எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கொரனா நோயச்ச காலத்தின் முதல் அலை நிகழ்ந்தபோது அதை நேர் நிலையில் எதிர்கொள்ள தன் சக எழுத்தாளர்களிடம் தொடர்ந்து கதைகள் எழுத கேட்டுக் கொண்டதுடன் தானும் புனைவுக் களியாட்டு சிறுகதைகளை எழுதினார். ”எண்ணணக் குறைவது” சிறுகதை துவங்கி “வரம்” வரையில் நூறு சிறுகதைகளை அவர் எழுதினார். இன்று அவையாவுமே சிறு சிறு தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு விஷ்ணுபுரம் பதிப்பகத்தால் “ஐந்து நெருப்பு, ஆனையில்லா, தேவி, பத்துலட்சம் காலடிகள், தங்கப்புத்தகம், வான் நெசவு” என இதுவரை ஆறு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த நூறு சிறுகதைகளிலிருந்து பத்து சிறுகதைகளை கவிஞர் பி.ராமன் அவர்கள் “மாயப்பொன்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தத் தொகுப்பில் அவர் தேர்வு செய்திருந்த கதைகள் கலைஞர்களின், கலையின் வாழ்வை மையமாகக் கொண்டது மற்றும் சில இலகுவான கதைகள். அவை என் மனதிற்கு அணுக்கமானவை. இந்தக் கட்டுரையில் கலைஞர்களைப் பற்றிய கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து என் பார்வையை விரித்துள்ளேன். “மாயப்பொன்” என்பது கலைஞன் கண்டடையும் ஒரு தருணம். அந்தத் தருணங்களைத் தொட்ட கதைகளாக ”தீவண்டி, ஆகாயம், இறைவன், குருவி, சூழ்ந்திரு, தேனீ, மாயப்பொன்” ஆகிய சிறுகதைகள் அமையப்பெறுகின்றன.

இந்த உலகம் இருவகைப்பட்ட மனிதர்களால் மட்டுமே ஆனது. ஒன்று உலகாயத சாதாரண மனிதர்கள்; இரண்டு கலைஞர்கள். இரண்டுமே இருமுனைத் துருவம் எனலாம்.

“அலை கடல் நடுவண். ஓர் அனந்தன் மீமிசை.

மலை என விழி துயில்வளரும் மா முகில்”

என்ற கம்பனின் வரிகளில் அரி துயில் கொள்ளும் சித்திரம் விரிக்கப்படுகிறது. அரி உறங்குவதைப் பற்றிக் கூறும்போது கரியமலை என்று அசைவற்றிருப்பதைக் கூறினாலும் அவரைச் சுற்றியும் இருப்பது அலைததும்பும் சலனத்துடனான பார்கடல்; அவர் படுத்திருப்பதோ அனந்தன் எனும் பாம்பணை மேல். அரிதுயில்/ யோக நித்திரை என்று கொண்டால் அது விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும்; அறிதலுக்கும் அறிய முடியாமைக்கும் இடையில் இருப்பதாகத் தோன்றும். இதை உலகாயதம் மற்றும் மதுர நிலை என்ற இருமுனைகளுடனும் ஒப்பிலாம். கலையால் பித்து கொண்டு மதுரத்தால் நிறைந்து மாயப்பொன்னை சுவைக்கும் கலைஞர்கள் ஒருபுறம். உலகாயதங்களுக்குள் உழன்று பற்றுதல்களினால் அலைக்கழிந்து புலன்களை மட்டுமே பிரதானமாகத் திறந்து கொண்டு வாழும் எளிய மானுட வாழ்க்கை மறுபுறம். இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு ஊசலாட்டத்தோடு வாழ்பவன் அல்லது கலையில் மூழ்கியிருக்கும் போதே ஒரு காலை உலகாயதத்தில் வைப்பவன் பிழைக்கிறான். உலகாயதத்திலேயே மூழ்குபவன் வெந்ததைத் தின்று விட்டு விதி வந்தால் சாகும் எளிய வாழ்க்கையோ, போக வாழ்க்கையோ கொண்டு மாள்கிறான். மதுர முனையில் இருப்பவன் அதிலேயே பித்தாகி கரைகிறான். நல்ல கலைஞன் அந்த மதுரத்தைச் சுவைக்கிறான். தேனீ தேனிலேயே மூழ்கி மரணிப்பது போல அவன் அதிலேயே கரைந்து கிடப்பதும், அப்படியல்லாது அந்த நிலையை உணர்ந்து கொண்டு விலகி நின்று அவ்வபோது சுவைத்து மீள்வதுமென இரு நிகழ்த்தகவுகள் அவன் முன் நிற்கின்றன. ஆசிரியர் ஜெயமோகன் இந்த கதைகளிலெல்லாம் முதல் நிகழ்த்தகவை மையமாக்குகிறார்.

”தீவண்டி” கதையில் வரும் ஜான் அப்படிப்பட்டவன். சினிமா வெறியன், பித்தன், கள்ளமில்லாதவன், கனவுலகன், தன்னியல்பிலேயே கட்டற்றவன், எப்போதும் வெடிச்சிரிப்பும் அதே சமயம் உள் நோக்கிய ஆழமும் கொண்டவன். கெஸ்ஸு பாடல்கள், ஜானின் நடிப்பு பாவனைகள், மது பாட்டில்கள் நிறைந்த ஒரு சிதறுண்ட உலகத்தின் வழி ஜானைப் பற்றிய உலகத்தை நமக்குக் கதை காணிக்கிறது. ”சினிமா எடுக்க அத்தியாவசியப்பொருள்” என்று எழுதிய அறைக்குள் மதுக்குப்பிகளை போட்டுவைக்கும் ஒரு பகடித்தனம் கொண்டவன். வெளி நாட்டு டைரக்டரை குறை பேசியதற்காக ஒருவனின் முகத்தில் ஒன்றுக்கு அடித்துவிட்டு ‘நாய் நன்றியுள்ளது அல்லவா, சொல்லுங்கள் இக்கா’ என்பவனாக என பலதரப்பட்ட ஜானைப் பற்றிய சித்தரிப்புகள் வழி அவனுள் நுழைய முடிகிறது. இது போன்ற மனிதர்கள்  அரிதானவர்கள். கதைசொல்லியான நாயருடன், இக்காவும் அப்துல் அஜீஸும் நடத்தும் உரையாடலாக இக்கதை சொல்லப்படுகிறது.

மலையாளக் கவிஞர் பி.ராமன் இந்தக் கதையைப் பற்றிச் சொல்லும்போது “அறிவுஜீவியும் அராஜகவாதியுமாக இருந்த ஜானைப் போன்ற ஒருவரை புரிந்துகொள்ளவும் அவருடைய சாவுக்குப்பின்னரும் அவருடனான இணக்கத்தை பேணிக்கொள்ளவும் சாதாரணமனிதரான இக்காவால் முடிகிறது. பெரிய ஒரு மேதையை எளிய மனிதன் தொட்டறிவதன் மிக அழகான சித்தரிப்பு இக்கதை” என்கிறார்.

ஜான் போன்றவர்கள் எந்தவித உலகியல் கணக்கோடும் பழகாதவர்கள். தான் வாழ்ந்த காலத்தில் பெயரும் புகழும், கிடக்காதவர்கள். ஆனால், தன்னை இத்துனை துல்லியமாக நினைக்க ஏதுவான நினைவுகளை விட்டுச் செல்லும் ஒரு ஆன்மாக்களாக இருக்கிறார்கள். ”நினைவுகள்” அவை மட்டும் தானே நம்மால் விட்டுச் செல்லக் கூடியவை. அந்த நினைவின் மனிதர்களைத் தாண்டியும் “தீவண்டி” சிறுகதையாக எப்போதும் இந்த உலகத்தில் ஜானின் நினைவுகள் இருக்கும். ஒட்டுமொத்த கதையுமே எளிய மனிதர்களால் வெடிச் சிரிப்புடன் சொல்லப்பட்டாலும் அதன் அடியாழத்தில் ஜானின் ஆழமும் அழுத்தமுமான வாழ்வு சொல்லப்படுகிறது. அவன் மதுரத்தில் நிறைந்த கலைஞன்.

இறுதியாக ஜானைப் பற்றிய இக்காவின் வரிகளாக வரும் “சாட்சிகளே இல்லாத புண்ணியவாளன்”; “அவனுடன் எப்போதும் அந்த மொஞ்சுள்ள ஹூறி இருந்தாள்” என்ற வரிகளிலிருந்து ஜானை மனதில் வளர்த்துக் கொண்டே செல்ல ஏதுவாக ஜெயமோகன் வடித்திருக்கிறார். ”உள் நின்று உடற்றும் பசி” என்ற குறளின் வரிகளைப் போல சில கலைஞர்கள் இந்த வாழ்க்கை முழுவதுமாக உள் நின்று எழுந்து எரிந்து கரைந்து வாழ்ந்து தீர்த்துவிட்டுச் செல்கிறார்கள். அவர்கள் வெற்றியாளர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஜானைப் போல இனிய நினைவுகளை விட்டுச் செல்லும் தீயாகவும் இருக்காலாம்.

 

“இறைவன்” மாணிக்கம் ஆசாரி என்ற கலைஞனின் கதை. அவனும் உள் நின்று தீ கனன்று கொண்டிருக்கும் கலைஞன் தான். “பீடி தீயாக்கும்டே” என்ற இசக்கியம்மையிடம் “நமக்கு உள்ளாலயும் நல்ல தீயுண்டு அம்மிணியே” என்கிறான் மாணிக்கம்.

“வரைஞ்சு முடிஞ்சா இங்க இருப்பா. படியெறங்கும்போது நம்ம கூட வர்றது மூதேவியாக்கும்” என்ற ஒற்றை வரியின் வழி அவனின் கலை எனும் ஸ்ரீதேவியையும்; வறுமையை, உலகியல் இயலாமை எனும் மூதேவி சித்திரத்தையும் ஆசிரியர் நமக்குக் கடத்துகிறார். இசக்கியம்மையின் கண்கள் வழியாக மாணிக்கம் ஆசாரியைப் பற்றிய ஒரு சித்திரம் நமக்குத் துலங்கி வருகிறது. முதலில் ஒடுங்கிய, குள்ளமான, கரிய மனிதன். யாசகம் கேட்க வந்தவன் போல, மூத்தாசாரிக்கான களை ஏதுமில்லாத மாணிக்கத்தை முதன் முதலில் சந்திக்கும் இசக்கியம்மை முதலில் கேட்பது “நீரா? நீரா படம் வரயப்போறீரு?” என்பது தான். தெக்கதிலே பகவதியை வரையப்போறான் எனும்போது மேலும் ஆச்சரியத்தின் உச்சிக்குச் செல்கிறாள்.

”தேவி எளுந்து வரணும்லா? கையிலே அருளு வந்தா ஒரே நாளிலே வரைஞ்சு போடலாம்… இல்லேன்னா ஒரு மாசம் ஆனாலும் ஆவும்…” என்பதை முதலில் சந்தேகத் தொனியோடே பார்க்கிறாள். “நீரு குடுக்க வேண்டாம்வே… நீரு குடுத்தா எனக்கு நிறையணும்” எனும் மாணிக்கத்தின் திமிர் அவளை ஆச்சரியப்படுத்துகிறது. “நீ பகவதியை கண்டிட்டுண்டா?” என்பவளிடம் “பகவதி நம்மள கண்டிட்டுண்டுல்லா?” எனும் போது மாணிக்கம் ஆசாரியின் கலையின் மீதான தன்நம்பிக்கை வெளிப்படுகிறது. அங்கிருந்து இசக்கியம்மை மெல்ல மெல்ல ஒரு கலைஞனைக் கண்டு அதன் உச்சத்தில் அவனை இறைவனாகவும் காண்கிறாள். “நான் கொண்டுவந்து நிப்பாட்டுதேன் கிளவி உனக்க நீலாம்பாளை… உனக்க கையிலே குடுக்கேன். எமன் வந்தாலும் செரி, எளவு, அந்த தாயோளி பிரம்மன் வந்தாலும் செரி… நான் வரவளைச்சு குடுக்கேன் உனக்க மகளை” என்று சன்னதம் வந்த தெய்வம் போல பேசும் மாணிக்கம், “நான் குடுக்கேண்டீ உனக்க மகளை… என் செல்லமே… எனக்க செல்ல மகளே! எனக்க முத்தே” என்று கூறி இசக்கியம்மையை அணைத்துக் கொள்ளும்போது இறைவனென தன்னை முழுமையாக உணர்கிறான். ” சிருஷ்டி கர்த்தா ஒரு பெரிய கலைஞன்.” என்பது புதுமைப்பித்தனின் வரிகள். இல்லாத ஒன்றை உருவாக்குவதும், இழந்து போனதை மீட்டுவதும், கால நெடுகிலும் பயணம் செய்து எழுத்தாக, சிற்பமாக, ஓவியமாக, நடிப்பாக, சினிமாவாக மாற்றும் ஒவ்வொரு உண்மையான கலைஞனும் தன்னை சிருஷ்டி கர்த்தாவாக உணரும் தருணம் ஒன்று உண்டு. அந்த உச்சத்தை ஆசிரியர் இந்தக் கதையில் கொணர்ந்து நிறுத்துகிறார்.

 

குருவி மாடன்பிள்ளை என்ற முழு நேரக் கலைஞனாக முற்பட்டு அதில் தோற்று வேறு வேலையில் அந்தக் கலையை பயன்படுத்துபவனின் கதை. ஓவியனாக வேண்டியவன் தனக்கு வாய்த்த சால்டரிங் செய்யும் வேலையைக் கலையாக செய்பவனாக இருக்கிறான். கலைஞனுக்கே உரிய திமிர், கலை செய்யாத நேரங்களில் குடியிருக்கும் மூதேவி அதன் வாயிலாக குடியும், பணியிடை நீக்கமும் என வாழ்பவன்.

இங்கும் ”தீ” என்ற கருத்துருவை ஆசிரியர் பயன்படுத்துகிறார். “நான் வேலைய தொடங்கிட்டேன்னாக்க பிறவு நானாக்கும் அந்த வேலை. இந்தா இங்கிண நிக்குத மாடன் பிள்ளை அதுக்குப்பிறவு இல்லை. வேலை நானாட்டு மாறி நின்னுட்டிருக்கும். நான் ஒயராட்டு ஈயமாட்டு தீயாட்டு மாறிருவேன்.” என்கிறான் மாடன்பிள்ளை. தன் வேலையை அத்துனை தீவிரமாகச் செய்யக் கூடியவன். “வே, நான் ஆரு? நான் ஆர்ட்டிஸ்டாக்கும். ஒருத்தன் படம் வரையுதான், நான் இதைச் செய்யுதேன்.” என்ற கலைத்திமிரும் அவனுக்கு இருக்கிறது. ”கையில் கலை இருந்தால் சொல்லில் ஆணவம் ஏறும்” என்ற வரிகள் வெண்முரசின் இந்திரநீலம் நாவலில் வருகிறது. மாடன்பிள்ளை அப்படியான ஒரு கலையை கையில் வைத்திருக்கக் கூடியவர்.

ஆனால் அவர் அவருக்குத் தெரிந்த கலையின் உச்ச சாத்தியத்தை எந்தவித சிரத்தையுமில்லாமல் இயற்கையில் ஒரு குருவி செய்திருப்பதை முதலில் காணும்போது திகைக்கிறார். “இது கூடுல்லவே, அந்தக் குருவிதான். அது இப்டியே கூடாவே மாறி இருந்து பின்னியிருக்கு… தன்னைத்தானே பின்னியிருக்கு.. எப்டிவே.” கதைசொல்லியிடம் வியக்கிறான்.

“இஞ்சபாரு மாடன் பிள்ளை, எல்லா தூக்கணாங்குருவியும் கூடு கெட்டுது… அம்மைக்குருவி குஞ்சுக்குருவிக்கு தனியா சொல்லிக்குடுக்குத வளக்கம் இல்லை. முட்டைக்குள்ளேயே அதையெல்லாம் படிச்சுப் போட்டாக்கும் வருது… இது ஒரு குருவி கெட்டின கூடில்ல. இந்த உலகத்திலே உள்ள அத்தனை குருவிகளும் சேந்து கெட்டின கூடாக்கும்.” என்ற வரிகளும் அந்த குருவிக் கூட்டின் நேர்த்தியும் கண்டு மாடன்பிள்ளை ஒரு திறப்பை அடைகிறான். “சின்னக்குருவி… ஒரு சின்னக்குருவி; ஒரு அடைக்காய்ப் பாக்கு மாதிரி… அம்பிடு சின்னக்குருவி.” என்று அவன் உணர்வெழுச்சி அடைகிறான். அதன் பின் அழிவது அவன் ஆணவம் தான். இது இயற்கையின் முன், அதன் பேரிருப்புக்கு முன் கலைஞன் அடையும் தருணம். அந்தப் புள்ளிக்குப் பின் திரும்புதல் இல்லை. செயல்! செயல்! என சென்று கொண்டேயிருக்கும் பயணத்தை அங்கிருந்து அவன் தொடர்கிறான்.

”செரிடே மக்கா. விடு… நீ மனுசனில்ல. நீயும் ஒரு குருவியாக்கும். ஆமாலே நீயும் குருவியாக்கும். சத்தியமாட்டு” என்ற சொல்லைத் தவிர எந்தப் பாராட்டுக்களோ, விருதுகளோ, அங்கீகாரமோ அவனுக்குத் தேவையில்லை. தன் ஆன்ம திருப்தியே முதன்மையாக அவன் எண்ண ஆரம்பிக்கிறான். அந்தப் புள்ளியை ஒரு கலைஞன் அடையும் கதையாக குருவி சிறுகதை அமையப் பெறுகிறது.

”ஆகாயம்” சிறுகதை குமரன் எனும் கலைஞனை மையமாகக் கொண்டது. சிலை வழிபாடு. சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுத்த ப்ரோட்டோ சிவனிலிருந்து எடுத்துக் கொண்டால் மனித நாகரிகம் அமைந்து ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து எண்ணற்ற சிலைகள் மனிதனால் வடிக்கப்பட்டிருக்கின்றன. சிற்பங்கள் சிற்பியின் எண்ணத்திலிருந்து பிறப்பெடுக்கின்றன. ஓரளவுக்குத்தான் அவனுடைய பண்பாடு, கலாச்சாரம், அவன் சூழல் அவன் வடிக்கும் சிலையின் கருவுக்கு பொறுப்பு கூற முடியும். அதற்குமேல் அது என்ன என்பது விளக்கி அறிய முடியாதது. தெய்வமெல்லாம் ஒண்ணுதான்அணியும் முத்திரையும் மனுஷன் பாக்குததுஅதவச்சுத்தான் சிவன் வேறே விஷ்ணு வேறேஎன்ற வரி விரித்துச் செல்லக் கூடியது. எத்தனை கோடி சிலைகள்! அவை யாவும் கலைஞனின் எண்ணத்திலிருந்தல்லவா பிறப்பெடுக்கிறது. அவன் எண்ணமென்னும் பிரபஞ்சத்திலிருந்து உருவாகி வருபவை யாவுமே தெய்வங்கள் தான். சிற்பிகள் சில்ப சாஸ்திரத்தின்படி சிலைகளை உருவாக்குகிறார்கள். கலைஞனோ புதிய தெய்வம் சமைக்கிறான். அப்படிப்பட்ட குமாரன் எனும் கலைஞனை ஜெயமோகன் இந்தச் சிறுகதையில் காணிக்கிறார். குமாரன் வாய்பேச முடியாதவன், கேட்காத செவி உடையவன். ஒரு வகையில் அவனுக்கு அது உதவி புரிந்தது எனலாம். காரியக்காரர்கள் சொல்லும் சாஸ்திரமும் சம்பிரதாயமும் அவனுக்கு கேட்காமல் இருப்பதே அந்த புதிய தெய்வங்கள் பிறந்து வருவதற்கான தடையைத் தகர்க்கிறது.

கவிஞர் விக்ரமாதித்யன் அவர்கள் கவிதையைப் பற்றிச் சொல்லும்போது “There is no miracle. Poetry itself a miracle” என்கிறார். ஒவ்வொரு கலையும் தன்னளவில் அப்படியான மாயமான ஒன்று தான். மானுடம் தோன்றிய காலகட்டத்திலிருந்து பிறந்த அத்தனை கலைகளையும் கலைஞர்களையும் இந்தக் கதையுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். கேட்காத காதுகளும் பேசாத உதடுகளும் கொண்டு தன்னில் மூழ்கி தான் எனக் கரைந்து புதுப் பிரபஞம் சமைக்கும் கலைஞர்கள் யாவரும் குமாரனைப் போல ஒரு மாஸ்டர் தான். எங்கிருந்து இவை பெறப்பட்டதோ என நினைத்துருகும் இசை, புனைவுலகக் கதை, நாவல், சினிமா, ஓவியம், சிற்பம் யாவற்றையும் தொடர்பு படுத்திக் கொள்ளும் கதையிது

இங்கு நீலன் பிள்ளை சொல்லும்போது ”இப்ப இந்த அரசமரம் இந்தா நிக்குது. இதிலே வந்து உக்காந்திட்டுப்போற பறவைகளை நமக்கு தெரியுமா ஓய்? நாம யாருமே இன்னும் பாக்காத பறவைகூட வந்து உக்காந்திட்டு போகும்லா?” என்கிறார். குமாரனின் கையில் வந்து அமருவது ஆகாயத்திலிருந்து வந்தமரும் ஒரு பறவை தான். “எப்படியோ ஒரு தெய்வம் உருவம் கொண்டு மண்ணுக்கு வந்துவிட்டது. இந்த பொட்டனின் கையை அது தேர்வுசெய்துகொண்டது. நாம் அதை தடுக்கமுடியாது. அதை பணிந்து வணங்கி அனாதிசிவன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே நல்லது” என்பது போல புதிய தெய்வங்கள் நம் அருகே உருக்கொண்டு வந்திருப்பதை காணச்செய்யக்கூடிய கலையின் கதை.

மாயப்பொன்

ஒவ்வொரு கலைக்கும் உச்ச சாத்தியம் ஒன்று உள்ளது. அது எல்லா கலைஞர்களாலும் அடையக்கூடியதல்ல. அடைபவர்கள் சிலர் பித்துப் பிடித்து அந்த கணத்தை நோக்கியே கரைந்து மாள்கிறார்கள். ஆனால் மிகச் சிலரே அந்த கணத்தை அதன் நிலையாமையை அது யாருக்கும் எடுத்து விவரிக்கப்பட முடியாதது அல்லது தேவையில்லை என்பதை உணர்கிறார்கள். அந்த ஒரு தருணத்தை நோக்கி நேசையன் செல்லும் பயணத்தை “மாயப்பொன்” கதை பேசுகிறது.

இந்தத் தருணம் எந்த ஒரு குறிப்பிட்ட கலையின் வழியாகவும் எடுத்தியம்பப்படவில்லை. மாறாக சாராயம் காய்ச்சும் தொழிலை படைப்புத் தீவிரத்துடன், மிக நேர்த்தியாக நேர்மையாகச் செய்யும் நேசையனின் வழி சொல்லப்படுகிறது. கலை என்பது எங்கோ தொலைவில் அல்ல நாம் செய்யும் தொழிலில், சிறு செயலின் உச்ச சாத்தியத்திலும் அந்த மாயப்பொன் தருணத்தை அடையலாம் என்பதைக் கதையின் வழி நாம் அடையலாம்.

அடைந்த மாயப்பொன் தருணத்தை மீண்டும் மீண்டுமென ஏங்கி பித்தாகியிருக்கும் நேசையனுக்கு லாத்தி வழியாக சொல்லப்படும் வரிகள் திறப்பானவை. “சொல்லுலே, ஏன் அதை மறுக்கா உன்னாலே செய்ய முடியல்ல? ஏன்னா அது உனக்க திறமை இல்லை. நீ அதை படிச்சு செய்துகிட முடியாது. அது என்னமோ கடவுளருளாலே நடக்குது… இந்த காட்டிலே என்னென்ன நடக்குது. அம்பது வருசம் சும்மா நின்ன மரம் பூத்து காய்விடுது. அம்பது வருசம் செடியா நின்னது சட்டுன்னு மரமாயிடுது… இதெல்லாம் நமக்கு என்னத்த தெரியும்…? அதெல்லாம் கடவுளுக்க வெளையாட்டு… மக்கா நீயில்லலே நானாக்கும் இதையெல்லாம் நடத்துகதுண்ணு நம்ம கிட்ட சொல்லுதாரு கடவுள். மனுசன் கடவுளா ஆக ஆசைப்படக்கூடாது பாத்துக்க. அத அந்தாலே விட்டிரு…” என்று லாத்தி அவனுக்கு அறிவுறை கூறுகிறான். இதற்காக கடுத்தா சாமியைப் பற்றிய ஒரு தொன்மம் பயன்படுத்தப்படுகிறது. “காட்டிலே ஒரு மாயப்பொன்னு உண்டுண்ணு சொல்லுவாக, கேட்டிருக்கியா?. மாயப்பொன்னாக்கும் கடுத்தா சாமிக்க வெளையாட்டு. மஞ்சள் வெளிச்சத்த காட்டி பொன்னு பொன்னுன்னு அலையச்செய்வான். அதை தேடிப்போறவன் நடுக்காட்டிலே திக்கறியாம நிப்பான். அங்க சோறும் தண்ணியுமில்லாம கெடந்து அலறி விளிப்பான். அவனை கடுத்தா கேறிப்பிடிக்கும். குருதிகுடிச்சு மாம்சம் தின்னும். வேண்டாம்லே. இதுவும் ஒருமாதிரி மாயப்பொன்னாக்கும்” என்ற வரிகள் இந்த யுகந்தோறும் அப்படி பித்துப் பிடித்து அலைந்து திரிந்தவர்களை நினைவுருத்துகிறது.

ஆனாலும் அமையாது அதைத் தேடிக் கொண்டிருக்கும் நேசையன் மீண்டும் அந்த மதுரமான சாராயத்தின் துளியை யாருமில்லாத ஒரு தருணத்தில் காய்ச்சிவிடுகிறான். முதலில் “நாளை லாத்தியிடம் காட்டவேண்டும். பார் என்று சொல்ல வேண்டும். என்னால் முடியும். நான் சென்று சேரமுடியும். குடித்துப்பார், இன்னொரு முறை ஒரு துளி உன் நாவில் படுவதற்காக நீ வாழ்க்கையை இழக்கவும் துணிவாய். கொல்வாய், சாவாய், அனைத்தையும் இழப்பாய், கிறுக்கெடுத்து அலைவாய்.” என்று செருக்கி நிற்பவன் மெல்ல மெல்ல ”ஏன் அதை இன்னொருவருக்குக் காட்டவேண்டும்? அதை முழுமையாகவே குடித்துவிடவேண்டும். ஒரு சொட்டு மிச்சமில்லாமல். குவளையில்கூட மணம் எஞ்சாமல். அது நிகழ்ந்ததைக்கூட எவரிடமும் சொல்லக்கூடாது.” என்ற நிலை நோக்கிச் செல்கிறான். புன்னகைக்கிறான். கனிகிறான். அதுவே உச்ச சாத்தியத்தில் கைகூடும் ஆன்மீக நிலை.  இனி நேசையன் செல்லும் பாதையென்பது  “ஒரு போதும் சென்றடையவில்லை” என்பதான நிறைவின் பாதை. அதை ஆசிரியர் இந்தக் கதையின் வழி கடத்திவிடுகிறார்.

 

இது தவிரவும் ”சூழ்ந்திரு” சிறுகதையில் வரும் சமையல் கலைஞர் அவரின் மாயப்பொன் தருணத்தை சுவையின் உச்சமான அவியலில் அடைகிறார். ஏதேன் கதையில் தன் வாழ்வுக்கான மாயப்பொன் சிந்தனைத் தருணத்தை ஆப்பிரிக்க பழங்குடிகளின் வழி அறிகிறான் சாம். தேனீ சிறுகதையில் வரும் சண்முகத்தின் அப்பாவுக்கு அந்தப் மாயப்பொன் ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையில் கிடைக்கிறது. இப்படி சிந்தனைகள் வாயிலாக, செயல்களின் வாயிலான கலைகளின் வாயிலாக வாழ்விற்கான உச்ச தருணத்தை அடையக்கூடிய மனிதர்களை இந்த புனைவுக் களியாட்டு சிறுகதைகளில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் விரவி வைத்திருக்கிறார். ஒரு வகையில் இவை யாவும் மதுரமான நிலை தான். அவை சிலருக்குத் தான் வாய்க்கப் பெறுகிறது. சமீபத்தில் ஜெயமோகன் அவர்கள் எழுதிய கேளாச்சங்கீதம் சிறுகதையின் வழி இந்த சிந்தனையோட்டத்தை நிறைவு செய்து கொள்ளலாம். “தேனுதான் தேனீயை ஒண்ணாச் சேந்து ஒற்றைக்கூடா வச்சிருக்குது. தேனீ தேனிலே பிறந்து வளருது. தேன் தேடி அலையுது. தேனிலே சாவுது… அந்த தேனுதான் இது. இது அமிர்த மதுரம். நோயா வரும். சாவா வரும். அப்பமும் இது மதுரம்தான்”. அப்படி மதுரத்தைக் கண்டடைந்த மனிதர்களே இந்தக் கதைகளில் சொல்லப்படுகிறது. “ஒருகணக்கிலே பாத்தா கடைசியிலே அந்த விடுதலை கிடைக்காமலேயே போறது நல்லதில்லியா?” என்ற வரியின் நிலையின்மையைப் போலவே இந்த மதுர மனிதர்கள் விளங்கிக் கொள்ள முடியாதவர்கள். சில் சமயம் இக்கா போன்ற எளிய மனிதர்களால் விளங்கிக் கொள்ள முடியும் அல்லது அப்படியல்லாமல் இந்த உலகத்தில் இவர்கள் பிறந்திறந்து சென்றுகொண்டேயிருக்கிறார்கள்.

இந்த நூறு புனைவுக் களியாட்டு சிறுகதைகளையும் வாசகர்கள் பலவாறாகப் பகுத்து பொருள் கொண்டு பெருக்கிக் கொண்டே அறிதலை, அனுபவத்தை, திறப்பை அடையலாம்.

***

-இரம்யா

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *