“கலைச்செயல்பாடானது ஆழமான பற்றுறுதியிலிருந்தும், நம்பிக்கையிலுமிருந்தும் பிறப்பது,சமகாலத்தின் நடைமுறை வாதத்தாலும் பாயன்பாட்டு வாதத்தாலும் உருவான மனநிலை இலக்கியத்தின் மீது மட்டுமின்றி அனைத்து மீபொருண்மை அனுபவத்தின் மீதும் மறைமுகமாக நுண்ணிய அவநம்பிக்கையை பரவ விட்டுள்ளது.வாசிப்பவர்களுக்கு மட்டுமல்ல இன்று எழுத வருபவர்களிடையேயும் கூட படைப்பு செயல்பாட்டின் மேல் இந்த அவநம்பிக்கை படிந்துள்ளது என நினைக்கிறேன்.இன்றைய இலக்கியத்தின் பெரிய பிரச்சனையே இதுதான் என்பது எனது எண்ணம்.நூற்றுக்கணக்கில் கவிஞர்கள் உள்ளனர் இன்று.ஒரு விதத்தில் யோசித்தால் மகிழ்ச்சியான விஷயமே.ஆனால் தொன்ம அர்த்தத்தில் கவிஞன் என்பது மிகப்பெரியவார்த்தை.அதனால் அடிப்படையான விஷயங்ளை தீவிரத்துடன் எதிர்கொள்வதையெல்லாம் தவிர்க்கக் கூடாது.அதே நேரம் கவிதை பிரபலமான ஒன்றாகவேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.அது தன் விளிம்பில் இருப்பதே அதன் தொழிலுக்கு உகந்ததாக இருக்கும்”

                 – சபரிநாதன் நேர்காணல்; பிரவீன் பஃறுளி (இடைவெளி இதழ்)

      தொண்ணூறுகளின் கவிஞர்கள் வரிசை நிலைப் பெற்ற பிறகு அதன் ஆகக் கடைசியாகவும்,புத்தம் புதிய தொடக்கமாகவும் வந்தவர் சபரிநாதன்.நான் இங்கிருந்து சபரியின் கவிதைகளை திரும்பிப் பார்க்கையில் எனக்கு முதலில் தெரிவது ஏற்கனவே உள்ள கவிதையின் வடிவ ஒழுங்கை தன் கவிதைகளின் வழியாக உடைத்துப்பார்க்க முயன்றதும், ஆற்றொழுக்கான அவரது மொழிநடையும் தான்.

      2011ல் வெளியான அவரது களம் காலம் ஆட்டம் தொகுப்பு நாம் முற்றிலும் எதிர்பார்த்திராத நிலக்காட்சிகளுடன் ,விவரணைகளுடன் வெளியானது. இத்தொகுப்பின் பல்வேறு கவிதைகள் ஒரு புத்தம் புதிய யுகத்தின் சின்னஞ்சிறு மனிதர்கள் தங்கள் புதிய உலகை நிர்மானித்தவாறே வந்துவிட்டதை தெரிவித்தன.இவற்றை இவரது கவிதைத் தொகுப்பு வெளியான காலகட்டத்திற்குச் சற்று முன்னும் பின்னும் வந்த தலைமுறையின் அனைத்துவிதமான படைப்புகளிலும் உள்ள நம்பிக்கைகள், இரசனைகள், விலகல்கள் ஆகியவை முற்றிலும் வேறு விதமாக மாறியிருப்பதை அவர்களின் படைப்புகளின வழியாகவே காணமுடிகிறது.

     முதல் முறை இத்தொகுப்பை வாசிக்கையில் “அம்மாவின் ஹேண்ட் பேக்” என்ற கவிதை எனக்குப் பிடித்திருந்தது.தனது விடாப்பிடியான தார்மீகத்துடனும், அழுக்குச் சேலையுடனும் எண்ணெய்ப் பிசுபிசுக்கும் முகத்துடனும் தியாகச்செம்மலாக தமிழ்க் கவிதையில் வாழ்ந்து கொண்டிருந்த அம்மா தன்னை விடுவித்துத்துக்கொண்ட தருணம் இது.

 

அம்மாவின் ஹேண்ட்பேக்

 

நடைபாதையில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த

அம்மாவின் ஹேண்ட்பேக்கை

ஒருகோழி திருடிக்கொண்டோடியது.

”ஹேண்ட்பேக்..என் ஹேண்ட்பேக்”

எதிர்சாரி டீக்கடையில் தம்மடித்துக்கொண்டிருந்த இளைஞன்

கோழியை விரட்டிச் சென்று ஹேண்ட்பேக்கை மீட்டுத்தந்தான்

ரொம்ப தேங்க்ஸ் சொன்ன அம்மா அந்த இளைஞனை கல்யாணஞ் செய்துகொண்டாள்

அவன் நினைவார்த்தமாக அந்த ஹேண்ட்பேக்கை பத்திரமாக வைத்திருந்தாள்

ஏனெனில் அதற்கு தானாகவே களவுபோகும் பழக்கம் இருந்தது.

அம்மா அவளும் பத்திரமாகவே இருக்கிறாள்

அவன் அந்த டீக்கடையில் தம்மடித்துக்கொண்டிருக்கிறான்

அந்த்க்கோழிஆ..அதை நாங்கள் ஒருபிடி பிடித்துவிட்டோம்.

     இக்கவிதையின் வாயிலாக தன்னை பூரணமான பின்நவீனத்துவக் கவி என்பதை சபரிநாதன் நிரூபணம் செய்கிறார். இக்கவிதை எழுதப்பட்ட காலத்தின் பெண்,தனக்கு முந்தைய பெண்களின் மிக அரதப்பழசான நம்பிக்கைகளை,ஆசைகளை கைவிட்டு விட்டு புதிய அணிகலன்களை அணிந்துகொள்கிறாள்.

களம் காலம் ஆட்டம்  தொகுப்பின் எந்த பக்கத்தை எடுத்துப் படித்தாலும் அதில் தேர்ந்த அகவயமான ஒரு வரி நமக்கு கிட்டிவிடும்.

நீர்த்துப்பாக்கி கவிதையில் உள்ள வரி

”இளவயதில் நடந்துவரும் யுவதியிடம்

உன்னைப் பாரக்கையில்

சாயங்காலத்த்தில் தொலை தூரத்திலிருந்து ஒரு தீவிபத்தைக் காண்பதைப்

போலுணர்கிறேன்’ என்றார்,அதற்குப் பதிலாக அவள் வெந்தும் வேகாதவொரு முத்தத்தை வழங்கினாள்.”

 சபரி தன் கவிதைகளின் வழியாக கதைகளைச் சொல்ல முற்படுகிறார் என்ற எண்ணம் தோன்றும்  இடத்திற்குஅருகிலேயே சுயபகடியும், பச்சாதாபமற்ற மொழிச் செறிவும், அங்கதமும் கூடிய வரிகளுடன் அக்கவிதை இருக்குமாறு  பார்த்துக்கொள்கிறார். இவை மெனக்கெட்டு செய்வதில்லை என்பது இவரது இரண்டு தொகுப்புகளையும் வாசிக்கையில் தெளிவாகிறது. எனக்குத்தெரிந்து அவரது பல கவிதைகள் உற்சாகமாக வாய்விட்டு வாசிக்கும் தொனியில் அமைந்திருப்பவை. ஆனால் அதற்கு ஒரு அரங்கு தேவையாயிருக்காது அதை கவனிக்கும் பொறுமையும் உற்சாகமுள்ள சில காதுகளும், மனமும் போதும்.

அவரது முதல் தொகுப்பிலிருந்து மத்திமம், நம்மோனார்வீதி, அக்கா ஒரு முதலை வளர்த்தாள், நீர்வழிப்புணை, நீர்த்துப்பாக்கி, கவிழ்ந்த கப்பலின் கேப்டன் கதை, லாப்ரடார், காமிய கர்மம் எனத் தொடர்ந்து நீளும் கவிதைகளடங்கிய பட்டியல் அவை.புதிய பொருளை தரக்கூடிய புதிய அர்த்தங்களைத் தாங்கிய,வினோத எண்ணங்களைத் தருகிற வரிகளை உள்ளடக்கியவை,

 

சிகப்புநிற ஸ்கார்ஃப் அணிந்த பெண்

வாயைப்பொத்திக்கொண்டு சிரிக்கும்

சிகப்புநிற ஸ்கார்ஃப் அணிந்த பெண்

கடைசிவரை தன் பற்களை காட்டவேயில்லை எனக்கு

பைக்கட்டைச் சுமந்தவாறு பழுதடைந்த சைக்கிளை நிறுத்திவிட்டு

கைநிறைய மழைக்காலங்களோடு நின்றிருந்தபோது

சிகப்புநிற ஸ்கார்ஃப் அணிந்த பெண் என்னிடம் வந்தாள்

நான் அன்று பள்ளிக்கூடம் போகும் எண்ணத்தை கைவிட்டேன்

 

முதலில் விதிகளற்ற விளையாட்டை விளையாடினோம்

பின் அவள் ஊதியூதி குடித்துக்கொண்டிருந்த தேநீருக்காக

நான் வெற்றுக்கோப்பையை நுகர்ந்துகொண்டிருந்தேன்

சொல்பேச்சுக்கேட்காத சகோதரனைப்பற்றியும் காதுகேளாத தனது பாட்டியைக்குறித்தும் மிகவும் வருந்தினாள் பாவம்

நான் புத்தகங்களைக் குறைகூற விரும்பவில்லை

ஒரு எரிகல் விழுந்த பள்ளமாய் என் உள்ளங்கை ஆகஆக

நாங்களிருவரும் சிதறித்தீர்த்த நிமிடங்களை சேர்த்தடுக்கினால்

எனது மிகச்சிறிய கடிகாரம் ததும்பும்

 

சிகப்புநிற ஸ்கார்ஃப் அணிந்த பெண் ஒரு பேதை அவளுக்கு ஏமாற்றத்தெரியாது

இரண்டு விரல்களை நீட்டி ஒன்றைத் தொடச் சொன்னாள்

என் செவிட்டுக் கைகள் அசையவேயில்லை

துணிவற்ற நான் நின்றேன் நீர் தளும்ப

சிகப்புநிற ஸ்கார்ஃப் அணிந்த பெண்ணைச்சொல்லி குற்றமில்லை

அவள் ஈரமான காலுறைகளை தன் சின்னஞ்சிறு ஷூவிற்குள் திணித்து

எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினாள்

சூர்யகாந்திப் புஞ்சைக்கும் மக்காச்சோளக் காட்டிற்குமிடையே

மெலிந்த கல்தேவாலயத்தின் அருகில் கூன் விழுந்த ஒரு மரப்பாலத்தில்

அவள் கால் பாவிய கணம்

நான் அந்த ஓவியத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன்

(அது எத்தனை கொடியது என்பதை உங்களுக்கு எப்படிச் சொல்வேன்)

ஒரு கோடு இரண்டு சிறைகளை உருவாக்குகிறது.அவ்வளவுதான்

9 போல் சுருண்டமர்ந்து முகம் புதைத்து அழுதுகொண்டிருந்தபோது

நொடிமுள்ளைப்போலக் கடந்து போனாள்

அடுத்தடுத்த இரு தீர்க்க ரேகைகளிடையே அவள் வீடு சிக்கிக்கொண்டது

அதிகாலை சோளக்காட்டில் மணிகொத்த வரும் பறவைகளுக்காக

அவள் எழுப்பும் விதவிதமான ஒலிகள்

இந்த ஓவியத்தில் நுண்தீற்றல்களை வரைகிறது

சிகப்புநிற ஸ்கார்ஃப் அணிந்த பெண் சூதுவாது அறியாதவள்

கடைசிவரை தனது பற்களை காட்டவேயில்லை என்றாலும்

அவளுக்கு ஏமாற்றத் தெரியாது அவள் என்னிடம் பொய் சொல்லவில்லை.

                       சபரிநாதன் தனது முதல் தொகுப்பின் பல்வேறு கவிதைகள் வழியாக அங்கதமான ஒரு மொழியைக்கைக்கொண்டு நிரவியிருந்தாலும்  இக்கவிதைகளில் நிரம்பியிருக்கும் பல்வேறு படிமங்கள்,செவ்வியல் கூறுகள், புத்தம் புதிய சொற்களுடன் கூடிய நிலக்காட்சிகள் வழியாகவே சூழலில் கவனம் பெறுகிறார். அவரது அனைத்து கவிதைகளிலும் சற்று கூடுதலான சொற்கள் நிரம்பியதான தோற்றத்தில் இருந்தும் சலிப்பூட்டாததாகவும், வாசிப்பிற்கு உகந்தவையாகவும் உள்ளது. இதுவே அவரது தனித்த அடையாளமாகவும்மாறியிருக்கிறது.

முதல் தொகுப்பின் கடைசி கவிதை இப்படி முடிகிறது சொற்சிக்கனமாக..

ஒருதனி

கீழே

பெரும்பாறை அடுக்குகளும் நினைவற்ற நாட்களும்

மேலே

ஒரே வானம்

விதையுள் இருப்பது ஓர்

எண்ணம்.

 

2.

               ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியன்று கவிஞர் ஸ்ரீநேசன், ஆம்பூர் சுரேஷ் ஆகியோரின் முயற்சியில் ஏலகிரியில் நடைபெறும் இலக்கியக் கூட்டம் புகழ்பெற்றது. அப்போது புதிய அறிமுகமாக சபரிநாதனின் களம்-காலம்-ஆட்டம் நூல் வந்தது.முன்னதாக புது எழுத்து மனோன்மணி அந்த ஆண்டு வெளியான சில புதிய புத்தகங்களைப் பரிசாகஅனுப்பியிருந்தார்.அதில் புதுஎழுத்தின்  வெளியீடான களம்-காலம்-ஆட்டம் நூலும் ஒன்று.

     புத்தாண்டு தினத்திற்கு முந்தைய இரவு முழுக்க பல்வேறு தலைப்புகளில் நண்பர்களின் உரையாடல் நடந்து முடிந்தது, புத்தாண்டின் தொடக்கமாக நாங்கள் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுசிற்கு பின்னால் ஓடும் ஓடைக்கு அருகில் உள்ள பாறையின் மீதமர்ந்து கடும் பனியில் சபரியின் களம்-காலம்-ஆட்டம் புத்தகம் குறித்து பேசத்தொடங்கினோம்.

  அத்தொகுப்பு வெளியானதற்கு முன்பு சபரியை எனக்குத் தெரியாது. புத்தகம் குறித்து பா.வெங்கடேசன், ஸ்ரீநேசன் ஆகியோர் நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தனர்.

           முன்னதாக அத்தொகுப்பை வாசித்திருந்த எனக்கும் நண்பர்களின் பேச்சு மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருந்தது. சபரியின் கவிதைகள் அவருக்கு தனித்த இடத்தை கொடுக்கும், ஒரு புத்தாக்கமான இளந்தலைமுறையின் தொடக்கமாக இவரும் அவரது கவிதைகளும் இருக்கும் என பா.வெங்கடேசனும், நானும் குறிப்பிட்டு பேசிய ஞாபகம் உள்ளது. பிற்பாடு சபரியுடன் தொடர்பில்லாமல் போனாலும் அவ்வப்போது வாசிக்க கிடைத்த அவரது கவிதைகள்  எங்களது கருத்துக்களை உறுதி செய்தன.

           தான் எழுதும் கவிதைகளினால் தனக்கு எந்த கெடுபிடிகளும் இல்லை என்பதும்,அதன் முந்தைய வரைமுறைகள்,கட்டுப்பாடுகள் ,தளர்வுகள்,வடிவங்கள் எதுவும் தன்னை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதும் இப்புதிய தலைமுறையின் தொடக்கமாக வந்த சபரியின் கவிதைகள் முன்னெடுத்ததாக நினைக்கிறேன்.

 அவரது முதல்தொகுப்பிற்குப் பிறகு இது மாறக் கூடும் அல்லது அத்தகைய முயற்களில் இருந்து கிடைக்கும் நற்பெயரைக் காப்பாற்ற தனது புத்தாக்க முயற்சிகளைக் கைவிடவும் வாய்ப்புண்டு எனவும் நினைத்தேன்.

        ஆனால் பின்னர் வந்த வால் தொகுப்பும் சில பிரமாதமான நீள் கவிதைகள் எனக்கு பிரமிப்பைக் கொடுத்தன. நண்பர்கள் சிலருடனும் அல்லது தனித்தபொழுதுகளிலும் கவிதைகள் குறித்த அவரது விசாலமான அறிவும் அதுகுறித்து வெளிப்படுத்தும் விதமும் மதிப்பு வாய்ந்தவை.தன்வாசிப்பிற்கும்,தன் அனுபவத்திற்குமான உரையாடலை மெல்ல விழுங்கும் தோரணயில் விவரிப்பவர்.கூர்ந்து கவனிக்காவிட்டால் தன் பேச்சினூடாக வெளிப்படும் சிரிப்பினில் தன்னை கரைத்துக்கொள்பவர் சபரிநாதன்.

சபரியின் இரண்டாவது தொகுப்பு நான்கு பிரிவுகளடங்கியது,

வால்,

நோதலும் தணிதலும்,

நீண்ட பகல்கள் கொண்ட சிறிய தினங்கள்,

என் வீட்டிற்குச்செல் ஒரு படகு வேண்டும்

என நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

         இத்தொகுப்பை எனது முந்தைய வாசிப்புகளிலிருந்து இம்முறை சற்று பகுத்துக்கொண்டேன்.இதனால் ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாக இத்தொகுப்பை வாசிக்கும்படி நேர்ந்தது.இதில் நோதலும் தணிதலும் என்ற பகுதியை வாசிக்கும்போது மறு வாசிப்பும்,நிதானமும் தேவைப்பட்டது. மனித மூளை தொடர்பாக சில சிந்தனைகள் என்ற நீள் கவிதையும்,திருவான்மியூர் மேகங்கள்,ஆரோக்கிய மாதா ஆலயம்,அர்த்த மண்டபம் ஆகிய கவிதைகள் முந்தைய தொகுப்பின் லேசான அங்கத்திலிருந்து விலகி அனுபவத்தை நோக்கி நகர்ந்திருந்தது.

மனித மூளை தொடர்பாக சில சிந்தனைகள் கவிதையின் ஒருபகுதி;

என் மூளையை யார்யாரோ பயன்படுத்துகின்றனர்,இங்கிகிதமேஇல்லை

அது என்ன பொதுநீர்க் குழாயா அதுவும் இலவசத் தொடர்பு எண் வசதியுடனா

பாவம் ஒரு மனித மூளை ஏன் இவ்வளவு பாதுகாப்பற்று திறந்து கிடக்கிறது

 நடைவழிச்சத்திரமென

கபாலமே சல்லாத்துணி முக்காடுதான் போல

என்பதால் பலநேரம் அது வெட்டவெளியின் கீழ் வாழ்கிறது

தொலை நோக்கியென

நுரையீரலுக்கோ சிறுநீரகத்துக்கோ நன்கு தெரியும் தன் பணி என்ன என்று

இருதயத்திற்கோ எதுவும் ஒரு பொருட்டில்லை

நான் உட்பட

ஆனால் இந்த மூளை இருக்கிறதே,தருமருக்கும் கூனிக்கும் பிறந்த                                                           குத்துச்சண்டை

வீரனின் கையுறையென காட்சியளிக்கும் இது நடுச்சாமத்தில்  திடுக்கிட்டு விழித்தெழுந்து

தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறது ‘நான் யார் என்று’

அருகில் வசிக்கும் மயிர்கள் எல்லாம் என்ன நினைக்கும்?

     மேற்கண்ட கவிதையும் இத்தொகுதியில் இரண்டாம் பகுதியில் உள்ள உயிர்தெழுதலின் கீதங்கள் என்ற கவிதையையும் வாசிக்கும்போது  வாசக மனம் குறித்த ஞாபகமற்ற,மொழி ஆளுமை குறித்த எச்சரிக்கையற்றபடைப்பாளி  வெளிப்படுகின்றான்.

தன்னிரக்கம் எனும் பேரழகிக்கு என்னும் கவிதையை வாசிக்கும் போது கவிதையுடன்  எழும் மனவெழுச்சி மிக அற்புதமானது.சபரியின் நுண் சித்தரிப்புகள் கூடிய வார்த்தைகள் அபாரமானவை அவை காலத்தால் அவரை தனித்துக் காட்டக்கூடியவை.இத்தொகுப்புகளின் வழி சபரியின் மொழிப்புலமை மற்றும் கவிதைகள்  குறித்த  அனுபவச் செறிவு,ஞானம் போன்றவற்றை தனது கவிதைகளின் வழி பிரயோகம் செய்வதில்லை என்பதை அறியலாம்.

      இத்தன்மையை உள்வாங்கி அவர் செயல்பட்டிருப்பாராயின் அவரது தொகுப்பில் உள்ள கவிதைகளின் வடிவத்தைக்குலைத்திருக்கும்.தனது மேதைமைக்கும் கவிதைக்கும் இடையில் நாம் கணிக்க முடியாத  இடைவெளி இருந்தால் அக்கவி பூரணத்தை அடைந்தவன் என முழுக்க நம்பலாம். இத்தன்மை கொண்ட கவியாக, சபரிக்கு சற்று முன்பு வந்த இளங்கோ கிருஷ்ணனை என்னால் நினைத்துக்கொள்ள முடிகிறது.

ஆரோக்கியமாதா ஆலயம்

எனக்கு கிராமத்து தேவாலயங்களைப் பிடிக்கும்

முற்றத்தில் கோழிக்குஞ்சுகள் விளையாடித்திரிய,

படிகளில் பெண்பிள்ளைகள் பேன் பார்த்து பொழுதோட்ட,

உலரும் ரத்தச் சிவப்பான வற்றல்களின் திருமுன்னில்

அநேகமாய் பூட்டியே கிடக்கும் கூடங்கள்.

அசமந்தமாய் வாயிலில் சருகுக் குருத்தோலை தோரணம்

ஓட்டுச் சாய்ப்பில் குடித்தனம் செய்பவை போக்கிரி அணில்கள்,

போன வருடக்குடிலில் குட்டிகளைப் பத்திரப்படுத்திய வெள்ளைப்பூனை

நெட்டி முறிக்கும் நீலப்புள்ளிகள் சிதறிய மஞ்சள் நட்சத்திரம் நோக்கி,

வில்மாடம்,அலங்கார விளக்குகள்,நிலையிருக்கை, எதுவும் இல்லை

குளிர் செங்கற் தளத்தில் அங்கங்கே மிதக்கும் ஒளித்தீவுகள் மட்டுமே.

பழையஓடுகளை மாற்றவேண்டும்,வாரம் ஒருமுறை தூத்து பெருக்க வேண்டும்

மின்சாரம் அற்றுப்போன சமயங்களில் எல்லா வீடுகளையும் போலவே அங்கும்

ஓர் இளைத்த மெழுதிரி ஒளி வீசிக்கொண்டிருக்கும்

அவ்விடம் எவரும் எழுந்தருளவில்லை,தந்தையின் வீட்டில்

வேலையில்லாப் பட்டதாரியென-அவ்வப்போது எடுபிடி வேலைகள்

செய்துகொண்டு,கட்டிக்கொடுக்கவேண்டிய வயதில் தங்கைகளுடன்        வசித்துவருகிறார் ஏசு,

காட்டுவேலை ஓய்ந்து வந்த மரியாள் குளித்து முடித்து

கங்கு வாங்கப்போகிறாள்.மழை வரும்போல இருக்கிறது.

இக்கவிதை சொல்லும் சித்திரத்தின் வழியாக,அதன் அழகு அங்கே நிகழும் வாழ்வு, ஊடாடும் நம்பிக்கையொளி ஆகியவற்றை மிகக்கச்சிதமாக வடித்திருக்கிறார் சபரி.

          வால் தொகுப்பில் மற்றொரு மையச்சரடாக மேலைத் தத்துவங்கள்,கிருத்துவ தொன்மங்கள் அறிவியல் சித்தரிப்புகள் ஆகியவை பெரும்பங்காக உள்ளன. இவற்றுடன் முடிவற்ற இலக்கை நோக்கிய பயணியைப்போன்ற வரிகளும்,முன்பு குறிப்பிட்டது போல பக்க ஒழுங்குங்குள்ளும்,கவிதை வடிவத்திற்குள்ளும் ஒடுங்கிவிடாத தன்மை கொண்டதாகவும்,லட்சியத்தை வலியுறுத்தாத,இருண்மைக்கு வழிகாட்டாத,பலதரப்பான மனவோட்டத்தை தன்னுடையதாகவும்,தன்னுடயதை பிறத்தியாருடையதாகவும் நிகழ்த்துவது சபரியின்  பெரும்பாலான கவிதைக்குள் மிகச்சாதாரணமாக நிகழ்கிறது.

உரைநடைக்கு சற்று அருகில் உலகியலின் இன்ப,துன்பத்தை,மெல்லிய அங்கதத் தன்மையுடன்  கவிதைகள் நிகழ்த்துகிறது .இது தமிழ் நிலப்பரப்பிற்கு புதியதாக தோற்றமளிப்பதில் வியப்பில்லை,முன்னதாக பிரம்மராஜன் இத்தன்மையான கவிதைகளின் முன்னோடியாக இருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.ஆனால் அவரது  தீவிர கிளாசிக் தன்மை, அதே வகையில் உறுதியாக சொல்லமுடியாத முறையிலும் தன்னெழுச்ச்சியான நிலையில் சபரியின கவிதைகளில் செயல்படுகிறது.மையத்தை விட்டு விலகிய மனப்பாங்குடன் உள்ளதாக கருதலாம்.

”எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கவிதையோடு இணைக்க விரும்புகிறேன்” என்ற நெருதாவின் கூற்றையும் நம்புகிறார் என்பதால் இத்தன்மை படைப்பில் வெளிப்படுவதில் வியப்பில்லை.

வால் தொகுப்பில் உள்ள கவிதைகளின்  தளம் பல்வேறு வகையில் விரிந்தும் நுணுக்கத்திற்கு அழைத்துச்சென்றும் முடிவற்ற அல்லது தீர்க்கமான அனுபவத்தை முற்றாக வழங்காமல் சென்று விடுகின்றன.அவற்றை தான் உத்தியாக மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கிறார்.வியப்புதான் ஆனால் ”கடைசி விளக்கு” என்னும் கவிதை இலையில் இருந்த கேசரியைக் காணவில்லை.இதையெல்லாமா தேடிக்கொண்டிருக்க முடியும் எனத்தொடங்கி

ரத்த அழுத்தம் நூற்றி எழுபதைத் தாண்டிவிட்டது

எல்லாமே மூடி வைக்கப்பட்டுள்ளது  ஞாபக அடுக்குகளில்,

ஊறுகாய் ஜாடி,கழுவப்படாத கருவாட்டு சருவம்,பால்கோவா வகிர்ந்த சிறுகரண்டி

……………………………………

இன்று அவரே பதவியேற்றுக்கொண்டார் அவரது மெய்காப்பாளராய் என கவிதை பல்வேறு திசைகளில்,நுட்பமாக செல்கிறது இக்கவிதையின் வாயிலாக நிரந்தரத் தன்மையும்,வாழ்வின் சாராம்சமும் கேள்விக்குள்ளாகிறது..வால் தொகுப்பில் பல கவிதைகளின் வாயிலாக இத்தன்மை வெளிப்படுகிறது.மிகப் பிரமாண்டமானதாகவும்,பொருள் செறிவுடையதாதகவும்,எளிமைப் படுவதாகவும் வால் தொகுப்பின் கவிதைகள் செயற்படுகின்றன. பல்வேறுகட்ட வாசிப்பிற்குப் பிறகும் பலவகையினில் புத்தம் புத்தம் புதிய அனுபவங்களை சாத்தியமாக்குகிறது.

             இதேபோன்று குசக்குடித்தெரு,அர்த்தமண்டபம்,பல்மருத்துவரது ஞானம் எனதொகுப்பில் பல கவிதைகளை அடையாளம் காட்டலாம்.என்ன.. சபரியின் கவிதைகள வாசிக்கும் வாசகன் தான் இக்கவிதைகளில் இருந்து கற்றுக்கொண்டது ஏதுமில்லை ஆனால் எதுவுமில்லாத ஒன்றிலிருந்து மிகச்சிறப்பான படிமங்களை,செவ்வியல் தன்மையான காட்சிகளை,அர்த்தங்களை பின் நவீனத்துவத்துடன் ஒரு புரிதலை அடைய வாய்ப்புள்ளது.

         கொஞ்சம் பொறுமையுடன் வாசிக்கப் பழகினால் சபரியின் கவிதையிலிருந்து நிச்சயம் புதியகவிகளும்,வாசகமனமும் கற்க நிறைய உள்ளது.இவ்விரண்டு தொகுப்புகளுக்குப் பிறகும் மொழியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் சபரி தொடர்ந்து ஈடுபடுவார் என்ற எண்ணம் எனக்குள்ளது. அதற்கு  சமீபத்தில் வனம் இதழில் வந்த முதுமரம் என்ற கவிதையும் ஒருசாட்சி.

  முன்னதாக      வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கவிஞர்களின் கவிதையை வாசித்தவுடன் எனக்கு அலுக்கும் வரை நண்பர்களுக்கு அதை வாசித்துக்காட்டும்வழக்கமிருந்தது.பிரமிள்,நகுலன் தொடங்கி மனுஷ்யபுத்திரன்,யூமா வாசுகி,ஷங்கர்ராமசுப்ரமணியன்,இசை,யவனிகா போன்றோரின் கவிதைகளுடன் ழாக் பெர்வரின் ”இந்தக் காதல்” ,தேவதேவனின் ”நார்சிசஸ் வனம்” போன்ற கவிதைகளை மதுவிடுதி,ஏரிக்கரை,சாலையோரம்,ஆற்றங்கரை என மனம் போன போக்கில் இருக்கும் இடங்களில் இருந்தெலெலாம்வாசித்தும் வாசிக்கச்சொல்லியும் இருந்ததுண்டு.

இத்தகைய வரிசையில் சமீபத்தில் சபரியின் கனலி இணைய இதழில் வெளியான கலீலியோவின் இரவு கவிதை எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.நீள் கவிதைகளை புறக்கணிக்காமல் செல்லும் கவிஞர்களுக்காக,வாசகர்களுக்காக எழுதப்படும் இக்கவிதைகளின்வழி வாசிப்பவர் உத்வேகமான,மறுமலர்ச்சியான ஒரு உணர்வைப் பெறுவதுடன் மொழியின் நவீனத்தன்மையை ஒரு தரிசனமாக காணவாய்ப்புண்டு.இத்தன்மையான கவிதையிலிருந்துசபரியின் ஒரு குறுங்கவிதை, அவரது தரிசனத்தை நமக்கு காட்டக்கூடும்..

அக்கவிதை;

ஏன்

இது சத்தியம்

நடுவர்,பயிற்சியாளர்,அணியினர்,எதிரணியினர்,பார்வையாளர்,பத்திரிக்கையாளர் அந்த

மைதானத்தில் உள்ள எவருக்கும் தெரியாது

பந்தை ஏன் கூடைக்குள் போடவேண்டுமென.

***

 

 

இணைப்பு ;கனலி இணைய இதழ் https://kanali.in/galileovin-iravu/

கலீலியோவின் இரவு | கனலி

 

வனம் இணைய இதழ் ;

முதுமரம் – சபரிநாதன்

                            

                                                                   

***

 

–  கண்டராதித்தன்

 

 

Please follow and like us:

1 thought on “முதுமரம் (சபரிநாதன் கவிதைகள் குறித்து)

  1. கண்டராதித்தனின் மனத்திரையை பொதுவெளியில் வைத்திருக்கிறார். அதில் சபரியின் கவிதைகள் தொடர் படக்காட்சிகளாக நகர்கின்றன. முன்பை விட காட்சிகள் துல்லியமாக தெரிகின்றன. சபரியின் கவிதைகள் ஏன் கொண்டாடப்படுகின்றன அல்லது ஏன் கொண்டாடப்படவேண்டும் என்ற கேள்விக்கான பதில்கள் முதல்முறையாக எனக்கு புரியத் தொடங்குவது போலிருக்கிறது
    நன்றி கண்டராதித்யன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *