சப்னாஸ் ஹாசிமின் கதைகளை ஒரு வாக்கியத்தில் சுட்டுவதற்கு மேலுள்ள தலைப்பைப் பயன்படுத்தலாம். சுயமாக முடிவெடுக்கமுடியாத சிறுவர்களும், தம்மைச் சூழ நடப்பதெதனையும் கட்டுப்படுத்தவியலாது கையறுநிலையில் இருக்கும் இளைஞர்களுமே இவரது பெரும்பாலான கதைகளது பிரதான பாத்திரங்கள். பசித்தவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், புத்தி சுவாதீனம் குறைந்தவர்கள் இன்னபிறரும் இவர்களுள் அடங்குவர். நாயக பிம்பங்களற்ற நலிந்தவர்களாகிய இவர்கள் உரத்துக் குரலெழுப்புவதில்லை. அதிகாரமும் பணவசதியும் படைத்தவர்கள் செலுத்தும் பாதையில் தளர்ந்த நடையில் சென்று தொலைகிறவர்கள். பெரும்பாலான கதைகளில் கையாளப்பட்டுள்ள தன்னிலை சொல்முறை அத்தகைய பாத்திரங்களுக்குக் கனதி சேர்க்கிறது. மனவெழுச்சியூட்டும் மிகை வசனங்களோ பதற்றங்களோ இன்றி ஒரு பார்வையாள மனநிலையில் குரூரமானதும் இருள் நிறைந்ததுமாகிய உலகினைச் சித்தரிக்க சப்னாஸால் முடிந்திருக்கிறது. இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றினை நிகழ்களமாகக் கொண்டவை.முதற் கதையாகிய ‘எருக்கலம்பற்றைக்கு சில எட்டுகள் தள்ளி மடுவத்தில் தலைப்பூடம்’ இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பிறகு எழுதப்பட்டதாக இருக்கவேண்டும். பசி ஒரு மனிதனை எத்தகு கீழ்நிலைக்கும் தள்ளும், மனித விழுமியங்கள், நாகரிகம் எதனையும் பொருட்படுத்தாது என்பதை வெகு இயல்பாக அந்தக் கதையில் சொல்லியிருக்கிறார்.

‘தெருவெங்கும் பசி வார் அறுந்து கீழே விழப் பார்த்தது. இலங்கையில் பாதிக்கு மேல் ஒரு வேளைதான் வயிற்றை நனைக்கிறார்கள் என்று தெரிந்தது’ என்ற வாக்கியம் மிகையான கூற்றல்ல என்பதை 2022ஆம் ஆண்டு அங்கிருந்தவர்கள் நிதர்சனமாக அறிந்திருப்பர். இல்லாமை கோலோச்சிய, வரிசைகளின் காலம் அது. அன்று தொடங்கிய பசியின் நீட்சிதான் இன்று இலங்கையிலிருக்கும் அநேகரை காணி, நகையை விற்றேனும் கடன் வாங்கியேனும் விமானமேற்றி அனுப்பிக்கொண்டிருக்கிறது. கதையின் இறுதி வாக்கியம் திடுக்கிட வைத்தது. நான் சரியாகத்தான் புரிந்துகொண்டேனா என்பதை உறுதிசெய்ய மீண்டும் வாசித்தேன். சரிதான்! பற்றியெரியும் பசிக்கு முன் எல்லாஞ் சரிதான்! நியாயந்தான்!

இத்தொகுப்பிலுள்ள கதைகளுக்கு வலுக்கூட்டுவது கதாசிரியரின் நுணுக்கமான சித்தரிப்புகளே. ஆரம்பத்திலேயே கதைநிகழ் களத்தை நுணுக்கமான விபரிப்புகள் மூலம் கண்முன் காட்சியாகக் கொண்டுவந்துவிடுகிறார்.  அந்தப் பிடிமானத்தின் மீது நின்றுகொண்டு நிகழ்வுகளை எழுதிச் செல்கிறார். களமும் காலமும் கவனத்திற் கொள்ளப்படும் படைப்புகள் அந்தரத்தில் நிற்பதில்லை. பல கதைகளில் நீர்நிலைகள் களமாகின்றன. முதற் கதையில் ‘களப்பு’, ‘சிருஷ்டியுலகம்’இல் முறாவோடை, ‘ஊர்வனவரசனின் காலன்’இல் மருதவெட்டுவான் குளம், ‘பந்தல்’இல் கிணற்றடி. நீர்மை ததும்பும், மொழியழகு நிறைந்த கதைகள்.
ஓரிரண்டு இடங்கள் தவிர்த்து உவமைகளிலும் தேய்வழக்குகள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

‘கிணற்றடியிலிருந்து நடுங்கும் குரல் தடித்து வந்தது. கிட்டத்தட்ட பாக்குத் தட்டின் வெண்கல அடி சரியும்போது கேட்கும் கிண்ணென்ற ஓசை’ (எருக்கலம்பற்றைக்கு சில எட்டுகள் தள்ளி மடுவத்தில் தலைப்பூடம்)

‘பாறி வீழ்ந்த வேர்முடிச்சிலிருந்து காளான் முட்டம்போல அவன் எழுந்து வந்தான்’ (ஊர்வனவரசனின் காலன்)

‘ஆர்கலி’ கிழக்கிலங்கையிலுள்ள வாழ்ந்துகெட்ட குடும்பமொன்றின் கதை மட்டுமன்று, இன்று இலங்கை முழுவதிலும் பரவலாக உள்ள கதை. போரிலோ நோய்வாய்ப்பட்டோ தந்தை இறந்துபோக, தாயின் பராமரிப்பில் வளரும் பிள்ளைகள் எங்ஙனம் சீரழிந்துபோகிறார்களென்பதைச் சொல்லும் கதை. போரின், பொருளாதார வீழ்ச்சியின் பக்கவிளைவுகளில் இதுவுமொன்று. ‘கைம்பெண் வளர்த்த பிள்ளை’என தாயின் தலையில் பழிச் சுமையை ஒரேயடியாகப் பொறித்துவிடும் பொறுப்பற்ற ‘பொன்மொழி’களுக்கும் பஞ்சமில்லை. வாழ்வாதாரங்கள் குறைந்து, நம்பிக்கைகள் நசிந்துபோன காலத்தில் தட்டிக் கேட்கத் தகப்பனும் இல்லாது போகும் நிலையில் தீமைகளை நோக்கிச் செலுத்தப்படுதல் இயல்பு. ஒருவகையில் தற்கொலைதானது. அடுத்தவர் பிள்ளையையும் தன் பிள்ளைபோல அணைத்துப் பார்த்த சதக்கத்தும்மா தம் பிள்ளைகள் பகையாளிகள்போல வெட்டியும் முட்டியும் கொள்வதை கண்ணீரோடு பார்த்தபடி அமர்ந்திருப்பதை, எங்கும் பெயர் குறிப்பிடப்படாத விபரணையாளர் தன்னிலையில் சொல்லிச் செல்கிறார். ரப்பானின் தாளவொலியும் பாடல்களும் ஒலித்த அவ்வீட்டில் வசைகளும் குற்றச்சாட்டுகளும் இறைக்கப்படுவதை, தன்னலம் மேலோங்கி, அனைத்து விழுமியங்களும் பொருளற்றுப் போய்விட்டதைச் சித்தரிக்க சப்னாஸ் ‘ஹைபிரிட் தலைமுறை’ என்கிற மிகப் பொருத்தமான வார்த்தையைப் பயன்படுத்துகிறார். கந்தூரி போன்ற பண்டிகைகள் குறித்த விரிவான விபரிப்புகளினூடாக பண்பாட்டுத்தளத்திலும் இக்கதை பயணிக்கிறது.

‘பெரியப்பா சீனடி செய்து காட்டிய மணலில் ஒரு நாய்ச்சண்டை ஓய்ந்திருந்தது’ என்ற ஒரு வாக்கியந்தான் கதைச்சுருக்கம். மீதமெல்லாம் மேற்படி வாக்கியத்தை விரித்து எழுதுவதே. அதை நேர்த்தியாகச் செய்திருக்கிறார் சப்னாஸ்.

அநேக கதைகள் இறந்தகாலத்திலேயே நிகழ்கின்றன. எமது பால்யமும் பதின்பருவமுமே மனதாழத்தில் வேரிறங்கி நிலைகொண்டுவிட்டவை. அதன் பிறகு வந்த காலம் யாவும் லௌகீக பிழைத்தலுக்கானதும், உயிர் பிழைத்திருப்பதற்கானதுமான ஓட்டங்களே. அநேக கதைசொல்லிகளைப் போல பால்யமே சப்னாஸின் கதைகளதும் பரண். தந்தையரே நாயகர்கள்.
‘ஊர்வனவரசனின் காலன்’ அதிரடி முடிவினைக் கொண்ட கதை. போதைப்பொருள் விற்பவனது மனைவியின் வயிற்றில் குழந்தை தங்காமலே அழிந்துபோவது அதைப் பாவிப்பர்களது பெற்றோர் இடும் சாபத்தினாலா? ஒருவர் ஏனையோருக்குத் தீங்கிழைக்காமலிருப்பது அத்தீவினையானது தன்னைத் திருப்பித் தாக்கும் என்ற பயத்தினாலா? கேள்விகளை எழுப்பும் மொழியழகு மிக்க கதை.

இந்தத் தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கதைகள் இரண்டு. ஒன்று, சிருஷ்டியுலகம். மற்றது, ‘சென்றல் யூனியன் கோப்ரட்டி’.

‘சிருஷ்டியுலகம்’ எதிரெதிர் முனைகளிலிருக்கும் இரண்டு உலகங்களைப் பற்றியது. காரியக்காரர்களுக்கும் வெள்ளந்திகளுக்குமிடையிலான போராட்டம். அல்லது, பரிசுத்தத்திற்கும் பாவத்திற்குமிடையிலான இழுபறி. இந்தக் கதையிலும் நீர்நிலையொரு பாத்திரமாக வருகிறது. முறாவோடை. முன்பே கூறியதுபோல, சப்னாஸின் கதைகள் நிலவெளிச் சித்தரிப்புகளின் நேர்த்தியில் பிடிமானங் கொள்கின்றன. ‘சிருஷ்டியுலகம்’இல் வரும் உம்மம்மாவும் ஆயிஷாவும் அநேகமாக எல்லா ஊர்களிலுமுண்டு.

கதையை வாசித்து முடித்தபோது கவிஞர் ராஜசுந்தரராஜனின் ‘விபரீதம்’ என்ற கவிதை ஞாபகம் வந்தது.

கிறுக்குப் பிடித்த பெண்ணை
கர்ப்பவதியாக்க
எவன் மனம் துணிந்தது இப்படி!
அதற்கு முன்
இவளைப் புஷ்பவதியாக்க
இறை மனம் துணிந்ததே எப்படி?

இனங்களுக்கிடையிலான முறுகலை இலக்கியம் இல்லாமலாக்கிவிடுமென்ற பேராசையெல்லாம் எனக்கு இல்லை. ‘உதறல்’ கதையில் வரும் ‘குப்பி விளக்கின் சுடர் போல’ தணிந்த ஒளியைக் கொடுத்தாலே போதும்.

நிலவெளி, சூழல் சித்தரிப்புகள்போல காலமும் கதைகளுக்கு காத்திரத்தை அளிக்குமென்பதை சப்னாஸ் உணர்ந்துள்ளார். 1915ஆம் ஆண்டில் நடந்த ‘கண்டி கலவரம்’ஐ அடுத்து, ஐம்பதுகளுக்குப் பிறகான (2009 வரையிலான) இலங்கையைப் பொறுத்தமட்டில், இனக்கலவரங்களும் போரும் இல்லாத காலமென ஒன்று இருந்ததில்லை. மேற்குறித்த கதையிலும் (சென்ட்ரல் யூனியன் கோப்ரட்டி) ஜே.வி.பி.யோடு நெருக்கமாகவிருந்த சல்மாவின் கணவர் ‘தோழர்’ மாத்தையாவைப் பின்னணியாகக் கொண்ட அரசியல் சூழல் இடம்பெறுகிறது. ‘உதறல்’ கதையில், இந்திய இராணுவம் வெளியேறியதன் பின் விடுதலைப்புலிகளுக்கும் பிரேமதாச அரசிற்குமிடையிலான இணக்கநிலை திரிந்து முறுகல் நிலை ஆரம்பித்த காலம். ‘பாரம்’ கதை நிகழ்வதோ போர்நிறுத்த காலத்திற்குப் பிறகு தமிழ்-முஸ்லிம் இன முரண்பாடுகள் கூர்மையடைந்து ஒருவர் மற்றவரை ஐயத்தோடு நோக்கத் தொடங்கிவிட்ட துரதிர்ஷ்ட காலத்தில்.

போர் முறுகல் நிலவும் சூழலில், எந்தத் திசையிலிருந்து உமிழப்படும் குண்டு தம்மைச் சாய்க்குமென்று தெரியாத நிலையில், யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்த ஆறு முஸ்லிம் மாணவர்களும், தமது பாதுகாப்பின் பொருட்டு இந்த மாணவர்களோடு இணைந்துகொள்ளும் நான்கு முஸ்லிம் பொலிஸ்காரர்களும் மட்டக்களப்பு-கல்முனை நேர்ப்பாதையைத் தவிர்த்து வெவ்வேறு பாதைகளில் பயணித்து அக்கரைப்பற்றினைச் சென்றடைவதே ‘உதறல்’ கதை. வழிநெடுகிலும் கருணை சுரக்கும் சுனைகளை, முதலைகள் வாய்பிளந்து காத்திருக்கும் வாவிகளை அவர்கள் கடக்கவேண்டியிருந்தது.

“நாங்கள்தான் சண்டை பிடித்து அழியிறம். நீங்களாவது படியுங்கோடா” என்று சொன்ன போராளியின் குரலும் ஒரு குப்பிவிளக்கின் சுடரேதான்.

‘இப்படித்தான் எல்லாச் சோதனைச் சாவடிகளிலும் அறுக்கப்பட்ட குறிகளுக்கு மரியாதை இருந்தது’ என்ற வாசகம் ஆசுவாசத்தினின்று அல்லாமல் கசப்பிலிருந்து பிறந்தது.

செட்டிகுளத்திலிருந்த புலிகளின் காவலரண்களில் அவர்கள் காத்திருந்தபோது காணும் காட்சி இங்ஙனம் விரிகிறது:

‘பல இடங்களில் தொடரும் சண்டைகளில் இடம்பெயர்ந்த குடும்பங்களும் தங்களுக்குப் போதிய அளவு பெரிய சதுரப்புடவைச் சுவரினுள் தங்கியிருந்தனர். குழந்தைகளுக்காகப் புகைந்த அடுப்புக்கருகலும் துண்டிக்கப்பட்ட உடலங்கங்களிலிருந்து வரும் அழுகைச்செருமலும் பத்துப் புத்தகமூட்டைகளைக் கொளுத்துவது போலவிருந்தன.’

போலவே, யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்த இடத்தை கீழ்வருமாறு சித்தரிக்கிறார்:
‘பிறை வடிவங்கள், 786 இலக்கம் பொறிக்கப்பட்ட பழைய வீடுகள், அப்படியே நெருக்கமாகவிருக்கும் ஒழுங்கைகள், உடைந்த பல வீடுகளில் அகலமான சுவர்களில் வளர்ந்த ஆலமரங்கள் என துயரங்களின் சாட்சியங்கள் அப்படியே இருந்தன’ (பிரேமகலகம்)

இனமுரண்பாடுகளால் பிளவுண்டுபோன இரு சமூகங்களைப் பற்றி எழுத நேரும்போது மனச்சாய்வுகளின்றி எழுதுவதென்பது, முதலைகள் நிறைந்த நீர்நிலைக்கு மேலுள்ள மிகக் குறுகலான பாலத்தைக் கடக்குமளவு கவனத்தைக் கோருவது.

‘புலிக்குட்டி கிழங்குக் கடை’யும் ஒரு சிறுவனது கதையே. தொகுப்பின் ஏனைய கதைகளோடு ஒப்பிடுமிடத்தில் அத்தனை காத்திரமற்றது. ‘பாரம்’ தேர்தல் நேரங்களில் கறிவேப்பிலைகளாகப் பயன்படுத்தப்படும் தொண்டனொருவனின் கதை. முடிவில் சிறுவனின் பால்ய நினைவுகளில் குருதி தெறிக்கிறது. அக்கணமே குழந்தைமை அழிகிறது. மரணங்களையும் ஆதாயங்களாக மாற்றும் அரசியல்வாதிகள் எங்குதானில்லை?

யதார்த்தம் இருண்டதேயானாலும் வாசகர்கள் தம்மோடு அதனைப் பொருத்திப் பார்ப்பர். அமானுஷ்யமெனப்படுவது அதில் சம்பந்தப்பட்டவர்க்கன்றி முற்றிலும் அந்நியமானது. ஆனால், ஈர்ப்பது. மூலைகளில் புதைக்கப்பட்ட மந்திரத் தகடுகளால் ‘காவல்’செய்யப்பட்ட வளவொன்றின் காவலை வெட்டுவதற்கான எத்தனங்களைச் சுற்றி நேர்த்தியாகப் பின்னப்பட்ட கதை ‘காவல்காரன்’. மாந்திரீகம், தாந்திரீகம், வசியம், மந்திரத்தகடுகள், சூனியம், ஏவல், செய்வினை, நள்ளிரவில் நகர்ந்து செல்லும் மாட்டுப் பட்டி, ஹா ஹூவென விரட்டும் மேய்ப்பனின் குரல், குறி பார்ப்பது, நீல நிறத்தில் செத்து வீழ்ந்து கிடக்கும் காகங்கள், பரிசாரி எல்லாங் கலந்துகட்டி சரசரவென ஓடும் கதையைத் தொடர்ந்து ஓடும் மனம்.

இந்தத் தொகுப்பிலேயே நீளமான வாக்கியம் ஒன்றுண்டு. தொகுப்பின் தலைப்பாக அமைந்த கதையின் முதல்வாக்கியம் இங்ஙனம் ஆரம்பிக்கிறது: ‘நாவாந்துறை ஐசு ஃபெக்டரிக்குப் பக்கத்தில் யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை வீதியில் ஒரு வளவில் வீடுடைத்த பழைய கற்துண்டுகளை ஒரு ட்ரக்டர் கவிழ்த்த சத்தத்தில் மின்வடத்திலிருந்த காக்கைகள் கூட்டமாகக் கரையேற செக்கல் செம்மஞ்சளில் கடலில் இறால் பிடிக்கிற மீனவர்களின் லாம்புகள் குறையும் சூரிய வெளிச்சத்தைத் தமக்குள் பிரித்துக்கொண்டன போலவிருந்தது’ – அந்தியின் சித்திரம். சப்னாஸ் ஒரு கவிஞருங்கூட என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.

மனங்களிலெல்லாம் மதங்களுண்டு. மிகச் சிலராலேயே அதனிருப்பை மறக்கமுடிகிறது. பிரேம கலகத்தின் சாரமிதுவென எனக்குத் தோன்றிற்று.

‘பந்தல்’ கதையில், இஸ்லாமிய சமூகத்தினுள் படிப்படியாக நிகழ்ந்த மாற்றங்கள் ஒருவரது வழிபடு தெரிவில் எங்ஙனம் இடையிட்டது என்பது ஒரு சிறுவனின் பார்வையூடாகப் பேசப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் மீதான ஆற்றாமையை மாஜிதாவின் ‘பர்தா’நாவலிலும் காணமுடிந்தது. ஓர் இலக்கியப் பிரதியானது உள்ளக விமர்சனத்திற்கு அஞ்சலாகாது என்ற ஓர்மமும் நேர்மையும் மாஜிதாவின் எழுத்தில் வெளிப்பட்டது. ஸர்மிளா ஸெய்யித்தின் படைப்புகளும் இவ்விடயத்தில் குறிப்பிடத் தகுந்தவை. போலவே, சப்னாஸின் ‘பந்தல்’கதையில் வரும் சியாரத்தானது புதிய சீர்திருத்தங்கள் பற்றிய பேச்சுகள் எழுந்தபோது நெருப்பு மூட்டி எரிக்கப்படுகிறது. இவ்வாறான கருக்கள் இன்மையிலிருந்து எழுவதில்லை.”சோனகர் தெருவில இது பச்சைப் பள்ளி. அங்கால ஒஸ்மானியா கொலீஜ் கிட்ட வெள்ளப் பள்ளி. நாவலர் ரோடு நெடுக போனா நாவாந்துறை. அது ஃபுல்லா கிறிஸ்டியன் ஏரியா” (பிரேமகலகம்)

ஐந்து சந்தியும் வில்லங்கமான விசயங்கள் நடக்குமிடம். மதம்போலவே, வாழுமிடமும் செய்யும் தொழிலும் அதன் விளைவான வர்க்கபேதங்களும்.

“அதிலயும் ஒரு முஸ்லிம் பெடியனை சேத்திட்டுத் திரியினம். அவன் ஃபுட்பாலை விட அந்தப் பெட்டை நொய்லினத்தான் உருட்டுறான்”

வார்த்தை அம்பு மிகச் சரியாகத் தாக்கிவிட்டது. உண்மையில், பிழையாக. மற்றெல்லாவற்றையும் பின்தள்ளி மதந்தான் மனிதரின் முதலடையாளமென ஆனது துயரம். எப்போதும் வெளிக்கிட்டபடியிருக்கும் இன்பத்தின் பிரசன்னம் இந்தக் கதையில் எதற்கென்று தெரியவில்லை.

‘சென்ட்ரல் யூனியன் கோப்ரட்டி’யின் சல்மாவும், ‘சிருஷ்டியுலகம்’ ஆயிஷாவும் என்னால் மறக்கப்பட முடியாத கதாபாத்திரங்கள். இத்தனைக்கும் சல்மா எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். தனது வளவுக்குள் வந்து விழும் கிரிக்கெட் பந்துகளை இரண்டு துண்டுகளாக வெட்டியனுப்பும் பெண்.
கணவன் கொல்லப்பட்ட பிறகு தன்னை ஊரவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக விலக்கிக்கொண்டு தனித்து வாழும் சல்மாவின் வளவுக்குள் விழுந்துவிட்ட பந்தை எடுக்க திருட்டுத்தனமாக உள்ளிறங்கிய வசீம் என்ற சிறுவன் தான் கண்ட காட்சியில் உறைந்துபோய் நிற்பான். காமம் ஒரு பாவமெனக் கற்பிக்கப்பட்ட சமூக மதிப்பீட்டின்படி இனி அவன் முன்பிருந்த சிறுவனில்லை. அதையும்விட அதிர்ச்சிகரமான பாடமொன்றை அவன் கற்றுக்கொள்கிறான். ‘காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார்’. இனி தூயதென எஞ்சியது யாதுமில்லை அவனளவில்.

அந்த வளவைப் பற்றிய சித்தரிப்புகள் இன்றி அக்கதை முழுமை பெற்றிராது.

‘சல்மா ஆன்ட்டியின் வீடு இருண்டாப்போல கூட்டிப் பெருக்காத வளவு, முன் விறாந்தையில் தொங்கும் குண்டு பல்பு, வார்ணிஸ் உரிந்த முதிரை மர ஜன்னல்கள், வெளவால் துப்பிய சுவர்கள், மின்சார மீட்டர் பெட்டி, அதில் முன்னால் இருந்து எப்போதோ பந்து பட்டு பாதி நொறுங்கிய கண்ணாடி, தும்புக் கால்மிதியில் பூனை தின்று போட்ட மீன் முள், வெயில் பட்டுப் பிளந்த ஜன்னல் கதவுகளில் செருகப்பட்ட மின்சார வாரிய பில், நான்கைந்து எக்சோரா செடிகளைச் சுற்றி மண்டியிருக்கும் மஞ்சள் கண் சிலந்திவலை ஒட்டடை என இருக்கும்.’

சுயமாகச் சிந்திக்கும் மாணவன் ஆசிரியர்களது ‘யாமே அறிவுடையோம்’ எனும் அகந்தையின் மீது கல்லெறிகிறான். தம்மை மேவ எண்ணுபவனை அணைத்துப்போகும் ஆசிரியர்களுமுண்டு. அத்தகையோர் அறிவுச்செருக்கினைக் கடந்தவர்கள். சிறு புல்லும் தன்னளவில் முழுமை என்பதை நம்புகிறவர்கள். ஏனையோர், போயும்போயும் ஒரு மாணவன் தம்மை சிறுமைப்படுத்துவதா என்று பொங்குவர். தமது மேட்டிமைத்தனத்தை எவ்வகையிலேனும் வெளிப்படுத்தி அற்பர்களாகத் தம்மைக் கீழிறக்கிக்கொள்வர். அவளோ அவனோ ஏழையாகவும் பின்புலங்கள், பலங்களற்றவராக இருந்துவிட்டால் இழிவுசெய்யப்பட கூடுதல் ‘தகுதி’ பெற்றவராகிறார். சப்னாஸின் ‘சது என்கிற சங்க இலக்கியம்’ கதையில் இப்படியொரு மாணவன் வருகிறான். தமிழிலக்கிய அறிவும் ஆர்வமும் கொண்ட அவன் ஈற்றில் என்னவாகிறான் என்பது இனி தொகுப்பை வாசிக்கவிருப்பவர்களுக்கானது.’முந்நூறூவா’ மனிதன் எந்தளவு அற்பத்தனம், சில்லறைத்தனம், குரூரம் மிக்கவன் என்பதைச் சித்தரிப்பது. மற்றவரின் துயரில் மகிழ்வதென்பது அடிப்படை சுபாவம். நாகரிக மேற்பூச்சின் கீழ் வன்மம் பல்லிளித்துக்கொண்டுதானிருக்கும் என்பதற்கு செய்யது மக்கீன் முதலாளி ஓர் உதாரணம். அநேக கதைகளைப் போலவே சிறுவனொருவனே இந்தக் கதையிலும் இரங்கத்தக்க முதன்மைப் பாத்திரம். மேலும், முதலாளியின் இச்சைக்கு இணங்க மறுத்துவிட்ட தாயின் மகன்.

சப்னாஸின் எந்தவொரு கதையுமே பொய் நம்பிக்கைகளை அளிப்பதாக முடியவில்லை. ‘இது இப்படியிருக்கிறது, பார்த்துக்கொள்ளுங்கள்’ என்ற தொனியுடனே முடிகின்றன. சுபமுடிவுகளைக் கொண்ட கதைகள், தற்காலிகமாகவேனும் உண்டாகும் குற்றவுணர்விலிருந்து வாசகரை விடுவித்துவிடுகின்றன. இலக்கியத்தின் நோக்கங்களிலொன்று மனிதமனங்களைப் பண்படுத்துதல் எனில் (உறுதிபடக் சொல்வதற்கில்லை) அந்தப் பண்படலும் புண்படலும் நம்பிக்கையூட்டும் முடிவுகளால் நிகழாது போய்விடுகின்றன.
எழுத்துப் பிழைகளேயற்ற இத்தொகுப்பு ‘தமிழ்வெளி’யின் பதிப்பு. கண்ணாடிக்கு ‘பவர்’கூட்டவேண்டுமோவென யோசிக்க வைக்கும் ‘ஸ்ருடன்ற்ஸ் ஜெராக்ஸ்’ இல் வெளிவராது, அழுத்தமான மையெழுத்துகளில் அச்சாகியிருப்பது ஆறுதல். நூலின் அட்டையை கலை நேர்த்தியோடு றஷ்மி வடிவமைத்துள்ளார்.

சப்னாஸ் ஹாசிமின் முதற் சிறுகதைத் தொகுப்பு இது என்பது வியப்பளிக்கிறது. கட்டிறுக்கமான வடிவமும் கவிதைக்கு நெருக்கமான மொழியழகும் உணர்வெழுச்சிகளில் தங்கியிராத நிதானமான சொல்முறையும் இவரை தனித்துவமான படைப்பாளியாக அடையாளங் காட்டுகின்றன.

தமிழுக்குச் செழுமை கூட்டும் மேலுமொரு கதைசொல்லி சப்னாஸ் ஹாசிம்.

***

-தமிழ்நதி

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *