எனக்குள் இருக்கும் குரல்
மர்மக் கடலை சலிப்பின்றி எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பேன். அலைகள் அசங்காத வசந்தம் மயங்கிய அந்திப் பொழுதுகளும் அரவமற்ற இரவுகளும் மந்திரத்தருணம் வாய்க்கும் சில உறுமல்களும் ஏங்கிக் கிளம்பிக் கொண்டே இருக்கும்.
புலப்படாத வெறித்த நுரைகள் அடிக்கடி மேலோங்கும். தனித்த ஓர் ஆன்மா திடுக்கிடும் தரிசனம் கேட்கிறது. பள்ளத்தாக்குகளில் இருண்டு கிடக்கும் அடர் வனங்கள் சோகங்களைப் புறம் தள்ளும் ஒரு குழந்தையின் அநித்தியத்தின் முன் மண்டியிட்டுக்கொள்கிறது. இருண்ட தெருக்களை எல்லாம் சிலாகித்துக் கொள்கிறேன். எப்போதும் எனக்குள் இருக்கும் ஒரு குரல் என்னை எச்சரித்துக் கொண்டே இருக்கும்.
***
நெடிதுயர்ந்த நிழலுரு
ஒரு வரண்ட குரல் துல்லியமாய் இசைக்கிறது. புகைத்திரைக்குப் பின் பறவைகளின் உடைந்த சிறகுகளின் நிழல் சரிந்து வீழ கருமையேறிய ஒரு புகைப்படத்தின் துயரார்ந்ததின் நடுவே ஒரு சரித்திர உணர்வை அலாதியாய் உணர்கிறேன்.
நீரோட்டத்தின் வலுவிலிருந்து ஒரு ஏகாந்த பேராழத்தை ஊன்றி நிற்கின்றேன். கருமை மேற்பரப்பு எப்போதும் காற்றலைகளில் உலைவுற்றுக் கொண்டே இருக்கும். மதகுச் சுவர்மீது கடலலைகள் வந்து மோதும்.
இதுவரை நீங்கள் அறிந்திராத மரங்களை நான் தனிமையில் தரிசித்துக்கொண்டிருக்கிறேன். நெடிதுயர்ந்த இருட்டின் நிழலுருவாக வண்ணமிழந்து வெளிறிப்போகிறது கானல். பாசி படர்ந்த தடித்த சுவர்களில் கசிந்து வரும் சங்கீதத்தில் கயமைகள்ததும்பித் துவள்கிறன…
***
-மிஸ்ரா ஜப்பார்