இரண்டு கல்லறைகள்
—————————— ——–
முகத்தைச் சுளித்தபடி
அன்றே இறந்து விட்டது என்பூமி
துரத்தி மொய்த்த சூரியனும் மாறிப்போனது
மேக ரதம் செலுத்தும் சாரதியும் அகாலமாகி விட்டான்
நேரம்
காலமறியாமல் பேராவசத்தோடு
தேநீர் அருந்துகிறது
கண்ணைக் கசக்கி அழுதபடி காற்று
ஆற்றின்மேல் நீண்டு படுக்கிறது
கனவுகள் பிணங்களாய் இறந்து மிதக்கின்றன
தீரா அன்போடு ஒரு புன்னகையை
வெகு காலமாக ஒளித்து வைத்திருந்த
இரண்டு கல்லறைகளில் ஒருவன்
உயிரோடு புதைக்கப்பட்டிருக்கிறான்
பியானோக் கட்டைகள் மேல்
நடந்து திரியும் பூனையாக
சக மனித அடையாளங்களை இழந்து
நானும்
நேற்றிரவு ருசித்த நித்திரையில்
ஊற்றி வைத்திருந்தாள் மதுவை.
பென்சில்
—————-
பென்சிலை விடவும் நெருக்கமானது
எதுவுமில்லை
நேரான முதுகுடைய ஒரு நாற்காலி
ஒரு கூஜா
உள் முற்றத்திலிருந்து
மங்கலான ஒளி வருவதற்கான
ஒரு ஜன்னல்
மேலேறும் கொடியின் உச்சியில்
ஆறு நிறங்களோடு ஒரு மலர்
மூடிய கதவுக்குப் பின்னாலிருந்து
பார்ப்பதுபோல் ஒரு பெண்ணையும் வரைகிறாள்.
கடல் இல்லாத கப்பல்
வால்களுள்ள மனிதர்கள்
கண்கள் கொத்தி எடுக்கப்பட்ட மீன்கள்
ஊரைவிட உயரத்திலான ஆறுகள்
தொலைந்து போய்விட்ட தூரம்
ஒரு நிமிஷம் கூட இளைப்பாற முடியாமல் கிடந்து கிறுக்குகிறாள்
சுவரில் சாய்ந்து நிலைத்து நின்று
பின் கால்கள் வலிக்கவும்
கீழே அமர்கிறேன்
கடற் கொள்ளைக்காரர்களின் தொப்பியோ என்று அண்ணார்ந்தேன்
கரிய பென்சிலில்
மேலும் சூட்டைக் கிளப்பினாள்
ஒரு சூரியனின் புறப்பாடு அது.
எலுமிச்சை இலையளவு வாசல்
—————————— ———————
இந்நாளே
அழுது கதறாமல் திரியப் பழகு
வண்ணத்துப் பூச்சியே
இளங்காலைக்குத் தேநீர் ஊற்று
பால் கிண்ணமே
பூனைக்குத் தயாராகு
செவிகளை அரியப்போகும் பேரூந்தே
அங்கே நில்
என் காலை விடியப் போகிறாள்
மதர்த்த திராட்சைக் குலைகளை ஏந்தி
பேசப்பழகாத குழந்தைகளை
அவள் அள்ள வருகிறாள்
தூறும் மழையே பேசு
ஆற்றின்மேல் படர்ந்த தென்னையே
வான வில்லொன்று செய்
வியர்வை மின்னும் உன் கழுத்தை
நான் அண்ணார்ந்து ரசிக்க
குருத்து மணல் வார்த்த
எலுமிச்சை இலையளவு வாசலில்
பதுங்கி உறைகின்ற வண்டே
குடிசையை மேய்கின்ற பனியே
பலகணி திறக்க விடு
தூரத்தில் கொடுகும் காக்கையாரைக்
கோபுரமாக்கிய இருளே பிரி
எல்லா மொழிகளுமறிந்த காலையே
உன் மொழியில் பாட்டொன்று தா.
-நபீல்.
Please follow and like us: