சிறந்த தத்துவவாதியான Nassim Nicholas Taleb தனது ‘The Bed of Procrustes’ நூலில் “What we call fiction is, when you look deep, much less fictional than nonfiction; but it is usually less imaginative” என்ற கருத்தைப்பதிவிடுகிறார். இது ‘பட்டக்காடு’ எனும் படைப்பின் மீதான் விமர்சனங்களுக்கான எதிர்வினையாக கொள்ள முடியும். நாவல் என்பதை இவ்வாறுதான் வரைய வேண்டும் என்று ஓர் குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிவிட முடியாது. ஆனால் நாவலானது எவ்வாறான குணாம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை குறிப்பிட முடியும்.ஓர் வாசகனின் ஒற்றைப்படையான கருத்தியலை மாத்திரம் கொண்டு ஓர் நாவலை இலக்கியத்தரமற்றதாக கண்ணை மூடிக்கொண்டு கடந்து சென்றுவிடவும் முடியாதல்லவா.
அமல்ராஜ் பிரான்சிஸின் ‘பட்டக்காடு’ zero degree பதிப்பகத்தால் வெளியிட்டிருக்கின்ற 2020இன் முக்கியமானதோர் நாவல். இதை நான் குறிப்பிடக்காரணம் இல்லாமலில்லை. இன்றைய சூழலில் ஓர் படைப்பு எந்த பதிப்பகத்தில் வெளியாகிறது என்பது கூட சில சமயங்களில் அதை அடுத்த கட்ட மார்கட்டிங் லெவலிற்கு கொண்டு சென்று விடும். ஒரு வகையில் இலகுவில் அது வாசகர்களை அடைந்துவிடும் என்பது கவனத்திற்கொள்ளவேண்டிய விடயம்.
ஒரு படைப்பை எந்தப்புள்ளி நாவலாக மாற்றுகிறது என்பது மிகவும் முக்கியமானதொன்று. எல்லா படைப்பாளிகளாலும் ஓர் நாவலை இலகுவில் கட்டமைத்துவிட முடியாது.நாவல் கோட்பாட்டை விரும்பியோ விரும்பாமலோ தன்னுள் பொதித்திருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. (இரண்டாவது நிபந்தனையை பிறகு கூறுகிறேன்) அந்த வகையில் பட்டக்காடு நாவல் அந்நிபந்தனையைப் பூர்த்தி செய்திராமல் இல்லை. காதல்,கடல்,நாடு, நட்பு என்ற பல கருத்தாடல்களின் இடைவெட்டுத்தான் இந்நாவல். இதில் எழுத்தாளர் கூறவந்த விடயங்கள், அதை அவர் கூறிமுடித்த மொடியூலேசன் மற்றும் அதை பிரஸ்தாபிக்க அவர் எடுத்துக்கொண்ட பிரயத்தனத்தையும் பற்றியெல்லாம் பேசேவண்டியுருக்கிறது.
முதலில் கடல். ஒரு நாவலுக்குள் ஓர் தலைப்பு சார்ந்து நாம் நிறையவே தகவல்களை உட்புகுத்த முடியும் ஆனால் ஓர் சிறிய கோட்டிற்கு அப்பால் அது வாசகனை திகட்ட வைத்துவிடும். அது நாவலுக்கான வாசகனின் பிரேமத்தை குறைத்துவிடும் வல்லமை கொண்ட அதேவேளை தனியாள் வேறுபாடும் கொண்டது.ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’, வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’, ஜோ டி க்ரூஸின் ‘ஆழி சூழ் உலகு’,மொண்டகோமெரியின் ‘தி சோல் ஒப் என் ஒக்டோபஸ்’ என்று நாம் அறிந்த படைப்புகளுக்கும் அது பொருந்திப்போகிறது. ஆனால் எப்போது பொதுத்தன்மையிலிருந்து விலகி வேறுபட்ட உரையாடல் தளத்திற்கு நாவல்கள் வாசகனை கூட்டிச்செல்வதானது அது பற்றிய உரையாடலுக்கான காரணமாய் அமைந்து விடுகிறது.பட்டக்காட்டை பொறுத்தவரையில் ;ஓர் தொடராக பத்திரிகையில் வாராந்தம் வெளியான கதையொன்றை எப்படி நாவலாக மாற்றுவது என்பதை சரியாகத்தான் பெரும்பாலான இடங்களில் செய்து முடித்திருக்கிறார்.கடலும் அது சார் பட்டக்காடு மக்களின் உணவுமுறையைக்கூட சலிக்காமல்தான் சில பகுதிகளில் தந்திருக்கிறார் என்று சொல்ல முடியும்.
இதுவரை நாவலை வாசித்தவர்களுக்கு தெரியும்; அங்கதச்சுவையை தனியே வைத்துவிட்டு வெறுமனே நாவலை பார்த்துவிட முடியாது என்பது. அது எழுத்தாளரின் இயல்புத்தன்மையின் வெளிப்பாடாகத்தான் இருக்கவேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அந்தோனியுடனான மதனின் உரையாடல்களை செதுக்குவதில் உள்ள நிலையும் அந்த தொகையில் அடங்கிப்போய்விடும். இப்போதும் நாங்கள் நண்பர்களுடனான எதிர்வினைகளை இவ்வாறே கட்டமைத்துக்கொள்வதால் இளையவரை அது கவரும் உத்தியாக நாவலுக்கு அது பலம் சேர்த்து விடுகிறது. அந்தோனிதான் பரம்பொருளாக இருந்து மதனுக்கு பல இடங்களிலும் புத்தியுரைப்பது hamlet & horatio ஐ ஞாபகப்படுத்திச்சென்றது.
கயல் என்ற பாத்திரத்தை ஆரம்பத்தில் அமல்ராஜ் அவர்கள் வடிவமைத்தருக்கும் விதம் மெச்சத்தக்கதாயினும் கதையின் கிளைமெக்ஸ் சற்று மிகைப்படுத்தலான மனோநிலையை வழங்கவல்லது. ஆணின் காதலின் போதான மூளைக்குடைச்சல்களையும் கிறுக்குத்தனங்களையும் அவர் வரைந்த விதம் சிறப்பு. கயலை ஓர் போராளியாக காட்டவேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பத்திலிருந்தே அந்த பாத்திரத்தை bold ஆனதோர் வகையறாவில் படைத்தாரா இல்லை அது எதேர்ச்சையாக நகர்ந்ததா என்ற கேள்வி எனக்குள் உண்டு.
உதாரணமாக,
//கயல் தொடர்பில் என்னை எப்பொழுதுமே ஆச்சரியப்படுத்தும் ஒரு விடயம் என்றால் அது அவளுடைய தைரியம்தான். புற உலக அச்சுறுத்தல்களால் அவளுடைய ஓட்டத்தை ஒருபோதுமே தடுக்கமுடியாது. தன் சுயநிலைப்பாடு சார்ந்து இறுதிவரை தைரியமாகப் போராடும் ஒரு பெருங்குணம் படைத்த பெண் அவள். எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் மனத்தைரியம் எல்லாப் பெண்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை. கயலுக்கு அது பெருங்கொடையாக அருளப்பட்டிருக்கிறது.//
நிவேதாவுக்கும் இது பொருந்தும்.எழுத்தாளரை சிறந்த கதைசொல்லியாக இது உருமாற்றியிருக்கிறது.
எழுத்தாளர் அமல்ராஜ் பிரான்சிஸ்
நாவலின் அடிப்படையிலேயே போர் இழையோடியிருந்தாலும் நேரடியாக எதிர்கொண்ட துன்பவியலை அடிநாதமாக இல்லாமல், போரானது வன்னிக்கு வெளியே நெஞ்சின் உரத்தையும் நேச உறவுகளையும் எவ்வாறு தாக்கியது என்றுதான் பேசி முடித்திருப்பார். இயக்கங்கள் சார்புநிலை விடயங்களில் கருதுக்களை பதிவு செய்திருப்பினும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபாடுடற்ற மனோநிலையை அந்தோனியும் ஜோசப் மாஸ்டரும் கூட வெளிப்படுத்தித்தான் இருப்பார்கள். போர் சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பற்றி எவ்வளவோ பேசியாயிற்று என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
இரண்டாவது நிபந்தனைதான் வாசகர் பார்வையில் நாவல் எப்படியானது என்பது. அந்தவகையில் பல பாசிடிவ் கருத்துகளை காணமுடிகிறது.மேலும் உண்மைக்கும் நாவலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகளை காணக்கூடியதாக இருக்கிறது. நாவலில் பிரஞ்சை, எதிர்வினை, வியாகூலம் போன்ற சொற்களின் repetition குறைக்கப்பபட்டிருந்தால் இன்னும் சில தாள்களை மிச்சப்படுத்தக்கூடியதாய் இருந்திருக்கும். ‘பட்டக்காடு’ வாசித்து உரையாடப்படவேண்டிய நாவல்.
– ஷாதிர்