என்னைச் சூழவும் நிரம்பி
எல்லா வன்மங்களோடும்
வெள்ளமென பரவுகின்ற விஷத்தில்
ஒரு சொட்டை அருந்திப்பார்க்கிறேன்
எனக்குள்ளும் ஊரத் தொடங்குகிறது
அவர்களிடமிருக்கும் வன்மம்.வன்மத்தை நீக்கி
இன்னொரு சொட்டை அருந்துகிறேன்.
என்னைக் காப்பாற்ற நினைத்து
வாசிப்பதை நிறுத்தவேண்டாம்.
ஆனால் இதை வாசிக்கும்போது
என்மீது பரிவேதும் ஏற்பட்டால்
சற்று நீக்கிவிட்டு தொடரவே
உங்களை இடைமறித்தேன்.ஊட்டப்படுவது விஷமென தெளிவுண்டு
தடுக்கவோ மறுக்கவோ இயலாத
மொத்த விஷமும்
அருந்தப்படவேண்டும் என்பது தீர்ப்பாகக்கூட இருக்கலாம்.
சொட்டு சொட்டாக எனக்குள் இறங்கும்
விஷம் மெல்ல பழகிப்போகிறது.
இப்போது விஷம் ருசிக்க தொடங்கிவிட்டேன்.
எனக்குள்ளும் நிரம்பி
நதியென ஓடிக்கொண்டிருக்கின்றன
வகை வகையான விஷங்கள்.
கற்பனைசெய்து பாருங்கள்
என்னைச்சுற்றிலும் கொடிய மிருகங்கள்
கூடிக் கலைகின்றன
ஒவ்வொரு கூடலிலும்
தெறித்த வார்த்தைகளை புட்டியில் அடைத்து வெளியே வீசுவதற்குள்
புளுவென நெளிகின்றன விஷங்கள்.
அவர்களின் வெண்சுவரில்
தொங்கவிடப்பட்டிருந்த ஓவியம் ஒன்றோடு முரண்பட்டுக்கொண்டிருந்தேன்,
அதன் ஓவியன் ஓடிவந்தான்.
கோபத்தோடு வந்தவனின்
இடது கையில் தட்டொன்றும்,
தட்டின் மேலே சொட்டு சொட்டாய்
சில வர்ணங்களும் இருந்தன.
மறு கையில் ஐந்து வெவ்வேறு தூரிகைகள் இருந்தன.
இந்த பாலத்தின் மேல் குந்தியபடி
மீன் விற்பவளின் நிழல் இடப்பக்கமாகவும்
கூடையின் நிழல் வலப்பக்கமாகவும்
கீறப்பட்டதன் சாத்தியம் குறித்து வாதாடினேன்.
எதிர்பார்காத நொடிகளுக்குள்
கடலுக்கு மேலே கால்நீட்டியபடி
சூரியனை வரைந்தான் ஓவியன்
இப்போது எதிர்த்திசையில்
மீன்காறியின் நிழலோடு
இன்னுமொரு நிழலும் தெரிந்தது.
அந்நிழலில் நிர்வாணமாய் நிண்டுகொண்டிருந்தாள்
பத்து வயதுச் சிறுமி.
சபிக்கப்பட்ட நட்சத்திரங்கள்
நட்சத்திரங்களை மெல்ல கொல்லத்தொடங்கினான்
ஒன்றிரண்டு தப்பித்துக்கொண்டன
ஆனால், தப்பித்துக்கொண்டவை
சில மணிநேரத்துக்குக்கூட தாக்குப்பிடிக்கவில்லை என்பது கதை.
அதுவரை உறங்கிக்கொண்டிருந்த
சில பூக்கள் அஞ்சலிக்காக புறப்பட்டன.
வெளிச்சம் மெல்ல பரவியதும்
நிலவு எழுந்து நடக்க தொடங்கியது
நிலவைப் பிடித்தபடி பாதி உயிரோடு
உறங்கிக்கொண்டிருந்தன
சில வால்நட்சத்திரங்கள்.
இனி கொல்லப்பட்ட நட்சத்திரங்கள்
எல்லாமாக உறையொன்றில்
அடைத்து புதைக்கப்படலாம்
அல்லது எரிக்கப்படலாம்
பிணங்கள் பற்றிய குறிப்பில்
இன்னொரு இரவிலும்
நட்சத்திரங்கள் கொல்லப்படும்
ஆனால் நிலவு மட்டும்
தப்பித்தலோடே தற்கொலை செய்யும்
என எழுதி இருந்தது.