-ஜிஃப்ரி ஹாசன்

சிவத்தம்பி ஒரு மார்க்ஸிய அறிவுஜீவி என்றவகையில் அவருக்கு பின்நவீனத்துவத்துடன் ஓர் இணக்கமான உறவு நிலவச் சாத்தியமில்லைதான். இருந்தாலும் பின்நவீனத்துவம் ஓர் அறிவுத்துறையாக எப்படி ஐரோப்பிய சூழலில் தோற்றங்கொண்டது என்பதையும், அது குறித்து ‘அறிவார்ந்த’ விவாதங்களையும் அவர் தமிழ்ச் சூழலில் நிகழ்த்தினார். ஐரோப்பிய தத்துவ சிந்தனை மரபின் தொடர்ச்சியாக, ஒரு காலகட்ட சிந்தனை முறையாக பின்நவீனத்துவத்தை தீவிர மார்க்ஸியர்கள் பலர் அங்கீகரிப்பதில்லை. அவர்கள் பின்நவீனத்துவத்தை ஐரோப்பிய சமூக அரசியல் மாற்றத்திலிருந்து உருவாகிய ஒரு காலகட்ட சிந்தனைப் போக்காகவன்றி, மார்க்ஸியத்துக்கெதிரான முதலாளித்துவத்தின் திட்டமிட்ட உருவாக்கமாகவே காணுகின்றனர். அத்தகையதொரு பார்வைக்கான நியாயமும் இல்லாமல் இல்லை. பின்நவீனத்துவத்தின் பெரும்பாலான கூறுகள் மார்க்ஸிய அரசியலுடன் நேரடியாகவே முரண்படக்கூடியது. உண்மையில் மார்க்ஸியம், பின்நவீனத்துவம் இவ்விரண்டு சிந்தனைகளிலிலும் எது உகந்தது என்ற தீர்மானம் ஒடுக்கப்படும் மக்களின் உரிமை, சுதந்திரம், வாழ்வெழுச்சி சார்ந்து எது அதிக அக்கறை கொண்டுள்ளது என்ற அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும். இந்த நோக்கில் மார்க்ஸியமே ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் என்றால் அதையே அதன் மீதே நாம் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் மார்க்ஸியத்துக்கு வெளியில் எந்த அறிவுத்துறையும் இல்லை என்ற பிடிவாதம் அபத்தமானது.  சிலவேளை மார்க்ஸியத்துக்கும், பின்நவீனத்துவத்துக்கும் அவற்றின் சில கருத்துநிலைகள் சார்ந்து நிகழும் முரண்பாடென்பது சிலவேளை இயல்பாக அமைந்த முரண்பாடாகக்கூட இருக்கலாம். இந்த முரணை மார்க்ஸியத்துக்கெதிரான திட்டமிட்ட முரணாக கட்டமைக்க முடியுமா என்பதும் கேள்விதான். ஒரு சிந்தனையின் தொடர்ச்சியாகவோ அல்லது மறுப்பாகவோதான் இன்னொரு சிந்தனை உருவாகி வருகிறது.

இந்தப் புரிதல் சிவத்தம்பியிடம் இருப்பதாகவே தோன்றுகிறது.  பின்நவீனத்துவத்தோடு ஊடாடி அதைப் புரிந்து கொண்டு அதன் மீது ஒரு மதிப்பீட்டினை முன்வைக்கும் ஓர் அறிவார்ந்த அணுகுமுறையே சிவத்தம்பியிடம் வெளிப்படுகிறது. அறிவுத்துறை மற்றும் சமூக மட்டங்களில் நிலவிய நுண் அதிகாரங்களை மிக நுணுக்கமாக வெளிப்படுத்திக் காட்டியதில் பின்நவீனத்துவத்துக்கு தனி இடமுண்டு. பின்நவீனத்துவத்துக்கு அந்த இடத்தை வழங்குகுவதில் சிவத்தம்பிக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இது தொடர்பில் சிவத்தம்பியின் நவீனத்துவம் தமிழ் பின் நவீனத்துவம் எனும் நூல் முக்கியத்துவமுடையது.

ஐரோப்பிய-மேற்கத்தேய சிந்தனை மரபில் 19ம் நூற்றாண்டு முதல் 20 பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை செல்வாக்குடன் விளங்கிய பலசிந்தனைகளை அமைப்பியல்வாதம், பின் அமைப்பியல்வாதம் போன்ற சிந்தனைகள் கேள்விக்குள்ளாக்கின. இந்தப் புதிய சிந்தனைமாற்றத்தின் தொடர்ச்சியாக கிளம்பிய சிந்தனை முறையாகவே சிவத்தம்பி பின் நவீனத்துவத்தை காண்கிறார்.

பின்நவீனத்துவத்தின் தோற்றத்தையும், அதன் சிந்தனை முறையையும் ஆழமாகப் பரிசீலனை செய்யும் அவர் “பின்அமைப்பியல்வாதச் சிந்தனைகள், சிந்தனை மட்டத்திலேயே தொழிற்படுவனவாக அமைய, இத்தொடரோ, காலப்பெயர்வு (time-shift) ஒன்றைச் சுட்டுவதாகவும் (அதாவது ‘நவீன’ காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டது என்பதைச் சுட்டுவதாகவும்), அதன் வழியாக ஒரு ‘புதிய இருப்புநிலை’ உருவாகியுள்ளது என்பதைக் குறிப்பதாகவும் அமைந்தது” (நவீனத்துவம் தமிழ் பின்நவீனத்துவம், கா.சிவத்தம்பி, பக். 209) என்கிறார்.

பின்நவீன சிந்தனையை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கும் முற்போக்கு மனநிலையிலிருந்து விலகி அதனைப் பரிசீலனைக்குட்படுத்தும் போக்கு அவரிடம் வெளிப்பட்டிருப்பதையே இந்தக்கூற்று நிரூபணம் செய்கிறது. அறிவுலகில் பின்நவீனத்துவத்துக்கு உருவான இடத்தை சிவத்தம்பி ஒத்துக்கொண்டு அது குறித்த தன் நோக்குகளையும் மதிப்பீடுகளையும் முன்வைக்கிறார். “பின்நவீனத்துவம் என்பது இப்பொழுது, வரன்முறையான ஒரு சிந்தனைச் செல்நெறியாக, பண்பாட்டு நோக்காக, அரசியற் பார்வையாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. அத்தகைய ஒரு நிலையில் இக்கோட்பாடு பற்றிய வரன்முறையைான ஒரு விளக்கக் குறிப்பு அவசியமாகின்றது” (நவீனத்துவம் தமிழ் பின்நவீனத்துவம், கா.சிவத்தம்பி, பக். 210)

என அவர் கூறுவது மார்க்ஸிய முகாமுக்குள் மட்டுமே அறிவியக்கம் கட்டுண்டு கிடக்கவில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதையே காட்டுகிறது. பின்நவீனத்துவம் எதனைக் குறிக்கிறது என்பதை சிவத்தம்பி அதன் மூலத்திலிருந்து விளக்கவே முற்பட்டார். பின்நவீனத்துவத்தை ஓர் உலக நிலையாகவும், தத்துவக்கோட்பாடாகவும் முன்னிறுத்தியவர்களுள் முக்கியமானவரான ஜீன் ஃபிரான்சுவா லியோடார்ட்டின் கட்டுரையிலிருந்தே பின்நவீனத்துவம் என்பதற்கான அடிப்படை விளக்கத்தை எடுத்தாள்கிறார். அந்தவகையில் அவர் பின்நவீனத்துவம் என்பது பின்வருவனவற்றைக் குறிக்கும் என்கிறார்.

  1. கட்டடத்துறையில் ‘மனிதம்’ தனது சீவிப்புக்கு எடுத்துக் கொண்ட முழு வெளியையும் மீளக்கட்டுவதற்கான கடைசிச் செல்திட்டமாகக் கொண்டிருந்த நவீன இயக்கத்திலிருந்து, கட்டடக்கலையை அப்பாலே கொண்டு செல்லும் ஒரு செல்நெறி.
  2. முற்போக்கு, நவீனமயமாக்கம் எனும் கருத்தின் மீதிருந்த நம்பிக்கையின் சிதைவு.
  3. கலைத்துறையில் சில கலைஞர்களை ‘முன்செல் அணியினர்’ (avant garde) என்று இனிமேலும் குறிப்பிடுவது பொருத்தமற்றது.

(நவீனத்துவம் தமிழ் பின்நவீனத்துவம், கா.சிவத்தம்பி, பக். 210)

இந்த நிலைப்பாட்டிலும் புரிதலிலுமிருந்து சிவத்தம்பி பின்நவீனத்துவம் குறித்து இரண்டு வகையான புரிதலுக்கு வந்துசேர்ந்தார். ஒன்று பின்நவீனத்துவம் என்பது கலையின் செல்நெறிகள் பற்றியது. நவீனத்துவக் கலைக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டது. இரண்டாவது பின்நவீனத்துவம் என்பது ஒரு சிந்தனைச் செல்நெறியாகும்.

1986 இல் லியோடார்ட் முன்வைத்த இந்தப் பின்நவீனச் செல்நெறி உண்மையில் அந்தக்கால கட்ட ஐரோப்பிய சிந்தனைச் சூழலின் மறுப்பாக அல்லது அதன் பிரதிபலிப்பாக மேற்கிளம்பியது. சிவத்தம்பி அதனை அதிலிருந்து 15 வருடங்களுக்கு முன்னரான சமூக அரசியல் சூழலில் வைத்து மேலும் சில புதிய புரிதல்களை நிகழ்த்துகிறார்.

  1. சமூகத்தில் ‘இன்று’ (1970க்குப்பின்) காணப்படும் ‘நிலைமை’. இது உண்மையில் பண்பாடு சார்ந்த ஒன்றாகும். அதாவது வாழ்க்கை முறைமைகள், அந்த முறைமைகள் பற்றிய வாழ்க்கை நோக்குகள், இந்த ‘வாழ்க்கையை’க் கட்டமைத்துக் கொள்வதற்கு உதவும் பண்பாட்டுச் சாதனங்கள் என்பன இதற்குள் அடங்கும்.
  2. இந்த நிலைமையை விளக்குவனவாகவும், அவற்றுக்கு வரைவிலக்கணம் தருவனவாகவும் அமைகின்ற சிந்தனைகள்.
  3. ஒரு கலைப்பாணியாக அமையும் தன்மை.

(நவீனத்துவம் தமிழ் பின்நவீனத்துவம், கா.சிவத்தம்பி, பக். 212)

இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று ஆதாரமானவை. ஒன்றிலிருந்து ஒன்று உருவாகிவருவது என்ற புரிதல் சிவத்தம்பிடம் இருந்தது. அதனாலேயே பின்நவீனத்துவத்தை ‘அது ஒரு புதிய உலகநோக்கு’ என்கிறார். அதேநேரம் பின்நவீனத்துவம் உலக நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து ஒருமுகப்படுத்திப் பார்க்கும் ஒரு தொகுநிலை நோக்கை எதிர்க்கிறது என்றவகையில் அதனை ‘முன்னர் உலக விளக்கங்களாகக் கொள்ளப்பட்ட சிந்தனைகளை எதிர்க்கின்ற/மறுதலிக்கின்ற ஒரு வாதம்’ என அவர் வரையறுக்கிறார்.

பின்நவீனத்துவத்தைக் குறிக்கும் Post modernism என்பதிலுள்ள post எனும் முன்னொட்டு ‘பின்னர்/பிறகு’ என்ற கருத்தைத் தருகிறது. அதாவது நவீனத்துவத்துக்குப் பின்னரான நிலைமையைக் குறிக்கிறது எனலாம். பின்நவீனத்துவத்தை துல்லியமாக அறிந்துகொள்ள வேண்டுமானால் நவீனத்துவம் என்பது எதை எதை எல்லாம் குறித்து நின்றது என்பதைப் புரிந்துகொள்வது அடிப்படையானது என சிவத்தம்பி கருதுகிறார். அந்த வகையில் ஐரோப்பாவில் நவீனத்துவத்தை தோற்றுவித்த அரசியல்-சமூக நிலையான modernity அதாவது ‘நவீனமாம் தன்மை’ மற்றும் அத்தன்மை ஏற்படுவதற்கான ‘நவீனமயமாக்கம்’ (modernization) பற்றியும் தன்நோக்கினை சிவத்தம்பி செலுத்துகிறார். நவீனமாம் தன்மை modernity என்பதன் மூலம் நவீனத்துவத்தின் பண்புகள் என பின்நவீனத்துவவாதிகள் இனங்கண்ட இயல்புகளையே குறிப்பிடுகிறார். அவ்வாறு பின்நவீனத்துவவாதிகள் இனங்கண்ட நவீனத்துவத்தின் பண்புகள்/இயல்புகளுக்கு ‘மறுதலை’யானதாகவே பின்நவீனத்துவ சிந்தனைகள் எடுத்துரைக்கப்பட்டன. இந்த உண்மையையே பின்நவீனத்துவம் பற்றிய தனது நோக்கில் சிவத்தம்பியும் கூறுகிறார்.

2

சிவத்தம்பியின் நோக்கின்படி பின்நவீனத்துவம் ஐரோப்பாவில் பல்வேறு அரசியல் சமூக சூழலின் விளைவாக தோன்றியது. அது தோன்றுவதற்கான கோட்பாட்டு அரசியல் சமூக தத்துவ சூழல் அங்கு நிலவியது. “பின் அமைப்பியல்வாதத்தின் பின்புலத்தில்தான் பின்நவீனத்துவம் என்ற கோட்பாடு உருவானது” என சொல்கிறார். இதற்கு சசூரின் சொற்களும் அர்த்தமும் பற்றிய கருத்தியலிலிருந்தே சிவத்தம்பி ஊட்டம் பெறுகிறார். அப்போதைய ஐரோப்பிய அறிவுச் சூழலில் கலைகளின் மாறும் இயல்புகள் பற்றியும், பண்பாட்டின் மாறும் கோலங்கள் பற்றியும் பிரக்ஞைபூர்வமான சிந்திப்புகள் வெளிவரத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக, நவீனத்துவ செயல்திட்டத்தின் மீது அதிருப்திகொண்ட அறிவுஜீவிகள் ஆங்காங்கே இந்த செயல்திட்டத்தின் மீதான தமது எதிர்க் கருத்தியல்களை முன்வைத்தனர். பின்னர் அதுவே பின்நவீனத்துவமாக வடிவம் பெற்றது. இந்த சூழலில் அதாவது இருபதாம் நூற்றாண்டின் பிற்கூறில் உலகு ஒரு புதிய கட்டத்துக்கு வந்துவிட்டது என்பது அவரது முடிவாக இருந்தது. அதாவது “பின்நவீனத்துவம் என்பது இப்போது மறுதலிக்கப்பட முடியாத ஒரு சிந்தனைப் போக்காக முன்நின்றது” (நவீனத்துவம் தமிழ் பின்நவீனத்துவம், பக். 221) என்றார்.

உண்மையில் இந்த மாற்றமானது பின்நவீனத்தன்மை உலகுக்கு வந்துவிட்டது, அது பின்நவீனத்துவத்தை ஏற்படுத்திவிட்டது என்பதன் அறிவிப்பாக அமைந்தது. இந்த தளத்தில் பின்நவீனத்துவத்தை நோக்கும் சிவத்தம்பி பின்நவீனத்துவமானது இரண்டு மட்டங்களில் புலப்படுவதாக எடுத்துக் காட்டினார்.

  1. கலை, இலக்கியத்துறையில் ஏற்பட்ட பாணி மற்றும் எடுத்துரைப்பு மாற்றங்கள்.
  2. சிந்தனை மரபில் ஏற்பட்ட (உலகம் நோக்கப்படுவது பற்றிய) மாற்றம்.

இந்த இருமுடிவுகளையும் நோக்கி அவர் வருவதற்கு மார்க்ஸிய அறிஞரான டெரி ஈகிள்டனின் Illusions of post-modernism (பின்நவீனத்துவத்தின் மாயைகள்) எனும் நூல் அவருக்கொரு கருத்தியல் உசாத்துணையாக அமைந்தது.

இவ்விரு நிலைகளிலும் நிகழ்ந்த இந்த தோற்றப்பாடுகளையே அதாவது சமூக சிந்தனைத்துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பின்நவீனத்தன்மை (post-modrnity) என்றும் இந்தப் பின்நவீனத்தன்மை காரணமாக ஏற்பட்ட கலை, இலக்கியச் செல்நெறிகளை பின்நவீனத்துவம் என்றும் டெரி ஈகிள்டன் குறிக்கிறார். சிவத்தம்பியும் இதனையே தன்நூலில் எடுத்தாள்கிறார்.

பின்நவீனத்துவம் நவீனத்துவத்துக்கு மறுதலையாக உருவாகியது. கலை பற்றிய நவீனத்துவ நோக்குகளுக்கு மறுதலையான பார்வையையே பின்நவீனத்துவம் கொண்டுள்ளது. எனவே நவீனத்துவத்தை முதலில் விளங்குவதன் மூலமே பின்நவீனத்தை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம் என்பது அவரது வாதம். “முதலில் நவீனத்துவம் என்பது கலையில் எதனைக் குறித்து நின்றது என்பதை உணர்ந்துகொள்ளாமல், பின்நவீனத்துவக் கலையைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், பின்நவீனத்துவம் நவீனத்துவத்தின் கலை பற்றிய எடுகோள்களிலிருந்து விலகி, மாறுபட்டு நிற்பதாகும்”

(நவீனத்துவம் தமிழ் பின்நவீனத்துவம், கா.சிவத்தம்பி, பக். 222)

தமிழில் பின்நவீனத்துவத்தை தெளிவுபடுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் அ. மார்க்ஸிலிருந்து எம்.ஜி. சுரேஷ் வரை அல்லது மார்க்ஸிய நோக்கில் பின்நவீனத்துவத்துக்கு எதிரான பார்வைகளை முன்வைத்த கேசவனில் தொடங்கி யமுனா ராஜேந்திரன் வரையான தமிழ் மார்க்ஸிய அறிவுஜீவிகள் கூட இந்த முறையையே பின்பற்றியுள்ளனர்.

3

நவீனத்துவம் அறிமுகமாகிய காலத்தில் கலைத்துறையில் நவீனத்துவம் ஒரு புரட்சிகரமான மாற்றமாகக் கருதப்பட்டது. முன்னர் கலையாக்க நியமங்கள் எனக் கருதப்பட்டவற்றை நவீனத்துவம் மீறியது. இலக்கியத்திலும் இந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டன. இதன் காரணமாக கலை இலக்கியத்தில் நவீனத்துவம் தனிமனித அகநிலைத் தேடல்களுக்கும், தனிமனித நோக்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது என்கிறார் சிவத்தம்பி. இதனால் தனிப்பட்ட கலைஞர்களின் பாணிகள் (styles), அவற்றுக்குத் தளமாக அமையும் புலப்பதிவுகள் (perceptions) ஆகியன முக்கியமாகின. நவீனத்துவக்கலை வரலாற்றைச் சில தனிப்பட்ட கலைஞர்களின் வரலாறுகளாகக் கூட எடுத்துக் கூறிவிடலாம் என்ற பார்வை சிவத்தம்பியிடம் ஆழமாக இருந்தது. அப்படியான நவீனத்துவத்தை முழுமையாகப் பிரதிபலித்த படைப்பாளிகளாக மொனே (Monet), வான் கோ (Van Goh), பிக்காசோ என்பவர்களை உதாரணமாக நிறுத்தும் அதேவேளை நவீனத்துவம் இலக்கியத்தில் ஏற்படுத்திய புரட்சிகளாக கவிதையில் நிகழ்த்திய சந்த முறிவு, புதுக்கவிதைகளின் தொடக்கம், நாவலில் பாத்திரச் சித்தரிப்பு, கால வரன்முறையை நீக்குதல், நனவோடை எடுத்துரைப்பு முறை போன்றவற்றை சிவத்தம்பி எடுத்துக் காட்டுகிறார்.

இத்தகைய நவீனத்துவ நோக்குகளுக்கு மறுதலையான பார்வையை முன்வைத்துக்கொண்டு தோன்றிய பின்நவீனத்துவம் காத்திரமான எழுத்துகளுக்கும், வெகுசன வாசிப்பு மட்ட எழுத்துக்களுக்கும், அதாவது சனரஞ்சக எழுத்துக்கும் உள்ள இடைவெளியை இல்லாமல் ஆக்க முனைந்தது. இப்பண்பு பினநவீனத்துவக் கலை இலக்கியத்தின் முக்கிய பண்புகளுள் ஒன்றானது என்று சொல்கிறார் (பக் 226).

இதனால் ‘உயர்கலை’ என்று கருதப்பட்டனவற்றுக்கும் ‘தாழ்நிலை’ப் பண்பாட்டுமுறைமைகள் என்று கருதப்பட்டனவற்றுக்குமிடையே நிலவிய இடைவெளியை இல்லாமலாக்கியது“  (நவீனத்துவம் தமிழ் பின்நவீனத்துவம், பக் 229) என்று சிவத்தம்பி சொல்வது போன்று அது பின்நவீனத்துவத்தின் ஒரு பண்புக்கூறாக இருப்பது உண்மை. ஆனால் இந்தப் பண்பு தமிழ்ச் சூழலில் குறிப்பாக ஈழத்தமிழ்ச் சூழலில் தவறாகப் புரியப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். பின்நவீனத்துவம் தோன்றிய மேற்கத்தேய- ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்திலிருந்த சனரஞ்சக எழுத்துகள் குறித்துத்தான் அது அத்தகையதொரு நிலைப்பாட்டுக்கு வந்தது. அங்கு ஜனரஞ்சக எழுத்துகள் என்ற வகைப் படைப்புகள் தீவிர இலக்கியத் தரப்பால் புறக்கணிக்கப்பட்டு விளிம்புக்குத் தள்ளப்பட்டன. இந்தவகையில்தான் பி.ந. அதன் மீது கவனஞ்செலுத்தியது.

“இந்த நோக்கு முறைமை கலை பற்றி நிலவிய எடுகோள்களை மறுதலிப்பதாக இருந்தது. கலை என்பது உயர்ந்தது, அதற்கு ஒருசிறப்பான இடம் உண்டு என்ற எடுகோள் கைவிடப்பெற்று, வாழ்க்கையின் பன்முக ஓட்டங்களில் ‘கலையும் ஒன்று ஆகிற்று. கலைஞர் சமூகத்தைப் புறநிலைப்படுத்திப் பார்ப்பவர் அல்லர், அதற்கு உள்ளேயே வாழ்பவர், அந்தப் பண்பாட்டின் சகல வெளிப்பாடுகளிலும் அதன் ‘சனரஞ்சக அம்சங்களிலும் காலூன்றி நிற்பவர் என்றும், அந்த சனரஞ்சகப் பண்பாட்டைச் சித்திரிப்பவரே கலைஞர் என்றும் கொள்ளப்படத் தொடங்கிற்று” (நவீனத்துவம் தமிழ் பின்நவீனத்துவம், பக்.227) என்கிறார்.

இலக்கியத்தில் குறிப்பாக கதையமைப்பில் பின்நவீனத்துவ எடுத்துரைப்பு முறை ஒரு புதிய மாற்றமாக அறிமுகமாகியது. அதனை சிவத்தம்பி “புனைகதைகள் பத்திரிகைச் செய்தி எழுதப்படுவது போன்று எழுதப்படத் தொடங்கின. இவற்றினைப் புனைகதைசாரா நாவல்கள் (non-fiction novels) என்று குறிப்பிடுவதுண்டு. நோமன் மெய்லரின் Armies of the Night இதற்கான ஒரு நல்ல உதாரணம். இந்த எழுத்துமுறை தொடங்கப்பெற்ற பொழுது அமெரிக்க இலக்கியச் சஞ்சிகைகள் சில இதனைப் ‘புதிய பத்திரிகை எழுத்து’ என்றன” என இந்த சூழலை விபரிக்கிறார். ஆனால் ஒரு மிக முக்கிய உண்மையின் மீது சிவத்தம்பி கவனம் செலுத்தத் தவறுகிறார். அதாவது-

அங்கே சனரஞ்சக எழுத்து என்று கணிக்கப்பெற்றவை இங்கு எழுதப்படும் கவிதைகளையோ, கதைகளையோ போன்று மொழி அழகியலோ, உள்ளீடுகளோ, இரசனையோ, வித்தியாசங்களோ இல்லாத எழுத்துகளல்ல. விநோதம், மொழி, இலக்கிய வடிவம், ஆழம் சார்ந்து கவனிக்கத்தக்கதாகவும், அதிகம் பேரால் வாசிக்கப்படுவதாகவும் இருந்தது. காத்திரமான இலக்கியத்திலிருந்து அவை மிகச் சிறு அளவிலேயே விலகி நின்றன. ஒரு உதாரணத்துக்குச் சொல்வதானால் ஹருகி முரகாமியின் படைப்புகளைக்கூட தீவிர இலக்கியத்தை விட்டும் விலகிப்போன சனரஞ்சக எழுத்து என்று பார்க்கும் ஒரு பார்வையும் மேற்கில் உள்ளது. தமிழில் சுஜாதாவின் எழுத்துகள் மீதும் அந்தப் பார்வை உள்ளது. இத்தகைய சனரஞ்சக எழுத்துக்கும், தீவிர எழுத்துக்குமிடையிலான இடைவெளியையே பி.ந. இல்லாமலாக்கியது என்றே இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இதுதான் பின்நவீனத்துவம் அங்கீகரிக்கும் வெகுஜன எழுத்து. மாறாக, எந்த வாசிப்புமில்லாது இலக்கியம் படைக்கிறோம் என்ற பேரால் ஆழமற்று, புதுமையற்று, கலைப்பார்வைகளற்று, படைப்பாற்றல் இல்லாது, மொழி அழகியலின்றி, நமது தமிழ்ச் சூழலில் (குறிப்பாக ஈழத்தமிழ்ச் சூழலில்) எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் எழுத்துகளை அது குறிக்கவில்லை என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, இங்கு நாளுக்கு நாள் புற்றீசல்கள் போன்று கிளம்பிக்கொண்டிருக்கும் கவிதைகளல்ல வெகுஜன எழுத்துகள். அவற்றை வேண்டுமானால் அவற்றை எழுதுபவனின் பொழுது போக்கு இலக்கியம் என்று சொல்லாம். தமிழில் பாலகுமாரன், ராஜேஸ்குமார், சுஜாதா போன்றவர்களின் படைப்புகள் அளவுக்கா இங்கே எழுதப்படும் எழுத்துகள் உள்ளன? இவற்றின் தரத்தை அத்தகைய வெகுஜன எழுத்துகளோடு ஒப்பிடவே முடியாது. அதனால் அவற்றை வெகுஜன எழுத்துகள் என்று கூட நாம் சொல்ல முடியாது.

இங்கே தோன்றிக் கொண்டிருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்புகளை அதன் எந்தக் கூறை அடிப்படையாகக் கொண்டு முன்னிறுத்துவது? அதன் மொழியையா? அழகியலையா? எடுத்துரைப்பு முறையையா? உள்ளடக்கத்தையா? எதிலும் எந்தப் புதுமையும் இல்லாத சொற்குவியலாக அவை இருக்கும் போது நாம் எதை முன்னிறுத்துவது என்று தெரியவில்லை. உண்மையைச் சொல்வதென்றால் இதில் எதிலும் அவை தேறவில்லை. பின்நவீனத்தவம் மற்றமை என்ற நோக்கில் அங்கீகரிக்கும் வெகுசன இலக்கியப் பரப்பு என்பதற்குள் இந்த எழுத்துகளை எப்படி சேர்ப்பது என்று நான் கேட்க விரும்புகிறேன்.

பின்நவீனத்துவம் வெகுஜன எழுத்துக்கும் காத்திரமான எழுத்துக்குமிடையிலான இடைவெளியை இல்லாமலாக்க முனைந்தது என்பதை ஒரு தகவலாக சிவத்தம்பி சொல்லிச் செல்கிறாரேயொழிய இத்தகையதொரு விரிவான பார்வையை வெகுசன எழுத்து குறித்த எந்தவொரு விளக்கத்தையும் அவர் முன்வைப்பதில்லை. சிலவேளை அவரது காலத்தில் ஈழத்தில் இன்று உருவாகியிருக்கும் கவிஞர் பட்டாளம் போன்று உருவாகவில்லையோ யார் கண்டார்?

இது விடயத்தில் சிவத்தம்பியின் நோக்கு மிக மேலாட்டமானது என்றே தோன்றுகிறது. அவர் குறைந்தபட்சம் நமது தமிழ்ச் சூழல் மீதான கவனத்தையாவது இங்கு முன்வைத்திருக்க வேண்டும். வெகுஜன எழுத்துகளைப் பின்நவீனத்துவம் அங்கிகீரிக்கிறது என்பதற்காக அவை கவனம் பெறும் இலக்கியமாக ஆகிவிட்டது என்ற கருத்து நமக்குள் இல்லாவிட்டாலும்கூட இந்தப் பார்வை ஏற்படுத்தும் மயக்கத்தை சுட்டிக்காட்டி இருக்க வேண்டியது சிவத்தம்பியின் முக்கிய பொறுப்பாகும் என்றே நான் கருதுகிறேன்.

குறிப்பாக புனைவிலக்கியத்தில் எடுத்துரைப்பு முறைசார்ந்து பின்நவீனத்துவம் ஏற்படுத்திய மாற்றமானது அமைப்பியல், பின்அமைப்பியல் சிந்தனைகள் ஏற்படுத்திய மாற்றங்களின் தொடர்ச்சி என்றே காண்கிறார். இலக்கியத்தில் நிகழும் புறவய மாற்றங்களால் இந்த எடுத்துரைப்பு மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்ற பார்வை அவரிடமிருந்தது. “இலக்கியத்தின் ‘கூட்டமைப்பு’ பற்றிய கருத்து மாறியதன் பின்னர், ‘எடுத்துரைப்பு’ மாற்றம் வர அதிக காலம் செல்ல முடியாது. அத்துடன் பொதுப்படையான ‘உணர்முறை’ ‘புலப்பதிவுப் பாங்கு’  மாறியதன் பின்னர் எடுத்துரைப்பு முறை மாறாமலிருக்க முடியாது”.

தமிழ்ச் சூழலில் புனைவிலக்கியத்தில் இந்த எடுத்துரைப்பு முறையில் நிகழ்ந்த மாற்றம் பற்றி கவனம் செலுத்தும் சிவத்தம்பி தமிழில் இது சார்ந்து ஒருவருக்கொருவர் புலப்பதிவு (perception) வேறுபாடுகள் கொண்ட ஜெயமோகன், கோணங்கி, சாருநிவேதிதா ஆகிய மூவரையும் உதாரணப்படைப்பாளிகளாக முன்வைக்கிறார். இந்தப் புலத்தில் எழுதிய தமிழவன், விமலாதித்த மாமல்லன், எம்.டி.எம், ரமேஷ்-பிரேம், சுரேஷ் குமார இந்திரஜித் போன்றவர்களை ஏன் சிவத்தம்பி முன்வைக்காமல் போனார் என்பது இன்று யோசிக்கும் போது குழப்பமாக இருக்கிறது. ஆனால் இலங்கையில் இதற்கு எடுத்துக்காட்டாக அவர் முன்வைக்கும் படைப்பாளிகளைப் பார்த்தால் மிக அதிர்ச்சியாக இருக்கிறது. “இந்தப் பட்டியலில் ஈழத்து எழுத்தாளர்கள் உமாமகேசுவரனும் ஒருநிலையில் எஸ்.எல்.எம். ஹனீபாவும் முக்கியமானவர்கள்” (நவீனத்துவம் தமிழ் பின்நவீனத்துவம், பக்.231). இந்த மதிப்பீட்டை சிவத்தம்பியே இப்போது வாசித்தாலும் அவருக்கே சிரிப்பு முட்டும் என நினைக்கிறேன். உண்மையில் எடுத்துரைப்பு மாற்றம் என்பதற்கு உதாரணமாக ஈழத்தில் சிவத்தம்பி முன்னிறுத்தியவர்கள் என்ன மாற்றத்தை நிகழ்த்தினார்கள் என்று தெரியவில்லை. சும்மா போகிற போக்கில் உதிர்த்துவிட்டது போல்தான் இருக்கிறது.

4

கலை இலக்கியங்களில் பின்நவீனத்துவம் ஏற்படுத்திய மாற்றங்களுக்கான அடிப்படையாக ‘உலகம் பார்க்கப்படுகின்ற முறைமை’யில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே பிரதான காரணியாக சிவத்தம்பி கருதுகிறார். உலகம் இப்போது உண்மையில் எப்படி இருக்கிறது? உலகு குறித்த புரிதல் உண்மையில் நமக்கு எதன் வழி உருவாக்கப்படுகிறது என்பதைக் குறித்து புதிய சிந்தனைகளை முன்வைத்த மிக முக்கியமான பின்நவீன சிந்தனையாளரான பொத்ரிலியார்ட்டின் கருத்தியலையே இதற்கு சிவத்தம்பி எடுத்தாள்கிறார். பொத்ரிலியார்ட்டின் கருத்துப்படி “இன்றைய உலகு பல்வேறு படிமங்களால் நிறைந்து கிடக்கிறது. (தொலைக்காட்சி, சினிமா, சஞ்சிகைகள், விளம்பரங்கள், போஸ்டர்கள், ரி-ஷேர்ட்டுகள் எனப் பல). இவை ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றினை, எவரோ சிலரினைச் சித்திரித்துக் காட்டுவனவாக உள்ளன. இந்தக் காட்டுகைகள்/ சித்திரிப்புகள் நமது நிஜ இருப்பினுள் நிறைந்து பொலிந்து கிடக்கின்றன. சாதாரண மனிதர் என்றவரையில் இந்தக் காட்டுகைகள் மூலமாகவே, நாம் உண்மையிலேயே எமது பட்டறிவினால் அனுபவிக்காத பலவற்றை அறிந்துகொள்கிறோம். இவை எல்லாம் ஊடகத் தாக்கங்களே. அந்த ஊடகங்களுக்குள்ளும் தொலைக்காட்சி மிக மிக முக்கியமானது.

இந்த ஊடகத் தோற்றுவிப்புக்களினூடாக வரும் படிமங்கள் எல்லாம் அவை சுட்டும் “மூலங்களின்“ நிஜமான சித்திரிப்புகள் இல்லை. அவை எடுத்துக்காட்டப்படும் முறையில் நிஜத்தின் இயல்பான தன்மைத் திரிவுபடுத்துவதுடன் நம்மிடத்தில் சில மனநிலைகளை, உணர்ச்சிநிலைகளை ஏற்படுத்துகின்றன. இத்தகையதொரு நிலையில் உண்மைக்கும், செயற்கைக்குமுள்ள இடைவெளி இல்லாது போய்விடுகிறது. உண்மையில் அவை யதார்த்தம் குறித்து ஏற்பட வேண்டிய உண்மையான உணர்வைத் தாண்டிய அதாவது யதார்த்தத்துக்கு மேலான உணர்வை (hyper-reality) ஏற்படுத்தி விடுகின்றன.

“பொத்ரிலியார்ட்டின் கருத்துப்படி, இவை யாவும் உண்மையில், ஓரளவு இருப்பனவற்றைப் பெரிதுபடுத்தியும், அன்றாட நடைமுறையில் இல்லாதனவற்றை உள்ளனவாகக் காட்டியும் செய்யப்படும் ‘தோற்றுவிப்பு’களேயாகும்.“ என சிவத்தம்பி பொத்ரிலியார்ட்டின் கருத்தை இங்கு எடுத்தாள்கிறார்.

அதாவது மெய்யான யதார்த்த உலகைவிட, மிகை யதார்த்தங்கள் மூலம் ஊடகங்கள், பிம்பங்கள் வழியாக கட்டமைக்கப்படும் போலி உலகம்தான் இன்றைக்கு மனித இருப்புக்கான வாழ்விடமாக மாறி உள்ளது. வாழ்க்கை போலிமைகளால் நிரப்பப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைக்காரணம் நுகர்வுக் கலாசாரத்தையும், போலிகளையும் மெய்மைகளாக ஊடகங்கள் மூலம் மக்கள் உள்ளங்களில் பதித்து வைத்திருக்கும் ஏகாதிபத்திய அரசுகளே என்பது பொத்ரிலியார்ட்டின் நிலைப்பாடாகும்.

பொத்ரிலியார்ட்டின் ஆரம்ப சிந்தனைக் கட்டம் என்பது மார்க்ஸியத்தின் வழியிலானது என சிவத்தம்பி வலியுறுத்தியதற்கு இதுவே காரணமாகும். பின்னர் பொத்ரிலியார்ட்டின் சிந்தனைகள் மார்க்ஸியத் தளத்திலிருந்து விலகி தாராண்மைவாத முதலாளித்துவ சிந்தனைக்குள் ஆட்பட்டுப்போனதையும் குறிப்பிடுகிறார்.

பின்நவீனத்துவம் குறித்த தனது அறிமுகத்தில் சிவத்தம்பி லியோடார்ட்டின் சிந்தனை மீதும் ஒரு கவனத்தைச் செலுத்துவார். உலகைப் புரிந்துகொள்வதற்கு விஞ்ஞான அறிவின் பொருத்தப்பாடு குறித்து லியோடார்ட் எழுப்பிய சந்தேகங்களையும், விஞ்ஞான அறிவின் மீதான அவரது விமர்சனங்களையும் சிவத்தம்பி முன்வைக்கிறார். “விஞ்ஞான அறிவு என்பது பொதுவாக நினைப்பது போல், பக்கச்சார்பற்ற நடுநிலைநின்று வளர்த்தெடுக்கப்படுவது அன்று; மெய்யியலாளர்களுக்கும், வரலாற்றாய்வாளர்களுக்கும் கிட்ட மறுக்கும் உண்மை விஞ்ஞானிகளுக்கு கிட்டிவிடுகிறது என்பது தவறு என்கிறார்”

(நவீனத்துவம் தமிழ் பின்நவீனத்துவம், பக். 237) இதனால் நவீனத்துவத்தின் முக்கிய பண்பாக விளங்கிய ‘பேரெடுத்துரைப்புகள்’ (பெருங்கதையாடல்கள் என்பதைக் குறிக்க சிவத்தம்பி கையாளும் சொல்) நம்பகத்தன்மையைஇழந்துவிட்டன என்கிறார்.

இரண்டு சிந்தனையாளர்களின் கருத்தியலும் எப்படி மார்க்ஸிய சிந்தனையோடு முரண்படுகின்றன என்பதை வெளிப்படுத்துவதே சிவத்தம்பியின் உள்ளார்ந்த ஆர்வமாக வெளிப்படுகிறது. லியோடார்ட் வரலாற்று இயங்கியல், தொழிலாளர் விடுதலை, செல்வத்திரள்வு, வர்க்கமற்ற சமுதாயம் போன்ற பெருங்கதையாடல்கள் இனிச் சாத்தியமற்றவை எனச் சொல்வதை சுட்டிக்காட்டும் சிவத்தம்பி அவரது கருத்தியல் குறித்து தொடர்ந்தும் மார்க்ஸிய அடிப்படையிலான விமர்சனத்தை முன்வைத்துக்கொண்டு செல்கிறார்.

 

5

ஆக மொத்தத்தில் பார்க்கும் போது பின்நவீனத்துவம் குறித்த சிவத்தம்பியின் பார்வை என்பது கல்வித்துறைசார்ந்து மாணவர்களுக்கான அறிமுகம் என்ற எல்லைக்குள் மட்டுமே சுருங்கி நிற்கிறது. அதற்கப்பால் அவரது பார்வை விரிவதில்லை. கல்வித்துறைசார்ந்து பின்நவீனத்துவத்தை விளங்கிக் கொள்வதற்கான எளிய அறிமுகம் ஒன்று மட்டுமே சிவத்தம்பியிடமிருந்து வாசகனுக்குக் கிடைக்கலாம். மார்க்ஸிய அறிவுத்தளத்தில் நின்று பின்நவீனத்துவத்தை விமர்சித்து மறுத்துரைக்கும் போக்கோ அல்லது நவீனத்துவ நோக்கில் நின்று பின்நவீனத்துவத்தின் போலித்தனங்களைத் தோலுரிக்கும் விரிந்த விமர்சன நோக்கோ சிவத்தம்பியிடமிருந்து வெளிப்படவில்லை என்றே சொல்வேன்.

***

ஜிஃப்ரி ஹாசன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *