நூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் வரைபடத்தின் ஒவ்வொரு பகுதியையும்
ஒரு மகத்தான பீட்சாவைப் பகிர்ந்து கொள்வதுபோலப் பலம்வாய்ந்த ஐரோப்பிய நாடுகளான
பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் பகிர்ந்து கொண்டன. கென்யா என்ற பிரமாண்டமான, இயற்கை
வளங்களினால் ஆடம்பரமான நாடு பிரிட்டனின் கைகளில் அகப்பட்டது.
ஆப்பிரிகாக்காவில் கென்யா என்கின்ற ஒரு நாடு வரைபடத்தில் இருப்பதை உலகுக்கே
வெளிச்சம்போட்டு அறிவித்தது பிரிட்டனோ, காலனிய சக்திகளோ அல்ல. ஒரு பெண். தன்னில்
அவ்வளவு உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த ஒரு மனுஷி. இயற்கையையும் மக்களையும்
தனதிரு கண்களாக நேசித்த வங்காரி மாத்தாய் வழியாகத்தான் உலகு கென்யாவைத் திரும்பிப்
பார்த்தது. ஒடுக்குமுறைக்குள்ளாகியிருந்த ஒரு நாட்டில் கல்விப் புலமோ வேறெந்த
செல்வாக்குகளோ இல்லாத சிறு கிராமத்தில் பிறந்து தனது திறமையினாலும் சரியான
சந்தர்ப்பங்களில் துணிவாக தான் மேற்கொண்ட தீர்மானங்கள் முடிவுகளினாலும் மட்டுமே
தன்னை உயர்த்திக் கொண்ட பெண் வங்காரி.
கிரீன் பெல்ட் இயக்கத்தின் நிறுவனராக வெறுமனே மரக்கன்றுகள் வளர்த்துக் கொண்டிருந்த
வங்காரி மாத்தாயை நோபல் பரிசு மேடை வரையும் அழைத்துச் சென்ற அந்தப் பயணம்
மரங்களைப் போல் பசுமையானதாக இருக்கவில்லை. நீண்ட கடுமையான போராட்டத்திற்குக்
கிடைத்த ஆகச் சிறந்த பரிசும் அங்கீகாரமுமே 2004 ஆம் வருடம் வங்காரி மாத்தாய்க்குக் கிடைத்த
நோபல் பரிசு.
மக்களாட்சி, மனித உரிமைகள், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான தனது
போராட்டங்களால் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டவர், பேராசிரியர் வங்காரி. பல
அமைப்புகளின் குழுவில் பணியாற்றினார். ஐ.நா.சபையில் பல சந்தர்ப்பங்களில்
உரையாற்றியவர். பூமி உச்சிமாநாட்டின் (Earth Summit) ஐந்தாண்டு மதிப்பாய்வின் போது
பொதுச் சபையின் சிறப்பு அமர்வுகளில் பெண்கள் சார்பாகப் பேசினார். உலகளாவிய ஆளுகை
ஆணையத்திலும் (Commission for Global Governance) எதிர்கால ஆணையத்திலும் (Commission
on the Future) பணியாற்றினார். அவருக்குக் கிடைத்த பட்டங்கள், கௌரவங்கள்
எண்ணிலடங்காதவை.

 

ஒரு சாதாரண பெண் எப்படி இவ்வளவு பெரிய செல்வாக்குமிக்க இடங்களைப் பிடித்தார்? இந்தப்
பெண்ணினால் கென்யாவில் ஆட்சிகள் மாறின. அதிகார வர்க்கம் பயந்து நடுங்கியது. அரசியல்
மேடைகளில் இவரே பேசுபொருளாக இருந்தார். அடங்காதவள், திமிர்பிடித்தவள், பைத்தியக்காரி
என்றே இவரை மேடைகளில் அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் கூவியது. அன்றைய
ஊடகங்கள் இந்தப் பட்டப் பெயர்களைக் கொண்டு தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.
உலக வரைபடத்தை கடல்களும், மலைகளும் எல்லைகளும் பிரித்துக் கொண்டிருந்தாலும்
பெண்களின் சவால்களை எதனாலும் பிரித்துக்காட்ட முடியாது. உலகெங்கிலும் வாழும் பெண்கள்  அடக்குமுறைகளையும், அவமானங்களையும் எதிர்கொண்டு தாண்டியே தங்களை
நிரூபிக்கிறார்கள்.
சுற்றுப்புறச் சூழல் நடவடிக்கைகளில் ஆர்வம் உண்டான போது எனது சுய தேடல்களினால்
அறியப்பட்டவர் தான் வங்காரி மாத்தாய். ஆத்மாவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு தோழியைப்
போல கென்யாவில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புகுந்து இந்தப் பெண் அவர்களை
வழிநடத்தினாரா என்று ஆச்சரியப்படாதிருக்க முடியாது. வங்காரி மாத்தாயின் நேர்காணல்கள்
அவர் எழுதிய புத்தகங்கள் என்று தேடித் தேடி உள்ளும் புறமுமாக அறிய முற்படுகின்ற யாரும்,
இவர் தான் இந்த நூற்றாண்டின் அதி சிறந்த பெண் என்ற முடிவுக்கு சிறு சஞ்சலமும் இல்லாமல்
வந்துவிடமுடியும்.
தாய்ப்பாலைச் சுவைப்பதற்கு முன்னதாக பூமியின் கனிகளிலிருந்து பானங்களை ருசித்தவர்
வங்காரி. கென்யாவின் நெய்ரி என்ற சிறு கிராமமொன்றில் ஏப்ரல் 1, 1940 இல் ஒரு குழந்தை
பிறந்தது. குழந்தைக்குப் பிறந்தவுடன் மூன்று பெண்கள் பரிசுகளுடன் வந்தார்கள். ஒருவர் இனிப்பு உருளைக்கிழங்கை சுமந்து கொண்டிருந்தார். இரண்டாவது பெண் கரும்பைப் பரிசாகக்
கொண்டுவந்திருந்தார். மூன்றாவது பெண் இனிப்பு சோளத்தை கொண்டு வந்தார். புதிய தாய்
இவையெல்லாவற்றிலிருந்தும் சாறு எடுத்து புதிதாகப் பிறந்த குழந்தையின் வாயில் சொட்டினார்.
இயற்கைத் தாயின் பானங்களை முதன் முதலாக ருசித்த அந்தக் குழந்தைக்கு ஆப்பிரிக்க
தெய்வத்தின் வங்காரி என்ற பெயர் சூட்டினார்கள் பெற்றோர்.

பள்ளிகள் இல்லாத கிராமத்திலிருக்கும் பிள்ளைகளையும் மனைவியையும் வங்காரியின்
தகப்பனார் வேறு ஊருக்கு அனுப்பிவைக்கிறார். அப்போதைய வழக்கத்தின்படி அவரது நோக்கம்
மகன்களை மட்டும் பள்ளிக்கு அனுப்புவதே. அவர்கள் தனது புதிய கிராமத்திற்கு வந்ததும் வங்காரி அகன்ற கண்களை வெறித்துப் பார்த்தாள்.கிராமத்தை சுற்றிலும் அவள் பார்த்தவை எல்லாம் மிக அழகான காடுகள். பாட்டி அவளைக் கட்டிப்பிடித்துச் சொன்னாள், ”வங்காரி, வெளியே சென்று மழையில் விளையாடு, நீயும் மரங்களைப் போல உயரமாக வளர்வாய்”.
தனது சகோதரர்கள் பள்ளிக்குச் செல்ல வங்காரி வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டாள்.
வங்காரிக்கு ஏழு வயதுதான் ஆனால் அவள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. விதைகளை நட்டு, தங்கையையும் சகோதரனையும் கவனித்து, துணிகளைக் கழுவி, உணவைச் சமைத்து இவற்றுடன் காட்டிற்குச்சென்று விறகு கொண்டும் வந்தாள். ”ஒருபோதும் அத்திமரத்திலிருந்து விறகு எடுக்கக்கூடாது” என்று உறுதி மொழி பெறும் தாயிடம் அதற்கான காரணத்தை வங்காரி கேட்கிறாள். ஏனெனில் அது கடவுளின் மரம் என்று தாய் பதிலளித்தாள். விறகு எடுப்பதற்காக இல்லை என்றாலும், வங்காரி அடிக்கடி அத்திமரத்தின் அருகே விளையாடினாள். அத்திமரத்தைச் சுற்றிப் புதிய நீர் குமிழ்ந்து, சிறிய தவளைகள் சுற்றிக் கொண்டிருந்தன. வங்காரி காட்டை நேசித்தாள். மரங்களை நேசித்தாள். ஒவ்வொரு கிளைகளையும் இலைகளையும் நேசித்தாள்.மரங்களையும் காட்டிலும் மரங்களிலும் வாழும் பறவைகள் விலங்குகள் பற்றியதுமான வங்காரியின் தேடல் இங்கேயே தொடங்கிவிடுகின்றது.

இந்த நேரத்தில், கென்யா இன்னும் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. பெண்கள் கல்வி கற்பது
வழக்கத்திற்கு மாறாக இருந்த இக்காலத்தில் வங்காரியின் குடும்பத்தினர் அவரைப் பள்ளிக்கு
அனுப்ப முடிவு செய்தனர். ”வங்காரி ஏன் பள்ளிக்குச் செல்வதில்லை” என்று வங்காரியின்
சகோதரன் எழுப்பிய ஒரேயொரு கேள்வியினால் வங்காரியின் வாழ்வில் அந்தத் திருப்பம்
நிகழ்கிறது. 8 வயதாக இருந்தபோது உள்ளூர் ஆரம்ப பள்ளியில் தனது கல்விப் பயணத்தை
வங்காரி தொடங்கினார்.கென்யாவில் புரட்சி தொடங்கியிருந்த காலம். பல்லாண்டுகளாகத் தொடரும் நியாயமற்ற காலனிய ஆட்சியை எதிர்த்து கென்ய மக்கள் இரண்டாம் உலகப் போரில் தைரியமாகப் போராடத் தொடங்கிவிட்டிருந்தார்கள். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்திடம் தங்கள் பண்ணைகளை எல்லாம் இழந்து இறுதி வைக்கோலுக்காகப் போராடிக் கொண்டிருந்த காலத்தில் வங்காரி பள்ளிக்கல்வியை முடித்துவிட்டிருந்தார்.

பள்ளியில் புத்திசாலி மாணவியாகத் திகழ்ந்த வங்காரி, முதல் மதிப்பெண்களைப் பெற்று
தேர்வுகளில் சித்தியடைந்தபோது, அவளொரு ஆசிரியராகவோ, செவிலியராகவோ வரலாம்
என்று ஆலோசனை அளிக்கும் நண்பர்கள் வங்காரியின் பதிலைக் கேட்டுத் திகைத்துப்
போகிறார்கள்.

‘நான் தொடர்ந்து படிப்பேன். இயற்கையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் – காடுகள், விலங்குகள், பறவைகள் அனைத்தைப் பற்றியும்”

”பொறுப்பற்ற விதமாகப் பேசவேண்டாம். நீ ஓர் ஆண் இல்லை” என்ற பதில் வங்காரிக்குக்
கிடைக்கிறது. நாம் காலங்காலமாகக் கேட்டுப் பழகிய அதே பதில். ஒரு பெண்ணுக்கு
பாதுகாப்பான சௌகரியமான தொழில் என்று முடிவு செய்து வைத்திருக்கும் சமூகக் கட்டமைப்பு
ஆப்பிரிக்கா, ஆசியா என்று எல்லாக் கண்டங்களுக்குமான பொதுத்தன்மையுடனே இருக்கின்றது.
கிழக்கு ஆப்பிரிக்க காலனித்துவத்தின் முடிவு நெருங்கியவுடன், டாம் ம்போயா போன்ற கென்ய
அரசியல்வாதிகள் மேற்கத்திய நாடுகளில் மாணவர்களுக்குக் கல்வி கிடைப்பதற்கான
வாய்ப்புகளை உறுதிசெய்யும் வாக்குறுதிகளை முன்வைத்தனர். அப்பொழுது அமெரிக்காவின்
செனட்டராக இருந்தவர் ஜான் எஃப். கென்னடி. இவர், ஜோசப் பி. கென்னடி ஜூனியர்
அறக்கட்டளை (Joseph P. Kennedy Jr. Foundation) மூலம் அத்தகைய திட்டத்திற்கு நிதியளிக்க ஒப்புக் கொண்டார். கென்னடி ஏர்லிஃப்ட் அல்லது ஏர்லிஃப்ட் ஆப்பிரிக்கா (Kennedy Airlift or
Airlift Africa) என்று அறியப்பட்டதைத் தொடங்கினார். செப்டம்பர் 1960 இல் அமெரிக்காவில்
படிப்பதற்காக 300 கென்ய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
ஒரு சிறந்த மாணவிக்குக் கிடைக்கவேண்டிய அங்கீகாரம் வங்காரிக்குக் கிடைத்தது. 1960 இல்
அமெரிக்காவில் கல்லூரிக்குச் செல்லத் தெரிவான 300 கென்ய மாணவர்களில் ஒருவராக
வங்காரியும் உதவித்தொகை பெற்றார். அங்கு அவர் கன்சாஸில், அட்சீசனில் உள்ள மவுண்ட்
செயின்ட் ஸ்கொலஸ்டிகா கல்லூரியில் பயின்று 1964 இல் உயிரியலில் இளங்கலைப் பட்டம்
பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் உயிரியல்
அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அக்காலத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற சிவில்
உரிமைகள், வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கங்களால் உத்வேகம் பெற்று, மாட்டின் லூதர் கிங்
நடத்திய போராட்டங்களால் பெரிதும் ஈர்க்கப்படுகிறார்.

1971 ஆம் ஆண்டில், மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் பி.எச்.டி பெற்ற முதல் பெண்மணி என்ற
பெருமைக்குரியவராகிறார் வங்காரி. அவரது முனைவர் பட்டம் உயிரியல் அறிவியல் துறை
தொடர்புபட்டது. நைரோபி பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியில் சேர்ந்தார்.
அப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் இவர்தான். வங்காரி மாத்தாயின் கல்விப்
பரப்பு விரிவடைய அடைய அவருக்கு கென்ய மக்கள் மீதான நேசமும் அதிகரித்தது. ஆப்பிரிக்க
வீட்டை வலுவாக மனதில் இருத்திக் கொள்கிறார். அவர் எவ்வளவுக்குக் கற்றுக் கொண்டாரோ
அவ்வளவுக்கு கென்யா மக்களைத் தான் நேசிப்பதை உள்ளுணர்ந்தார். கென்ய மக்கள்
மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்ற அவரது விருப்பம் பெருகியது.
படிப்பை முடித்து கென்யாவுக்குத் திரும்பும் வங்காரி கடுமையான ஏமாற்றம் அடைகிறார்.
அவருடைய நாடு முன்பு அவர் பார்த்தது போலில்லை. நாட்டைப் பெரும் முதலாளிகள்
ஆக்கிரமித்துவிட்டிருக்கிறார்கள். காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற மக்களால் இந்த
முதலாளிகளிடமிருந்து விடுதலை பெறமுடியவில்லை. நிலம் முழுவதும் பெரிய பண்ணைகள்
நீண்டுள்ளன. நீர் நிலைகள் எல்லாம் வற்றி வரண்டுவிட்டன. மக்கள் குடிநீர் இன்றித்
தவிக்கிறார்கள். சமைப்பதற்கான அடுப்பை எரிப்பதற்குக்கூட விறகு இல்லை. வங்காரி தனது
பால்யவயதில் விளையாடிய அத்திமரங்களும் காடுகளும் இருந்த இடம் தெரியாமல் வேரோடு
வெட்டப்பட்டுவிட்டது. குழந்தைகளுக்குக்கூட உணவூட்ட முடியாத வறியவர்களாக மக்கள்
மாறிவிட்டிருந்தார்கள்.

வங்காரிக்கு என்ன செய்வது என்று தெரியும். இந்த வறிய சூழ்நிலையைப் போக்கவும்
முதலாளிகளிடமிருந்தும் பண்ணைகளிலிருந்தும் மக்களை விடுவிக்கவும் தனது நாட்டிற்கு மரங்கள் வேண்டும் என்பதை உறுதியாக நம்பினார். இயற்கைக்கும் பெண்ணுக்குமான பிணைப்பில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த வங்காரி தனது எண்ணத்தைச்
செயல்படுத்துவதற்காகப் பெண்களைத் தேர்ந்தெடுக்கிறார். விதைகளிலிருந்து மரங்களை
எவ்வாறு நடவு செய்வது என்று பெண்களுக்குக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். இதற்காக
அவர் கிராமம் கிராமமாகச் சென்று பெண்களைச் சந்தித்தார். இவ்வாறு பெண்கள் கூடி
மரநடுகையில் ஈடுபட்டபோது அவர்களை யாரும் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் மரங்கள் நடுவதை ஆக்கபூர்வமான செயலாக யாரும் கருதவில்லை. மரங்களால் நிலங்களில் உள்ள நீர்
நிலைகள் உயிர்த்தெழும், மழை பொழியும், மக்களின் வறுமை நிலை மாறும் என்றெல்லாம்
யாருமே சிந்திக்கவில்லை. வங்காரியும் அவருடன் இப்பணியில் ஈடுபட்டவர்களும் கேலி
செய்யப்பட்டார்கள். இந்தச் சிறிய தொடக்கம் தான் கிரின் பெல்ட் என்ற பேரியக்கமாக வளர்ச்சி
பெறுகின்றது.

1990 களின் முற்பகுதியில், கிரீன் பெல்ட் இயக்கம் குடிமை சுற்றுச்சூழல் கல்வித் திட்டம் என்ற ஒரு
செயற்பாட்டைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் நோக்கத்தைப் பற்றி தனது நோபல் பரிசு
உரையில் வங்காரி மாத்தாய் இவ்வாறு குறிப்பிட்டார். ”மக்களுக்கு தங்கள் சொந்த
செயற்பாடுகளுக்கும் அவர்களின் சூழலிலும் சமூகத்திலும் அவர்கள் காணும் பிரச்சினைகளுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை ஏற்படுத்த உதவுவதாகும்”.
புதிய கண்ணாடியில் பார்ப்பதுபோல பயம் அல்லது அர்த்தமற்ற தன்மைகளுக்கு அப்பால்
அறிவால் மக்களை எழுந்திருக்கச் செய்யும் காரியத்தை மிகத் துணிவாக வேரிலிருந்து
செயல்படுத்தினார் வங்காரி. முப்பது ஆண்டுகளில் 3 கோடி மரங்கள் எனும் பிரமாண்டமான
இலக்கைத் தன் இயக்கத்தின் குறிக்கோளாக்கிக் கொண்டார். சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் கல்வி சார்ந்த விழிப்புணர்வுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பெண்களுக்கான தேசிய கவுன்சிலிங் தலைவியாக இருந்து தனது கோரிக்கைகளை நாடு முழுவதும் கொண்டு செல்லத்தொடங்கினார். பூவுலகைச் சமநிலைப்படுத்துகின்ற இயற்கையைப் பாதுகாக்கப்பதற்காவும் ஆப்பிரிக்க வன வளத்தைக் காக்கவும் தனது பணிகளை வரையறுத்துக்கொண்ட வங்காரி மாத்தாயினதும் அவரது கிரீன் பெல்ட் இயக்கத்தின் உயர்மட்டப் பிரச்சாரங்களால் கென்யாவின் காடுகளையும்பசுமையான இடங்களையும் காப்பாற்ற முடிந்தது.

1991 ஆம் ஆண்டில், இந்த இயக்கம் நைரோபியின் உகூறு பூங்காவை அழித்து கட்டுமானங்களைக்
கட்டுவதற்கு அப்போதைய ஆளுங்கட்சி முடிவு செய்தது. அபிவிருத்தி என்ற பெயரில்
நடக்கவிருந்த பூவுலகைச் சிதைக்கும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வங்காரி மாத்தாய்
கடுமையாக எதிர்த்தார். மக்களை திரட்டி மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டங்களால்
அரசாங்கம் திட்டத்தைக் கைவிட்டது.வங்காரி மாத்தாயின் இடையறாத வலுவான செயற்பாடுகள் சர்வாதிகார சக்திகளை மகிழ்ச்சிப்படுத்தவில்லை. வங்காரியும் கிரீன் பெல்ட் சகாக்களும் அவர்களின் தைரியத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்கள். மரண அச்சுறுத்தல்கள் உட்பட துன்புறுத்தலுக்கு ஆளானார்கள்.
பல இரவுகளில், வங்காரி மாத்தாய் பாதுகாப்பான வீடுகளில் தங்கவேண்டிய பாதுகாப்பற்ற
நிலைக்குத் தள்ளப்பட்டார். நாடாளுமன்றப் பிரதிநிதிகளாலும் அப்போதைய ஜனாதிபதி
டேனியல் அராப் மோய் ஆகியோராலும் பகிரங்கமாக கேலி செய்யப்பட்டார். ”அவளொரு
பைத்தியக்கார பெண்” என்றும் “விவாகரத்தானவள்” என்றும் வங்காரியை அழைத்தார்கள்.
ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட குண்டர்களும் அரசாங்கப்பாதுகாப்புப் படையினரும் மாதாயின் வாழ்க்கையைப் பற்றிப் பேசி அடித்துக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு.

வங்காரி மாத்தாயும் அவரது கணவர் மவாங்கி மாத்தாயும் ஒவ்வாத வாழ்விலிருந்து பிரிந்தபோதும் வங்காரி மாத்தாய் கடுமையான விமர்சனங்களைச் சந்திக்க நேர்ந்தது. வங்காரி “பெண்களில் மிகவும் கொடிய எண்ணம் கொண்டவள்” என்றும், “அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்றும் வங்காரியின் கணவர் கூறினார். பெண் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற சமூக எதிர்பார்ப்புகள் கட்டுமானங்கள் அனைத்தையும் தகர்த்த வங்காரி மாத்தாயை அவரது கணவரால் ஒரு நல்ல பெண்ணாவும் நல்ல மனைவியாகவும் பொருந்திக் கொள்ள முடியவில்லை. நீதிமன்ற வழக்குகளில் வங்காரியைக் “கொடூரமானவள்” என்று பெயரிடுவதோடு மட்டுமல்லாமல், அவர் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினருடன் விபச்சாரம் செய்ததாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் கணவர் மவாங்கி மாத்தாய்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களால் வங்காரி உயர் இரத்த அழுத்தத்தில் வீழ்வார் என்றே
பலரும் எதிர்பார்த்தார்கள். ஆண்களுக்கும், அதிகாரங்களுக்கும் ஆதரவான முறையிலேயே
நீதிபதியின் தீர்ப்பும் இருந்தது. இந்த நீதிமன்ற விசாரணைகள் குறித்து அப்போது ”விவா” என்கின்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ”நீதிபதி திறமையற்றவர். அல்லது ஊழல் மிக்கவர்” என்று குறிப்பிட்டார் வங்காரி. நீதிபதியை இப்படி விமர்சித்த காரணத்தினால் வங்காரி மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். நைரோபியில் உள்ள லாங்காடா மகளிர் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த வங்காரி மாத்தாயை அவரது வழக்கறிஞரால் மூன்று மாதங்களுக்குப் பிறகே சிறை மீட்க முடிந்தது.

எல்லா சாதாரண பெண்களுக்கும் போலவே வங்காரி மாத்தாயிக்கும் விவாகரத்து விலை
உயர்ந்ததாகவே இருந்தது. நடந்த வழக்குகளால் வக்கீல்களின் கட்டணங்களுக்கே
பெருந்தொகைப் பணம் செலவாகிவிட்டது. கணவரினால் கிடைத்துவந்த வருமானத்தையும்
இழந்துபோன வங்காரி மாதாய் தனது பல்லைக்கழக ஊதியத்தில் குடும்பத்தையும்
குழந்தைகளையும் நிர்வாகம் செய்வதற்கு மிகவும் சிரப்பட்டார். அக்காலத்தில் இயற்கைத்தாயின் பரிசாக அரிய ஒரு வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஆப்பிரிக்காவிற்கான பொருளாதார ஆணையத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு அது. இந்த வேலைக்கு ஆப்பிரிக்கா முழுவதும் வங்காரி மாத்தாய் தொடர்ச்சியான பயணங்களைச் செய்யவேண்டும். குழந்தைகளை தன்னோடு வைத்துப் பராமரிக்க முடியாத நிலையை உணர்ந்த வங்காரி மாத்தாய் ஒரு தீர்மானத்தை எடுக்கிறார். பிள்ளைகளை முன்னாள் கணவரிடம் அனுப்பிவிட்டுத் தனக்குக் கிடைத்த வேலையைப் பொறுப்பேற்கிறார்.

“ஜனநாயக ஆட்சி இல்லையென்றால், சுற்றுபுறச் சூழலைப் பாதுகாக்க முடியாது” என்று இன்னும்
வீரியமாக தனது போராட்டத்தை வலுப்படுத்தினார் வங்காரி மாத்தாய்.ஆறு நபர்களுக்கு மேல் மக்கள் ஒன்றுகூடக்கூடாது, மரம் நடுவதற்கு அனுமதி பெற
வேண்டும்போன்ற சட்டங்களை அரசு கொண்டுவந்தபோது, ”எங்கள் நிலத்தைத் தோண்டி
அதிலொரு மரத்தை நடுவதற்கு ஏன் அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும்” என்று
கிளர்ந்தெழுந்தார். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க ஜனநாயக ஆட்சி வேண்டும் என்பதை
உணர்ந்து ஆட்சி மாற்றத்திற்காகவும் செயல்படத் தொடங்கினார்.
1992 ஆம் ஆண்டு மாத்தாயின் செயல்பாட்டின் விளைவாக, எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளை
கென்யா அரசாங்கம் சட்டப்பூர்வமாக்கியது. அடுத்தடுத்த ஆண்டுகளில், ஆட்சி ஊழல்
நிறைந்ததாகவும், மோசமானதாகவும் இருந்தபோதிலும், விரிசல் அறிகுறிகளே தென்பட்டன. 1999
இல் சட்டவிரோத வளர்ச்சித் திட்டங்களுக்காக கருரை வனத்தினை அழிக்கும் அரசின்
திட்டத்திலிருந்து காப்பாற்றும் போராட்டத்தில் வங்காரி மாத்தாய் மீதும் கிரீன் பெல்ட் இயக்க
சகாக்கள் மீதும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை மோதல்களுக்குப் பிறகு, அரசு
தனது சட்டவிரோத வளர்ச்சித் திட்டங்களைக் கைவிட்டது.

2002ஆம் ஆண்டு நடந்த கென்யா நாட்டுத் தேர்தலில் வங்காரி மாத்தாய் போட்டியிட்டார். அதிக
வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்து, சுற்றுச் சூழல் இணை அமைச்சராகவும்
பதவியேற்றுக்கொண்டார். இயற்கையைப் பாதுகாக்க எண்ணற்ற முயற்சிகளை எடுத்தார்.
அதேபோலப் பெண்கள் முன்னேற்றத்துக்கான அடிப்படை வேலைத் திட்டங்களை
முன்னெடுக்கவும் அவர் தவறவில்லை.
இவ்வளவு போராட்டமும் நெருக்கடியுமான வாழ்வை வாழ்ந்த வங்காரி மாத்தாய்
புத்தகங்களையும் எழுதியுள்ளார். தி கிரீன் பெல்ட் இயக்கம் (The Green Belt Movement),
கட்டப்படாதது: ஒரு நினைவகம் (Unbowed: A Memoir), ஆப்பிரிக்காவுக்கான சவால் (Challenge
for Africa) பூமியை நிரப்புதல் (Replenishing the Earth) ஆகியன நான்கும் அவரது புத்தகங்கள்.
டேக்கிங் ரூட்: தி விஷன் ஆஃப் வங்காரி மாத்தாய் (மார்ல்போரோ புரொடக்ஷன்ஸ், 2008) என்ற
ஆவணப்படம், அவரது வாழ்க்கைச் சரிதத்தின் சில பகுதிகளையும் போராட்டங்களின்
வலிமையையும் கச்சிதமாகத் தொகுத்திருக்கின்றது.
நைரோபி மத்திய நகரத்தின் விளிம்பில், நகரின் இரைச்சல்களுக்குள் அகப்படாமல் பசுமையாக
விரிந்து கவர்ச்சிகரமாக இன்றும் கம்பீரமாகப் பரந்து விரிந்து கிடக்கிறது உகூறு பூங்கா.
2011 ஆம் ஆண்டு, செப்டம்பர் 25ஆம் திகதி பேராசிரியர் வங்காரி மாத்தாய் 71வது வயதில்
கருப்பை புற்றுநோயுடன் போராடி உலக வாழ்வை முடித்துக் கொண்டார். அவரது இறுதிச்
சடங்குகள் உகூறு பூங்காவில் நடைபெற்றன. ”பெரும் கானகத்து சிட்டுக்குருவியாகவே இருக்க
விரும்புகிறேன்” என்று எளிமையாக சொன்ன மிக வலிமையான மனுஷியின் நினைவுகளை
கென்யாவிலுள்ள ஒவ்வொரு மனிதரும், மரங்களும் சுமந்திருக்கின்றனர்.
1977 ஆம் ஆண்டில் பேராசிரியர் வங்கரி மாத்தாயினால் தொடங்கப்பட்ட கிரீன் பெல்ட் இயக்கம்
கென்யாவில் 51 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நட்டுள்ளது. பூவுலகைக் காப்பாற்றும்
பணிகளுக்காகவும் பெண்கள், சிறுமிகளின் கல்விக்காவும், ஜனநாயகத்தையும் நிலையான வாழ்வாதாரத்தை வளர்ப்பதற்காகவும் உள்ளுர், தேசிய, சர்வதேச மட்டங்களில் கிரீன் பெல்ட்
இயக்கம் இன்றும் செயல்புரிந்து வருகின்றது. இந்த இயக்கத்தில் வங்காரி மாத்தாயின் மகள்
வன்ஞிரா மாத்தாய் தாயின் வழியில் பணி புரிகிறார்.
அமைதிக்கும் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கான வங்காரி மாத்தாய் கல்வி நிறுவனத்தையும் கிரீன்
பெல்ட் இயக்கம் நிர்வாகம் செய்கின்றது. பேராசிரியர் வங்காரி மாதாயின் தெளிவு, மூலோபாய
நோக்கங்களின் ஒற்றைப் பார்வையுடன் குறிப்பிடத்தக்க ஆனால் வளமான அதிர்வை
நோக்கமாகக் கொண்டு இந்தக் கல்வி நிறுவனம் இயங்குகின்றது. இயற்கை வளங்களின்
நிலையான பயன்பாடு குறித்த அறிவையும் திறன்களையும் மாற்ற ஆப்பிரிக்கா முழுவதும்
கிராமங்களிலும் கிராமப்புற சமூகங்களிலும் உள்ள குடிமக்களுக்கு கல்வி அரங்குகளையும்
ஆய்வகங்களையும் இந்த நிறுவனம் நடாத்துகின்றது. ஜனநாயகப் பண்பு கொண்ட தலைமையை
ஊக்குவிக்கவும், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் அமைதி கலாச்சாரங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் இந்நிறுவனம் கவனஞ் செலுத்துகின்றது.
வங்காரி மாத்தாயின் மதிப்புகள், மரபு, பார்வை, அர்ப்பணிப்பு, சுற்றுபுறச்சூழல், ஜனநாயகம்,
அமைதி ஆகியவற்றின் ஒன்றோடொன்று இணைந்திருப்பது பற்றிய புரிதல்களை மேலும்
மேம்படுத்தும் திட்டங்களைத் தொடங்குவதற்கும் ஆதரிப்பதற்கும் மார்ச் 6, 2015 அன்று
நிறுவப்பட்ட வங்காரி மாதாய் அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. தன் பெயரையும் தனது செயற்பாடுகளையும் மீள் சுழற்சிக்கு ஆட்படச் செய்துவிட்டுப் போன வங்காரி மாத்தாய் இயற்கையோடு கலந்து இயற்கையாகி இப்பூவுலகையும் மனிதர்களையும்
பிரம்மிப்பில் ஆழ்த்தும் ஓர் அதிசயம்.

– ஸர்மிளா ஸெய்யித்

Please follow and like us:

6 thoughts on “மரங்களின் தாய்

 1. அற்புதமான கட்டுரை , ஸர்மிளா தோழருக்கு❤️❤️❤️பாராட்டுகள்.

  உலகெங்கிலும் வாழும் பெண்கள் அடக்குமுறைகளையும், அவமானங்களையும் எதிர்கொண்டு தாண்டியே தங்களை
  நிரூபிக்கிறார்கள். மிக உண்மை

 2. ஆத்மாவுக்கு நெருக்கமான ஒரு தோழியைப்போல கென்யாவில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புகுந்து இந்த பெண் அவர்களை வழிநடத்தினாரா என ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது…..அருமையான வரிகள் . சிறப்பான கட்டுரை . வாழ்த்திகள்

 3. Wangari Muta Maathai 25/09/2011 இல் காலமடைந்தார் என்பது உங்களது குறிப்பில் வருவது நல்லது.

 4. இந்தக் கட்டுரையை மூன்று தடவைகள் படித்தேன். ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை இவ்வளவு சுருக்கமாகவும் ஆழமாகவும் தெளிவாவும் எழுதுவதே தனித் திறமை என்று எண்ணுகிறேன். ஸர்மிளா ஸெய்யித் நான் உங்கள் படைப்புகளைத் தேடித் தேடிப் படிக்கின்ற மாணவி. எனக்கு உங்கள் மொழி, பிரசன்ட் பண்ணும் விதம் அவ்வளவு பிடிக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.

 5. தன் பெயரையும் தனது செயற்பாடுகளையும் மீள் சுழற்சிக்கு ஆட்படச் செய்துவிட்டுப் போன வங்காரி மாத்தாய் இயற்கையோடு கலந்து இயற்கையாகி இப்பூவுலகையும் மனிதர்களையும்
  பிரம்மிப்பில் ஆழ்த்தும் ஓர் அதிசயம். அவரது நோக்கத்தில் அவர் உறுதியாக இருந்தார்.இன்று உலகமே போற்றும் பெண்மணியாகத் திகழ்ந்தார். ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு வங்காரியில் வாழ்க்கை நல்ல உதாரணமாகும்.

 6. வங்காகரி மாத்தாய் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைத்து மகிழ்ச்சி. கடடுரையாளருக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *