‘அரபிகளின் சுதந்திரத்துக்கான எழுச்சித் தீயை அடக்க முடியாத விதத்தில் பலஸ்தீனர்கள் மீண்டும் 
ஒருமுறை கொளுத்தி விட்டிருக்கிறார்கள்!’

 

யஹ்யா ஹமித்
(எகிப்தின் முன்னாள் முதலீட்டு அமைச்சர்)
அல் ஜெஸீரா – கருத்துரை (2021 மே 18)

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், தொடர்ச்சியான அரச வன்முறைக்கு எதிராக தன் ஆற்றவொ
ண்ணாத் துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் முஹம்மத் புஆஸிஸி எனும் ஒற்றை மனிதன் வெகு
ண்டெழுந்தான். தூனிசியாவில் கொளுத்தப்பட்ட அந்தத் தீ அரபு வசந்தம், என்ற பெயரில் முன்னொருபோதும் இல்லாத பேரெழுச்சியாக மத்திய கிழக்கு முழுவதும் பற்றிப் படர்ந்தது.  முஹம்மத்
புஆஸிஸியின் கண்ணியமும் தியாகமும் அரச அடக்குமுறை மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின்
உலைக் களத்தில் உழன்று கொண்டிருந்த மத்திய கிழக்கின் இலட்சோப லட்சம் மக்களது அவல வாழ்வின் மீது சர்வதேச சமூகத்தின் கவனத்தை தற்காலிகமாகவேனும் ஈர்த்தது.

இருந்த போதிலும், அரபு வசந்தம்
பிராந்தியத்தில் வாழும் எல்லா மக்களுக்கிடையிலும் ஜன நாயகத்தை, நீதியை, சமத்துவத்தை ஸ்தா
பிப்பதில் வெற்றியடையவில்லை. அரபு வசந்தத்தின் பத்து வருடப் பூர்த்தியை  இவ்வருட ஆரம்பத்
தின் நாம் கொண்டாடிய போதிலும், உண்மையில் 2011 ஜன நாயக இயக்கத்துக்கு நடந்த மாயம் தான் என்ன என்பதைக் கண்டறிவதற்கான கலந்துரையாடல்களும், நேர்காணல்களும், விவாதங்களும் நடந்த வண்ணம் இருக்கின்றன.

நிலைபேறான மக்கள் நல,  ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட ஆட்சிகள் மத்திய கிழக்கில் அமைவதை நோக்கமாகக் கொண்டு ஊழல் மிகுந்த எதேச்சாதிகார அமீர்கள் தூக்கி எறியப்படுவதை
சர்வதேச சமூகம்-குறிப்பாக மேற்கு ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை. அவ்வாறான ஒரு மாற்றம் மேற்கு வல்லாதிக்க
சக்திகளால் “இலகுவாகக் கையாள” முடியாத “ஒழுங்கீனம் கொண்ட” ஒரு பிரதேசமாக மத்திய கிழக்கை மாற்றியமைக்கும் என்பதில் அவர்கள் பயத்துடன் இருந்தனர். இதுவே அரபு வசந்தம் எதிர்கொண்ட நெருக்கடிக்கும்  தோல்விக்குமான முதன்மைக் காரணி என நான் நம்புகிறேன்.

அரபு வசந்தத்தின் முடிவுரையை தொடர்ந்து வந்த காலப் பகுதியில் பிராந்தியத்தை “ஒழுங்கீனத்தில்
இருந்து தடுப்பதற்கான” மேற்கின் முயற்சிகள் ஈனஸ்வரத்திலேனும் ஒலித்த ஜன நாயகத்துக்கான
குரல்களை மேலும் வீரியத்துடன் நசுக்குவதற்கும் முன் ஒருபோதும் கண்டிராத வன்கொடுமைகளையும் அடக்குமுறையையும் மக்கள் மீது திணிப்பதிலும் போய் முடிந்தது. இஸ்ரேல் மற்றும் அதன் அடியாட்களான சவூதி அரேபிய சர்வாதிகாரம், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகியவை இதனைத்தான் செய்து வருகின்றன.

இந்த சர்வாதிகார ஆட்சிகள் மக்கள் மீது அடர்ந்தேறும் விடயத்தில் குருடர்களைப் போல நடந்து
கொள்ளும் மேற்குலகம் தான் கொண்டிருக்கும் அநீதிமிக்க நிலைப்பாட்டின் விளைவாக அரங்கேறி
இருக்கும் அவலங்களில் சில இவை :  அரசியல் மாற்றுக் கருத்துகளுக்காக தனது பொதுமக்கள் 1000 பேரை ஆகஸ்ட் 2013ல் கொன்று குவித்து 60,000 பேரை சிறைகளில் அடைத்திருக்கிறது எகிப்திய இராணுவம், சவூதி ஆட்சியின் மீது அதிருப்தி கொண்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகியை இஸ்தாம்புல் தூதரகத்தில் வைத்து கண்டதுண்டமாய் வெட்டிக் கொன்றுள்ளனர் சவூதியின் அடியாட்கள். அது மாத்திரமன்றி லுஜாயின் ஹத்லூல் போன்ற பெண் உரிமைப் போராளிகளை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் வைத்திருக்கின்றனர். மத்திய கிழக்கின் அரசுகள் நடத்தும் வன்முறைகள் மீது புறக்கணிப்பை பதிலாகத் தரும் மேற்குலகின் இந்த இரட்டை நிலைப்பாடுமொரோக்கோ அரசு ஊடகவியலாளர்கள் மீது அத்துமீறுவதற்கும் அவர்களில் பலர் சிறைகளில் உண்ணா விரதம் இருந்து உயிர் விடுவதற்கும் துணை போயுள்ளது.

அதேவேளை இஸ்ரேலிய அரசால் இழிவுபடுத்தப்பட்டு, சியோனிசத் தீவிரவாதிகளால் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்புப் படை என்ற பெயரில் நடமாடும் பயங்கரவாதிகளா
ல் ஊனமாக்கப்பட்டும் படுகொலைளுக்கு ஆளாக்கப்பட்டும் வரும் பாலஸ்தீனர்கள் நிலை, இன
ஒதுக்கல் அரசு ஒன்றின் கோரப் பிடியில் சிக்கி மூச்சுத் திணறுகின்ற நாளாந்த வாழ்வாக மாறியுள்ளது. மேற்குலகின் வல்லாதிக்க சக்திகள் அந்த மக்கள் அனுபவிக்கும் இப்படியான ஒரு இழி நிலை
யைத்தான் “ஸ்திரத் தன்மை” என்ற பெயரிட்டு அழைக்கின்றன.
பெருகிவரும் அரபு சர்வாதிகாரத்தின் மற்றும் இஸ்ரேலிய ஒதுக்கல் அரசின் நிந்தனைகளுக்கு
தொடர்ந்தும் முதுகு காட்டி வருவதன் மூலம் சர்வதேச சமூகம் பெருபெருங்குழப்பங்களை” தடுக்கவில்லை மாறாக, புதிய புரட்சியொன்றுக்கான விதைகளையே அறுவடை செய்கின்றது.

ஏனெனில், ஸ்திரத்தன்மையானது ஜனநாயகம் மற்றும் நீதியின்றி சாத்தியமில்லை.

பத்து வருடங்களுக்கு முன், டியூனிஷியாவில் ஒற்றை மனிதனின் கடைசி எதிர்ப்பானது
லட்சக்கணக்கான மக்களை இனிமேலும் அராஜகங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை உணரவைத்ததோடு அவர்களை வீதிக்கழைத்து வந்து மாற்றத்துக்கான கோரிக்கைகளை
பறைசாற்ற வைத்தது.

இன்று, அதற்கொப்பான நிகழ்வுகள் பலஸ்தீனத்தில் அரங்கேறி வருகின்றன.

திட்டமிடப்பட்ட யூத குடியேற்றங்களின் விளைவாக பலவந்தமாக வெளியேற்றப்பட்ட கிழக்கு
ஜெரூசலத்தின் அண்மையமான ஷெய்க் ஜர்ராவின் குடிமக்கள் யூத தீவிரவாதிகளால்
தாக்கப்படுவதையும் முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தில் புனிதத்தளமான அல்-அக்ஷாவில்
தாக்கப்படுவதையும் எதிர்த்து மத்திய கிழக்கிலும் உலகளவிலும் பாரிய எதிர்ப்பலைகள்
கிளம்புவதோடு பலஸ்தீனர்களுக்கான ஆதரவும் பெருகி வருகின்றது.
சர்வதேச சமூகத்தால் கைவிடப்பட்ட நிலையிலும் தமது உரிமைகளுக்காக எழுச்சி பெற்று
வீரியமாகப் போராடும் பலஸ்தீனர்களின் கண்ணியமானது அவர்களைப் போன்று
கொடுங்கோலாட்சிகளின் கீழ் நசுங்கி உழலும் மில்லியன் கணக்கான மக்களின் உத்வேகமாக
மாறிவருகின்றது.

மேற்கத்தேய சக்திகள் பலஸ்தீனத்தில் நிகழும் அநியாயங்கள் தொடர்பில் ஒன்றில் மௌனம்
காக்கின்றனர், அல்லது இவையனைத்துக்கும் தொடக்கப்புள்ளியாய் ஹமாஸ் இருப்பதாக
பாசாங்கு செய்கின்றனர். ஒருவேளை “ஸ்திரத்தன்மை” என்ற பெயரில் இஸ்ரேல் என்னும்
ஒதுக்கல் அரசிற்கும் அதன் பிராந்திய கூட்டுகளுக்கும் ஆதரவு வழங்குவதன் மூலம் பிராந்தியத்தில்
படிப்படியாக ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான குரல்கள் மௌனிக்கப்படுமென்று
கணித்திருக்கலாம்.

எனினும் அரபு மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இடையில் திரைகள் இல்லை என்பதையும்
அவர்கள் “இனியும் இடமளியோம்” என்ற நிலைக்கு வந்து விட்டதையும் மேற்கத்தேய சக்திகள்
விளங்கத் தவறிவிட்டனர்.

பல வருடங்களாக பலஸ்தீன மக்கள் தங்களின் போராட்டங்கள் முடிவுற்று இனி மீட்பதற்கு
எதுவுமில்லை என்ற தோரணையில் சர்வதேச சக்திகளாலும் அரபுத்தலைவர்களாலும்
கைவிடப்பட்டிருக்கின்றனர். ஆனால் கடந்த வாரங்களில் அவர்கள் தம் மண்ணுக்கான தாகம்
பிளவற்றிருப்பதையும் இந்தப்போராட்டம் கைவிடப்படப்போவதொன்றல்ல என்பதையும்
நிரூபித்திருக்கின்றார்கள். அம்மக்களின் இடையறாத எதிர்ப்பும் கண்ணியமும் இஸ்ரேலின் நட்பு
நாடுகளால் நசுக்கப்பட்டு சுதந்திரத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் ஏங்கும் எமக்கு “இனியும் நாம் இடமளியோம்” என்பதை உணரவைத்துள்ளன.

பலஸ்தீனர்கள் மீண்டும் ஒருமுறை சுதந்திரத்திற்கான வேட்கையை கொளுத்தியிருக்கிறார்கள்;
அந்தத்தீ அணைக்கப்படக்கூடியதல்ல.

 

மொழிபெயர்ப்பு

-ரஸ்மா ரஸ்மி

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *