“ஒழுக்கம்” எனும் சொல்லை எதிர்கொள்ளும் போதெல்லாம், ஏனோ அவசர அவசரமாக மூளைக்குள் “நிபந்தனைகளுக்கு உட்பட்டது” என்று அசரீரி ஒலிப்பதுபோல் உள்ளது. சங்க இலக்கியங்கள் பேசும் அகவொழுக்கம், புறவொழுக்கம் தொடங்கி, களவொழுக்கம், கற்பொழுக்கம் வரையிலாவது பரவாயில்லை. “பரத்தையர் ஒழுக்கம்” என்னும் பதம் சற்றும் பொருந்தாத ஒன்றாய் ஒலிக்கிறது.

பரத்தையர் எனும் சொல் குறித்த ஒரு விளக்கம், “வரையறுத்துக்கொண்ட ஒழுக்கம் இல்லாதவராய் பரந்துபட்ட ஒழுக்கம் பூண்டு வாழ்பவரை உணர்த்துவன.” என்கிறது. “அழகும் இளமையும் அளித்து அதன் வழி கிடைக்கும் இன்பத்தையும் பொருளையும் விரும்புபவர்கள்” என்ற கறுப்பு வெள்ளை மனநிலையிலிருந்து கொஞ்சம் வெளியேறினால், “பரந்துபட்ட ஒழுக்கம்” என்னும் பதம் விரிந்துகொண்டே செல்வதை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.

இன்னும் குறிப்பாக, “ஒழுக்கம்” என்னும் சொல்லை விட “ஒழுங்கு” என்னும் சொல், “விதிக்கப்படாத” தளர்வுகளைத் தருவதாகத் தோன்றுகிறது. இந்த அண்டத்தில் நிச்சயம் ஓர் ஒழுங்கு இருக்கிறது. அது இயற்கையாய் அமைந்த ஒன்றாகவே இருக்கிறது. பரிணாம மாற்றங்கள் ஒவ்வொன்றும் அந்த ஒழுங்கிற்கேற்ப தகவமைக்கப் படுகின்றன. ஒழுக்கப் பிரியர்களுக்குத்தான் இந்த ஒழுங்கிற்கும் மேலாக விதிமுறைகள், அதாவது ”ஒழுக்க விதிமுறைகள்” தேவைப்படுகின்றன. அவர்கள்தான் இயற்கையின் ஒழுங்கைக் கூட, இயற்கையின் விதிகள் என்றே புரிந்து வைத்துள்ளனர். இயற்கை எதையும் விதிப்பதில்லை.

சங்க இலக்கியங்களில் பரத்தையர் வாழ்வில் காணப்படும் பொருளியல் முரண்களுக்கு அப்பாற்பட்டு, இயற்கையோடு இயைந்த ஒரு ஒழுங்கமைவு இருக்கிறது. விதிக்கப்பட்ட விதிமுறைகளிலிருந்து வெளியேறும் எத்தனங்கள் அவர்களிடம் புலப்படுகின்றன. தொல்காப்பியரே பரத்தையர் ஒழுக்கம் பற்றி விரிவான சூத்திரங்களை எழுதவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒருவேளை பரத்தையர்க்கு இயல்பான ஒழுங்கே போதும் என்று தொல்காப்பியர் நினைத்திருக்கலாம். அல்லது, “அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் / நிச்சமும் பெண்பாற் குரிய” என்று தற்காலத்தில் அதிகம் உடைக்கப்படும் மண் சட்டியை மொத்த பெண் இனத்தின் மீது ஏற்றியது போதும் என்று நினைத்திருக்கலாம்.

ஆகவே, நான் குறுந்தொகையில் வாசித்த, பரத்தையர் வாழ்வியல் பற்றிய புரிதல்களை, “பரத்தையர் ஒழுங்கு” என்று எனக்குச் சாதகமாக வகைமை படுத்திக்கொள்கிறேன். அது பரத்தையர் பற்றிய பாடல்களுக்கு மாற்றுப் பார்வையை வழங்குகிறது. அதிலும் குறிப்பாக பரத்தையர் கூற்றாக ஒலிக்கும் பாடல்களில் இழையோடும் அங்கதம், நிச்சயம் அவர்கள் சுதந்திரமான ஒழுங்கின் பக்கமே நின்றனர் என்று என்னை நம்பவைக்கிறது.

இன்றும் “ஒழுக்க விதிகளைப்” பிடிவாதமாக விரும்புவோர், பரத்தையர் ஒழுக்கத்தை எனும் பதத்தைவிட்டு “எதிர் ஒழுங்கு” என்னும் சமரசப் புள்ளிக்காவது இறங்கி வந்தால், ஒருவேளை இந்தப் பாடல்கள் அவர்களுக்கு வேறு தரிசனங்களைத் தரலாம்.

தலைவன் பரத்தையை நாடுகிறான். காதலை ஒருத்தியின்பால் குறுக்கிக் கொள்ளும் ஒழுக்க விதி தலைவனால் மீறப்படுகிறது. தலைவன் நடத்தையால் தலைவி கோபம் கொள்கிறாள். விதி மீறலுக்குத் துணைபோன பரத்தையை இழிந்துரைக்கிறாள். தலைவியின் கோபம் பரத்தைக்குத் தெரிய வருகிறது. பரத்தை இயற்கையின் ஒழுங்கமைவை புரிந்தவள். தலைவன் காதலோடும், காமத்தோடும் தன்னை நாடி வந்தது இயல்பென்றே உணர்கிறாள். தலைவியுடன் தலைவனுக்கு இருக்கும் காதல் பரத்தையை தொந்தரவு செய்யவில்லை. தலைவியைப் போல அவளுக்கு கோபம் வரவில்லை. மாறாக, உறுதியும், அந்த உறுதி தரும் எள்ளலுமாய் தலைவியின் தோழிகள் கேட்குமாறு இப்படி உரைக்கிறாள்.

கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்

பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி

யாமஃ தயர்கம் சேறும் தானஃது

அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர்

நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி

முனையான் பெருநிரை போலக்

கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே. 

(பாடியவர் : ஔவையார்)

என் கூந்தலில் இதழ்கள் ஓடிக்கப்படாத முழு ஆம்பற்பூக்களைச் செருகிகொண்டு, நீர்மிகுந்த பெரிய துறையை விரும்பி, அங்கே தலைவனோடு புனல் விளையாடச் செல்வேன்.  நான் அவ்வாறு தலைவனோடு விளையாடுவதைக் கண்டு தலைவி அஞ்சுவாளானால், எழினி எனும் அரசன் தன் வலிமையால், பகைவர்களால் கவர்ந்து செல்லப்பட்ட தன் பசுக்களை மீட்டதைப் போலத் தலைவி வலிமையும் திறமையும் உடையவளாக இருந்தால், அவள் தன்னுடைய தலைவனின் மார்பைத் தன் சுற்றத்தரோடு சேர்ந்து பாதுகாப்பாளாக என்கிறாள்.

காதலும், காமமும் இயற்கை என்று உணர்ந்தவள், தன்னை இயற்கையின் பக்கமே நிறுத்திக்கொள்கிறாள். தன் அக உணர்வுகளைச் சமரசம் செய்துகொள்ளாமல், அவற்றைத் தனக்குத் தந்த இயற்கையோடு இயைந்து நிற்கிறாள். தலைவனோடு புனல் விளையாடுவேன் என்கிறாள். தான் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவள் என்கிறாள்.

தராசின் மறுமுனையில் தலைவி இருக்கிறாள். அவள் கற்பொழுக்க விதிகளோடும், களவொழுக்க விதிகளோடும் உழன்று கொண்டிருக்கிறாள். இயற்கை தனக்களித்த காதலைப் பற்றி பரத்தை அவளுக்கு வகுப்பெடுக்க விரும்பவில்லை. அதற்கு பதிலாக, விதிகளில் தேர்ந்த தலைவிக்கு, அதே விதிகளின் அடிப்படையில் தேர்வொன்றை வைக்கிறாள். அவளுடைய மொழியிலேயே அவளுக்குச் தன் செய்தியை தெரிவிக்கிறாள். விதிகளோடு உழல்பவர்களுக்கு, தானும் அதில் சிக்குண்டு, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தன் பவித்திரத்தை நிறுவ வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பரத்தையற்கு அது தேவைப்பட்டிருக்கவில்லை. மேலும், இங்கு பரத்தையின் நோக்கம் தலைவிக்கு கடுமையானதொரு சவாலைத் தருவதில்லை. மாறாக, மனித இயல்பை புரிந்துகொள்ளும் எளிய திறவுகோலைத் தருகிறாள்.

தலைவிக்கு இருக்கும் இந்த மன அழுத்தம் தலைவனுக்கும் இருக்கிறது. பரத்தையோடு காதல் கொள்ளும் தலைவன் மனதளவில் “ஒருவனாகவே” இருக்கிறான். தலைவியிடம் திரும்பும்போதுதான் அவன் மனமும், செயல்களும் இரண்டாகின்றன. தன் இயல்புகளை மறைத்துக்கொண்டு, சுற்றத்திற்காக இன்னொரு வேடம் பூணுகிறான். இரண்டு பாடல்கள். அதன் வழி, தலைவனின் இந்த எதிரெதிரான மனநிலைகளைப் புரிந்துகொள்ளலாம்.

தலைவன் பரத்தை மேல் காமம் கொள்கிறான். இயற்கையாய் அவனுள் எழும் அந்தச் செல்ல மயக்கம், அவன் மனதை ஒழுக்க விதிமுறைகளிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கிறது. தன் சுற்றத்தை மறக்கிறான். ரூல்ட் பேப்பரில், தன் பயோடேட்டா கவிதையை எழுதிவிட்டு, வெள்ளை ஜிப்பாவோடு நெஞ்சை நிமிர்த்தி நடைபோடும் மனநிலை அது. பத்தடி கடந்ததும், கலையப்போகும் தலைமுடியை ஐம்பது முறையாவது கோதிக் களைத்துவிட்டு, மறுபடியும் சீவித் தயாராகிறான்.

காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி

வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற

அதாவது, காலையிற் புறப்பட்டுச் செல்லும் தேரை ஏறுதற்கேற்ப அமைத்து, தூய அணிகலன்களை அணிந்த பரத்தையரைத் தழுவும் பொருட்டுச் சென்ற வளப்பம் பொருந்திய ஊரையுடைய தலைவன் என்கிறார் ஆலங்குடி வங்கனார்.

வரப்போகும் பழிச்சொற்கள் அவர் தேர்ச் சக்கரங்களை நிறுத்தவில்லை. ஒருவேளை, பாதைகள் மறுக்கப் பட்டிருந்தால், வானேறிப் பறந்திருப்பான். பரத்தையைச் சந்திக்கிறான். காதல் கொள்கிறான். சுபம்.

மீண்டும், காலக்கடிகாரம் அவன் நினைவின் முள்ளைத் தலைவியின் பக்கம் திருப்புகிறது. அவ்வளவுதான். இயல்பான இயல்பிலிருந்து, விதிக்கப்பட்ட இயல்பிற்கு வருகிறான். மண்டைக்குள் ரூல்ஸ் புக்குகளுக்குச் சிறகுகள் முளைக்கத் தொடங்குகின்றன. அவன் தேர் இரண்டு மனங்களுடன் மீண்டும் நிலைக்குத் திரும்புகிறது. அங்கே தலைவி ஒழுக்கத்தின் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறாள். ஊடாடுகிறாள்.

இதையெல்லாம் உணர்ந்தவள்தானே பரத்தை. இப்போதும் பரத்தை தன் நிலை பிறழாமல் சிந்திக்கிறாள். ஒழுக்கம் தலைவனைப் படுத்தும் பாடு புரிகிறது பரத்தைக்குப் புரிந்திருக்கிறது. அதற்குத் தக்க தலைவன் ஆடப்போகும் ஆட்டத்தை அவள் அறிந்திருக்கிறாள்.

ஆலங்குடி வங்கனார் இப்படி எழுதுகிறார்.

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூஉ மூரன்

எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல

மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. 

வயல் அருகில் உள்ள மா மரத்திலிருந்து, பழுத்துத் தானாக விழுகின்ற இனிய பழங்களைக் கவ்வி உண்ணும் வாளை மீன்கள் வாழும் ஊரை உடைய தலைவன், என் வீட்டிலிருந்த பொழுது என்னை வயப்படுத்துவதற்காக என்னைப் பெருமைப்படுத்தும் மொழிகளைப் பேசினான். இப்பொழுது, தன்னுடைய வீட்டில் இருக்கிறான். முன்னால் நிற்பவர்கள் கையையும் காலையும் தூக்குவதால், தானும் தன் காலையும் கையையும் தூக்கும் கண்ணாடியில் தோன்றும் உருவத்தைப்போல், தன் புதல்வனின் தாய் (தலைவி) விரும்பியவற்றைத் தலைவன் செய்கிறான் என்கிறாள் பரத்தை.

இங்கே மூன்று குறிப்புகள்.

  1. தன்னோடு மெய்மறந்திருந்த தலைவனை, கற்பொழுக்கம் இரண்டாய்ப் பிளந்து, பாடாய்ப் படுத்துவதைப் புரிந்துகொண்டு, அவனைக் கையையும், காலையும் தூக்கும் ஆடிப்பாவை என்கிறாள்
  2. அங்கதம் உரைக்கும் அதே நேரம், தனக்கும் தலைவனுக்குமான இயற்கையான காதல் உறவை, இயல்பாகப் பழுத்துத் தானாக விழுகின்ற இனிய பழங்களைக் கவ்வி உண்ணும் வாளை மீன்கள் என்று உருவகப்படுத்துகிறாள்.
  3. கூடுதலாக, அந்த ரணகளத்திலும், பரத்தை அம்மடத்தையின் மீது அங்கதச் சினத்தோடே இருந்திருக்கிறாள். அதனால்தான், தலைவியை, புதல்வனின் தாய் என்று எள்ளலுடன் சுற்றி வளைக்கிறாள்.

தலைவனுக்கு மட்டுமல்ல. தலைவியின் தோழிக்கும் கூட  ஒழுக்க விதிகள் தீராத தலைவலியாகவே இருந்துள்ளன. பழிச்சொல்லுக்குப் பதில் சொல்லும் பணி அவளுக்குக் கூடுதல் சுமையாக இருந்துள்ளது.

தலைவியை விட்டுப்பிரிந்திருந்த தலைவன் மீண்டும் தலைவியைக் காண வருகிறான். அதைக் கண்ட தோழி வாயிற் மறுக்கிறாள்.

மனையுறை கோழிக் குறுங்காற் பேடை

வேலி வெருகின மாலை யுற்றெனப்

புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய

பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்

கின்னா திசைக்கும் அம்பலொடு

வாரல் வாழிய ரையவெந் தெருவே. 

(பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்)

ஐய!, மாலைக் காலத்தில் வேலிக்கு அருகில் காட்டுப் பூனையின் கூட்டம் வந்ததால், அதைக் கண்டு அஞ்சி, பாதுகாப்பாகப் புகுதற்குரிய இடத்தை அறியாமல், துன்புறுகின்ற தன் குஞ்சுகளை ஒருங்கே கூடும் பொருட்டு, வீட்டிலிருக்கும் குறுகிய காலையுடைய பெட்டைக்கோழி கூவும். அதுபோல, எமக்குத் துன்பந்ததருமாறு ஊரார் பேசும் பழிச்சொற்களோடு எங்கள் தெருவிற்கு வரவேண்டாம். நீ வாழ்வாயாக!

அதாவது, தன்னாற் பாதுகாக்கப்பட்ட தன் குஞ்சுகளைக் காட்டுப்பூனைகள் கவர்ந்துவிடுமோ என்ற அச்சத்தினால் பெட்டைக்கோழிக் கூவியது போல,  இதுவரை பரத்தையரோடு  இருந்த தலைவனைத் தலைவியானவள் கவர்ந்து, அவள்பால் இருத்திக் கொள்வாளோ என்ற அச்சத்தினால் பழிமொழி கூறுவார்கள் என்று தோழி நினைக்கிறாள். தலைவியின் காதலைவிட பழிச்சொற்களுக்கு அஞ்சுவது முந்திக்கொள்கிறது. அக உணர்வுகளை புறச்சொற்கள் அதிகாரம் செலுத்த, தோழி தன் நிலை தடுமாறுகிறாள்.

தோழியின் உவமைத் தேர்வுகளை கவனித்தால் இந்தத் தடுமாற்றம் புரியும். தலைவியை “காதலைக் கவர்பவள்” என்ற இடத்திலும், பரத்தையை “பழிமொழி கூறுபவள்” என்ற இடத்திலும் நிறுத்துகிறாள். முதலில், காதலை எப்படிக் கவர்ந்துகொள்ள இயலும்?

தோழியின் கூற்றாக வரும் ஓரம்போகியாரின் இன்னொரு பாடலில் கூட, பரத்தையின் அகம் இயற்கையின் உருவாகவே வர்ணிக்கப்படுகிறது.

யாயா கியளே விழவுமுத லாட்டி

பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சி யூரன் கொடுமை

கரந்தன ளாகலின் நாணிய வருமே. 

தலைவன் செல்வம் பெற்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு முதல் காரணமாக இருப்பவள் தலைவி. தலைவனின் ஊரில் மெல்லிய கிளைகளை உடைய காஞ்சி மரங்கள் உள்ளன. அந்த மரங்களின் கிளைகளை உழவர்கள் வளைத்தால், பயற்றின் கொத்தைப்போல் இருக்கும் பூங்கொத்துக்களில் உள்ள பசுமையான பூந்தாதுகள் அவர்கள் மேல் படும்படி விழுகின்றன. அத்தகைய காஞ்சி மரங்களை உடைய ஊரனின் கொடுமைகளை யாருக்கும் தெரியாமல் தலைவி மறைத்தாள். இப்பொழுது, அவன் நாணும்படி அவனை ஏற்றுக்கொள்ள அவள் வருகிறாள் என்கிறாள் தோழி.

அதாவது, உழவர்கள் வளைத்ததால் கிளைகளிலிருந்து விழும் பூந்தாதுக்கள் போல் தலைவனின் பரத்தமை உள்ளதாம். இப்படியான அகவயமான ஒன்றைத்தான்,  தலைவி அவன் “நாணும்படி” அவனிடம் மறைத்தாளாம். எந்தத் தலைவி? தலைவன்“செல்வம்” பெற்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு முதல் காரணமான தலைவி. நல்லது.

பரத்தையின் காதல் இயற்கையின் பக்கம் நிற்பது போலவே தன்னிலை தவறித் தூற்றாத \இயல்பின் பக்கமும் நிற்கிறது. அதாவது இயற்கையே எப்படி எதையும் விதிப்பதில்லையோ, அப்படியே எதையும் சபிப்பதும் இல்லை. தன் காதலையும், காமத்தையும் விட்டுக்கொடுக்காத பரத்தை, அதேவேளை  தலைவியின் அறியாமையை எண்ணி அவளை சபிக்கவுமில்லை.

பரத்தை அறம்பாடும் பாடல் இப்படித் தொடங்குகிறது.

கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு

துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்

தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது

தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி

(பாடியவர்: மாங்குடி மருதனார்)

தோழி! தலைவி தன் அறியாமையால் எம்மை வெறுக்கின்றாள். அப்படி அவள் வெறுக்கும் அளவுக்கு நாம் மருதநிலத் தலைவனுக்குத் தீங்கிழைத்திருப்போமானால்,  திரண்ட கொம்பையுடைய, நிறைந்த கருப்பத்தையுடைய இளம் பெண் வாளை மீன், தேமாவின் உதிர்ந்த இனிய பழத்தைக் கவ்வும் இடமாகிய, மிகப் பழைய வேளிரது குன்றூருக்குக் கிழக்கே உள்ள, குளிர்ச்சியையுடைய பெரிய கடல், எம்மை வருத்துவதாக என்கிறாள்.

இன்னொரு காதலுக்கு தான் தீங்கிழைத்திருந்தால், எம்மைப் பெருங்கடல் வருத்தட்டும் என்கிறாள். “தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி!” என்ற வரியில்தான் காதலும், காமமும் உன்னதச் செருக்குடன் அரியணை ஏறுகின்றன.

பரத்தையரின் காதலையும், காமத்தையும் பிரதானமாகப் பேசும் குறுந்தொகையில் அவர்களின் பொருள் மீதான  பற்று பிரதானமான ஒன்றாக எடுத்தாளப்படவில்லை. இன்னொரு வகையில், பொருள் என்பது  பொதுவான வாழ்வியல் ஆதாரங்களில் ஒன்றாய்க் கருதினால், தலைவன் பொருள்வயின் பிரிவது, பெரும்பாலான பாடல்களில் தலைவிக்காகவே! தலைவிக்குச் சேரும் பொருளைப் புனிதக் கணக்கிலும், பரத்தைக்குச் சேரும் பொருளைப் பாவக் கணக்கிலும் உறவு விதிகள் எழுதியிருக்கின்றன.

காலம் தலைவியின் காமத்தையும், காதலையும் ஒழுக்க விதிகளிலிருந்து விடுவித்திருக்க வேண்டும். அதேபோல, பரத்தையரின் காதலையும், காமத்தையும் மறைத்திருந்த பொருளேனும் மதில்களைத் தகர்த்திருக்க வேண்டும். மாறாக, இயற்கையின் ஒழுங்காக இருந்த ஒன்றை “ஒழுக்க விதிகளுக்குள்” இழுத்துப் பூட்டிவிட்டது. ஒருவேளை இந்த மாற்றம்தான் வள்ளுவனை பரத்தையரை பொருளேனும் கூண்டுக்குள் அடைத்து, ‘வரைவின் மகளிர்’ என அறம் பாட வைத்துவிட்டதோ என்னவோ?. பிற்காலத்தில் குற்றமுள்ள நெஞ்சத்தார் எவரோ இன்னும் கொஞ்சம் மேலே சென்று, அந்த குறட்பாட்களை, “கற்பியலும், களவியலும்” பேசும் காமத்துப்பால் பகுப்பின் பக்கம்கூட அண்டவிடாமல், பொருட்பால் எனும் சிலுவையில் அறைந்துவிட்டனர்.

ஆமென்!

***

– செந்தில்குமார் நடராஜன்

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *