அன்று இரவானதும் ஒரு திருடனாய் மாறியிருந்தேன். கடைத்
தெருவோரங்களில், மேம்பாலங்களை ஒட்டிய பகுதிகளில், பஸ்
தரிப்பிடங்களில், மரத்தடிகளில் என எங்கெல்லாமோ தேடி அலைந்தேன்.
மூளையும் கண்களும் பல நாள் திருடனின் திறன்களை வளர்த்துக்
கொண்டிருந்தன. அன்று எனக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஒருவர்; தூங்கிக் கொண்டிருக்கும் ஒரே ஒருவர். அவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதே
அவரது முகத்தைப் பார்த்து சில வரிகளை ஹம்மிங்க் செய்ய வேண்டும்.
பின்பு எனது மோட்டார் வாகனத்தில் சொருகி வைத்திருக்கும் புத்தகத்தைத்
திறந்து பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.
சொருகி வைத்திருக்கும் அந்தப் புத்தகம் எனது பழைய புத்தகப்
பெட்டிக்குள்தான் இருந்திருக்க வேண்டும். அன்று ஜீஸு தான் அதனைக்கொண்டு வந்து தந்தான். ஜீஸு எனது மதினியின் மகன். அவனுக்கு மூன்று
வயதாகிறது. சனிக்கிழமை ஆனால் எங்களது வீட்டிற்கு அவனை அழைத்து
வர வேண்டும். எங்களது வீடு எங்களுக்கே தெரியாமல் ஒழித்து
வைத்திருக்கும் பொருட்களைக் கூட தேடிக் கொண்டு வந்து அவனது
மூப்பிற்குப் பரப்பி வைத்து விளையாடுவான். எவ்வளவுதான் விளையாடிக்
களைத்தாலும் அவனுக்கு இலகுவில் தூக்கம் வருவதில்லை. அவனைத்
தூங்க வைக்க மடியில் போட்டு அவனது தலையைக் கோதியவாறு கதை
சொல்ல வேண்டும். என் மனதில் சேகரித்து வைத்திருந்த கதைகளும்
அவனுக்கென வாங்கி வந்த புத்தகங்கள் கொண்டிருந்த கதைகளும்
அவனுக்கு நன்கு பரீட்சயமாகியிருந்தன. அன்றவனுக்குத் தேவைப்பட்டது
ஒரு புதிய கதை. புதிய தூக்கம். அதற்காகவே அப்புத்தகத்தைத் தேடிக்
கொண்டுவந்து தந்தான்.
அதன் அட்டைப் படம் காவி நிறத்தில் வெறுமையாக இருந்தது. திறந்தால்,
அது ஒரு கதைப் புத்தகம் தான். 25 பக்கங்களே கொண்ட புத்தகம்.
மொத்தமும் ஒரு நாய்க் குட்டியைப் பற்றிய கதைதான். கதையின் தலைப்பு ‘நாயாதல்’ என்றிருந்தது. ஒரு சிறிய நாய்க் குட்டி தன்னை நாயாக மாற்றிக்கொள்ள அது மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியதுதான் கதை.

கதையை வாசித்து முடிக்கும் முன்பே ஜீஸு மடியில் தூங்கி இருந்தான்.
அக்கதையின் முடிவில் நான்கு வரிக் கவிதை இருந்தது. அதனை வாசிக்கும்
பொழுதே எனக்குப் பழக்கப்பட்ட பாடலொன்றின் மெட்டில் வந்து விழுந்தது.
பாடலின் மெட்டில் அவ்வரிகளை ஹம்மிங்க் செய்து பார்த்தேன். எனது
ஹம்மிங்கிற்கு, சற்றுத் தள்ளி இருந்தவாறு லப்டப்பில் வேலை செய்து கொண்டிருந்த நஸ்ஹத் திரும்பிப் பார்த்தாள். நஸ்ஹத் என் மனைவி.
என்னைப் பார்த்து அவளது விழியசைவால் என்ன வென்று கேட்டாள்.
பதிலுக்கு மீண்டும் ஒரு முறை ஹம்மிங்க் செய்து காட்டினேன்.
“நானொன்றும் ஜீஸு கிடையாது இந்த வித்தையினை அவனிடம் தான்
வைத்துக் கொள்ள வேண்டும்” என கண்களில் மிரட்டினாள்.
தூங்கும் ஜீஸுவின் தலையைக் கோதிய படி ஒரு முறை அவனைப் பார்த்து
ஹம்மிங்க் செய்தேன். அவன் நெற்றியை முத்தமிட்டேன். மடியிலிருந்து
தூக்கி வந்து மெத்தையில் தூங்கப் போட்டேன். கூடவே நஸ்ஹத்தும் வந்து
அவனருகில் தூங்கினாள்.
நானும் அவன் தலைமாட்டில் உக்கார்ந்து கொண்டு எதையோ யோசிக்க
ஆரம்பித்திருந்தேன். 30 நிமிடங்கள் கடந்திருக்கும். ஜீஸு விழித்துக்
கொண்டான். மெத்தையிலிருந்து கீழே பாய்ந்தான். தரையில் தவள
ஆரம்பித்தான். என்னடா இவன் புதுசா புதினம் காட்டுகிறான் என ஜீஸு
மீது எனது கவனங்கள் குவிந்தன. முன்னறை மேசையின் கீழ் சென்று
அங்கிருந்த சின்னக் காரொன்றை வாயால் கவ்வியபடி வெளியே வந்தான்.
வந்தவன் அதனை தன் வாயினால் மேலே எறிந்து வாயினாலேயே
மறுபடியும் கவ்விக் கொண்டான். இது அவன் கொண்டு வந்து தந்த கதையில்
வந்த நாயின் கவ்வுதல் தான்.
‘ஜீஸு குட்டி.. எண்ட dogy என்னமா பன்னுது..’ அவனிடம் வார்த்தையில்
கொஞ்சினேன்.
அருகே தவண்டு வந்து என் கண்ணத்தில் ஒரு ‘அbbah’ தந்தான். வாயை
ஆவென்று வைத்து அவன் தரும் முத்ததிற்குப் பெயர் தான் அbbah.
அம்முத்தம் அbbah எனும் சப்தத்தையும் கொண்டிருக்கும்.
மறுகண்ணத்திலும் அbbah தந்தவன் அக்கண்ணத்தை நாக்கால் நக்கியும்
விட்டான். அவனது எச்சிலை கையால் துடைக்கும் பொழுது சமையலறைக்குள் நுளைந்தான். அங்கிருந்த பாத்திரங்களை வாயால் கவ்வி

இழுத்துப் போட்டு ஊளையிட்டான். அவன் அக்கதையில் வந்த நாய்க்
குட்டியைப் போல் தான் செய்து கொண்டிருப்பது தெளிவானது.
இந்த நாய்க்குட்டி வேறு என்னவெல்லம் செய்யும் என்பதைப் பார்த்துக்
கொள்ள தலையணைக்கு அடியில் வைத்திருந்த அப்புத்தகத்தை எடுத்துப்
புரட்டினால், உள்ளே புதிய தலைப்பு ‘The little archeologist’. கதை
முழுதும் ஜீஸுவைப் பற்றியதாக இருந்தது. எந்தப் பக்கத்திலும்
நாய்குட்டியின் சிறு கதைத் துண்டும் இல்லை. அந்தப் புத்தகம் விபரீதமானது
என்பது லேசாக பொறியில் தட்டியது. அக்கதையின் கடைசிப் பக்கத்தில்
புதிய கவிதை வரிகள் இருந்தன. அதுவும் வாசிக்கும் பொழுதே
பாடலொன்றின் மெட்டில் வந்து விழுந்தன.
அந்த நொடியே எனக்குள் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கும்
பரிசோதனையாளர் துள்ளி எழுந்தார். தூங்கிக் கொண்டிருக்கும் நஸ்ஹத்தின்
முன் சென்றார். அவ்வரிகளைப் பாடிக் காட்டினார். பின்பு புத்தகத்தைப்
புரட்டிப் பார்த்தார். உள்ளே கதைத் தலைப்பாக அதே ‘The little
archeologist’ தான் இருந்தது. பரிசோதனையாளர் எனது மூளையை
கொஞ்சம் கசக்கினார். பின் நஸ்ஹத்தைப் பார்த்து அவ்வரிகளை பாடலின்
மெட்டில் ஹம்மிங்க் செய்தார். புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தால், உள்ளே
‘விழி அசைவில்’ என தலைப்பிருந்தது. முழுவதும் என் மனைவியைப் பற்றிய
கதைதான். அவள் கண்கள் எப்பொழுதும் பார்ப்பதற்கானது மட்டுமல்ல
என்பது அவளைத் தெரிந்தவர்கள் அனைவரும் அறிவர்.
அவளை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஜீஸு வந்தான்.
வாயும் முட்டுக்காலும் வலிப்பதாக முறையிட்டுக் கொண்டு. எனக்குள்
இருந்த பரிசோதனையாளர் அவனைப் பார்த்து ‘பௌ பௌ’ என்றார்.
‘இப்ப ஏன் dogy மாரி கத்துரீங்க..? என்னத் தூக்குங்க’ என இரு கையையும்
உயர்த்தினான்.
அவனைப் பிடித்திருந்த நாய் போய்விட்டிருந்தது.
அவனைத் தூக்கி வைத்துக் கொண்டே வழமை போன்று நஸ்ஹத்தை
பெயரைச் சொல்லி எழுப்பிப் பார்த்தேன். அவள் எழுந்த பாடில்லை.

உள்ளிருந்த பரிசோதனையாளர் முன்வந்து ‘நஸ்ஹத் buddy get up’ என்றார்.
அரற்றிக் கொண்டு மெல்ல எழுந்தாள். கையிலிருந்த ஜீஸு என் காதை
இழுத்து அவன் பக்கத்திற்கு என் முகத்தைத் திருப்பி என் கண்களை
ஊடுருவிப் பார்த்தான். காரணம், ‘ஜீஸு buddy get up’ என்பது அவனை
எழுப்ப பயன்படுத்தும் வார்த்தைகள் தான்.
தூங்கி எழுந்ததும் சூடாக ஏதாவது குடிக்கும் பழக்கம் கொண்டவள் நஸ்ஹத்.
சமையலறைக்குச் சென்று சிறிது நேரத்திலேயே எனக்கென்றிருக்கும் டீ
கப்புடன் வந்தாள். அதனை என்னிடம் தந்தாள். அப்படியே எனக்கும்
ஜீஸுவுக்கும் ‘அbbah’ தந்து சென்றாள். மறுபடியும் ஜீஸு என்னைப்
பார்த்தான். அbbah நஸ்ஹத்தின் முத்தமல்ல என்பது அவனுக்கும் தெரியும்.
டீ கப்பில் எட்டிப் பார்த்தால், உள்ளே நெஸ்கஃபீ. போன வாரம் வாங்கி
வந்திருந்த நெஸ்கஃபீ தூள் பக்கட்டினைக் காணவில்லை என நேற்று வரை
சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு, அது இப்ப மட்டும் எப்படிக்
கிடைத்திருக்கும் என யோசிக்கும் பொழுதே என்னுள்ளிருந்த
பரிசோதனையாளர் கையிலிருந்த ஜீஸுவைப் பார்த்து ‘சரிதான்’ என
தலையசைத்துக் கொண்டார்.
நெஸ்கஃபியை குடித்து விட்டு முன்னறைக்குச் சென்றால், அறை முழுவதும்
பழைய கோப்புகளும் புத்தகங்களும் விளையாட்டுப் பொருட்களும் பரப்பி
இருந்தன. அவைகளின் நடுவே லப்டப்பை திறந்து வைத்துக் கொண்டு
இருந்தாள் நஸ்ஹத். முன்னறையின் கோலம் என்னை சற்று
எரிச்சலூட்டியது. ஆனால் தனக்கொரு பாட்னர் கிடைத்த மகிழ்ச்சியில் ஜீஸு
அவளுடன் இணைந்து கொண்டான். அன்று இரவாகுவதற்குள்
அவர்களிருவரும் செய்த ரகளைகளே போதும் என்றானது. அவளிற்குள்
இருந்த ஜீஸுவை எப்படியாவது விடுவித்தாக வேண்டும்.
அதற்காகவே அப்போதிருந்த கதையின் இறுதிப் பகுதி கவிதை வரிகளை
மனனமிட்டுக்கொண்டு அன்றிரவு வீதிவீதியாக அலைந்து
கொண்டிருந்தேன்… தூங்கும் ஒருவரைத் தேடி.
அப்படியாகத் தேடிக் கொண்டே நான் வேலைபார்க்கும் அலுவலகம் வரை
வந்தேன். அங்கே வாசலில் காவல் பார்த்துக் கொண்டிருந்த வொட்ஸ் மேன்
‘சுமித் சில்வா’ தூக்கத்தில் இருந்தான். வாகனத்திலிருந்து இறங்கி

அவனருகில் மெல்லச் சென்றேன். தூக்கம் கலையாதிருந்தான். அவனைப்
பார்த்து ஹம்மிங்க் செய்துவிட்டு நைசாக அங்கிருந்து வாகனத்திற்கு
வந்தேன். புத்தகத்தைப் புரட்டினேன். உள்ளே ‘சைநீஸ் food’ என
தலைப்பிருந்தது. வந்த வேலை முடிந்தது. வீடு திரும்பினேன்; ஒருவிதக்
குற்றவுணர்வின் நெருக்குதலில் நசிந்த படி.
வீட்டினுள்ளே நுளையும் போது, அறையில் சிதறிக் கிடந்த பொருட்களை
எல்லாம் நஸ்ஹத் ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள். ‘அவசரமாக வந்து
விடுறன் எனச் சொல்லி விட்டு இவ்வளவு லேட்டா எங்க போயிட்டு
வாராய்?’ என அவளின் விழிகளால் மிரட்டினாள். ஏதோ சொல்லி
சமாளித்துக் கொண்டேன். அவளைத் தொற்றியிருந்த ஜீஸு அவளை விட்டு
அகன்றிருந்தமை உறுதியானது.
அன்றிரவு தூங்கச் செல்லும் முன் அந்த ‘சைநீஸ் food’ கதையை வாசித்தேன்.
சுமித் சில்வா ஒரு சைனீஸ் food பிரியன். விதவிதமான சைநீஸ் food
தின்னவேண்டும் என அவாக் கொண்டவன். கடலோரத்திலுள்ள உயரமான
சைநீஸ் ஹோட்டலின் மொட்டமாடியில் அமர்ந்து விதவிதமாய் சைநீஸ் food
சாப்பிடவேண்டும் என்பதும் அவனைச் சுற்றியுள்ள மற்றவர்களையும்
சைநீஸ் food சாப்பிட வைக்க வேண்டும் என்பதும் அவன் கனவாக
இருப்பதை தெரிந்து கொண்டேன்.
திங்கட்கிழமை எனது அலுவலகத்தினுள் நுழையும் போது சுமித் கண்களால்
குட்மோர்நிங்க் வைத்தான். வெளியாகும் பொழுது என்னிடம் வந்து
கண்களால் சிகரெட் ஒன்று கேட்டான். அலுவலக நாட்களில்
அலுவலகத்திலிருந்து இறுதியாக வெளியேறுவது நான் தான். வெளியேறும்
பொழுது சுமித்துடன் சேர்ந்து ஒரு சிகரட் புகைப்பது வழக்கம். அன்று
புகைத்து முடிக்கும் வரை கண்களாலேயே பேசினான்.
மறுநாள் மதியம் அலுவகத்தின் சாப்பாட்டு மேசையில் என் சக
அலுவலகர்கள் கதைத்துக் கொண்ட பிரதான விசயமே சுமித் கண்களால்
பேச ஆரம்பித்திருப்பது பற்றித்தான். அப்படியாகக் கதைத்துக் கொள்ளும்
பொழுது இடையிடையே எனது நண்பன் ரமேஸ் என்னையும்
புன்னகைத்தவாறு பார்த்துக் கொண்டான். அவனுக்கு எனது
மனைவியையும் நன்கு தெரியும்.

சில நாட்களிலேயே சுமித் கண்களால் பேசுவதை நிறுத்தியிருந்தான். அது
என்று நிகழ்ந்தது என்பது எனக்குத் தெரியும். அது சுதந்திர தினத்திற்கு
அடுத்த நாள். அன்றைய நாட்களில் எல்லாம் அவனின் மாற்றத்தை
பொருட்படுத்த முடியாத அளவு வேலைப் பளுக்கள் என் மேல்
கவிழ்ந்திருந்தன.
சில வருடங்கள் உருண்டோடின. பின்பொரு நாள் அலுவலகத்து சாப்பாட்டு
மேசையில் கொழும்பு கடற்கரையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் Port
city project குறித்த விவாதங்கள் கிளம்பின. அந்த ப்ரொஜக்ட் முழுவதையும்
சைநா கையகப்படுத்தி மேற்கொண்டுவருவது அனைவரும் அறிந்ததுதான்.
அதற்கு தற்போதய பிரதமர் காட்டும் அக்கறைதான் விவாதத்தில்
சுவார்ஸ்யமாக மாறி இருந்தன. அவர் ஜனாதிபதியாக இருந்த சமயம்
அவரது சொந்த மாவட்டத்தில் பல அபிவிருத்தி ப்ரொஜக்ட்டிற்காக
சைநாவிடம் கடன் பெற்றதும், அந்த வேலைத் திட்டங்களுக்காக சைநாக்
காரர்கள் தாராளமாக கொண்டுவரப்பட்டதனையும் ஒருவர் உரையாடலில்
நினைவு படுத்தினார். பின்பு அந்த வேலைத் திட்டங்களுக்காக பெறப்பட்ட
கடன் தொகையை கொடுக்க முடியாமல், அந்த ப்ரொஜக்ட்களில் ஒன்றான
துறைமுகம் சைநாவிற்கே 99 வருட லீஸிற்கு கொடுக்கப்பட்டது எனக்குப்
புதிய தகவலாகவே இருந்தது.
ரமேஸ் சொன்னான் இனி நாம் சைநீஸ் பழக வேண்டியதுதான். சைநீஸ்
கடைகள் முளைக்கத் துவங்கியிருக்கின்றன. இனி தாராளமாக ‘சைநீஸ் food’
கிடைக்கும்.
அந்த வார்த்தையைக் கேட்டதும் எனக்குள் பதுங்கியிருந்த அந்த ‘சைநீஸ்
food’ கதை மெல்ல மேற்கிழம்பத் துவங்கியது.
பிரதமருக்கும் ‘சைநீஸ் food’ தான் பிடிக்குமாம். சைனாக்காரனுகள் சாப்பிட
பயன்படுத்தும் அந்த ரெண்டு குச்சியினையும் எப்படிப் பிடிப்பதென
சைநாவிற்குச் சென்றே பிரதமர் பயிற்சி எடுக்குறார் என இன்னொருவர்
சொல்லிச் சிரித்தார்.
இன்னொருவர் ‘மேதகு ஸ்ரீலங்கன் குங்க்ஃபு பெண்டாா’ என்றார்.

‘குங்க்ஃபு பெண்டா இல்லை, மேதகு இரு குச்சிப் பெண்டா’ என்றார்
மற்றொருவர்.
அவர்களின் நக்கல் நையாண்டிகளுடன் என்னால் ஒன்றித்துப் போக
முடியாமல் இருந்தது. உள்ளிருந்து மேற்கிழம்பி வந்த அந்த ‘சைநீஸ் food’
கதை என் நினைவை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. சுமித் கண்களால்
பேசுவதை நிறுத்திக் கொண்ட நாளினை நினைவு படுத்திக் கொண்டு
அன்றைய நாளில் நிகழ்ந்தவற்றை மீட்டிப் பார்க்க முயற்சித்தேன்.
நான் இதுவரை தற்போதைய பிரதமரை நேரில் பார்த்தது கிடையாது.
அப்படி இருக்க நான் சந்தேகப்படுவது போல் நிகழ்ந்திருக்க வாய்ப்பே
இல்லை. இருந்தும் மனம் அதற்கு சமாதானமாவதாய் இல்லை. சுமித்
கண்களால் பேசுவதை நிறுத்திக் கொண்ட அன்றைய நாளின் நிகழ்வுகளை
ஒவ்வொன்றாக வரிசைப்படுத்த ஆரம்பித்தது மனம். அதன் ஏழாவது
வரிசையிலேயே ஒரு சம்பவம் சிக்கிக் கொண்டது. அன்று அலுவலகத்திற்கு
வந்ததும் எனக்குத் தொற்றிக் கொண்டிருந்த ஹம்மிங்க் பழக்கத்துடன்
முதலில் மேசையிலிருந்த செய்தித் தாளைத்தான் புரட்டிக் கொண்டிருந்தேன்.
அன்றைய செய்தித்தாளில் இருந்த பிரதான செய்தி: சுதந்திர தின நிகழ்வன்று
மேடையிலேயே ஜனாதிபதி சற்று நேரம் உறங்கிவிட்ட சம்பவம் தான். அவர்
உறங்கும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.
இப்பொழுது எனக்கிருக்கும் சந்தேகம் ஒரளவுக்கு தெளிவாக
ஆரம்பித்திருந்தாலும், நான் ஹம்மிங்க் செய்தது ஒரு பாடலையா அல்லது
அந்த சைநீஸ் food கதையின் இறுதியிலிருந்திருக்கும் கவிதை வரிகளையா
என்பது உறுதியாய் தீர்மானித்துக் கொள்ள முடியவில்லை. அது எப்படி
இருந்தாலும் புகைப்படத்தில் தூங்கும் ஒருவரைப் பார்த்து ஹம்மிங்க்
செய்தால் கூட அப்படி நடக்குமா என்பது என்னுள் வலுத்த அடுத்த சந்தேகம்.
அன்று அலுவலகத்திலிருந்து அரைநாள் விடுப்பெடுத்துக் கொண்டு
வீட்டிற்கு விரைந்தேன். வீடுமுழுவதும் துளாவித் தேடியும் அப்புத்தகம்
கிடைக்கவில்லை. நான்கு மணியளவில் வேலையை முடித்துக் கொண்டு
நஸ்ஹத் வீடு வந்தாள். அந்தப் புத்தகத்தைப் பற்றி அவளிடம் விசாரித்தேன்.
அப்படி சைனிஸ் food கதை கொண்ட புத்தகம் எதையும் அவள்
பார்க்கவில்லை என்றாள். ஆனால் சிலநாட்களுக்கு முன்பாக பழைய

புத்தகங்கள் வாங்க வந்தவனிடம் எங்களிடமிருந்த ஒரு பெட்டி பழைய
புத்தகங்களை விற்றுவிட்டதாகச் சொன்னாள்.
அவள் அதைச் சொன்னதும் உடனே நினைவு வந்தது. நேராகப் படுக்கை
அறைக்குச் சென்று மெத்தையைத் தூக்கி அதன் பின்பகுதியிலிருந்த
கிளிசலினூடக கைவைத்துத் தேடிப் பார்த்தேன். அங்கே புத்தகமில்லை.
நஸ்ஹத்தை அழைத்துக் கேட்டேன். அதற்குள் புத்தகத்தை நீதானா பதுக்கி
வைத்தது என்பதாய்ப் பார்த்தாள்.
‘இங்க நான் தான் வெச்ச அந்தப் புத்தகம் எங்க?’
‘அந்த அரசியல் வாதியப் பத்தின கதைப்புத்தகம் தானே.. அதையும்
சேர்த்துத்தான் வித்தேன் ‘
அதனைக் கேட்டதும் எனக்கிருந்த சந்தேகங்கள் எல்லாம் தெளிவானது.
இதனை எல்லாம் உங்களிடம் ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால்,
எனக்கு சைநீஸ் food அறவே ஒத்துவராது. அந்த குச்சிகளைப் பிடித்து
சாப்பிடவும் தெரியாது. அது மட்டுமல்ல, பிரதமருக்குள் புகுந்திருக்கும் ‘சுமித்
சில்வா’ எல்லோரையும் சைநிஸ் food சாப்பிடவைக்க எடுக்கும் முயற்ச்சி
சரியாகப்படவில்லை. நீங்கள் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்கு
செல்பவராக இருப்பின் அக்கடைகளில் கொஞ்சம் தேடிப் பாருங்கள்.
அல்லது பேப்பரில் வடை, சமோசா போன்றவைகளை வாங்கித் தின்பவராக
இருப்பின் கொஞ்சம் அவதானமாக அப்பேப்பரை வாசித்துப் பாருங்கள். சில
கவிதை வரிகள் இருக்கக் கூடும். அதனை வாசிக்கும் பொழுதே அவ்வரிகள்
உங்களுக்குப் பரீட்சயமான ஒரு பாடலின் மெட்டில் வந்து விழும். அது
உங்களில் ஒருவருக்கு கிடைக்குமாயின், அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
உங்களின் ஹம்மிங்க் கொண்டு பல மாறுதல்கள் செய்யலாம்.

***

 

 

 

 

-இமாம் அத்னான்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *