மனித மற்றும் விலங்கு வடிவிலான புத்தரின் முற்பிறவிகளைப் பற்றிக் கூறும் 547 கதைகளே பௌத்த ஜாதகக் கதைகள் என தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகள் Pansiyapanas Jatakapothvahanse என பாலி மொழியில் பனையோலைச் சுவடிகளில் கையெழுத்துப்பிரதிகளாக எழுதப்பட்டு, பின்னர் சிங்கள மொழியில் பாதுகாக்கப்பட்டன. ஜாதகக்கதைகளின் பாலி மூலநூலான Jatakapali இன் விரிவாக்கப்பட்ட வடிவமான Jatakatthakata எனும் நூலே ஜாதகக் கதைகளின் மூலநூலாக இன்று வரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள், வர்த்தகர்கள், வேட்டைக்காரர்கள், முனிவர்கள் போன்ற மனிதர்களும், அதேபோன்று மனிதர்களின் மொழியில் பேசிய சிங்கம், மான், நரி, முயல் போன்ற விலங்குகளுமே ஜாதகக்கதைகளின் கதாபாத்திரங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒருவர் ஜாதகக்கதைகளைப் படிக்கும் போது தன்னையே அதில் ஒரு கதாபாத்திரமாக உணர்ந்துகொள்ள முடியும். பொதுவாக இந்தக் கதாபாத்திரங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு நெருக்கடியில் சிக்கி துயருரும் கதாபாத்திரங்களாகவும், புத்தர் எனும் பாத்திரம் அதில் தலையிட்டு அந்த சிக்கல் அனைத்தையும் தீர்த்து அவர்களது வாழ்வை மகிழ்ச்சிப்படுத்துவதாகவும் கதை அமைந்துள்ளது.

ஜாதகக் கதைகள் மனித வாழ்வின் பல்வேறு தருணங்களைப் பற்றி பேசுகின்றன. அது பற்றிய தத்துவங்களை முன்வைக்கின்றன. ஒரு கதையினூடாக வாழ்வின் அர்த்தத்தை தெளிவுபடுத்த முனைகின்றன. இறப்பு, வறுமை, துறவு, உபதேசம், நன்றியறிதல், பிக்குகளின் வாழ்க்கை முறை, சீடர்களின் தன்மை என ஜாதகக்கதைகள் பல்வேறு விசயங்கள் மீது கவனம் செலுத்துகின்றன. ஜாதகக் கதைகளின் களஞ்சியமாக கிராம விகாரைகளே விளங்கின. அப்போது விகாரைகளுக்கும் கிராமத்துக்குமிடையில் மிக நெருக்கமான உறவு நிலவியது.

ஜாதகக்கதைகளை கேட்பதன் மூலம் எண்ணற்ற பிறவிகளில் புத்தர் பின்பற்றிய ஒழுக்கப்பாதையை ஒருவர் பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து கொள்வார்.பௌத்தம் இந்த குணாதிசியங்களை பரமிதா அல்லதுநிறைநலனான குணாதிசயமாக அடையாளப்படுத்துகிறது. இதுதாராள மனப்பான்மை, ஒழுக்கம், நீதி, ஞானம், விடாமுயற்சி, பொறுமை, உண்மை, இரக்கம் மற்றும் சுய-கட்டுப்பாடுஆகியவற்றின் மூலம் தனிநபரின் மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது.

இதன்படி பார்த்தால், கடந்தகாலத்தில் ஜாதகக் கதைகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருந்த ஒரு நியாயமானதும் திருப்தியானதுமான சமூகத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன என்று உறுதியாகச் சொல்ல முடியும். தொழில்நுட்ப எழுச்சியினால் இன்றைய உலகம் வேகமாக நகர்ந்து, தனிநபர், குடும்பம், சமூகம் என எல்லாத்தளங்களிலும் பெறுமான வீழ்ச்சி சார்ந்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. குடும்பங்கள் சிதைகின்றன. இளைஞர்கள் சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்து விலகிச் செல்கின்றனர். தனிநபர்கள் குழப்பத்திலிருக்கிறார்கள். சமூகச் சங்கிலியிலுள்ள இணைப்புகள் துண்டாடப்படுகின்றன. இது சரிசெய்யப்படவேண்டும். கடந்த காலத்தின் நெறிமுறைகளை மீண்டும்கொண்டு வர வேண்டும், அதை வெவ்வேறு கோணங்களில்கையாள வேண்டும் என கலாநிதிகளான P.G. புஞ்சிஹேவா, மல்லிகா கருணாரத்ன போன்றவர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பௌத்த ஜாதகக் கதைகளை சமகால வாசிப்புக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்து சுருக்க வடிவில் Jathaka Stories Retold எனத் தனி நூலாக வெளிக்கொணர்ந்துள்ளனர். இன்றும் ஜாதகக் கதைகள் சிங்கள சமூகத்தில் பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு வடிவங்களில் வாசிப்புச் செய்யப்படுவதையே இது போன்ற முயற்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. ஜாதகக் கதைகள் மனித வாழ்வுக்கான அறத்தை வெவ்வேறு விதங்களில் முன்வைக்கும் கதைகள் என்ற வகையில் இந்தக் காலகட்டத்திலும் இலக்கிய வகைமையாக அது தன் பங்களிப்பைச் செலுத்த முடியும்.

02

ஜாதகக் கதைகள் பௌத்த கலாச்சாரத்தின் மிக முக்கியமானஅம்சமாகும், இது பௌத்த சிந்தனையின் அடிப்படைக்கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட சிந்தனை மற்றும்நடத்தையின் ஒரு வழியாகும். பண்டைய இந்தியாவில்மட்டுமல்லாமல், பண்டைய உலகின் பல பகுதிகளிலும்காணப்படும் ஒரு பழைய பாரம்பரியத்தைப் பின்பற்றி, ஜாதகர்கள் ஆழமான நெறிமுறை நுண்ணறிவுகளைவெளிப்படுத்தும் கதைகளை நமக்குக் கொண்டு வருகிறார்கள், அதே நேரத்தில் பொழுதுபோக்கையும் மகிழ்ச்சியையும் கூட இந்தக் கதைகளின்வழியே நமக்குத் தருகிறார்கள்.

நவீனத்திற்கு முந்தைய தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியபௌத்த சங்கங்களில், மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ளமடாலயத்தில் ஒன்றுகூடி, ஒரு பௌத்த துறவியோ அல்லதுஒரு பெரியவரோ தனக்கென ஒரு தனித்துவமான பாணியில், மகிழ்ச்சி, கேளிக்கை போன்ற அனைத்து வகையானஉணர்ச்சிகளையும் அனுபவித்து, இந்த வகைஇலக்கியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கதைகளைவாசிப்பதைக் கேட்பார்கள். கதைகளில் இழையும் ஆச்சரியம், பரிதாபம், துக்கம், இரக்கம், கோபம், சீற்றம் மற்றும் விரக்திபோன்ற உணர்ச்சிகளைக் கூட இறுதியாக மகிழ்வித்து, செழுமைப்படுத்தி, மேன்மைப்படுத்திவிடும் நுட்பம் ஜாதகக் கதைகளுக்குள்ளும், அதைச் சொல்பவர்களிடமும் காணப்பட்டது.

மனித வாழ்க்கைக்கான அறம், ஒழுக்கம் சார்ந்த நெறிமுறை இலக்கியம் என்ற ஒரு தளத்திலிருந்து இன்னொரு முக்கியத்துவமும் ஜாதகக் கதைகளுக்கிருந்தன. உரைநடை, வசன எத்தாளர்களுக்கும் கலைஞர்கள், நாட்டாரியல் கவிஞர்கள் போன்றோருக்கும் ஜாதகக் கதைகள் கதைப்பொருள் சார்ந்து உத்வேகமாக அமைந்தன. இதனால் பண்டைய இந்திய கதைகளிலும், பண்டைய சிங்கள இலக்கியங்களிலும் ஜாதகக் கதைகளில் காணப்பட்ட கதைகூறல் மரபும், நுண்மையான சித்திரிப்புகளும் பெரும் தாக்கத்தைச் செலுத்தின. பொதுஜனங்களின் எதிர்பார்ப்புகள், சிந்தனைகள், வாழ்க்கை முறைகள், பற்றிய மெய்மையோடு இக்கதைகள் தொடர்புபடுவதால் சிங்கள பௌத்த சமூகத்தில் ஜாதகக் கதைகள் மிகப் பரந்தளவில் வியாபகம் கொண்டன. அடிப்படை அறமும், சமூக பெறுமானங்கள் மீது அக்கறையும் கொண்ட சமூகமாக அது இருந்தது. பின்னாட்களில் குறுகிய நோக்கங்கொண்ட அரசியல்வாதிகளின் சுயநல அரசியல் சித்தாந்தங்களால் அந்த சமூக மனப்பாங்கு திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டது.

பண்டைய பௌத்த சமூகங்களில் சாதாரண பௌத்தகலாச்சாரத்திற்கான அடிப்படையை ஜாதகக் கதைகள்வழங்கின. இந்த கதைகளில் காணப்படும் கதாபாத்திரங்கள்இரண்டு வகையானதாக இருந்தன. ஒன்று தவிர்க்கப்படவேண்டிய எடுத்துக்காட்டுகளாகவும், இரண்டு அந்த மக்களால்பின்பற்றப்பட வேண்டிய மாதிரிகளாகவும் அமைந்திருந்த.

சிங்கள பௌத்த கலாசாரத்தில் மாபெரும் ஆளுமையானமார்ட்டின் விக்கிரமிசிங்க தனது Jatakakata Vimasuma என்கிற நூலில், வீடற்றதுறவற சமூகத்தினரிடமிருந்து, சமயப் பயிற்சி இல்லாத மக்கள் அல்லது இல்லற வாழ்வில் ஈடுபடுபவர்கள்பின்பற்ற வேண்டிய பாதையை ஜாதகக் கதைகள்எடுத்துக்காட்டுகின்றன என்று கூறும் அளவிற்கு சென்றார். உலக ஈடுபாடுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றொருஎதிர்பார்ப்பும் ஜாதகக் கதைகளில் காணப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் ஜாதகக் கதைகள் உலக வாழ்க்கையைத் துறந்த நிலையை முழுமையாகச் சொல்லவில்லை. நீதியற்ற லௌஹீகப் பேரின்ப வாழ்க்கையைத்தான் அந்தக் கதைகள் எதிர்த்துப் பேசுகின்றன என்ற உண்மை புரிந்துகொள்ளப்பட வேண்டும்.  

ஜாதகக் கதைகள் இரண்டாயிரமாண்டுகளுக்கும் மேலாகசாதாரண பௌத்தரின் உலகக் கண்ணோட்டத்தையும்,நடத்தையையும் வடிவமைப்பதில் பெரும் செல்வாக்குசெலுத்தியுள்ளதாக கலாநிதி அசங்க திலகரத்ன சொல்வார்.அதேநேரம், ஜாதகக் கதைகள் பாமர மக்களுக்கு மட்டுமல்ல, துறவற சமூகத்தின் உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும்பொருந்தக்கூடிய பௌத்த உலகக் கண்ணோட்டத்தின் சிலமுக்கிய அம்சங்களை வெளிப்படுத்துவதையும் ஜாதகக் கதைகளை கூர்ந்து நோக்கும் போது அறிந்து கொள்ளமுடியும்.

பௌத்த உலகக் கண்ணோட்டத்தின்படி, அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு முக்கிய அம்சம் ஒன்று உண்டு, அதாவது நாம் எல்லோரும் சாதாரணமாக ஒன்றோடொன்றுஇணைக்கப்பட்ட பிரபஞ்சத்தில் வாழ்கிறோம், நமது வாழ்வோடு தொடர்புபட்ட விசயங்கள் அதற்கு வெளியே வேறெங்கும் தோன்றாது. இதன்படி, நமது வாழ்வில் முன்புநடந்தவையும், கடந்த காலத்தில் நடந்தவையும் இணையாக உள்ளன. மனித வழ்வு குறித்த இந்த சூத்திரத்தை ஒரு ஜாதகக் கதையில் நிகழ்காலக் கதை எவ்வாறு கடந்த கதையுடன்இணைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்குவதன் மூலம் தெளிவாக்குகிறது.

பொதுவாக இந்தக் கதைகளின் கதைசொல்லியான புத்தர், நிகழ்காலத்தில் நடக்கும் சில நிகழ்வுகளுக்குப் பதிலளிக்கும்வகையில் அந்த சம்பவத்துக்குப் பொருத்தமான கடந்தகாலக்கதையைக் கொண்டு வருவார். உதாரணமாக, யாரேனும்ஒருவர் ஏதேனுமொரு நல்ல அல்லது தீய காரியத்தைச்செய்யும் போது, புத்தர் கடந்த காலத்திலிருந்து ஒருகதையைக் கொண்டு வருவார், அந்த கதையில் வரும் சம்பவம் அல்லது நடத்தை தற்போது சம்பந்தப்பட்ட அதே நபர்களால்இதற்கு முன்பும் செய்யப்பட்டதாக இருக்கும்.

முன்பு நடந்த விஷயங்களை அல்லது முன்பு தொடர்புபடாத விஷயங்களை அறிந்துகொள்வதன் முக்கியத்துவம் என்ன?இந்த புரிதலில் பல நேர்மறையான கூறுகள் உள்ளன.முதலாவதாக, முன்பு நடந்த விஷயங்கள் பற்றிய அறிவு, விஷயங்களை சரியான கண்ணோட்டத்திலும், அதிகபுரிதலுடனும், அதிக பரிவிரக்கத்துடனும் பார்க்கஅனுமதிக்கிறது. அத்தகைய புரிதலுக்குள், திடமான பிளவுகள்இடம் பெறவதில்லை. அத்தோடு கருத்தாவுக்கும் (subject) கருமத்துக்கும் (object) இடையே இருப்பதாக கருதப்படும்கூர்மையான பிரிவும் மறைந்துவிடும், இதன் மூலம்யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கான வழி தோன்றும்.

மேலும், இந்தவகைப் புரிதல், உலகில் நாம் அனுபவிக்கும்விஷயங்கள் முற்றிலும் புதியவை அல்ல, அவைபழங்காலத்திலிருந்தே இருந்து வருகின்றன என்பதை முதன்மைப்படுத்திக் காட்டுவதாக இருக்கிறது. ஆக, இந்தப் புரிதல் நேரம் மற்றும் வெளியின் (space) மிகப் பெரியகண்ணோட்டத்தில் விஷயங்களைப் பார்க்க அனுமதிக்கிறது.அதேநேரம், இந்தப் புரிதல், ஒரு நல்ல அல்லது ஒரு கெட்டநடத்தையானது உடனடியாகவோ அல்லது தாமதமாகவோதொடர்புடைய முடிவுகளை உருவாக்குகிறது என்ற ஒரு விசயத்தையும் அழுத்திச் சொல்வதாக இருக்கிறது.

புத்தரின் போதனையில், கர்மாவும் அதன் விளைவும் இயற்கைச்செயன்முறையின் விளைவாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதுகம்மநியாமா என்று அழைக்கப்படுகிறது. இது சம்பந்தப்பட்டசெயல்களின் தன்மையால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. இதனைச் செயல்படுத்த எந்த முகவரும் தேவையில்லை.த்தகைய ஊடாட்டம் கொண்ட யதார்த்தத்தின் நீண்டகாலஇருப்பில் (பொதுவாக சம்சாரா என்று அழைக்கப்படுகிறது)நல்ல கர்மாக்கள் நல்ல பலன்களையும், கெட்ட கர்மாக்கள்மோசமான விளைவுகளையும் ஒரு கட்டத்தில்உருவாக்குகின்றன. இந்த செயல்பாட்டில் கெட்டது வெல்வதுபோல் தோன்றினால் அது தற்காலிகமானது மட்டுமே.இந்தப்புரிதல் நாம் ஒரு தார்மீக பிரபஞ்சத்தில் வாழ்கிறோம்அல்லது தார்மீகக் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுவதும், கட்டுப்படுத்தப்படுவதுமான ஒரு பிரபஞ்சத்தில் வாழ்கிறோம்என்பதை மேலும் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.ஒருவகையில் பார்த்தால் அந்தப் பிரபஞ்சம் நமக்குள்ளேயே இருப்பது போன்றும் தோன்றுகிறது.

பௌத்தத்தைப் பொறுத்தவரை, கர்மா, அத்தகைய ஒரு தார்மீக ஒழுக்கக் கொள்கையே. வேறு சில மதங்கள் ஒருதெய்வீக உயிரினத்தை, சர்வ வல்லமை படைத்த கடவுளை சரி, தவறுகளின் தீர்ப்பாளராக முன்வைக்கின்றன. ஆனால்,பௌத்த ஜாதகக் கதைகள் அதன் இறுதி அர்த்தத்தில் நீதியைவழங்குவதற்கு காரணமானதாக பிரபஞ்சம் தழுவிய ஓர்இயற்கைக் கொள்கையையே முன்வைக்கிறது.

இந்தவகையில் பார்த்தால், ஜாதகக் கதைகளில் உள்ளதத்துவம், உலகளாவியதாகும். வெறுமனே அது பாமரமக்களுக்கு மட்டும் உரியதல்ல. ஜாதகக்கதைகள் கதைகளாக வெளிப்படும் அதே சமயம், வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறுபார்வையாளர்களை திருப்திப்படுத்தக்கூடியகுணாதிசயங்களையும் கொண்டுள்ளன. இறுதியில், கதைகளின் வாசகர்களிடம் அல்லது கேட்பவர்களிடம்அவர்களை அறியாமலேயே அவர்களிடம் அறத்தையும், நுண்ணோக்கையும் உட்புகுத்தி விடுகின்றன.

03

ஜாதகக் கதைகள் அதன் உள்ளடக்கம் சார்ந்து அறம், ஒழுக்கம், நேர்மையாக இருத்தல் போன்ற பண்புகளைப் பேசுகின்றன. கதை என்றளவில் அதற்கான இலக்கியப் பெறுமானம் மற்றும் அதன் பல்வேறு உள்ளார்ந்த கூறுகள் குறித்தும் இன்றைய நவீன, பின்நவீன சமூக அமைப்பில் நாம் கூர்மையான பார்வைகளையும், உரையாடல்களையும் நிகழ்த்த முடியும். பண்டைய இந்தியக்கதைகளில் பௌத்த ஜாதகக் கதைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாட்டுப் புறவியல் (Folklore) தன்மை கொண்டவை. பேராசிரியர் ரைஸ் டேவிட்ஸ் போன்ற சில மேற்கத்தேய ஆய்வாளர்கள் அதனை நாட்டுப் புறக் கதைகளாகவே (Folktales) நோக்கினர். ரைஸ் “பௌத்த ஜாதகக் கதைகளே உலகிலேயே மிகப் பழைமயானநாட்டார் கதைகள்என்கிறார். ஆனால் நவீன சிங்கள இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளரும் பண்பாட்டு அறிவுஜீவியுமான மார்ட்டின் விக்கிரமசிங்க ஜாதகக் கதைகள் நாட்டுப்புறக் கதைகள் அல்ல என வாதிடுகிறார். “ஜாதகக் கதைகளில் நாட்டாரியல் கூறுகள் காணப்படுகிற போதிலும் அவை நாட்டுப்புறவியல் ககைகளல்ல” என உறுதியாக மார்ட்டின் விக்கிரமசிங்க வாதிடுகிறார்.

பொதுவாக ஜாதகக் கதைகளில் இரண்டு வகையான கதைகூறல் மரபு உள்ளதைக் காணலாம். ஒன்று அறிமுகக் கதை கூறல் (Introductory narrative). இதனை “நிகழ்காலக் கதை” (The present story) எனவும் அழைக்க முடியும். இந்தவகைக் கதைகள் சுருக்கமாகவே கூறப்பட்டிருக்கின்றன. மிக அபூர்வமாகவே விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த அறிமுகக் கதைகள் எனும் வகுதிக்குள் வரும் கதைகளை நாட்டுப்புறக் கதைகள் எனக்கொள்ள முடியாது. காரணம் அவற்றுள் பெரும்பாலான கதைகள் ஆண்கள், பெண்கள், பணியாளர்கள், பிக்குகள், பிராமணர்கள் சிலவேளைகளில் புத்தரினதும் சொந்த வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களைப் பற்றிய கதைகளாக உள்ளன. அவை அதிகமான அழகியல் கூறுகளின்றி எழுதப்பட்ட கதைகளாகும். யதார்த்தச் சித்திரிப்பு, சுருக்கமாக முன்வைத்தல், உணர்ச்சி வெளிப்பாடு, மனிதப் பண்புகளை வெளிப்படுத்தல் போன்றவற்றில் நவீன சிறுகதைப் பண்புகளை அவை ஒத்திருக்கின்றன.  

உண்மையான நாட்டுப்புறக் கதைகளிலிருந்தும், மிகவும்வளர்ந்த நவீன சிறுகதை வடிவத்திலிருந்தும் பெரும்பாலான ஜாதகக் கதைகள் வேறுபடுகின்றன என்பதை நாட்டுப்புற நாவல்கள் (folk-novel) எனும் பதத்தின் மூலம் பொருள் கொள்ளப்படும் நாவல்களின் பண்புகளை பரிசீலனை செய்வதன் மூலம் அறிய முடியும். உதாரணமாக, அரேபியஇரவுகள், அதிலுள்ள கதைகளை ஒரு நூலைப்போல ஒரேதொகுப்பாக இணைக்கும் ஓர் உள்ளார்ந்த பிணைப்பு அந்தக் கதைகளுக்குள் உள்ளது. ஜாதகக் கதைகளிலும் புத்தரின் உண்மையான பிறப்புக் கதைகளோடு அறிமுகக் கதைகள் தொடர்புபடுத்தப்படுகின்றன. இந்த உள்ளார்ந்த பிணைப்பே ஜாதகக் கதைகளுக்கு நாட்டுப் புறத் தன்மையை வழங்குகிறது.

புத்தரின் பிறப்பு பற்றிய ஜாதகக் கதைகள் உண்மையான நாட்டுப்புறக் கதைத் தன்மையும், கட்டுக்கதை விலங்குகளும் மீள மீள கதாபாத்திரங்களாக உருவாக்கப்பட்டு, வாழ்வு பற்றிய புத்தமத நோக்கை வலியுறுத்தும் வகையில்அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய சில கதைகள் பௌத்த எழுத்தாளர்களால் அங்கதச்சுவை கையாளப்பட்டு எழுதப்பட்டுள்ளன. சில கதைகள், ஆண்களும் பெண்களும்அனுபவிக்கும் நிஜ வாழ்க்கையின் நிகழ்வுகளைஅடிப்படையாகக் கொண்டவை என்று நான் நம்புகிறேன் என மார்ட்டின் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.

எனவே, கலை வடிவம் சார்ந்து நவீன கதையிலிருந்து ஜாதகக் கதைகள் வேறுபட்டாலும், அவற்றின் உண்மையானஅடிப்படைப் பேசுபொருள் மனித வாழ்வின் சாரம்தான். ஆனால் ஜாதகக் கதைகளின் அடிப்படைப் பேசுபொருளின்தேர்வும், கையாளும் முறையும் அவற்றைக் கையாண்டஎழுத்தாளர்களின் நேர்மையையும் வாழ்க்கை அனுபவத்தையும்காட்டுகிறது. பிரபலமான ரொமாண்டிசக் கதைகளை உருவாக்க ஒன்றிணைகின்ற வாழ்வின் அற்ப விசயங்கள், புத்தாக்கங்கள், அவற்றின் உணர்வுபூர்வமான மிகைப்படுத்தல்சித்தரிப்புகள் போன்றனவும் மிக அரிதான வகையில் ஜாதகக் கதைகளில் காணப்படுகின்றன. எனினும் இந்த மிகப்படுத்தல்கள் பாலுணர்ச்சி சார்ந்தது அல்ல.  இந்த மிகையான சித்தரிப்புகள் சில நேரங்களில் மனிதஉணர்வுகளின் பேரழிவு அம்சத்தையும் எப்போதாவது ஆழ்மனதின் செயல்பாட்டையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன.

ஜாதகக் கதைகள் அனைத்தும் வெறும் நாட்டுப்புறக் கதைகள்அல்ல என்பதை மார்ட்டின் விக்கிரமசிங்க பல்வேறு வழிகளில் மேலும் நிறுவ முயன்றார். மூன்று பௌத்த கதைகளைமேலோட்டமாக ஒப்பீட்டு விளக்கமளிப்பதன் மூலமும் அதனைச் சாதிக்க முயன்றார். அவர் ஒப்பீடு செய்வதற்குத் தேர்வு செய்த மூன்று கதைகளில் ஒன்று ட்டாசாரக் கதை (Story of Patachara), மற்றொன்று குண்டலகேசியின் கதை, மூன்றாவதுசூலாசெட்டி கதை (Chulla-Setthi). இதில் இரண்டு கதைகள் முறையாக ஜாதகக் கதைகள் புத்தரால் கூறப்படுவதற்கு முன்னர் அறிமுகக் கதைகளாக அல்லது “நிகழ்காலக் கதைகளாக” கூறப்பட்டுள்ளன. இம்மூன்று கதைகளும்உருவான சம்பவங்கள் ஒன்றுதான். ஆனால்கதாபாத்திரங்களும் அவற்றினால் குறித்துக்காட்டப்படும்வாழ்க்கைப் பார்வையும், (அவை வெறும் கதைகளாகக்கருதப்பட்டாலும் கூட), ஒன்றுக்கொன்று முற்றிலும்வேறுபட்டவையாகும். மூன்று கதைகளினதும் கதாநாயகிகள்செல்வத்திலும் ஆடம்பரத்திலும் வளர்க்கப்பட்ட பணக்காரவணிகர்களின் மகள்கள்.

முதல் கதையில் வரும் பட்டாசாரா என்ற பெண் அடிமைஒருவனை காதலித்து அவனுடன் ஓடிப்போகிறாள்.இரண்டாவது கதையில் வரும் பெண் தன் பெற்றோரை மீறி, தூக்கிலிடுபவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட ஒருகொள்ளைக்காரனை காதலிக்கிறாள். மூன்றாவது கதையில்வரும் பெண்ணும் அடிமை ஒருவனை காதலித்து அவனுடன்ஓடிப்போகிறாள்.

முதலாவது கதையானது, விதியின் செயல்பாட்டின்விளைவுகளால் உருவான சூழ்நிலைகளின் காதல் கதையாகும்.மற்ற இரண்டும் மனித குணத்தின் சில அம்சங்களைஅடிப்படையாகக் கொண்ட கதைகள், பொதுவாக இக்கதைகளின் போக்கு ஒரு நவீன நாவலுக்கான தன்மையோடு இருக்கிறது. இந்த மூன்று கதைகளுக்கு அப்பாலும் இன்னும் சில ஜாதகக் கதைகள் நவீன கதைத் தன்மையை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம்.

இந்த இருமுனை விவாதங்களையும் கடந்து யோசிக்கும் போது, ஜாதகக் கதைகள் அவற்றின் உள்ளடக்கம், வடிவம், கதைகூறல் மரபு சார்ந்து நாட்டுப்புறக்கதைத் தன்மையோடும், நவீன கதைத் தன்மையோடும் தனித்துத்துலங்கும் பண்டைய இந்தியக் கதைகளாக பார்க்க முடியும். எல்லாவற்றுக்குமப்பால் அவை இன்றளவிலும் மனித குலத்தின் செயல்பாடுகளை சமூக அறத்தின் பால், நேர்மையின் பால் வழிப்படுத்துபவையாகவும் இருக்கின்றன. தவிர, எப்பொழுதும் மனித வாழ்வுக்குத் தேவையான நேர்மையை, பண்பியலை மிகச் சுருக்கமாகவும், அடர்த்தியாகவும் பேசுவதனால் என்றென்றைக்குமான முக்கியத்துவத்தினையும் பெற்றுவிடுகிறது.

***

-ஜிஃப்ரி ஹாசன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *