீனி எந்தத் தடுமாற்றமுமில்லாமல் சி. மணியின் கவிதைத் தொகுப்பைப் புரட்டிக்கொண்டிருந்தார்.

காபி வந்தது. தனது மனைவியையும் பேரன்களையும் மகன்களையும் மருமகள்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு மிகக் கூச்சமாக இருந்தது. இவ்வளவு மதிக்கத் தக்கவன்தானா நான் என்று சங்கடப்பட்டேன்.

பிறகு தனது கவிதைகளை வாசித்ததுண்டா என்ற தொனியில் கேள்விகள் சென்றன. நான் மீட்பு கவிதையைப் பற்றி சொன்னேன். மறுமொழியில்லாமல் மெளனமாக இருந்தார். கவிதை பற்றிய எனது பார்வை பண்படாத ஒன்றோ என்ற சந்தேகம் அடைந்தேன். அதற்கு மாற்றாக எனது தேடலின் தன்மையை அவருக்கு இணங்காட்ட முயன்றேன். வாழ்வின் அபத்தம் பற்றியும், பிரபஞ்சம் குறித்தும், கவிதையில் அழகியல், மேற்கத்திய அல்லது கீழத்திய கவிதைத் தன்மைகளை பேச ஆரம்பித்தேன். நேரம் மதிய உணவு நேரத்தைத் தாண்டிக்கொண்டிருந்து. சீனிவாசன் கிளம்பலாம் என்றார்.

கிளம்பினோம்.

நேரமிருந்தால் இந்தப் பக்கம் வாருங்கள் சாகிப்கிரான் என்றார். சரி என்றேன். அவர் எனது பெயரை முன் எப்போதும் யாரும் அழைத்துவிட்டிருக்காத ஒரு தெளிந்த உச்சரிப்புடனும் அழுத்தமாகவும் அழகாகவும் அழைத்தார். ஆனால் எனது பெயரை அவரிடம் ஒருமுறை மட்டுமே சொல்லியிருந்தேன். அது தாஜ்மகாலின் ஷாஜகானின் விருப்பப் பெயர் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

வானம் மீண்டும் இருண்டு மின்னலடித்துக் கொண்டிருந்தது.

அன்று முழுதும் நான் மிகத் தீவிரத்தன்மையடைந்த ஒரு இலக்கியவாதியைப் போல நடந்து கொண்டேன். வாழ்வில் மிகப் பெரிய சிகரத்தை அடைந்துவிட்டதாக உணரத் தொடங்கினேன். என் தேடலுக்கான முழு விடையும் அவரிடம் இருப்பதாக கற்பித்துக் கொண்டேன். கவிதை மட்டுமில்லாது, வாழ்வின் அபத்தம் அல்லது அத்தகைய ஒரு சாத்தியமானது ஏன் புரிபடாத ஒன்றாக இருக்கிறது?

படைப்பாளிகள் தேடிக்கொண்டிருப்பது இதைத்தானா? ஏன் நான் இதுவரை பார்த்த, சந்தித்த எல்லா படைப்பாளிகளும் இயல்பில் எனது பக்கத்து வீட்டுக்காரனைப் போல, ஒரு பங்காளியைப் போல, அல்லது அன்றாட வாழ்வின் வெகு சராசரியாகவே இருக்கிறார்கள்? இதுதான் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு, ஒரு பெரிய அதிர்ச்சியாக இந்த சந்திப்பு அமைந்தது.

இலக்கியத்தை தனது இயல்பு வாழ்வாகக் கொண்டிருக்கும் சி. மணியை, கவிதை எழுதும் அல்லது படைப்பாளியாக இருக்கும் ஒரு மனிதனாக என்னால் கருத முடியவில்லை. அதிசயமாகவே எனக்குப்பட்டது. மிக நேர்த்தியான ஒரு கவிதையைப்போல வாசிப்பனுபவத்தின் நுட்பத்தை தேர்ந்த மொழி நடையானது கைக்கொண்டிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. அந்நிய பிரதேசத்தில், அல்லது குட்டி இளவரசனின் ஏதோவொரு கிரகத்தில் இறங்கியதாக கிறக்கம் தோன்றியது. இந்தக் கிறக்கமே அல்லது யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பே என்னை மீண்டும் அவரைப் பார்க்கத் தூண்டியது.

2.இரண்டாம் நாள்

இரண்டு வாரம் கழித்து, ஞாயிற்றுக் கிழமையில் அவரைச் சந்திக்கச் சென்றேன். இந்தமுறை நான் தனியாகச் சென்றது ஒரு நடுக்கத்தை மனதில் உருவாக்கியிருந்தது. அப்படி ஒன்று தேவையில்லை என்றாலும் அவரது புதுமையான அணுகுமுறையானது எனது ரகசியங்கள், பலகீனங்கள் பலவற்றை வெளிக்கொண்டு வருவதாக இருந்தது.

அநேகமாக நான் அவரை சந்திக்கச் சென்றது, அவரது லண்டன் பயணத்திற்குப் பிறகுதான். இரண்டாவது சந்திப்பிலேயே மிக நெருக்கமான ஒரு நட்பை உருவாக்கும் விதத்தில் எனது நடைமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டேன். ஏனென்றால் இரண்டாவது சந்திப்பானது எனது தனிப்பட்ட ஆளுமையையே மாற்றுவதாக அமைந்துவிட்டது.

அழைப்புமணியை அழுத்தி சிறிது நேரத்தில் தேய்ந்தக் காலடி ஓசைகளுடன் வந்த அவர், முன்னால் இருந்த வராண்டாவில் என்னை அமர வைத்தார். பிறகு உள்ளே சென்ற அவர் அரைமணி நேரம் கழித்தே வந்தார். பாத்ரூம் சென்றதாக மன்னிப்புக் கேட்டார். அந்த அரைமணி நேரம் என்பது மிகப்பெரிய யுகமாகக் கழிந்தது. எனது காத்திருப்பானது நேரம் ஆக ஆக, வலுவானதாக மாறியது. அது மிகப்பெரிய ஆக்கச் சக்தியைத் தக்கவைக்கக் கூடிய ஒரு நீண்ட குச்சியாக மாறத் தொடங்கியது. அந்த காத்திருப்பின் மூலமாக நான் எனது இருப்பை மறுபரிசீலனைச் செய்ய வாழ்நாளில் முதல்முறையாக தருணம் வாய்த்ததாகக் கருதினேன். ஆனால் ஒவ்வொருமுறையும் அவ்வாறே காத்திருக்க வேண்டும் என்று அப்போது எனக்குத் தெரியாது.

வழக்கம்போல காபி வந்தது.

வினைச்சொல் அகராதி ஒன்றை உருவாக்கும் வகையில் அவரது லண்டன் பயணம் அமைந்திருந்தது. இயல்பிலேயே மெலிந்த தேகமும், அசைவ உணவை மறுப்பவருமான சி. மணிக்கு அந்த கடுங்குளிர் பிரதேச பயணமானது மிகச் சிக்கலான ஒன்றாகவே இருந்திருக்கிறது. வெறும் சாக்லேட்டையும் காபியையுமே எடுத்துக்கொண்டு, மிக பெலஹீனமாக உணர்ந்திருக்கிறார். அது அவரை மாயத்தோற்றங்களை உருவாக்கும் அளவிற்கு மூளையை மழுங்கடித்திருக்கிறது. தனது மனைவி அங்கே வரவேற்பரையில் காத்திருப்பதாக யாரோ கூறியதாகக் கூட சொன்னார்.

ஆனால் வினைச்சொல் அகராதிக்கான பணியை முடிக்கும்போதுதான் அவரை யாரோ ஒரு நண்பர் தமிழ் உணவு விடுதி ஒன்றிற்கு அழைத்துச்சென்று சாதம் வாங்கித் தந்திருக்கிறார். மிகக் குறைந்த, மிக அந்நியமான சூழலிலும் மிகத் தீவிரமாக இயங்கிய அவர், லண்டனில் இறங்கியதும் ‘சார்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். அது மிகக் கடைநிலையான ஒரு மரியாதைச் சொல்போல. அல்லது நாம் இந்தியாவில் பயன்படுத்துவதுபோல இல்லை என்றார். அங்கே இருக்கும் கட்டுப்பாடுகளும், இந்தியர்களுக்கான மரியாதையையும் அவரை அங்கே தொடர்ந்து இயங்க விடவில்லை. சென்ற வேலையை முழுவதுமாக முடிக்காமலேயே இந்தியா திரும்பினார்.

இங்கே இந்தியாவில், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அம்மாபேட்டை திரெளபதை அம்மன் கோவில் தெருவின் 34 எண் வீட்டில் வாழும் சி. மணியை சார் என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைப்பது என்று புரியவில்லை. அவர் சிரித்தார். சார் என்றே அழைக்குமாறும் கூறினார்.

இந்த இரண்டாம் சந்திப்பு எனக்கு வேறு ஒரு முக்கியமான விஷயத்தையும் கற்றுத் தந்தது. எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றி அவர் பேசும்போது இடையில் அடிக்கடி நான் குறிக்கிட்டு, அவரது கவனத்தைச் சிதறடிதேன். அது அவரை எரிச்சலடைய வைத்திருக்கக் கூடும். In Search of The Miraculous புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளச் சொன்னார். அது G. I. Gurdjieff உருவாக்கிய இயங்குமுறையைப் பற்றி உஸ்பென்ஸ்கி தொகுத்தெழுதிய ஓர் அபூர்வமான புத்தகம். அது மனிதனின் விழிப்பு நிலையைப் பற்றி பேசுகிறது. மனிதனின் பூரண விழிப்புணர்வை மீட்டெடுக்கும் ஒரு கருவியாக, செயல்முறையாக அது அமைந்திருந்தது. மனிதன் விழிப்பற்ற நிலையிலேயே தனது வாழ்நாளை முடித்துக்கொள்கிறான். அதாவது, அவன் காபியை அருந்தும்போது அந்தக் காபியை அருந்தும் உணர்வை தக்கவைத்துக் கொள்வதில்லை, மாறாக தனது அலுவலக அல்லது வீட்டு நினைப்புடனே அந்தச் செயலை ஒரு அனிச்சைச் செயலைப்போல செய்துமுடிக்கிறான். இது தூக்கத்தில் நடக்கும் ஒரு செயலுக்கு ஒப்பானதுதான்.

அன்றிலிருந்து நான் காபியை காபியாகப் பருகத்துவங்கினேன். செவியையும் கூர்மைபடுத்திக்கொண்டேன். சமயங்களில் நான் பேசுவதை நானே செவியுற ஆரம்பித்தேன். அத்தகைய விழிப்புநிலைக்கு இதுவே முதல்படியாக நான் உணர்ந்தேன். சரி இதுபோன்ற விழிப்புநிலையின் பயன் என்ன என்ற கேள்வி என்னுள் ஒலிக்கத் துவங்கியது. அது தொடர்ந்து என்னைத் துரத்தியபடியே இருந்தது. அது வாழ்க்கைக்கான மூல ஆதாரக்கேள்வியாக இருக்கக் கூடுமென எனக்குத் தோன்றியது. சி. மணி எனது பிரஞ்ஞையின் உதற முடியாத ஒரு உறுப்பாக ஒட்டிக்கொண்டார். எனது அன்றாட அத்தனை நடவடிக்கைகளிலும் அவரது இயல்பு நீங்கா இடம் பிடிக்கத் துவங்கியது. நான் என்னை சி. மணியாகவே கற்பனை செய்து கொள்ள ஆரம்பித்தேன். சமயங்களில் அது எவ்வளவு அபத்தமானது என்று சிரித்துக் கொள்வேன். அவரது இயல்பானது தன்னை மாற்றிக்கொள்ளாத, எவராலும் கைக்கொள்ள இயலாததும் அரிதானதுமான ஒரு தன்மையைக் கொண்டிருந்ததைக் கண்டு கொண்டேன். அது எத்தகைய முன்மாதிரியும் கொண்டிருக்காத, தாந்தோன்றியானது என்பதை நாள்பட உணர்ந்து கொண்டேன். இனிமேல் வருவதற்கு முன்னால் ஒரு போன் செய்துவிட்டு வரச்சொன்னார்.

3. சி. மணி கவிதைகள்

முதல்வேளையாக சி. மணியின் இதுவரை கவிதைத் தொகுப்பையும், க்ரியாவின் தற்கால தமிழகராதியையும் வாங்கினேன். அவரது கவிதைகளை தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். கவிதை தனக்கான விளக்கத்தைக் கொண்டிருந்தால் அது கவிதையிலிருந்து உரைநடையாக மாற்றமடைந்துவிடுகிறது. அப்படியென்றால் நவீனக் கவிதையானது எப்படி தனது சூக்குமங்களை விரித்துக்கொள்ள இயலும் என்ற கேள்வியும் தொடங்கிவிடுகிறது. சி. மணியின் கவிதைகள் தனது செவ்வியல் தன்மையிலிருந்து இந்தியத் தன்மையில் மிக விசித்திரமான மேற்கத்திய சிந்தனை மரபுகளின் வேர்களை பாய்ச்ச ஆரம்பித்தன. ஒவ்வொரு கவிதையும் அந்தக் கவிதைக்கான ஒரு நுழைவைக் கொண்டிருக்கும். அதுவே அந்தக் கவிதையை நம்முள் கொண்டு செலுத்தும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.

தொழில் மயக்கம் என்ற அவரது கவிதையானது, கிட்டத்தட்ட ஒரு வார்த்தை அல்லது சொல் பற்றாக்குறையால் பத்து வருடங்கள் முடிவுறாமல், முடிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அந்தப் பதமானது ஒலிப்பதிவு. Recording என்ற தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படும்முன் அதற்கான தேவையை முன்னிறுத்தி இருந்திருக்கிறது. நவீன கவியானவன், எவ்வாறு வெறும் மொழியறிவை, கற்பனையை, கவிப்புனைவைத் தாண்டி, அறிவியல், வரலாறு, விண்ணியல், மனோத்தத்துவம், மருத்துவம், உடற்கூறியல், இசை, ஓவியம், விளையாட்டு, தொன்மங்கள், வேதாந்தங்கள், சித்தாந்தங்கள், தத்துவ ஞானங்கள், அதற்கு அப்பால் இயங்கிக் கொண்டிருக்கும் சகலத்தையும் தெரிந்திருக்க வேண்டியவனாகிறான். அத்தனையும் சாத்தியம்தானா என்பது சி. மணியைப் பார்த்ததும் எனக்கு ஆமாம் என்று தோன்றியது.

அவர் வழக்கமான கற்பித்தல் முறையை முற்றிலும் மறுத்திருக்கிறார். எல்லோரும் நினைப்பதுபோல அவர் Teacher’s Training College லிருந்து விருப்ப ஓய்வோ, ஓய்வோ பெறவில்லை. வழக்கமான அந்தக் கற்பித்தலுக்கு மாற்றான ஒரு முறையைக் கண்டடைந்திருக்கிறார். அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதும் தனது பணியைத் துறந்திருக்கிறார். பிறகே நடைக்கான அவரது தேடல் தொடங்கியிருக்கிறது.

அவர் ஒருபோதும் எந்த விஷயத்தையும் நேரடியாக விளக்கியது கிடையாது. அது அவருக்கு இணக்கமான ஒன்றாகவும் இருந்ததில்லை. அவரது கேள்விகள் அடிமடியில் கை வைப்பவை. நம்மால் அல்லது யாராலும் அத்தகைய ஒரு கண்ணோட்டத்தில் எதையும் அணுகியிருக்க முடியாது. அவரது அணுகுமுறையானது எந்த ஒன்றை நாம் தெரிந்து கொண்டால் மற்ற எல்லாம் தெரிந்துவிடுமோ அதை உணர்த்துவதாகவே இருந்தது. ஒரு முறை இதை அவருக்குச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது. நேரடியாகச் சொல்ல இயலாமல், ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பினேன்.

‘யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால் திருத்தி மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்து தனது விமர்சனத்தை நியாயப்படுத்தும் செயலை சாதாரண ஆட்கள் செய்ய முடியாது’ என்று எழுதியிருந்தேன்.

இது தனது ஆசான் யாமாஸான் பற்றி அகிரா குரோசாவா தனது Something Like an Autobiography என்ற நூலில் குறிப்பிடும் கருத்து. இது சி. மணிக்கு முற்றிலும் பொருந்தும். அவர் எந்த சந்தேகங்களுக்கும் எனக்கு இதுவரை விளக்கமளித்ததில்லை. எந்தக் கருத்தையும் வெளிப்படையாக விளக்கியதுமில்லை. மிக உன்னிப்பான கவனிப்பின் மூலம் அவரது பேச்சில் நாம் கொண்ட சந்தேகங்களுக்கான விடை எப்போதாவது கிடைக்கலாம்.

அடுத்தமுறை நான் அவரைப்பார்க்கப் போனபோது, அவர் அந்தப் போஸ்ட் கார்டைப் பற்றி ஏதாவது குறிப்பிடுவார் என்று எதிர்ப்பார்த்தேன். அமைதியாகவே இருந்தார். தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் அவரைப்போய்ப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். அப்போது எனக்கு அடிக்கடி வயிற்றுத் தொல்லை வந்துவிடும். வயிற்றுப் புண்ணும் தலைவலியும் என்னைப் பாடாய்ப்படுத்திய காலம் அது. அவர் மருந்துகள் பற்றிய மிக ஆழமான தெரிதல் கொண்டிருந்தார். அப்போது நான் சாப்பிட்டு வந்த மருந்துகள் dye based தன்மை கொண்டவை என்று குறிப்பிட்டார். அவை எத்தகைய உடல் வினையாற்றும் என்பதையும் சொன்னார். இதற்கு ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலன் தரும் என்றார். நான் பதில் ஏதும் சொல்லவில்லை.

கிளம்பும்போது காபி அருந்திய பாத்திரத்தை சமயலறையில் வைக்கப்போனேன். அவர்களது வீடு எனக்கு மிக நெருக்கமானதாகிவிட்டது. அப்போதுதான் பார்த்தேன், இருட்டாக இருந்த நடையில் ஹோமியோபதி மெம்பர்ஷிப் சர்டிபிகட் சட்டகமிடப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அதில் எஸ். பழனிசாமி என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுதான் அவரது இயற்பெயர். எனக்கு எந்த மருந்து சாப்பிடலாம் என்று கேட்டேன். ‘அடுத்தமுறை சொல்கிறேன்’ என்றார். உடனே நான் ‘கார்டு வந்து சேர்ந்ததா சார்’ என்றேன். ‘ஆமாம்’ என்றார். பிறகு வாசல் வரை வந்து வழியனுப்பினார். இன்று மட்டுமல்ல, ஒவ்வொருமுறையும் அவர் அவ்வாறே வழியனுப்புவார்.

அவர் கார்டுக்கு பதில் சொல்லாதது எனக்கு ஆச்சர்யம் எதையும் உண்டாக்கிடவில்லை. செல்போன் புழக்கத்திற்கு வந்திராத அந்த சமயங்களில் அஞ்சல் அட்டைகளில் அடிக்கடி எனக்கு கடிதங்கள் எழுதுவார். அந்த வாரம் என்னால் போகமுடியாத அளவிற்கு அலுவலக வேலை ஏதேனும் இருந்திருக்கும். பிறகு வாரத்திற்கு இரண்டு நாள் செல்ல ஆரம்பித்தேன். என்னோடே நாமக்கல் நண்பர் சர்வராஜும் வருவார். அவர் வெகுகாலமாக அவரைப்பார்க்க வந்து கொண்டிருக்கிறார். நாங்கள் மட்டுமில்லாமல் இன்னும் சிலரும் அவரைப் பார்க்கத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொருமுறை நான் போகும்போதும் யார் யார் வந்தார்கள், அவர்களுடன் நடந்த உரையாடலின் சுருக்கத்தை எனக்குச் சொல்லிவிடுவார். ஆனால் விஷயங்களை வெறும் தகவல்களாகவே சொல்லுவார். அதில் அவர் எந்தக் கருத்தையும் முன்னிருத்தாமல் மிக அந்நியமான ஒன்றாகவே வெளிப்படுத்துவார். ஒவ்வொரு பெளர்ணமியும் மிக விஷேசமானது. பெரும்பாலும் நானும் சர்வராஜுவும் அங்கே இருப்போம். எங்களிருவரையும் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுவிடுவார். அங்கே முழுமதி கந்தகிரி மலையைத் தாண்டி ஒளிர்ந்தபடி இருக்கும். அவர் குழந்தைகளை உட்கார வைக்கும் புட்டிக்கூடை இருக்கையில் அமர்ந்திருப்பார். முதல்நாள் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த மிகச் சிறிய கூடைச்சேரில் அவ்வளவு எளிதில் யாரும் அமர்ந்துவிட முடியாது. அவரைத் தவிர அதில் யாரும் அமர்வதும் இல்லை. அவருக்கு அருகிலேயே அந்த மதுப்புட்டியும் நிலா காய்ந்தபடி இருக்கும். அவர் மதுவை நேரடியாக எந்த கலப்புமில்லாமலும் துணை உணவுகள் இல்லாமலும் அருந்துவார். நாங்கள் அவருக்கு எதிரில் மிக உயரமான இருக்கைகளில் அமர்ந்திருப்போம். கீழே அமர்ந்தாலும் விடமாட்டார்.

இரவு வெகுநேரம் பேசியபடி இருப்போம். அவரை எந்த அளவு மதுவும் நிலைகுலைய வைத்ததில்லை. அப்போது நிறைய கவிதைகளை வாசித்திருக்கிறோம். இசையைப் பற்றி பேசியிருக்கிறோம். நாவல் பற்றி, பிரபஞ்சம் பற்றி, மரணம் பற்றி, ஒருமுறை ‘உஸ்பென்ஸ்கி ஏன் தனது இறுதி நாட்களில் அளவுக்கதிகமாக மதுவை குடித்து, தனியனாக அவனது அறையில் செத்துக் கிடக்க வேண்டும்’ என்ற ஒரு கேள்வியைக் கேட்டார். அது மிக முக்கியமான ஒரு கேள்வியாக இருந்தது. P. D. உஸ்பென்ஸ்கி அடிப்படையில் ஒரு கணித அறிஞன். தத்துவ தேடலில் தன்னைக் கரைத்துக் கொண்ட தத்துவ ஞானி.

In Search of The Miraculous யை எழுதியவன் அவன். அக்கினியைப் போல மது ஒருவகையில் மனிதனை கிளர்ச்சியடையச் செய்வதுமட்டுமல்லாது, அவனை அபத்தத்தின் இறுதிக்கு இட்டுச் செல்கிறது. மிக வலுவான உடல் மனதின் உள்முக தியானங்களுக்கு பெரிய தடையாக இருந்துவிடுகிறது. மிகச் சோர்வுற்ற, பெலகீனமான காய்ச்சல் கண்ட உடலானது மிக அதிக கற்பனைத் திறனையும் மாயத்தோற்றங்களையும் உருவாக்கிக் கொள்வது இத்தகைய ஒரு அமைப்பால்தான். மதுப்புட்டியுடன் தொடர்ந்து சிகரட் புகை கனிந்த வண்ணம் இருக்கும். நிலவு தனது உணர்ச்சி ஒளிகற்றையால் அந்த மொட்டைமாடியை நிறைத்தபடி சென்று கொண்டிருக்கும். அவரது அசாத்தியமான பார்வை நோக்கும், அபூர்வமான விஷய ஞானமும் எங்களை அன்றிரவு உறங்க விடாமல் செய்தபடி இருக்கும். சகலத்தையும் அறிந்தவர்களாக மாற்றமடைவதாக அல்லது அதற்காகத் தயாராவதாக உணர்ந்தபடி இருப்பேன்.

சி. மணி என்மேல் மிக அன்பு கொண்டிருந்தார். அல்லது நான் அவ்வாறு நினைத்தபடி இருப்பேன். அது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்த வண்ணமிருந்தது. என் மனைவி, மக்கள் அனைவரின் மேலும் அன்பு செலுத்துபவராக அவர் இருந்தார். ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்களை நலம் விசாரித்தபடி இருப்பார். தனிப்பட்ட பெண்களைவிட ஒட்டுமொத்தமாக பெண்களின்மேல் அவருக்கு அளப்பரிய மரியாதை இருந்தது. குழந்தைகளை மிக விரும்பி, அவர்களது தன்மையை வியப்பார். அவர்களுக்கான மிக அதிகப்பட்ச மரியாதையை அல்லது அவர்களுக்கான கவனத்தைத் செலுத்துவார். பெண் குழந்தைகளின்மேல் அவருக்கு அதிக அன்பிருந்தது.

அப்போது தாவோ தே ஜிங் மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருந்தது. மொத்தம் பத்து ஆங்கில மொழிபெயர்ப்புகளை பயன்படுத்தி, ஒரு பிரதியை மையமாகவும் மற்றவற்றை துணைப் பிரதியாகவும் கொண்டு தமிழாக்கம் செய்து கொண்டிருந்தார். வழக்கமாக அவர் மொழிபெயர்ப்பு பிரதி புத்தகத்தை ஏடேடாகப் பிரித்து விடுவார். பிறகு ஒவ்வொரு ஏட்டிற்கும் மொழிபெயர்ப்பு மேற்கொள்வார். முதலில் எனக்கு அதில் உவப்பில்லாமலிருந்தது. என்னுடைய உவப்பிற்கு அர்த்தமில்லைதான் என்றாலும் ஒரு எதிர்ப்புணர்வு மிதந்து கொண்டிருந்தது. ஒரு கட்டமைப்பை சிதைப்பதான உறுத்தல் நிரடிய வண்ணம் இருந்தது. அதுவும் ஒரு மழைக்காலம். எங்களுடன் வேறு ஒரு கவிஞரும் வந்திருந்தார். அவர் சி. மணியிடம் பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அவற்றிற்கான பதிலையை எதிர்ப்பார்த்தார். நானும் சர்வராஜும் விபரீதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். பிறகு அந்த நண்பரை சி. மணியின் வீட்டில் நான் பார்த்ததே இல்லை. சி. மணியிடம் இலக்கிய அரசியல் தோற்றுப்போயிருந்தது. எத்தகைய கவர்ச்சிகளையும் அவர் அனுமதித்ததில்லை. மிக இயல்பான, என்றும் நினைத்து அதிசயிக்கக் கூடிய தன்மையுடன் அவர் இருந்தார்.

நடை இதழ்களும், மிக முக்கியம் என்று நான் கருதிய ஒரு மலை போன்ற புத்தகங்களும் அவரது படிக்கட்டு அறைக்கருகில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. வீட்டில் அவற்றை பத்திரப்படுத்த ஏராளமான இடம் இருந்தும் அவை அங்கேயே கிடந்தன. ஆரம்ப நாட்களில் அவற்றை ஒழுங்குபடுத்திவிட வேண்டும் என்ற முனைப்பு எனக்கு இருந்தது. மொழிபெயர்ப்பு புத்தகங்களை அவர் தனித்தனி ஏடுகளாகச் சிதைத்ததை புரிந்து கொண்டதும் அந்த எண்ணம் படிப்படியாக விலக ஆரம்பித்தது. ஒவ்வொரு முறை வீட்டை சுத்தம் செய்யும்போதும் அல்லது கரையான்களின் தாக்கம் மிகுந்துவிடும்போதும் அந்தப் புத்தகங்களில் ஒரு பகுதி கழித்து எரியூட்டப்படும். அல்லது குப்பையில் வீசப்படும். எல்லாம் கரையான் அரித்துவிட்டது. இனி பயன்படாது என்பார். நான் ஆமாம் என்பேன்.

ஒருமுறை எனக்காக The Hindu – வின் Sunday Magazine – ல் வந்த புதியதொரு கேலக்ஸி கண்டுபிடிப்பு பற்றிய ஒரு கட்டுரையையும், பிறகு கருந்துளை இருப்புக்கான புதிய சாத்தியம் பற்றிய குறிப்பொன்றையும் எடுத்து வைத்திருந்தார். நானும் அவரும் இதுபற்றி நிறைய பேசியிருந்தாலும் அவர் அல்லது நான் எதிரான ஒரு கருத்து நிலையிலேயே இருப்பதாக இருந்தது. ஒரு லட்சம் ஒளியாண்டு, இதை எவ்வாறு மனதில் கற்பித்துக் கொள்வது என்பார். மனதின் சிக்கலான அமைப்பைப் பற்றி விரிவாகத் தெரிந்து வைத்திருந்த அவர், அதனால் நிகழும் விபத்துக்கள் பற்றிய தெளிந்த புரிதலுடன் செயல்பட்டார். ஐன்ஸ்டைனைவிட நியூட்டனை அவருக்கான ஆதர்சமாகக் கொண்டிருந்தார். ஃபிராய்டைவிட யூங்கையே அவர் உயர்வாகக் கருதினார். அதற்கான காரணங்களை நான் அவருடனான நீண்ட கால புரிதலினாலே கண்டடைந்தேன். நியூட்டனின் அஸ்திவாரத்தில் கட்டப்பட்டதே ஐன்ஸ்டைனின் அதிசயக் கட்டிடம். பிரபஞ்ச ரகசியம், மனிதனின் தேடல், நிரந்தரத் தன்மையின் சுவடுகள், எல்லாவற்றையும் கடந்து சென்று கொண்டிருக்கும் காலம். அதை பரிமாணமாகக் கொண்டிருக்கும் வெளி. நிரந்தரமின்மையின் வலு இவையெல்லாம் நாம் சிக்கலாக்கிக் கொண்டிருக்கும் இந்த இருத்தலின் ஒரு பகுதியாகையால், அது பூரண விடுதலையைச் சாத்தியப்படுத்துவதில்லை. அதாவது அப்படி ஏதுமில்லை என்பதுதான் அதற்கான விடையாக இருக்கிறது. சி. மணி ஒரு பேராற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒரு தக்கையைப் போல, தன்னளவில் நிதானமாக, ஆனால் அந்த ஆற்றின் வழியே பயணப்பட்டுக் கொண்டிருந்தார்.

சில சமயங்களில் அவர் திடீரென எனது அலுவலகத்திற்கு போன் செய்வார். அப்போது மிகச் சுருக்கமாகவே பேசுவார். எனக்கு சில ஹிந்தி அல்லது உருது வார்த்தைகளுக்கு பொருள் தெரியவேண்டும். உங்களால் ஞாபகப்படுத்த முடிகிறதா? என சில வார்த்தைகளைக் கேட்பார். எனக்குத் தூக்கிவாரிப்போடும். ஏனென்றால் எனக்கு உருது தெரியாது. அது அவருக்கும் தெரியும். சரி, நேரில் வாருங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்பார். நான் முஸ்லீமாக இருந்தாலும் எனக்கு உருது தெரியாது. எனது வீட்டிலிருப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆரம்பத்திலிருந்தே தமிழின் மீது உள்ள பற்றோ என்னவோ, நான் உருதில் பேசுவதை ஊக்கப்படுத்திக் கொள்ளவில்லை. இது எனக்கு நிறைய இடங்களில் பெரிய பின்னடைவை உண்டாக்கியிருந்தாலும் விடாப்பிடியாக அவ்வாறே இருந்தேன். சி. மணி நிறைய ஹிந்தி பாடல்களைக் கேட்பார். ரஃபியினுடைய பாடல்கள், ஷெனாய், சிதார், வாய்ப்பாட்டு அவருக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல அவரது தாய்மொழியாகிய கன்னடம் தனக்கு தெரியாது என்பார். நான் அவர் குறிப்பிட்ட ஹிந்தி வார்த்தைகளுக்கு பொருள் விசாரித்துச் சொல்கிறேன் என்றால், ஓ! உங்களுக்கும் தாய்மொழி தெரியாது, இல்லை? என்பார். என்னால் எனது உறவுகளுடன் எத்தகைய உரையாடலையும் அல்லது ஒரு தகவல் தொடர்பையும் வைத்துக்கொள்ள இயலாமலிருந்தது. அவர்கள் அல்லது அவர்களிடமிருந்து நான் பிரிந்து ஒரு தீவைப்போல உணருவேன். சி. மணி பெரும்பாலும் அவரது உறவினர்களுடன் மிகக் குறைந்த உரையடலையே மேற்கொள்வார். அல்லது பேசத் தலைப்படமாட்டார். ஏனென்றால் கன்னடத்தில் உரையாடுவதை அவர்கள் விருப்பவில்லைபோல. எனவே அவர் தமிழிலேயேதான் பேசுவார். அவர் மணிக்கணக்காகப் பேசுவது எங்களைப் போன்ற இலக்கியவாதிகளிடம்தான். அது அவரது ஒருவகை எதிர்ப்புணர்வைக் காட்டுவதாக இருந்தது. பூரண விழிப்புநிலைக்கான ஆதார மூலங்களில் இதுவும் ஒன்றாக அவர் இவற்றைக் கருதியிருக்க வேண்டும். அல்லது இவை அத்தகைய முயற்சிகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று கருதியிருக்கலாம். தன்னை இந்த சமூகத்திலிருந்து தொடர்பறுத்துக் கொள்வதன் மூலம், சீரழிந்த சமுகத்திற்கு ஒரு எதிர்ப்பைக் காட்டியிருந்தார் என்றே நான் கருதினேன்.

ஒருமுறை எனது கவிதை வெளியிடப்பட்ட இலக்கியச் சிற்றிதழை அவரிடம் காட்டினேன். அமைதியாக ஒருகணம் பார்த்துவிட்டு உள்ளே சென்றவர், அரை மணி நேரம் கழித்தே திரும்பி வந்தார். வழக்கம்போலவே அவரிடமிருந்து எதையும் நான் எதிர்ப்பார்க்கவில்லை. அவரது முகத்தைப் பார்த்தேன். ‘நீங்கள் ஏன் உங்கள் பெயரை மறுபரிசீலனைக்கு உட்படுத்தக்கூடாது?’ என்றார். அடுத்தகணம் எனது பெயரின் முதல்பாதி, எனக்கு மிக உறுத்தலாக மாறியது. சாகிப்கிரான் என்பதில் சாகிப் என்பது ஒரு வெள்ளைத்தாளில் மைப்புள்ளிபோல இருப்பதாக அவர் உணர்ந்திருக்க வேண்டும். நான் அமைதியாக இருந்தேன். அவர் மேற்கொண்டு இதுபற்றி விவாதிக்கவில்லை. மதம், இனம், சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், மிகக் கேவலமான தனித்த அடையாளங்கள் யாவற்றிற்கும் அவர் எதிராகவே இருந்தார். மொழி என்பது மனிதனைப் பண்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. மொழியின் தீவிர அமைப்பு மற்ற மொழிகளை நேசிக்கவே வைக்கின்றது. அது தவிர மற்ற எல்லாமே மனித ஆன்மாவைச் சிதைப்பதாகவே அவர் உணர்ந்திருந்தார். அதனாலேயே அவர் தனது இயற்பெயரான எஸ். பழனிசாமி என்பதைப் நேரடியாக இலக்கியத்தில் எங்கும் பயன்படுத்தியதில்லை. சி. மணி என்பதையே அவர் பயன்படுத்திவந்தார். அது அவரது செல்லப்பெயராகும். அதில்லாமல் அது ஒரு பெயர்ச்சொல்லாக, அஃறிணைக்குறிய பெயர்ச் சொல்லாக இருந்தது. அதை மணி ஓசை என்றோ, விலையுயர்ந்த ஆபரண மணி என்றோகூட எடுத்துக்கொள்ளலாம். அத்தகைய ஒரு வாய்ப்பை மட்டுமே அவர் வாசகர்களுக்கு விட்டிருந்தார்.

In Search of The Miraculous மொழிப்பெயர்ப்பு முடிந்து, தாவோ தே ஜிங் நடந்து கொண்டிருந்தது. அவர் மிகத் தீவிரமாக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தார். நான்கு ஆங்கில அகரமுதலிகளை பயன்படுத்திக் கொண்டிருந்தார். இது யாராலும் நம்பமுடியாமலும், இயலாததுமான ஒன்று. அகர முதலிகளை மிகச் சரியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நான் அவரிடமிருந்தே தெரிந்து கொண்டேன். அவர் சரியான ஒரு மொழிபெயர்ப்புப் பதத்திற்காக வாரக்கணக்கில் காத்திருந்திருக்கிறார். அந்த தவமானது எனது கண்முன்னால் இன்னும் தகித்துக் கொண்டிருக்கிறது. அவரது கருத்துகளுடன் சில முரண்பாடுகள் எனக்கிருந்தாலும் அவரது ஆளுமை அனைத்தையும் உறிஞ்சிக் கொள்வதாக இருந்தது.

தொடர்ந்த கடினமான உழைப்பு அவரை மிக மோசமான உடல் சிதைவிற்குக் கொண்டு சென்றது. தாவோ தே ஜி முடித்ததும் அவரது உடல் மீண்டும் தேற இயலாத வண்ணம் நோயுற்றது. தொடர்ந்த புகைப்பழக்கம் அவரது நுரையீரல்களை முற்றிலும் பொசுக்கிச் சிதைத்துவிட்டது. ஒரு கட்டத்தில் இயங்க மறுத்த அவை, சப்பையாக ஒட்டிக் கொண்டுவிட்டன. மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரை, நீண்ட மருத்துவ சிகிச்சைக்கு பிறகே வீட்டிற்கு போக அனுமதித்தது. அவரது நுரையீரகள் வெறும் பதினைந்து சதவிகிதம் மட்டும் இயங்குபவையாக இருந்தன. அவரால் சிறிது தூரம்கூட நடக்க இயலாமல்போய்விட்டது.

இந்த காலக்கட்டம்தான் அவர் மிகத் தீவிரமாகத் தன்னை மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்திக்கொண்ட காலம். தொடர்ந்து அவர், சுருக்கமான அறிமுக வரிசையில் புத்தர், பெளத்தம், ஃபிராய்டு, A Contemporary Tamil Prose Reader, மைதிலி மொழி கவிதைகளான முன்னிலை ஒருமை, சூஃபியிசம், பள்ளி வாசலில் பெண்கள், Six Characters in a Play முதலியவற்றை மொழிபெயர்த்தார் என்பதை விட மொழியாக்கம் செய்தார் எனலாம். அவரது வீடானது சாலையின் ஓரத்திலேயே அமைந்திருந்தது. வீட்டிற்கு எதிரில்தான் குப்பைத்தொட்டி. அங்கே மிகப் பெரிய அளவிலான பன்றிகள் அலைந்தபடியே இருக்கும். அவர் உட்கார்ந்து மொழிபெயர்ப்பு செய்யும் வராண்டாவிற்கு மிக அருகிலேதான் அந்த வீதியின் பிரதான சாக்கடை மலங்கள் மிதந்தபடி, எப்போதும் ஓடியபடி இருக்கும். ஒரு சில சமயங்களில் எனது இருசக்கர வாகனத்தை பன்றிகள் உரசிப்போன சுவடுகள் இருக்கும். அது மிகத் தொந்தரவு தரக்கூடிய ஒரு இடமாக எல்லோருக்கும்படும். தினமும் ஒரு பிணமாவது அவ்வழியாகச் செல்லும். அவர் பேசுவது வாகன சத்தத்தில் நிறைய சமயங்களில் தெளிவாக எனக்குப் புரியாமலும் இருந்திருக்கிறது. ஆனால், நாளாக நாளாக அது எனக்குப் பழகிப்போனது. அவர் அத்தகைய ஒரு தொந்தரவு நிறைந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது ஒரு யுக்தியாக எனக்குப்பட்டது. இத்தகைய இடர்பாடுகளை அவர் தனக்கான ஒரு உந்து சக்தியாக, நெருக்கடியில் கிளர்ந்தெழும் சாத்தியமாக மாற்றுவதாகத் தோன்றியது. இது அவரின் ஒரு மனவீழ்ச்சியைக் கண்ணுற்ற நான், மறுநாள் அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டார் என்பதற்கான ஒரு பதிலாகவும் இருந்தது.

நடை இலக்கிய ஏட்டையும், சாரல் பதிப்பகத்தையும் அவர் தனது மிகப்பரந்த நிலமொன்றை விற்று அதிலேயே நிறுவினார். ஆனால் சாரலானது காப்பி ரைட் பிரச்சனை வழக்கில் நின்றுபோனது. நடை தொடர்ந்து மிகத் தரமான, அவர் எதிர்பார்த்தபடி உலகத் தரத்திலான படைப்புகள் கிடைக்காததால், அல்லது அத்தகைய படைப்புகளை யாரும் தரத் தயாராக இல்லாதததால் எட்டு இதழ்களுடன் நின்றுபோனது. இவை எதைப்பற்றியும் அவர் எப்போதும் வருத்தப்பட்டது இல்லை. அவர் அவரைப் பற்றிய விமர்சனத்தைக்கூட மிக மூன்றாம் நிலையிலிருந்தே வைத்தார். ஒரு கட்டத்தில் அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தார். எல்லாவற்றையும் சார்பற்ற ஒரு தன்மையிலேயே அணுகினார். அது அவரை ஜென், சூஃபி, தாவோ என எல்லாவற்றையும் கடப்பதற்கான ஒரு திறவைத் தந்தது.

ஒருமுறை அவர் எனக்கு ஒரு கடிதத்தின் பிரதியை அனுப்பியிருந்தார். அது அவரது மொழிபெயர்ப்பு பற்றியது. அவர் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கும் தாழ்வாரத்தின் மேற்கூரையில் அவரது ஜட்டிகள் காய்வதற்காகத் தொங்கும். அதில் அவர் சாக்லேட்டுகளை வைத்திருந்து எனக்கொன்றை எடுத்துத் தந்துவிட்டு, தானும் ஒன்றை சாப்பிடுவார். முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது. இப்போது அப்படியில்லை. அவர் தற்போதெல்லாம் சாக்லேட்டை சாப்பிடுவதே இல்லை. வாங்குவதும் இல்லை. அவரது மொழிபெயர்ப்பில் அறிய, வரலாற்றை போன்ற பதங்கள் பதிப்பாசிரியரால் அறிந்திட, வரலாற்றினை என்று மாற்றப்பட்டிருந்ததைக் கண்டு மிக வேதனையடைந்தார். அவர் வார்த்தையின் மிகச் சிறிய வடிவத்தை அல்லது அத்தகைய சாத்தியத்தை நோக்கியே தனது கவனிப்பை குவிப்பார். அதுவே மொழியின் சாதனையாகக் கொள்ளப்படும். Seduce என்ற பதத்திற்கான புதிய தமிழ்ச் சொல்லாக, மென்னாத்காரம் என்பதை பலாத்காரம் என்ற அடிச்சொல்லிலிருந்து உருவாக்கியிருந்தார். அப்படி உருவாக்கிய அனைத்துச் சொற்களையும் மாற்றிவிட்டனர். அவற்றிற்கு பதிலாக மனப்பிறழ்வு என்ற மொன்னையான ஒற்றை வார்த்தையை எல்லா இடங்களிலும் கையாண்டிருந்தது மிக அநியாயமான ஒன்றாகக் கருதினார். பதிப்பாளரும், பதிப்பாசிரியரும் சந்திப்பிழைகள், எழுத்துப்பிழைகளை ஒழுங்குபடுத்துவதையே கண்டிருந்த அவர், இத்தகைய திருத்தங்களுக்கு எதிராக நடந்து கொண்டார். தனக்கு அனுப்பப்பட்ட பிரதிகளைத் திருப்பி அனுப்பிவைத்தார். சி. மணி பன்மொழிப் புலமையும் ஆங்கில, தமிழ் இலக்கியங்களை முழுமையாகக் கற்றவரும், மொழிவல்லுனராகவும் இருக்கும் அவருக்கு பதிப்பாசிரியரின் தேவை இல்லை என்பதே எனது அபிப்பிராயமாக இருந்தது. ஒரு சீரிய, தீவிரத் தன்மையுடைய படைப்பாளியால் தொடர்ந்து இயங்காமலிருப்பதற்கான காரணங்களை நாம் மேலோட்டமான சில கருத்துக்களால் நிறுவி விடமுடியாது.

அவர் எப்போதும் தன்னுடன் வாசன் பஞ்சாங்கத்தை வைத்திருப்பார். அது எப்படி பயன்படுகிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதை உபயோகிக்கும் முறையை, அவரது செய்கைகளை வைத்து ஓரளவிற்கு உணர்ந்து கொண்டேன். அவர் அதை முழுதாக நம்புவதாகத் தோன்றும் அந்தத் தோற்றப் பிழையிலிருந்து வெகு எளிதில் நான் விடுபட்டுவிடேன். அது ஒரு நிலையாற்றலின் அசைவு என்று கருதினேன். அவர் அந்தந்தக் கிழமைகளுக்கான அதிபதிகளுக்கு அதாவது கடவுள்களுக்கு தான் சாப்பிடும் அனைத்தையும் அர்ப்பணம் செய்துவிட்டு பிறகே அவற்றைச் சாப்பிடுவார்.

அக்டோபர் மூன்று மிக விஷேசமான ஒன்று. அன்று அவரது பிறந்தநாள். நிச்சயமாக நானும் சர்வராஜும் அன்று அவரைப் பார்க்கச் சென்றுவிடுவோம். அவர் எங்களுக்கான இனிப்புகளை தனியாக எடுத்து வைத்திருப்பார். வழக்கமான சந்திப்பாக அது இருந்தாலும் அன்று ஏதோ நிகழ்ந்துவிடும் எதிர்ப்பார்ப்புடன் செல்வேன். அன்று அவரது ஏதாவது ஒரு கவிதையை வாசிப்போம். மிகக் குறைந்த வெளிச்சத்தில் மிகச் சிரமப்பட்டு நான் வாசிக்கும் அந்தக் கவிதை, அன்றைய சகல நிலைமைகளுக்கும் பொருந்துவதாக அமைந்திருக்கும். பிறகு மிகக் குளிர்ந்த தனது கைகளால் எங்களுக்குப் பிரியா விடை கொடுப்பார். அவரது இயல்பானது வெகு அப்பட்டமான ஒன்று. அவரது இறுதி நாட்களில் யாரும் அவரை வந்துப் பார்க்காமலிருந்தனர். இந்த நிலையில்தான் அவருக்கு தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்களின் வாழ்நாள் சாதனையாளருக்கான கலைஞர் விருது கவிதைக்காக அவருக்குக் கிடைத்தது. ரூபாய் ஒரு லட்சம்.

அதை சென்னையில் நடந்த புத்தகத் திருவிழாவில் பெற்றுக்கொள்வதற்காக நானும் அவரும் சென்னை செல்வதாக இருந்தது. விருதுகள் வாங்குவதில் அவருக்கு மிகப் பெரிய மறுப்பு எப்போதும் உண்டு. அவர் அதை அதாவது அத்தகையத் தடையை இன்று மீறி இருந்ததாக தோன்றியது. இது அவரது இயல்பல்ல என்றே நான் எண்ணினேன். ஆனாலும் வெகு உற்சாகமாக கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். விடியற் காலமாகக் கிளம்புவதாக இருந்தது. வாடகைக் கார் பேசி இரவு தூங்கச் சென்றுவிட்டேன். நள்ளிரவு இரண்டு மணியளவில் எனக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது.

அப்பா, இரவு பாத்ரூமில் விழுந்துவிட்டார். இடுப்பெலும்பில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. கோகுலம் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றோம்.

நான் மிக நிதான கதிக்கு வந்துவிட்டேன். பயண ஏற்பாடுகளை கலைத்து முறைப்படுத்திவிட்டு, அவரைப் பார்க்கச் சென்றேன். மிகத் தளர்ந்திருந்தார். வெகு நேரமாக வரவேற்பறையில் காத்திருந்தேன். அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அவர் ஏன் விழவேண்டும் என்பதற்கான விடை கிடைத்திருந்தது. தன்னைச் சிதைவுக்குள்ளாக்கிக் கொண்ட அவர், இத்தகைய ஒரு அப்பட்டமான அரசியல் நிகழ்விற்கு தன்னை ஒப்புக்கொடுத்தது அவரை, அந்த தனிமை இரவில் அலைக்கழித்திருக்க வேண்டும். அதற்கான மிகப் பெரிய போராட்டத்தில் அவர் வெற்றி கண்டிருக்கிறார். மிகவும் களைத்திருந்த அவர், என்னை அன்புடன் அருகழைத்து பேசினார். சீக்கிரம் தான் தேறிவிடுவதாகக் கூறினார். அவரிடம் எனக்கு பகிர்ந்து கொள்ள ஏதுமில்லாதிருந்தது. அமைதியாக அவரருகில் அமர்ந்திருதேன். அவரது சுதந்திரம் பறிபோன நிலையில் சூழ்நிலைக் கைதியாக அவரைப் பார்க்க எனக்கு துக்கமாக இருந்தது. சர்வராஜும் நானும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். விழாக் குழுவிலிருந்தும் பேசியிருக்கிறார்கள். விருதை க்ரியா ராமகிருஷ்ணன் வாங்கி அனுப்புவதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். எனக்கு சி. மணியின் தீர்வு கவிதை ஞாபகத்திற்கு வந்தது. என்ன செய்வதிந்தக் கையை?

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அவர் படுத்தப் படுக்கையாக இருந்தார். எழ முடியாமலும், குளிக்க முடியாமலும் வீழ்ந்து கிடந்தார். நான் தினமும் அவரைப் பார்க்கச் செல்லத் தொடங்கினேன். தனிமையில் இருந்த அவருக்கு ஒரு மிடறு மதுதான் ஆறுதல் அளித்த வண்ணமிருந்தது. அவரிடம் நிறைய பேச வேண்டியிருந்தது எனக்கு. அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். கவிதை பற்றி நிறைய பேசினேன். அவரது கவிதைகள் பற்றி முதல் முறையாக எனது அபிப்பிராயங்களைச் சொல்லத் தொடங்கினேன். அந்தக் காலக்கட்டத்தில் ஒரு சில கவிதைத் தொகுப்புகளுக்கு விமர்சனம் எழுதியிருந்தேன். அவற்றைத் தொடர்ந்து அவருக்கு வாசித்துக் காட்டுவேன். அவர் மிக உற்சாகமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பார்.

ஒருமுறை அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது லீனா மணிமேகலையின் அழைப்பு வந்தது. சி. மணியிடம் பேச விருப்பமா எனக் கேட்டேன். ஆனால் அப்போது அத்தகைய மனநிலையில் இல்லாத லீனா மற்றொரு நாள் பேசுவதாகக் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு லீனாவால் அவரிடம் பேசவே முடியாமல் போய்விட்டது. இது மிக வருத்தமான ஒன்றாக பின்னாளில் லீனா குறிப்பிட்டார்.

சி. மணி லீனாவை விசாரித்தார். லீனாவின் தேவதைகள் படம் குறித்து அவர் அறிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. அவர் தனது கவிதைகள் குறித்த ஒரு விமர்சனத்தை நான் எழுத வேண்டும் என்றார். சீக்கிரமாக எழுதிவிடுங்கள் என்றார். அதை அவர் பார்க்க விரும்பினார். கூடவே அவர் மொழி பெயர்த்திருந்த சீன, ஜப்பான் ஜென் கவிதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர வேண்டுமென்ற விருப்பமும் கொண்டிருந்தார். அந்த மொழிபெயர்ப்புகளை தக்கை காலாண்டிதழில் நான் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேன். அது தக்கை இதழுக்கு மிகப் பெரிய கவனிப்பைப் பெற்றுத் தருவதாக இருந்தது.

ஒரு மனிதனுக்கு இயக்கம் மிக முக்கியமான ஒன்று என்று சி. மணி குறிப்பிடுவார். Mobility என்பது தற்சார்புத் தன்மையைச் உறுதிப்படுத்தும் ஒன்று. தற்சார்பற்றவன் தனது குடும்பத்தினால் மிக அனாவசியமாக நடத்தப்படுவது சாதாரண ஒன்று. தண்ணீர் குடிக்க, தேவையான ஒன்றை கையெட்டும் தூரத்திலிருந்து எடுப்பதற்கு, குறிப்பாக சிறுநீர், மலம் கழிப்பதற்கு மற்றொருவருடைய உதவியை நாடுவது மிகுந்த வேதனையளிக்கக் கூடிய ஒன்று. சாதாரண ஒரு மனிதனே இத்தகைய விஷயங்களுக்கு தடுமாறிப்போகும்போது, சி. மணி போன்ற ஈடு இணையற்ற ஆளுமைகள் எவ்வாறு இதை சமன்செய்துகொள்ளக் கூடும்?

ஒருநாள் ஹோட்டல் சாதம் அவருக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிட்டது. அவர் மிகக் குறைந்த அளவு உணவையே எடுத்துக் கொள்ளும் தன்மையால், இத்தகைய சக்தி இழப்பை சமாளிக்க இயலவில்லை. உடல் தளர்ந்து மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று மதியமாக நான் அவருக்குப் பிடித்தமான, சிவப்பு உடை அணிந்து சென்றேன். Intermediate Care Unit – ல் இருந்தார். என்னைக் கண்டதும் அருகில் அமரச் சொன்னார். அவரது கை மிகக் குளிர்ந்த நிலையில் இருந்தது. கண்களிலிருந்து ஒரு கணம் நீர் வழிந்தோடியது. நான் இமைக்காமல் பார்த்தேன். ‘நான் அழவில்லை. கண்களில் ஏதோ தூசு விழுந்துவிட்டது’ என்றார். பிளாஸ்கிலிருந்த காபியை அருந்தச் சொன்னார். சரி என்றேன்.

அன்று அவர் எழுந்து நடப்பதற்கான பிஸியோதெரபி அப்பியாசங்கள் சொல்லித்தரப்பட்டதாகக் கூறினார். தன்னால் எழமுடியாத நிலைமையில் எவ்வாறு அதைச் செய்வது என்று மருத்துவரைக் கடிந்து கொண்டதாகச் சொன்னார். நிர்பந்தங்களை என்றுமே எதிர்கொள்ளாத, சாமானிய மனிதனால் மிகக் கடுமையாக ஆட்டுவிக்கப்படும் இது போன்ற கணங்கள் சி. மணி போன்ற ஆளுமைகளால் தாங்கமுடியாத ஆற்றாமைக்குக் இட்டுச் செல்வதாக இருந்தன. இதுதான் வாழ்வின் மிகக் கொடூர கணங்களாக நான் கண்டு அதிர்ந்துபோனேன். மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டு அந்த இரவு அவரிடமிருந்து விடைபெற்றேன். கிளம்பும்போது அவரது கவிதைக்கான எனது விமர்சனத்தை உடனே எழுதிவிடுமாறு சொன்னார்.

அவர் எந்த நிர்பந்தத்தையும் ஒப்புக் கொண்டதில்லை. அவருக்கு வழங்கப்பட்ட அத்தனை சலுகைகளையும் அது தானாக வந்ததோ அல்லது நண்பர்களின் மூலம் உண்டானதோ அத்தனையையும் அவர் சிதைத்தார். அதன் பிரதியாக தனது சுயத்தை நிறுவினார். அவரிடம் எடுக்கப்பட்ட பல நேர்காணல்களை மிக லாவகமாக தன்னை ஒரு வெகு சாதாரண நிலைக்குக் காட்டிக் கொள்வதன் மூலம் ஒரு விளையாட்டை உருவாக்கியிருந்தார். அது மிகப் பூடகமான ஒன்றாக, அவரை நன்கு அறிந்தவனாலேயே உணரமுடியும். இது ஒரு பார்வைக்கு அபத்தமான ஒன்றாகப்பட்டாலும் ஒரு வண்ணத்துப் பூச்சியானது எவ்வாறு ஒழுங்கற்ற அல்லது தாந்தோன்றியான தனது பாதையை கொண்டிருப்பதற்கான கருத்துருவாக மாறுவதைப் போன்றது. அது அவரது அயராத உழைப்பின் பின்னால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது சகல அசைவுகளையும் தன் பூரண விழிப்புநிலையால் அளந்தபடியே இருப்பார். எனவேதான் அவர் தான் இருக்கும்வரை தனது நேர்காணல் ஏதும் வெளிவராதபடி நடந்து கொண்டார். அன்று அவர் மிகத் தெளிவாக இருந்தார். அவரது கண்கள் பஞ்சடைத்த குழிகளைப்போல உருண்டபடி இருந்தன.

சொன்னபடி என்னால் மறுநாள் மருத்துவமனைக்கு போக முடியவில்லை. அதாவது ஏப்ரல் 2009 ஐந்தாம் தேதி. அது ஞாயிற்றுக்கிழமை.

அன்று இரவு அதாவது ஆறாம் தேதி. எனக்கு அந்த போன் வந்தது.

எனது கண்கள் குளமாகத் திரண்டு நின்றன. என் மனைவி ஓவென்று அழுது புலம்பினாள். காலையில் அவரது வீட்டின் ஒழுங்குக் கலைக்கப்பட்டு, ஆட்கள் நிரம்பியிருந்தனர். மெளனமாக நின்று பார்த்தேன். இன்னும் நான் அவரது கவிதைகளுக்கான விமர்சனத்தை எழுதவில்லை. சடங்குகள் ஆரம்பித்திருந்தன. நான் சுருண்டு ஒரு படிக்கட்டு முனையில் ஓய்ந்துவிட்டேன். புது எழுத்து மனோன்மணியும் வே. பாபுவும் என்னை ஆறுதல்படுத்தினர். லீனா போனில் என்னை தைரியப்படுத்தினார். சிபிச்செல்வன் நான் தகவல் சொல்லவில்லை என்று வருத்தப்பட்டதாகக் காட்டினார். ஆனால் சி. மணி வீடு சிபிக்குத்தான் பக்கம். நான் எந்த பதிலையும் உரக்கச் சொல்லும் திரணியற்று நின்றிருந்தேன். இத்தனை நாட்களாக கட்டிலோடு கிடந்த அவரை எட்டிக்கூடப் பார்க்காத எல்லோரும் இன்று வந்திருந்தனர். கிரியா ராமகிருஷ்ணன், சர்வராஜ், மல்லூர் பாலமுருகன், பா. ராஜா, அடையாளம் சாதிக்பாஷா, வெங்கடேசன், நா.பெரியசாமி என்று ஒரு பத்து இலக்கியவாதிகளும், பதினைந்து உறவுகளுமாக அந்த மேதையின் இறுதி ஊர்வலம் முடிவடைந்தது.

அவரது வீட்டில் சில மனக்குறைகள் தகித்திருந்ததை அப்போது என்னால் கண்டு கொள்ள முடிந்தது. அவரது நிரந்தரத்தன்மைக்கு நேர்ந்த சில பெலஹீனக் குறைபாடுகள் குறித்து அது எழுந்தது. சி. மணியைப் போன்ற ஆளுமையொன்று வெற்று நிரந்தரத்தை என்றுமே ஏந்துவதில்லை. அவர் வானவில்லிலிருந்து தனக்கான ஜீவ சக்தியைப் பெற்றுக்கொண்டார். அவருக்குப் பிடித்த ஒரு கீர்த்தனையிலிருந்து ஒரு நாளுக்கான உணவை எடுத்துக் கொண்டார். தான் ரசித்த ஒரு கவிதையிலிருந்து ஒருநாள் காலை விழித்தெழுந்தார். தனக்கான ஒரு மிடறு மதுவிலிருந்து இந்த பிரபஞ்ச ரகசியத்தைப் பிழிந்தெடுத்துக் கொண்டார். சிகரெட்டின் வெம்மையான புகையிலிருந்து இந்த உலகின் ஆன்மாவை தன்னுள் நிறைத்துக் கொண்டார். அவர் உணவை மறுத்தார். அது நிரந்தரத்தை கொண்டுவந்து சேர்த்தது. சிதைவைத் தடுத்தது. எனவே அவர் இல்லாததிலிருந்து இருப்பதை எடுத்துக் கொண்டார்.

எல்லாம் முடிந்துவிட்டது. கடைசி சுவடும் அழித்தொழிந்துவிட்டது. அதோ அந்த வைக்கோல் போர் எரிந்துபோய் இப்போது நிலவு தடையற்று தெரிகிறது. அந்த நிலவின் ஒளி அருகிருக்கும் குளத்தில் பிரதிபலித்தபடி இருக்கிறது. ஆனால் அந்த நிலவோ அல்லது அந்த குளமோ எங்கேயும் தங்களுக்குள் தொட்டுக் கொண்டிருக்கவில்லை.

வாழ்வு இருப்பது, அதை நாம்
கண்டறிவது போலத்தான்.

சாவும் அவ்வாறே.
பிரிவுக் கவிதை ஒன்றா?
எதற்கு இந்த

வற்புறுத்தல்?

மரணம்: டெயே – சேகு
(தமிழில் சி. மணி)

புது எழுத்து – 18, 2010 பத்தாம் ஆண்டு சி. மணி நினைவு மலரில் வெளிவந்த கட்டுரை

(பின் குறிப்பு: 19-04-2009 அன்று சென்னையில் லீனா மணிமேகலையின் தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சி. மணி, அப்பாஸ் நினைவரங்கில் சி. மணியின் இதுவரை. . . கவிதைத் தொகுப்பு பற்றிய கட்டுரையை மிகுந்த மனவலியோடு வாசித்தேன்.)

***

 

-சாகிப்கிரான்

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *