சந்தையில் பிடித்துவந்த

கோழிக்கு

மகள் மிக ஆசையோடு

பொக் பொக்

எனப் பெயர் வைத்தாள்

ஒவ்வொருவராக உச்சரிக்கப் பழகி

பிறகு

தனித் தனியாகவும் சேர்ந்தும்

மொத்த குடும்பமுமே அழைத்தோம்

பொக் பொக்

பொக் பொக்

 

 

தினமும்

தண்ணீர் வைத்தோம்

தானியங்களிட்டோம்

மகள்

கொஞ்மே கொஞ்சம்

தானியங்களை வாயிலிட்டு

மென்று

தரையில் வைத்தாள்

 

 

 

பாட்டியோடு

பூங்காவுக்குச் சென்று

மதியம் வீடு வந்தவள்

நுழைய நுழையவே

குழம்பின் வாசம் பிடித்து

பசி உயிர்போவதாக

செய்கை செய்தாள்

 

 

 

மறுநாள்

தெளிந்த காலையில் கேட்டாள்

அப்பா எங்கே பொக் பொக்

அடங்காத கழுதை

எங்காவது மேய்ந்துகொண்டிருக்கும் என்றேன்

சின்னத் தடியோடு

வீடு வீடாய்

காடு காடாய்

தேடியலைகிறாள்

பொக் பொக்

பொக் பொக்

 

 

பொக் பொக்

பொக் பொக்

***

 

 

இவ்வளவு பேரை

முட்டித் தூக்கியெறிந்தும்

நாஸ்தியாக்கியும்

வெறியடங்காத

உலோக வீரனே

படையல் வைத்து

உன்னை

ஆசுவாசப்படுத்தத்தான்

இதோ அவர்கள்

உன் இரும்புப் பாதையில்

சரக்கோடு அமர்ந்திருக்கிறார்கள்

பழக்கம் இல்லை

என்று மட்டும் சொல்லிவிடாதே

சொல்லிவிட்டு

பாவி மகன் நீ

நிற்காமல் போய்விடாதே

பிறகு

தாங்கவே தாங்காது

எங்கள் ஜீவ மது.

 

***

 

 

நனவில் போலல்லாது

கனவில் நான்

மிகத் தீவிரமாக

யோசிக்கும் பாவனையில்

புகைக்கிறேன்

புகை கலையக் கலைய

எதிரே

மெல்ல வெளிப்படுகிறதொரு வீடு

ஜன்னலுக்கு வெளியே

கைகளை நீட்டி ஆட்டி

ஒரு பாலகன்

தன்னைக் காப்பாற்ற அழைக்கிறான்

என் யூகம் சரியெனில்

இன்னும் சற்று நேரத்தில்

அவ்வீடு

அவனை விழுங்கிவிடும்.

 

***

நானிங்கு வந்தது

பந்தியிலமர்ந்து

போஜனம் செய்யவோ

கூட்டம் கூட்டி

வித்தை காட்டவோ

மறைத்து வைத்திருக்கும்

கத்தியை

கொழுத்த சதையில்

குத்திக் கிழிக்கவோ அல்ல

இங்கு

ஏதோ ஒன்றின் மறைவில்

சதா குழந்தையைப்போல

ஒளிந்துகொள்ளும்

குறும்புக்கார வாழ்வைத்

தேடித் தேடித்தான்

 

***

கல் வலி

 

நெஞ்சின் மீது நடப்பட்ட கல்

என் குழந்தை

எப்படி அமர்ந்திருக்குமோ

அப்படியே இருக்கிறது

என்ன பேசினாலும்

என்ன விளையாட்டுகாட்டினாலும்

பிடித்துவைத்தப்

பிள்ளையார் போல

அசைவின்றியிருக்கிறது

இதற்கு

குதிக்கவே தெரியவில்லை

அதுசரி

என்ன இருந்தாலும்

கல்தானே.

 

***

-நெகிழன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *