1.பனியில் எழுதுதல்
இன்று பின்மாலை
உறைபனி, மென்பனி, பிஞ்சுப்பனி,
தூவிப்பனி, உலரும் பனி
எல்லாவறையும் கடந்து
ஈரக் காட்டுக்குள் வருகிறேன்.
அந்த காட்டின் பின்னால்
முற்றாய் உறைந்திருக்கும்
பாதிக் கடல்
கரையில் எஞ்சி இருந்த மரத்தின்
மூன்று கொப்புகளிலும்
மூன்று பறவைகள்.
துடிக்கும் வால்.
நிராசையுடன் பறக்கும்
எஞ்சியிருந்த இலைகள்.
முகில் எங்கிருந்து
உருவாகின்றதென
அப்போது கண்டேன்.
அவை மேலெழுந்து திசையறியாது
பரந்த போது
பிரியாவிடை சொல்லத் தோன்றவில்லை.
(2021)
2. கறுப்பாய் இருத்தல்.
வெஞ்சினத்தின் நிறம்
கறுப்பாக இருந்தபெரும் பொழுதில்
தோழர் கே.
1806 மரங்களை சாலையோரம்
நாட்டினார்
தெருவும் நடைபாதையும்
பெருஞ்சோலையாக மாறின
அந்தத் தெருவில்
அவருடைய பேரன்
உடற் பயிற்சிக்காக ஓடுகிறான்
சாலை மலர் அவன்
அவனைத்தான் கொன்றார்கள்
சிதறிய குருதித் துளிகளில் ஒன்று
காற்றில் பறந்தது
கனவில் இருந்தது
இன்னும் தரையில்
இறங்கவில்லை.
(2022)
3.இரவு அவர்களோடு போய் விட்டது
இரவு அவர்களோடு போய்விட்டது
கூடவே
எனது மதுக்குடுவையும்
இப்போது உப்புக் காற்றும்
ஓடையில் நழுவிச் செல்லும்
பரல்கற்களில்
அவள் எழுதிய
மோகத்தின் பாடலும்.
(2022)
4.
நீல இரவில் ஒரு நாள்
அவன் குரல் கேட்டேன்
ஆடிய பாதமும்
ஏற்றிய தீபமும்
அவன் உயிரில் ஒளிரும் தமிழும்
மானுடம் சுடரும் இசையும்
ஆர்த்தெழும் பெருங்காடுகளையும்
கனவின் எல்லையற்ற கோலங்களையும்
எம் மந்திர மொழியில்
எழுப்புகின்றன.
“துன்பம் நேர்கையில்
யாழ்
இன்பம் துய்க்கையில்
வாழ்”
கடலைக் காற்றாக மாற்றும்
உன் குரலுக்கு
என் கவிதை தரும்
நிறமும் அழகும்
முடிவற்றது.
( தண்டபாணி தேசிகருக்கு)
( நவம்பர், 2021)
5. பட்டினப் பாலை
காற்று
கடல்
மனிதர்
கூக்குரல் எழுப்பும் ஆவி
ஒன்றும் இல்லை
யாருடைய பட்டினத்தின் மீது
இருக்கிறது இந்தக் கல்லறை ?
ஒரு துளி மது
எப்போதும் கூட இருக்கும்
கஞ்சாப் புகை.
தெருவில் அலையும்
உன் புன்னகை
அதன் மேல் ஓயாமல்
உதிரும் இலைகள்.
கூட நான் வருகிறேன்.
காலம் எனது கொடும் பாடல்
( 2022)
***
-சேரன்
அருமை அருமை