பகுதி-02

ஓரளவு நோயிலிருந்து மீண்ட பின் நந்தாவுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் தரகன் ஜேமிசு மூலம் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. மாப்பிள்ளைக்கான அடிப்படைத் தகைமை அவன் உயர் குலத்தைச் சேர்ந்தவனாக நந்தாவின் சாதகத்தோடு பொருந்தக்கூடியவனாக இருக்க வேண்டும்.

“எங்களுக்கு ஏற்ற முக்கிய குடும்பத்தைச் சேர்ந்த வாலிபன் எவனாயிருந்தாலும் கவலையில்லை” என மாத்தறை அம்மையார் சொல்கிறார். ஜேமிசு கொண்டு வரும் நிறைய வரன்கள் ஏதோவொரு காரணத்தால் தடைப்பட்டுக்கொண்டே போகின்றன. இந்த இடத்தில் வாசக மனம் நந்தாவுக்கு பியலோடு தான் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கிறது. காலி அண்டி மகாநாம என்பவனை நந்தாவுக்கு மாப்பிள்ளையாக ஜேமிசு முன்மொழிந்த போது முகாந்திரம் அதை மறுக்கிறார்.

“ஜேமிசு, நான் எப்படி அவனை விரும்புவேன்?அவனின் பூட்டன் சந்தையில் மரக்கறி வைத்து விற்று வாழ்க்கை நடத்தியவன். அவனின் தந்தை பாண் சூளை வைத்து தோட்டக்காரருக்கு பாண், இறைச்சி,மீன் விற்று பிழைப்பு நடததியவன். அவர்களின் குலத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து நாங்கள் தண்ணீர்கூட குடிப்பதில்லை” என முகாந்திரம் தன் குலப்பெருமையை முன்னிறுத்தி அந்த வரனை மறுக்கிறார்.

மாத்தறை அம்மையாரும் அதை ஆமோதிப்பது போல் கருத்துச் சொல்கிறாள். ஆனால் ஜேமிசு மாறிவரும் சமூக சூழலைப் புரிந்துகொண்டவன். இன்றையை விட அவன் நாளையைப் பார்க்கிறான்.

“ஐயோ, அம்மணி, இப்போ அதெல்லாம் பார்க்கும் காலமல்ல. இன்று பணம் சம்பாதித்து செல்வந்தராகும் குடும்பங்களின் தொடக்கம் எல்லாம் அப்படித்தான். முன்பு நன்றாக இருந்தவர்கள் இப்போது வீழ்ச்சிக்குப் போகிறார்கள்” என்கிறான். அவன் பொருளாதாரத்தை மட்டும் வைத்து சமூக மாற்றத்தை அளவீடு செய்கிறான். எல்லாப் பெருமைகளும் பொருளாதாரத்தின் மீதே தங்கியிருப்பதாக அவன் எண்ணுகிறான். மதம் அதற்குள் இல்லை என்றால் ஜேமிசு சொல்வதுதான் உண்மை. கடைசியில் நந்தாவின் குலத்தைச் சேர்ந்த ஜினதாச என்பருக்கு எல்லாம் ஒத்துப்போகவே நந்தாவுக்கும் ஜினதாசவுக்கும் திருமணம் நடக்கிறது.

கடைசியில் ஜேமிசின் வாக்குத்தான் உண்மையாகிறது. முகாந்திரத்தின் குடும்ப, குலப்பெருமைகள் அனைத்தும் பெருளாதார வீழ்ச்சியாலேயே அழிந்து போகிறது. கிராமத்திலிருந்து பின்தங்கிய குடும்பப் பின்னணியிலிருந்து ஒரு எழுதுவினைஞனாக கொழும்புக்குச் சென்ற பியல் தன் பகுதிநேர வியாபார நடவடிக்ககைகளால் பொருளாதார அடுக்கில் மேல்தட்டுக்கு வருகிறான். அதேநேரம் முகாந்திரம் குடும்பம் படிப்படியாக இறங்குதிசை நோக்கிச் செல்கிறது. பியல் தன் பொருளாதாரத்தின் மூலம் மேல்தட்டுக்கு வருகிறான். அவன் நினைத்ததை அடைகிறான். அதன் பின் நடந்தவை அனைத்தும் நாவலின் கதைச் சுருக்கத்தில் மேலே விபரித்துவிட்டேன்.

நாவலின் இன்னொரு பரிமாணமாக கிராமிய சிங்களப் பெண்களின் உளவியலை அப்படியே யதார்த்தபூர்வமாக நாவலில் குணரூபப்படுத்துகிறார். கிராமிய சமூக மட்டத்தில் இருந்த பெண்களின் சமூக ஒழுக்கம் பற்றி பேசுகிறது. கிராமியப் பெண்கள் மிக கெட்ட கணவன்மாரால் எவ்வளவு துன்புறுத்தப்பட்டாலும் குடும்பப் பெருமை, கட்டுக்கோப்பு, சமூக கௌரவம் போன்றவற்றுக்காக ஆணாதிக்கத்தின் அத்தனை வன்மங்களையும் சகித்துக்கொண்டு வாழ்கின்றனர் என அப்போதைய பெண் சமூகத்தின் அசைவியக்கமின்மையை நாவல் தொடுகிறது. இந்த மீறலை அவர்கள் நிகழ்த்தாமைக்குக் காரணம் மரபுகளை சம்பிரதாயங்களை அப்படியே பின்பற்றும் கிராமப் பெண்களின் பிற்போக்கு மனப்பாங்குதான் என மார்ட்டின் நம்புகிறார்.

மார்ட்டின் விக்ரமசிங்க தன் பெரும்பாலான படைப்புகளில் எப்போதும் கவனம் குவிக்கும் விசயம் ஒன்றுண்டு. அதாவது மேலைத்தேய ஆங்கில வைத்தியமுறைக்கும்- கீழைத்தேயப் பாரம்பரிய வைத்திய முறைக்குமிடையிலான முரணும் உரையாடலும் மீது அவருக்கு ஆர்வம் எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. அவரது விராகய நாவலின் மையமான பகுதியாகக் கூட அது வெளிப்படுகிறது. நந்தாவுக்கு சிகிச்சையளிக்க வந்த ஆயுர்வேத வைத்தியரான வீரசிறி வைத்தியருக்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நந்தாவின் சகேதரனான திஸ்ஸவுக்குமிடையிலான உரையாடல் இந்நாவலில் இந்த விடயத்தைத் தீவிரமாகப் பேசுகிறது.

“நாடியைப் பிடிப்பதனால் இருதயத்தின் உணர்ச்சிகளை அறிவதைத் தவிர வேறு என்ன அறிய முடியும்?” என திஸ்ஸ பாரம்பரிய வைத்தியரிடம் கேட்கிறான்.

“நாடிச் சாத்திரம் மிக்க ஆழமானது” என்கிறார் வீரசிரி வைத்தியர்.

“சில வைத்தியர்கள் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு நோயாளி உண்ட உணவையும் சொல்கிறார்களே?“ என அவரைத் திரும்பவும் சீண்டுகிறான் திஸ்ஸ.

“உண்ட உணவையும் அறியலாம் என்று சொல்ல மாட்டேன். எனினும் நாடியைக் கொண்டு பலவற்றை அறியலாம்” என்றார் வீரசிரி வைத்தியர்.

“சிங்கள வைத்தியர்கள் நோயாளிகள் மட்டுமன்றி சுகதேகிகளும் மாட்டிறைச்சி தின்னக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள். இறைச்சி தின்பதாக இருந்தால் மாட்டிறைச்சியைத்தான் தின்ன வேண்டும்” என்கிறான் திஸ்ஸ. “மாட்டிறைச்சி சூடானது. குணமற்றது” என வைத்தியர் சொல்கிறார். ஆனால் திஸ்ஸ அதனை மறுக்கிறான்.

“சிங்கள வைத்தியர்கள் மாட்டிறைச்சி உண்ண வேண்டாமென்று சொல்வது அதனாலன்று. வடமொழி வைத்திய நூல்கள் இந்துக்களால் எழுதப்பட்டவை. இந்துக்கள் மாட்டை தெய்வமாக மதிக்கின்றனர். அதனால் அவர்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை. வடமொழி வைத்திய நூல்களை சோனகர்களின் மதத்தைப் பின்பற்றிய வேதாந்திகள் எழுதி இருந்தால் பன்றி இறைச்சிதான் குணமில்லாதது என்று கூறியிருப்பார்கள்” என்கிறான் திஸ்ஸ.

”சோனகரின் மதத்தைப் பின்பற்றுகிற மனிதர் ஒருபோதும் வேதாந்திகளாக முடியாது” என வைத்தியர் சொல்கிறார்.

அதற்கு திஸ்ஸ “சோனக வைத்தியர்கள் கூறுவார்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள் நபிகளாக முடியாதென்று”

“நபிகள்?”

“ஆம். நபிகள் என்பது சோனகரின் மதத்தைச் சேர்ந்த வேதாந்திகளைத்தான்” என திஸ்ஸ பதிலளிக்கிறான்.

நாவலின் இந்தப் பகுதி உள்நாட்டுப் பண்பாட்டு மரபுகள், சம்பிரதாயங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட பாரம்பரிய வைத்தியரான வீரசிரி, ஜினதாச ஆகியோருக்கும் அதன் மீதெல்லாம் பெரிதாக எந்த நம்பிக்கையுமற்ற திஸ்ஸவுக்குமிடையிலான விவாதங்களைக் கொண்டு ஆக்கியிருக்கிறார். இந்த விவாதங்கள் அப்போது சிங்கள சமூகத்தில் புதிய தலைமுறையின் மத்தியில் ஏற்பட்டு வந்த சிந்தனை மாற்றத்தை முன்வைக்கிறது. மார்ட்டின் விக்ரமசிங்கவின் சித்திரிப்புகளில் இந்த புதிய தலைமுறையை எந்த விமர்சனமுமற்று ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைப்பட்ச ஆதரவு நிலைப்பாடு இருந்தது.

“இப்பொழுது கல்வி கற்கும் பிள்ளைகள் பழையன அனைத்தையும் பொய் என்கின்றனர்” என ஜினதாச சொல்கிறான். அதற்கு வைத்தியர் “கிறிஸ்தவப் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வதிலுள்ள தவறு” என்கிறார்.

அதனை ஆமோதிக்கும் ஜினதாச “இப்பிள்ளைகள் தாமாகவே ஏமாற்றப்படுகின்றனர். பாதிரியார்களுக்குப் பிள்ளைகளை ஏமாற்றத் தெரியும், சீனி மிட்டாய் கொடுத்து” என்கிறான். நாவலின் இந்தப் பகுதி அப்போதைய கிறிஸ்தவமயமாக்கலுக்கெதிரான பௌத்த மரபின் காவலர்களின் மனக் கொந்தளிப்பை எடுத்துக்காட்டும் பகுதியாகும். இந்த இடத்தில் தமிழ் எழுத்தாளர் காந்தர்வனின் கதை என்கிற கதை எனக்கு ஞாபகம் வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களின் வழியே மிட்டாய்கள் மூலம் எப்படி கிறிஸ்தவமயமாக்கல் நிகழ்ந்தது என்பதை அவர் அந்தக்கதையில் அழகாக சொல்லி இருப்பார். ஆனால் மார்ட்டினுக்கும் கந்தர்வனுக்குமிடையிலான முக்கிய வித்தியாசம் என்னவென்றால் அவர் இந்துத்துவத்தின் குரலாக ஒலித்தார். மார்ட்டினோ அடிப்படைவாத பௌத்தத்தின் குரலல்ல. கிராமிய நம்பிக்கைகளின் எதிர்க் குறியீடாகவே அவர் திஸ்ஸவை உருவாக்கினார். அத்தகைய நம்பிக்கைகளுக்கெதிராக அறிவுபூர்வமான எதிர்வினையை தீவிரமாக அவன் ஆற்றுகிறான். இங்கு திஸ்ஸ பிரதிபலிக்கும் கருத்துகள் மார்ட்டின் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட விருப்பிலிருந்து வரும் குரலாகும். இதனால் மார்ட்டின் விக்ரமசிங்க இலங்கையின் கிராமியப் பண்பாட்டு மரபுகள் குறித்து காலனித்துவம் கட்டமைத்த மிக எளிமையான புரிதலையே கொண்டிருந்ததாகவே எண்ணத் தோன்றுகிறது. கிராமிய மருத்துவத்தின் மீது மார்ட்டினுக்கிருந்த விமர்சனம் நாவல் நெடுகிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. குழந்தைப்பேறு மருத்துவிச்சியினால் வீட்டிலேயே பார்க்கப்படும் மரபுதான் அப்போதிருந்தது. அது இலங்கையின் எல்லா சமூகங்களிலும் காணப்பட்ட ஒன்று.

நந்தாவின் குழந்தை இறந்துவிடுகிறது. மருத்துவச்சி பழைய கத்திரிக்கோலால் தொப்புள்கொடியை வெட்டியதால்தான் குழந்தை இறந்தது என்ற விமர்சனத்தினூடாக மார்ட்டின் அந்த மருத்துவமுறை மீதுள்ள தன் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்துகிறார். ஆங்கிலேய வைத்தியரைக் கொண்டு அதைச் சொல்ல வைப்பதன் மூலம் ஆங்கிலேய வைத்தியமுறையை கொண்டாடும் ஒரு மனநிலைகொண்டவராகவே மார்ட்டின் தெரிகிறார்.

கிராமிய மக்களிடம் புரையோடிப் போயிருந்த பேய் பற்றிய நம்பிக்கைகள் நாவலின் இன்னொரு பரிமாணமாகப் பேசப்படுகிறது. இத்தகைய நம்பிக்கை கொண்ட கிராமத்து மனிதர்கள் தாயத்துக் கட்டுகின்றனர். ஆனால் திஸ்ஸ அதனைக் கட்ட விரும்புவதில்லை. அவன் பாரம்பரிய நம்பிக்கைகளின் கிராமிய மரபுகளின் எதிர்க் குறியீடாகவே மார்ட்டின் விக்ரமசிங்கவினால் தொடர்ந்தும் முன்னிறுத்தப்படும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறான். அவன் கற்ற ஆங்கிலக் கல்வியும் அவனது வாசிப்புமே இதற்குக் காரணம் என அவனது மூத்த சகோதரி அனுலா சொல்கிறாள். கல்வி அறிவும், வாசிப்புமற்ற பாமரர்களே இத்தகைய நம்பிக்கைகளை தங்கள் வாழ்க்கை நெடுகிலும் சுமந்து கொண்டிருப்பவர்கள் என்ற கருத்தியலை மார்ட்டின் நுட்பமாக வாசகனுக்குக் கடத்துகிறார். அவரது படைப்பு மனம் எப்போதும் அதன் பக்கமே சார்புகொண்டது. திஸ்ஸவைக் குறித்து விபரிக்கும போது மார்ட்டின் அவனை அறிவும் உணர்ச்சியும் கொண்ட மனிதன் என்கிறார். கிராமிய நம்பிக்கை கொண்டவர்கள் வெறும் உணர்ச்சி மட்டுமே கொண்டவர்களா? என்ற ஒரு கேள்விக்கு இந்த விவரணை வாசகனை இட்டுச் செல்கிறது.

“பேய்கள் காரணமாக திஸ்ஸ சாதகத்தை நம்பமாட்டான்” என்கிறான் பியல். ”காலிப் பாடசாலையில் படித்ததனால்தான் திஸ்ஸ எதையும் நம்ப மறுக்கிறான்.” என பியல் தொடர்ந்து சொல்கிறான்.

”திஸ்ஸ சிறுவயதிலேயே சில விசயங்களை நம்பவில்லை. சிலவேளை புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியதனால் அவற்றைப் பற்றிய அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம்” என்கிறாள் அனுலா.

எந்தவகையில் பார்த்தாலும் ஒரு வெற்றிகரமான நாவலுக்கான அதிக தகைமைகளை இந்நாவல் கொண்டிருக்கிறது என்றே சொல்வேன். இலங்கையில் நிலப்பிரபுத்துவ சமூக ஒழுங்கின் மீளமுடியாத வீழ்ச்சியையும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினதும், பணவியல் பொருளாதாரத்தினதும் எழுச்சியையும் ஒரு கிராமத்தின் நிஜமான மனிதர்கள் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் உருவகிக்கிறார் மார்ட்டின் விக்கரமசிங்க. இது சமூக கலாசார மாற்றங்கள் எனும் பெரும் விளைவை கிராமத்தில் தோற்றுவிக்கிறது. கசாறுவத்தை முகாந்திரமும், மாத்தறை அம்மையாரும் சிதைந்துவரும் சமூக ஒழுங்கை அடையாளப்படுத்துகின்ற பழைய தம்பதியினராக, நிலமானிய வாழ்க்கை முறையின் இறுதித் தலைமுறையாக சித்திரித்தக் காட்டகிறார் மார்ட்டின் விக்கிரமசிங்க.

இன்னும் சொல்வதானால், சிதைந்து வரும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கும் வளர்ந்து வரும் மத்தியதர வர்க்கத்திற்கும் இடையிலான உறவின் சிக்கல் தன்மைகளையும் மற்றும் அந்த உறவின் கலாச்சார ரீதியான நுண் பிணைப்புகளையும் சமூகப் போக்கோடு மேவிச் செல்லும் வகையிலான சித்திரிப்புகள் நாவலையும் சிங்கள சமூக வரலாற்றையும் ஒரு இணைகோட்டில் சந்திக்க வைக்கிறது என்று சொல்லலாம்.

மார்ட்டின் விக்ரமசிங்க, ஓர் உணர்திறன் மிக்க நாவலாசிரியராகவும், நுண்ணறிவுள்ள வெகுமக்கள் அறிவுஜீவியாகவும், சிங்கள சமூக மெய்மையை (Social fact) முழுமையாக அறிந்தவராகவும் இருந்ததே நாவல் இந்தளவு ஆழம்பெறக் காரணமாகும். எடுத்துக்காட்டாக, பியலுக்கும் நந்தாவுக்கும் இடையேயான உறவைப் பற்றிய அவரது சித்தரிப்பு மிகவும் நுட்பமானது. இந்த சித்தரிப்புகள் கலாச்சார அடிப்படையிலான உணர்ச்சிகள், ஊடாட்டங்கள் போன்றவற்றை தனக்குள் நிரப்பி இருக்கின்றன. இந்த சமூக மாற்றத்தை கம்பெரலியவில் மார்ட்டின் விவரிக்கும் போது, தனிநபர் மற்றும் சமூக அனுபவங்களை அதிகமாக கதைக்குள் ஊடுருவ விட்டிருக்கிறார். அது ஒரு சிக்கலான புரிதலை உருவாக்குவதாகத் தோன்றுகின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தனிப்பட்ட சங்கடங்களின் சூழல்மயமாக்கல்தான் அந்தச் சித்தரிப்புக்கு அடர்த்தியையும் திறமையையும் வழங்குகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு சமூக வாழ்க்கையின் முழுமையையே ஆசிரியர் தனது நாவலில் உருவகப்படுத்த முயன்றுள்ளார்.

***

-ஜிஃப்ரி ஹாசன்

 

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *