தானிய ஒளி
எனது நம்பிக்கையின்
பத்தாவது தலையும்
துண்டிக்கப்பட்டபோது
கண்ணாடிப் பாத்திரத்தை
தாரூற்றி நிரப்புவதுபோல
எனதுடலை
எதுவோ
இருளூற்றி நிரப்பியது
முடிவின் உஷ்ண மூச்சு பட்டு
முகமெல்லாம் வெந்துகொண்டிருந்தது
நான் கடைசி ஆசையாக
கற்பனையில்
ஒளியைக் கனவு கண்டேன்
இறக்கைகளை அடித்துக்கொண்டு கத்திய பறவை
வானெங்கும் பறந்தலைந்து
கொத்தி வந்தது
ஒளிரும் தானியமான நட்சத்திரத்தை
அதன் பிறகு விளைந்ததுதான்
எனக்குள்
கண்ணுக்கெட்டும் தூரம் வரை தெரிகிற
வெளிச்சத்தின் வயல்.
***
செல்கையின் வரைதல்
நமது சிறிய வீட்டிலிருந்து
நீ வெளியேறியதும்
அதுவரை
ஒரு பீரோவைக்கூட
உள்நுழைய விடாத
நமது வாசற்படியை
உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டது
வெறுமையின் யானை
அது
தன்னுடலால்
வீட்டையே நிறைத்துவிட்டது
இப்போதெல்லாம்
யாரோவொரு வழிப்போக்கனைப்போல்
வாசற்படியிலேயே
அமர்ந்து, உண்டு, உறங்கி
எழுந்து செல்கிறேன்.
உனது செல்கை
இவ்வீட்டின் சதுர அமைப்பை
ரொம்பவும் நசுக்கி
கோடாக மாற்றிவிட்டது
***
உறுமும் நகரம்
மனிதர்களாய்ப் பிறந்துவிட்ட
பிள்ளையார் எறும்புகள்
இந்நகரத்தை
அவசர சிகிச்சைப் பிரிவைப் போல
மாற்றிவிட்டன
இங்கிருந்து
எப்படியாவது வெளியேறிவிடவேண்டுமென்று
விம்மிவிம்மிப் புடைக்கிறது மனம்
நம்மை இவ்வூரில் இறக்கிவிட்ட பேருந்து
ஏன்
நம் ஊர்ப் பாதைகளையும்
கையோடு கொண்டுசென்றுவிட்டது
அதற்குப் பிறகு
அந்தப் பேருந்தைப்
பார்க்கவேயில்லையென சிலரும்
மாறுவேடத்தில் வந்துபோவதாக சிலரும்
கூறினார்கள்
உண்மையில்
உண்மை எதுவென
உண்மையைக் கேட்டேன்
அதுவும் பொய் சொன்னது.
***
-நெகிழன்
சிறப்பு.. செல்கையின் வரைதல் வெகு சிறப்பு