அவள் அந்தரத்தில் மிதப்பது போல உணர்கிறாள். மெல்லிய கம்பி வலைகளால் வடிகட்டப்பட்ட மின்சாரம் குறுகுறுப்பாக உடல் முழுக்க ஊர்கிறது. எந்தக் காதலரும் தொட முடியாத ஆழங்களைத் தொட்டெழுப்புகிறது. அவள் உடல் மெல்ல மிதப்பது போலிருக்கிறது. அவள் ஒரு நாற்காலியில்தான் அமர்ந்திருக்கிறாள். அவளது அறைக்குள்ளிருக்கும் ஒரு கூண்டுக்குள்ளிருக்கும் நாற்காலி. ஆனால் அவளுக்கு சிறைப்பட்டிருக்கும் உணர்வில்லை. அவள் உடல் நாற்காலியை உணரவில்லை, அறையை, கட்டிடத்தை, எதையும்! மின்சாரம் ஒரு கடலைப் போல அவளை ஏந்திக்கொண்டிருக்கிறது.

கடல் மாதிரி, கடல்ல மிதக்குற மாதிரி

அவள் தன் நண்பனிடம் விளக்க முயல்கிறாள். இருவரும் ஒரு பாரில் அமர்ந்திருக்கிறார்கள். அவன் அப்போதுதான் ஜிம்மில் இருந்து வந்திருந்தான். அவன் உடல் வியர்வையில் நனைந்திருக்கிறது. அவள் சருமம் மின்னுகிறது. அப்போது பூத்த மலரின் மென்மையைக் கொண்டிருக்கிறது.

பைத்தியம் மாதிரிப் பேசாத. கடல்லயும் கட்டுப்பாடில்லாமப் போனா மூழ்கிடுவோம். அதுமாதிரிதான் இந்த மின்சாரமும். உன்னத் தின்னுடும். ஏற்கனவே உன்னத் தின்னுகிட்டுதான் இருக்கு.

நீதான் பைத்தியம் மாதிரி பேசுற. ஏன் நீ ஜிம்முக்குப் போலயா? தினம் எவ்வளவு வெயிட் தூக்குற? சொல்லப்போனா இதையெல்லாம் ஏன் செய்யுற? நாலு பசங்க உன் உடம்ப பாக்கணும். அய்யோ எவ்வளவு அழகுன்னு ஆசைப்படணும். ஆனா எனக்கு அது எதுவுமே இல்ல. நா நேரடியா என் உடலோட எல்லா சாத்தியத்தையும் தொட்டுப் பாக்குறேன். கடந்து கடந்து இன்னும் இன்னும் ஆழமா போறேன்.

நா ஜிம்முக்குப் போறது வெறுமனே ஆம்பளைங்கள கவரத்தான்? அவ்வளவுதான் நீ என்னைப் பத்தி புரிஞ்சு வைச்சிருக்க இல்லையா?

அத நான் குறையா, தப்பா சொல்லல. ஆனா நீ நான் செய்யுறத குறைய, தப்பா சொல்லுறியே.

ஏன்னா நா உன் ஃப்ரண்ட்? அது ஞாபகம் இருக்கா? அதாவது தேவைப்படுதா, இல்ல அதுவும் தேவையில்லையா?

நான் உன்கிட்ட இருந்து விலகிப் போறேன், மாறிட்டேன்னு உனக்குத் தோணுதா?

இல்ல, ஆனா…

ஆனா, என்ன சொல்லு?

எனக்கு சரியா சொல்லத் தெரியல.

உனக்குப் புரியல பேபி. இது போதையில்ல. இது அடிக்‌ஷன் இல்ல. நான் என்ன செய்யுறேன்னு தெரிஞ்சுதான் செய்யுறேன். நாம வேற ஏதாவது பேசலாம்.

தெருவில் இரு தெர்மகோல் அட்டைகளை எடுத்துச்செல்லும் பெண்ணிடமிருந்து அட்டைகளைப் பிடுங்கிச் செல்ல காற்று முயல்கிறது. பெரியவர்களுக்கு தெர்மகோலோடு என்ன வேலை என்பது போல இரு சிறுவர்கள் அவளை முறைத்துப் பார்க்கிறார்கள். மதிய வேலையில் காற்றோடு போராடியபடி செல்லும் அவளைக் கண்டு பயப்படுவதா வேண்டாமா என்று தெருநாய்கள் யோசித்துப் பின் தூக்கத்திடமே தங்களை ஒப்படைத்துக் கொள்கின்றன. அவள் முகத்தில் புன்னகை நிரம்பியிருக்கிறது. அவ்வப்போது அவள் ஏதோ முணுமுணுக்கிறாள். அவள் காதில் பொறுத்தியிருக்கும் ஹெட்ஃபோன்களை இசைக்கும் பாடலின் வரிகள்தானென நாம் நினைத்துக்கொள்ளலாம். அவள் நேற்று தன் நண்பனுடன் நிகழ்ந்த உரையாடலை மனதில் மீண்டும் ஓட்டிப்பார்த்தபடி நடக்கிறாள்.

அவளது நண்பர்கள், காதலர்கள், தோழர்கள், சைக்கியாட்ரிஸ்ட்டுகள் எல்லோருக்கும் காரணம் தேவையாயிருக்கிறது. மின்சாரம் உடலைச் சிதைப்பது. அதனோடு உனக்கென்ன விளையாட்டு. நீ உன்னை வெறுக்கிறாயா? உன் உடலை? மரணத்தை விரும்புகிறாயா? இந்த சமூகத்தைப் பழிவாங்க முயல்கிறாயா? நீ உன் மீது செலுத்தப்படும் அன்புக்கும் காதலுக்கும் தகுதியானவள் இல்லையென்று நினைக்கிறாயா? ஆம், இது அவ்வளவு வினோதமானது இல்லைதான். ஆம், உன்னைப்போல பலர் இருக்கிறார்கள்தான். ஆனாலும்… சிறுவயதில் உனக்கெதுவும் பெரிய பாதிப்பு நிகழ்ந்ததா? யாரும் உனதுடலை உன் அனுமதியின்றி பயன்படுத்திக் கொண்டார்களா?

சிறுவயதில்? ம்ம்ம்ம். அவளை ஒருமுறை பள்ளியிலிருந்து தலைநகரத்துக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றிருந்தார்கள். அப்போது ஒரு அறிவியல் மியூஸியத்துக்கும் சென்றிருந்தார்கள். அங்கிருந்த பலவும் அவளுக்கும் அவள் நண்பர்களுக்கும் ஆச்சரியமூட்டின. அவற்றோடு அவர்கள் விளையாடினார்கள். தங்கள் ஆசிரியர்களின் கற்பிக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைத்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் விட அவள் மனதில் இருப்பது ஐந்தாவது மாடியில் இருந்த ஒன்றுதான். அது எதற்காக எதைக்கற்றுக்கொடுக்க என்பதெல்லாம் அவளுக்கு இப்போது நினைவில் இல்லை. அது ஒரு சிறிய இயந்திரம். ஒரு சிறிய வட்ட மேசையில் மேல் ஓரடி உயரமுடைய கம்பி. அந்தக் கம்பியின் முனையில் சிறிய இரும்பு உருண்டை, அதில் விரலை வைத்தால் சிறிய அளவில் மின்சாரம் பாயும். மெல்ல ஷாக் அடிக்கும். அவள் ஒரிருமுறை அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு உற்சாகமானாள். தன் நண்பர்களை அழைத்து அதைத் தொட்டுப் பார்க்கச் சொன்னாள். சிலர் தயங்க, சிலர் தயங்கித் தயங்கி ஒருமுறை தொட்டு வலிக்கிறதென்று பின்வாங்கினார்கள். ஆனால் அவளது ஆர்வம் அவர்களை பயமுறுத்தியது. ஒருத்தி மின்சாரத்தை இவ்வளவு இரசிக்க முடியுமா? இல்லை, வலியை? அவளுக்குப் புரியவில்லை. அவளது உடலில் ஏற்படும் அதே உணர்வுதானே அவர்கள் உடலிலும் ஏற்படவேண்டும்? இல்லை அவள் வித்தியாசமானவளா? அவளுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும்விட அந்தக் குறுகுறுப்பு அவளை ஈர்த்தது. அவளது டீச்சர்கள் வந்து சற்றே பயத்துடன் அதிலிருந்து பிரித்து அழைத்துச் செல்லும்வரை அவள் அதையே செய்துகொண்டிருந்தாள்.

ஆனால் அதனோடு ஒப்புநோக்கக் கூடிய எந்த உணர்வும் அவள் வாழ்வில் மின்சாரம் தவிர வேறெதனாலும் எப்போதும் ஏற்பட்டதில்லை. அந்நிகழ்வும், ஒவ்வொரு முறையும் மின்சாரத்தில் மிதக்கும்போது ஏற்படும் உணர்வையும் அவளால் எதனோடும் ஒப்பிடவே முடியாது.

அவளுக்கும் மின்சாரத்துக்குமான முதல் அறிமுகம் அதைவிட சிறுவயதில் நடந்தது. ஆனால் அது அவளுக்கு நேரடி நினைவாக இருக்கவில்லை. அவளது பெற்றோருக்கு நினைவிலுண்டு, அவர்கள் அதைப் பலவிதமாகச் சொல்லி ஒரு கதையாக்கியிருக்கிறார்கள். ஒரு மாலையில் அவர்களது சிறுநகரம் முழுக்க மின்சாரம் இல்லை. அப்போது அவர்களது தெருவில் இருந்த ஒரு பணக்காரரின் வீட்டில் மட்டும் ஜெனரேட்டர் வைத்து மின்விளக்குகள் எரிந்திருக்கின்றன. அதைப் பார்த்த இவள் அவர்கள் வீட்டில் மட்டும் எப்படி கரண்ட் இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறாள். அன்றிரவு முழுக்க, மின்சாரம் என்றால் என்ன? அது எல்லோருக்கும் எப்படிக் கிடைக்கிறது? ஏன் சிலசமயம் சிலருக்கு இல்லை? என்பதுபோல பல கேள்விகளைக் கேட்டுத் துளைத்திருக்கிறாள். அதைத் தொடர்ந்த சில நாட்களுக்கு வீட்டில் கரண்ட் செல்லும் இடங்களை எல்லாம் பார்த்தபடி இருந்திருக்கிறாள். மூன்றாவது நாள், அவள் அப்பா வேலைக்குப் போயிருக்க, அம்மா வாசலில் நின்று யாரோடோ பேசிக்கொண்டிருக்க தன் அப்பாவிடமிருந்து புதிதாக கற்றுக்கொண்ட டெஸ்டர் வைத்து கரண்ட் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும் வித்தையைப் பரிசோதித்தாள். ஆனால், இன்னதென்று சுட்டமுடியாத ஒரு ஆர்வத்தால் தூண்டப்பட்டு டெஸ்டரின் தலையில் மட்டும் கைவைக்காமல். அது மின்சாரத்தைத் தொடும் அடிப்பகுதியையும் தொட முயன்றிருக்கிறாள். ஒரு படாலென்ற சத்தத்துடன் அவள் வீட்டில் மின்சாரம் போய், அவளும் தூக்கி எறியப்பட்டாளாம். நல்வாய்ப்பாக அவளுக்கு எதுவுமாகவில்லை. ஓரிரு மணிநேரங்கள் க்ளுகோஸ் ஏற்றிவிட்டு மருத்துவர் அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டாராம்.

ஒரு அனுபவமாகக் கூட இல்லாமல், ஒரு கதையாக மட்டுமே அவள் அறிந்திருக்கும் இதற்கும் அவளது இப்போதைய ஆர்வத்துக்கும் எந்தத் தொடர்புமிருக்கும் என்று அவளால் நம்பமுடியாததில் எந்தத் தவறுமில்லை.

இந்த ஆர்வம், அல்லது மின்சாரம் மீதான இச்சையை அவள் முதல் முதலாக உணர்ந்துகொண்டது கொசு பேட் என்னும் சாதனத்தைக் கண்டடைந்தபோதுதான். என்னவொரு அற்புதமான சாதனம். அவள் கல்லூரியில் படிக்கும்போதுதான் அது முதல்முறையாக அறிமுகமாகியது. பின்னாளில் அவள் காதலிகள் வைப்ரேட்டர் போன்ற சாதனங்கள் தங்கள் உடலிச்சையின் எல்லைகளைக் காட்டித்தந்த அனுபவங்களைக் கூறும்போதெல்லாம் அவளுக்கு இதுதான் ஞாபகம் வரும்.

கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த அவள் அப்பா அம்மாவிடம் எதையும் பேச இயலாதபடி சுற்றிவரும் வயதிலிருந்தாள். நூலகக் கடன் புத்தகங்களில் தன்னை மறைத்தபடி வீட்டில் நடப்பவற்றைக் கவனிக்க மறுத்தாள். வீட்டு வேலைகளைச் செய்வதில்லை, இப்படியிருந்தால் போகிற வீட்டிலெப்படி என்பதே அம்மாவின் ஒவ்வொரு பேச்சுக்கும் தொடக்கமாக இருந்தது. அப்பா அவளை முகம்பார்த்து பேசுவதைப் பெரும்பாலும் தவிர்த்திருந்தார். அப்படிப் படித்துக் கொண்டிருக்கும்போதுதான் பட் பட்டென்ற அந்த சத்தம் அவளை ஈர்த்தது. வாசலில் பக்கத்து வீட்டுப் பாட்டியுடன் பேசியபடியே அம்மா அதனை அப்படி இப்படி வீசிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது அதில் கொசுக்கள் பட்டு வெடிக்க, சிறிய மத்தாப்பு கொளுத்தப்பட்டது போல பொறிகள் பறந்தன. கொசு பேட் என்று எங்கோ கேட்ட சொற்கள் அப்போது அவளுக்கு நினைவு வந்தன. அந்த வெளிச்சம் சுற்றி இருந்த எல்லாவற்றையும் இருளாக்கியது.

அம்மாவும் அப்பாவும் வீட்டிலில்லாமல் கொசு பேட்டுடன் தனித்திருக்க அவளுக்கு இன்னும் 22 மணிநேரங்கள் ஆகின. அந்த கொசுபேட் வலையில் ஓட்டைகள் சரியாக அவள் விரலுக்குப் பொருந்தின. அவளது விரல்களில் முதல்முறையாக அதனை உணர்ந்தபோதுதான் அவள் தன் உடலில் தானறியா பல பகுதிகள் உண்டென அறிந்தாள். ஒரு கரிய சமுத்திரத்தில் தனியே மிதந்தபடி, தன் தனிமையை வெறுக்கும் நிலையிலிருந்தவளுக்கு கடலில் ஒரு மின்னும் ஜெல்லி மீனைப் பார்த்ததுபோலிருந்தது. ஓரிரு ஜெல்லி மீன்கள். இன்னும் பலப்பல மின்னுமுயிரிகளைத் தேடி அவள் மிதக்கத் தொடங்கினாள்.

கடல் மிகப்பெரியது. யாராலும் அறிய இயலாதது. நாம் நமது அறிவைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியபோதே கடலையும் அறிந்துகொண்டோம். பகிர்ந்துகொள்ள ஆளில்லாத மனிதருக்கு கடல் இன்னமும் அறிய இயலாததே. அவர் மிதந்துகொண்டிருக்கிறார். மிதத்தலின் தனிமையில் அவர் இன்புகிறார். துயருறும் கணங்கள் குறித்துக் கவலையில்லை. துன்பம் அவரை உலகோடு இணைக்கிறது. இன்பம் எல்லா தளைகளையும் அவிழ்த்து அவரை தூரே தூரே மிதக்கச் செய்கிறது.

அவள் நீண்ட காலம் தனது இச்சைகளைப் புரிந்துகொள்ளும் பிறரைத் தேடினாள். ஆனால் அவளது இச்சைகளை வெறும் கொசு பேட் தாண்டி விரிவாக்க உதவும் எண்ணற்ற கருவிகளைக் கண்டடைந்தாளே தவிர பிற நபர்களோடு அவள் தொடர்புகொள்ள முடியவில்லை. அது ஏன் என்றும் அவளுக்கு ஒரு கட்டத்தில் புரியத் தொடங்கியது. ஆனால் அந்தப் புரிதலும், அதை சொற்களில் விளக்குவதற்கான திறன் அல்லது ஆர்வமும் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன. புரிதலை அடைந்ததும் அவள் மற்றதிலிருந்து விலகிக்கொண்டாள்.

சமூகத்தோடு தொடர்பிலிருக்க அவள் பிற எல்லா செயல்களிலும் ஈடுபட்டாள். அவளுக்கென்று பாலிச்சைகளும், விருப்புகளும் கூட இருந்தன. பாலியல் இச்சைகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கண்டுகொண்டபோது தன் பதின்பருவத்தில் தொடங்கிய ஒரு பயணம் முடிவடைந்துவிட்டது போலவே உணர்ந்தாள். மிக எளிதாக விளங்கிக்கொள்ள முடிந்திருந்த ஒன்று மிகக் குழப்பமானதாக மாறியது.

கட்டுப்படுத்தப்பட்ட மின்சாரம். மிதந்துகொண்டிருக்கும். மிதவையுயிர்கள். மின்னுயிரிகள். சிறு வெளிச்சங்கள். கனவுகள். நட்சத்திரங்கள். நிலவு. கதிரியக்கம். உடல். சிதைதல். வளர்தல். உயிர். அசைவு.

நீண்ட நாட்கள் கழித்து அவள் தனியாக கஃபேவுக்கு வந்திருக்கிறாள். தனியாக கஃபேக்களுக்குச் செல்லும்போது அவளுக்கு சற்றே பரபரப்பு வந்துவிடும். அங்கே தான் யாருக்காகவோ காத்திருப்பதுபோல் காட்டிக்கொள்வாள். யாருமே அழைக்காவிட்டாலும் ஃபோனை எடுத்து காதில் வைத்து பேசத்தொடங்கிவிடுவாள். என்ன பேசுவது என்று அவளுக்கு எப்போதுமே குழப்பம் ஏற்பட்டத்திலை.

இல்ல அர்ஜூன். நான் நேத்திக்கே சொல்லிட்டேன். இன்னிக்கு என்னால எந்த வேலையும் செய்யமுடியாது. நான் என் ஃப்ரண்ட்ஸ பார்க்கப் போறேன்னு.

எனக்குப் புரியுதுங்க. ஆனா நான் சொன்னேன்ல.

சரி விடுங்க. நான் பார்க்குறேன். நான் பார்க்குறேன்.

இப்படி அவள் மனதுக்குள் ஏதோ கற்பனை உரையாடல்கள் ஓடிக்கொண்டே இருப்பதுபோலவும், அவற்றில் ஒரு நூலை சற்றே சத்தமாக பேசுவதுபோலவும் பேசி முடித்துவிடுவாள். அன்றும் அப்படியே பேசிவிட்டு, அந்த நான்காவது மாடி கஃபேயில் ஒரு காஃபி ஆர்டர் செய்துவிட்டு ஒரு மூலையில் அமர்ந்தாள். அவள் நரம்புகள் இன்னமும் மிதந்துகொண்டிருந்தன. நடக்கும்போது கால்கள் லேசாகத் தடுமாறக்கூடச் செய்தன.

அவள் அமர்ந்திருந்த மூங்கில் நாற்காலிக்கு சற்றருகே ரோட்டைப் பார்த்திருந்த விளிம்பை ஒட்டி நிறைய தொட்டிச் செடிகள் அடுக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குப் பின்னால் சுவரில் ஓடிக்கொண்டிருந்த ஒரு வயரில் சிறிய விரிசல் ஏற்பட்டிருந்தது. அதனை நேராகப் பார்க்கமுடியாவிட்டாலும் அவளால் உணரமுடிந்தது. கைகளை லேசாக நீட்டி அதன் பக்கமாக காற்றில் அளைந்தாள். மெல்ல உணரமுடிந்த மின்சாரத்தில் பச்சையம் படர்ந்திருந்தது. சட்டென தான் காற்றில் கைகளால் அளைந்து கொண்டிருப்பதை வேறு யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றிமுற்றி பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டாள். அவர்கள்…

ஹலோ. சொல்லுங்க அர்ஜுன்.

முடிஞ்சிடுச்சு. நீங்க சொன்னதெல்லாம் செக் பண்ணிட்டேன். குட் டூ கோ.

ஆமா. இந்த கஃபேலதான் இருக்கும். க்ளீவன்ஸ் ரோட் பக்கத்தில. ஒண்ணும் பெருசா இல்ல.

இன்னும் ஃப்ரண்ட்ஸ் வரல. வெயிட் பண்ணிகிட்டு பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன்.

நாளைக்கா? நாளைக்கு ஆஃபீஸ் வருவேன்னுதான் நினைக்கிறேன். பார்க்கலாம்.

ஓகே. பை அர்ஜூன்.

அவள் நண்பன் இன்னமும் அவள் மனதை மாற்ற முயன்று கொண்டிருந்தான். அதற்குள் அவனது தொலைபேசி பலமுறை சிணுங்கியதால் அவளை விட்டுவிட்டு அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் சற்றே உற்சாகமாகிறான், சிறிய ஏமாற்றம் அவளுக்கு இதெல்லாம் சிரிப்பூட்டுகின்றன. தன் விரல்களில் இதையெல்லாம் உணரமுடிவது அவளுக்கு குறுகுறுப்பாக இருக்கிறது. அந்தப் பெருநகரம் மின்சாரத்தில் இயங்குவது. அதன் ஒவ்வொரு மனிதரும் மின்சாரத்திலேயே இயங்குகிறார்கள். அவர்கள் உணர்வுகளை மின்சாரத்தில் நிரப்புகிறார்கள். எல்லாம் அவள் விரல் நுனியில்… ஒரு கையில் கிளாஸைப் பிடித்தபடி அதன் பின்னால் இன்னொரு கையை காற்றில் அளைந்து பார்க்கிறாள். அவள் விரல் நுனிகளில் தெரிக்கும் சிறிய மின்னலைகளை அந்த விஸ்கியினூடாக அவளால் பார்க்க முடிகிறது. நீலமும், சிகப்பும், பச்சையும் சிறிய மத்தாப்புகளைப் போல அவள் விரல்களைச் சுற்றித் தெரிக்கின்றன. அவள் நண்பனின் மேல் வழக்கமான ஒரு அக்கறையின்மையின் கனம் படிகிறது. அங்கே தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் பலரின் மேலும். அவள் விரல் நுனிகளின் மின்னலைகள் கருஞ்சிவப்பாகின்றன. அவள் தன் மேலும் கனமாக ஏதோ படிவதைப் போல உணர்கிறாள்.

அப்புறம்.

சட்டென அவள் நண்பனின் குரல் மீட்டெடுக்கிறது.

என்ன அப்புறம். நீதான் கதை சொல்லிக்கிட்டு இருந்த.

கதையாடி அதெல்லாம். அடிப்பாவி.

அவர்கள் கொஞ்சமாக சிரித்துக்கொள்கிறார்கள்.

அவளது கடல் இப்போது வெளிச்சமாக இருந்தது. அவளது மகிழ்ச்சி மிகுந்த தனிமையில் பல்வேறு குரல்கள் நெளிந்தன. அதில் எங்கும் இருள் இல்லை. நட்சத்திரங்கள் கூட பளீரென்று ஒளிவீசின. அவளுக்கு இப்போதும் மிதக்கும் உணர்விருக்கிறது. அவள் அதை இன்னமும் விரும்புகிறாளும் கூட. அதற்கென அவளுக்கு எந்தக் கருவிகளும் தேவைப்படுவதில்லை. ஆனாலும் சமயங்களில் வீட்டில் மெயினை ஆஃப் செய்துவிட்டு படுத்துக்கொள்கிறாள். அவளால் தனியாகவோ இருட்டிலோ இருக்கமுடியவில்லை. அவள் மிதந்துகொண்டே இருக்கிறாள். அவள் மகிழ்ச்சியாகவோ சோகமாகவோ இல்லை, செயல்படவோ செயலின்மையிலோ இல்லை. அவள் இருக்கிறாள்.

 

***

-வயலட்

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வயலட் பெங்களூருவில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார். வயலட்டின் சிறுகதைகள் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ (2017) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. எனில் என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ (2017) என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *