” பூச்செண்டு போல் ஒரு மனிதன் ” எனும் கதைகளின் தொகுதியில் இடம்பெறும் ஒரு புனைவு குறித்த விமர்சன பார்வை.
ஒரு நிகழ்வு தொடர்பான தோற்றப்பாட்டின் மீது உருவாக்கப்பட்டிருக்கும் தனித்துவமான நிலையை பல விதமான கருத்தியல் முறைகளூடாக சிதைத்து சிந்திப்பதன் மூலம் மேலெழும் வடிவங்களை ஊக எதார்த்தம் அல்லது Speculative Realism என்கின்ற பெயர் கொண்டு அழைக்கின்றனர்..
பிரதிகளில் உள்ள கருத்துகளில் எதார்த்தம் என்னும் விடயம் எழுத்துச் செயல்பாட்டினூடாக நிரப்பப்பட்டிருப்பதில்லை.
எழுதுபவர் ஏதோவொரு நோக்கத்தில் எழுதி விடலாம். ஆனால் அதில் என்ன உள்ளடங்கியிருக்கிறது, ஏன் அது அவ்வாறு உள்ளடக்கப்பட்டிருக்கிறது, அது எவ்வாறு நம்மை தொந்தரவு செய்கிறது, அதற்குள் மறைவாகச் செயல்படும் விடயங்கள் என்ன போன்ற கண்ணோட்டத்தில் வாசகன் பிரதிக்கு எதிர் நிலையிலிருந்து வாசிக்கும் போது உருப்பெறும் தோற்றங்களில் ஒன்றாக எதார்த்தமும் அமையக் கூடும்.
ஒரு காலத்தில் இலக்கியம் குறித்து மிக மேலோட்டமான சிந்தனைதான் புழக்கத்தில் இருந்தது. வெளிச் சூழலில் நிலவும் நேர்மையான அறம் சார்ந்த விடயங்களை எழுத்தில் கொண்டு வந்தால் அந்தப் படைப்பில் எதார்த்தம் பீறிடுவதாகக் கூறினார்கள். அடிப்படையில் அந்தப் பார்வை மிக தவறானது.
ஒரு பிரதியை உருவாக்குபவன் எதனையோ நினைத்துக் கொண்டு எதனையோ எழுத்தில் கொண்டு வருவான். அது பிரதியிலும், நிஜத்திலும் ஒரே விதமாக இருக்கிறதா என ஒப்பீடு செய்வது தற்காலத்திற்கான இலக்கியப் பார்வையாக இருக்க முடியாது.
ஏனென்றால் நிஜத்தில் உள்ள விடயங்களை அத்தனை துல்லியமாக பிரதியில் கொண்டு வர முடியாது. அதேநேரம் வாசகன் அதனை தனக்கான பிரத்தியேக பார்வை கொண்டுதான் பார்க்க முற்படுவான்.
அப்போது எழுதுபவன் வரையறுத்த அர்த்தமும், வாசிப்பவன் கண்டுபிடித்து உருவாக்கும் அர்த்தமும் வேறுபட்டு விடும். அதாவது வாசிப்பு அனுபவத்தின் போது பிரதிக்குள்ளிருந்து வேறுபட்ட அர்த்தங்கள் வெளிக்கிளம்பியபடி இருக்கும்.  எதார்த்தம் என்பதும் இவ்வாறுதான் பிரதிக்குள்ளிருந்து தற்செயலாக உருவாவதுதான்.
எனவே புனைவுகளை நிஜமான வாழ்வோடு ஒப்பிட்டு சீர்தூக்கிப்பார்ப்பதை விட குறிப்பிட்ட பிரதி என்ன வகையான அனுபவங்களை ஏற்படுத்துகிறது எனும் கோணத்தின் வழியாக சிந்திப்பது பொருத்தமானது என நினைக்கிறேன். அந்த வகையில் கட்டமைக்கப்படும் ஊகங்களே இந்த புனைவின் சம்பவ காட்சிகளை சிதைத்து மறு உருவமாக்கும் கருவியாகின்றன.
இந்தக் கதையை பற்றி பேசுவதற்கு முன் சில இலக்கிய அடிப்படைகளின் மீதான நம்பிக்கையை நாம் மீள் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது.
நவீனத்துவ இலக்கிய நம்பிக்கையில் ஒரு சிறந்த படைப்புக்கு மூன்று அம்சங்கள் முக்கியமானதாக நம்பப்பட்டது.
1 எதார்த்தம்
2 அழகியல்
3 மனிதநேயம்
இந்த மூன்றும் தற்கால இலக்கிய சிந்தனைகளினால் காலாவதி ஆனவையாக மாற்றப்பட்டு விட்டன.
இந்த மூன்று அளவு மதிப்பீடுகளுக்கும் புறம்பான ஒரு கதையாகவே ” மரத்துடன் பேசுதல் என்ற புனைவும் பட்டாம்பூச்சி என்ற நிஜமும் ” எனும் கதை அமைந்திருக்கிறது.
எதார்த்தம் என்பது குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் ரசனையின் அடிப்படையில் உருவாக்கப்படுவதாகும். நிஜமான நிகழ்வுகள் சார்ந்து அவர்களின் சூழ்நிலை நீதி அறங்களுக்கு ஏற்றவாறு அவர்கள் விரும்புகின்ற வகையில் அவற்றை செப்பனிட்டு வழங்குவதாகும்.
அழகியல் என்பது ஒரு கற்பிதம். எது அழகானது, எது அழகற்றது என்பது சம்பந்தமாக சுயமான பரிசீலனைகளைத் தடுத்து விட்டு ஒரு பொதுவான வடிவமாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்றை அழகாக கொண்டாட வேண்டுமானால் இன்னொன்றை அவலட்சணமாக்கி ஒதுக்க வேண்டும் எனும் அடிப்படையில் இருந்துதான் அழகியல் உருவாகியிருக்கிறது.  ஆனால் இதற்கு இன்று மதிப்பில்லை.
மனிதநேயம் என்பது எல்லோருக்கும் பொதுவானதாக கூறப்படுகிறது. ஆனால் அது தனிப்பட்டவர்களின் அல்லது ஏதோவொரு குழுமத்தின் விருப்பத்துக்கேற்ப மாறுபடுகிறது. அதனால் வன்மமும், மனிதநேயமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல அமைந்திருக்கிறது.
( இது பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை 2008 ல் வெளியான ” பெருவெளி ” சஞ்சிகையில் எழுதியிருக்கிறேன்)
இவைகளை கலை உற்பத்திகளில் கையாளுவதிலோ அல்லது வாசகனாக எதிர்கொள்வதிலோ புதிய அணுகுமுறைகள் தேவை. இதை ஓரளவு இக்கதை அனுசரிக்கிறது. ஊகங்களை அதிகமாக உருவாக்கி விளையாடுவதற்கு இந்த புனைவின் சம்பவங்கள் ஏற்புடைய களமாக இருப்பதுதான் இதன் சிறப்பாகும்.
கார்சியா, கொன்ஸ்டைன், கசாப்பு கடைக்காரன் எனும் மூன்று ஆண்களும் ஸிஸாரியா எனும் பெண்ணும் இந்தக் கதை சம்பவங்களுக்குள் உலவுகிறார்கள். இந்தக் கதை நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நேரற்ற ( non linear) விதத்தில் கதை சொல்லியால் கூறப்படுகிறது.  ஸிஸாரியா எனும் இளம் பெண் மரங்களோடு பேசும் போது பட்டாம்பூச்சியாக இருந்தாள் என்பதாக ஆரம்பிக்கும் கதை அவளது வாழ்வு அனுபவங்களின் சில பல காட்சிகளாக விரிகிறது. மரங்கள் பற்றி பேசிக் கொண்டு தொடங்கும் கதை மரங்கள் பற்றிய வேறொரு அபிப்பிராயத்தோடு முடிந்து விடுகிறது.
இங்கு மரங்கள் முக்கியத்துவம் கொண்ட கதை பொருளாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு சூழ்நிலையில் மரங்களின் மீதான வெவ்வேறு அபிப்பிராயங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் மனிதர்களுக்கு பதிலீடாக மரங்களோடு சம்பாசித்தலின் நியாயப்பாடுகள் உணர்த்தப்படுகிறது. மற்றொரு சந்தர்ப்பத்தில் அநீதிகளுக்கு எதிராக செயல்படாமல் வேடிக்கை பார்க்கும் செயலற்ற மனிதர்கள் மரங்களிற்கு ஒப்பானவர்கள் போலவும் கருதப்படுகிறது.
இந்தப் புனைவின் கதை சொல்லப்படும் விதத்திலும் இதன் வார்த்தைகள் காட்சிகளை கட்டமைக்கும் விதமும் கவன ஈர்ப்புக்குரியன. இலங்கையில் புது வகையான தோற்றத்தில்  புனைவுகளை எழுதி வரும் ராகவனுக்கு  இணையான கதைதிட்டமும் மொழிப் பிரயோகமொன்றும் இக்கதையில் வடிவமைந்திருக்கிறது.
மரத்தை மனிதர்களுக்கு பதிலியாக ஏற்படுத்திக் கொண்டு வெளிப்பட்ட லறீனாவின் “புளியமரத்துப் பேய்கள் ” எனும் புனைவையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இக்கதை குறித்து விவாதிப்பதற்கு  முன்னர் ஒரு திரைப்படம் பற்றி கூற வேண்டும். Christopher Nolan என்னும் ஹொலிவூட் திரைப்பட இயக்குனரின் Inception என்னும் படம் 2010 ல் வெளியானது.
இங்கு இந்தப் பிரதியிலுள்ள ” மரத்துடன் பேசுதல் என்ற புனைவும் பட்டாம்பூச்சி என்ற நிஜமும் ” எனும் கதையை வாசிக்கும் போது எனது ஞாபகம் வழியாக Inception திரைப்படம் தொந்தரவு செய்தது. கதை ரீதியில் இதற்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இரண்டு உருவாக்கத்திலும் கையாளப்பட்டிருக்கும் புனைவுத் தொழில்நுட்ப உத்தி ஒரே விதமாக இருக்கிறது.
அதாவது Inception படமானது கனவு மற்றும் நிஜம் ஆகிய இரண்டு தளங்களையும் காட்சி ஊடக வாயிலான புதிதான ரச அனுபவமாக விருந்தளித்தது. இன்று மனிதனை ஆட்கொண்டிருக்கும் Virtual Reality தொழில்நுட்பமானது நிஜத்திற்கும், கனவுக்கும் இடையிலான எல்லைகளை அகற்றி வரும் சூழலில் இது கலைப் படைப்பாக திரையில் வந்திருந்தது.    நிஜத்தில் திட்டமிடப்படும் சூழ்ச்சி முடிச்சுகளை கதைநாயகன் கனவின் புதிர் வெளியில் அவிழ்க்க நினைப்பான். கனவுவெளியில் சஞ்சரிக்கும் போது கதைநாயகன் நிஜத்தை சந்தேகிக்கும் நிலைக்கு சென்று விடுவான். இதன் போது பார்வையாளனின் ரசனையானது நிஜமும், கனவும் கலந்து உருச் சிதைந்த பிரம்மை ஒன்றுக்குள் அகப்பட்டுக் கொள்ளும்.
இது போன்றதொரு அனுபவத்தினை வாசகன் பெறக் கூடியதான புனைவுத்தியினால் வடிவமைந்த கதைதான் ” மரத்துடன் பேசுதல் என்ற புனைவும் பட்டாம்பூச்சி என்ற நிஜமும் ” எனும் கதையாகும்.
இந்தக் கதையின் வித்தியாசமான சிறப்பு எதுவெனில் இது எமது நிலவியலுக்கும் வாழ்வுக்கும் அந்நியமானதாக இருப்பதுதான்.
இந்தக் கதை நிகழும் சூழலும், நிலவியலும், இதில் உலவும் மனிதர்களும், அவர்களின் பழக்கங்களும், அவர்களின் வாழ்வு முறையும் நமது பண்பாடுகளுக்கு ஒத்து வராதவைதான். இந்த அந்நியத்தன்மைதான் வாசகனை எதிர் வாசக மனநிலையில் நிரந்தரமாக நிறுத்தி வைத்திருப்பதற்கும் அங்கு எல்லையற்ற புதுவிதமான அனுபவங்களை சுரப்பதற்குமான புனைதொழில்நுட்பமாக அமைந்திருக்கிறது.
இதனால் நமது நிஜமான சூழலில் நிலவும் அனுபவங்களை பிரதிக்குள் நிலவும் அனுபவங்களோடு பொருத்தி ஒப்பீடு செய்வதற்கான முனைப்பை விடவும் கதைச் சூழலின் மந்திரப் புதிர்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான வாசிப்பின் விழிப்புணர்வு அவசியமாகி விடுகிறது.
கதையில் பிரதானமாக வரும் பெண் ஆனவள் மரங்களோடு பேசும் போது பட்டாம்பூச்சியாக இருக்கிறாள் என்பதனை அவளது கணவன் ஜோடிக்கப்பட்ட புனைவு என நம்புகிறான். அதேவேளை இரவில் ஓநாய்கள் அவளை துரத்தும் போது அவள் பட்டாம்பூச்சியாகி விடுகிறாள் என்பதனையும் அவன் பிரம்மை என்ற அறிவியல் தந்திரோபாயத்தினூடாக பிரதியின் கதைக்களத்தினுள் கடந்து சென்று விடலாம். ஆனால் வாசக அனுபவத்தில் அதுவே நிஜத்தையும், கனவையும் அழித்து உருக்குலைந்து விட்ட புதியதோர் அனுபவ வெளிக்குள் அலைக்கழித்து விடுவதாயுள்ளது.
ஸிஸாரியா எனும் இளம் பெண், கடந்த காலத்தில் அனுபவித்த ஒரு துன்பியல் அனுபவத்தினையும், அதன்  பிறகான அனுபவ மாற்றங்களையும் விரிவாகவும் செறிவாகவும் விபரிப்பதற்கு பல்வேறு கிளைக்கதைகள் மூலமான பீடிகைப் புனைவுகள் மர்மமாக உருவாக்கப்படுவதும் அதன் பதட்டங்கள் தணியாமல் பேணுவதுமே கதைத் திட்டமாக அமைந்திருக்கிறது. இந்த துயர சம்பவத்தின் பிறகு அவளை நெடுநாளாய் காதலித்த கார்சியா என்பவன் விட்டோடி வேறு திருமணம் செய்கிறான்.
ஸிஸாரியா எப்போதும் மர்மம் நிரம்பிய பின்னணி கொண்டவளாக இருப்பதும் அவளது புதிய கணவன் அவளின் எல்லாவிதமான சங்கடங்களையும் அனுசரித்துக் கொள்பவனாகவும் இருப்பதாக இக்கதை வெளிப்படும் தருணத்தில் மனித வாழ்வுக்கான சமதள அறமொன்றைக் கட்டமைக்கும் தரத்தைப் பெற்று விடுகிறது.
திருமணத்திற்குப் பிறகான எதிர்பார்ப்புகளை எந்த நிலவியலுக்குரிய காதலர்கள் என்றாலும் தமது உரையாடலுக்குள் விவாதிப்பது சகஜம்தான். அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு எதிர்கால விருப்பம் என்ன என்பதாக ஸிஸாரியாவிடம் அவளது காதல் கணவன் கொன்ஸ்டைன் கேட்பதற்கு அவள் கூறும் பதிலானது வாழ்வை சிக்கலின்றி சுதந்திரமாக எதிர்கொள்ள போதுமானதாக இருந்தாலும் பண்ட மதிப்புகளூடாக நிர்மாணம் பெறும்  பண்பாட்டிற்கு முரணாக அமைக்கப்பட்டிருக்கிறது.  உன்னோடு வாழ்வதைத் தவிர, எளிமையான ஆடைகள், சாதாரண நகைகள் சாதாரண வீடு என ஸிஸாரியா கூறும் பதில் இலட்சிய வாழ்வு ஒன்றுக்கான கற்பனிப்பாக எடுத்துக் கொள்ளத் தக்கதாக அல்லா விட்டாலும் அவளைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது பல்வேறு விருப்பங்களால் நிரம்பியதாகவே எடுத்துக் கொள்ளத் தக்கது.
ஸிஸாரியா எனும் இளம் பெண்ணின் கனவில் மூன்று ஓநாய்கள் திடீரென தோன்றி மூர்க்கமாக குதறியெடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி விபரிக்கப்படுகின்றன. ஒருவரது உளத்தில் உருவாகும் பதட்டங்களுக்கு பல விதமான காரணங்கள் இருக்கக் கூடும். மனித மனம் என்பது மொழியறிவினால் நிர்மாணம் பெறுவதுதான், மனிதர்களுக்குள் வெளிச்சூழலின் பொருட்கள் மற்றும் செயல்கள் குறித்து உருவாகும் குறியீடுகள் அவற்றுக்கான அர்த்தங்களாக மாற்றப்படுகின்றன எனும் Jacques Lacan ன் கருத்துக்கு அமைவாகவே இக்கதையில் வரும் ஓநாய்கள் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது.
சாதாரண வாழ்வியல் சூழலில் முற்போக்கானவர்களாக நம்பப்படும் மனிதர்கள் கூட கலாசார பண்பாட்டு அழுத்தங்களைக் கடந்து செயல்பட முடியாதவர்களாகவே உள்ளனர். “பெண் ” குறித்து இயற்றப்பட்டிருக்கும் அறம் மற்றும் ஒழுக்கவியல் ஆகியன ஆண்களிடம் அளவீட்டு பொறியாக வழங்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அவர்கள் விடுபட முடியாத அதேவேளை  இந்தக் கலாசார அழுத்தங்களே பெண்களை எப்போதும் வெறியுடன் துரத்தும் ஓநாயாகவும் உள்ளன.
அதனால்தான் கார்சியா என்பவன் காதலித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த துன்பியல் நிகழ்வுக்கு பிறகு அவளோடு சேர்ந்து வாழ துணிவற்ற நிலையில் ஓடி ஒழியச் செய்கிறது.
இன்னொரு சந்தர்ப்பத்தில் ஸிஸாரியாவை திருமணம் செய்து கொள்ளும் கொன்ஸ்டைன் என்பவன் கூட கலாசாரக் காவலனாக மாறி அவளது உடலை பல்வேறு வழிகளிலும் பாதுகாப்பவனாகி விடுகிறான். அவளைக் கண்காணிக்க புதுப்புது உத்திகளையும் திட்டமிடுகிறான்.
கலாசார பண்பாடானது ஆண்களை தொண்டர்களாக பணியமர்த்திக் கொண்டு பெண்களைத் துரத்தும் நூதன அரசியல் களமாக மனித வாழ்வு கட்டமைக்கப்பட்டிருப்பதாக இப்புனைவு உணர்த்த முற்படுகிறது.
ஆண் பெண் வாழ்வு என்பதே நூதன அதிகாரம் செயல்படும் களமாக இருக்கும் பொழுது திருமணம் என்பது ஆற்றுப்படுத்தும் கருவியாக செயல்பட வாய்ப்பில்லை. இருந்த போதும் இதனைத் தாண்டிய புதிய திட்டங்கள் இன்றுவரை மனிதர்களிடம் இல்லை என்பதனால் ஸிஸாரியாவும் தவிர்க்க முடியாமல் திருமணத்திடம் சரணாகதியாகிறாள்.
கடந்தகால துன்பியலை நிவர்த்திக்க திருமணம்தான் தவிர்க்க முடியாத அருமருந்து எனும் அடிப்படையில் ஒரு பொருத்தமற்ற தீர்வை கதைச் சூழலுக்குள் நிலை நிறுத்துவதனால் இந்தப் புனைவானது தனித்துவமானது எனும் அந்தஸ்துக்கு அருகில் செல்ல முடியாததாகி விடுகிறது.
கதை முடியும் போது மூன்று ஓநாய்களும் ஸிஸாரியாவின் கடந்தகால நண்பர்களாக எடுத்துரைக்கப்படுவதன் மூலம் புனைவின் அசாத்திய மர்மங்கள் யாவும் நிர்மூலமாகி விடுகின்றன. மேலும் பெண்ணின் நிலைமையானது ஓநாய் கூட்டங்களுக்கு மத்தியில் குதறப்படுவதற்கு தயார் படுத்தப்படுவதுதான் எனும் பேருண்மை ஒன்றையும் இக்கதை அரூப ஒழுங்கில் கட்டமைக்க முனைகிறது.
கதையின் இறுதியில் நண்பர்கள் ஓநாய்களாக மாறி குதறுவதும், அதிலிருந்து தப்பிக்க  ஸிஸாரியா பட்டாம்பூச்சியாக உருக்குலையும் போது அதன் இறகுகள் பிடுங்கப்படுவதும், சுற்றியிருக்கும் மாந்தர்கள் காற்றில் அசையும் மரங்களாகி பட்டாம்பூச்சி கிளையில் அமர்வதற்கு தடங்கலிடுவதும் கவிதைக்குரிய அம்சமாக பிறப்பெடுக்கின்றன.
இங்கு ரமேஸ் பிரேம் ஆகியோரின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.
புத்துயிர்ப்பு
————–
நெடிதுயர்ந்த கட்டிடம் எரிந்து கொண்டிருந்தது.
உள்ளே இருந்து அபயக்குரல்கள்
தலைக்குமேல் பறந்த காகம் ஒன்று
தீச்சுடரில் சிக்கிக்
கட்டிடத்தின் திறந்த வாய்க்குள் விழுகிறது.
பத்தாவது மாடியின் கண்ணாடிச்
சன்னலை உடைத்து
எரிந்து கொண்டிருக்கும் தாய்
குழந்தையை வெளியே வீசுகிறாள்
புறாச் சிறகுகளைச் சூடிய அது
படபடக்கிறது அந்தரத்தில்.
*
இந்தக் கவிதை சம்பவத்தில் அனர்த்தம் ஒன்று நிகழும் போது மாடியிலிருந்து வீசப்படும் குழந்தையொன்றுக்கு சிறகுகள் உருவாக்கப்படுவதினூடாக காப்பாற்றப்பட்டு விடுகிறது.
இதே போன்றதொரு கவிதைச் சம்பவ உத்தியினூடாக இப்புனைவுக்குள் ஸிஸாரியாவும் பட்டாம்பூச்சியாக உருமாற்றப்படுகிறாள். ஆனால் அவளது இறக்கைகள் பிடுங்கப்பட்டு விடுகின்றன.
புனைவுக்குள் அவள் தரிசிக்கும் சூழலில் பட்டாம்பூச்சிகளோடு பேசுவது போன்ற அனுபவங்கள் இடம்பெறுவதானது குறிப்பால் பல ஊகங்களை உணர்த்திச் செல்கிறது. ஸிஸாரியாவை பொறுத்தவரை ஒவ்வொரு பட்டாம்பூச்சியும் கடந்தகால துன்பியல் அனுபவங்களில் தமது சிறகுகளை இழந்த பெண்களாக இருக்கவும் கூடும்.
***
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.