சமாச்சாரம் ஒன்று:
“ரெண்டு மணித்தியாலம்தான் கெடு. அதுக்குள்ள வெளியிரங்கிறனும்” அரண்மனையிலிருந்து கத்திக் கொண்டிருந்தான் பிரபாகரன். அவனைச் சூழவிருந்த எல்லா அமைச்சர்களும் ஆயுதங்களுடன் வேகமாய் புரப்பட்டனர். ஒவ்வொருவரின் புட்டாணத்திலும் சூட்டின் கொதி விம்பிக் கொண்டிருந்தது. மூசீனின் கழுத்தில் வைக்கப்பட்ட துப்பாக்கியின் அடி நாதத்திலிருந்து ‘ஓ’ வென்ற அலறலுடன் முற்றுப் பெற்றது பிரபாகரனின் கனத்த குரல். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை ‘ஒரு துன்பியல் நிகழ்வு’ என பின்பொரு நாளில் சொன்னபோது, புட்டாணத்தின் சூடு தணிந்திருப்பதாக காப்பிரிக் கோழி பேசிக் கொண்டான்.
சமாச்சாரம் இரண்டு:
வேலுப்பிள்ளைக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக காப்பிரிக் கோழி சொன்னான். காலத்தை விட்டும் முன்பாக கடத்தப்பட்ட அவனின் செய்தியால் பிரபஞ்சம் கலங்கிப் போனது. மந்திரித்து விடப்பட்ட சூனியக்காரர்களின் வைப்பாட்டிகள் அவனை சூழ்ந்திருப்பதாகவும், பெரும் புயலுக்குப் பின்னரான மயான அமைதியை அவன் வெறுப்பதாகவும், புட்டாணத்திலிருந்து சூட்டின் வாடை கிளம்பிக் கொண்டிருப்பதாகவும் உரையாடத் தொடங்கினர். வரவேற்கும் படியான பிறப்பெதுவும் நிகழவில்லை என்பதும், கீழ்தகு அடையாளத்தின் குறியீடு எனவும் உலாவின கதைகள். சாத்திய பீக் கதவிலிருந்து வெட்டி எறியப்பட்ட மரத்தின் நிழலில் படுத்துறங்கிய பச்சோந்தி ஒருவனின் வரலாற்றில் எடுக்கும் நாத்தங்களால் நிரப்பப்பட்ட பக்கங்களை பகிரங்கமாகக் கிழித்து துடைத்துக் கொண்டிருந்தான் காப்பிரிக் கோழி.
சமாச்சாரம் மூன்று:
பள்ளியில் தொழுதவர்களை சுட்டுக் கொல்லுதல். இன்று மிக ஆனந்தமாக இருக்கிறார் பிரபாகரன். இரத்தங்களின் வாடையும், கூரானியின் மிடல் கரகரக்கும் சப்தமும் இன்னுமின்னும் குஷியினை தந்தது. குள்ளிக் குதித்தான் பிரபாகரன். உயர உயரப் பறந்து குதித்ததில் ரணகளமாயிற்று அரண்மனை. இடுப்பில் கை குத்தி மீண்டும் மீண்டும் சிரித்தான். தனக்கு சிவப்பு நிறம் பிடிக்குமென்றும், ‘இரத்தமே வா… என் உடம்பினை தழுவு, பித்தங்களை கலங்கடி, ஈரலை பீய்த்து தா, மூளை… ச்சா… அற்புதச் சுவை… மிடரை அறு, மொட்டை கத்திகளை விட்டு, துப்பாக்கிகளை தூக்கு, சுட்டுக் குமி… வேகமாகச் சுடு, நெஞ்சைப் பிள’
“சர்வ வள்ளமை பொருந்திய பிரபாகரா! அவனோ/அவளோ/ அவர்களோ – எம்மை போல பேசுகின்றனர் தமிழில். ஆனாலும் முஸ்லிமாயிருக்கின்றனர். எமக்கு எதிரி மொழி, மாற்றான், அவர்கள் அல்லவோ? இவர்களை நாம் ஏன் கொல்ல வேண்டும்?”
“காட்டிக் கொடுத்தான் கூட்டம்”
“தகுந்த சாட்சியம் உண்டா பிரபாகரா? மன்னிக்கவும் சர்வ வள்ளமை”
“சாட்சியம் எதற்கு? சந்தேகம் போதும்”
வயல் நிலங்களில் உடல்கள் சிதறிக் கிடப்பதை காப்பிரிக் கோழி கண்டான். உடல்களை அடக்க ஒப்பந்தம் கேட்டான். டெக்டரில் கொண்டுவரப்பட்ட உடல்களிலிருந்து பிரபாகரனின் புட்டாணச் சூடு தணிவதை பார்த்துக் கொண்டிருந்தாள் ஈழ தேவி.
சமாச்சாரம் நான்கு:
வேலுப்பிள்ளைக்கு பிறந்த பிள்ளை காட்டுக்குள் வருவதை காப்பிரிக் கோழி கண்டான். பிஞ்சிலே அறுத்துவிட வேண்டுமென பின் தொடர்ந்தான். குட்டிப் பிள்ளையாயிருக்கிறான். மனம் வரவில்லை அவனுக்கு. எத்தனை குழந்தைகளை கொல்வான், இனி வரும் நாட்களில் எத்தனை சனங்கள் செத்து மடியும், கோவிலும், விகாரையும், பள்ளியும் இரத்தங்களை சுமக்கும், ரயில் வெடிப்பில் எத்தனை சிறுவர்கள்…. போதும் போதும் கொன்று விடலாம். மடக்கிப் பிடித்து கழுத்தினை அறுக்க முடியாது. கெட்ட சாபமது, குளத்தில் தள்ளிவிட்டால்… மூச்சடைத்து சாக நேரிடலாம்… அதுவும் வேண்டாம், பிறகெப்படி கொல்லுவது?
காப்பிரிக் கோழி பின் தொடர்வதை பிரபாகரன் அவதானித்தான். குட்டைகளின் நடுவில் ஓடி ஒழித்தான். அப்பாவிச் சிறுவர்களை கொல்ல நினைப்பது எவ்வளவு பாவம் என சிந்தித்தான், இவர்கள் எல்லாம் மனித மிருகங்கள் என சபித்துக் கொண்டான்.
மனிதத்தை போதிக்க வேண்டும், உலகத்தை மாற்ற வேண்டும், வன்முறையை வெறுக்க வேண்டும், கடவுளை அழைத்து பிரார்த்திக்க ஆரம்பித்தான் பிரபாகரன்.
காப்பிரிக் கோழி மறைந்திருந்து பிரபாகரனின் வேண்டுதலை கேட்டுக் கொண்டான்.
இன்னும் கொஞ்ச காலம் விட்டு வைப்போம். காலத்தின் நிறங்கள் மாறுவதை கடவுள் அறிந்திருப்பார். பிரபாகரனுக்கு உள்ளும், வெளியும் மற்றுமொரு உலகத்தை காட்டுவார். அவனொரு புத்திஜீவியாக, புத்தராக அவதரிப்பான். வாழ்க பிரபாகன், பிரபாகரம்….
காப்பிரிக் கோழி வேகமாக நடக்கத் தொங்கினான். ஆயுதங்களைக் களைந்தான். பின்னாலிருந்து எழுந்த பிரபாகரன் குண்டுக் கற்களால் காப்பிரிக் கோழியை தாக்கினான்.
பின் மண்டையில் பட்ட அடியால் காப்பிரிக் கோழி சில காலங்கள் மயக்கமாயிருந்தான்.
சமாச்சாரம் ஐந்து:
அவர்களை; அவர்களை கொடுமைப்படுத்தினர். சம நிலை கொடுக்க மறுத்தனர், தனி மொழிச் சட்டத்தை அமுலாக்கினர், கொன்றனர், குமித்தனர்.
பிரபாகரன் மாற்று முகமெடுத்தான். இனக் குரலின் அடையாளமாக தோன்றினான். மாவீரனாக பிரஸ்தாபித்தான்.
விடுதலை வீரர்களுக்கு பித்து பிடிக்கத் தொடங்கியது. அவர்களுடன்; அவர்கள் கொண்ட உறவில் எங்களை ஏன் கொன்றாய்?
ஏற்கனவே சொல்லப்பட்டது போல; சாட்சியமில்லா சந்தேகம்.
காப்பிரிக் கோழி மயக்கத்திலிருந்து எழுந்திருந்தான். முப்பது வருடங்கள் ஒன்றிரண்டாக படுத்திருந்தான். அவனது விலா வீங்கியிருந்தது. தடித்த தாடியிலிருந்து வீணி வழிந்து கொண்டிருந்தது. சமரசத்திலிருந்து மீள முடியாத பெருந்துயரத்தில் ஆழ்ந்திருந்தான். புத்தன் குண்டு வீசுவதாக கனவு கண்டான். யசோதரையின் முறைப்பாட்டில் நடுங்கி விழுந்தான். மூச்சிறைக்க அங்குமிங்கும் ஓடினான். விம்பலிருந்து வெளியேறினான். சகித்து விட முடியாத சமாச்சாரத்திலிருந்து விடுபட முயற்சித்தான். சித்தர்களின் உதவியை நாடி தோற்றுப் போனான்.
மீண்டும் காலத்தை கடந்து புறப்படத் தயாரானான்.
சாமாச்சாரங்கள் ஆறிலிருந்து பத்து வரை:
பிரபாகரன் குழந்தையாயிருக்கிறான். அவனை எப்படி கொல்ல முடியும்?
புத்திஜீவியாக, புத்தனாக, வன்முறையற்ற பிரபாகரன் வளர முடியும். காப்பிரிக் கோழி ஆயுதங்களை களைந்து ஓடத் தொடங்கினான். பிரபாகரன் குண்டு கற்களை காப்பிரிக் கோழியை நோக்கி எறிந்தான்.
தலையினை குணிந்து காப்பாற்றிக் கொண்ட காப்பிரிக் கோழி…..
பிரபாகரனை கொன்றான்.
எப்படி கொன்றான்?
கழுத்தினை நெறித்து,
குளத்தில் அல்லது
குட்டையில் தள்ளி,
நஞ்சூட்டி,
கல்லால் அடித்து,
சுட்டு.
சமாச்சாரங்களின் முற்று:
காப்பிரிக் கோழி கொலைகாரானா? புத்தனா? கொன்றது பாவம் தின்றால் போச்சா?
காப்பிரிக் கோழிக்கு ஒரு சிலை வைத்து விடலாமா? உள் குத்து அரசியல் ஏதும் இந்தப் புதினங்களில் உண்டா? காலமும் பலமும் கூடிவருகின்ற இந்தக் கார்காலத்தில் காப்பிரிக் கோழிக்கு ஏதாவது செய்தாக வேண்டும்.
பிரபாகரனை கொன்றது பற்றி காப்பிரிக் கோழி வாசகர்களுக்கு வாக்கு மூலமொன்றைச் சொல்கிறார்.
காப்பிரிக் கோழியாகிய எனது முதலாவது வாக்குமூலமிது. ஒரு வட்டக் கூறு. ஒன்றுமில்லாததிலிருந்து உருவாகும் இருத்தலியலில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
காப்பிரிக் கோழியாகிய நான் முதலாவதும் இறுதியாகவும் செய்த கொலை/தர்மம்/அறம்/காவாளித்தனம் என்பது பிரபாகரனை கொன்றதாகும்.
எப்படி? எந்த இடத்தில்? கொலை செய்தேன் என்பதற்கு அப்பால் பிரபாகரன் கொல்லப்பட்டார் எனும் செய்தியில் உள்ள உணர்வு சாரந்து பேசலாம் என நினைக்கிறேன்.
சிலர் என்னை ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்கின்ற இரு வகைப்பட்ட நிலையில் நான் ஒரு அப்பட்டமான கொலைகாரன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
பிரபாகரனை நான் கொல்லும் போது அவருக்கு வயது பதி மூன்று, எட்டு மாதங்கள், ஆறு விநாடி.
காப்பிரிக் கோழியாகிய நான் காலத்தின் முன்-பின் எனும் இரு நிலையில் வாழ்ந்து வரும் ஜீவி.
என்னையும் பிரபாகரனின் கொலையினையும் பிரித்தரிவதற்கு வாசகர்கள் இரு வேறு வாசிப்புக்களை நிகழ்த்த வேண்டும்.
பின்நவீன அடையாளப்பரப்பில் பிரபாகரன் கொல்லப்பட்டார் – உயிர் நீக்கம் செய்யப்பட்டார் என இரு நிலை விவாதங்கள் தொடங்கின. கொல்லப்படுதல் என்பது வரம்பு மீறி செய்யப்படும் படுகொலையாகவும், உயிர் நீக்கம் செய்தல் என்பது வாழ்ந்தது போதும், நீ வாழ்வதால் பிற எதிர் செயற்பாடுகள் தீவிரமடையாமல் தடுத்து நிறுத்தும் முன் ஏற்பாடு எனவும் முரண்நகை கூடியது.
நான் பிரபாகரனை கொல்வதற்கு இயலாதவனாக இருந்த போது 2009 மே மாதம் 18ம் திகதி முல்லைத்தீவில் நந்திக்கடல் காய்ந்திருந்தது.
நான் பிரபாகரனை கொன்ற போது அவருக்கு வயது பதிமூன்று என்பதை மீண்டும் சொல்லி வைக்கிறேன்.
பிரபாகரன் சாகடிக்கவும் சாகவும் பிறந்து பின்பு இறந்து போனார்.
காப்பிரிக் கோழியால் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
1) கொல்லப்பட்டார்.
2) உயிர் நீக்கம் செய்யப்பட்டார்.
3) இறந்து போனார்.
4) இவை எதுவுமே நடைபெற வில்லை.
லோரன்ஸ் வில்லலோங்கா சொன்னது போல;
“சமாச்சாரங்களின் அறுதியான பதிப்புகள் தமது வசம் இருப்பதாக யார்தான் உறுதியாய்ச் சொல்ல முடியும்?”
***
-ஏ. எம். சாஜித் அஹமட்