நாட்களுக்கென்று தனி ருசி இருப்பதை அது இல்லாமல் போன பின்பு தான் உணர்ந்தேன். பொதுவாக என் வாரம் மிதமான ருசி கொண்ட புதனில் தொடங்கும். புளிப்பும் இனிப்பும் கலந்த திருப்தியான வியாழன், சுளைகளை உண்டு முடித்த பின் விரல்களைச் சப்பி சுவையை மீட்டெடுக்கத் தூண்டும் துரியன் பழ இனிப்பில் வெள்ளியும் சனியும். ஞாயிறு மறுநாளிற்கான தயாரிப்புகளுடன் ஒரு துவர்ப்பைக் கொண்டு விடுகிறது, திங்களும் செவ்வாயும் மனமின்றி தின்று ஒழிக்கும் பாகலின் கசப்பைக் கொண்டது. சிலருக்குப் பாகல் பிடிக்கலாம், உடலுக்கு நல்லது என்பார்கள். எனக்கு அப்படியான சத்துள்ள ஆகாரங்கள் பிடிப்பதில்லை. சர்க்யூட் ப்ரேக்கர் தொடங்கிய பின்னர் எனது நாட்கள் கொண்டிருந்த ருசியனைத்தும் மழுங்கி, குழந்தை மெல்ல முயன்று துப்பிய கறித்துண்டைப் போல ஆயின.
சர்க்யூட் ப்ரேக்கரின் தொடக்கம் இனித்த பழங்களின் அனைத்து ருசிகளையும் ஒருங்கே கொண்டிருந்தது. ஒரே நாளில் கிடைத்த ருசிகள் அனைத்திலும் திகட்டத் திகட்டத் திளைத்தேன். காலையில் சீக்கிரம் எழுந்திருக்காமல், அவதி அவதியாக குளிக்காமல், விரைவு ரயிலைப் பிடிக்க ஓடாமல், வியர்வை பெருக அலுவலகத்தில் நுழையாமல் இருக்க முடிந்த ஒவ்வொரு வினாடியையும் சிலாகித்தேன். நினைவு தெரிந்த நாள் முதல் இதுவரை கண்டேயிராத பொறுப்புத் துறப்புகள்.
காலையில் சூரியன், மாலையில் சந்திரன் முளைக்கும் வானத்திற்கும் தனக்கும் எந்த இடையூறையும் கொண்டிராத எங்கள் புளோக். இந்தக் காரணத்திற்காகத் தான் நானும் மனைவியும் இந்த வீட்டை வாங்கியிருந்தோம். என்னைப் பதினோராம் மாடத்திலிருக்கும் உபதேவனாய் உணர வைக்கும் வீடு. மேகத்திற்குக் கீழே வசிக்கும் உபதேவன், பத்து மாடிகளுக்குக் கீழே ஊர்ந்து செல்லும் கார்களையும் மனிதர்களையும் கோப்பிக் குடித்தபடி ரசிக்கும் உபதேவன், மிதிவண்டியை வாகனமாகக் கொண்ட உபதேவன், கைச்சிமிட்டலில் குளிர் காற்றை, சுடுநீரைத் தருவிக்கும் உபதேவன். சர்க்யூட் ப்ரேக்கர் தொடக்கம் இப்படியான உணர்வுகளை மேலும் நுண்மையாக்கியது. என்ன, சாலையில் வாகனங்கள் செல்லவில்லை, மற்றபடி ஒன்பதாம் மேகத்திற்குக் கீழே உலாவிக் கொண்டிருந்தேன். உறங்கி, சமைத்து, அதை இன்ஸ்டாவில் பகிர்ந்து, உண்டு, படம் பார்த்து, மீண்டும் உறங்கி, மீண்டும் சமைத்து, மீண்டும், மீண்டும். இப்படியாக இந்த நூற்றாண்டில் இனி கிடைக்கவே கிடைக்காது என்று உணர்ந்திருந்த அரிய நீள்விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன்.
நாட்கள் கடந்த நிலையில் இவ்வெண்ணங்கள் ஒவ்வொன்றாகத் திகட்டி உதிர்ந்தன. ஒரு மாதமோ, மூன்று மாதமோ இந்நிலை மாறி பழைய நிலைக்கு மீண்டு சென்றுவிடுவோம் என்று உள்மனம் அதுவரை நம்பியிருந்தது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத எல்லையைக் கொண்டிருந்த அல்லது எல்லையே இல்லாதது போல் தோன்றிய இந்த விடுமுறை, கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மிரட்டத் தொடங்கியது. என்னைச் சுற்றிலுமிருந்த மனிதர்களின் இருப்பை உணர்ந்த தினங்கள் அவை.
அன்று கழிவறையில் கழிப்பான் மீது அமர்ந்திருந்த போது, மேல் மாடிக் கழிவறையிலிருந்து கழிவுகளை நீரழுத்தி அகற்றும் சத்தம். அந்த நீர் என் தலையில் கொட்டுவதாக உணர்ந்து என் உடல் சிலிர்த்தது. அது தான் தொடக்கம். அதன் பின்னர் தூவாலைக் குழாய்க்குக் கீழ் நின்று குளிக்கும் போதெல்லாம் எனக்கு மேலும் கீழுமிருக்கும் பதினோரு மாடிகளிலும் எனக்குச் சரி நேராக மனிதர்கள் நின்று குளித்துக் கொண்டிருப்பதான கற்பனை எழத் தொடங்கியது. யாரோ என் தலையில் நீரைக் கொட்டுகிறார்கள். அவர்கள் உடலிலிருந்த கசடுகள் என் உடலில் படிகின்றன. அதில் குளித்துத் தலையைத் துவட்டுகிறேன். இப்படி என் மனம் நம்பத் தொடங்கியது. மேலிருந்து நீர் கொட்டும் சத்தம் கேட்கிறதா என்று கவனித்தபடியே குளியலறைக்குள் நுழைவது வழக்கமாகிவிட்டது. கொஞ்சம் நாட்களில் அதனுள் நுழையும் போதெல்லாம் என் தலையின் மீது தண்ணீர் கொட்டுவதான பிரமை உண்டானது. இது என் குளியல் வழக்கத்தை மாற்றியது. சில நாட்கள் குளிப்பதைத் தவிர்த்து, பின் குளியல் நேரத்தை, எல்லோரும் தூங்கிவிடுவார்கள் விழித்திருந்தாலும் குளிக்க மாட்டார்கள் என்று நான் நம்பிய நள்ளிரவு நேரத்திற்கு மாற்றிக் கொண்டேன். அப்போதும் கூட நூறு கண்கள் என்னை நோக்கிக் கொண்டிருப்பதான உணர்வுடன் உள்ளாடை அணிந்தே குளித்தேன்.
நாட்டிலுள்ள அனைவரும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும் என்ற அரசாணை எனது மற்ற தினப்படி நடவடிக்கைகளுக்கும் ஊறு விளைவித்தது என்று தான் சொல்ல வேண்டும். வெளியே கிருமி மிதக்கும் காற்று, அக்கிருமிகளை விட மனிதர்களின் இருப்பே என்னைத் தொந்தரவு செய்தது. இரவு பகலென்று பாராமல் யாரோ என்னைக் கவனித்தபடி இருப்பதான உணர்வு என்னுள் நிரந்தரமாய் குடிகொண்டது. இடப்பக்கம் நான்கு, வலப்பக்கம் பதினொன்று என மொத்தம் பதினைந்து வீடுகள் எனக்கு இருபுறமும், ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக ஐந்து பேர், தலைக்கு மேலே மூன்று பேர், கீழே பத்து மாடிகளில் பத்தைந்து ஐம்பது பேர், இத்தனை பேரின் உள்ளிருப்பும் என் மீது விழுந்து என்னை நெருக்கியது. அவர்கள் உண்டாக்கிய சலனங்கள் என்னைப் பாதிக்கத் தொடங்கின. ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்ற கற்பனை, நாள் முழுக்க என்னை ஆக்கிரமித்தது.
காலடியோசை உள்ளிட்ட மேல் வீட்டு மனிதர்களின் வாழ்க்கைச் சத்தங்கள் இப்போது தெளிவாய் கேட்டன. மூன்றே பேர் கொண்ட வீடு அது. அவ்வீட்டின் ஆண் மென்மையாக நடப்பவன். அவனின் வயதான அம்மா கால்களைத் தேய்த்துத் தேய்ந்து நடந்தாள். அவனின் மனைவி அழுந்தப் பதித்து நடப்பவள். முதலில் மென்மையான காலடி பெண்ணுடையது, அழுத்தமானது ஆணுடையது என்று நினைத்திருந்தேன். ஒருநாள் இதற்கென்றே முகக் கவசமணிந்து, அவர்கள் மாடியின் மின் தூக்கி நிற்குமிடத்தில் ஏதோவொரு பொருளைத் தொலைத்து விட்டுத் தேடுபவன் போலப் பாவனை செய்து அவர்களைக் கவனித்து உறுதிப்படுத்திக் கொண்டேன். வீட்டிற்குள் அவர்களின் கால் சென்ற இடமெல்லாம் என் கவனமும் சென்றது. அதனோடு என் தலையும் சேர்ந்து செல்வதாக அடுத்து வந்த நாட்களில் உணர்ந்தேன். என் கால்களுக்குக் கீழே இருக்கும் தலைகளும் அப்போது என் கவனத்திற்கு வந்தன. ஐந்து தலைகளுக்கு மேல் கால் பதித்து நடக்கிறேன். என் தலை ஆறு கால்களுக்குக் கீழே இருக்கிறது என்கிற ஞானமும் அப்போது உண்டானது. என் பாத வளைவுகளுக்கென்று அளவெடுத்துச் செய்தது போல என் கால்களில் பொருந்திய தலைகள். தலை முளைத்த கால்கள் அல்லது கால் முளைத்த தலைகள், புளோக் முழுவதும் நடமாடின, நடனமாடின.
எனக்கு அவ்வப்போது மூச்சுத் திணறல் உண்டானது. மன அழுத்தமே இதற்குக் காரணம் என்று கூறிய மெய்நிகர் மருத்துவர்கள், இது தற்போதைய சூழலில் நிறைய பேரைத் தொற்றியிருப்பதாகச் சொன்னார்கள். இதிலும் கூட தனிமை கிடைக்காதது என் அழுத்தத்தை அதிகமாக்கியது. உறங்கும் நேரம் இழுப்பறைகளைப் போல ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கியிருந்த எங்கள் படுக்கையறைகளில் எனக்கு மேலேயும் கீழேயும் தூங்கிய சகபுளோக் வாசிகள் எனது கனவில் நுழைந்தார்கள். அவர்களின் கனவுகள் என்னுடையதுடன் பின்னிச் சிக்கலாகி, நான் அவர்களின் வீட்டிற்குள் அவ்வப்போது நுழைவதையும், அவர்களின் வீட்டுச் சூழலுக்கேற்ப என்னுடைய அடையாளம் மாறிப் போவதையும் உணர்ந்தேன். அப்படியான சமயத்தில் மலாய்க்காரராய் ஆன போது மறக்காமல் ஐந்து வேளை தொழுதேன்.
பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பு வாங்கிய இந்த மூன்றறை வீடு, மற்ற வீடுகளின் இருப்பு உண்டாக்கிய தொடர் அழுத்தத்தால், வயது ஏற ஏற மெலிந்து தேயும் மனிதர்களைப் போல அளவில் சுருங்கிப் போனதாகத் தோன்றியது. அறைச்சுவர்கள் நாற்புறமும் நெருக்கி என்னைக் குறுக்கின. கை நீட்டினால், கால் நீட்டினால் மனைவியும் பிள்ளைகளும் தட்டுப்பட்டார்கள். நாள் முழுவதும் புழங்க வீட்டின் அளவு போதாமல் நாங்கள் நால்வரும் அறைக்குள் நிரம்பி கூடத்தில் வழிந்தோம். மனைவியின் இருப்பும் கூட இப்போது தொல்லையாக இருந்தது. பழைய இரட்டைக் கட்டில். மனைவி புரளும் போதெல்லாம் நான் உலுக்கப்பட்டு எழுந்தேன். அதைத் தூக்கி வீசிவிட்டு ஒற்றைக் கட்டில்களாய் இரண்டை வாங்கிப் போட்டுவிடத் துடித்தேன். அதற்கும் கூட சர்க்யூட் ப்ரேக்கர் முடிய வேண்டும்.
இந்த நேரத்தில் தான் எங்கள் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அமல்படுத்தியது. ஹௌ காங் வீட்டிலிருந்து மார்சிலிங்கில் உருவாகப் போகும் கட்டிடத்தை எப்படிக் கட்டுவது என்று முதலில் எனக்குக் குழப்பமாக இருந்தது. முதல் கட்டமாக அலுவலகக் கூட்டங்களை ஜூமில் தொடங்கினார்கள். அரைக்காற்சட்டைக்கு மேலே இஸ்திரி செய்யப்பட்ட சட்டை அணிந்து முதல் நாள் கூட்டத்திற்குச் சென்றேன். அன்று கணினித் திரையில் தோன்றிய கட்டங்களில் என் சக ஊழியர்களுக்கு இடைவில் நான் அடைபட்டிருந்தேன். எனக்கு மேலும் கீழுமாயிருந்த பெட்டிகளில், அவர்களில் சிலருக்குப் பின்னால் அவ்வப்போது திரையில் தோன்றிய அவர்களின் மனைவியும் பிள்ளைகளும் ஏற்கனவே சிக்கலுக்குள்ளாகியிருந்த எனது இருப்பில் நெருக்குதலை உண்டாக்கி, என் அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்தினார்கள். காணொளியை அணைத்து வைத்தால் வேலைக்கு விடுப்பு எடுத்ததாகக் கணக்கு என்று சொல்லிவிட்டதால், பெட்டிகளில் தோன்றிய அவர்கள் அனைவரையும் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
அடுத்தக் கட்டமாக பணித்தளத்தில் ஆட்களைக் குறைத்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் நின்றபடி அவர்கள் செய்யும் கட்டிட வேலைகளைப் படமெடுத்து அனுப்பி, என்னை மேற்பார்வையிடச் சொன்னார்கள். பொதுவாக என் வேலை பின் மதியத்தில் முடிந்துவிடுவதாக இருந்தது. மழை பெய்தால் அது இன்னமும் குறைந்து விடும். சம்பளத்தைச் சரியாகப் போட்டுவிடுகிறார்கள் என்பதால் பணம் ஏற்படுத்தியிருக்கக் கூடிய அழுத்தம் என்னைச் சேரவில்லை.
மெல்ல மெல்லச் சூழலுக்கேற்ப என்னைத் தகவமைத்துக் கொள்ளத் தொடங்கினேன். அலுவலக கூட்டங்களின் போது, திரையில் தோன்றும் ஊழியர்கள் ஒரே வரிசையில் இருப்பதைப் போலப் பார்க்கும் முறையை மாற்றி அமைக்கக் கற்றுக் கொண்டேன். அந்த வரிசையில் முதலாவதாகத் தோன்றும் என் படத்திற்கு வலம், மேல் மற்றும் கீழ்ப்புறங்களில் யாரும் இருப்பதில்லை. பிற்பகலில் படுத்து இரவு பத்து மணிக்கு விழித்துக் கொண்டேன். பகலில் அதிகம் பயன்படுத்தாத படுக்கைகளுக்கிடையில் உறங்குவதும் முன்பு அளவிற்குச் சிரமமாக இல்லை. இரவில் எனக்கு மேலும் கீழும் தூங்கும் உடல்களுக்கு இடையில் நான் மட்டும் சுறுசுறுப்பாய் இருந்தது புத்துணர்ச்சியைக் கொடுத்தது. அச்சமயம் கழிவறைகள் அதிகம் பயன்படுத்தப்படவில்லை. அந்நேரம் குளிப்பவன் நான் மட்டுமாக இருந்தேன்.
இரவு உலகம் அழகாய் இருந்தது. சத்தம் குறைந்த, மனிதர்களின் அரவமற்ற இரவு. மஞ்சள் விளக்கொளி, மஞ்சள் சாலை, மஞ்சள் மழை, சாலையினோரம் அமைதியாய் இருளில் ஒதுங்கிய மரங்கள், புளோக்குகள், அவற்றினுள் சீரான இடைவெளியில் எரியும் வெண் விளக்குகள், அவற்றிற்குக் கீழே உறங்கும் பலநூறு மனித உடல்கள். விழித்திருக்கும் உடல்களை விட உறங்கும் உடல்கள் குறைவாகவே தொந்தரவு செய்தன. சூரியக் கதிர்கள் பட்டு நீலம் மற்றும் சிவப்பு அடர்வுகளில் சிதறித் தெறித்த உதயம் என்னை மீண்டும் தேவனாக்கியது. இப்போது யோசித்தால் சர்க்யூட் ப்ரேக்கர் முடிந்து வழக்கத்திற்குள் வெளியேறப் போகும் காலம் தான் எனக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. பரிணாமத்தில் பின்வாங்கி வால் முளைத்துக் குரங்காகிவிட்டால் தேவலாம் என்று தோன்றுகிறது. வேலைகள், கடமைகள், ஒழுங்குகள் மற்றும் கொரோனாக்களால் பாதிக்கப்படாத, தலைகள் முளைக்காத கால்களைக் கொண்ட, நினைத்த போது நினைத்த வகையில் தாவி வாழும் குரங்குகளாய் இருப்பதும் சிறப்பு தானே!

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *