ஒரு நாயும்
ஒரு பக்கிரியும்
குடமுருட்டி ஆற்றில்
அப்போது நீரில்லை
கொதிக்கும்
மணல் மேல்
ஓடிக்கொண்டிருந்தது கானல்நீர்
அருந்த
அது அவர்களுக்கு போதுமானதாக இருந்தது
மூழ்க
அவர்களுக்கு அது போதுமானதாகப் பாய்ந்தது
கானல் நீருக்கும்
ஒரு நாயும் பக்கிரியும் போதுமானதாக

-ராணிதிலக்

தொண்ணூறுகளின் இறுதியாண்டுகளில் எழுதத்தொடங்கி நாகதிசை, காகத்தின் சொற்கள், என்பது விதி இலைதான், நான் ஆத்மாநாம் பேசுகிறேன் என தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் ராணிதிலக்கின் தொகுப்புகள் வெளியாகிக்கொண்டிருந்தது. இடையில் “சப்தரேகை” என்றொரு கவிதைகள் குறித்த கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியிருந்தது. தனிப்பட்ட முறையில் ராணிதிலக்கின் அனைத்து கவிதை தொகுப்புகளின் மீதும், குறிப்பாக அவரது மொழிச்சோதனை முயற்சியிலும், வடிவச்சோதனையிலும் எனக்கு ஆர்வமிருந்தது. தொடர்ந்து கவிதை வரிகளுக்கிடையிலும், வார்த்தைகளுக்கிடையிலும் அவர் செய்யும் சில இடைவெளிகள் புதுமையாகவும் அதே சமயத்தில் வித்தியாசமானதாகவும் எனக்குத் தோன்றியது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில கவிதை நிகழ்வுகளின் போது ராணிதிலக்கின் கவிதைகள் மீது கடும் விவாதங்களும் நடந்திருக்கிறது. எனக்குத்தெரிந்து இத்தகைய விவாதங்களை ஒரு அளவிற்குமேல் பொருட்படுத்தாமல் தன் படைப்பாக்கங்களில் முனைப்புகாட்டுபவர் அவர். கராதே, ப்ளக் ப்ளக் ப்ளக், 27கவிதைகள் என சமீபத்தில் வெளியான அவரது தொகுப்புகளில், கவிதைகளின் மீது அவருக்கிருந்த சோதனை முயற்சிகள் குறைந்து மொழி மிகச்சாதாரண வடிவத்தை நோக்கி நகர்ந்திருப்பதாக கருத முடிகிறது.

மிகச்சாதாரண வடிவமாக நகர்ந்துள்ளது என்பது அவரது, முக்கியமான கூறுகளான வடிவநேர்த்தி, மரபு, மொழியின் செவ்வியல் தன்மை மற்றும் மொழித்திருகலுடன் கூடிய வடிவம் சார்ந்த முயற்சிகள் ஆகியவற்றுடன் மிக சமீபத்தித்திய தொகுப்புகளில் எளிமையும் சேர்ந்து புத்தம் புதியதான ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கருதமுடியும். இந்த மாற்றம் ராணிதிலக்கின் கவிதைகளின் மீதிருந்த முன்முடிவுகளில் இருந்து என் போன்றோரை விடுபட வைத்துள்ளது. அத்துடன் மட்டுமில்லாமல் இந்த எளிமை நோக்கிய அவரது நகர்வு புதிய திறவுகளைத் தருகிற கவிதைகளாகவும் இவை மாறி நிற்கிறது.

பதிப்பக வசதி வாய்ப்பு பெருகியுள்ள இந்த நேரத்தில், கராதே மற்றும் 27 கவிதைகள் தொகுப்புகளை மீட்சி இதழ்களின் வடிவத்தில் கொண்டுவந்திருப்பதும், அந்த இரண்டு தொகுப்புகளும்,”ழ” இதழ் மற்றும் “மீட்சி” இதழின் படைப்பாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் சமர்ப்பணம் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. நூல் வெளியீடுகளின் மேல் மதிப்பிழந்த மனோபாவத்தில் இவற்றில் ஒன்றை (கராதே) அடவி இதழுடனும் மற்றொரு தொகுப்பை (27 கவிதைகள்) கவேரி சிற்றிதழுடனும் வெளியிட்டிருக்கிறார். பகட்டின் மீதும், ஆராவாரங்கள் மீதும் கவனத்தை குவிக்காமல் தன்னை தான் நம்பும் கவிதை இயக்கத்துடன் ஒப்புக்கொடுத்தவர் ராணிதிலக்.

அநேகமாக தனது அனைத்து தொகுப்புகளின் வழியாகவும் வெய்யிலையும் பாறைகளையும் பல்வேறு சித்திரங்களாக குறித்து வந்துள்ளார். இவற்றின் மீது தீராத மயக்கம் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் அவை அவரது வாழ்நிலத்துடன் ஒன்றியிருப்பது என நினைக்கிறேன். தமிழகத்தில் வேலூர் வெய்யில் பிரசித்தி பெற்றது, அந்த நகரத்திலிருந்து வந்த ராணிதிலக் வெய்யிலின் வழியாகவே தன்னை அடையாளம் காண்பதும், அதன் மூலமாகவே தன்னைக் கடக்க முயல்வதுமாக இவரது கவிதைகள் உள்ளன. குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் ”ப்ளக் ப்ளக் ப்ளக்” தொகுப்பில் உள்ள “ஒரு உருவகம்”, ராஜ கிரீடம், திருவிளக்கீடு, உத்ராயண வெய்யில், பின்னே, ஊர்சுற்றி, திரு ஓடு, இரண்டு பூர்வீகங்கள், வேனல் மலர்கள், வேனர் வரிகள், வேனல் விரல்கள், வேனல் துளிகள் , வேனல்புத்தகம், தீ புத்தகம், கண் பறித்தல், வெம்மை மேல் நடக்கிறேன் என சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு பல்வேறு வகையான வகையில் வெய்யிலின் படிமங்கள் திகட்டாத அளவில் நிறைந்துள்ளன.

ராணிதிலக்கின் கவிதைகளில் தென்படும் பாறைகள், வளர்ந்த ஒரு தாவரத்தைப்போல மகிழ்ச்சி தரக்கூடியதாக, நிறைவைத் தரக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம், ஒரு நிச்சயமற்ற, மகிழ்ச்சியற்ற, சோர்வான மனநிலைகளை உருவாக்கித் தருகிற வெய்யிலை, அதில் தகிக்கும் பாறைகளை தன் இளமைக்காலம் முதல் பார்த்து வளர்ந்த கவிஞருக்கு அதன் மீது எந்த காழ்ப்பும் எரிச்சலும் இல்லாமல் அதனுடனே பயணிப்பதும் அவை பல்வேறு படிமங்களாக, காட்சிகளாக, உணர்ச்சிகளாக, பொழுதுகளாக ஒரு புராதனக் குகையிலிருந்து வெளியேறி நாலா திசையிலும் பறக்க முயலும் சின்னஞ்சிறு குயிலைப்போன்ற புதிய பொருளுள்ள, புதிய மனநிலைகளைத் தருகின்ற கவிதைகளாகவே வந்துகொண்டேயிருக்கிறது.

வெம்மை மேல் நடக்கிறேன்

மத்யான வேளையில்
தகிக்கும் தார்ச்சாலையில் நடக்கிறேன்
நிழல்தர ஒரு மரம் போதும்
தாகம் தீர ஒரு மிடறு நீர்போதும்
ஆனாலும் நடப்பேன்
மதிய வேளையில்
வெம்மை மலர்கள் மேல்.
பிறகு யார்தான்
நடப்பது?

எனும்போது பழக்கப்பட்ட வாழ்க்கையாகிவிட்ட வெய்யில், இடையிடையேயான ஆசுவாசங்களுக்கிடையில் நேசிக்கவும் கற்றுக்கொடுத்துவிட்டது. குறிப்பாக ப்ளக் ப்ளக் ப்ளக் தொகுப்பில் உள்ள வேனல் வரிசைக் கவிதைகள் மற்றும் வெய்யில் கவிதைகள் அனைத்தும் மிக முக்கியமானதாக கவிதைகள். தற்போது எழுத வந்துள்ள இளம் கவிஞர்கள் தங்கள் வாசிப்பில் தவறவிடக்கூடாத கவிதைகள் இவை.

வாழ்வை அது தரும் அனுபவங்களோடு ஏற்பதும் அதிலிருந்து இந்த உலகத்தை பார்ப்பதும் அதன் வழியாக இவ்வுலகின் மூலப்பொருட்களை நேசிப்பதும் என தொடர்ச்சியான செயல்பாடுகளை கவிஞன் தன் கவித்துவ உத்வேகத்தில் பெறுகிறான் அல்லது தொடர்ச்சியான சிருஷ்டி மனநிலையில் இந்த இடத்திற்கு வந்தடைகிறான். இப்போது அடுத்தடுத்த பக்கங்களில் உள்ள இரண்டு கவிதைகள் ;

கடலங்குடி சாலை

கடலங்குடி சாலை
மிகப் பரந்து பிரிந்து அகன்றது.
எந்திரங்கள் வேகமாகச்
சென்று திரும்பும்
இச்சாலையில் ஓரத்தில்
தூங்கு மூஞ்சி மரம்
ஒன்று வயோதிகத்தில் பட்டுக்கிடந்தது
நேற்றுதான்
சாலையோடு சாலையாக
வெட்டி அறத்துக்கொண்டு சென்றனர்.
இன்று அப்படி இல்லை
அது
இருந்த இடத்தில் நின்றேன்.
அங்கே அதன் நிழல்
அதே குளிர்ச்சி.

அடுத்த கவிதை ”அணையா விளக்கு”

இரவு நீண்ட சாலையில் இரண்டு புறங்களிலும்
மின்விளக்குகள் பல்வரிசை போல ஒரே சீராக எரிந்து கொண்டிருந்தன.அதில் ஒன்று எரியவில்லை.அவன் அதனருகில் வெகுநேரம் நின்றுகொண்டே இருக்கிறான்.

வெவ்வேறு விதிவிலக்கான மனநிலைகளை இரண்டு கவிதைகளிலும் தளமாகியிருக்கிறது. இரண்டு கவிதைகளிலும் இருண்மை மையப்படுத்தப்பட்டு, அதன் மூலம் ஒரு நம்பிக்கையை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. கவிஞனின் தனி மனித சிந்தனை என்பது வாழ்வையும், சமூகத்தையும் புரிதலுக்கு உட்படுத்துவதுடன் அதன் மீது கலைத்தன்மையும், பரிவையும் கொண்டிருக்க வேண்டும் அத்தகைய தன்மையுடன் இக்கவிதைகள் உள்ளன.

ஒன்றில் மரம்-மற்றொன்றில் மரம்போன்றது. ஒன்றில் இரவு மற்றொன்றின்றில் பகல்,ஒன்றில் குளிர்ச்சியும் நம்பிக்கையும் மற்றொன்றல் தனிமையும் அமைதியும். மேலிரண்டு கவிதைகளிலும் செயல்படும் கவித்துவம் வாழ்வைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு எளிய சூத்திரமாக வாசகன் முன் நிற்கிறது.

கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஒரு மனச்சோர்வான காலகட்டத்தில் கராதே தொகுப்பு மற்றும் 27 கவிதைகளை வாசிக்கும்படி நேர்ந்தது எனக்கு, ஏற்கனவே படித்திருந்தாலும் அன்றைய மனநிலைக்கு மிகுந்த அமைதியைத் தரக்கூடியதாக இரண்டு சிறு தொகுப்புகளும் இருந்தன. பொதுவாக ஒவ்வொரு மனநிலைகளுக்கும் ஒவ்வொரு தொகுப்பை வாசிக்கும் பழக்கம் உண்டு என்றாலும் நகுலன், ஆத்மாநாம், தேவதேவன், தேவதச்சன், அபி உள்ளிட்ட பல கவிஞர்களை எந்நேர வாசிப்பிலும் மன்தெளிவிற்கு கொண்டு செல்லும் வாய்ப்புள்ளவர்கள்.
இந்த முறை வாசிப்பில் ராணிதிலக் தன்னுடைய கவிதைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டதாக என்னால் உணரமுடிந்தது.”ஒரு குதிரை ஒரு குதிரை ஒரு குதிரை”உள்ளிட்ட சில கவிதைகளை விலக்காகக் கொள்ளவேண்டும்.

நான்
சின்னஞ்சிறு குற்றங்கள் செய்வேன்
சின்னஞ்
சிறு
மலர்களாகப் பிறப்பேன் என்கிறார் ஒரு கவிதையில்.

கராதே மற்றும் 27 கவிதைகள் ஆகிய தொகுப்புகளில் உள்ள கவிதைகள் தெளிவான ஒருவித தியான மனநிலையுடன் எழுதப்பட்ட கவிதைகளாகவே உள்ளது. இதுகாறும் தனது சோதனைக்களமாக அவர் வசமிருந்த இருந்த கவிதைகள் தற்போது தனது அலங்காரத்தை களைந்து வாழ்வின் பரிபூரணத்தின் மீது கவியத்தொடங்கியுள்ளது. இங்கு அதற்கான அனுபவமும் தெளிவும் வழக்கமான நடைகளை விட்டு வேறுபாதைக்கு திருப்பியிருக்கிறது. அவர் கவிதைகளின் மீது தாக்கம்கொண்டிருக்கும் மரபு, இந்த வெளிப்பாட்டு முறைக்கு கூடுதல் செவ்வியல் தன்மையைச் சேர்த்திருக்கிறது. முதல் வாசிப்பில் இக்கவிதைகள் மிகச் சாதாரணமாக நிலவியல் காட்சிகளாக தோன்றக்கூடும் ஆனால் தமிழ்க் கவிதைப்பரப்பில் அவரது நெடிய முயற்சிகளுக்குப் பின் தற்போது அவர் வந்து சேர்ந்துள்ள இடம் ஆசுவாசமளிப்பதும், நிறைவு தரக்கூடியதாகவும் உள்ளது.

மலை எப்போதும் இருப்பதில்லை, இருக்கிறது

என் சிறிய குடிலுக்குப் பின்
மலை எப்போதும் இருப்பதில்லை
நான் எப்போதெல்லாம் பார்க்கிறேனோ
அப்போதெல்லாம் அங்கே மலை அமைதியாக இருக்கிறது
அப்போதெல்லாம் நான் அமைதியாக இல்லை.

இதைத்தான் முன்பு குறிப்பிட்டது போல் விதிவிலக்கான மனநிலை என்று கூற வேண்டும். இருக்கிற அமைதியின்மை மலையைப்போன்று எப்போதும் இருப்பதில்லை, ஆனால் மலையைப்போன்ற நிம்மதியிழப்பு நாம் பார்க்கும்போதெல்லாம் அப்படியாகவே இருப்பதில்லை.

27 கவிதைகள் தொகுப்பில் உள்ள பட்டங்கள் என்ற கவிதை 25 சிறிய அடுக்குகளை கொண்டு நீள்கிறது. மிகச் சிறிய தொகுப்பின் மிகிச்சிறிய கவிதைகளில் இருந்து பெரும் மனவெளியைத் திறக்கின்ற கவிதைகள் இந்த ”பட்டங்கள்” என்ற கவிதை. ஒரு வெய்யிலின் வழி தொடங்கும் இக்கவிதை சிறுவர்கள் விளையாட்டு, தனிமை, நிராதரவு, முயற்சி, ஏகாந்தம், நம்பிக்கை, வண்ணங்கள் என தொடர்ச்சியான பல்வேறு விதமான உணர்ச்சி பாவங்களை, படிமங்களை, மனவெழுச்சிகளை எழுப்பிச் செல்கிறது. இக்கவிதை சொல்லப்பட்ட முறையில் ஒரே ஒருநாளில் மொத்த வாழ்வின் அடக்கத்தையும் அதன் மீது கவிஞர் நிகழ்த்தும் காலமும் வாழ்வும் ஒரு தன்மையான சரடைப்போல வானில் பறக்கச்சொல்கிறது.

பெரும்பாலான ராணிதிலக்கின் கவிதைகளில் மொழி ஒரு கட்டுக்குள் இருக்கும். இது அவரது தொடக்ககால கவிதைகளில் ஒரு உத்தியாக வெளிப்பட்டு பிற்காலத்தில் அது அவரிடமிருந்து விலக்க முடியாத அம்சமாகவே நின்றுவிட்டதாக நினைக்கத் தோன்றுகிறது.பழகிய வார்த்தைகளையே தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது கவிதை தன் அழகியல் தன்மையிலிருந்து விடுபட்டு தனித்துவமிழந்து விடும் அபாயம் உள்ளது. மேற்குறிப்பிட்ட கவிதைகளில் இதற்கு நேர்மாறான விளைவுகளைக் காணலாம். உதாரணமாக;

நான் தனியன்
நான் ஒரு பட்டம்
எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள்
வானில்
ஒரு தன்னந்தனியாக ஒரு பட்டம் பறக்கிறது
தன்னந்தனியன்களாக பல பட்டங்கள் பறக்கின்றன
இந்த வானில்
நீ
தனியன் இல்லை
நீங்கள் தனியன்கள் இல்லை
எனப்
பறவைகள்,மேகங்கள்
ஒன்று சேர்ந்து
கூடப்
பறக்கின்றன
00 00

நான்
ஒரு
வால் அறுந்த பட்டம்.

000

தனிமை, துயரம், மகிழ்ச்சி, பிரிவு, கண்ணீர், காமம், அனுபவம், படிப்பு, தொழில் என்று பட்டங்களுக்கு ஏதும் இல்லை. அதனால்தான், அவற்றால் வானில் எகாந்தமாக பறக்க முடிகிறது.

இக்கவிதை ஒரு நண்கபலில் தொடங்கி அந்தியில் முடிவதாக இருக்கும். ஏறக்குறைய 24 சிறிய சிறிய கவிதைகள் நிறைந்த “பட்டங்கள் ” கவிதை உதயமும் அஸ்தமனமுமாக உள்ள வாழ்வை விவரிப்பதாக இருக்கும்.

தான் விரும்பும் அல்லது தன் எண்ணவோட்டங்களை மட்டுமே வாழ்க்கையாக்கும் வாழ்வு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நம்முடைய திட்டமிடல்களை இந்த வாழ்வு கலைத்துப்போடும் விதமும் அதனை கலைஞன் எதிர்கொள்ளும் விதமும் கலைத்தன்மை மிகுந்த படைப்புகளாக வெளிப்படுகின்றன. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுத வந்த ஒரு நவீன கவி தன் கண்முன்னே இந்த வாழ்க்கையின் அபரிதமான மாற்றங்களையும், அதன் பரிமாணங்களையும் படைப்பின் வழியாக எதிர்கொள்ள வேண்டியதாகி உள்ளது.

அது படைப்பின் மொழியிலும், வெளியீட்டுத் தன்மைகளிலும் தன்னுடைய தொடக்கத்தை கைவிட்டு தற்போதைய இடத்திற்கு வந்து சேர்ந்தாகவேண்டிய அளவிற்கு புத்தம்புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. மேலே குறிப்பிட்டது போல இருபத்தைந்தாண்டுகால கவிதை இயக்கத்தில் ராணிதிலக்கின் கவிதைகள் நீர் வடிந்துகொண்டிருக்கும், கோடையை எதிர்கொண்டிருக்கும் ஏரியைப் போன்று, வளம் மிக்க பாசிகளும், துளிர்க்கும் செடிகொடிகளுமாக காணக்கிடைக்கிறது. பெரும்பாலான கவிதைகள் நிராகரிப்பும், கசப்பும், தனிமையும் கொண்ட பலம் வாய்ந்த மனிதனின் மனக்குரலாக உள்ளது.

ராணிதிலக்கின் மொத்தக் கவிதைகளின் மேலும் படிந்திருக்கும் மரபான, ஒரு பழைய ஒற்றைக்குரலின் தன்மையும், பழைய மனோபாவத்தின் வெளிப்பாட்டு முறையும் அத்துடன் புத்தம் புதியதான பார்வையும் இணைந்தே வெளிப்பட்டிருக்கிறது. இவற்றில் அவர் தன் முன்னோடிகளாக கருதும் சிறுபத்திரிக்கை கவிஞர்களின் பாதிப்புகள் நிறைந்தும் காணப்படுகின்றன. இத்தன்மைகளை மீறியும், ராணிதிலக் தன் கவிதைகளின் சோதனை முயற்சிகளின் வழியாகவும் ஒரு தெளிந்த நிலத்தின் பால் வந்து சேர்ந்திருக்கிறார். இந்த நிதானம் மிக்க ஒரு மொழிக்கு அவர் வந்துள்ளதை ”ப்ளக் ப்ளக் ப்ளக்”, கராதே, 27 கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும் போது தெரிகிறது. சலிப்பில்லாமல் திரும்பத் திரும்ப வாசிக்கக்கோரும் கவிதைகளாக அவை உள்ளன. அவ்வாறான மறுவாசிப்பிலும் சோர்வைத் தராத கவிதைகளாகவும் நிற்கின்றன. குருவிடமிருந்து விலகி நடந்த ஒரு சீடன் தன்னளவில் அடைந்த பெரும்பாதையைப்போல, அடைந்த ஞானத்தை போன்ற தெளிவான கவிதைகள் இவை.

***

-கண்டராதித்தன்

 

 

 

 

 

 

 

 

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *