மரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா?
உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளுள் புதிய இனங்களின் ஊடுருவல் அல்லது அறிமுகம் (bio invasion) மிக முக்கியமானதொன்றாகக் காணப்படுகிறது. இனங்கள் ஒரு சூழற்தொகுதியிலிருந்து இன்னொரு சூழற்றொகுதியைச் சென்றடைவதற்கு ஆறுகள், மலைகள், சமுத்திரங்கள் போன்றவை தடைகளாக இருக்கின்றன. இவை புவியியல் தனிப்படுத்துகை எனப்படுகின்றது. இது இனப்பெருக்க தனிப்படுத்துகைக்கு அவசியமானது. இதுவே புதிய இனமொன்றை ஏற்கனவே இருந்த இனமொன்றிலிருந்து பரிணாமத்தின் மூலம் தோற்றுவிக்கும். ஆனால் மிகக்குறைந்த அளவில் ஒரு சூழற்றொகுதியிலிருந்து இன்னொன்றுக்கு அங்கிகள் இயற்கையாக, வெள்ளம், காற்று போன்ற காரணிகளால் கொண்டுசெல்லப்படலாம்.
கண்டங்களிற்கு கண்டம், பிரயாணங்கள் சாத்தியப்பட்ட பிறகு, புவியியல் தடைகள் வழக்கொழிந்தன. மனிதனின் தற்கால போக்குவரத்து முறைகள், பூகோளமயமாதல், சுதந்திர வர்த்தகம் போன்றவை உலகத்திலுள்ள சூழற்தொகுதிகளை ஒரே தொகுதியாக மாற்றியுள்ளதெனக் கூறலாம்.
பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதிக்காக, கப்பல்கள், ஆகாயவிமானங்கள் போன்றவற்றில் கொண்டு செல்லப்படும் போதும், விவசாய நடவடிக்கைகளுக்காக பரிமாற்றம் செய்யப்படும்போதும் புது இனங்கள் தற்செயலாகவும், வலிந்தும் புதிய பிரதேசங்களிற்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அந்த பிரதேசத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய இனம் பிற தேசத்திற்குரிய அல்லது அந்நிய, அல்லது விதேசிய இனம் (exotic, alien அல்லது non-indigenous) எனப்படும்.
விளைச்சலை அதிகரிப்பதற்காக பிறதேசத்திற்குரிய அந்நிய ஆக்கிரமிப்பு இனங்களும், வெளிநாட்டிற்குரிய இனங்களும், பரம்பரை மாற்றப்பட்ட இனங்களும் புதிய சூழலொன்றுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக அச் சூழலிற்கு அறிமுகம் செய்யப்பட்ட இனமானது, மற்ற இனங்களை கொன்று உண்ணுதல், உணவு, இடம், இனப்பெருக்கம் போன்றவற்றிற்கான போட்டி, பரம்பரையியல் மாற்றம், நோய்கள், வாழிடத்தை தமக்கேற்றவாறு மாற்றுதல் போன்றவற்றை மேற்கொண்டு அச்சூழற்றொகுதிக்கு பாரிய தீய விளைவுகளை உருவாக்குகின்றது. அறிமுகம் செய்யப்பட்ட பசுபிக் சல்மன், வானவில் றௌட் போன்ற மீனினங்கள் காரணமாக அவுஸ்தரேலியா, நியுசிலாந்து, சிலி போன்ற நாடுகளில் உள்நாட்டு மீனினங்கள் வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்டும், அழிவிற்குள்ளாக்கப்பட்டும் இருக்கின்றன. பனாமாவில் அறிமுகப் படுத்தப்பட்ட ஒருவகை ஆபிரிக்க சிக்கிலிட் மீன் உள்நாட்டிற்குரிய 6 மீனினங்களை அழிவிற்குள்ளாக்கியதுடன் அதில் தங்கியிருந்த உணவுவலையைச் சேர்ந்த சிறு விலங்குகள், பறவைகள் என்பனவற்றிற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆயிரக்கணக்கான நிகழ்வுகளுக்கு இவை சில உதாரணங்களாகும்.
இவ்வாறு ஒரு சூழற்தொகுதிக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் ஒரு இனம், அங்கிருக்கும் இனங்களுக்கு ஆபத்தாக அமையலாம். புதிய இனத்தின் குடித்தொகையின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை கட்டுபாடின்றி அதிகரித்தலே இதற்கு பிரதான காரணமாகும். இச்சந்தர்ப்பத்தில் இவ்வெளிநாட்டிற்குரிய இனம் அந்நிய ஆக்கிரமிப்பு இனம் (Invasive Alien Species) என அழைக்கப்படும். தகுந்த சூழல் வெப்பநிலை, உணவு, இரைகௌவிகள், நோய்கள், போட்டியாளார்கள் போன்ற காரணிகள் ஒரு இனத்தின் குடித்தொகையிலுள்ள அங்கிகளின் எண்ணிக்கை அதீதமாக அதிகரிக்கா வண்ணம் கட்டுப்படுத்துகின்றன. புதிய இனமொன்று புதுச் சூழலிற்கு அறிமுகம் செய்யப்படும்போது குடித்தொகையை கட்டுப்படுத்தும் இவ்வாறான காரணிகள்; இல்லாதன் காரணமாக இப்புதிய தாவர, விலங்கினங்களின் எண்ணிக்கை திடிரென அதிகரிக்கும். இதனால் இடம், உணவு போன்றவற்றிற்கான போட்டி, புதிய நோய்கள் போன்ற காரணிகளால் அத் தொகுதியில் ஏற்கனவே காணப்பட்ட இனங்கள் அழிந்துவிடும் அபாயமும்; ஏற்படும்.
1990களின் ஆரம்பத்தின் கிழக்கு மாகாணத்தின் வீதிவிரிவாக்கத்திற்காக, 2000 ஹெக்டேயர் பரப்பளவிற்கு அதிகமான வீதி ஓரங்களிலிருந்த காடுகளும், மரங்களும் (சில மரங்கள் நூறு வருட வயதைத் தாண்டியவைகளாயும் இருந்தன) அழிக்கப்பட்டன. இதனை நிவர்த்திக்கும் முகமாக வீதியின் நடுவிலும், வீதியின் ஓரங்களிலும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு மரங்கள் நடப்பட்டன. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களின் நிமித்தம் இந்த மரம் வளர்ப்பு அக்கரைப்பற்றை மையமாக கொண்டே 2000களின் ஆரம்பங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வீதியோர மர மீள்நடுகை திட்டத்தின் நிமித்தம் பல்வேறு உள்ளுர சுதேச மரங்கள் நடப்பட்டாலும், விரைவான பெறுபேற்றுக்காக சில இறக்குமதி செய்யப்பட்டட மரங்களும் நடப்பட்டன. இந்த மரங்களில் ஒன்றுதான் காயா மரம்.
Khaya senegalensis, என்ற தாவரவியல் பெயர் கொண்ட காயா மரமானது மெரியாசியே குடும்பத்தைச் சேர்ந்தது. பொதுவாக இது ஆபிரிக்க மஹோகனி என அறியப்படுகின்றது. இத்தாவரமானது உலர் வலயத்திற்குரிய, 10 வருடத்தில் 60 அடிகளும், 20-22 வருடங்களில் முதிர;ச்சியடைந்து 100 அடிகள் உயரம் வரை விரைவாக வளரும் தாவரமாகும். 1960களின் ஆரம்பத்தில் ஆபிரிக்காவிலிருந்து இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இத் தாவரங்கள், இலங்கை வனபரிபாலனத் திணைக்களத்தினால் வர்த்தக நோக்கில் தோட்டங்களாக பயிரிடப்படத் தொடங்கப்பட்டது 10 வருடங்களுக்குட்பட்ட காலத்திலேயாகும். தற்போது கண்டி வீதியில் கேகாலைக்கு அருகிலும், அநுராதபுரம், தம்புள்ளை, ஹபரணை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளிலும் பரவலாக வீதியோரங்களில் நடப்பட்டுக் காணப்படுகின்றன.
இலங்கையின் அதிகரித்த மரத்தேவைகளுக்கான கேள்வி காரணமாகவும், உலர், இடைவெப்ப வலயத்தில் அதிகரித்த வளர்ச்சி வீதம், நோய் பீடைத்தாக்கம் குறைவு, மண்வளம் குறைந்த பகுதிகளில் அதிக வளர்ச்சி போன்ற இத் தாவரத்தின் இயல்புகள் காரணமாக இத்தாவரம் இலங்கையில் அதிகம் விரும்பப்பட்டிருக்கலாம்.
எந்த ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்படாமல் இந்த மரங்களை வீதியோர நடுகைக்காக தெரிவு செய்தது சரியானதுதானா? என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகிறது. நீரில்லாமல் வேகமாக வளர்ந்து, நீருற்றும்போது இன்னும் அதி வேகமாக வளர்ந்தும் செல்வது இதன் இயல்பாகும். இந்த மரத்தின் வேர் மண்ணில் ஆழப்புகாததன் காரணமாக, கிளைகளின் வளர்ச்சியின் பாரத்தை தாங்க முடியாமல், மரங்கள் பெரும்பாலும் எப்போதும் ஒரு பக்கம் விழப் போவது போல் சாய்ந்தே காணப்படும். மரக்கிளைகளின் அதிக நீர்த்தன்மை காரணமாக கிளைகள் வளரும் போது கிளைகளின் பாரம் காரணமாக முறிந்து விழுவதுடன், இலகுவான காற்றுக்கும் முறிந்து விழும் தன்மையும் கொண்டது. வேரின் விரைவான வளர்ச்சி காரணமாக கட்டடங்களினதும், மதில்களினதும் அத்திவாரத்தை அல்லது சுவர்களை, வீதிகளை ஊடுருவி அதில் வெடிப்புக்களை ஏற்படுத்தி கட்டடங்களை உடைப்பதுடன், அவைகளின் பெறுமதிகளையும் குறைக்க அல்லது இழக்கச் செய்கிறது என அவதானிக்கப்பட்டுள்ளது. விரைவாக வளர்வதன் காரணமாக நிலத்தடி நீரை குறைக்கும் ஆபத்தும் இங்கு காணப்படுகின்றது.
வெளிநாடுகளில் காயா எனப்படுகின்ற இந்த மரம் தளாபாடத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற போதும், இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு 40 வருடங்களாகியும் இன்னும் தளபாடத் தேவைக்கும், மற்றத் தேவைகளுக்கும் பாவிப்பதில் தயக்கமும், எதிர்பார்த்த தேவையை பூர்த்திசெய்யாத தன்மையும் காணப்படுகின்றது.
ஆபிரிக்க காலநிலைக்குரிய இந்தத் தாவரம், மற்ற தாவரங்கள் போன்று பூக்கள், காய்கள், பழங்கள் நிறைவாக தரவேண்டும். காயா என்ற விஞ்ஞானப் பெயருக்கு ஏற்ப இலங்கையில் பூப்பதும், காய்ப்பதும், விதைகள் தருவதும் குறைவு. இதன் விதைகள் பெரும் பொருட்செலவில் இறக்குமதி செய்யப்பட்டு அதிலிருந்து புதிய இளங் கன்றுகள் ஆரம்ப காலங்களில் பெறப்பட்டன. இதன் காரணமாக இந்த விதைகளின் ஆயுள் குறைவாகவும், கருக்கட்டல் கடினமாகவும், களை கட்டல் கடினமாகவும், பல கிளைகள், தண்டுகள் கொண்டு வளரவும், கருந்துளை வண்டுகளின் தாக்கம் அதிகமாகவும், காட்டுத்தீயினால் அல்லது வீதியோரத் தீயினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவையாயும் காணப்படுகின்றன.
இந்தக் கட்டுரை சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரையாகும். இந்தக் கட்டுரையைப் பிரசுரத்திற்கு அனுப்ப எடுக்கும் போது, அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களின் பல்வேறு இடங்களில் (மருதமுனை, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, நிந்தவூர;, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில்) நான் மேலே கூறிய தீமைகள் காரணமாக, இந்த மரங்களை அடியோடு வெட்டத் தொடங்கியிருப்பது அவதானிக்கக்கூடியதாக இருப்பது, இந்தக் கட்டுரையின் முக்கியத்தை மேலும் உணர்த்தி நிற்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.
இலங்கைக்கும், அதன் காலநிலைக்கம், மக்களுக்கும் ஒத்து வராத இந்த மரம் அந்நிய ஆக்கிரமிக்கும் இனமாக அரசாங்கத்தால் உள்ளடக்கப்படுவதற்குரிய அம்சங்களை தன்னகத்தே கொண்டமைந்து காணப்படுகின்றது. 1960களின் ஆரம்பங்களில் ஆபிரிக்காவிலிருந்து அறிமுகக்படுத்தப்பட்ட இந்த மரங்கள் போலவே 1950 களின் ஆரம்பங்களில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒறியோகொறொமிஸ் மொசாம்பிக்கஸ், ஒறியோகொறொமிஸ் நைலோற்றிகஸ் போன்ற திலாப்பியா இனங்கள் கட்டுரையாளரின் 20 வருடங்களுக்கு மேற்பட்ட ஆய்வுகளின் காரணமாகவும், பல ஆய்வுக் கட்டுரைகளின் காரணமாகவும் தாக்கம் செலுத்தும் சாத்தியமான அந்நிய ஆக்கிரமிக்கும் மீன் இனங்களில் இலங்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன
இதேபோன்று காயா மரங்களின் உயிரியல், சூழலியல் போன்றவற்றின் மீது தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற ஆய்வுகள் ஒரு காலகட்டத்தில் காயாவின் உண்மைநிலையை எமக்கு எடுத்துச் சொல்லும். வளர்ச்சியில் “பொறொய்லர் கோழியை” நிகர்த்த காயா மரமானது ஒரு அந்நிய ஆக்கிரமிக்கும் இனமாக இருந்தால், அது எமது சூழலையும், எமது பொருளாதாரத்தையும், உயிரின பல்வகைமையையும் அழிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனவே வெளிநாடுகளிலிருந்து இலவசமாகவோ அல்லது வேறு வழியாகவோ தருவிக்கப்படும் எதைப் பற்றியும் முன்னெச்சாpக்கையுடன் பலாபலன்கள் ஆராயப்பட்ட பின்னரே நாட்டில் அறிமுகம் செய்தல் அவசியமாகும். அப்போதுதான் சூழலியல் ஏகாதிபத்தியவாதிகளின் வௌ;ளெலிகளாக நாங்கள் ஆக்கப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.
– ஏ.எம். றியாஸ் அகமட்
(சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)
காயா மரம் தொடர்பான ஆரம்பம் அறிவோடு வாசிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் அதை விளக்கி தெளிவுபடுத்தியுள்ளார் றியாஸ் சேர். நன்றிகள்
வனம் வாழ்க
ஹஸ்மிர்
HND IN AGRICULTURE (Kundasale)
0767801701
அன்னிய மரத்தின் சூழலியல் தாக்குதல்களைக் கட்டுரைத் தெளிவாக்கியது ஆசிரியருக்கு நன்றி.