அன்புடையானின் மேல் மாடியிலே சிம்மாசனம் இருந்தது. ஆசனத்தின் முதுகுப் பகுதியிலே
தீப்பிளம்புப் பூதாகரம் என்ற வாளின் படம் பொறிக்கப்பட்டும் இரு கைகள் வைக்கும்
தாங்கிகளின் முன்புறம் lammergeier என்றழைக்கப்படும் பிணந்தின்னி வல்லூறின் தலை
செதுக்கப்பட்டும் மூன்று தலைமுறைகளாக சிம்மாசனம் இவ்விடத்தில் இருக்கிறது.
எனவே சிம்மாசனத்தை வைத்திருக்கும் இவனுக்கே வீரத்துடன் போரிடக்கூடிய தீப்பிளம்புப்
பூதாகரம் என்ற வாளும் சொந்தமானது. வாளை நிலவறையிலே அவன் ஒளித்து
வைத்துள்ளான்.
சிம்மாசனத்தை வர்ணிப்பதற்கு நிறையவே கதைகள் இருக்கின்றன என்றாலும்
வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்ட சிறப்பியல்பொன்றைச் சிம்மாசனம் குறித்துச் சொல்ல
முடியும். அது என்னவென்றால் இந்தச் சிம்மாசனம் மீது அமர்ந்த மாத்திரத்திலேயே அது
உங்களுக்குள் நீங்கள் ராஜா என்ற அதி உன்னதமான கற்பனைகளைப் பிறப்பித்து விடும்.
அவ்வுன்னத உணர்வைத் தனக்குள் அனுபவிப்பதற்காகவே அன்புடையான் அந்தச்
சிம்மாசனத்தின் மீது அமர்ந்து ராஜாவாகி கற்பனையில் மிதப்பான்.
பாட்டனாரிடமிருந்து பிதுரார்ஜிதமாக அன்புடையானுக்கு வந்து சேர்ந்த மிகவும் பழையதான்
அந்த மாடி வீடு வெளியிலிருந்து பார்ப்போருக்கு தூர்ந்து தோற்றமளித்தாலும் மேல் மாடியில்
வீற்றிருக்கும் சிம்மாசனம் அற்புதமானது என்ற சமாச்சாரம் யாருக்கும் தெரியாது.
சிம்மாசனத்தின் மீது அமர்ந்திருக்கும் கர்வம் பிடித்த அன்புடையானின் உள்ளக்
கிடக்கையையும் யாரும் அறியமாட்டார்கள்.
அவன் உள்ளக் கிடக்கையில் எது இருந்ததென்றால் கற்பனையான ஓர் இளவரசியின் சித்திரம்.
நீண்ட கருநிறமான பளிச்சென மின்னும் கூந்தலைக் கொண்ட அந்த இளவரசியின்
முக்கியமான இலட்சணம் என்னவென்றால் அவளுக்கு தெற்றுப்பல் இருக்கும்.
‘ஆமாம் தெற்றுப்பல் இருக்கும். அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று
அவளின் அழகை வர்ணிக்கும் போது பாட்டனார் அவனுக்குக் கட்டளையிட்டிருந்தார். மேலும்
கூறினார் ‘அவள் தான் சிம்மாசனத்துக்குரித்தான உன்னுடைய இளவரசி’ எனவே அவன்
நீண்டகாலமாக தெற்றுப்பல் அழகியைத் தேடி வருகிறான்.
தெற்றுப்பல் அழகியைக் கண்டு பிடித்த போது அவளிடம் இளவரசிக்குரிய எந்த விதமான
அங்க இலட்சணங்களும் இருக்கவில்லை. வெகுளித்தனமிக்க மிகவும் சாதாரண நடத்தை
கொண்ட இளம் பெண்ணாக இருந்த அவள் திராட்சைத் தோட்டமொன்றில் திராட்சைக்
குலைகளைப் பறித்துக் கொண்டிருந்தாள். இளவரசிக்குரிய நிறங்களான ஊதாவோ கரு
நீலமோ அவள் அணிந்திருந்த ஆடைகளில் இல்லை. இருந்தவை வெறுமனே மஞ்சள், இளம்
பச்சை, வெளிர் நீல நிறங்கள் மாத்திமே.எப்படி அவளிடம் என் காதலைச் சொல்லுவது? நான் உள் தெற்றுப்பல்லை விரும்புகிறேன்
என்று சொல்ல முடியுமா?
மென்மையாகவும், நளினமாகவும், நாசூக்காகவும் அன்புடையான் ஒரு போதும்
உரையாடுவதில்லை. அப்படியான வாழ்வியல் நுட்பங்களை தந்தையோ பாட்டனோ
அவனுக்குக் கற்றுத் தரவுமில்லை.
அவர்கள் எப்போதும் தீப்பிளம்புப் பூதாகரம் என்ற போர்வாளைக் கொண்டு மற்றவர்களுடன்
போர் புரிவதைப் பற்றியும் மேல் மாடியில் பொருத்தப்பட்டிருந்த சிம்மாசனத்தில் அமர்ந்து
அரசனாக இருப்பதைப் பற்றியும் வாய் ஓயாமல் சிலாகித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அலாக்காக அவளைத் தூக்கிக் கொண்டு வந்து சிம்மாசனத்திற்கு அருகில் அவளை அமரச்
செய்து நீங்கள் தான் என் மணமகள் என்று அன்புடையான் சொன்னான். அவள் மறுப்புடன்
திமிறத் திமிற அன்புடையான் அவளை முத்தமிட்டான். இது சிம்மானத்தில் அமர்ந்ததும்
அவனுக்குள் உண்டான வெறும் கற்பனையே.
நிஜத்தில் தெற்றுப்பல் அழகி அவனுடைய காதலை முற்றாக நிராகரித்தாள்.
“நீங்கள் ஏன் என்னுடைய காதலை ஏற்க மறுக்கறீர்கள்?’ என்று அன்புடையான் கேட்டான்.
‘நீங்கள் பலாத்காரமாக அதனை அடைய நினைக்கிறீர்கள். காதல் என்பது கண்களில் கனிவு,
சொற்களில் இனிமை, நடத்தையில் நளினம், உள்ளத்தில் இன்பச் சல்லாபமும் குழைவும்,
மென்மையான அணுகுமுறை என்பவற்றால் உண்டான சேர்க்கையாகும்.
தடதடவென்று நீங்கள் என்னை நோக்கி நடந்து வரும்போதும் சப்பாத்தொலி கேட்கையிலும்
அராபிய போர்க்குதிரையின் ஞாபகம்தான் எனக்கு வருகிறது.
நீங்கள் தடாலடியாகப் பேசும் போது யானை பிளிறுவது போல் இருக்கிறது.
உங்கள் முகத்தில் சிரிப்பு கிடையாது. முகத்தை ஒட்டகத்தின் முகத்தைப் போல்
அஷ்டகோணலாக வைத்திருக்கிறீர்கள்.
திமிறிக் கொண்டு கட்டுக்கடங்காது இருக்கின்ற அடாவடிக் கும்பலை அடக்குவதற்காக
நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியைப் போல் தோற்றமளிக்கிறீர்கள். எந்தப் பெண்ணுமே
உங்களைக் காதலிக்கமாட்டாள்’ என்றாள் தெற்றுப்பல்அழகி.
‘தவிரவும் நான் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறேன்’ என்று தன் மோதிரவிரலில் இருந்த
திருமண மோதிரத்தையும் அவள் காட்டினாள்.
தெற்றுப்பல் அழகியின் கைவிரலில் மோதிரத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே
அன்புடையானுக்கு மஜ்னு எனப்படும் பைத்திய நிலை உண்டாகிவிட்டது. அவளை எண்ணி
எண்ணிக் குமைந்து புலம்பினான். அவள் வீதியால் செல்லும் போது அவளை நோக்கி
கையசைத்து பேச முயற்சித்தான். பல தடவைகள் அவளின் அருகில் சென்று தன் காதலை
கரடுமுரடான சொற்களால் வெளிப்படுத்தினான்.

தெற்றுப்பல் அழகி ஒவ்வொரு தடவையும் முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டே ‘நீ ஒரு
பைத்தியகாரன்’ என்று சொன்னாள். அவனும் ஒப்புக் கொண்டான் ‘நான் மஜ்னூன் தான்’
மேலும் இளவரசியை அடைவதற்காக மஜ்னூன் ஆன அவன் தன் நடத்தைகளையும்
ஆடைகளையும் மஜ்னூன் ஆகவே மாற்றிக் கொணடான்.
அன்புடையானின் வாழ்க்கையில் சடுதியாக மிகவும் மோசமானது என்று வர்ணிக்கக்கூடிய
திருப்பம் வருகிறது. இளவரசியைப் பறிகொடுத்த அவன் மூன்று தலைமுறைகளாக
வைத்திருந்த சிம்மாசனத்தையும் பறிகொடுத்தான். சிம்மாசனத்தை இழந்ததால் இப்போது
தீவிரமான மனஅழுத்தம் அவனைப் பீடித்தது. அதன் எதிரொலியாக Catatonia எனப்படும்
மிகவும் பயங்கரமான நோய் நிலைமைக்குள்ளானான் அன்புடையான்.
சிம்மாசனத்தை அடாத்தாக அபகரித்தவன் கெச்சங் கெட்டவன் என்பவன். அவன் மோசமான
நடத்தைகளுக்கு மிகவும் பிரசித்தமானவன். எப்படியென்றால் விஷம் தடவப்பட்டிருக்கிறது
என்று நம்பப்படும் அவனுடைய சப்பாத்து முட்கள் மிகவும் பிரசித்தமானவை. யாரையும்
மிதித்தால் அம்முட்கள் உண்டாக்கும் காயங்கள் ஈற்றில் கீழ்வடியும் புண்களாக மாறி
அவஸ்தையை ஏற்படுத்தி விடும்; மரணமும் சம்பவிக்கலாம்.
சிம்மாசனத்தின் மீது அதீத மோகங் கொண்டிருந்த கெச்சங்கெட்டவன் சிம்மாசனத்தின் மீது
கால்களை அகட்டி அமர்ந்தவாறே ‘நண்பர்களே, என்னைப் பேயாக ஆட்டிக் கொண்டிருந்த
பேராசை நிஜமாகிறது. நாங்கள் ஆட்டம் பாட்டமுமாகக் கொண்டாடுவோம்’ என்றான்.
-2
‘அன்புடையான் மிக விரைவில் இறந்து விடுவான்’ என்றார் மனோதத்துவ டாக்டர்.
‘மருத்துவ மொழியில் இத்தகைய அபாயகரமான நிலைமையை Catatonia என்று சொல்வோம்.
முதலில் அவனுக்கு தீவிர மன அழுத்தம் ஏற்பட்டு இப்போது இந்த நிலைமைக்கு
வந்திருக்கிறான். இது மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மிகவும் அரிதான நோய் நிலைமையாகும்’
என்றும் சொன்னார் டாக்டர்.
டாக்டர் கெச்சங்கெட்டவனை தன்னுடைய மருத்துவ நிலையத்துக்கு அழைத்திருந்தார்.
கெச்சங்கெட்டவன் மிகவும் அதிர்ச்சியடைந்து போயிருந்தான். டாக்டர் பேசுவது எதுவுமே
அவனுடைய காதுகளுக்குள் நுழையவில்லை. இப்படியொரு மோசமான நோயாளியை அவன்
ஒருபோதும் கண்டதில்லை.
அன்புடையான் இடுப்பு ஒரு பக்கம் வளைந்தவாறும், இரு கைகளையும் இரண்டு திசைகளிலே
உயர்த்தியவாறும் நின்றிருந்தான். ஒரு கை நேராக நிமிர்ந்தும் ஒரு கை மடங்கியும் இருந்தது.
விரல்கள் சுருண்டும், மணிக்கட்டுகள் வளைந்தும் இருந்தன. சிரசு ஒரு பக்கம் சாய்வாக திரும்பி
இருந்தது. கண்கள் எங்கேயோ பார்த்து வெறித்தபடி இருந்தன. மூக்குத் துவாரங்களை இறுக்கி
விரித்தவாறு காணப்பட்டான். உடுத்திய ஆடைகள் குறித்த பிரக்ஞையில்லாது தோன்றினான்
அன்புடையான்.
‘அவனைத் தொட்டுப் பாருங்கள்’ என்றார் மனோதத்துவ டாக்டர்.

அவனைத் தொட்டதும் இன்னமும் கலவரத்துக்கு உள்ளானான் கெச்சங்கெட்டவன்.
அன்புடையான் குளிர்ந்து ஜில்லிட்டுக் காணப்பட்டான். கைகளையோ விரல்களையோ
சிறிதும் அசைக்க முடியவில்லை. இரும்பின் பலத்துடன் அவை இருந்தன. கன்னங்களை
மேனியைத் தொட்டபோது கூட அவன் உணர்வுகள் மரித்தவன் போல் பிரக்ஞையின்றி
இருந்தான்.
‘டாக்டர் இது ஒரு பாரதூரமான நோய் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இவன் என் எதிரி
என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். எதிரிக்குக்கூட இவ்வாறான மோசமான நிலைமை
ஏற்படக்கூடாது என்பதே என் கொள்கையாகும். எதற்காக என்னை அழைத்தீர்கள்?
நோயாளியைக் குணப்படுத்த வேண்டியது டாக்டராகிய உங்களுடைய பொறுப்பாகும்’
என்றான் அவன் லேசான எரிச்சலுடன்.
‘நீங்கள் உதவ வேண்டும்’ என்றார் டாக்டர்.
‘நான் எப்படி உதவ முடியும்?’
என்னுடைய மாத்திரைகளால் இந்த நோயாளியைக் குணப்படுத்த முடியாது. அவனை விட்டு
விட்டு அவன் உயிருக்குயிராக நேசித்த இரண்டு விஷயங்கள் போய்விட்டன. ஒன்று
சிம்மாசனம். மற்றது தெற்றுப்பல் அழகி. அதனால் தன்னுடைய ராஜாங்கத்தை இழந்து
விட்டதான பதிவு அவனுடைய ஆழ்மனதிலே ஏற்பட்டு விட்டது. இரண்டு விஷயங்களும்
அவனிடம் மீண்டும் வந்து சேர வேண்டும். அப்போதுதான் அவன் குணமடைவான்’
‘ஒருபோதும் என்னுடைய சிம்மாசனத்தை நான் அவனுக்கு திருப்பிக் கொடுக்கப்
போவதில்லை. வேண்டுமானால் அதனையொத்த சிம்மாசனத்தையும் ராஜாங்கத்தையும்
ஏற்படுத்திக் கொடுக்கிறேன். அது எனக்கு இலகுவானது. நான் சிம்மாசனத்தைக் கடையில்
வாங்குவேன். நீங்கள் கூறுகின்ற தெற்றுப் பல் அழகியைப் பற்றி எனக்குத் தெரியாது. உதவி
செய்யக் கேட்டதால் அவளை நானாகவே கண்டுபிடிக்கிறேன். அவளைக் கண்டுபிடித்து எந்த
வித்தையைப் பயன்படுத்தியாவது அவனுக்கு சொந்தமாக்கிக் கொடுக்கிறேன். ஆனால்
டாக்டர் ஐயா, ஒரு நிபந்தனை இருக்கிறது. அவன் அவனாக இருக்கக்கூடாது. பூச்சியாக
மாறிவிட வேண்டும்’ என்றான் கெச்சங் கெட்டவன்.
‘பூச்சியாக மாறிவிடுவதா? நீ சொல்லுகின்ற இந்தச் சமாச்சாரம் எனக்குப் புரியாமல்
இருக்கிறது’ என்றார் மனோதத்துவ டாக்டர்.
‘சிம்மாசனம் ஒரு பேராசைப் பூதம். சிம்மாசனத்தில் ஒரு வாரம் நீங்கள் அமர்ந்து
கொண்டீர்களென்றால் அது உங்களுக்குப் புரிந்துவிடும். அவன் பூச்சியாக மாறி
விட்டானென்றால் சிம்மாசனத்தை மீண்டும் நினைக்க மாட்டான்’ என்றான் கெச்சங்
கெட்டவன்.
3-
திரு அன்புடையானின் ராஜாங்கம் என்பது முன்னொரு காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு
காவல் நிலையத்தின் பெயராகும்.கெச்சங் கெட்டவன், அன்புடையானுக்கு நீலநிறச் சீருடையை அணிவித்தான். சீருடையிலே
இரண்டு வெள்ளி நட்சத்திரங்களைப் பிணைத்தான். சீருடைக்கு அச்சொட்டாகப்
பொருந்தக்கூடிய வசீகரமான சிவப்பு நிறத்தில் தைக்கப்பட்ட தொப்பியை அன்புடையானின்
தலைக்குப் போட்டான். அவனுடைய சப்பாத்துக்களைப் பளிச்சென்றாகும்படி மினுக்கச்
செய்தான்.
‘நீங்கள் கச்சிதமாகவும் கம்பீரமாகவும் தோற்றமளிக்கிறீர்கள்’ என்று அன்புடையானின்
மீசையை முறுக்கிப் பாராட்டிய கெச்சங் கெட்டவன் அன்புடையானுக்குக் கைலாகு
கொடுத்ததும் அன்புடையான் தனக்காக விஷேடமாகத் தருவிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து
கொண்டான். மேலும் மரியாதை நிமித்தம் கெச்சங் கெட்டவனுக்கு சல்யூட் அடித்தான்
அன்புடையான்.
‘இந்த ஆசனம் நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு விலையுயர்ந்ததும் சொகுசுகளைக்
கொண்டதுமாகும்’ என்று சொன்ன கெச்சங் கெட்டவன் அந்த ஆசனத்தை விபரிக்க
ஆரம்பித்தான்.
‘இந்த ஆசனத்தில் அமரும் நீங்கள் வியர்வையையும் பிருஷ்;ட அழுத்தத்தையும்
உணரமாட்டீர்கள். இதன் திண்டு மெத்தை மற்றும் கச்சாப் பொருட்கள் அனைத்துமே
ஒலிம்பிக் வீரர்களுக்கென விஷேடமாகத் தயாரிக்கப்பட்டவையாகும். எனவே நீங்கள்

பேரதிஷ்டசாலியாக இருக்கிறீர்கள். இந்த ஆசனத்தின் பெயரையும் சொல்கிறேன். PININ
FARINA XTEN . இதன் பெயரைச் சொல்வதன் நோக்கம் இதன் விலையை நீங்கள் விசாரித்துப்
பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இனி உங்கள் கடமையைக்
கையெழுத்திட்டு ஆரம்பிக்கலாம்’ என்று முடித்தான் கெச்சங்கெட்டவன்.
மேலும் அவன் அன்புடையானுக்கு பூச்சியியல் பேராசிரியரை அறிமுகப்படுத்தி வைத்தான்.
கழுத்து வரை நரை நிறத்தில் தாடி வளர்ந்தும் சாம்பல் நிறப் பூஞ்சணக் கண்களோடும்
காட்சியளித்த பூச்சியியல் பேராசிரியர் சிடுமூஞ்சியாக இருந்ததோடு பூச்சிகள் நிறைந்த
பெட்டியொன்றையும் கையில் வைத்திருந்தார்.
கெச்சங்கெட்டவன் போன கையோடு பூச்சியியல் பாடமும் ஆரம்பமாகிற்று.
ஆறு மாதங்கள் கடந்ததும் அன்புடையான் பெயர் சொல்லத்தக்க பூச்சிகளுடன் வாலாயமான
விசித்திரப் பிறவியாக மாறிப் போனான்.
எவ்வாறென்றால் லூசிபெரஸ் நொதியங்களோடு மின்மினிப் பூச்சிகள் ஒளி பாய்ச்சுவதை
அவன் கண்டான். மயிர்க்கொட்டிகளுக்கு பன்னிரண்டு கண்கள் இருப்பதையும், சிவப்பு
தபாற்கார பட்டாம் பூச்சிகள் (RED POSTMAN BUTTERFLY) என்பவைகள் நச்சுத் தாவரங்களை
விரும்புவதையும் அவன் அறிந்தான்.
பேராசிரியர் சித்திரங்களோடு கற்பித்த சிவப்புப் புள்ளிகள் கொண்ட ஆபரண வண்டுகளும்
(RED SPOTTED JEWEL BEETLES) வயலின் வண்டுகளும் (VIOLIN BEETLE) அவனை
வசீகரித்தனவென்றாலும் அவைகளும் பூச்சிகளே என்றுணர்ந்ததும் அவன்
ஏமாற்றமடைந்தான்.

தேனி, தும்பி, நுளம்பு, எறும்பு, கும்பிடு பூச்சி, ஈ, ஈசல், கரப்பான் பூச்சி, வெட்டுக்களி,
தெள்ளு என்பன படுக்கையறையிலும் ஆடைகளைச் சுற்றியும் பிக்ஷா சாப்பிடும் போதும்
கோப்பி அருந்தும் போதும் கழுத்துப் பட்டியைச் சரிசெய்யும் போதும் போஜனம் எடுக்கும்
இடங்களிலும் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தன. ஆகாரம் உட்கொள்ளுவதும் தேனீர்
அருந்துவதும் அருவருப்பாகிற்று.
காதுகளுக்குள் ரீங்காரங்களும் கீச்சுமூச்சு ஒலிகளும் கேட்கும். மேனி பூராகவும் தேனி ஊர்ந்து
கொண்டேயிருக்கும். திடீரென்று அன்புடையான் திடுக்கிட்டெழுவான். உடல் வியர்வையால்
தெப்பமாக நனைந்திருக்கும். ஒன்றுமேயிருக்காது. பூச்சிகள் வருவதெல்லாம்
ரீங்காரமிடுவதெல்லாம் மாயத் தோற்றமே என்றாகி விடும்.
‘நான் பூச்சியாக மாறிக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் இழிந்த
கரப்பான்பூச்சியின் மனோநிலைக்கு வந்து விடுவேன். என்னை விட்டு விடுங்கள்’ என்று
பூச்சியியல் பேராசிரியரிடம் கெஞ்சினான் அன்புடையான்.
பூச்சியியல் பேராசிரியர் பின்வருமாறு பதில் சொன்னார்.
“நீ அவ்வாறு பூச்சியாக மாறிவிட வேண்டுமென்பதுதான் கெச்சங்கெட்டவனின் விருப்பமாக
இருக்கிறது. ஒவ்வொரு விரிவுரைக்கும் தாராளமாகவே அவன் பணம் தருகிறான்.
உன்னுடைய மூளையை பூச்சிகள் திணிக்கப்பட்ட மூளையாக மாற்றிவிட வேண்டுமென்று
அவன் எனக்கு கட்டளை பிறப்பித்திருகிறான். அவனுடைய ஆசையையே நான் நிறைவேற்றிக்
கொண்டிருக்கிறேன்.
-4-
அன்புடையானைப் பீடித்திருக்கும் அதிபயங்கரமான நோய் குணமடைய வேண்டுமானால்
அவனைக் குஷிப்படுத்தக் கூடிய இளவரசி தெற்றுப்பல் அழிகியின் வருகை இடம்பெற
வேண்டும். காவல் நிலையத்திலிருந்து கடமை முடிந்து திரும்பும் அன்புடையான் மேல்
மாடியிலிருந்தவாறே தெற்றுப்பல் அழகியின் வருகையை எதிர்பார்த்தவாறு வீதியை
வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான்.
அவன் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்காக புதிய ஆடைகளையும் சப்பாத்துக்களையும்
கைக்கடிகாரத்தையும் உள்ளாடைகளையும் வாங்கியிருக்கிறான். புதிதாக வாங்கிய நறுமணக்
குப்பிகளும் ஆடை அலுமாரியின் ஒரு தட்டிலே அடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும்
அவனுடைய கைக்குட்டையும் புதியதே.
இளம் பெண்களின் நாசிகளை ஊடறுத்து உள்ளங்களைக் கிறங்கடிக்கக்கூடிய Tom Ford Noir
Extreme என்ற விஷேடமானதும் அற்புதமானதுமான நறுமணத்தை அவன்
சிறப்பங்காடியிலிருந்து வாங்கி வந்து மேனி முழுவதும் தடவிக் கொண்டான்.
மேலும் புதிதாக வரவிருக்கின்ற தெற்றுப்பல் அழகியான மணமகளை வசீகரிப்பதற்காக மேல்
மாடியின் சுவர்களுக்கு மெல்லிய செம்மஞ்சள் வர்ணப்பூச்சைப் பூசினான். மின் விசிறிகளையும்
குளிரூட்டியையும் புதிதாக வாங்கினான்.

‘ஆனாலும் நீ எதிர்பார்த்து இருப்பதைப் போல் தெற்றுப்பல் அழகி உன்னுடைய
மாடிப்படிகளில் ஏறி வரமாட்டாள். அவள் வேறு விதமாக வர இருக்கிறாள்’ என்று
கெச்சங்கெட்டவன் அன்புடையானிடம் கூறினான்.
ஏமாற்றமளிக்கும் விதத்தில் ‘தெற்றுப்பல் அழகியின் காதல் மிகவும் உறுதியாக இருக்கிறது.
அவள் தன்னுடைய மணமகனின் மோதிரத்தைக் கழற்ற மறுக்கிறாள்’ என்ற குறுந்தகவலும்
அவனிடமிருந்து ஒரு தருணத்தில் வந்தது.
கெச்சங்கெட்டவன் அடிக்கடி வந்து போனான். அவன் ராஜா போலத் தோற்றமளித்தான்.
மேலும் அடிக்கடி வசீகரமான ஆடைகளை அணிந்தான். இறுதியாக வந்த போது மெரூன்
நிறத்திலான ஷேர்ட்டும் வெள்ளை கழுத்துப்பட்டியும் கறுப்பு நீளக்காற்சட்டையும் அணிந்து
அணிந்து அவன் கம்பீரமாக நடந்து வந்தான். என்றாலும் அதே பழைய பாணியிலே முள்ளுச்
சப்பாத்தின் டக் டக் என்ற சப்தத்தைக் கேட்டதும் மனசு துணுக்கென்றது.
‘நான் பழைய கெச்சங்கெட்டவனாகத்தான் இருக்கிறேன்’ என்று அவன் சொல்லாமற்
சொல்வதைப் போல் இறுதியாக வந்தபோது ‘நம்முடைய பயணத்திற்குத் தடையாக ஒரு
தீயணைப்பு வீரன் இருக்கிறான். அவனைக் கொன்று விட வேண்டும்’ என்று
அன்புடையானின் காதிற்குள் இரகசியமாகக் குசுகுசுத்தபோது அன்புடையானின் மேனி
சிலிர்த்து நடுங்கியது.
‘நான் கொலை செய்யமாட்டேன். என்னால் அந்த மோசமான காரியத்தை ஒருபோதும் நிகழ்த்த
முடியாது’ என்று மறுத்தான் அன்புடையான் உடனடியாகவே. கெச்சங் கெட்டவன் இழிவான
முறையில் அவனை இகழும் வகையில் அன்புடையானைப் பார்த்துச் சிரித்தான்.
‘அந்தக் கொலையை நீ செய்யப் போவதில்லை. நீ கோழை என்பதை நான் நன்கு அறிவேன்.
நான் கொலை செய்யப் போகிறேன்’ என்றான் அவன்.
‘உங்களைக் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்களல்லவா. அதற்கு
நீங்கள் அஞ்சவில்லையா?’
‘இல்லை. அப்படி நடக்காது என்பதை நான் உன்னிடம் விபரிக்கிறேன். நான் தீயணைப்பு
வீரனின் பின்மண்டையில் சுத்தியலின் இரும்பு முனையால் மிகவும் வேகமாக தாக்குவேன்.
அவன் அவ்விடத்திலேயே செத்து மடிவான். அதிகாலையில் நடைப் பயிற்சிக்காகச் செல்வதை
அவன் வழக்கமாகக் கொண்டிருக்கிறான். அந்த அதிகாலை வேளையில் எனக்கெதிராகச்
சாட்சியம் சொல்ல அவனுக்கருகில் யாருமே இருக்கமாட்டார்கள். நான் சடலத்தை
வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போய் தச்சனின் வீட்டிற்கருகிலே அதனைப் போட்டு
விடுவேன். அந்தப் பாதை மணல் பாதை என்பதால் வாகனம் சென்ற தடயங்களை நான்
மிகவும் இலகுவாக அழித்துவிடுவேன். சுத்தியலில் என் கைரேகைகள் இருக்கமாட்டாது.
ஏனென்றாரல் நான் கையுறை பாவிப்பேன். ஆனால் தச்சனின் கைரேகைகள் சுத்தியலில்
இருக்கும். ஏனென்றால் அவனுடைய தச்சுக் கூடத்திலிருந்து நான் அதனைத் திருடுவேன்.
ஆகையால் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் நீ கைது செய்யப்போவது
யாரையென்றால் அந்தத் தச்சனை.

‘நீங்கள் விவரிக்கின்ற தீயணைப்பு வீரன், தச்சன் என்ற இருவரும் யார் என்ற சமாச்சாரத்தை
நீங்கள் சொல்லவில்லையே. அது மர்மமாக இருக்கிறதே. என்று வியப்புடன் கேட்டான்
அன்புடையான்.
‘அவர்கள் யார் என்பதை நான் சொல்லப்போவதில்லை. போலீஸ்காரனாகிய நீதான்
கண்டுபிடிக்கப் போகிறாய்’ என்று சொன்ன கெச்சங்கெட்டவன் ஒரு வாரம் கழித்து
தன்னுடைய தினக்குறிப்பைக் கூரியரில் அனுப்பி வைத்திருந்தான்.
அந்த தினக்குறிப்பு கெச்சங்கெட்டவன் ஏற்கனவே குறிப்பிட்ட தீயணைப்பு வீரனின்
கொலையுடன் எந்தச் சம்பந்தமுமில்லாது தெற்றுப்பல் அழகியின் அழகு சம்பந்தமான
குறிப்புகளைக் கொண்டிருந்தது.
குறிப்புகளை கெச்சங் கெட்டவன் எழுதியிருந்தான். முதலில் தெற்றுப்பல்லைக் கொண்ட
பேரழகி என்ற வசனத்தை அவன் கொட்டையெழுத்தில் சிவப்பு வர்ணத்தால்
அடையாளமிட்டிருந்தான்.. இடைக்கிடை அவளுடைய புகைப்படங்களையும் ஒட்டியிருந்தான்.
புகைப்படங்கள் பல கோணங்களில் எடுக்கப்பட்டிருந்தன. சில வசனங்கள் மிகவும்
அசிங்கமாகவும் அருவருப்பாகவும் இருந்தன.
தினக்குறிப்பின் இறுதிப் பக்கத்திலே அவளுடைய நிர்வாண மேனி குறித்த அவ்வாறான
மிகவும் அசிங்கமான ஒரு குறிப்பை வாசித்தவுடன் அன்புடையான் விழியோரங்களில் ஒரு துளி
கண்ணீர் முட்டி நின்றது. அது இதுதான்.
‘தெற்றுப்பல் அழகியின் தெற்றுப்பல் வசீகரத்தைத் தருவது போல் அவளின் மேனியில்
காணப்படும் மச்சங்களும் அழகானவை. முக்கியமாக கன்னங்கறுப்பாகவும் விளிம்புகள்
சிவப்பாகவும் முதுகிலே காணப்படும் மச்சமும் இடது தொடையின் உச்சியிலே காணப்படும்
மச்சமும்.
-5-
அதிகாலை வேளையில் ‘கண்ணாடி’ என்ற பத்திரிகையை வாசித்தவாறே வீதியில் நடந்து
கொண்டிருந்த இருபத்தொன்பது வயதான ஓர் இளைஞனை யாரோ கொலை
செய்திருந்தார்கள்.
‘என்ற பத்திரிகையை வாசித்தவாறே’ என்பது ஓர் ஊகம் தான். ஏனெனில் அவன் மல்லாந்து
விழுந்து கிடந்த இடத்திற்கருகில் கண்ணாடி பத்திரிகை விரித்தவாறே கிடந்ததோடு கிழிந்து
போன பத்திரிகையின் ஒரு துண்டு அவனுடைய வலது கைக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகி
கிடந்ததால் இந்த ஊகம்.
அன்புடையான் கண்ணாடி பத்திரிகையை முழுமையாக வாசித்தான். பத்திரிகைக்கும்
கொலைக்கும் ஏதோவொரு தொடர்பு இருக்கக் கூடுமோ என்பதைக் கண்டறிய கொலையைத்
துப்புத் துலக்கி கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை அன்புடையான்
ஏற்றிருந்தான்.

காயம் சடலத்தின் பிடரி வரை நீண்டு இருந்தது. பின்னால் இளைஞனைத் தொடர்ந்து வந்த
கொலையாளி இரும்புக் கம்பியால் வேகமாகத் தாக்கியிருக்க வேண்டும். அவ்விடத்தில் பத்து
சென்ரிமீற்றர் விட்டமுள்ள வீக்கமும் இரத்தம் உறைந்து கட்டித்தும் போயிருக்கிறது.
குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு குற்றம் நடந்த இடத்து விசாரணை (CRIME SCENE
INVESTIGATION) மிகவும் முக்கியமானது என்று தனக்குக் கீழ் பணி புரியும் அதிகாரிகளிடம்
அன்புடையான் அடிக்கடி ஞாபகப்படுத்துவான்.
அதன்படி குற்றம் நடந்த களத்தை படம் வரைபவன் மிகவும் கச்சிதமாக ஒரு படமாக (SKETCH)
வரைந்தான். புகைப்படப் பிடிப்பாளன் பல்வேறு கோணங்களிலும் மிகவும் நெருக்கமான
படங்களையும் சற்றுத் தள்ளியிருக்கும் படங்களையும், மேலும் முழுக் குற்றப்புலத்தை ஒரு
படமாகவும் நிறையப் புகைப்படங்களை எடுத்தான். அவன் இந்தத் துறையில் பதினைந்து
வருட அனுபவங்களைக் கொண்டவன்.
சட்ட மருத்துவ அதிகாரி, நீதிபதியுட்பட ஏனைய குற்றப்புல குழும உறுப்பினர்களும்
அவ்விடத்தில் முகக்கவசங்களை அணிந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
அன்புடையான் சடலம் மல்லாந்து விழுந்து கிடந்த இடத்தைப் பார்த்தான். அது மிகவும்
அமைதியான சூழலைக் கொண்ட குடியிருப்பொன்றிற்குச் செல்லும் மணற்பாதையின் ஓரமாக
இருந்தது.
சடலம் கிடந்த இடத்திலிருந்து நூறு தொடக்கம் இருநூறு மீற்றர் இடைவெளியில் ஐந்து
வீடுகள் இருந்தன. மேலும் சடலத்திற்கருகாகவும் மணல் வீதிக்கு அருகாகவும் அடர்த்தியாக
சடைத்து வளர்ந்திருந்த மரமொன்றையும் அவதானித்தான் அன்புடையான்.
அன்புடையான் தன்னுடைய அதிகாரிகளைப் பார்த்துச் சொன்னான்.
‘கொலையாளி மரத்தில் ஏறி ஒளிந்தவாறே தன்னுடை இலக்கு வரும் வரை காத்திருந்தான்.
அவன் எங்கேயோ இருந்து இலக்கைப் பின்தொடர்ந்து வந்தான் அல்லது இந்த ஐந்து
வீடுகளில் ஒன்றில் தங்கி இருக்கிறான். அது தற்காலிமாகவோ நிரந்தரமாகவோ
இருக்கக்கூடும்.
‘ஆமாம்’
‘கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதம் எங்கே?’
‘அது இவ்விடத்தில் காணப்படவில்லை ஐயா’
‘ஆகவே கொலையாளி ஆயுதத்தை தன்னுடன் கொண்டு சென்றிருக்கிறான். எங்கேயோ
எறிந்து விட்டுப் போயிருக்கிறான் அல்லது குழிதோண்டிப் புதைத்திருக்க வேண்டும்.’
‘ஆமாம்’
‘சட்ட வைத்திய அதிகாரி என்ன சொல்கிறார்?’

‘நீங்கள் சொல்வதை அப்படியே சொல்கிறார். பிணப் பரிசோதனை அறிக்கையின்படி
மண்டையோட்டின் பிற்பக்க எலும்பு நொறுங்கியிருக்கிறது. அதிக பலத்துடன் கொலையாளி
கொலையாளி தாக்கியிருக்கிறான். அது மொட்டையான இரும்பு ஆயுதமாக இருக்கக்கூடும்.
கொலையாளி எங்கிருந்தாவது வாகனத்தில் இங்கு வந்த தடயங்கள் இருக்கின்றனவா?
‘இல்லை. மணற்பாதை என்பதால் சிலவேளை மோட்டார் சைக்கிள் போன்ற சிறிய
வாகனத்தில் வந்திருப்பின் தடயங்களைத் தேடுவது சிரமமாகும்’
‘இவ்விடத்தில் இருக்கும் மரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’
‘மரம் கொலையாளிக்கு மிகவும் வசதியாக வந்து வாய்த்திருக்கிறது. ஐந்து வீடுகளில் எந்த
இடத்திலிருந்து பார்த்தாலும் மரமானது குற்றம் நடந்த இடத்தை கச்சிதமாக மறைக்கிறது.
இந்த நுட்பத்தை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் ஒருத்தன் அல்லது ஒருத்திதான் அவனைக்
கொல்வதற்கு இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்’
‘ஐந்து வீடுகளிலும் தங்கியிருப்பவர்களை விசாரித்தீர்களா?’
‘சுற்றிவர தோட்டத்துடன் கூடிய ஒரு விசாலமான வீடு முற்றாக மூடியிருக்கிறது. சுற்றிவர
சிசிரீவி கமராக்களை வீட்டுக்காரன் பொருத்தியிருக்கிறான். அவன் இருந்தாற் போல் வந்து
தங்கிச் செல்வான் என்று அண்டை வீட்டார் சொல்கிறார்கள்.
‘அவனை விசாரிக்கவில்லையா?’
‘அவனை அழைத்து வந்து சிசிரீவி கமராக்களை நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்ததில் அவன்
அண்மைக் காலமாக இங்கு வரவேயில்லை என்பது நிரூபணமாகிறது’
‘மற்றைய வீடுகளின் நிலைமை என்ன?’
‘ஒரு வீட்டில் மிகவும் வயது முதிர்ந்த தம்பதியர் வசித்து வருகிறாதர்கள். இருவருக்கும்
நடப்பதற்கு ஊன்று கோல்கள் தேவை. அவர்கள் வீட்டு வளவை விட்டு வெளியே
வருவதேயில்லை. இன்னொரு வீட்டில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஓரிளம் பெண்
வசிக்கிறாள். அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டை விட்டுச் செல்லும் அவள் இரவு பத்து
மணியாதன் பின்பு தான் வீடு வந்து சேருகிறாள்.
‘அதிகாலையில் செல்பவள் என்றாள் அவள் கொலையைச் செய்வதற்கும் சாத்தியம்
இருக்கிறது அல்லது அவள் கொலையாளியைக் கண்டிருக்க வேண்டும். அதுவுமில்லாவிட்டால்
குறைந்தபட்சம் சடலத்தையேனும் கண்டிருக்க வேண்டும்.
‘நீங்கள் சொல்லும் அதே அணுகுமுறையில் நாங்கள் அவளை விசாரித்தோம்.
தொழிற்சாலையில் முடிவுறாத வேலைகள் இருந்த காரணத்தால் முதல் நாளிரவு அவள்
அங்கேயே தங்கியிருக்கிறாள். அவளுடைய விரல் கையொப்பம் தொழிற்சாலை
இயந்திரத்திலே பதிவாகி இருக்கிறது. மேலாளரும் அவள் அங்கே தங்கியிருந்ததை
உறுதிப்படுத்துகிறார்’
‘இன்னும் இரண்டு வீடுகள் எஞ்சியிருக்கின்றன’

‘ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வருகிறார்கள். கணவன் விபத்தொன்றில் சிக்கி
தொடை எலும்பு முறிந்த காரணத்தால் கடந்த இரண்டு வாரங்களாக படுத்த படுக்கையில்
இருக்கிறான். மனைவி நகரத்திலுள்ள பத்திரிகையொன்றின் உதவி ஆசிரியையாக
இருக்கிறாள். இப்போது விடுமுறை எடுத்துக் கொண்டு கணவனுக்குப் பணிவிடை
செய்கிறாள்’
‘ஆகவே மீதியாக இருப்பவன் யார்?’
‘அவன் தொழிற்றிறமை வாய்ந்த தச்சனாக இருக்கிறான். சமையலறைகளுக்குரிய
அலுமாரிகளை (PANTRY CUPBOARDS) சுயமாகச் செய்து ஓடருக்கு விற்பனை செய்து
வருகிறான். அவனுக்கென்று ஒன்லைன் விற்பனை செய்யும் இணையத்தளமொன்றும்
இருக்கிறது. சில நாட்களுக்கு வீட்டில் தங்குவதுமுண்டு. அடிக்கடி பயணங்களும் செய்கிறான்.
ஆகவே கொலை செய்வதற்கான அத்தனை சாத்தியங்களும் அவனுக்கு வாய்ந்திருக்கின்றன’
‘அவன் என்ன சொல்லுகிறான்’
‘முற்றாக மறுக்கிறான்’
‘மோப்பநாய் வந்து விட்டதா’
‘ஆமாம்’
‘எங்களோடு இருக்கும் German Shepherd மூளைசாலியான நாயாக இருக்கிறது. எப்படிப்பட்ட
பயங்கரக் கொலையாளியாக இருந்தாலும் லபக்கென்று கௌவிப் பிடித்துவிடும். நாங்கள்
உத்தரவிட்டால் குதறியும் விடும்’ என்றான் அன்புடையான்.
மற்றவர்கள் அதனை ஆமோதித்தார்கள்.
அன்புடையான் சொன்னதைப் போலவே உறுத்தக்கூடிய பயங்கர விழிகளோடு அங்கிருந்த
பார்வையாளர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு – அதாவது கூட்டத்திற்குள்
ஒருத்தனாக கொலையாளி நின்றிருந்தால் அவன் அதன் கோபாக்னி வீசும் பார்வையின்
உறுத்தலைத் தாங்க முடியாமல் சிறுநீர் கழித்திருப்பான். தனது துப்புத் துலக்கும் பயணத்தை
ஆரம்பித்த German Shepherd தன் மீது மனிதர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும்
விதத்தில் கொலையாளியை மிகவும் இலகுவாகக் கண்டுபிடித்தது.
நான் கொலையே செய்யவில்லையென்று வாதிட்டானே அந்தத் தச்சன் தான் கொலையாளி.
அவனது வீட்டின் பின்புறத்திலுள்ள கழிவுக்கானிற்குள் அவன் கொலை செய்யப்
பயன்படுத்திய சுத்தியல் இருந்தது. சுத்தியலின் இரும்பு முனையில் இரத்தக் கறைகளும்
கைபிடிப்பகுதியில் அவனுடைய கைவிரல் அடையாளங்களும் இருந்தன. கொலையாளி
இலகுவாகப் பிடிக்கப்பட்டதும் அதிகாரிகள் எல்லோருக்கும் சப்பென்று ஆகிவிட்டது.
-6-

அன்புடையான் தன்னுடைய குழுமத்துடன் இணைந்து துப்புத் துலக்கிக் கண்டுபிடித்த
கதையின்படி தெற்றுப்பல் அழகியை அடைவதற்காக தச்சனும் தீயணைப்புப் படை வீரனும்
தமக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள்.
தச்சனின் இணையத்தளத்தின் உள்பெட்டிக்குள் ஒருநாள் ஒருசெய்தி வருகிறது.
‘புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் சமையலறைக்குள் பிரமிக்கத்தக்க சமையல் அலுமாரி ஒன்றை
நிர்மாணிக்க விரும்புகிறேன். தயவு செய்து என்னை வந்து சந்திக்க முடியுமா?
அதற்கு தச்சன் பதில் அனுப்புகிறான் ‘வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிக்கு என்னை
எதிர்பாருங்கள்’
வெள்ளிக்கிழமை மாலை தச்சன் நூற்றுக்கணக்கான சமையல் அலுமாரிகளின் மோஸ்தர்
கொண்ட புத்தகத்துடன் தெற்றுப்பல் அழகியின் வீட்டிற்குள் நுழைந்தான்.
அங்கே இளம் பெண்ணின் குறுந்தகவலில் அடங்கியிருந்த பிரம்மிக்கத்தக்க என்ற சொல்லின்
அர்த்தத்தை அவன் அறிந்து கொண்டான். அவள் பிரமிக்கத்தக்க மோஸ்தர்களை தன்வசம்
வரைந்து வைத்திருந்தாள். மேலும் அவளுடைய தெற்றுப்பல் பிரமிக்கத்தக்கதாக இருந்ததோடு
அவள் பிரமிக்கத்தக்க வகையில் மிகவும் மென்மையாகவும் நளினமாகவும் நறுக்கான
சொற்களை கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தும் உரையாடினாள்.
சுருங்கக் கூறின் அவளின் தெற்றுப்பல்லில் மயங்கிய தச்சன் அவளைப் பார்த்து ‘நான்
உங்களைத் திருமணம் முடிக்க விரும்புகிறேன்’ என்று சொன்னான்.
தச்சன் சொன்னதைக் கேட்டு ஒரு கணம் திகைத்த தெற்றுப்பல் அழகி தன்னைச் சுதாகரித்துக்
கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். அவளால் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
தச்சன் அவள் கிண்டலாக சிரிப்பதைப் பார்த்து கோபித்தானா என்றால் இல்லை. அவள்
சிரிக்கும் தெற்றுல் பல்லிலிருந்து பளீரென்று பிரகாசம் ஒளிர்வதை அவன் கண்டான். அவள்
மீது அவனுக்கு பிரேமை இன்னும் அதிகமாகிற்று.
சிரிப்பைச் சட்டென்று நிறுத்தின அவள் ‘என் தெற்றுப்பல் மீது உங்களுக்கும் ஆசை வந்து
விட்டதாக்கும்’ என்று விகசிப்புடன் கூறினாள்.
தச்சன் வியப்புடன் ‘எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?’ என்று கேட்டான்.
அவள் பதிலளித்தாள்.
‘எல்லாக் காலங்களிலும் தெற்றுப்பல் என் அடையாளமாக இருக்கிறது. என்னுடைய
தெற்றுப்பல்லை ஒருகாலத்தில் நான் வெறுத்தேன். பள்ளித்தோழிகள் என் தெற்றுப்பல்லை
கிண்டல் செய்தார்கள். வீடு திரும்பும் நான் அம்மாவின் மடியில் என் தலையை வைத்து பல
தடவைகள் தேம்பியிருக்கிறேன். அம்மா பல தடவைகள் பல் டாக்டரிடம் என்னை அழைத்துச்
சென்றார். அவர் என்னுடைய பல்லைப் பிடுங்க வேண்டுமென்று சொன்னார்’
‘தெற்றுப்பல்லில் இத்தனை சுவாரஷியமா? மேலே சொல்லுங்கள்’ என்று ஆவலோடு
துரிதப்படுத்தினான் தச்சன்.

‘பல்லைப் பிடுங்குவதற்காக டாக்டர் கொண்டு வந்த குறட்டையும் பற்களை மரத்துப்
போகச்செய்யும் ஊசி மருந்தையும் கண்டவுடன் பிடரி அடிபட ஓடோடி வீடு வந்து சேர்ந்து
விட்டேன்’ என்று சிரித்தாள் தெற்றுப்பல் அழகி.
‘அதற்கப்புறம்?’
‘அதற்கப்புறம் உங்களைப் போன்ற வேலை வெட்டியில்லாத இளைஞர்கள் என்
தெற்றுப்பல்லில் வசமாகி என்னைப் பின்தொடர ஆரம்பித்தார்கள்’
‘அப்படியா’ என்று புன்னகைத்த தச்சன் ‘நான் உங்களை உண்மையாகவே நேசிக்கிறேன்’
என்றான்.
‘நீங்கள் எப்போதோ அதைச் சொல்லியிருக்க வேண்டும்’ என்றவள் தன்னுடைய இடது கை
மோதிரவிரலைக் காட்டினாள். தெற்றுப்பல்லழகியின் மோதிர விரலில் இருந்த
கண்ணைக்கவர்கின்ற மோதிரத்தைக் கண்டதும் தச்சனின் முகம் சுக்கு நூறாகிச் சுருங்கியது’
‘என்னுடைய மணவாளன் ஒரு தீயணைப்பு வீரன்’ என்றாள் அவள்.
‘அவன் துணிகரச் செயல்களின் ஜாம்பவான் (The great man of Adventures) நான் துணிகரச்
செயல்களைச் செய்வதற்கு மிகவும் விரும்புபவள். அவனுக்கு மலையேறுவதில் அலாதிப்
பிரியம் இருக்கிறது. ஒரு முறை போட்டியொன்றில் அவன் முதலிடத்தைப் பெற்றுக்
கொண்டான். அன்றிலிருந்துதான் எங்கள் காதல் துளிர்த்தது. ஐந்து வருடங்களாகக் காதலித்து
வருகிறோம். விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளோம். எங்கே தெரியுமா? வெளிச்ச
வீடொன்றின் உச்சியிலே’ என்றாள் அவள்.
அவளுடைய இந்த வாக்குமூலத்திலிருந்து தான் தச்சனுக்கும் தீயணைப்பு வீரனுக்கும்
இடையிலான பிணக்குகளும் புகைச்சலும் மனக்கசப்பும் எரிச்சலும் என்ற கதை ஆரம்பித்தது
என்று பதிவுப் புத்தகத்தில் எழுதினான் அன்புடையான்.
அந்த மோதிரத்தைக் கழற்றியெறிந்து விட்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு
தெற்றுப்பல் அழகியிடம் தச்சன் பல தடவைகள் கெஞ்சினான். அவள் தொடர்ச்சியாக மறுத்துக்
கொண்டேயிருந்தாள்.
ஒரு தடவை தெற்றுப்பல் அழகியின் விரல்களைக் கோதி அவளுடைய திருமண மோதிரத்தைக்
கழற்றுவதற்கு தச்சன் முயற்சி செய்தான். அவள் கட்டுக் கடங்காத சினத்துடன் அவனுடைய
கைகளை உதறித் தள்ளினாள். அவன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கீழே விழுந்தான்.
‘நான் பைத்தியக்காரன். என் சுயகட்டுப்பாட்டை இழந்து நடந்த அசாதாரணமாக
சம்பவத்திற்காக என்னை மன்னித்து விடு’ என்று தச்சன் வேண்டினான். ஆனால் அவள்
ஒருபோதும் அவனை மன்னிக்கவேயில்லை.
‘நான் மென்மையாக உன்னுடன் நடந்து கொள்கிறேன் என்பதை நீ தவறாக அர்த்தப்படுத்திக்
கொண்டாய். என் நகத்தின் மீது கூட ஓர் அந்நிய ஆணின் நிழல் படிவதை நான் முற்றாக
வெறுக்கிறேன். என் மீது நீ உண்மையான அன்பைச் செலுத்தினாய் என்ற ஒரேயொரு
காரணத்திற்காக உனக்குச் சிறந்த நண்பியாக இருக்க நான் விரும்பியிருந்தேன். நீ

என்னுடைய எல்லாக் கற்பனைகளையும் நிர்மூலமாக்கிவிட்டாய்’ என்றவள் மேலும்
சொன்னாள்.
‘உன்னுடைய அத்துமீறலை நான் மன்னிக்கவேமாட்டேன். இனிமேல் இங்கே என்னைச்
சந்திக்க வரவேண்டாம். மீண்டும் வந்தாயென்றால் நீ தொட்ட இந்த விரல்களை வெட்டி
எறிந்து விடுவேன்’
-7-
தெற்றுப்பல் அழகியை அன்புடையான் விசாரணைக்காகச் சந்திக்கச் சென்ற போது அவள்
சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தாள். ஏற்கனவே தன்னுடைய மணவாளனான தீயணைப்பு வீரனின்
சடலத்தையும் அவள் தான் அடையாளங் காட்டியிருந்தாள்.
சடலத்தின் காற்சட்டைப் பைக்குள்ளிருந்த கைப்பையில் அவளுடைய புகைப்படமும்
தொலைபேசி இலக்கமும் இருந்ததைக் கண்டுபிடித்து அன்புடையான் அவளைக் குற்றம் நடந்த
இடத்திற்கு தன்னுடைய ஜீப் வண்டியில் அழைத்து வந்திருந்தான்.
‘தச்சன் இத்துணை மோசமாக நடந்து கொள்வானென்று நான் கொஞ்சமும்
நினைத்திருக்கவில்லை’ என்று அவள் அழுகையினூடே கூறினாள்.
அவளுடைய வலது கரத்தில் அடிக்கடி பீறிட்டு வரும் கண்ணீரைத் துடைப்பதற்காக பச்சை
நிறத்தில் ஒரு கைலேஞ்சி வைத்திருந்தாள்.
‘இதோ இந்தப் பச்சை நிறக் கைலேஞ்சியையும் என் மணவாளன் எனக்கு வாங்கித் தந்தான்’
என்று சொன்ன அவளின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சொட்டுச் சொட்டாக விழுந்து
நிலத்தில் தெறித்துக் கொண்டிருந்தன.
அன்புடையான் அவளுடைய தோளை மென்மையாகத் தொட்டு அவளை
ஆசுவாசப்படுத்தினான்.
‘தச்சனுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுங்கள். அப்போது தான் என் மனது
ஆறுதடையும் என்று தெற்றுப்பல் அழகி சொன்னாள்.
‘கவலையுற வேண்டாம். இரவு பகலாக நான் அதற்காகத் தான் முயற்சித்துக்
கொண்டிருக்கிறேன். உங்கள் கண்ணீரைத் துடைக்க வேண்டியது என் பொறுப்பு’ என்று
பதிலளித்த அன்புடையான் அவளுக்காக சுடச்சுட ஆவி பறக்கும் கோப்பி தயாரித்துக்
கொடுத்தான்.
‘உங்களுக்கு மிக்க நன்றி. கோப்பி நான் மிகவும் விரும்பும் பானம்’ என்றதும் அன்புடையான்
அவளுடைய நன்றியை ஏற்றுக் கொள்ளும் வகையில் தலையை அசைத்தான்.
‘உங்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தியையும் சொல்ல விரும்புகிறேன். அதற்காக என்னை
மன்னிக்க வேண்டும். தச்சன் தான் கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்’
‘இத்தனை ஆதாரங்களும் கிடைத்த பின்புமா?’ என்று தெற்றுப்பல் அழகி அதிர்ச்சியை
முகத்தில் வெளிப்படுத்தியவளாகக் கேட்டாள்.

‘நூறு சாட்சியங்களின் முன்னிலையில் கொலை நடந்திருந்தால் கூட குற்றவாளிகள்
ஒருபோதும் குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை. நான் அதனைப் பார்த்துக் கொள்கிறேன்.
அடங்காவிட்டால் அவனைப் பணிய வைப்பதற்கு எல்லாச் சித்திவதை முறைமைகளையும்
பயன்படுத்துவேன்.
அவன் கொலையை மிகவும் நுட்பமாகத் திட்டமிட்டு அதற்கேற்றாற் போல் அலிபியை (Alibi)
உருவாக்கி வைத்திருக்கிறான்.
‘அப்படியென்றால்…..’
‘கொலை நடப்பதற்கு முந்திய தினம் அவன் டாக்டரைச் சந்தித்து வயிற்றுப்போக்கு வாந்தி
காய்ச்சல் என்று சொல்லி சிகிச்சை’ பெற்றிருக்கிறான். அதற்கான சிட்டை அவனிடம்
இருக்கிறது. சிகிச்சை மையத்திலும் அவனுடைய பெயர் பதிவாகி இருக்கிறது.
அவன் நடக்கவே முடியாமல் தள்ளாடித் தள்ளாடி வந்தான் என்று டாக்டர்
உறுதிப்படுத்துகிறார். குற்றம் நடந்த அந்தி இரவில் கூட சிகிச்சை மையத்திலிருந்து
விஷேடமாக ஒரு தாதியை வரவழைத்து திரவ ஆகாரம் ஏற்றிக் கொண்டதற்கான
தஸ்தாவேஜூகள் இருக்கின்றன’
‘அவன் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து தப்பி விடுவானா?’
‘இல்லை நான் விடப் போதில்லை. எப்படியும் அவனை ஒப்புக் கொள்ள வைப்பேன். அவன்
தப்பி விட்டானென்றால் உங்கள் மணவாளனின் ஆத்மா சாந்தியடையாது’ என்றான்
அன்புடையான்.
அன்புடையான் சொன்னதும் வாஸ்தவமே. தச்சனை ஒப்புக் கொள்ள வைப்பதற்காக
அன்புடையான் அவனைத் தாறு மாறாகத் தாக்கியிருக்க வேண்டும். அவன் ரத்தவிளாறாகி
சிறைக்கூடத்தின் ஒரு மூலையிலே ஒடுங்கிப் போயிருந்தான். தெற்றுப்பல் அழகி அவனோடு
பேச விரும்பி அன்புடையானின் அனுமதியைக் கேட்டாள்.
அதற்குச் சம்மதமாகத் தலையசைத்து அன்புடையான் ‘நீங்களும் இந்த விசாரணையில்
பங்கேற்க வேண்டுமென்பதே என் விருப்பமாகும். அவனோடு தாராளமாகப் பேசுங்கள்
அம்மணி’ என்றான்.
இன்றைய தினம் எனக்குரிய மோசமான நாள் என்று அவள் தனக்குத்தானே சொல்லிக்
கொண்டாள். சிறைக்கூடத்தை அண்மிக்கும் போது அவள் தள்ளாட ஆரம்பித்தாள். நெஞ்சு
அடைத்துக் கொண்டது. அவளால் அவனுடைய முகத்தை நேருக்கு நேர் பார்க்க
முடியவில்லை.
ஏனெனில் அவனுடைய கண்களில் இப்போதும் காதலையும் கனிவையும் அவள் கண்டாள்.
அந்தக் கனிவையும் காதலையும் அவள் எப்போது பார்த்திருந்தாளென்றால் அவளிடம் அவன்
முதன்முதலாகத் தன் காதலைச் சொன்ன போது.
உண்மையில் தெற்றுப்பல் அழகி நினைத்துக் கொண்டு போனது தச்சன் அவளுடைய
மணவாளளைக் கொலை செய்யும் போது அவனுடைய கண்களில் ஜூவாலித்த கொலைவெறியைக் கண்டுபிடித்து ‘உனக்கு நான் கிடைக்கவில்லை என்பதற்காக என் அன்புக்காதலனை எதற்காகக் கொலை செய்தாய்?’ என்று கேட்கத்தான்.

அப்படியானால் அவனுடைய கண்களில் ஒளிந்திருந்த அந்தக் கொலைவெறி இப்போது
பஸ்மமாகிப்போகது எப்படி? தீயணைப்பு வீரன் இல்லையென்று ஆனதும் தன்னை அதே
இடத்தில் இருத்திப்பார்க்க அவன் நினைக்கிறான் போலும்.
அதை நினைத்துத்தான் கெஞ்சல் தொனியில் தச்சன் கேட்கிறான்.
‘நீயும் என்னைக் கொலைகாரன் என்று நம்புகிறாயா?’
-8-
தச்சன் கொலையாளி என்பதை ருசுப்படுத்தக்கூடிய நூற்றுக்கணக்கான தடயப்
பொருட்களையும் சான்றுகளையும் அன்புடையான் நீதிமன்றிலே சமர்ப்பித்தான்.
அதிலொன்றுதான் கென்ஜியி என்ற சிற்றுண்டியகத்திலே தச்சன் ஏழு தடவைகள் போஜனம்
எடுத்தான் என்ற தகவல்.
கென்ஜியி சிற்றுண்டியகம் தீயணைப்பு வீரனின் மாடி வீட்டுத்தொகுதி மனையிலிருந்து சுமார்
முன்னூறு மீற்றர் தொலைவில் அமைந்திருந்தது. அவ்விடத்திலிருந்து இருவிழியி ஊடாய்
பார்த்தால் தீயணைப்பு வீரன் தன்னுடைய அறைக்குள் ஆடை மாற்றுதைக் கூட தெளிவாகப்
பார்க்க முடியும்.
‘எதற்காக கென்ஜியி சிற்றுண்டியகத்திற்கு நீ ஏழு தடவைகள் போனாய்?’ என்று நீதிபதி
கேட்டார். ‘அதாவது நீ அவனைக் கொல்வதற்கு முன்பதாக பல தடவைகள் அவனை நீ உளவு
பார்க்கப் போயிருக்கிறாய்’ என்பது சட்டத்தரணியின் குற்றச்சாட்டு.
‘அது என்னுடைய வாடிக்கையாளர்களைச் சந்திப்பதற்காக நான் வழமையாகத்
தேர்ந்தெடுத்துக் கொண்ட நெடுஞ்சாலையிலுள்ள தர்ப்பிடம்’ என்று தச்சன்
வாக்குமூலமளித்தான். அந்தக்கூற்றை யாருமே நம்பவில்லை.
மற்ற ஆதாரம், தீயணைப்பு வீரனைச் சந்திப்பதற்காக தச்சன் பல தடவைகள் வந்ததாக
அண்டை வீட்டார்கள் மிகவும் தெளிவாகச் சாட்சியமளித்தார்கள். அந்த சாட்சியங்களை தச்சன்
ஒப்புக் கொண்டான்.
சுற்றிவரப் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவி கமராக்களில் அவன் தலைவிரி கோலமாகவும் முகம்
இறுக்கமடைந்த நிலையிலும் தரிசித்த பல காட்சிகள் பதிவாகியிருந்தன.
‘நீ தெற்றுப்பல் அழகியின் மணவாளைனைப் பல தடவைகள் மிரட்டி இருக்கிறாய்’ என்ற
வாதத்தை நீதிமன்றம் முன்வைத்தது.
‘நான் தெற்றுப்பல் அழகி மீது தீவிரமான காதல் கொண்டிருந்தேன். இப்போதும் அந்தக் காதல்
என் உள்ளத்திலே தீயாகக் கனன்று ஜூவாலித்துக் கொண்டிருக்கிறது. அவளை எனக்காக
விட்டுத் தருமாறும் அவளைத் திருமணம் செய்யாவிட்டால் நான் பைத்தியக்காரனாகி விடுவேன் என்றும் தீயணைப்பு வீரனிடம் மன்றாடினேன். அவ்வளவுதான் எங்களுக்குள் நடந்தது’ என்றான் தச்சன். அநதக் கதையையும் நீதிமன்றத்திலே யாருமே நம்பவில்லை.

தெற்றுப்பல் அழகியும் இப்போது அன்புடையானுடன் இணைந்து கொண்டு சாட்சியங்களைச்
சேகரித்தாள். ஓய்வு கிடைக்கும் வேளைகளில் சிறப்பங்காடிகளுக்கும் நகரத்தில் பிரசித்தி
பெற்ற ஆடையகங்களுக்கும் சென்றார்கள். தங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை
சினிமா அரங்குகளில் பார்த்தார்கள். பூங்காப் புல்வெளிகளில் அமர்ந்து கொண்டு
உரையாடினார்கள்.
அவளுக்கு விருப்பமான நிறம் எதுவென்றும் விரும்பி அருந்தும் பானம் எதுவென்றும்
அன்புடையான் கேட்டான். ஊதா என்றும் Mellita Coffee என்றும் அவள் பதிலளித்தாள்.
‘உங்களுக்கு விருப்பமான காலணி எது?’ என்று அவன் கேட்டான். ‘பிரயாணங்களில்
அணிவதற்கென்று SKECHERS காலணி வாங்க வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன்’ என்று
தெற்றுப்பல் அழகி பதிலளித்தாள்.
‘நீங்கள் நடந்து விட்ட துயரமான சம்பவங்களை முற்றாக மறந்து விட வேண்டும்’ என்றான்
அவன்.
‘என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் இப்போதெல்லாம் மென்மையாகவும்
நளினமாகவும் உரையாடுகிறீர்கள். உங்களின் முரட்டுத்தனம் இப்போது உங்களிடம் இல்லை.
என் காயப்பட்ட உள்ளத்தை ஆறுதல்படுத்துவதற்காகத் தான் நீங்கள் இவைகைளச்
செய்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனாலும் இந்தக் கொலையை என்னால் மறக்க
முடியாமல் இருக்கிறது. தச்சன் என் வாழ்க்கையின் அடித்தளத்தையே நிர்மூலமாக்கி விட்டான்.
அவன் அப்பாவி போலத்தோற்றமளித்தான். நான் அவன் மீது உயர்ந்த மரியாதை
வைத்திருந்தேன். இப்போது ஒவ்வொரு நாளும் கிடைத்துக் கொண்டிருக்கும் சான்றுகள்
எனக்கு அதிரிச்சியை உண்டு பண்ணுகின்றன’ என்றாள் தெற்றுப்பல் அழகி
-9-
சரியாக பன்னிரெண்டு மாதங்கள் கழிந்த இலையுதிர்கால மாலைப்பொழுதொன்றில் ‘நீங்கள்
இப்படிச் சொல்வீர்களென்று நான் எதிர்பார்க்கவில்லை’ என்றான் அன்புடையான்
தெற்றுப்பல் அழகியைப் பார்த்து.
சற்று முன்னர்தான் அவள் ‘நான் உங்களை விரும்புகிறேன்’ என்று சொல்லியிருந்தாள்.
‘நீங்கள் என் மீது காட்டும் அன்பாலும் பரிவாலும் நான் உச்ச சந்தோஷத்தில் இருக்கிறேன்.
நீங்கள் மிகவும் நல்ல மனிதராகத் தோற்றமளிக்கிறீர்கள். எனவே நாங்களிருவரும் திருமணம்
செய்வதில் வியப்படைவதற்கு எதுவுமேயில்லை’ என்றாள் அவள்.
‘எதற்காக இலையுதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள்?’
‘இலையுதிர்காலத்தில் உண்டாகும் காதல் நீண்டகாலம் நீடிக்குமென்று அனுவப்பட்டவர்கள்
சொல்லுகிறார்கள். தவிரவும் இலையுதிர் காலத்தில் எங்கும் விரவிக் காணப்படும் மென்சிவப்பு

மஞ்சள் இளஞ்சிவப்பு மஜெண்டா மற்றும் கபில வர்ணச் சேர்க்கையை நான் மிகவும்
விரும்புகிறேன்’ என்றாள் தெற்றுப்பல் அழகி.
ஆகவே அவர்களிருவரும் உடனடியாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
‘என் காதலனை அகாலமாக இழந்தது போல் உங்களை நான் இழக்க விரும்பவில்லை’ என்றும்
தெற்றுப்பல் அழகி சொன்னாள்.
இப்போது மிகவும் விஷேடமான திருமண ஊர்வலம் நடைபெற இருக்கிறது. மணமகள்
தெற்றுப்பல் அழகி மணமகன் அன்புடையான்.
நதிகளையும் மலைக்குன்றுகளையும் பிரசித்தி பெற்ற நகரங்களையும் நெடுஞ்சாலைகளையும்
குகைப் பாதைகளையும் அவர்கள் கடக்க இருக்கிறார்கள். நடந்தும் விமானப் பயணம்
மூலமாகவும் ஈருருளிகளிலும் திருமணக் காரிலும் அவர்களின் பயணம் தொடரும்.
‘இந்தத் திருமண ஊர்வலம் குறித்து நீங்கள் சந்தோஷமடைகிறீர்கள் தானே’ என்று
அன்புடையான் கேட்கவும் தெற்றுப்பல் அழகி ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.
இந்த ஊர்வலம் ஏன் விஷேமானது என்றால் ஊர்வலத்திலே இரண்டேயிரண்டு மனிதர்கள்
மாத்திரமே கலந்து கொள்கிறார்கள். மணமகளான இளவரசி தெற்றுப்பல் அழகியும்
மணமகனான இளவரசன் அன்புடையானும்.
அன்புடையான் கண்களை மூடிக்கொண்டான். நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட குதிரை
ரதத்தை அவன் ஒட்டிக் கொண்டிருந்தான். அன்புடையானின் கையிலே சாட்டை இருந்தது.
அடிக்கடி சாட்டையினால் வேகமாக அடிக்க அடிக்க ரதம் துரித வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. மணமக்களைச் சூழ்ந்தவர்களாக ஆயிரக்கணக்கான வீரர்கள் குதிரைகளிலே
அணிவகுத்து வருகிறார்கள்.
அவள் இளவரசி என்றபடியால் அவளுடைய மஸ்காரா விழிகளையும் சிவப்பு ரோஜா
உதடுகளையும் நீண்டு மெலிந்த கைவிரல்களையும் வளையலிட்ட மணிக்கட்டுக்களையும்
கருங்கூந்தலையும் அன்புடையோன் அடிக்கடி ‘உற்றுப் பார்த்து’ நானோர் அதிர்ஷ்டசாலி
என்று வியந்தவாறே’ இளவரசிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று
தெற்றுப்பல் அழகியைப் பார்த்துக் கேட்டான்.
‘நீங்கள் இளவரசிகளையும் பேரழகிகளையும் தேடித்திரிகிறீர்கள். நான் கண்டுபிடித்தவனோ
மிகவும் சாதாரண மனிதனாக இருந்தான். இன்று அந்த அன்பு இதயத்தை இழந்து
தவிக்கிறேன். துணிச்சலாகக் காரியம் பார்ப்பது அவசர வேளையிலே மற்ற மனிதர்களுக்கு
உதவி செய்வது எரிந்து கொண்டிருக்கும் தீக்குள்ளிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்றுவது
என்று அவன் செய்து கொண்டிருந்த காரியங்களை நான் மிகவும் விரும்பினேன். அதுவே
காதலாக மாறியது’ என்றாள் அவள்.
‘இன்னும் அவனை ஞாபகம் வைத்திருக்கிறீர்களா? அவனை மறந்து விடுங்கள். நாங்கள்
விரைவில் கணவன் மனைவி ஆக இருக்கிறோம். நல்ல வேளையாக தப்பிப் பிழைத்து
விட்டீர்கள். உங்கள் பேரழகுடன் ஒப்பிடக்கூடிய எதுவும் அவனிடம் இல்லை. மேலும் மரணம்

காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் அபாயகரமான தொழிலை அவன் செய்து கொண்டிருந்தான்’
என்றான் அன்புடையான்.
‘ஆனால் அவன் உங்களைப் போலில்லை. அடிக்கடி நான் உங்களை நேசிக்கிறேன் என்று
சொல்லிக் கொண்டிருப்பான். அது உங்களால் முடியாமல் இருக்கிறது’
‘நீங்கள் சொல்லுவதை நான் ஒப்புக் கொள்கிறேன். உங்கள் மீதான அன்பை வெளிப்படுத்த
நான் நினைக்கும் போதெல்லாம் என்னுடைய உதடுகள் உலர்ந்து ஒன்றோடொன்று ஒட்டிக்
கொள்கின்றன. சிலவேளை நான் பூச்சியாக மாறி விட்டேனோ தெரியாது. பூச்சிகள்
தம்முடைய காதலை வாயினால் பேசுவதில்லை அல்லவா?’ என்றான் அன்புடையான்.
பூச்சிகளைப் பற்றிய அவனுடைய கிறுக்குத் தனமான பேச்சு தெற்றுப்பல் அழகிக்கு வியப்பைத்
தந்தது.
‘நீங்கள் எப்படி பூச்சியாக மாறுவதாம்?’ என்று அவள் கேட்டாள்.
‘நாம் பிதற்றுவதை விட்டு விடுவோம். உங்களுக்காக ஒப்பனைக் கலைஞர்கள்
காத்திருக்கிறார்கள். இன்றைய தினத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியான மணமகனாக நான்
இருக்கிறேன். ஓர் இளவரசியை திருமணம் முடிக்கப் போகிறேன்’ என்றான் அன்புடையான்.
அவள் க்ளுக்கென்று சிரித்தாள்.
‘திருமணப் பரிசாக இளவரசியான உங்களுக்கு ஓர் அழகான வாள் காத்திருக்கிறது’ என்று
அன்புடையான் சொன்னதும் தெற்றுப்பல் அழகி வசீகரமாகச் சிரித்தாள். அப்போது
அவளுடைய தெற்றுப்பல் பளீரென்று வெளியே பளிச்சிட்டது. அந்த தெற்றுப்பல்லின்
மீதுதான் அன்புடையான் பித்துப்பிடித்தவன் போல் மையல் கொண்டிருந்தான்.
‘திருமண மோதிரத்தை உங்கள் மோதிர விரலில் அணிவித்த மறுகணமே இந்த வாளை
உங்களுக்குத் தந்து விடுவேன்’ என்றும் சொன்னான் அன்புடையான்.
‘வாளிற்குப் பதிலாக மணப் பெண்ணிற்கு உங்கள் அன்பைப் பரிசளிக்கலாமே’ என்று
தெற்றுப்பல் அழகி அவனிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள். அவன் அதற்குப்
பதிலளிக்காமல் அன்பையும் விட இந்த வாள் மகத்துவம் மிக்கது என்பதை அவளுக்கு
உணர்த்துவதற்காக அந்த வாளை விபரிக்க ஆரம்பித்தான்.
அன்புடையானிடம் மிகவும் பெறுமதியான இரண்டு புத்தகங்கள் இருந்தன.
ஒன்று Richard Burton என்பவர் எழுதிய Book of the Sword மற்றது Ben Boos என்பவர் எழுதிய
Swords : An Artists Devotion.
அத்தோடு சாமுராய் வீரர்களின் வாழ்க்கையையும் வீரதீரச் செயல்களையும் சித்தரிக்கும்
நிறையப் புத்தகங்களை தன்னுடைய புத்தக ராக்கையில் அடுக்கி வைத்திருந்தான். அதற்குள்
முக்கியமாக Eiji Yoshikawa என்ற எழுத்தாளர் எழுதிய Musashi என்ற நூலும் இருந்தது.
‘மியுஸாஷி என்ற இந்தப் புத்தகத்தின் அட்டைப்படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது’
என்றாள் தெற்றுப்பல் அழகி.

அவளுக்குப்புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கிடையாது. புத்தகத்தில் வர்ண ஓவியங்களோ
புகைப்படங்களோ இணைக்கப்பட்டிருந்தால் அவைகளை விபரிப்பதில் அவள் கில்லாடியாக
இருந்தாள்.
தெற்றுப்பல் அழகிக்கு தீராத மோகம் எதன் மீது இருந்ததென்றால் தன்னுடைய வசீகரம்
வாய்ந்த முகத்தின் மீதும் வளவளப்பான தன் மேனி மீதும்.
தன்னுடைய மேனியும் முகமும் எப்போதும் பார்வையாளர்களை ஈரக்க வேண்டுமென்பதற்காக
எத்தகைய அழகுச் சிகிச்சையைச் செய்யவும் அவள் தயாராக இருந்தாள். தொட்டால் இரத்தம்
சுண்டி விடக்கூடிய மேனியோடும் நிஷ்களங்கமான வதனத்தோடும் அவள் நடமாடினாள்.
அவளுடைய கல்லூரி வாழ்க்கை கொடுமையானதாக இருந்தது. கல்லூரி மாணவியாக அவள்
வெட்கத்துடன் திரிந்தாள். தன்னுடைய முகத்தை இயலுமானவரை மற்றவர்கள் கண்டு
விடாதபடி புதைத்துக் கொள்வாள்.
கறுப்புப் புள்ளிகளாகவும் காயமுற்ற பருக்களாகவும் மேடு பள்ளங்களாகவும் அவளுடைய
முகம் களேபரமாக தோற்றமளித்ததே அவளுடைய தாழ்வுணர்ச்சிக்குக் காரணம். முகக்
கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் அவள் தனக்குத்தானே சொல்லிக் கொள்வாள் ‘நான்
இவ்வுலகில் வாழ அருகதையற்றவள்’
கட்டிளமைப் பருவத்திலிருக்கும் எல்லா நங்கைகளையும் போலவே கண்ணிற்பட்ட
குழைமங்களையும் திரவச் சவர்க்காரங்களையும் அவள் முகத்தில் அப்பினாள், விற்றமின் ஈ
மாத்திரைகளை உட்கொண்டாள். ஒப்பனை நிலையங்களில் அடிக்கடி காணப்பட்டாள்.
அதியுச்ச மோஸ்தர் நுட்பங்களையும் உத்திகளையும் தன்னில் பிரயோகித்தாள்.
இரசாயனச் சேர்வைகள் தன்னுடைய முகத்தை குப்பைத் திடலாக்கி விட்டது என்பதை
தெற்றுப்பல் அழகி எப்போது உணர்ந்தாலென்றால் ஒரு நாள் அவளுடைய அறைத்தோழி
அவளைப் பார்த்து ஒன்முகம் இருளடைந்து போய் அசிங்கமாக இருக்கிறதே, நீ தற்கொலை
செய்யப் போகிறாயா என்று கேட்ட போதுதான்.
தெற்றுப்பல் அழகி அதிர்ச்சியடைந்தாள். தலையணைக்குள் புதைந்து கொண்டு குலுங்கிக்
குலுங்கி அழுதாள். மூன்று நாட்கள் கல்லூரிப் பக்கமே போகாதிருந்தாள். தோழிகளின் சகல
உள்வரும் அலைபேசி அழைப்புக்களையும் துண்டித்தாள்.
அப்போதுதான் முகத்தை வசீகரமாக்கும் சஞ்சீவி கூரையைப் பிய்த்துக் கொண்டு
அகஸ்மாத்தாக அவளிடம் வந்து சேர்ந்தது. அந்தச் சஞ்சீவி ஒரு கவிதைக்குள் ஒளிந்து
கிடந்ததை அவள் கண்டுபிடித்தாள்.
இயற்கையின் அழகிகள் பிளமிங்கோ என்றும் கண்ணாடிச்சிறகுப் பட்டாம்பூச்சி (Glass Winger
Butterfly) என்றும் Beluga திமிங்கிலம் (Beluga Whale) என்றும் அந்தக் கவிதை சொல்லியது.
ராஸ் பெரிப் பழங்களோடும் பூவிதழ்களோடும் கறுப்பு பெர்ரிகளோடும் காட்டு மயில்கள்
கூடிக்குலாவி வாழ்கின்றன என்ற அர்த்தமும் கவிதைக்குள் பொதிந்திருந்தது.
ஆகாயக் கழுகுகளே நீங்கள் மிதந்து வசீகரிக்கிறீர்கள் நாரைகளே நீங்கள் பாடுவீராக. சிட்டுக்
குருவிகள் என்னை முத்தமிடட்டும். என்றவாறு கவிஞன் எழுதிக் கொண்டு போயிருந்தான்.

கல்லூரியின் சஞ்சிகைப் பலகையிலே அந்தக் கவிதையைக் கண்டவுடன் தெற்றுப்பல்
அழகிக்கு பளிச்சென்று ஒளிவெட்டுபோல் ஒரு துப்பு கிடைத்தது.
பிரமிப்பூட்டும் இயற்கையானது உன்னை வசீகரமாக்கும் என்ற தாரக மந்திரம்தான் அது.
இயற்கையான மூலிகைகள் வழியாக அழகுச் சிகிச்சை செய்யும் பெண்ணொருத்தி அவளுக்கு
உதவ ஒப்புக் கொண்டு மூன்று சூத்திரங்களை மந்திரித்தாள். உப்பு கக்கரிக்காய் முகச்சூத்திரம்,
கடலைமா பாதாம் எண்ணெய்ச் சூத்திரம், மஞ்சள் பால் கடலைமாவு முகச்சூத்திரம் ஆகிய
அந்த மூன்று அழகுச் சூத்திரங்களையும் சுழற்சி முறையில் பின்பற்றிய தெற்றுப்பல் அழகி
இன்று மற்றவர்கள் வியக்கும் வகையில் தன்னை அழகியாக மாற்றியிருக்கிறாள்.
-10-
‘மலைக்குன்றின் உச்சியிலே அரண்மனையை நிர்மாணித்து ஆட்சி செய்த
கொடுங்கோலனுடன் போரிடுவதற்காகச் சென்ற சாமுராய் வீரன் ஒருத்தனிடமிருந்து
என்னுடைய பாட்டனாரின் பாட்டனார் இந்த வாளை பரிசாகப் பெற்றுக் கொண்டார்’ என்று
சொன்னான் அன்புடையான்.
சாமுராய் வீரன் பிரசித்தி பெற்ற சாகசக்காரனாக விளங்கினான். என்றளவுக்கென்றால் அவன்
தன்னுடன் அழைத்துச் சென்றது ஒரு கறுப்புப் பூனையை மாத்திரமே. மற்றது அவனிடம்
அவனுக்கே சொந்தமான சாமுராய் வாள் இருந்தது.மேலும் தன்னுடைய சட்டைப் பைக்குள்
மயிலிறகையும் எழுத்து கோலொன்றையும் மழித்த தலையை மறைப்பதற்காக ஆரஞ்சு
நிறமான தொப்பியொன்றையும் வைத்திருந்தான்.
ஆகவே தனியாகச் சென்ற அவன் கொடுங்கோலனுடன் போரிட்டு அவனை வெட்டிக்
கொன்றான்.
‘நீ உன்னுடைய நாட்டிலே ஆட்சி செய்யக் கடவதாக’ என்று என்னுடைய பாட்டனாரின்
பாட்டனாரை ஆசிர்வதித்த சாமுராய் வீரன் தன்னுடைய வாளை அவருக்கு அன்பளிப்பாகக்
கொடுத்தான்.
மேலும் அவரும் சாகசக்காரர் என்பதையும் சாமுராய் வீரனுடன் அவரும் தோளோடு தோள்
நின்று எவ்வாறு சாகசங்கள் புரிந்தாரென்பதையும் மாயாஜாலக் கதையொன்றைச் சொல்வது
போல் அன்புடையான் விபரித்துக் கொண்டே போனான்.
அன்புடையான் சொன்ன கதை நம்பமுடியாததாக இருந்தாலும் தெற்றுப்பல் அழகி அந்தக்
கதையை சிறுயொருத்தி கதை கேட்பதைப் போல் ஆச்சரியத்துடன் செவிமடுத்துக்
கொண்டிருந்தாள்.
புத்தக ராக்கையில் அடுக்கப்பட்டிருந்த போர் வாட்களை வர்ணிக்கும் இதிகாசங்களையும்
சாமுராய் வீரர்களின் போர்ச் சாகசங்களையும் அன்புடையான் நெட்டுருப்பண்ணி கரைத்துக்
குடித்திருந்தான்.

புத்தகங்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்களும் விளக்கப் படங்களும் அவனுக்கு எப்படி
அத்துப்படியோ மீண்டும் மீண்டும் அந்தக் காவியங்களை அவன் சொல்லக் கேட்டதன் பின்னர்
தெற்றுப்பல் அழகிக்கும் அத்துப்படியாயிற்று.
அடுத்ததாக அன்புடையான் அவளைப் போர் வாளை வைத்திருக்குமிடத்திற்கு அழைத்துச்
சென்றான். இரகசியமான நிலவறைக்குள் செம்பினால் செய்யப்பட்ட நீளமான ஒரு
பெட்டிக்குள் அந்த வாள் இருந்தது.
‘இந்த அபூர்வமான போர்வாள் என்ன பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது தெரியுமா?’
என்று அவன் கேட்டான்.
தெற்றுப்பல் அழகி ஏற்கனவே பேசாமடந்தையாக மாயிருந்தாள். வாள் பாதுகாப்பாக
வைக்கப்பட்டிருந்த செப்புப் பெட்டியின் கண்ணைக் கவரும் பேரழகு அவளை அவ்வாறு
ஆக்கியிருந்தது.
பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் பெட்டியின் பல வர்ணங்களிலான வெளிப்பூச்சு மெருகு
குலையாமல் இருந்தது. பெட்டி இத்துணை வசீகரமாக இருக்கும் போது போர் வாள்
எப்படியெல்லாம் என்னை வசியப்படுத்தப் போகிறதோ என்ற நினைப்போடு அவள்
தியங்கியிருந்தாள்.
‘இந்த வாள் தீப்பிளம்புப் பூதாகரம் (BLAZE BOOM) என்று அன்புடையான் உச்சரித்ததும்
அவளது மேனி சிலிர்த்து நடுநடுங்கியது. அந்தப் பெயர் மாத்திரமே அவளது நரம்புத்
திரட்டுக்களைச் சுண்டி இழுத்து ஆட்டங்காணச் செய்யப் போதுமானதாக இருந்தது.
வாளுறைக்குள்ளிருக்கும் வாளை அன்புடையான் திறந்து காட்டும் கணத்தை அவள்
ஆவலுடன் எதிர்பார்த்தாள்.
முற்றிலும் தங்க முலாமிடப்பட்ட பொன்னிற வாளுறைக்குள்ளிருந்த வாள் பளீரென்று
கண்களைக் கூசச் செய்தது. ஒற்றை வீச்சில் சிரசைத் துண்டித்துவிடக்கூடிய ஒற்றை விளிம்பு
கொண்ட மிகவும் கூரான போர் வாள் அது.
‘மிகவும் கனமான இந்த வாளின் கைப்பிடியும் மெல்லியதான சற்று வளைந்த வாளின்’
உடலும் எதிரி ஸ்தம்பிக்கக் கூடிய வீச்சு உந்துதலை அளிக்கும்’ என்றான் அன்புடையான்.
‘என் இரத்தம் உறைந்து உடம்பு ஒரு கணம் ஜில்லிட்டுப் போனது போல் உணர்கிறேன். இந்த
வாள் அதிர்ச்சியளிக்கும் தோற்றத்தில் இருக்கிறது’ என்று சொன்ன தெற்றுப்பல் அழகி வாளின்
விளிம்பைத் தொட்டுப் பார்ப்பதற்காக தன்னுடைய விரல்களை அருகில் கொண்டு போனாள்.
அன்புடையான் பாய்ந்து அவளுடைய மணிக்கட்டை இறுகப் பற்றிக் கொண்டான்.
‘வாளைத் தொடாதீர்கள். அது உங்களைக் காயப்படுத்தலாம். இரத்தம் வரும். நானே இதுவரை
தீப்பிளம்புப் பூதாகரத்தைத் தொட்டதில்லை’ என்றான் அவன்.
-11-
அவர்கள் இருவரும் விசாலமான சூனிய வெளியைக் கொண்ட மேல் மாடிக்கு வந்தார்கள்.

‘உங்களின் கீழ் மாடியை தட்டு முட்டுச் சாமான்களும் தளபாடங்களும் தாறுமாறாகத்
திணிக்கப்பட்டும் ஆடைகள் அங்குமிங்கும் வீசப்பட்ட இடமாகவும் காண்கிறேன். அங்கு
எந்தப் புள்ளியில் நின்றாலும் மூச்சுத் திணறுகிறது. இங்கே மேல் மாடியிலே முகத்தை தென்றல்
உரசிச் செல்கிறது. சுதந்திரமாகக் காற்றைச் சுவாசிக்கிறேன். மனது ரம்மியமாக இருக்கிறது.
பிரமாண்டமான ஜன்னலுக்கூடாக அழகிய காட்சிகளை ரசிக்கிறேன். இத்துணை விசாலமான
இடத்தை எதற்காக வெறுமையாக விட்டு வைத்திருக்கறீர்கள்?’ என்று கேட்டாள் தெற்றுப்பல்
அழகி.
தெற்றுப்பல் அழகியின் கேள்வியைச் செவியுற்றவுடன் அன்புடையானின் முகம் நீண்ட
காலமாக மன அழுத்தத்தால் அவதியுற்ற நோயாளியின் சஞ்சலமுற்ற முகத்தைப் போல்
மாறியது.
என்றாலும் அவள் காணதவாறு சுதாகரித்தவாறே முகத்தை தீருப்பிக் கொண்ட அன்புடையான்
‘இந்த இடத்தில் தான் நம்முடைய திருமணம் நடக்க இருக்கிறது’ என்று சொன்னான்.
இந்தச் சூனிய வெளியில்தான் தன்னுடைய சிம்மாசனம் இருந்தது என்ற சமாச்சாரத்தையோ
அதனை கெச்சங் கெட்டவன் வெடுக்கென பிடுங்கிக் கொண்டு போய் விட்டான் என்ற
சமாச்சாரத்தையோ அவளிடம் எப்படிச் சொல்ல முடியும்?
இதேயிடத்தில் தான் இப்போது விருந்தினர்கள் கூடியிருந்தார்கள். தான் ஓர் இளவரசன்
என்பதைப் பறைசாற்றும் வகையில் விஷேடமாக வடிவமைக்கப்பட்ட ஆடம்பரமான
ஆடைகளை அணிந்து மணமேடையில் அமர்ந்திருந்தான் அன்புடையான்.
மேலும் மேடைக்கென Camila d’Ericco upholstered throne என்ற ஆசனத்தை அதிக விலை
கொடுத்து விஷேடமாக இறக்குமதி செய்திருந்தான். அன்புடையான்.
அதைப்போல் தெற்றுப்பல் அழகிக்கான விஷேடமான ஆடையலங்காரங்கள் இன்னுமொரு
அறைக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அதற்கென மூன்று நிபுணத்துவம் மிக்க திருமண
ஒப்பனைக் கலைஞர்களை வரவழைத்திருந்தான் அன்புடையான்.
அவர்களுக்கு அவன் கண்டிப்பாக இட்ட கட்டளை என்னவென்றால் ஆடையலங்காரம்
முடிந்ததும் அவள் அச்சொட்டாக இளவரசியைப் போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதே.
திருமணத்துக்குரிய நேரம் வந்ததும் மணமகளை அழைத்துச் செல்லும்படி மணமகனுக்கு
சிறுமியொருத்தி வந்து செய்தி சொன்னாள்.
ஆவலுடன் தெற்றுப்பல் அழகியின் ஒப்பனை அறைக்குள் நுழைந்த அன்புடையான் உலகிலே
எங்குமே காணக் கிடைக்காத அபூர்வமான ஓர் இளவரசியான மணமகள் அங்கே நின்று
கொண்டிருப்பதைக் கண்டான்.
தெற்றுப்பல் அழகியான அந்த இளவரசி தலையை முற்றாக மழித்திருந்தாள். முகத்திலே
அப்போதுதான் அவளாகவே ஏற்படுத்திக் கொண்ட நிறைய சின்னச் சின்ன கீறல்
காயங்களைக் கொண்டிருந்தாள். மேலும் தன் மேனியில் கசியும் ஒவ்வொரு சொட்டு இரத்தமும்
தெளிவாகத் தெரிய வேண்டுமென்பதற்காக ஈடுப்பிலே வெள்ளை நிற பாவாடை

அணிந்திருந்த அவள் இகழ்ச்சியாக அவனைப் பார்த்தவாறே ஆடைகளணியாத தனது
வெறுமையான முதுகிலே தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தாள்.

 

-எம் எம் நெளஷாத்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *