1.

இமைகளைப் பிரிக்க சிரமமாயிருந்தது. படுக்கையிலிருந்து புரண்டு எழுந்தேன். கண்களை மெதுவாகத் திறந்தபோது அறைச் சுவர்களில் திரைகளின் தடையையும் மீறி பிரவேசித்த ஒளி கண்களைக் கூசச் செய்தது. அத்தனை ஒளிக்கு கண்கள் பழக ஒரு நிமிடம் ஆனது.செருப்பு அணிந்து எதிரே இருந்த கண்ணாடியை பார்த்தபடியே கைகளை உயர்த்தி சோம்பல் முறித்து கலைந்த கூந்தலை அள்ளி முடிந்து வெளியே வந்தேன்.

ஹால் கதவு திறந்து கிடந்தது.  யார் கதவுகளை இப்படித் திறந்து போட்டது?

அம்மா எங்கே போனாள்? வாக்கிங் போய் இருக்கிறாளோ ? ஒரு நிமிடம் உள்ளிலும் வெளியிலுமாய் அவளைத் தேடினேன். இப்படிக் கதவுகளை எல்லாம் திறந்து போட்டுவிட்டு கேட் வரை கூடப் போக மாட்டாளே. எங்கே கிளம்பினாலும் வீட்டைப் பூட்டி சாவியை கையில் எடுக்கும்போது தான் அவளுக்கு ஏசி ஆப் பண்ணிட்டோமா, மேல  பால்கனி கதவு சரியா சாத்தினோமா? ஒரு முறை சரியா பூட்டாம இருந்து, என் ஸ்டுடியோகுள்ள ஒரு புறா வந்து நான் வரைஞ்சு வெச்சிருந்தத பெயிண்டிங் ஒன்னை நாசம் பண்ணிடுச்சே. எதுக்கும் ஒரு தடவை பார்த்துட்டு வந்துடேன்.

“அம்மா அம்மா”…

கொஞ்சம் சத்தமாக கூப்பிட்டேன். ஒருவேளை பாத்ரூமில் இருப்பாளோ?  என்னவென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு வித்தியாசம் சூழலில் இருந்தது. ஏதோ நிச்சயமாய் சரியில்லை. என்னவோ ஒரு சங்கடம் உடம்பு முழுக்க உருவானது. அப்பா எங்கே போனார்? யோசித்தபடியே கார் இருக்கிறதா என்று பார்க்க போர்டிகோவிற்கு வந்தேன். பின்பக்கத்தை தட்டிவிட்டால் ஓடக் காத்திருக்கும் கம்பீரமான குதிரையைப் போல பளபளப்பாக நின்றிருந்தது அப்பாவுடைய கார். அதற்குப் பக்கத்திலேயே அம்மாவுடைய சிறிய கார்.  அப்படியானால் இரண்டு பேரும் எங்கே போனார்கள்?  போர்டிகோவைக் கடந்து காம்பவுண்ட் கேட் அருகே வந்து பார்த்தபோது அது பூட்டப்பட்டிருந்தது. வழக்கமாய் சாவியை வைக்கும் பூந்தொட்டியை நகர்த்தி அதன் அடியில் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து தெருவை எட்டிப் பார்த்தேன். என்ன இது!!!தான் காண்கிற காட்சியை நம்ப மறுப்பது போல் என் முகம் ஒரு நொடி சுருங்கியது. கண்களை ஒரு முறை இறுக மூடி தலையை இடதும் வலதுமாக  வேகமாக அசைத்தேன். நான் பார்த்த காட்சிகளின் அபத்தமெல்லாம் அந்தத் தலை உழுப்பலில் உதிர்ந்துவிடும் என்பது போல. மீண்டும் கண்களைத் திறந்த போதும் அந்த காட்சி மறையாமல் அப்படியே இருந்தது. ஒரே ஒரு ஆள் கூட இல்லாத வீடுகளும், தெருவும். வரிசையாய் நிற்கும் மரங்களில் ஒரு காகமோ, குருவியோ கூட இல்லை. இத்தனை அமைதியான அதைத் தெரு என்று சொல்லலாமா? நான் நடக்கும் போது கேட்கும் செருப்பு சத்தத்தை தவிர வேறு சத்தமே இல்லை. ஒரு சின்ன காற்றுக் கூடவா அடிக்காது? சிறிய சருகுகள் கூடவா புரளாது? எனக்கு மீண்டும் நான் எங்கே இருக்கிறேன் என்று ஒரு சந்தேகம் வந்தது. திரும்பி வீட்டைப் பார்த்தேன்.

போர்டிகோவில் இருந்து மாடிக்கு போகிற வழியில் சிறிய வயதிலிருந்து எப்போது கோபம் வந்தாலும் ஒளியத் தேர்ந்தெடுக்கும் சிறிய சந்து. சமையலறை டைல்ஸில் அதே ஆவி பறக்கும் காபி கோப்பை. ஹாலில் சோபாவிற்கு எதிரே பாதிச் சுவரை மறைத்தபடி இருக்கும் பெரிய டிவி. சட்டென யோசனை வந்து பரபரவென்று ஓடி தொலைக்காட்சியை உயிர்ப்பித்து செய்திச்சேனல்களைப் பார்த்தேன். எந்தச் சலனமும் இல்லாமல் வெண்திரையாக விரிந்தது தொலைக்காட்சி. எண்களை மாற்றி மாற்றி அழுத்திப் பார்த்து சோர்ந்து போய் ரிமோட்டை தரையில்  வீசி எறிந்து விட்டு சோபாவில் தொப்பென்று அமர்ந்தேன்.“பொறுமையாய் இரு, இப்போது பொறுமை ரொம்ப முக்கியம், எங்கே  நிமிர்ந்து நேராக உட்கார், ஆமாம் அப்படித்தான், வெரி குட் வெரி குட் இப்போ பத்து வரை எண்ணுவேன் அது வரை மூச்சை நன்றாக உள்ளிழுத்து வைத்துக்கொண்டு பிறகு மெதுவாக வெளியே விட வேண்டும் சரியா breath in breath out.

பொறுமையா ரிலாக்ஸ்டா ஒரு ஐந்து முறை மனம் கொஞ்சம் கொஞ்சமாக தன் நிதானத்தை மீட்டெடுத்தது, என்ன நடந்தது? என்ன நடக்கிறது? இதெல்லாம் ஏதாவது விளையாட்டா? நேற்று ஆபீஸில் இருந்து வந்ததும் அம்மாவுடனும் அப்பாவுடனும் பேசிக்கொண்டே சாப்பிட்டது நினைவு வந்தது. அப்பா கூட சாப்பிடும்போது எதற்கு மொபைல் என்றாரே. ஆமாம் என்னுடைய மொபைல் எங்கே?  எழுந்து படுக்கை அறைக்குள் ஓடினேன். இதோ இப்போது தெரிந்துவிடும்.  யாரோ விளையாடுகிறார்கள். யாரிடமாவது கேட்டால் போதும். திரை விலகினது போல் எல்லாம் முடிவுக்கு வந்து விடும். விபின், பிரவீனா விஷ்ணு எவா…வரிசையாய் பெயர்களையும் எண்களையும் அழுத்தினேன் யாரைத் தொடர்பு கொள்ள முயன்றாலும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்கள் என்று ஒரு கிளிக் குரல் கொஞ்சியது என்ன எழவுடா இது இரவோடு இரவாக சுரங்கம் தோண்டி மண்ணுக்குள் போய்விட்டார்களா? இல்லை ராக்கெட் ஏறி எங்காவது அயல்கிரகம் போய் விட்டார்களா?  எழுந்து சமயலறைக்குப் போய் காபி தயாரித்து ஊற்றிக்கொண்டு  வந்து அமர்ந்து காபியை விழுங்கிய போது தெருவின் வெறுமையும் அமைதியும் முகத்தில் அறைந்தது. கடைசிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற தெரு நாய்களும், சரியாக வாகனங்கள் வரும்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்து குறுக்காக ஓடி மனிதர்களுக்கு சொர்கங்களைக் காட்டும் பன்றிக் குட்டிகளும் கூட எங்கும் இல்லை.  யோசனை வயபட்டவளாக  சிறிது நேரம்  கால்களை உதைத்துதைத்து ஊஞ்சல் ஆடினேன். பிறகு கண்களை மூடி அதிலேயே படுத்துக்கொண்டேன்.

 2.

நிறைய நேரம் அப்படியே படுத்துக் கிடந்தேன். அலுப்பாகவும், பயமாகவும் இருந்தது. எழுந்து உள்ளே சென்று கார் சாவியை எடுத்து வந்து கதவுகளை அகலத் திறந்து வைத்துக் காரை வெளியே எடுத்தேன். கார் ஓட்ட கற்றுக் கொடுத்த அப்பாவின் நினைவு வந்தது. இதே சாலையில் ஒரு முறை இருவரும் வெளியே போய் சாப்பிட்டுத்  திரும்பி வருகிற போது நான்

“அப்பா உங்களுக்கும் அம்மாவுக்கும் ஏதாவது பிரச்சனையா?”

அப்பா குழப்பமாய் என்னைப் பார்த்து “ஏன் ?”என்றார்.

“இல்ல சும்மா தான் கேட்கிறேன் சொல்லுங்க.”

அப்பா இல்லை என்று தலை அசைத்தார்.

பொய் சொல்லாதீங்க. எனக்குத் தெரியும். You are not happy with her.

அப்பா எதுவும் பேசாமல் காரை செலுத்திக் கொண்டு இருந்தார்.

நான் மீண்டும்

நீங்க நைட்ல போடுற சத்தம் எல்லாம் என் ரூம் வரை கேட்குது எதுக்கு பொய் சொல்றீங்க?

அப்பா எந்த மறுமொழியும் கொடுக்காமல், அதே சீரான வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தார்.

“நீங்களும் அம்மாவும்  கல்யாணம் செய்துக்கோங்களேன், எல்லாம் சரியா போயிடுமோ என்னவோ அம்மா கிட்டப் பேசிப் பாருங்களேன், கண்களில் ஆர்வம் மின்னச் சொன்னேன்.

அப்பா சாலையின் இடது புறமாக வண்டியை செலுத்தினார். சாரிமா உன்கிட்ட என்ன சொல்றதுன்னு தெரியலை மீண்டும் ஒரு சிறிய இடைவெளி “நீ இன்னும் கொஞ்சம் பெரிய பொண்ணானதும் இதைப் பத்தி கண்டிப்பா பேசலாம் சரியா”  என்று என் கைகளை அழுத்தினார்.

இளநீர் குடிக்கிறியா?

என் பதிலை எஎதிர்பார்க்காமல் வண்டியை ஓரமாக நிறுத்தி சாலையில் இருந்த இளநீர் கடையில் எனக்கு இளநீர் வாங்கிக் கொடுத்துவிட்டு, அம்மாவுக்கும் ஒன்றை வாங்கிக் காருக்குள் வைத்தார். பிறகு கொஞ்சம் தள்ளி நின்று ஒரு சிகரெட்டை புகைத்து விட்டு வந்து வண்டியை எடுத்தார்.

 3.

தெரு அமைதியாக இருந்தது. வழியில் வண்ணவண்ண பிளக்ஸ் போர்டுகளில் ஆண்களும் பெண்களும் தாங்கள் சந்தைப்படுத்தும் பொருட்களுக்கு தகுந்தபடி ஆடை அணிந்து சீரான பல்வரிசயைக் காண்பித்து அளவாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இப்படிச் சிரிப்பதெல்லாம் சரி. ஆனால் இதையெல்லாம் வாங்க யார் இருக்கிறார்கள்? சென்னையின் இரண்டாவது பெரிய மாலின் முன் யாருமற்ற வாகனங்கள் அனாதையாக நின்றிருந்தன. சாதாரண நாட்களில் இரவு காட்சி முடிந்து basement இல் இருந்து காரை ஓட்டிக்கொண்டு தெருவிற்கு வந்து சேர அரை மணி நேரம் ஆகும். ஒரு முறை இங்கே உள்ள ஒரு தியேட்டரில் விபினோடு இரவுக் காட்சிக்குப் போய் விட்டு வெகு நேரம் கழித்து வீடு திரும்பினேன். அம்மா மேல் அறையில் உள்ள அவளது ஸ்டூடியோவில் இருந்து ஜன்னல் வழியாக நான் வருவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். குனிந்து கார் ஜன்னல் வழி விபினுக்கு முத்தமிட்டதை நிச்சயம் பார்த்திருப்பாள். ஆனால் அதைப் பற்றி மற்ற அம்மாக்களைப் போல் எதுவும் கேட்டுக்கொள்ள மாட்டாள். அவளுக்கு விபினை சுத்தமாகப் பிடிக்காது. ஒருமுறை அவனை வீட்டிற்கு டின்னருக்கு அழைத்து வந்தபோது கூட ஒன்று இரண்டு வார்த்தைகளுக்கு மேல் அவள் அவனுடன் பேசவே இல்லை. அப்பாதான் சிரமப்பட்டு அங்கு நிலவிய இறுக்கத்தை தன்னுடைய அர்த்தமில்லாத கேள்விகளால் உடைத்து கொண்டிருந்தார். போகும்போது விபின் சிரித்தபடி கேட்டான். “உன்னோட அம்மாவுக்கு என்னை சுத்தமா பிடிக்கலை போல”

“ஆமா எங்க அம்மாவுக்கு  என்னைப் பிடிக்குமான்னே எனக்குத் தெரியலை, இதில உன்னை வேற பிடிக்கணுமாக்கும். போடா நான் அவன் முதுகில் கை வைத்துத் தள்ளி கேட்டை பூட்டி திரும்பினேன்.

                                                                                                  4.

பெட்ரோல் அளவு குறைந்து வருவதைக் கார் உணர்த்தியது, இன்னும் ஒரு ஐநூறு மீட்டரில் பெட்ரோல் பங்க் வந்துவிடும்.

ஆக்சிலேட்டரை வேகமாக மிதித்தேன். சிக்னலில் சிகப்பு ஒளிர்ந்தது. தடுத்து நிறுத்த யார் இருக்கிறார்கள்? யாராவது தடுத்து நிறுத்தி லைசன்ஸ் எடு இன்சூரன்ஸ் வெச்சுருக்கியா? எங்கே காமி பார்க்கலாம், குடிச்சிருக்கியா? ஊது என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

பங்க்கில் யாரும் இல்லை. நானே இறங்கி முழு டேங்க்கிற்கும் பெட்ரோலை நிரப்பினேன். “ஜீரோ பார்த்துக்கங்க மேடம்” என்கிற வழக்கமான குரல் இல்லை. உலகமே காலியாகி இவ்வளவு பெரிய வானத்திற்குக் கீழ் நான் அனாதையாக நிற்கும் போது கூட காசு கொடுக்காமல் பெட்ரோல் போட்டது குறித்து ஓர் அல்ப சந்தோஷம் உண்டானது.  டேங்கை மூடிக் காரைத் திரும்பினேன். இந்த human extinct இல் நடந்திருக்கிற ஒரே நல்ல விஷயம் காசுக்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் போனது தான். கிடைக்கிற எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. இன்னும் ஒரு ஐநூறு கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் என்னை மாதிரி தப்பிப் பிழைத்தவர்கள் யாராவது இருப்பார்களோ? போய் பார்க்க வேண்டும். கொரோனா மாதிரி அல்லது அதை விட விபரீதமாக ஏதாவது இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறதா?

பொழுது மெதுவாக மங்கிக் கொண்டே வந்தது. நான் என்னை அறியாமல் காரை வீட்டுக்கு திருப்பினேன். அங்கே யார் இருக்கிறார்கள். எங்கேதான் யார் இருக்கிறார்கள். இதோ  நாகலிங்கப் பூக்கள் உதிர்ந்து கிடக்கிற இந்தப் பெரிய அடுக்ககத்தின் உள்ளே நுழைந்து ஏதாவது ஒரு வீட்டில் ஏதாவது ஒரு அறையில் படுத்து கிடக்க முடியாதா என்ன? ஆனால் மனது வீட்டையே சுற்றியது. பழகிய மனதைப் போல மோசமான விஷயம் ஒன்றும் இல்லை. ஒருவேளை அம்மாவாக இருந்தால் இப்போது என்ன செய்திருப்பாள்? அவளுக்கு இதெல்லாம் ஒருக்கால் பிடித்து இருக்கக்கூடும். யாரும் இல்லாத உலகம்.

“அதான் முக்கால்வாசி நேரம் உன் ஸ்டுடியோல தனியாதானே மா இருக்கே. அப்புறமும் எதுக்கு தனியா எங்காவது கிளம்பி போற?”

ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு மாதிரியான தனிமை. கடலுக்கு பக்கத்தில் உணர்கிற தனிமை வேற, மலைக்கு நடுவில உணர்கிற தனிமை வேற, அதே போலத்தான் பருவ காலங்களுக்கும், மழை காலத்துல இருக்கிற தனிமை குளிர் காலத்துல இருக்காது, அதுவே கோடை காலத்ததில வேற மாதிரி ரொம்ப கசகசப்பா, எரிச்சல் தரக்கூடியதா…

ம்ம்…

நீ கூட நிறைய இடத்துக்கெல்லாம் போ, பிடிச்சதெல்லாம் பண்ணு, கல்யாணம் பண்ணி குழந்தை எல்லாம் பெத்துக்க வேண்டாம்.

அவளுக்கு ஆட்களில்லாத இந்த காலியான தெருக்களும், மயான அமைதியும் பிடித்து இருக்கும். ஒரு பைஜாமாவை அணிந்துகொண்டு, வரைவதற்குத் தேவையான உபகரணங்களை காரில் போட்டுக்கொண்டு இந்த உலகம் முடிகிற இடம் வரை கூடப்போயிருப்பாள். ஆனால் எனக்கு வீடு போதும். திரும்பி வரும்போது யாராவது எனக்காகக் காத்துக் கொண்டு இருக்கிற வீடு. அழகிய சிறு கூடு.

ஆனால் அப்பாவிற்கு அம்மாவை ஏன் இவ்வளவு பிடித்திருந்தது? காதலா? இல்லை எப்போது வேண்டுமானாலும் எல்லாவற்றையும் உதறிவிட்டு போய்விடக் கூடிய சாத்தியமுள்ள அவளுடைய மனநிலையில் மீதான பயமா? இவ்வளவுவருடங்கள் அம்மா மாதிரி ஒரு ஆளோடு இருக்க வேண்டும் என்றால் வெறும் பயமாக மட்டும் இருக்காது. இதை விபினிடம் சொன்னால் “ நீ உன் அப்பாவை புனிதமாக்க முயற்சிக்கிறாய். நீயும் உன் அப்பாவும் சரியான கன்சர்வேட்டிவ்கள். உன் அப்பா கூடப் பரவாயில்லை. நீ ஏதோ உன் அம்மாவுடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்ட நவீன ஏசு கிறிஸ்து மாதிரி ஒரேயடியாகத்தான் பண்ணுகிறாய்” என்பான்.

                                  5

சமையலுக்கும் வீட்டு வேலைகளுக்கும் ஆள் வைத்துக் கொள்ளும் அளவுக்கு எங்களிடம் பொருளாதார வசதி இருந்தது. ஆனால் அதைத் தாண்டி முழுக்க முழுக்க என்னைப் பார்த்துக் கொண்டது அப்பாதான். தனிமையின் கரங்கள் என்னை முடிந்தவரை தீண்டாது இருக்க அப்பாதான் ரொம்ப மெனக்கெடுவார்.

 “போர் அடிக்குதா?”

செஸ் விளையாடலாமா?

அவளும், அப்பாவுமாய் சேர்ந்துதான் இந்தத் தோட்டத்தை உருவாக்கினார்கள். சண்டே மார்கெட்டிற்கு மாதம் ஒரு முறை போய் பூச்செடிகள் உரங்கள், மண் என்று எதாவது வாங்கித் திரும்புவார்கள். காம்பௌண்ட் மூலையில் இருக்கும் அந்த இளநீர் மட்டும் கொடுக்கிற சின்ன தென்னைக்கு அப்பாதான் இவளுடைய பெயர் வைத்தார்.

அம்மா ரொம்ப அன்பாக இருப்பாள்தான்.  தூங்கும் முன் ஒவ்வொரு இரவுகளிலும் கதைகள் படித்துச் சொல்வாள். சிறு வயதில் ஒரு முறை மார்டின் லூதர் கிங் பற்றி அம்மா  சொல்லியது ஞாபகம் இருந்து, வரலாற்று  வகுப்பில் அவர் குறித்து பேச்சு வந்த போது நான் உற்சாகமாகி அவரைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். எல்லோருக்கும் ஒரே பிரமிப்பு.

“உனக்கு எப்படி இவரைத் தெரியும்?”என ஆசிரியர் கேட்ட போது, என் அம்மா இவர் பத்தின புத்தகத்தை எனக்கு வாசிச்சு காண்பிச்சு இருக்காங்க என்றேன் பெருமிதமாக. அன்றைக்கு இரவு அம்மாவிடம் இதைப் பற்றிச் சொன்ன போது “படிக்கணும்.நிறைய படிக்கறப்போ தான் நிறைய வாழனும்னு தோணும் எல்லா நேரத்திலும் நம்ம நாமா இருக்க படிக்கிறது உதவும்.” அம்மா இப்படித்தான் எதாவது சொல்வாள். Adolescence என்கிற வார்த்தைக்கு ஒரு முறை அர்த்தம் கேட்ட போது, ஏதேதோ சொல்லிக் கொண்டே வந்து ரொம்ப protective ஆக செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் முடித்தாள். பேசத் தொடங்கினால் அவளுக்கு கட்டுப்பாடு என்பது கிடையாது.

எல்லாம் பேசினாலும் அப்பாவிடம் இருந்த அணுக்கம் ஏனோ எனக்கு அம்மாவிடம் இல்லை. முதன் முதலில் பீரியட்ஸ் ஆன போது கூட அப்பாவிடம் தான் அழுதபடியே சொன்னேன்.”

அப்பா பாத்ரூம் போறப்போ ஒரே பிளட்டா வருதுப்பா” அப்பா கலவரமடைந்து தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த அம்மாவை அழைத்து வந்தார் அம்மா வந்து முதல் பீரியட்ஸ் என்றபோதுதான் அப்பாவுக்கு நிம்மதியானது.

டீச்சர்ஸ் மீட்டிங் முதற்கொண்டு எல்லாவற்றுக்கும் அப்பாதான் வருவார். அம்மாவுக்கு அங்கே வந்து காத்துக் கொண்டிருப்பது எரிச்சலூட்டுகிற விசயம். மேலும் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கும் பொறுமையும் ரொம்பக் கம்மி. அதிக ஸ்ட்ரெஸ் கொடுக்காதீங்க குழந்தைகளுக்கு என்றோ, ஏன் வாரத்தில் ஒரே ஒரு விளையாட்டு வகுப்பு மட்டுமே இருக்கிறது என்றோ, மாரல் ஸ்டடீஸ் வகுப்பில் ஏன் கணக்குப் பாடம் எடுக்கிறீர்கள் என்றோ கேட்பாள். கேள்விககெல்லாம் சரிதான்.ஆனால் திரும்ப நான் அதனால் வகுப்பில் சந்திக்கும் சங்கடங்கள் நிறைய.

“இங்கே பாரும்மா, நீ யதார்த்தத்தில் இருந்து நாலடி மேலதான் மிதப்பேன்னா, நீ மிதந்துக்கோ. அது உன் இஷ்டம்.குழந்தையோட பள்ளிக்கூடத்துல உன் புரட்சியை காட்டாதே” என்று அப்பா ஒரு முறை சொன்னார்.

அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகு  அப்பாவின் குடும்பத்தார், இருவரையும் கல்யாணம் செய்துகொள்ளவற்புறுத்தி இருக்கிறார்கள்.  இவர்கள் அதை ஒரேயடியாக மறுத்து விட்டது அவர்களுக்கு கோபத்தைத் தந்திருக்கிறது.அம்மாவின் போக்குகெல்லாம் வளைந்து கொடுக்கிறார் என்று அப்பாவின் மீதும் மனக் கசப்பு. யாரும் வந்து போவதில்லை.அப்பாவுடைய அம்மா இறந்து போனபோது தஞ்சாவூர் தாண்டி இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு அப்பா அழைத்துப் போனார். தான் படித்த பள்ளி, விளையாடிய இடம் எல்லாவற்றையும் காண்பித்தார். அப்போது ஆணொன்றும், பெண்ணொன்றுமாய் இரண்டு குழந்தைகளோடு நின்ற ஒருவரைக் காட்டி பெரியப்பா என்றார். அதோடு சரி. பிறகு போகவில்லை.  அவர்களைப் பற்றி எப்போதோ அம்மாவிடம் கேட்ட போது, நான் அவங்க ஜாதியா இருந்திருந்தா உன்னோட பேசி இருப்பாங்க என்றாள்.அதை விடு என்று சொல்லிவிட்டாள். அம்மாவின் வீட்டைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஒரு முறை அவளுடைய பழைய வாழ்க்கை பற்றி “அது ஒரு nightmare. நான் அதை மறுபடியும் நினைக்கக் கூட விரும்பவில்லை” என்றாள்.

                                    6

என் பதின்வயதுகள் தொடங்கி அம்மாவும், நானும் ஒருவருடன் ஒருவர் மிகக் கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தோம்.அவள் வரையும் போதும், படிக்கும் போதும் அவள் அறைக்குள் நுழைந்தாலோ, சிறு சத்தம் எழுப்பினாலோ கூட அவளுக்கு கடுமையான எரிச்சல் வரும். ஒரு முறை நான் நீலமும் செந்நிறமும் கொண்ட ஒரு ஓவியத்தை தீற்ற ஆரம்பித்திருந்த போது உள்ளே நுழைந்து எதையோ கேட்டு விட்டேன். அதற்கு அப்படிக் கத்தினாள். இனிமேல் அந்த ஓவியத்தை தன்னால் வரைய முடியாது என்றும், அதற்கான மனநிலை போய் விட்டது என்றும் சொல்லி நான் வெளியே வந்த பிறகும் கூட ஆத்திரம் தாளாமல் வரைந்தவற்றைக் கிழித்து எறிந்துவிட்டு ஆவேசத்தோடு காரை எடுத்துக்கொண்டு வெளியே போனாள். இரவில்  அவள் திரும்பி வந்தபோது அவள் கையில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் இரண்டும், பாஸ்கின் ராபின்ஸ்சில்  இருந்து வாங்கிய பெரிய ஐஸ்க்ரீம் டப்பாவுமிருந்தது. மாடிப் படிகளில் அமர்ந்திருந்த என் அருகில் வந்து என் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டாள். வாங்கியவற்றை என்னிடம் கொடுத்து “ரொம்ப சாரிடா அம்மாவோட தப்புதான் அம்மா ஏதாவது வரையும்போது கொஞ்சம் டிஸ்டர்ப் ஆனாலும் ரொம்ப எரிச்சல் வந்துடுது. நான் என்னை நியாயப்ப டுத்தலை. மாற முயற்சிக்கிறேன். என்னை மன்னிச்சுக்கோ என்ன? ஒரு சிறுமியிடம் கேட்பது போல் இல்லாமல் அத்தனை சின்சியராக மன்னிப்பு கேட்டாள். ஆனால் அப்போதிருந்து அம்மாவிடம் எனக்கு விலக்கம் வந்துவிட்டது. அப்பா எத்தனைக்கெத்தனை என்னை குழந்தையாக நடத்துகிறாரோ, அத்தனைக்கத்தனை அவள் என்னை சிறுவயதில் இருந்தே தன்னுடைய சம வயதினள் போல நடத்துவாள். அது எனக்குப் பிடிக்கவில்லை.

                                                  7.

திரும்பி வீட்டிற்கு வந்தபோது வீடு எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது முட்டாள்தனமா என்ன என்று தெரியவில்லை ஆனால் திரும்ப வரும்போது அப்பா டோண்டுவை கையில் பிடித்துக்கொண்டு வாக்கிங் செல்ல புறப்பட்டு நிற்பார் என்கிற ஒரு நப்பாசை அடிமனதில் இருந்தது. காரை நிறுத்திவிட்டு சத்தத்துடன் கதவை அறைந்து சாத்தினேன். வீட்டிற்குள் புக மனமில்லாமல் திரும்ப ஊஞ்சலில் அமர்ந்து கொண்டேன். வெறுமை என்னை அழுத்தியது எனக்கு அழுகை வந்தது சின்னப் பிள்ளை போல பெருங்குரலெடுத்து அழுதேன். எப்படி அழுதால் தான் என்ன? இங்கே கேட்க யார் இருக்கிறார்கள்? எனக்கு ஒரு நிமிடம் செத்துப் போய் விடலாமா என்று தோன்றியது தோணும் போது மறுபடியும் இதெல்லாம் நிஜத்தில் நடக்கிறதா, என்றும் தோன்றியது. ஒருவேளை இது கனவாக இருந்து இதில் தூக்கிட்டோ,  மண்டை சிதறும்படி உயரத்திலிருந்து விழுந்து செத்து விட்டாலோ, நிஜ உலகில் எழுந்து கொள்வேனாக இருக்குமோ? காலையிலிருந்து காபியை தவிர எதுவும் வயிற்றுக்குக் கொடுக்கவில்லை. வீட்டிற்குள் போய் பாதம் குக்கீஸ் எடுத்துக் கொண்டு , கருப்பு காப்பி ஒன்றையும் போட்டு எடுத்து வந்து வெளியில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தேன். காபி டேபிள் மீது காலை எடுத்து வைத்தேன். இப்படி வைத்தாள் அப்பாவுக்குப் பிடிக்காது. திட்டுவார். மேற்புறத்தில் கண்ணாடி பதிக்கப்பட்டு நீர் வட்டமாய் இருக்கிற இந்தக் காபி டேபிளை  தோட்டத்தில் புல்வெளி அமைத்த பிறகு அப்பா வாங்கியனார். விடுமுறை நாட்களில் சாயங்காலம் இங்கு அமர்ந்துதான் காபி குடிப்போம் அப்பாவிற்கு பூர்வீகமாக வந்த வீடு. பத்து வருடங்களுக்கு முன்பு பிசினஸில் பெரிய லாபம் வந்தபோது இதில் நிறைய மாற்றங்களைச் செய்தார். அவருடைய துறையும் கட்டுமானத் துறை என்பதால் கதவு, கண்ணாடி, மார்பிள் என ஒவ்வொன்றையும் அவரே தேர்வு செய்து அழகு படுத்தினார்.

அலைச் சத்தம் கேட்டது மற்ற நாட்களில் இவ்வளவு சத்தம் கேட்காது. போக்குவரத்து அதிகம் இல்லாத அமைதியான உள்ளடங்கிய சாலை என்றாலும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிற போது இயற்கை போடுகிற சத்தத்திற்கும் இப்போது அது போடுகிற சத்ததிற்கும் எத்தனை வேறுபாடு.கடற்கரைக்கு போகலாம் என்று மனதில் ஒரு எண்ணம் உதித்தது. உதித்த வேகத்திலேயே அது காணாமல் போனது மற்ற நாட்கள் என்றால் கடற்கரை நிச்சயமாய் ஒரு ஆசுவாசம் தான் அதுவும் இரவில் கடற்கரைக்கு போவது திருவிழாவிற்கு போவதுபோல். சிறிய சிறிய குழந்தைகள் பலூனை துரத்தியபடி ஓடிக்கொண்டிருக்க, அவர்களை கவரும்படி பளிச் பளிச்சென செயற்கையாய் மின்னும் விளையாட்டுப் பொருட்களுக்கு அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கும். மற்றொரு பக்கத்தில் தீக்கதிர்கள் பறக்க அதில் சோளம் வாட்டப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனியன் பஜ்ஜி மிளகாய் பஜ்ஜி சுண்டல் மல்லிகைப்பூ,  புர்கா அணிந்து பந்து விளையாடுகிற பெண்கள் குதிரை சவாரி செய்கின்ற குழந்தைகள், விளக்குகள் எரியச் சுற்றுகிற குடைராட்டினம்…

எட்டிப் பிடித்தால் போய்விடு போய்விட முடிகிற பீச் வாரவாரம் மூவரும் போனாலும் ஒவ்வொரு முறையும் அம்மாவுக்கு உற்சாகம் கரை புரளும். “பக்கத்தில் இருக்கிற பீச்சுக்கு எதுக்கு கார்? போய் பார்க் பன்றதிலயே பாதி நேரம் போயிடும். நடந்தே போவோம்” என்று எங்கள் கைகளை பிடித்துகொண்டு எங்கள் மீது இழைந்து இழைந்து நடந்து வரும் அம்மா.

இருட்டிக் கொண்டு வந்தது. எழுந்து ஸ்விட்ச்களை அழுத்தி விளக்குகளை ஒளிர விட்டு உள்ளே நுழைந்த போது நாங்கள் மூவரும் இருந்த பெரிய புகைப்படம் ஹாலில் தொங்கியது.அதிலிருந்து  இருவரும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றியது.

                                          8

“You don’t love us anymore?”

அப்பா என் அருகில் வந்து “அப்புறம் பேசிக்கலாம் உன் ரூமுக்கு போ” என்றார்.

“நான் என்ன சின்ன குழந்தையா? எப்போ பேசத் தொடங்கினாலும் அப்புறம் பேசிக்கலாம். அப்புறம் பேசிக்கலாம்.

நீங்க வேணா இப்படி இருங்கப்பா. எதுவும் கேட்காம, பேசாம. அவங்க சொல்றதுக்கு எல்லாம் சரினுட்டு. என்னால அது முடியாது.” காட்டமாகச் சொன்னேன்.

இருவரும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அமைதி கொடுத்தா ஊக்கத்தில் இன்னும் கோபமாக “கொஞ்சமாவது என்னைப் பத்தி யோசிச்சா” என நான் ஆரம்பித்த போது “இங்க பாரு உன்னைப் பெத்துட்டதனாலேயே நாங்க ரெண்டு பேரும் உனக்கு obliged டா இருக்கணும்னு நினைக்காத.  நீ சின்னப் பொண்ணு ஒன்னும் இல்லை. வாழ்க்கையோட எல்லா முடிவுகளையும் உன்னை மனசுல வெச்சு மட்டுமே இனிமேலும் எங்களால எடுக்க முடியாது.

யூ வாண்ட் டு மேக் அ ஃபேமிலி வித் விபின். எனக்கு கூடத்தான் அது பிடிக்கல. என்னைக் கேட்டா கல்யாணம் பண்ணிக்காம குழந்தை பெத்துக்காம சந்தோஷமா இருன்னு சொல்லுவேன். ஆனா இப்படி எல்லாம் சொல்லி உன்னை எப்போவாச்சும்சங்கடப்படுத்தி இருக்கேனா?

“சொல்லுங்களேன். யார் தடுத்தா? எனக்கு இவ்வளவு சுதந்திரம் வேண்டாம். உங்களை மாதிரி என்னால இருக்க முடியலை.எனக்கு சாதாரணமா இருந்தாப் போதும். எனக்கு அது பத்தி வருத்தம் இல்லை.

“நான் எதுக்குக் கேட்கணும்? யாரோட வாழ்க்கையும் என் பொறுப்பு இல்லை.நீ உன் விருப்பத்துக்கு வாழுற சுதந்திரம் உனக்கு இருக்கு. இது எவ்ளோ பெரிய விஷயம்ன்னு உனக்குப் புரிய மாட்டேங்குது.”

“நீங்க உங்க இஷ்டத்துக்கு தானே வாழறீங்க? அப்போவும் ஏன் நீங்க நிறைவா இல்லை. அவர் பதில் சொல்ல முடியாது திகைக்கும்படி பெரிய கேள்வியொன்றைக் கேட்டு அவரை மடக்கிவிட்டது போல தோன்றியது.

உங்களுக்கு என்ன கிடைச்சாலும் போதாதும்மா. உலகத்தையே சுருட்டி உங்க காலுக்குக் கீழே வெச்சாலும் உங்களுக்கு அது பத்தாது”.

அம்மா எதுவும் சொல்லாமல் உள்ளே போனாள்.

                                      9

விபின் புரண்டு படுத்து என் மீது கால்களை போட்டான். என் தோளில் முகத்தை உரசியபடி இன்னும் நீ கால் பண்ணலையா என்றான். நான் கைப்பேசியில் இருந்து கண்களை அகற்றாமல் இல்லை என்றேன். அவன் என் கையில் இருந்த மொபைலை வெடுக்கென்று பிடுங்கி சிரித்தபடி “ஒழுங்கா பதில் சொல்லு”என்றான். எரிச்சலும் சலிப்புமாய் “ஏன்டா” என்றேன்.

“உனக்கு இப்ப என்ன தெரியணும்?”

“நீ ரொம்ப சுயநலமா நடந்துக்கிற.”

“என் இஷ்டத்துக்கு நான் நடந்துக்கறேன். இதுல என்ன சுயநலம் இருக்கு?. எல்லோரும் அவங்க இஷ்டத்துக்கு நடந்துக்கணும்ன்னு நினைக்கிறது தான் பொதுநலமா?”

நீ எப்போ அவங்க இஷ்டத்துக்கு நடந்துகிட்ட?  உங்க அம்மாக்கு கூட என்ன புடிக்கலதான? ஆனா நீ என்கூட இருந்துட்டு தானே இருக்க? சும்மா எதுக்கு எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ண நினைக்கிற? நீ உன்னை உயர்வான ஒரு இடத்தில வெச்சுகிட்டு அவங்களை திருத்த முயற்சி பண்ணாதே.  நான் எதுவும் பேசாமல் அவனை முறைத்தேன்.

சரி உங்க அப்பா என்ன சொல்றாரு?

அவர் என்ன சொல்றாரு? உங்க அம்மாவை அவ இஷ்டத்துக்கு விடு.  உண்மையிலேயே எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல.ரெண்டு பேரும் கப்பிள்ஸா சேர்ந்து வாழ்வது ஒத்து வராம போனாலும் இப்பவும் நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களா தான் இருக்கோம். நீ அனாவசியமா கண்டதயும் நினைச்சு என்னை protect பண்ண முயற்சி பன்றேன்னு சொல்றாரு. ஒன்னும் புரியலைடா.

ஓரொரு சமயம் என் அப்பா அம்மா மத்தவங்க மாதிரி இல்லைன்னு பெருமையா இருக்கு,  இன்னொரு சமயம் எல்லார் மாதிரியும் ஒரு குடும்பம் வேணும்னு இருக்கு. My childhood was very lonely. எல்லோரும் சொல்லுவாங்க இல்லை, வாய்ப்பு கிடைச்சா திரும்ப நான் என் childhood days க்கு போயிடுவேன்னு. நான் நிச்சயம் போக மாட்டேன்.

“ஹ்ம்ம்…தெரியல”அவன் நீண்ட  பெருமூச்சுவிட்டு “எனக்கு உன்னோட அப்பா அம்மா மாதிரி இருந்தா நல்லா இருக்கும்னு இருக்கு.

Live your life to the fullest னு சொல்ற அளவு எங்க வீட்ல எல்லாம் யாரும் யோசிக்க கூட மாட்டாங்க. பேசாம என்னையும் உங்க அப்பாமாவை தத்தெடுத்துக்க சொல்லு. The Royal Tenenbaums ல வர்ற அண்ணன் தங்கச்சி மாதிரி ஜாலியா வாழலாம்.கண்களைச் சிமிட்டிச் கன்னங்களில் குழி விழச் சிரித்தான். நான் அவன் உதடுகளைச் செல்லமாகத் திருகி “வாழலாம் வாழலாம்” என்றேன்.

                                      10

சமையலறைக்குள் நுழைந்து கடாயில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நூடுல்ஸ் பாக்கெட்டைப் பிரித்து கொதிக்கிற தண்ணீரில் கொட்டினேன். அது தயாரானதும் வந்து உணவு மேசையில் அமர்ந்து எப்போதும் போல் மூன்று தட்டுகளையும் தம்ளர்களையும் எடுத்து வைத்து அதில் உணவைப் பரிமாறினேன். எனது தட்டில் இருந்ததை உண்டு முடித்ததும் அப்பா அம்மாவுக்கு என பரிமாறி இருந்த நூடுல்ஸயும் எடுத்து என் தட்டில் போட்டுக் கொண்டு சாப்பிட்டேன். கடல் அலைகளின் சத்தம் இன்னும் இரைச்சலாய் பயமுறுத்துவதைப் போல ஒலித்தது. 2004ல் வந்தது மாதிரி சுனாமி வருமோ? வந்தாலும் வரும். எதற்கும் ஒரு பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சம் தொலைவாக போய் விட்டால் நல்லது. சரி பூமியில் வாழ்கிற மனிதர்கள் விலங்குகள் தான் இல்லை கடலில் வாழும் உயிர்கள் எல்லாம் என்னவாகியிருக்கும். செத்து மிதக்குமோ? நாளை கடலை போய் பார்த்து வரவேண்டும். எதுவும் சாகாமல் இருந்தால் கொன்று தின்ன ஆளில்லாமல் கடல் மணலில் பெரிது பெரிதாய் கொழுத்து அலைகிற நண்டுகளின் காட்சியை மூளை கற்பனை செய்தது. உடம்பு கூசியது. இல்லை இல்லை நாளைக்கு கடலுக்கும் போக வேண்டாம் மலைக்கும் போக வேண்டாம். இப்போதைக்கு இந்த வீடுதான் பாதுகாப்பு. போய் மேல் தளத்திலும் கீழேயும் உள்ள எல்லாக்  கதவுகளையும் அடைத்தேன்.

பகலை விட இரவுதான் அதிகம் பயமுறுத்துகிறது.

யார் வந்து எதைத் திருட போகிறார்கள். ஆனாலும் பயம்தான். வாக்கிங் டெட் சோம்பிகள் மாதிரி,  டைனோசர்கள் மாதிரி எதுவும் வந்துவிட்டாள்? இதெல்லாம் ஏன் பகலில் தோன்றவில்லை? காரணமற்ற அச்சங்கள் மனதை அலைககழித்தது.வீதி விளக்குகள் எதுவும் எரியவில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு வீட்டுக்குள் இந்த வெளிச்சம் இருக்குமோ?  புத்தக அலமாரியில் இருந்து சிறிய வயதில் அம்மாவும் அப்பாவும் என்னுடைய பதினொன்றாவது பிறந்தநாளின் போது பரிசளித்த ரஸ்கின் பான்ட் புத்தககத்தை எடுத்து வந்து அருகில் வைத்துக்கொண்டேன்.

 ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த பீரை எடுத்து வந்து கிளாஸில் ஊற்றி ஒரு மிடறு விழுங்கினேன். ஒரே ஒரு நாளில் உலகம் எவ்வளவு surreal ஆக மாறி விட்டது. “இதெல்லாம் சும்மா கனவு என்றோ, இல்லை உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது,மற்றபடி உலகம் அதே மாதிரிதான் இருக்கிறது என்றோ யாராவது சொன்னால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும். நாளைக்கு ரொம்ப தூரம் போக வேண்டும். யாராவது என்னை மாதிரி நிச்சயம் எங்காவது இருப்பார்கள்.

கண்ணீர் வந்தது.

“அலைமீது அலையாக

துயர் வந்து சேரும் போது அஞ்சாதே எனும் சொல்லை செவி கேட்குமா?

நீ அஞ்சாதே எனும் சொல்லை செவி கேட்குமா? உயிர் மொத்தமும் என் குரலில் இறங்கி நிசப்தமான வெளியெங்கும் ததும்பியது.

***

-தீபுஹரி

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *