1.வாழ்க்கை

சில சமயம் வாழ்க்கை
ஒரு அற்புதத்தை நிகழ்த்துவதற்காக
காத்துக்கிடக்கும்,
அதற்கு கடந்த காலத்தின் சிறையிருப்பை
விட்டுக்கொடுக்க வேண்டும்
சிறைகளில் சௌகரியப்பட்டுக் கிடக்கும்
மனிதர்கள் ஒரு ரகம்
கொஞ்சமாய் மூச்சு முட்டும்போதே
சுவர்களை உடைத்து
வெளியே ஓடும் மனிதர்கள் ஒரு ரகம்!
நதியை போலே
மேடு பள்ளமும்
கோயில் தீர்த்தமும் சாக்கடை கழிவும்
எது வந்து சேர்ந்தாலும் பிரிந்தாலும்
இயல்பிலிருப்பார்கள்
போகும்பாதையிலே எண்ணிக்கை பார்க்காமல்
வேர்கள் நனைப்பதும்
உச்சி குளிர உயிர்களை வாழ்விப்பதுமாய்!
அன்பென்பதென்ன
கோடையில் பறவைக்கென வைக்கும்
ஒரு வாய் தண்ணீரும்
குளிர்காலத்தில்
வீடற்ற ஒருவனின் மடியிலே
விட்டுவந்த ஊதா கம்பளியும்
இன்னும்
தூரம் எதுவெனக் கேட்காமல்
கூட வருவதும் தானே.

2.கவிதை உள்ளம்

ஒரு கவிதை உள்ளம்
நீங்கள் யூகிப்பதை விட மிக விசித்திரமானது!
சில சமயம்
பூ உதிர்வதற்கும்
பட்டாம்பூச்சியின் ரெக்கை முறிந்ததற்கும்
உடைந்து அழும்,
நேசத்தின் பெயரால் வழங்கப்படும் ஒரு கோப்பை
விஷத்தை சிரித்துக்கொண்டே விழுங்கும்!

3. ஒப்பனை

எதைக்கொடுத்தாலும்
ஒரு கொத்து நேசத்துடன்
வாசலில் நிற்பவருக்கு
ஏன் இத்தனை வேகமாய்
கதவை சாத்துகிறீர்கள்?

ஒப்பனைகளே வேண்டாம்
என்பவரிடம் காட்டும்
முகமூடியை தெரிவு செய்ய
ஏன் இத்தனை நேரத்தை
விரயம் செய்கிறீர்கள்?

4. நேசத்தின் பெயரால்

நேசத்தின் பெயரால்
நீ கொலைகள் நிகழ்த்துகிறாய்,
மரித்திருப்பதற்கும் உயிர்த்திருப்பதற்கும்
நடுவில் நடித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

5.நீ

அறிவெல்லாம் கடந்த தேவ சமாதானம்,
தேவதைகளுக்கு உன்னை புரியும்
அல்லது
உன்னை புரியும் நாளில்
சாமான்யருக்கு சிறகுகள் முளைக்கும்!

6.நினைப்பிருக்குமா

உனக்கு அவளை நினைப்பிருக்குமா
சித்தார்த்த
எங்கோ ஒரு சுவரிடையே
வேர்ப்புக இடமின்றி
மரணத்தின் வலியை எண்ணியபடி
மூச்சுத்திணறிக் கொண்டிருந்தாய்
அப்போது அவள் தாயானாள்
வீட்டின் வாயிலில் இடம் தந்தாள்
நிழல் தந்தாள்
உனக்காக ஒரு
வனம் செய்யும் தவத்திலிருக்கிறாள்
உன் வேர்கள் ஆழப் படர்ந்த பின்னே
உன் கிளைகள் இன்னும் விரிந்த பின்னே
அவளை நினைப்பிருக்குமா
சித்தார்த்த?

7.வேடம்

அவசர அவசரமாக
முகமூடிகளை
மாற்றிக்கொண்டு நீங்கள்
அரங்கேறும் கலவரத்தில்
என் கண்மை கரைவதைப் பற்றி
கவலைப்படுகிறீர்கள்,
உங்கள் வேடங்கள்
கச்சிதமாய் பொருந்தியுள்ளன
கவலையை விடுங்கள் !

8. வாழ்க்கை

சமுத்திரத்திடம் போய் ஒரு கோப்பை நீர் கேட்பதும்
ஒரு போத்தல் தண்ணீரில் கடல் தாகம் தீர்க்க கேட்பதும்
இதே வாழ்க்கை தான் !

9. பழைய வீடு

புதிய வீட்டிற்கு மாறும்போது
அம்மா என்னுடைய
சிலவற்றை
பழைய வீட்டிலேயே
விட்டு விட்டு வந்து விட்டாள்.
சனிக்கிழமை பகலில்
ஜோடியாய் வரும் வண்ணத்துப்பூச்சிகள்,
நள்ளிரவின் ஏகாந்தத்தில்
உள்ளிழுத்து
வான்பார்த்து புகை விடுகையில்
கண்ணடிக்கும் அந்த
பிரகாசமான நட்சத்திரம்.

இப்போதெல்லாம்
தனிமையைப் பற்றி
அதிகம் எழுதுகிறேன்.

10.மீட்பருக்கெல்லாம் நேரமில்லை

சிறுமந்தையே
உன்னை நீயே மீட்டுக்கொள்
தூரம் ஓட கால்களையும்
குத்திப் பிறாண்ட
நகங்களையும் தயார் படுத்திக்கொள்
ஓநாய்கள் ஒருநாளும்
ஓய்ந்திருப்பதில்லை

***

-நிரோஜினி ரொபேர்ட்

 

Please follow and like us:

1 thought on “செனோரீட்டா கவிதைகள்

  1. அருமையான மொழி நடை.பிரகாசிக்கும் படிமங்கள். அன்பாலானது உலகம்.

Leave a Reply

Your email address will not be published.