வீடே இருட்டில் வீழ்ந்து கிடப்பதை ஜானகி அம்மாள்தான் முதலில் பார்த்தாள்.
ஆனால், பக்கத்து வீடுகள் மற்றும் சாலை விளக்குகளெல்லாம்
எரிந்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவள் கலவரத்திற்குள்ளானாள்.
“ ஐயோ, கல்யாணி!.. என்னடி, நம்ப வீட்ல மட்டுந்தான் லாம்பு இல்ல போலிருக்கு?.
ஏதும் பிரச்சினையோ? தாமானே லாம்பு இல்லாட்டியும் பரவால்ல, ஒடனே வந்து
பாப்பான்ங்க. நம்ப வீட்ல மட்டுந்தான் லாம்பு எரியிலன்னா எப்ப வந்து
பாப்பாங்கன்னே தெரியாதே! இந்த லட்சணத்துல பேர்த் டே பார்ட்டி வேற?. “
“ அதாம்மா எனக்கும் ஒன்னும் புரியில. கொஞ்ச நேரத்துக்கு முந்தி நா வீட்ட
உடும்போதுகூட லாம்பு நல்லாதான் எரிஞ்சிகிட்டு இருந்துச்சி!.. அதுக்குள்ளியும்
என்னா ஆச்சோ தெரியிலியேம்மா?..” என்று மகள் சொன்னதைக் கேட்டு அம்மாள்
மேலும் பதற்றத்திற்குள்ளானாள். அந்த நேரம் வரை மனசெல்லாம் நிறைந்து கிடந்த
உற்சாகம், வீட்டின் இருட்டு தடுக்கித் தொலைந்துப் போனது.
அம்மாள் சலித்துக் கொண்டாள்.
“ அதான் அப்பியே சொன்னன். இதெல்லாம் ஒன்னும் வேணான்னு. கேட்டாதான
நீங்க? இவ்வளவும் உன்னால வந்த வெனடி கல்யாணி…”
பல வருஷங்களாக ஒரு கள்ள பிரசவத்தைப்போல் அம்மாவின் பிறந்த தினங்கள்,
நள்ளிரவில் ரகசியமாய் பிறந்து, உயிர்ப்பின் சலனம் வெளியில் தெரியாமலேயே
மீண்டும் நள்ளிரவோடு மரித்து, காலண்டரில் இன்னுமொரு நாளாக, வந்த சுவடு
தெரியாமலேயே கிழிந்துப் போயிருக்கின்றன.
ஆனால், கல்யாணி ஏனோ அம்மாவின் பிறந்த நாளில் ஒளிந்துக்கொண்டு அவள்
புதியதாக ஃபேஸ் புக் கணக்கு திறந்திருந்ததால் முன் கூட்டியே அம்மாளின் பிறந்த
நாள் மகள்களின் கவனத்திற்கு வர, இந்த வருடம் கட்டாயம் அம்மாவிற்கு முதன்
முதலாக பிறந்த நாள் கொண்டாடுவதென்று இரண்டு மகள்களும் அடம் பிடித்து
அம்மாவை ஒப்புக்கொள்ள வைத்திருந்தனர். அதன் விளைவாகத்தான் இன்று
உறவினர்கள், தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோரையும் அழைத்து
பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர்..
ஆரம்பத்திலிருந்தே ஜானகி அம்மாளிற்கு அதில் விருப்பம் இருக்கவில்லை.
தர்மசங்கடமாகவே உணர்ந்தாள்.
* * *

இதுவரை பிறந்த நாளென்று ஒரு நாளையும் ஜானகி அம்மாள் கொண்டாடியதில்லை.
ஒரு அக்காள், மூன்று அண்ணன்மார்களுக்குப் பிறகு கடைக்குட்டியாக அவள்
பிறந்திருந்தாலும், இருபத்தோரு வயதில் கூட அவளுக்கு பிறந்த நாள்
கொண்டாடப்பட்டதில்லை. அது, 1969 இனக்கலவரம் முடிந்து சில வருடங்கள்
ஆகியிருந்த காலம். அப்பாவும் அந்த வருஷத்தோடுதான் செந்தூல் ரயில்வேயிலிருந்து
ரிடையர் ஆகியிருந்தார். தனக்குத் தெரிந்த செல்வாக்கை வைத்து ஜானகியை
ரயில்வே அலுவலகத்தில் ஏதாவது வேலையில் சேர்த்துவிட எவ்வளவோ முயன்று
பார்த்தார். ‘கோழி மேய்ச்சாலும் கும்னில மேக்குனும்..’ என்பதில் தீவிர நம்பிக்கை
இருந்த தலைமுறை அவர். ஆனால், காலியாகும் வேலைகளுக்கெல்லாம் முதலில்
மலாய்க்காரர்களுக்கே வாய்ப்பு கொடுக்கும் NEP என்ற புதிய பொருளாதாரா
கொள்கை அமுலுக்கு வந்திருந்ததால் அவளுக்கு வேலை கிடைக்காமலேயே போனது.
ரிடையர் ஆகிவிட்ட வேதனயை செந்தூல் கள்ளுக்கடையில் உட்கார்ந்தே அப்பாவால்
தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆயினும், நாற்பது வருடங்களாக குடியிருந்த
குவார்ட்டர்ஸை காலி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் வந்தபோதுதான் அவர் பாவம்,
நிலைக்குழைந்துப் போனார். காலி செய்த நாளன்று, கலையிலேயே செந்தூல்
கள்ளுக்கடைக்குப் போய் நிதானத்தை கள்ளுக்குள் கரைத்துக்கொண்டு வந்தே
குவார்ட்டர்ஸை அவரால் பிரிய முடிந்தது. வெறும் செங்கல்லையும் சிமெண்ட்டையும்
மட்டும் குழைத்து கட்டிய வீடா அது? வீட்டுச் சுவர் மற்றும் தரையெல்லாம்
வாழ்க்கையின் சோகங்களையும் சந்தோஷங்களையும் பெருமூச்சாகவும்
புன்சிரிப்பாகவும் முணுமுணுப்பதை காது வைத்து கேட்கலாம்!. ஒரு பக்கம்,
அரசிளங்குமாரி, நாடோடி மன்னன், மதுரை வீரன், என்று வாழ்க்கையின்
கொண்டாட்டங்கள் சுவரில் புன்னகைத்தன. இன்னொரு பக்கம், அந்த வீட்டிலேயே
உயிர் நீத்த தாய்வழிப் பாட்டி, தாய் மற்றும் 69 கலவரத்தில் மலாய்க்காரர்களால்
வெட்டிக் கொல்லப்பட்ட இரண்டாவது அண்ணணின் படங்கள் சோகத்தைன்
முகங்களாய் தொங்கின. மூன்று தலைமுறைகளின் பாதச் சுவடுகளில்
மென்மையாகிப்போன தரை. இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட வீடுதான். அதில்
ஓர் அறையை மறைக்கமுடியாமல் அசைந்துக்கொண்டிருந்த திரைச்சீலை,
புணர்ச்சியின் ரகசியத்தைப் கிசுகிசுத்தது. திருப்தியின் வெளிப்பாடு முனகல் எனில்,
அதையும் உதட்டைக் கடித்தே அடக்கிகொள்ள வேண்டியிருந்த திண்டாட்டம்
சன்னமாய் கேட்டது. துணி அலமாரி, நடுவில் நின்று கொஞ்சம் அந்தரங்கம் காத்தது.
மற்றொரு அறையோ, மொட்டுகள் மலராகி, பெண்மையின் புதிர் அவிழ்ந்த
ரகசியங்களை பேசியது. சுவரை ஒட்டியிருந்த கயிற்றுக்கொடியில், பழைய
துணிகளோடு உதிரத் துணிகளும் தொங்கிக்கொண்டிருந்தன. வீட்டிற்கு பின்னால்,
இரண்டு நாட்களுக்கு முன்னரே கொத்தி எடுக்கப்பட்ட மரவள்ளி செடிகளின் பச்சை
காயம் கூட இன்னும் ஆறாவில்லை. பிடுங்கி எறியப்பட்ட மரவள்ளி செடி இலைகள்,
வாடி வதங்கி உயிர்வதை காட்டின. வீட்டிற்கு முன்னாலிருந்த குழாயடியோ,
வெறிசோடிக்கிடந்தது. குழாயிலிருந்து சொட்டிய நீர், குளமாகிக்கொண்டிருந்தது.
குவார்ட்டர்ஸே வெளியே கூடி நின்று, அனுதாபம் படுவதாக காட்டி வேடிக்கைப்
பார்த்தது. வேறு வழியில்லாமல் எல்லோருமே ஏதோ சில ஞாபங்களை

 

சுமந்துக்கொண்ட பாரத்தில் தலை கவிழ்ந்தே, மீடோ தியேட்டருக்கு பின்னாலிருந்த
வங்காளி கம்பத்தில், ஒரு பலகை வீட்டிற்கு குடி பெயர்ந்தனர். அண்ணன்மார்கள்
அரசாங்க உத்தியோகத்தில் இருந்த மரியாதையால், அந்த வீடு சுலபமாகக் கிடைத்தது.
அதற்கு மாதாந்திர வாடகையான 60.00 வெள்ளியை முதல் வாரத்திலேயே
கொடுத்துவிட வேண்டும். குவார்ட்டர்ஸைப் போலவே அங்கேயும் வீட்டிற்கு
பின்னால் கறிகாய்கள் பயிரிடும் வசதி இருந்ததுதான் அப்பாவிற்கும் அக்காவிற்கும்
அந்த வீடு மிகவும் பிடித்துப் போனது. இல்லாவிட்டால் வந்த சம்பளத்தில் வயிற்றுப்
பசியை தீர்த்துக்கொள்ளவே வசதி இல்லை. இந்த லட்சணத்தில், யாருடைய பிறந்த
நாளையும் கொண்டாட மட்டுமல்ல, ஞாபகத்தில் வைத்துக்கொள்ளக்கூட யாருக்கும்
அவகாசமில்லாத வாழ்க்கைதான்.
* * *
இப்போது, அவளைப்போலவே தொளதொளத்துப் போன ரவிக்கையும், கைலியும்
அன்றாட உடைகளாகிப் போன வயதில், பிறந்த நாள் கொண்டாட ஜானகி
அம்மாளுக்கு விருப்பமே இல்லை. தீர்மானமாக வேண்டாமென்று சொல்லி மறுத்தாள்.
ஆனால், பிள்ளைகளோ ஒருவர் மாறி மற்றொருவர் பிடிவாதமாய் வற்புருத்திக்
கொண்டிருந்தனர். அவர்கள் எதிரிலேயே நின்றுக்கொண்டிருந்தால் தான் கரைந்து
விடக்கூடும் என்று பயந்து அம்மாள், சமயலறை பக்கம் போனாள். இன்று, நாசி லெமா
செய்யலாமென்று தீர்மானித்து ‘ரைஸ் குக்கரில்’ அரிசி வெந்துக்கொண்டிருந்தது.
நெத்திலிப் பொடியை பொறிக்க தண்ணீரில் அலம்பிக் கொண்டிருந்தபோது, கரப்பான்
பூச்சி ஒன்று, வேகமாய் ஓடி பக்கத்திலிருந்த குப்பைக் கூடைக்குள் ஏறியது.
கூடைக்குள், ஒரு வாரத்திற்கான பிரஸ்சர் மாத்திரைகளின் காலியான பிளாஸ்டிக்
வில்லையைப் பார்த்தாள். உடனே அவள் மூளையில் ஒரு பொறி தட்டியது.
‘ ஓஹோ, அப்படி இருக்குமோ!. போன செக் ஆப்ல என்னோட பிரஸ்சர் ரொம்ப
மோசமா இருக்குறதா டாக்டர் சொன்னதுனால நா ஏதும் செத்துப்
போயிருவேனோன்னு புள்ளிங்க பயப்படறாங்களோ?.’
ஜானகி அம்மாளிற்கு ஏதோ புரிவது போலிருந்தது.
‘ ஆமா, எனக்கும் வயசாவுதில்ல. எனக்கு மட்டும் என்னா, எல்லாத்துகிட்டியும்
சொல்லிக்கிட்டா சாவு வரும்? குடிய தவுர சீக்குன்னு எதுவுமே இல்லாத அவுங்க
அப்பாவே சும்மா மயக்கமா இருக்குன்னு சொல்லி நாக்காலில உக்காந்தவரு,
அப்படியே பொஸ்குனு போயிட்டப்ப, வருஷக்கணக்குல பிரஸ்சருக்கு மருந்து
சாப்பிட்டுகிட்டு வர்ற நா எந்த மூல? ம்… பாவம், புள்ளிங்க ஆசபடுதுங்க. அதுங்க
ஆசய என்னாத்துக்கு கெடுப்பானேன்? கொண்டாடிட்டுதான் போவுட்டுமே. கழுத
வயசாவுது ஆனா இதுவரிக்கும் ஒரு பொறந்த நாளயும் கண்டதில்ல. கண்ண
மூடறதுக்குள்ல அதயிந்தான் பாத்துருவோமே.. ‘
அடுப்படி வேலையில் மும்முறமாக இருந்தபோது, காத்திருந்த காலடி பின்னால்
கேட்பதற்கு முன்னால் வேர்வையின் நாற்றம் அடித்தது. இரண்டாவது மகள்,

 

கல்யாணிதான் வந்துக்கொண்டிருந்தாள். பின்னாலிருந்தே இரண்டு கைகளாலும்
அம்மாவின் கழுத்தை கோர்த்து, முகத்தை அம்மாவின் தோளில் வைத்து கெஞ்சினாள்.
“ அம்மா, உங்க பொறந்த நாள கொண்டாடலாம்மா. ஏன், பிவாதமா வேணான்றீங்க?
இப்ப இல்லாட்டி வேறேப்பமா கொண்டாடுறது?.. “
அம்மாள், மகளைப் பார்த்து கேட்டாள்.
“ ஏன், நா ஏதும் செத்துப்போயிருவேனோன்னு பயமா இருக்கா புள்ள?.. “
“ ஐயோ!.. இன்னாம்மா நீங்க, இப்படியெல்லாம் பேசிறிங்க?.” – வார்த்தைகள் குத்திய
வலியை கண்களால் தாங்க முடியவில்லை.
அம்மாள் நெகிழ்ந்துப் போனாள். மகளின் கன்னத்தை முத்தி,
“ சரி, உங்க இஸ்டம் புள்ளிங்களா.” என்று சிரித்தாள்.
“ ஐ…யா!… அக்கா, அம்மா பொறந்த நாள கொண்டாட ஒத்துக்கிட்டாங்க..” என்று
கத்திக்கொண்டே அக்காள் மல்லிகாவைத் தேடி ஓடினாள். கொஞ்ச நேரத்திலேயே
பின்னால் கொலுசு சத்தம் கேட்டது.
“ அப்பாடா, இப்பதான் ஒரு வழியா அம்மாவுக்கு மனசு எறங்கிச்சு..” என்று தாயை
பின்னாலிருந்தே அணைத்துக்கொண்டு, இடம் வலம் சாய்த்து கொஞ்சினாள் மல்லிகா.
“ யம்மோவ், கையோட இதயிம் சொல்லீர்றன். உங்களுக்கு மேக்காப்பெல்லாம்
செய்யப்போறோம். எதையிம் வேணான்னு சொல்லி தடுத்துறாதிங்க.
பேரப்பிள்ளிங்களோட பாட்டி மாரி இல்லாம, எங்க அம்மா மாரி உங்கள மேக் ஆப்
பன்னபோறோம். வேணான்னு சொல்லாதிங்கம்மா, பிளீஸ்…”
“ அடக்கவுளே!. இதுல இன்னும் இந்த அக்குறும்பு வேறையா?. மேக்காபெல்லாம்
போடற வயசாடி எனக்கு? ஏதோ, பெத்தப் புள்ளிங்க ஆச படுதுங்க.. பாவம், போனா
போவுதுன்னு பாத்தாக்கா என்னென்னமோவெல்லாம் சொல்லிறீங்களேடி
புள்ளிங்களா?.. “ என்று ஜானகி அம்மாள் முகம் சிவந்தாள்.
அவளுக்கு அலங்காரம் செய்துக்கொள்ள பிடிக்கவில்லை என்பதை விட மிகவும்
கூச்சமாக இருந்ததே காரணமாக இருந்தது. உண்மையில் மகள்களும், வயதுப்
பெண்களும், அலுவலகங்களுக்கும் விசேஷங்களுக்கும் செய்துக்கொண்டு போகும்
மேக் ஆப்பையெல்லாம் பார்க்கையில், தனது பருவத்தில் இப்படியெல்லாம்
இல்லாததும், இருந்த அலங்காரத்தையும் செய்துக்கொள்ள முடியாத வறுமையையும்
நினைத்து பெருமூச்சே விட்டிருக்கிறாள். மஞ்சளையும் புட்டாமாவையும் தவிர
முகத்தில் பூசிக்கொள்ள இப்போது என்னென்னமோ கிரீம் எல்லாம் வந்துவிட்டன.
நெற்றியிலும் கைகால்களிலும் குத்திக்கொண்ட பச்சையை, இப்போது டேட்டூ என்று
சொல்லிகொண்டு எங்கெங்கெல்லாமோ குத்திக்கொள்கிறார்கள். காதில் மாட்டிய
வலையங்கள் உடம்பில் எங்கெல்லாமோ தொங்க ஆரம்பித்துவிட்டன. முலைக்
காம்புகளிலும், உயிர்நிலையிலும்கூட வலையங்களை மாட்டிக்கொள்கிறார்கள்
என்பதை கேள்விப்பட்டு ஜானகி அம்மாள், அதிர்ச்சியும; அசிங்கமும் பட்டுப்போனாள்.

 

சிலர் புருவங்களில் வலையத்தை மாட்டியிருப்பதை அவளேகூட பார்த்திருக்கிறாள்.
இப்போதெல்லாம் ப்ளவுஸ்கள்தாம் எவ்வளவு அழகாக இருக்கின்றன! அதிலும் மாரின்
வடிவத்தோடு வரும் பெட்டட் ப்ளவுஸ்கள் வேறு! அணிந்துக்கொள்ளும் உடைகளின்
நிறத்திற்கு ஏற்ற வர்ணத்தில்தான் எவ்வளவு அழகழகான வளையல்கள்! ஜானகி
அம்மாளின் ஆச்சரியத்திற்கு அளவே இருக்கவில்லை.
பிறந்த நாளுக்கு யாரெல்லாம் வரக்கூடுமென்று ஒரு கணக்கு போட்டுப் பார்த்தபோது,
கூச்சம் அவளைப் பிடுங்கித் தின்றது. இளம் பெண்களைப் பார்ப்பதில் ஜானகி
அம்மாளிற்கு சங்கடமில்லை. ஆனால், சம வயதையொத்த உறவுப் பெண்களைப்
பார்க்க வேண்டி வருவதை நினைக்கவே தர்மசங்கடமாய் இருந்தது.
‘ அட கண்றாவியே!.. இந்த வயசுல இதுக்கு வந்த ஆசய பாரேன்..’ என்று
வயிற்றெரிசல் பேசும் கண்களை நினைத்தாள். ஆனால், அதை மறைத்துக்கொண்டு
முகங்களில்தான் என்ன புன்னகை!.. இது என்று ஒரு ஜடமாகவே அவர்கள் தன்னைப்
பார்க்கப் போவதில் ஜானகி அம்மாளிற்கு சந்தேகமே இருக்கவில்லை. அதிலும்
அப்படிப் பார்க்கப் போகிறவர்கள் எல்லோருமே நிச்சயமாக உறவினர்களாகவே
இருக்கப் போவதை அவள் நம்பினாள்.
மல்லிகாவே ஃபேசியல் சலூன் வைத்திருக்கும் தன் தோழி கமலாவிடம் அம்மாவின்
பிறந்த நாள் அலங்காரத்திற்கு ஏற்பாடு செய்தாள். நேச்சரல் லுக் மேக் ஆப்பின்
கான்சப்ட்டாக தோழியிடம் தெரிவித்தாள். வயதைக் குறைவாக காட்டும் அதே
வேளை, வயதிற்குரிய கண்ணியத்தையும் மரியாதையையும் மேக் ஆப்பில்
எதிர்பார்ப்பதாக ஒரு கைட்லைன் கொடுத்தாள். அம்மாவிற்கு விருப்பமில்லாத எந்த
மேக் ஆப்பையும் வற்புறுத்த வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டாள்.
மேக் ஆப்பிற்கு ஜானகி அம்மாள் வந்ததும் முதலில் மிகவும் தயக்கம் காட்டி
ஒடுங்கினாள். அவரின் வயதையொத்தவர்களிடம் காணும் அதே கூச்சத்தை ஜானகி
அம்மாளிடமும் கண்ட கமலா, மிகவும் ஆதரவாக பேசி, தொழில் திறமையுடன் அனுகி
அவரின் தயக்கத்தைப் போக்கினாள். அதற்குப் பின்னர் அவர் மெல்ல மெல்ல தன்
ஒத்துழைப்பைக் கொடுக்கத் தொடங்கி, சில கேள்விகளையும் கேட்க ஆரம்பித்தார்.
அது, ஜானகி அம்மாளுக்கென்று சில ரகசிய ஆசைகள் இருப்பதை கமலா, அவரிடம்
பேசியதிலிருந்து தெரிந்துக்கொண்டாள். கூந்தலில் ஆங்காங்கே சில முடியிழைகளுக்கு
மீடியம் பிரௌன் வர்ணம் பூசி, அம்மாவின் ரகசிய ஆசைகளைப் போல் கூந்தலுக்குள்
அவற்றை மறைத்து வைத்து, அவரின் விருப்பத்தை கேட்டாள்.
ஜானகி அம்மாள், தலையை இடம் வலம் சாய்த்து, லேசாக பேர்ம் செய்யப்பட்ட தனது
கழுத்தளவு கூந்தலுக்குள் சற்றே வேறு நிறத்தில், அவரின் ரகசிய ஆசைகளைப்போல்
ஒளிந்துக்கொண்டுப் பார்க்கும் அந்த மயிரிழைகளைப் பார்த்து கேட்டாள்.
“ நீ என்னாம்மா நெனக்கிறே? என்னோட வயசுக்கு இது நல்லா இருக்குமாம்மா?.”
தேர்வை அவளிடம் விட்டதில் அம்மாவின் விருப்பம் தோழிக்குப் புரிந்தது.

 

அதே மாதிரிதான்! சேலை கட்டிவிடும் போதும் துணியால் ஆன தொளதொளத்த
பாடியை மாட்டிக்கொண்டு நின்ற அம்மாள்தான், கேட்டாள்.
“ இந்த மாரி ப்ளவுசுக்கு இந்த மாரி துணி பாடி சரியா இருக்குமாம்மா:..”
ஏதோ அப்பாவித்தனமாய் கேட்பதுபோல் கேட்ட அவரின் மனசு கமலாவுக்குப்
பிடித்திருந்தது. தனது மகள்கள் விசேஷங்களுக்கு போடும் கொட்டாங்குச்சி
பாடிகளைப் பார்த்து ஜானகி அம்மாள் உள்ளுர மிகவும் ரசித்திருக்கிறாள். முன்னைய
தலைமுறையின் ரகசிய ஏக்கம் தோழிக்கு சில தொழில் அனுபவத்தைக்
கற்றுக்கொடுத்தது. தனது வலிந்த குறும்பை மறைத்துக்கொண்டு, என்னவோ தொழில்
சார்ந்த அபிப்பிராயத்தை தருவதுபோல் தோழி சொன்னாள்.
“ என்ன கேட்டிங்கன்னா ‘கொட்டாங்குச்சி பாடிதான்’ பொருத்தமா இருக்கும்மா..”
“ ஓ அப்படியா?.. ஆனா, அந்த மாரி பாடியெல்லாம் எங்கிட்ட இல்லியேம்மா?”
“ அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லம்மா. ஏங்கிட்டயே சேம்பலுக்கு சில
சைஸ்சுங்க இருக்கு. பாவிச்சுட்டு ஃபங்ஷன் முடிஞ்ச ஒன்ன டிரைகிளீங்க்கு போட்டு
கொடுத்துருங்க. மல்லிகாகிட்ட நான் பேசிக்கிறன். “
தோழி, 28 மற்றும் 30 அங்குளம் அளவுள்ள பெட்டட் ப்ராக்களை கொண்டு வந்து
கொடுத்துவிட்டு சொன்னாள்.
“ அம்மா, உங்க மாரோட ஸேப்ப slender shape – ன்னு சொல்லுவாங்க. மொத 28
இஞ்ச போட்டு பாருங்க. ரொம்ப இறிக்கிமா இருந்துச்சின்னா, 30 இஞ்ச போட்டு
பாருங்க. நா உங்க சேலையை காடீலியெ உட்டுட்டு வந்துடேன். போய்
கொண்டுவந்திர்றேன்..”
அம்மாள், அவற்றை கைகளில் ஏந்தும் போதே விரல்களில் ஒரு குறுகுறுப்பை
உணர்ந்தாள். அவற்றின் கூர்ந்த வடிவம் கண்களைக் கூசின. ஆனாலும் வெட்கத்தில்
ஒளிந்துக்கொண்டு பார்க்க பிடித்தே இருந்தது. தன் மாரைப் போல் தளர்ந்து துவண்ட
துணி மார்கச்சு போலில்லாமல் ஒரு வடிவத்துடனும் மிருதுவாகவும் இருந்த அவற்றை
உள்ளேயும் வெளியேயும் தடவிப் பார்க்கவே சுகமாக இருந்தது. 28 அங்குள ப்ராவை
அணிந்துப் பார்த்தாள். சற்று வசதிக் குறையாக இருப்பதுபோல் உணர்ந்தாள். 30
அங்குளத்தை அணிந்துப் பார்த்தாள். சௌகரியமாக இருப்பதாக தெரிந்தது. துவண்டு
சரிந்த முலைகள், நிமிர்ந்து நின்று பெருமை பேசின. கதவு பக்கம் ஒரு தடவைப்
பார்த்துவிட்டு, இரண்டு முலைகளையும் ப்ராக்களின் வடிவத்தோடு தடவிப்
பார்த்தாள். ஒரு கணம், கணவனின் கரம் தீண்டியது போல் உள்ளே, முலைகள்
சிலிர்த்துக் கூசின. அந்தப் புத்துணர்ச்சியில் ஜானகி அம்மாள், ஒர் இமைப் பொழுது
கண்கள் கிறங்கித்தான் போனாள். இரண்டு முலைகளையும் ஏந்திப் பிடித்தபடி
கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தில் லயித்திருந்தாள். கல்யாணமான புதிதில்
கணவனுக்கு அவற்றை தீண்டித் திளைப்பதில் அப்படியொரு ஆசை! ஆயினும்
அவளின் லயிப்பே அவரை வேறு சரசத்திற்கு இட்டுச் செல்லாமல் கொஞ்ச நேரம்
அங்கேயே கட்டிப் போட்டது. கடைசியில், அவரின் சுயதிருப்தியில் அவளுக்கும்

 

சந்தோஷம் கிட்டிவிட்டதுபோல் அவர் எழுந்தபோது, முலைகளே முதலில் துவண்டுத்
தளர்ந்து அதிருப்தியைக் காட்டின. ம்.. கல்யாணி பிறந்ததோடு அதுவும் இல்லாது
போனது.
அப்போது, தோழி சேலையுடன் உள்ளே நுழைந்தாள். அம்மாள், சட்டென்று தன்
கைகளை கீழே போட்டாள்.
“ ம்.. சரியா இருக்குமா. இதயே போட்டுக்குங்க. என்ன சைஸ்ம்மா இது?.” என்று
கேட்டுக்கொண்டே உள்ளே வந்த கமலா, கேட்ட கேள்வியில் தான் எதுவுமே
பாராததுபோல் ஒளிந்துக் கொண்டாள்.
“ தெரியிலம்மா. நீயேதான் பாரேன். “ என்று ஒரு துண்டை எடுத்து மார்பில்
போட்டுக்கொண்டு பிராவை அவிழ்ந்து தோழியிடம் நீட்டினாள் ஜானகி அம்மாள்.
கமலாவிற்கு அம்மாவின் அப்பாவிதனத்திற்கு பின்னாலிருந்த கூச்சம் புரிந்தது.
கணவன் மற்றும் குடும்பத்தின் தேவைகளே தனது தேவைகளாக சுவீகரித்து, தனது
நியாயமான ஆசைகளைக்கூட வெளியே காட்டிக்கொள்ளாமல் வாழப் பழகிப்போன
தலைமுறை என்பதை தோழி, தன் வீட்டிலேயே பார்த்து வருகிறாள்.
எல்லா அலங்காரமும் முடிந்தபிறகு அம்மாள், முழுமையாக தன்னைக் கண்ணாடியில்
தலையைச் சாய்த்தும், உடம்பை திருப்பியும் பார்த்தாள். அவளுக்கே அவள் புதிதாகத்
தெரிந்தாள். அம்மாளுக்கு பெருமையாக இருந்தது. தன்னையே பார்த்துக் கொண்டு
நின்றாள். மார்பின் மதர்ப்பு, ஒரு புதிய பெருமிதம்! மார்பில் பதிந்த பார்வையில்
நாணம் சிக்கித் தவித்தது.
தாயை அழைத்துப்போக வந்த கல்யாணி, அவளைப் பார்த்து ஆச்சரியத்தில்
அப்படியே சமைந்துப் போய் நின்றாள்.
“ அம்மா, நீங்களா இது!. மேக் ஆப் சரி, ஆனா அந்த வயசு புள்ளயோட வெக்கம்
எப்படிம்மா வந்துச்சு?. இப்படியெ உங்ககூட வந்தாக்கா யாரிது உங்க அக்காவான்னு
கேட்ருவாங்க போலிருக்கே!.. “ என்று தாயை வலிய சீண்டி ரசித்தாள்.
“ அடப் போடி நீ வேற..”
* * *
வீட்டிற்கு முன்னே இருந்த பார்க்கிங் லாட்டுகளில் எல்லாம் வாகனங்கள் இருந்ததால்,
சற்று தள்ளியே தன் வாகனத்தை நிறுத்தினாள் கல்யாணி.
“ யான்டீ, இவ்ளோ தூரம் தள்ளி நிப்பாட்ற?” என்று சலித்துக்கொண்டு ஜானகி
அம்மாள், யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டாள்.
அம்மாவின் கையை பிடித்துக் கொண்ட கல்யாணி,
“ வூட்ல லாம்பு இல்ல!. இப்ப என்ன செய்யிரதுன்னே தெரியிலியேம்மா..” என்று,
குழப்பத்திற்குள் அம்மாவை அழைத்துக்கொண்டு போனாள். அம்மா, ஏதோ
அபசகுனமாய் அதை நினத்து மனம் வருந்தி, வாசலின் மேல் சட்டத்தில்

 

தொங்கிகொண்டிருந்த விநாயகரிடம் உதவியை வேண்டி யாசித்துக்கொண்டே
வீட்டிற்குள் முதலடி வைத்த விநாடி, பட்டென்று விளக்குகள் எரிந்தன.! லேசர் வர்ண
விளக்குகளின் சுழர்ச்சியில் ஹால், பூலோக சொர்க்கமாய் சுழன்றது. ‘ ஓ ‘ என்று கூடி
நின்றவர்கள் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். கரங்கள் வெடித்தன. பார்ட்டி பொப்பர்கள்
வெடித்து வர்ண நட்சத்திரங்களைத் தூவின. ஒரு தேவதையைபோல் அம்மாள் உள்ளே
நுழைந்தாள். பார்ப்பவர்களுக்கு மட்டுமே அவள் நடந்து வந்தாள். ஜானகி
அம்மாவிற்கோ, மிதப்பதாகவே ஒரு பிரமை. மின்சாரமில்லாதது போல் பிள்ளைகள்
செய்த குறும்பை நினைக்கக்கூட அம்மாவிற்கு அவகாசமில்லை. மூத்த மகளும்
பேரப்பிள்ளைகளும் அம்மாவை சூழ்ந்துக் கொண்டனர்.
“ அம்மா, அழகா இருக்கீங்கம்மா. ஃப்ரண்ட் நல்லா மேக் ஆப் பன்னியிருக்காம்மா..”
என்ற மல்லிகா, அம்மாவைக் கட்டியணைத்து அலங்காரம் அலுங்காமல் உச்சி முகர்ந்து
வியந்தாள். மகளின் பார்வை தன் மார்பில் நிலைத்தபோது அம்மாவிற்கு, கூச்சமாகவும்
சங்கடமாகவும் இருந்தது. பார்வை, தானாகவே மகளின் முகத்தைப் பார்க்காமல்
தவிர்த்தது.
மேஜையில், பலவித வர்ண பாலேடுகளில் ரோஜாக்கள் பூத்த ஆரஞ்சு நிற கேக்.
மகள்கள்; பேரப்பிள்ளைகள் சூழ மல்லிகை மலர்களுக்கு மத்தியில் அரக்கும் சந்தனமும்
கலந்த ஒரு ரோஜாவாய் அம்மாள், மேஜைக்கு பின்னால் வசீகரித்து நின்றாள்.
கேசத்தில் நட்சத்திர துகள்கள் மின்னின. தங்க நிறம் பூத்த மயிரிழைகள், ஆங்காங்கே
எட்டிப் பார்த்து மறைந்தன. கண்களிலும் புருவங்களிலும் தெரிந்த மென்மையான டச்
ஆப்பில் எப்படி விரகதாபம் கலந்தது!. சந்தனக் கலர் சேலை; அரக்கு நிறத்தில்
ப்ளவுஸ்; நெற்றியில் சேலையின் நிறத்திலேயே சிறியதாய் ஒரு ஸ்டிக்கர் பொட்டு,
இன்று திருநீரின் இடத்தை பறித்துக்கொண்டது. முகத்தில் வெளிச்சத்தைப்
பூசிக்கொண்டதுபோல் அம்மா, பளிச்சென்று இருந்தாள்.
எல்லோரின் பார்வையும் ஜானகி அம்மாளின் மேலேயே லயித்தன. கொஞ்சமும்
சங்கோஜமில்லாமல் அவ்வளவு இயல்பாக அந்த வைபவத்தினுள் அவள்,
கொண்டாட்டத்தில் இருக்கும் சந்தோஷத்தைப் போல் ஒன்றித்துப் போனதில் பலர்,
வியந்துப் போயினர். மேலும் சிலர், அந்த மனப்பாங்கை எண்ணி சந்தோஷப்பட்டனர்.
சமவயதையொத்த இன்னும் சிலரோ, அப்படியெல்லாம் தம்மால் இருக்கமுடியாத
கூச்சத்தில் மனசிற்குள் சங்கடப்பட்டனர். ஆனால், எல்லோருமே அம்மாவை
இப்படியொரு கொண்டாட்டத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்து, அலங்கரித்து மகிழ்வித்த
மகள்களை பாராட்டி மெச்சினர். தமது தாய்க்கும் இப்படியெல்லாம் கொண்டாட
வேண்டுமென்று சில மகள்கள் தீர்மானித்துக் கொண்டனர்.
மகளின் தூண்டுதலில் அம்மாள் கேக் வெட்ட தயாரானாள். மேசையின் நடுவில், ‘ நான்
ரொம்ப நேரமாய் ரெடி. ‘ என்பதுபோல் கேக் காத்துக்கொண்டிருந்தது. கேக்கின் மேல்,
HAPPY BIRTHDAY TO AMMA/AMMAMMA என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.
மத்தியில், அம்மாவின் வயதை மறைத்துக்கொண்ட பளு தாங்க முடியாமல் எரிந்த
ஒற்றை மெழுகுவர்த்தி, சுடர் ஆடித் தவித்தது.

மல்லிகாவும் கல்யாணியும் பார்வையால் பேசிக்கொண்டு வாழ்த்துப் பாடலை
ஆரம்பிக்க, வந்தவர்கள் எல்லோரும் இணைந்துக்கொண்டனர்.
‘ HAPPY BIRTYDAY TO YOU..
HAPPY BIRTHDAY TO YOU..
HAPPY BIRTHDAY TO AMMA/AMMAMMA..
HAPPY BIRTHDAY TO YOU…’
மூன்றாவது வரியைப் பாடும்போது, அம்மா என்று சிலரும் அம்மம்மா என்று
பேரப்பிள்ளைகளும் ஜானகி அம்மாள் என்று பெயரைச் சொல்லி சிலரும் பாடியதில்
அந்த இடத்தில் ஒரு தயக்கமும் தடுமாற்றமும் சில சிரிப்பொலிகளுக்கிடையே எழுந்து
ஓய்ந்தது. தொடர்ந்து, இப்போதெல்லாம் புதிதாக பாடப்படும் இந்தப் பாடலும்
பாடப்பட்டது.
‘ MAY THE GOOD GOD BLESS YOU..
MAY THE GOOD GOD BLESS YOU..
MAY THE GOOD GOD BLESS AMMA/AMMA/AMMAMMA..
MAY THE GOOD GOD BLESS YOU.. ‘
அணைக்கப்படாமல் மெழுகுவர்த்தி எடுத்து வைக்கப்பட்ட பின்னர், அம்மாள் கடைசிப்
பேத்தியை தூக்கி, மற்ற இரண்டு பேரப்பிள்ளைகளையும் தன்னோடு
அணத்துக்கொண்டு, மூவரின் வலது கைகளையும் தன் கரத்தோடு இணத்துப் பிடித்து
கேக்கை வெட்டினாள்.
மீண்டும் சில பொப்பர்கள் வெடித்து, வர்ண காகிதத் துகள்களை பொழிந்தன. கரங்கள்
ஓயாமல் வெடித்து ஆமோதித்தன. எல்லோரும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். அம்மாவின்
முகத்தில் எல்லோரையும் வசீகரித்துக்கொண்டு ஒரு பூ பூத்தது. பூரிப்பூ!.. யாரையும்
மயக்கிப்போடும் மணம் அதற்கு இருக்கவில்லை. ஆனால், எல்லோரையும் வசியம்
செய்யும் புன்னகை அதில் ஒளிர்ந்தது.
முதலில், பேரப்பிள்ளைகள் பாட்டிக்கு கேக்கை ஊட்டிவிட்டனர். அப்படி ஊட்டிவிடும்
போது, தனது அலங்காரத்தை சிதைத்து விடாமல் அவர்களின் கைகளை கவனமாக
பிடித்து ஜானகி அம்மாள், தானாகவே ஊட்டிக்கொண்டாள். தொடர்ந்து பிள்ளைகள்,
மருமகன்கள், உறவினர்கள் என்று வரிசை நீண்டது. ஒவ்வொரு கணமும், பார்வையை
பறிக்கும் வெளிச்சம் பாய்ச்சப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
விருந்துபசாரம் ஆரம்பமானது. எல்லோருக்குமே பேசிக்கொள்ள அவ்வளவு
விஷயங்கள் இருந்தது போலவும் அன்றே பேசித் தீர்த்துக்கொள்வது போலவும்
பேசிக்கொண்டிருந்தனர். இடையிடையே கைப்பேசிகள் கண் விழித்திடும் ஒளி! வந்த
தபால்களை பட்டுவாடா செய்துவிட்டதை அறிவித்துவிட்டு அடங்கிப்போகும் அஞ்சல்
சேவை!. ‘ மாமோவ், நீங்க எங்க இருக்கீங்க?.. ‘ என்று கணவனை கைப்பேசியில் கூவி
அழைத்து அடங்கிப் போகும் மனைவி!. ‘ கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்

 

போலாமா?.. இல்ல ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கிலாமா?..’ என்று
ஆலோசணை கேட்கும் காதலி!.
இவ்வளவு நேரமும் காத்துவந்த நல்லிணக்கத்தை விட்டொழித்து பீங்கான் தட்டுகளும்
இரும்பு கரண்டிகளும் தம் தோள்களை உரசிக்கொண்ட சத்தம் காதை உறுத்தின. ‘
எங்க, சாப்பாடு முடிஞ்சிருமோ?. ‘ என்ற பயமும், ‘ எதுக்கும் நல்லது, பத்தாம
போயிர்ச்சின்னா?.. ‘ என்ற முன்னெச்சரிக்கையும் சாப்பிட்டுவிட்டு எழுந்த
மேஜைகளில் அசிங்கமாய் மீந்துக் கிடந்தன. அதிலும், மாமிச உணவுடன்
அவர்களுக்கு நல்லுறவு இருந்தது போலும்! உறவின் அடர்த்தி எலும்பைத் தொட்டது.
காய்கறிகளுடன்தான் உறவு கெட்டுக் கிடந்தது.
ஜானகி அம்மாள், கடைசிப் பேத்தியைத் தூக்கிக்கொண்டு வந்தவர்களிடமெல்லாம்
அளவளாவி நன்றி கூறிக்கொண்டு வந்தாள். அம்மாவின் கை நிறைய கவர்கூடுகள்
சேர்ந்துக்கொண்டு வந்தன. வரும் பணத்தை மூன்று பேரப்பிள்ளைகளுக்கும் பிரித்துக்
கொடுத்து விடுவதென்று தீர்மானித்துக்கொண்டாள். மகள்கள், அம்மாவிற்கு
அறிமுகமில்லாத ஆனால் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான சில தோழிகளையும்
அழைத்திருந்தனர். அவர்கள் எல்லோருமே தாமாகவே வந்து மகளின் தோழியென்று
அறிமுகப்படுத்திக்கொண்டு,
“ ஆண்டி, யூ லுக் கோர்ஜ்ஜியஸ்.. “ என்றோ,”
“ ஆண்டி, யு ஆர் சோ ஸ்போர்ட்டிங்..” என்றோ
மனசின் மாசிலா பாஷை பேசி மாய்ந்துப் போயினர். அம்மாவிற்கு மனசெல்லாம்
நிறைந்துக் கிடந்தது. இன்னொரு பிறந்தநாள் இப்படி அமைவதற்கு தனக்கு வாய்ப்பே
இல்லையென்று எண்ணிக்கொண்டாள். இவ்வளவு அருமையான கொண்டாட்டத்தை
நல்லவேளை வேண்டாமென்று பிடிவாதம் செய்யாமல் கடைசியில் விட்டுக்
கொடுத்ததை எண்ணி சந்தோஷப்பட்டாள்.
ஒரு மேசையில், அறிமுகமில்லா ஒரு குடும்பம் – மகள், கணவன், பள்ளிக்குப் போகும்
வயதில் ஒரு சிறுமி, ஒரு பெரியவர் – முகச்சாயல் மகளிடமிருந்தது –
உட்கார்ந்திருந்தனர். மேசைக்கு அருகில் போனதும், வலுவான சுருட்டு வாசத்தையே
ஜானகி அம்மாள், முதலில் உணர்ந்தாள். பெரியவரின் கை விரலிடுக்கில் சுருட்டு
ஒன்று, சாம்பல் பூத்துக் கிடந்தது. அம்மாள், நெஞ்சு நிறைய அந்த வாசத்தை
சுவாசித்துத் திளைத்தாள். அவளுக்கு மிகவும் பிடித்த வாசம். சிறுவயதில்
அப்பாவிடமும் கல்யாணத்திற்கு பிறகு கணவனிடமும் முகர்ந்துத் திளைத்த நறுமணம்
அது. சுருட்டின் வாசம் அவரின் நினைவைக் கிளர்ந்தது. மதுவின் நாத்தத்தை விட
சுருட்டின் நெடிய வாசத்தில் புணர்ந்த இரவுகளை, எப்போதுமே
விசேஷமானவையாகவே ஜானகியம்மாள் உணர்ந்தாள்.
அப்போது மல்லிகா, அங்கே வந்து தனக்கு மிகவும் நெருங்கிய தோழி ‘கௌரி’ என்று
அப்பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்களின் அன்னியோன்னியம்
அவர்களின் உடல்மொழியில் தெரிந்தது. கௌரி, அம்மாவைக் கட்டிப் பிடித்து,
கன்னத்தில் ஒட்டி,

 

“ ஹேப்பி பெர்த்டே ஆண்டி. யூ லுக் சோ யங் என்ட் பியூட்டிபுள்.“ என்று
முத்திக்கொண்டாள். அம்மாள், பாராட்டு போதையில் மிதந்துகொண்டிருந்தாள். அதிக
நேரம் கௌரியுடன் பேசிக்கொண்டு நின்றாள். சுருட்டின் நறுமணத்தில் அவள்
கட்டுண்டு தவித்தாள். பின்னர் கௌரியின் மகளின் பெயரைத் தெரிந்துக்கொண்டு
அவள் கன்னத்தை வருடிவிட்டு நகர்ந்தாள். கொஞ்ச தூரத்திற்கு உடன் வந்த மல்லிகா,
மெல்ல காதில் கிசுகிசுத்தாள்.
“ அவுளோட அம்மாதாம்மா அஞ்ஜாறு வருஷத்துக்கு முந்தி பிரெஸ்ட் கான்சர்ல
செத்துப் போய்யிட்டாங்க. நாங்கூட உங்க கிட்ட சொல்லியிருக்கேன்.. “
நிஷ்களங்கமான காற்றில் சட்டென சுருட்டின் தீவிர மணம் கலந்து நாசியை
நிறைத்தது. ஜானகி அம்மாளுக்கு உடனே திரும்பி, கௌரியின் அப்பாவைப்
பார்க்கவேண்டும் போல் தோன்றியது. ஆனால் பார்க்கவில்லை. தொடர்ந்து, மற்ற
விருந்தினர்களுடன் கலந்துறவாடிப் பேசிக்கொண்டிருந்ததில் கடைசிவரை கௌரியின்
அப்பாவைப் பார்க்க முடியாமலேயே போனது. விடைப்பெற்று போகும்போதுகூட
கௌரியும் அவளுடைய மகளும் மட்டுமே வந்து சொல்லிவிட்டுச் சென்றனர். ஜானகி
அம்மாள்கூட அவளின் அப்பாவைத் தேடி வாசல்வரை பார்வையை படர்ந்தாள்.
காணவில்லை!..
* * *
எல்லா ஆரவாரத்தையும்; ஆர்ப்பாட்டத்தையும் வந்தவர்களே கொஞ்சம்
கொஞ்சமாகத் திரும்பி எடுத்துக்கொண்டு போயினர். கல்யாணி, மகளுடன் தன்
வீட்டிற்கு போய்விட்டாள். மல்லிகா, இரண்டாவது மகளைத் தூக்கிக்கொண்டு மேல்
மாடிக்கு தூங்கப் போனாள். களைத்துச் சோர்ந்துப் போனது போல் வீடும், மெல்ல
ஓய்வில் ஆழ்ந்தது. ஹாலை தூங்கவிடாமல் உறுத்திக்கொண்டிருந்த வெளிச்சம்
அணைக்கப்பட்டது. வாசலில் நிராதரவாய் நிலவிய நிசப்தம், துணைக்கு தோட்டத்தில்
பூத்திருந்த பவளமல்லி வாசத்தையும் சேர்த்துக்கொண்டு மெல்ல ஊர்ந்து வீட்டிற்குள்
நுழைந்தது.
ஜானகி அம்மாள் தூங்கப் போனாள். ஒரு நாள் முழுக்க நின்றுக்கொண்டும்
நடந்துக்கொண்டும் மட்டுமே இருந்ததுபோல் கால்கள் தளர்ந்துப் போயின. அறைக்குப்
போய் படுக்கையை சீர் செய்து, குறுக்காக படுத்திருந்த பேத்தியை தூக்கி அவளுடைய
இடத்தில் கிடத்தினாள். திரும்பி வந்து, நிலைக்கண்ணாடியில் தன்னைப்
பார்த்துக்கொண்டே சேலையை உருவி நாற்காலியில் போட்டாள். ப்ளவுஸ்
பாவாடையில் ஜானகி அம்மாள்! இரண்டு முலைகளையும் அளப்பதுபோல்
ப்ளவுசுடனே அவற்றை ஏந்திப் பார்த்து நின்றாள். கதவு சாத்தப்பட்டிருப்பதை ஒரு
முறை உறுதி செய்துக்கொண்டு வந்தாள். கேசத்தில் இன்னும் நட்சத்திரங்கள்
மின்னிக்கொண்டிருந்தன. முகத்தின் சுருக்கங்களை மிகவும் நேர்த்தியாக மறைத்த மேக்
ஆப் தோழியின் திறமையை மனசிற்குள் மெச்சினாள். தேன் மற்றும் பால் கலந்த
மோய்ச்சராய்சரை மட்டுமே தான் பாவிப்பதாக தோழி சொன்னது அம்மாளின்
நினைவிற்கு வந்தது. இளமையில், தன் ஸ்தனங்களின் அளவில் சற்று குறையை

 

உணர்ந்த ஜானகி அம்மாள், இப்பொழுது பெட்டட் ப்ராவில் பெருத்து, மதர்த்து நின்ற
வடிவத்தைப் பார்த்து மகிழ்ந்து நாணினாள். ஆனால், அப்படி எந்த குறையும்
இல்லாததுபோல் அவற்றை அவர் தீண்டித் திளைத்தபோதெல்லாம் அவள், மிகுந்த
பெருமிதமே கொண்டாள். நினைவுகள் குழைந்தன. ஏக்கத்துடன் கழிந்த இரவுகள்
மீண்டன. ஒர் ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அவளுக்கு மிகுந்த
ஆசை இருந்தது. ஆனால், கல்யாணி பிறந்த பிறகு எனோ அவருக்கு, தாம்பத்திய
ஆசை, கரும்பைப் போல் கண்ணுக்கு கண் சுவை குன்றிப் போய் நுனியில், இனிப்பே
இல்லாமல் போவது போல் ஆனது. சமயங்களில் தேவையில்லாமல் சிடுசிடுப்பதும்
எரிச்சலில் எரிந்து விழுவதும் மட்டுமே ஜானகி அம்மாவால் செய்யக்கூடியதாய்
இருந்தது. ஆனாலும், அதற்கும் எந்த பயனும் இருக்கவில்லை. கனவுகள் இருந்தன.
கற்பனைகள் பெருகின. ஆனால், நிராதரவான தனிமையில் அவை யாவும் அர்த்தம்
இல்லாமலேயே பேரிளம் பெண்ணின் கல்யாண ஆசையைப்போல் வெறும்
ஏக்கப்பெருமூச்சாகவே பொய்த்துப் போயின. டெலிவிஷன் பார்த்துக்கொண்டே
ஹாலில் தூங்கிப் போவதாய் அவரின் இடைவெளி நீண்டுப் போய், அவருக்கு
துணைக்கு வேண்டியது எல்லாம் அரை போத்தல் கார்ல்ஸ்பெர்க் பியர் ஆகவே ஆகிப்
போனது. குழந்தைகளைப் பேணுவதில் அவள் தன்னை ஒளித்துக்கொண்டாள்.
பின்னர், தோளுக்குமேல் பிள்ளைகள் வளர்ந்துவிட்டதும்; பேரப்பிள்ளைகள்
பிறந்ததும், அம்மா பாட்டியாகிப் போக, அவளின் ஆசாபாசங்கள் யாவும் அவளின்
வயதையொட்டியே தீர்மானிக்க வேண்டிய விஷயங்களாகப் அடங்கிப்போயின. ஒரு
நாள், ஒரு மயக்கத்தில் அவர் இறந்துப் போனபோது, வீட்டில் ஒரு நபர்
குறைந்துப்போனதாக மட்டுமே ஜானகி அம்மாவால் உணரமுடிந்ததே தவிர ஒரு
துணையை இழந்த பெரிய வருத்தம் ஏதும் இருக்கவில்லை.
எல்லா உடைகளையும் அவிழ்த்துப் போட்டுவிட்டு, வழக்கம்போல் கழுத்திலிருந்து
பாதம் வரையிலான பூப்போட்ட மெக்ஸியை மாட்டிக்கொள்ள நினத்து ப்ளவுஸ்
பொத்தானில் விரல்களை வைத்த ஜானகியம்மாள், கொஞ்ச நேரம் கண்ணாடியில்
தெரிந்தப் பிம்பத்தையே பார்த்து நின்றாள். கௌரி சொன்னது அப்படியே
நினைவிலேயே இருந்தது.
‘ ஆண்டி, யூ லுக் சோ யங் என்ட் பியூட்டிபுள்..’
ப்ளவுஸ், பாவாடையை அவிழ்த்துப் போடும் எண்ணத்தை அவள்
மாற்றிக்கொண்டாள். அன்றைக்கு ஒரு இரவு, அந்த உடைகளுடனேயே
படுத்துக்கொள்ள வேண்டும்போல் ஆசையாக இருந்தது. ‘போல்ஸ்டரை’ இறுக்கி
அணைத்துக்கொண்டே ஜானகியம்மாள் தூங்கப் போனாள்.
அவள், காண்பது கனவா நிஜமா என்பது தெரியாத குழப்பத்தில் ஆழ்ந்துப்போய்
கொஞ்ச நேரம் ஆகியிருந்தது. அதிருப்தியும் தாபமும் நாணத்தின் ஆடைகளை
அவிழ்த்துப் போட்டன. அவள், வேட்கையுடன் உடலெங்கும் ஊர்ந்தாள். தளர்ந்துச்
சரிந்த ஸ்தனங்கள், பெட்டட் பாடிக்குள் சிலிர்த்து இறுகின. ஆசையுடன் கழுத்தில்
பற்குறி இட்டு மகிழ்ந்தாள். ஆர்வம் பொங்க அதரங்களில் முத்தமிட்டுக் கொஞ்ச
ஜானகியம்மாள், முகத்தை ஏறிட்டாள்; கூர்ந்துப் பார்த்தாள். சுருட்டின் தீவிர புகையினூடே முகம், தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், சுருட்டின் நறுமணம்
மட்டும், சுவாசமாய் உயிரில் கலந்தது.

* * *

 

 

 

 

 

 

-மலேசியா ஸ்ரீகாந்தன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *