“என்னடே இப்பிடி ஆயிப் போச்ச! பூளான் கொண்டாடி எந்திக்கது கஷ்டமாமே! வெளக்குப் போடாம மாரியம்மைக்க எடமே இருண்டு போன மாதில்லா கெடக்கு,” என்றபடி கைவிரலில் இருந்த மிச்ச சுண்ணாம்பை கடை பந்தற்காலில் தேய்த்தார் பெரிய மச்சான்.
“பின்ன, செஞ்ச பாவம்லாம் சும்மா விடுமா பெரியாச்சான்? ஒன்னு ரெண்டுன்னா செரின்னு சொல்லலாம்? இது என்னத்த? மூணு பொட்டச்சிய கதைய முடிச்சிட்டு அனக்கம் காட்டாம திரிஞ்சாருல்லா?” என்று வெடுக்கென முகத்தை வெட்டி இழுத்தார் சின்ன மச்சான்.
“லேய் சின்னாச்சான். பெரிய மத்தவன் மாதி பேசப்படாது பாத்துக்க. நீ என்ன, வெளக்கத் தூக்கிட்டுப் பின்னாலயே போனயோ? ஒரு எட்டு போயி பாக்கதுக்கு வக்கில்ல, இதுல வாயி மயிரு, த்தூ. அவரு ஆடும்போது மட்டும் கையக் கட்டிட்டு மூஞ்சில தண்ணியடிக்கப் போயி நிக்கேல்லா? சொடலயும் அம்மையும் ஒரே ஆளுக்க மேல வரதுன்னா லேசுப்பட்ட காரியமா ல? பல்லிருக்கவன் பாக்கக் கடிக்கான். முடியாத்தவன் மூடிட்டுப் போவேண்டியதான? அவரு மூணு பேத்த கொன்னு பொதச்சாராம் இவரு பாத்தாராம். போயி போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லாம் பாப்போம்?” என்று சொல்லி நக்கலாகச் சிரித்தார் பெரிய மச்சான்.
“பெரியாச்சான், அவரு ஒமக்கக் கூட்டாளில்லா? விட்டுக் குடுக்கவா போறீரு? எத்தன சொவத்த ஏறிக் குதிச்சீங்களோ, யாரு கண்டா? பின்ன, எதுத்துக் கேக்கணும்னா…. எல்லாவனுக்கும் எதுத்துக் கேக்கதுக்குப் பயம். சாமி கொண்டாடில்லா? சவத்த எதாம் சாபத்தப் போட்டுட்டான்னா என்ன செய்ய?” என்று இடையை வளைத்தபடி ஆடிச் சிரித்தார் சின்ன மச்சான்.
“இங்க ஒருத்தனும் யோக்கியன் மயிரு இல்லல்லா, பூளான் கொண்டாடிய மாத்திரம் கொற சொல்லதுக்கு!” என்று குறுக்கிட்டு இரண்டு டீ தம்ளர்களைக் கொண்டு அவர்கள் முன் நீட்டியபடி நின்றார் செல்லப்பண்ணன்.
பெரிய மச்சானும் சின்ன மச்சானும் திகைத்தபடி அவரைப் பார்க்க, “எதுக்குச் சொன்னன்னா? பேப்பர எடுத்தா பாக்கக் கதயெல்லாம் அப்பிடித்தான இருக்கு? ஊருக்குள்ள ஒரு பய யோக்கியன் கெடயாது போல! வெள்ளையும் சொள்ளையுமா சுத்துகானுவோ, ஆனா பண்ணதெல்லாம் அழிச்சாட்டியம். எவவன் பிள்ளேலு எந்தெந்த ஊருல இருக்கோ யாரு கண்டா?” என்று சொல்லியபடி சின்ன மச்சானைப் பார்த்துக் கண்ணடித்தார் செல்லப்பண்ணன். பெரிய மச்சானின் முகம் சட்டெனக் கருத்துப் போனது. டீயை உறிஞ்சியபடி சற்று நேரம் அமைதியாக இருந்தார். சின்ன மச்சான் ஒரு பீடியைப் பற்ற வைத்து நீண்ட இழுப்பாக இழுத்து சில நொடிகள் புகையை உள்ளே அடக்கி வைத்துக் கண்களைச் சுருக்கிக் காட்டினார். அதற்குச் செல்லப்பண்ணன் அசிங்கமாக ஒரு சைகை காட்ட, சின்ன மச்சான் பொதப்பில் ஏறியபடி இரும ஆரம்பித்தார்.
இருமலோடு கலந்தபடி வந்த ஆம்புலன்ஸ் வண்டிச் சத்தத்தைக் கேட்டு மூவரும் சாலையின் அருகே வந்து நின்றனர். மூவரும் ஒரே திசையில் பார்த்து ஒரே விஷயத்தை எதிர்பார்த்ததைப் போல நின்றிருக்க, தெரு மூலையில் இருந்த மாரியம்மன் கோவில் வளாகத்தில் சென்று நின்றது ஆம்புலன்ஸ். இரு வாலிபர்கள் ஒரு ஸ்ட்ரெச்சரை எடுத்துக் கொண்டு கோவிலின் அருகே இருந்த பூளான் கொண்டாடியின் வீட்டிற்குள் சென்றனர். கதவைத் திறந்ததும் வந்த அலறல் சத்தத்தில் வாய் பார்த்துக் கொண்டிருந்த சனக் கூட்டம் நடுங்கியே விட்டது. அடி வயிற்றைக் கிழித்துக் கொண்டு ஏதோ ஒன்றைத் தூக்கித் தூர எறியும் வெறிக் கூச்சல்.
“எனக்க அம்மோ! எனக்க அப்போ! ஏய் சொடல, ஏ பாவி மாரியம்ம.”
சுற்றி நான்கு இளைஞர்கள் பிடித்துக் கொள்ள, பூளான் கொண்டாடியைத் தூக்கியபடி வெளிவந்த மருத்துவப் பணியாளர்கள் அவசர அவசரமாக அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பினர்.

“அதென்ன ஓய், பூளான், ஓளான்ன்னு.. சாமி கொண்டாடி செரி, அதென்ன பூளான் கொண்டாடி?”
“செரிதான், இது தெரியாமத்தான் நீ அவர மாமான்னு மொற கொண்டாடிட்டுத் திரிகியா? வெளங்கும்.”
“அட வெளங்காமத்தான ஓய் கேக்கேன்? அவரு மலையேற முந்தி பேரச் சொல்லாம ஒரு வாத வந்து ஆடும்லா? ஒருவேள அதுக்கப் பேரா இருக்குமோ?
“அதெல்லாம் வெறும் படம். நம்ம பூளான் கொண்டாடிய எங்க பாக்கலாம்? சொல்லு.”
“எங்க.. அவருக்கு மாரியம்மன் கோயில விட்டா வேற போக்கிடம் இல்லல்லா?”
“அங்க இல்லாட்டா வேற எங்க இருப்பாரு?”
“ம்‌‌ம்‌ம்‌ம்…”
“என்னத்த இழுக்க, ஒங் கொழுந்திக்க கூட தான் இருப்பாரு. பின்ன, ஒனக்குத் தெரியாமலா இருக்கும்?”
“ஓய் இப்ப செவுள்ளயே ஒன்னு வச்சாத் தெரியும் பாத்துக்கோரும்.”
“செரி, செரி கோவப்படாத டே. மத்தியானம் சாப்ட்ட பொறவு மெல்ல நடந்து நம்ம தேரிக்காட்டுக்குள்ள போவாரு தெரியும்லா?”
“ஆமா, அங்கண போயி படுத்துக் கெடப்பாரு.”
“ஆமா கெடக்கத மட்டும் நல்லா பாப்பான்.”
“அதுக்கு என்ன ஓய்?”
“எங்க படுத்துக் கெடப்பாருன்னு கவனிச்சிப் பாத்திருக்கியா மண்டயா?”
“ம்ம்.. தேரிக்காட்டுல என்னத்த ஓய் இருக்கு?”
“அங்க குத்துக் குத்தா ஒரு செடி உண்டும்லா? கண்டுட்டில்லயாக்கும் நீ?”
“செடியா? பீக்காட்டுல என்ன செடி, செரி, அதுக்கு என்னா? இவரு எதுக்கு அங்க போயி படுக்காரு?
“ஆங், அப்போதான் மத்தவ….. எதாஞ் சொல்லிரப் போறேன்.”
“ஓய், சொல்லுகீருன்னா ஒழுங்கா சொல்லும்.”
“நல்லாக் கேளு மவனே! அந்தச் செடிக்கப் பேரு பூளச்செடி. அதுக்கப் பூவப் பாத்தீன்னா சின்னச் சின்ன வெள்ளப் பொட்டு மாதி கொத்துக் கொத்தா இருக்கும், கண்ணுல பூள வடியும்லா டே? அதே மாதி இருக்கும்னு சொல்லதுண்டும்.”
“செரி..”
“அட பொங்கலுக்குக் காப்புக் கட்ட கொத்துக் கொத்தா கொண்டு வருவானுவல்லா, தேங்காப்பூ மாதி இருக்குமே. அதான்.”
“ஆமா ஓய், மனசிலாச்சு. ஆமா, அதுக்கும் இவருக்கும் என்ன?”
“இரி, எனக்கே மொதல்ல மனசிலாவல்ல, இவரு என்னத்துக்கு அந்தச் செடியக் கட்டிப் புடிச்சிட்டுப் படுத்துக் கெடக்காருன்னு நெனச்சேன். செரி, சாமி கொண்டாடில்லா? கொஞ்சம் வட்டாவும் இருக்கும்லான்னு விட்டுட்டேன். ஆனா, பாக்கும்போல்லாம் அப்பிடியே கெடந்தாரா? பொறவு நமக்கு இருப்பு கொள்ளல. ஒரு நாள், பக்கத்துல போயி பாக்கேன், அந்தப் பூவப் பறிச்சு வாயில போட்டு மெல்ல திங்காரு.”
“சை, அதையா?”
“இரிடே, அது பின்ன நல்ல மருந்தாக்கும்.”
“ஓ எதுக்கு ஓய்? மத்ததுக்கா?”
“நீ அதுலயே கெட. மானங்கெட்டப் பய. கல்லயே கரைக்கும் இந்தப் பூளன்னு ஒரு பேச்சே உண்டும் டே. இந்த கிட்னி இருக்குல்லா கிட்னி, அதுல அடைக்கக் கல்லெல்லாம் இன்னா புடின்னு கரச்சி அடிச்சிருமாம்.”
“அடி பொழி ஓய்? ஆமா நம்மாளுக்கு கிட்னிக்கி என்ன ஓய்?”
“கேளு, என்ன எழவோ என்னமோ? பூளான் கொண்டாடிக்கு ஒன்னுக்கே வராதாம் கேட்டியா? அவரு ஒன்னுக்கு இருந்து பத்தோ பதினஞ்சோ வருஷம் ஆகுதாம்.”
“என்னது? ஒன்னுக்கே வராதா? என்ன ஓய் சொல்லுகீரு? அப்பிடின்னா மத்த…”
“நெனச்சேன் நீ கேப்பேன்னு.. நீ நெனைக்க மாதில்லாம் இல்ல பாத்துக்கோ.”
“நா எதுக்கு அதப் போயி பாக்கப் போறேன், வேண்ணா நீரு போயி பாரும், பாக்கது போதாதுன்னா, நீரு போயி ………”
“அட வெளங்காத்தவனே ஒழுங்கு மயிரா கேளு மொதல்ல. மூணு கொமருகள கொன்னு பொதச்சாருன்னு கத உண்டும்லா, அதுல கடைசி உள்ளவ ஒரு மந்திரவாதிக்க மவளாக்கும் பாத்துக்க. மகாராணி மாதிரி அழகு. இவரு மொத ரெண்டு வேர்ட்ட காட்டுன மாதி இவகிட்டயும் காட்டிருக்காரு. அவ நல்ல செரியா செய்வின வச்சிட்டு ஓடிட்டான்னு பேச்சு உண்டும். அன்னீலேர்ந்து இவருக்கு சாமானம் வேல செய்யாதாம். ஒன்னுக்கும் போக முடியாதாம், வேற ஒன்னுக்கும் கொண்டு கழியாதாம்.”
“என்ன ஓய், நெஜமாவா? அதெப்படி ஓய்? ஒன்னுக்கு போகாட்டி செத்துப் போயிர மாட்டமா?”
“அதென்னமோ தெரில டே. ஒரு வேள, சாமி கொண்டாடின்னால தெய்வங்க காப்பாத்தி விட்ருக்குமோ என்னவோ!”
“என்ன சொல்லும் ஓய், நல்ல மனுசன் தான். கேக்காமலே வந்து என்ன தேவைன்னு தெரிஞ்சு குடுத்துட்டு போற ஆளாக்கும். என்ன, இப்பிடிப் பல கதையும் கேட்ட பொறவு வீட்டுக்குள்ள ஏத்த மனசும் வர மாட்டுக்கு. நம்மளும் பொம்பளப் புள்ளையள வச்சிருக்கம். சரி, அம்மனுக்கும் அய்யனுக்கும் பூளான் கொண்டாடி தான்னு ஆயிருச்சி. நல்லபடியா போய்ச் சேர்ந்தா சரிதான்.

“என்ன டே, எதாம் தகவல் உண்டுமா? நம்மாளு என்ன ஆனாரு? போன ஆம்புலன்சு திரும்பி வந்த பாடில்லயே?” என்று கேட்டபடி வெற்றிலையைப் பாக்கை அரைத்துக் கொண்டிருந்தார் பெரிய மச்சான்.
“பெரியாச்சானுக்கு தறிச்சி ஓரெடத்துல நிக்க முடியல, என்னா? கூட்டாளியக் காணாமக் கருத்துப் போன மாதில்லா தெரியி,” என்றவாறு சிரித்தார் சின்ன மச்சான்.
“என்னத்தச் செய்யச் சொல்லுகடே, ஓந் தங்கச்சி இருந்தாலாது எனக்கு நேரம் போயிருக்கும். பின்ன நீயும் மாமங்காரனாயிருப்ப. எல்லாம் நேரம்!” என்று செல்லப்பண்ணனைப் பார்த்துக் கண்ணடித்தார் பெரிய மச்சான்.
“சரி, விடும், எதுக்கு வாயக் கெளறி! ஆம்புலன்ஸ்ல போனவருக்கு போதம் வரலன்னு பேச்சு உண்டும். அமேரிக்காக்கு போயி ஆப்பரேசன் பண்ணப் போறதாட்டும் தகவல் உண்டும். எத நம்பதுன்னே தெரியல.”
“என்னது அமெரிக்காவா? விட்டா பூளான் கொண்டாடிக்கு கோயிலே கெட்டிருவானுகோ போலல்லா இருக்கு!”
“பெரியாச்சான் நடிக்கப்படாது. நம்மாளுக்க மொத சம்சாரம் கதையெல்லாம் ஒமக்குத் தெரியாதாக்கும்?”
“என்னடே புதுக்கத? சொல்லு, அதயுங் கேப்பம்.”
“அண்ணாச்சி பாத்து, இன்னிக்கி சந்திராஷ்டமம் இருக்காம்.” என்று கத்தினார் செல்லப்பண்ணன்.
வாயை ஒரு கையால் பொத்தியபடி அவரைப் பார்த்து வலிச்சம் காட்டினார் சின்ன மச்சான்.
“பெரியாச்சான், ஊர்ல என்ன சொல்லுகா தெரியுமா? பூளான் கொண்டாடிக்கு மொத பொண்டாட்டியா வந்தவ கேரளத்துல ஒரு மகாராஜா வம்சமாம். அதொரு முப்பது நாப்பது வருஷம் முன்னாடி இருக்கும் போல. அந்தப் பொம்பள பாக்கதுக்கு நம்ம காலண்டர்ல எல்லாம் இருக்குமே, அந்த லட்சுமி மாதிரி இருக்குமாம். எல்லார் கண்ணும் படுக மாதி தான் இருந்தாராம். ரெண்டு புள்ளயோ, ரெட்டப் புள்ளயோ பொறந்துருக்கு.”
“ஓஹோ, ஏற்கெனெவே நாலு பிள்ளயோ கணக்கிருக்கு. இது கூட ரெண்டா? செரி செரி, சொல்லு.”
“ரெட்டைல ஒண்ணு பொட்ட, அம்மய மாதியே இருந்துருக்கு. பூளானுக்கு அதுல ஒன்னும் கொழப்பமில்ல. இன்னொன்னு ஆணு இல்லையா? மொதல்ல அதக் கொஞ்சிக் கொஞ்சி வளத்தாராம். ரெண்டு, மூணு வயசு இருக்கும்போ பொண்டாட்டி கிட்ட கேட்டாராம், ‘அதெப்படி ஒன்னு உன்ன மாதி இருக்கு, இன்னொன்னு உன்ன மாதியும் இல்ல, என்ன மாதியும் இல்ல, உண்மைய சொல்லு, சாமி கொண்டாடிக்க சாபத்த வாங்கிறாத’ன்னு.”
“அட மானங்கெட்ட மனியா! எனட்ட கூட இந்தக் கதைய சொன்னதில்லய! நாயக் குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சா என்ன ஆகும்னு காட்டத்தான செய்யும் பின்ன? செரி, பொறவு என்ன ஆச்சி?”
“மொத பொண்டாட்டி செத்துப் போயிட்டான்னு சொல்லி தான் இந்த ஊருக்குள்ள பாவம்னு பேரு வாங்கிருக்கான் பூளான். ஆனா, காணாமப் போவதுக்கு முன்னாடி அந்த ஒரே கேள்வில காரித் துப்பிட்டு தான் போயிருக்கா, பொறவு எங்க கொன்னு பொதச்சாரோ என்னவோ?”
“ஓ, பிராடுப் பய, வரட்டும், அவனப் புடிச்சிக் காயடிச்சு விட்டுருகேன்.” என்று சொல்லியபடி உறுமினார் பெரிய மச்சான்.
“நீரு காய வச்சி அடிக்கதுக்கு அங்க என்னத்த இருக்கப் போகு! ஏமாந்து போவீரு,” என்று சொல்லியபடி டீ தம்ளர்களை நீட்டினார் செல்லப்பண்ணன்.
“இதுல அட்டகாசம் என்ன தெரியுமா?”
“இதென்ன, நெதம் குடிக்க கஞ்சித் தண்ணி டீ தான?”
“அட சும்மாக் கெடயும் ஓய். அந்த கேரளாக் காரி போகும்போ ஊரு முழுக்க தெருத்தெருவா ‘சாமானம் செத்தவன், சாமானம் செத்தவன்’ன்னு கத்திக்கிட்டே போனாளாம்.”
“ஹஹஹஹ..”
“நல்ல பேரு என்ன ஓய், சாமானம் செத்தப் பய.”
“அதுக்கப் பொறவுதான் பூளானுக்கு மத்த பிரச்சின வந்திருக்கு. ஒரு சொட்டு போகதுக்கு ஒரு மணி நேரமா முக்கிட்டு நிப்பாராம். ராவு பூரா மொனகல் சத்தம் கேக்குன்னு பக்கத்து தெரு பூரா புகார் ஆக, கோயிலும் தானும்னு அங்கேயே போயி சேந்திருக்காரு.”
“பேசிப் பேசி அமெரிக்காவ விட்டுட்டியே மாந்தையா” என்று வெற்றிலை எச்சிலைத் துப்பியவாறு கேட்டார் பெரிய மச்சான்.
“ஆங், அங்க தான மேட்டரே இருக்கு.”
“அங்க நெறைய மேட்டர் இருக்குனு சின்னப் பயவுள்ளயளுக்கும் தெரியுமே, சொல்லுடே என்ன மேட்டருன்னு.”
“ஒம்மளக் கொண்டு எனக்கு முடியல ஓய்.. அந்த கேரளாக்காரிக்க ரெட்டப் புள்ளய அமெரிக்கால பெரிய டாக்டர்மாராம். பூளான் கொண்டாடிய கூட்டிட்டுப் போயி ஆப்பரேசன் பண்ணியாச்சாம். மத்தவருக்கு இனி கொண்டாட்டம் தான் போல. இன்னொரு பொண்ணு பாக்கணும்னு நெனைக்கேன்.”
இடையில் குறுக்கிட்ட செல்லப்பண்ணன், “சின்னாச்சானுக்கு ஊரான் சாமானத்தப் பத்தி தான் கவல. நம்ம வீட்டுல குத்துப்போணியெல்லாம் ஆசாரி வீட்டுக்குப் போகுதாமே!” என்று சொல்லிச் சிரித்தார்.

பூளான் கொண்டாடி இல்லாமலாகியிருந்த ஒரு சில நாட்கள் கழிந்த இரவொன்றில். ஊரெல்லைக் கொற்றவைக் கோயில் ஆலமரத்தைக் கடந்து செல்லும்போது ஏதோவொன்று வித்தியாசமாகத் தெரிய பயந்தபடி அருகே சென்றேன். பதுங்கிச் சென்று ஒரு புதர் மறைவில் அமர்ந்து கூர்ந்து பார்த்தேன். உடலெல்லாம் திருநீற்றைப் பூசிக்கொண்டு தன்னிலும் பெரிய ஏதோவொன்றைத் தரையோடு இழுத்து வந்தது ஓர் உருவம். நீண்ட தாடியும் வழுக்கைத் தலையும். ‘பூளான்’ என்று எனக்குள் நான் முனகினேன். இழுத்து வந்ததைத் தூக்கி நிறுத்திய போது அது ஒரு குதிரை வடிவம் கொண்டது. பனை மட்டையாலான குதிரை. அதைக் குத்தியூன்றி நிறுத்தி அதைச் சுற்றி வந்து திருநீற்றை அள்ளி வீசியது அவ்வுருவம். அருகிலிருந்த ஒரு பனங்கூடையிலிருந்து சிறு சிறு பூக்களைக் கொத்துக் கொத்தாக அள்ளி அக்குதிரையின் மீது இரைத்தது. பின் துள்ளிக் குதித்து அக்குதிரையின் மீது ஏறி அமர்ந்தது. அவ்வுருவத்தின் மார்பில் கற்றை கற்றையாக சிறுபூளைப் பூ மாலைகள்.
ஒன்றும் விளங்காமல் நடந்தது நோக்கி அமைதியாகவிருந்தேன். அடுத்த நாள் ஊர்ப் பெரியவரான சம்பந்தரிடம் சென்று நடந்ததைச் சொன்னபோது, ஆழ்ந்து யோசித்தவர் சற்று நேரத்தில் மெல்லப் புன்னகைத்தார்.
“ம்‌ம், பூளான் கொண்டாடிக்கு தானே மூணு சம்சாரம்னு கத?” என்று என்னை நோக்கினார்.
“ஆமாங்கய்யா, மூணு வேரயும் அவனே கொன்னு பொதச்சதா பேச்சு.”
“ஓ, மூணு வேரயுமா? எல்லோருக்கும் எல்லாம் தெரியும் போலயே!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
சற்று நேரம் அமைதியாக இருந்தார். நான் குழம்பியபடி ‘அது பூளான் தான், அது பூளான் தான்’ என்று எனக்குள்ளாக சொல்லிக் கொண்டேன்.
“மற்றை, அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து-ன்னு கலித்தொகைல வருது.” என்றார் சம்பந்தர்.
நான் அவரது கண்களை ஆழ்ந்து நோக்கி நின்றேன்.
“பனங்குதிரை இல்லையா? இத மடலேறுதல்ன்னு சொல்லுவாங்க. தன்னோட காமம் அடங்காத தலைவன் தலைவிய நெனச்சு தவிச்சு ஊராருக்குத் தெரியப் படுத்த மடலேறுவான். மடல்ன்னா அந்தக் குதிரைன்னு வச்சிக்கோ. அதுல ஏறி பூளைப் பூமாலையணிஞ்சு தலைவிய நெனச்சு உருகி நிப்பான். தலைவியோட உருவத்த வரஞ்சி வச்சிருக்கணுமே? அதப் பாக்கலியா நீ?”
நான் இல்லையெனத் தலையாட்டினேன்.
“ம்‌ம். அதப் பாத்து ஊராரெல்லாம் சேந்து தலைவியக் கண்டுபிடிச்சுக் கொண்டுவந்து தலைவன் கூட சேத்து வைப்பாங்க.”
நான் வியந்தபடி ஏதோ யோசித்தபடி நின்றேன்.
“ஆனா, அது பூளானாவே இருந்தாலும், யாருக்கு என்ன சொல்லதுக்கு இப்பிடிச் செய்யணும்? யாருக்கு தான் என்ன புரியப் போகுது?” என்று சொல்லியபடி என்னைப் பார்த்து வணங்கியபடி எழுந்தார் சம்பந்தர்.

“லே மக்கா, மத்த கள்ளச்சாமியாரு செரியான ஆளுதான் பாத்துக்க. அன்னிக்கு செரியா எங்கிட்ட மாட்டிக்கிட்டான் கேட்டியா?”
“என்னல மேட்டரு, அதச் சொல்லு மொதல்ல, அப்பன மாதி மகனும், பேச ஆரம்பிச்சிட்டான்னா அறுத்துருவான்.. சின்ன மச்சான் பெத்த…..”
“பல்லக் கழத்திருவம் பாத்துக்க.”
“அத பொறவு பாப்பம் மக்கா, நீ சொல்லு செல்லக்குட்டி.”
“நம்ம பூளான் கொண்டாடிக்கு மூணு பொண்டாட்டில்லா..”
“சரிதான், இவன் இப்ப தான் இதுக்கே வாரான். செரி மக்கா, ஒன்னு செய்யி, நீ கத சொல்லிட்டே இரி. நாங்க போயி அந்த அமெரிக்கா ஆஸ்பத்திரில ஒரு எட்டு பாத்துட்டு வந்துருகோம்.”
“அதுல ஒரு சீக்ரெட்டு இருக்கு மக்கா. மத்தவருக்கு ஒன்னுக்கு போவ முடியாதுல்லா? எப்பிடி அப்பிடி ஆச்சுன்னு சொல்லு பாப்பம், பெரிய இவன் மாதி ஊருல சுத்துகேல்லா.”
“அது, அவருக்கு கிட்னி ரெண்டும் அவுட்டாம்லா! வயித்துக்குள்ள எல்லாத்தயும் சுருட்டி தச்சில்லா வச்சிருக்கானுகோ. இன்னொன்னும் சொல்லுகாவோ… ஏதோ ஒரு மெஷின் இருக்காம் பாத்துக்கோ, தெனம் ராவு அத எடுத்து உள்ள சொருவுனா ஒரு சொட்டு விடாம உறிஞ்சி எடுத்துருமாம். பாம்பேல இருந்து வந்துருக்காம்.”
“ஆமா, நீ பேசிட்டா நம்பிரணும். சும்மா கத அடிக்கக் கூடாது பாத்துக்கோ. ஓங்கிட்ட எவனாம் அளந்துருப்பான், நீ ஊரு ஊரா சொல்லிட்டுத் திரி. விசயம் அதில்ல கேட்டியா? இது செய்வினக் கோளாறாக்கும்.”
“வாய்ப்பேயில்ல மக்கா, பூளான் கொண்டாடி ஊருக்குள்ள எத்தன பேய ஓட்டிருக்கான், ஒவ்வொரு தெய்வமும் அவங்கிட்ட கையக் கட்டிட்டுல்லா நிக்கும். சித்திரைக் கொடைல அவன் ஆடிப் பாத்திருக்கேல்லா, பொறவு என்னடே? செய்வினயெல்லாம் அவனுக்கு தூசு மாதில்லா?”
“அதெல்லாம் செரிதான். ஆனா, அவருக்க ரெண்டாமத்தவளாக்கும் இதுக்கு மெயின் ஆளு. கன்னி கழியாத்த பிள்ளயா கெட்டிட்டு வந்து ராப்பூஜ செஞ்சா நர முடி வராது, சாவே கெடயாதுன்னு எவனோ அளந்து விட்டுருக்கான். பூளானுக்கு இருப்பு கொள்ளல, மொத பொண்டாட்டி காலுல விழுந்து கெஞ்சிருக்காரு.”
“எதுக்காம்?”
“ஆங், ஒன் மாமனாருக்க தெவசத்துக்கு கரகாட்டம் வைக்கணும்னு கேட்டேல்லா, அதுக்கு… மூடிட்டுக் கேளுல. மொத பொண்டாட்டி இதான் சாக்குன்னு ஊருல அவன் பேர்ல இருந்த பன்னெண்டு வீட்டயும், தென்னந்தோப்பையும் அவ பேருக்கு எழுதி வாங்கிட்டாளாம்.”
“அடச்சீ. என்ன மக்கா, மானங்கெட்ட குடும்பமா இருக்கு?”
“தொட்டிப் பயல, குறுக்க வந்து விழாமக் கெடையாம்ல கொஞ்ச நேரம். வாயி சும்மாவே இருக்காது என்ன? வச்சி அடைக்க ஒரு கம்பு இருக்கு, வேணுமா?”
“செரி, செரி சொல்லு.”
“வடக்க பனங்காட்டூர் இருக்குல்லா? அதுக்க மேக்க ஒரு பெரிய மல உண்டும், பாத்துருக்கியா?”
“ஆமா..”
“அந்த மலயத் தாண்டி ஏறங்கி ஒரு காட்டுவாசிக் கிராமத்துல போயி நின்னுருக்கான் பூளான்.”
“அங்க என்னத்த ஓய் இருக்கு?”
“அங்க உள்ள கொமருகளுக்கு கன்னி கழியவே கழியாதாம் பாத்துக்கோ.”
“நீ பேசிட்டேன்னா.. சும்மா ஒளரப் படாது பாத்துக்க. கன்னி கழியாட்டா பிள்ளேலு எப்பிடிப் பொறக்குமாம்?”
“அதாம் மக்கா ரகசியம். நம்ம ஊரெல்ல கொற்றவை இருக்கால்லா, அவ ஏறிப் போய் நின்ன கோயில் அங்க தான் இருக்காம். அங்க தான் கொற்றவை சாந்தி அடஞ்சாளாம். அங்க மொத்தமே ஒம்போது ஆம்பளயோ தானாம். இன்னும் என்னெல்லாமோ சொன்னானுவோ. அத விடு… அப்பிடி ஒரு கொமரயாக்கும் பூளான் கெட்டி கூட்டிட்டு வந்தது. மூட மூடயா ரூவா நோட்டும், வண்டி வண்டியா சீரும் குடுத்தாக்கும் வெலைக்கு வாங்கிட்டு வந்திருக்கான்.”
“ஓஹோ, எங்கல வச்சிருக்கான் எல்லா பணத்தயும்? சாமி கொண்டாடிக்கு எப்பிடியாக்கும் இவ்ளோ பைசா?”
“அது, எல்லாம் ஊர ஏமாத்துன பைசாதான். செய்வின செஞ்சி எத்தன குடும்பத்த அழிச்சிருக்கான் தெரியுமா?”
“ஆமாமா, நெறைய கேட்டுட்டுண்டும். செரி மேட்டருக்கு வா..”
“ம்ம்.. கூட்டிட்டு வந்த புள்ள கண்ணெடுத்துக் கூட பூளான‌ப் பாக்கலியாம். பூளான மட்டுமில்ல, அவ ஊருல யாரயும் பாத்ததேயில்லயாம். தலயக் குனிஞ்சே தான் வந்திருக்கா, இருந்த அத்தன வருசமும் தலயக் குனிஞ்சேதான் இருந்திருக்கா. ராவு பூரா வெளக்கக் கொழுத்தி வச்சி இருந்து தவம் பண்ணிட்டே இருப்பாளாம் பாத்துக்க. நம்மாளுக்கு சும்மா கெடக்க முடியலல்லா? குறிச்சி வச்ச ஒரு பௌர்ணமி அன்னிக்கி அந்தப் புள்ளயத் தொட்டு இழுத்திருக்கான். அவ்ளோதான் சோலி முடிஞ்சி.. ஹாஹாஹா.”
“என்னல, என்னாச்சாம்?”
“பூளான் அந்தப் புள்ளய தொட்டு கூப்ட்ருக்கான். அவ தலயக் குனிஞ்சிட்டே உறுமிருக்கா. இவனுக்க அரிப்பு அடங்கலல்லா, கையப் புடிச்சி இழுத்திருக்கான். ‘எனக்க அம்மோ, ஏ மாரியம்மா, சொடல, பாவிப் பயல, எனக்க அம்மோ’ன்னு ஒரே சத்தமாம். மத்தத கைல அமுக்கிட்டு அலறியடிச்சிட்டு வெளிய ஓடி வந்திருக்கான் பூளான். வலி தாங்காம தரைல விழுந்து உருண்டிருக்கான். பாத்தவோ மத்தது கரிஞ்சி போச்சின்னு சொல்லுகா. அவ கண்ணாலயே எரிச்சிட்டான்னு பேச்சு.”
“ஓ, இதான் கதயா? அடப் பாவமே. தேனுக்கு ஆசப்பட்டு கரடிக்கக் குண்டியப் போயி தடவிருக்கானே! அய்யோ, அய்யோ! செரி, இப்ப என்னவாம் நெலம? எதுக்கு திடீர்னு ஆம்புலன்சுலாம் வந்து?”
“அது ஒரே கொழப்பம் கேட்டியா? மூணு பொண்டாட்டியும் எப்பிடி மாயமாப் போனாளுவோன்னு ஊர்ல ஒரு பயலுக்கும் செரியா தெரில. பூளான் வேற எவங்கிட்டயும் பேச மாட்டுக்கான். கோயிலுக்கு வந்தமா, பூசய வச்சமான்னு போயிட்ருக்கான். எங்க சாப்பிடுவான்? எங்க போவான் வருவான், ஒன்னும் வெளங்கல. பத்து தலைமொறைக்கு சொத்து வச்சிருக்கானாம். யாருக்கு எழுதி வைக்கப் போறான்னு நாக்கத் தொங்கப் போட்டுட்டும் திரியானுவோ. பிரியாணி என்னா? குவாட்டரு என்னா? எல்லாத்தயும் வாங்கி மாரியம்மன் கோவில் சொவருக்கு வெளிய வச்சிட்டு போறானுவோ, எல்லாம் காலியும் ஆயிருகு. மாயமாத்தான் இருக்கு பாத்துக்க.”
“அதெல்லாம் செரி டே, எதுக்கு ஆம்புலன்சுன்னு கேட்டேன்..”
“அதா.. நான் சொன்னேன்னு யார்ட்டயும் சொல்லிராத மக்கா. பொறவு நம்ம பொழப்பு நாறிரும். பூளான் சாமானம் போனது உண்மதானாம். இப்ப அவனுக்குள்ள இருக்கது பழைய பூளானே இல்லயாம். அந்த ரெண்டாமத்த கொமருதான் அவனுக்க ஒடம்புக்குள்ள வந்து இருக்காம். நீ பாத்திருக்கேல்லா, எப்ப வெளிய வந்தாலும் ஒரு செவப்புச் சீலய மேல போட்டுட்டு தான வரான்? முடியயும் கொண்ட போட்டுட்டு. பூளான் இப்போ ஆம்பள இல்ல மக்கா, பொட்டச்சியாக்கும்.”
“என்ன ல சொல்லுக?”
“ஆமா டே, அன்னிக்கி வயித்தப் புடிச்சிட்டு உருண்டு உருண்டு ஒரே அழுகையாம். நம்ம டீக்கட செல்லப்பண்ணன் இருக்காம்லா, அவன் பொண்டாட்டிதான் ஓடிப் போயி பாத்துருக்கா. வீடு பூரா ஒரே ரத்தமாம் கேட்டியா. என்ன ஆச்சோ என்னவோ, அந்தச் சொடலைக்கு தான் வெளிச்சம். அந்த எடம் முழுக்க ஒரே தீட்டு வாடையாட்டு அடிக்கி மக்கா. ஒரு மாதி கொமட்டிட்டு வருகு. சென மாடுக மட்டும் பூளானுக்க வீட்டச் சுத்திச் சுத்தி வருகாம், ஒன்னும் வெளங்க மாட்டுக்கு.”

எல்லாக் கதைகளும் ஒன்றிலிருந்து ஒன்றென மருவித் தோன்றி பெருகிப் பரவி தேய்ந்தும் போயிருந்த நாளில் ஊர் கூடி கொற்றவைக்கு சாந்தித் திருவிழா நடத்தத் திட்டமிட்டது. சித்திரைப் பௌர்ணமி நள்ளிரவில் சாந்திச் சடங்கு செய்து ஊர் வாழக் கொடை குடுப்பதென முடிவானது. பூளானுக்கு என்ன ஆனது, எங்கிருக்கிறான் என எல்லாமே புதிராக நீடித்தது. பூளானுக்குப் பதிலாக பக்கத்து ஊரிலிருந்து வந்து பூசை சடங்குகளைச் செய்து சுடலையையும் மாரியம்மையையும் அமைதிப் படுத்தி வைத்திருந்தார் இன்னொரு அம்மன் கொண்டாடி. ஊரெல்லைக் கொற்றவைக்கு வழக்கப்படி நாற்பத்தொரு நாள் கடும் விரதமிருந்து பன்னிருவர் பூசை செய்யத் தயாராகியிருந்தனர்.
ஆலடி மைதானத்தில் குழுமியிருந்த மக்கள் முகத்தில் பயம் கலந்த பக்தியும் பரவசமும். கொற்றவை சாந்தி இசை நாடகம். உறுமும் மேளத்தின் ஊடாகவும் சங்கின் நீண்ட ஊளையிலும் மொத்த சனமும் ம்‌ம்‌ம் எனச் சத்தமெழுப்பியபடி ஆடியிருந்தது. செஞ்சிவப்புச் சீலையை விலக்கிக் கிழித்தெறிந்து கருங்கூந்தல் நாற்புறமும் தெறித்துப் பறக்க ஒற்றைக் காலூன்றி ஓங்காரமெடுத்துக் கத்தினாள் கொற்றவை. சுற்றிலுமிருந்த மாடங்கள் மெல்ல நடுங்கிப் பற்றிக்கொண்டன. எங்கும் செந்தழல். வெக்கை. ஓலக் குரல்கள். வீடுகளின் மாடங்களிலிருந்து கட்டியது கட்டியபடி சாடிக் குதித்துக் கொற்றவையின் பின் வந்து நின்று ஓலமிட்டனர் அத்தனைப் பெண்களும். அவர்களின் சுண்டு விரல்களைப் பிடித்தபடி தலைமுடி விரித்து ஆடிப் பழகிக் கொண்டிருந்தனர் சின்னஞ்சிறுமியர். ஒரு ஆணைக் கூட காணமுடியவில்லை. மொத்த மேடையும் ஆல விழுதுகளைப் பற்றியபடி கொடும் நெருப்பின் ஒற்றைத் தழலென ஆடிக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டத்திலிருந்து விம்மல் சத்தம் மெல்ல எழுந்து ஒருவர் ஒருவரெனப் பரவி மொத்தக் கிராமமும் கதறியழத் தொடங்கியது.
ஊரைக் காத்த நான்கு பூதங்களும் திசைக்கொன்றாக செய்வதறியாது திகைத்து நின்றன. ஆதி பூதம் தலையைத் தொங்கப் போட்டபடி மெல்ல நடந்து திசையின் எல்லை நோக்கி வெளியேற, ஆடியிருந்த பெண்கள் மாரில் ஓங்கியடித்து ஆனந்தக் கூச்சலிட்டனர். ஓடி வந்த அரசத் தூதுவர்கள் பாண்டியன் மடிந்து விழுந்ததையும் அவன் தேவி உடன் சென்றதையும் அறிவித்துக் கலங்கி நின்றனர். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அழுது தள்ளாடியபடி வெளியேறியது அரச பூதம். மொத்த மாளிகைகளும் கருகிப் பொடிந்து விழ, காணச் சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டு ஊரை விட்டு வெளியே ஓடியது வணிக பூதம். பெண்கள் கூட்டம் ஆனந்தக் கூத்தாடியது. கொற்றவை அனல் தெறிக்கச் சிவந்து அசைவின்றி நின்று கொண்டிருந்தாள்.
தனித்து விடப்பட்ட வேளாண் பூதம் நிறைநெல் நாழியொன்றைக் கையில் தாங்கி வந்து கொற்றவையின் கால்மாட்டில் வைத்து வணங்கியது. தன் தலையிலும் மார்பிலும் சூட்டியிருந்த பூளைப் பூ மாலைகளைக் கழற்றி கொற்றவையின் கால்மாட்டில் வைத்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கியது. மொத்தப் பெண் கூட்டமும் சட்டெனச் சிலையானது போல் அசைவற்று நிற்க, தன் கண்ணீரால் கொற்றவையின் காலடி நிலத்தை ஈரமாக்கி மெல்ல எழுந்து ஊர் மக்களை நோக்கி நடந்தது வேளாண் பூதம். மக்கள் அனைவரும் கைகூப்பி, ‘அம்மே மன்னிக்கணும். அம்மே மன்னிக்கணும்’ என்று கத்தினர். மேடையிலிருந்து கீழிறங்கி மக்கள் கூட்டத்தின் ஊடே நடந்து வெளியேறியது வேளாண் பூதம். அது எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் குவியல் குவியலாக பூளைப் பூக்கள் சிதறிக் கிடந்தன. மக்கள் கூட்டத்தில் அலறல் சத்தம். ‘எனக்க அம்மோ, ஏ மாரியம்மா, ஏ சொடல, ஏ பாவி….’
சில நிமிடங்கள் ஊரடங்கி இருக்க, வெளியேறிய வேளாண் பூதம் ஒற்றைப் பெருங்குரலெடுத்துக் கத்தியது. ஆல மரத்தின் ஒவ்வொரு விழுதிலும் அக்குரல் எதிரொலித்தது.
“எல்லாவனும் பாருங்கல தொட்டிப் பயக்களா..”
மொத்த சனமும் பதறியபடி எழுந்து சத்தம் வந்த திசை நோக்கி நிற்க, நிமிர்ந்து நின்று மார்பில் ஓங்கி அறைந்தபடி தன் ஆடையை ஒவ்வொன்றாகக் கிழித்தெறிந்தது வேளாண் பூதம். பெண்கள் தலை குனிய, சிறுமியர் தம் கண்களைப் பொத்திக் கொள்ள, ஒவ்வொரு ஆணும் கை நடுங்க நிற்க, முழு நிர்வாணமாய் நின்று தன் குறியைத் தன் கையில் இறுக்கப் பற்றியபடி மீண்டும் கத்தியது, “எல்லாவனும் பாருங்கல தொட்டிப் பயக்களா.”
செம்புழுதி படிந்த விறைத்த உடல். மார்பு வரை நீண்டு தொங்கிய சடை பிடித்த தாடி. தலைப்பாகை நீங்கிய வழுக்கைத் தலை. ஒற்றைக் குங்குமப் பொட்டு.
கூட்டத்திலிருந்து, ‘பூளான், பூளான்’ என மெல்லிய சத்தங்கள் கேட்க, சத்தமாகச் சிரித்தபடி அப்படியே குத்தவைத்து உட்கார்ந்தது வேளாண் பூதம். அதன் கால் நடுவே சொட்டத் தொடங்கிய ஈரம் மெல்லப் பரவி பெரும் வேகமெடுத்து முன் சென்று மொத்த சனத்தையும் சுற்றி வளைத்தது. ஒரு சிறு அனக்கமுமின்றி எல்லோரும் தலை குனிந்து நிற்க, பரவிய ஈரம் நேராகச் சென்று கொற்றவையின் காலடியை அடைந்தது. கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு, அழுகை, ஆரவாரம். அவ்விடமெங்கும் தாங்க முடியா மூத்திர வாடை.
“பூளானக் காணல, பூளானக் காணல, மாயமா மறஞ்சிட்டான், பூளான் மாயமா மறஞ்சிட்டான்,” என்று கூட்டத்தில் சலசலப்பு.
வேளாண் பூதம் குத்தவைத்து இருந்த இடத்தில் மெல்லத் துளிர் விட்டு முளைத்து ஒவ்வொரு நொடியும் மேல் நோக்கி வளர்ந்து கொண்டிருந்தது சிறுபூளைச் செடியொன்று. பல வருடங்களுக்குப் பிறகு மூத்திர வாடையடிக்கும் அந்தப் பூளைப் புதர்க்காட்டின் நடுவே துருத்திக்கொண்டு வெளிவந்த மரப்பெட்டியில் பல சொத்துப் பத்திரங்கள் இருந்தன. பன்னெண்டு வீடுகளும் ஒரு தென்னந்தோப்பும் ஊரெல்லைக் கொற்றவைக் கோவில் பெயரில் மாற்றி எழுதப்பட்டிருந்தன.

***

-சுஷில் குமார்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *