முதுமரம்

காலையில் கண்ட சித்திரவதை காணொளி
இந்த நாளை இன்னும் இருண்டதாக்குகிறது.
சாலையில் எதிர்ப்படும் நாய்களும் குதிரைகளும்
உற்றுப்பார்க்கின்றன.நான் கண்டுகொள்ளாது கடக்கிறேன். கண்ணுக்குத் தெரியாத ஒன்றுடன் போரிட நேர்ந்ததால்

இந்தக் காலங்களை என்னைத் தற்காத்துக்கொள்வதிலேயே கழித்தேன்.
நலம் பேணினேன் கைகளைக் கழுவினேன் மீண்டும் மீண்டும்
நான் எத்தனை ஆபத்தானவன் என்பதை அறிந்துகொண்டேன்.
பாதை நெடுக நீளும் மதிற்சுவர், அதன் மேல் குத்திட்டு நிற்கும்
உடைந்த சில்லுகள்,நடுவே இளவெயிலில் தண்டால் எடுக்கும் ஓணான்.
அது கழுத்துயர்த்தி பார்க்கிறது என்னை:
அதை நான் அறிவேன், அது என்னை அறியும்.
இது வன்முறை அன்று; வெறுப்பும் இல்லை; வேறெதோ ஒன்று.
காயத்தில் இருந்து கசியும் இருள்,மரத்துப்போனவோர் இடத்தில் முளைக்கும் விதை.
நான் தத்துவார்த்தப்படுத்தவில்லை.வெறுமனே காண விரும்புகிறேன்
நடைவழியில் உள்ள படுகுழியை,விரியும் மலைச்சரிவுகளை
விபத்து நடைபெற்ற இடத்தை,மெல்ல கலைந்து மூளும் பனிமூட்டத்தை.
ஒரு மனிதனை மரத்தில் கட்டி வைத்து அடிக்கின்றனர்.
ஒரு மனிதனை வாகனத்தில் பிணைத்து இழுத்துப் போகின்றனர்
(உயர் தானியங்கி தொழில்நுட்பத்தில் உருவான சிறிய சரக்குந்து அது)
நான் காணாத காட்சிகள்,பாதியில் நிறுத்தி வெளியேறிய பதிவுகள்,
பார்க்கத் தவிர்த்தவை,இப்போது படம்பிடிக்கப்படுபவை,
புதிதாகப் பகிரப்படவுள்ள பதிவேற்றங்கள்.. எங்கெங்கோ
ஓடிக்கொண்டிருக்கின்றன அவை எவரெவரின் திரைகளிலோ
குறையொலியுடன்,மீள மீள,ரகசியமாக,இடையறாது
முடிவற்ற மானுட விகாரத்தின் காணொளி.
நான் காட்டிற்குள் நுழைகிறேன்
நெடிதுயர்ந்த மரங்களிடையே நடந்து எத்தனை நாளாயிற்று?
காலடியில் வேர்களின் பேரிணையம்.
பசுங்கடலின் ஆழத்தில் நான்
முதன்முதலாகப் பார்க்கிறேன் பனித்துளிகள் ஒளிரும் முட்களை.
மரக்கிளையில் சுருண்டுறங்கும் மலைப்பாம்பு.
அசைகிறது இரை கொறிக்கும் குறுமுயலின் ஒரு காது.
உச்சிகளில் இருவாட்சிகளும் மந்திகளும்.
நீராவி ஒளியை வரைகிறது.காற்றில் நிசப்தம்.
இது மாலை,மனித இனம் தோன்ற இன்னும் இருபதாயிரம் ஆண்டுகள் உள்ளன.
குனிந்து ஒரு கல்லை எடுத்துக்கொண்டேன் வீட்டிற்குக் கொண்டுசெல்ல.
அதில் எழுத்துகள் இல்லை, ரேகை இல்லை, உறைந்து கறுத்த குருதி இல்லை.
திரும்பும் வழியோரத்து மொட்டைப் பாறையில் வேர்விட்டு நிற்குமொரு முதுமரம்.
நான் அதன் அருகில் செல்கிறேன் தொடுகிறேன் இலைகளை நுகர்கிறேன்
அதன் முறிந்த கிளையின் நிழலில் என்
கையின் நிழலை இணைத்துக் காண்கிறேன்:
ஒரு விடுபடல், சுநாதம், பொருள், அமைதி.

***

-சபரிநாதன்

Please follow and like us:

3 thoughts on “முதுமரம் – சபரிநாதன்

  1. சமூக வன்முறையிலிருந்து ஒரு தற்காலிக விடுதலையை இயற்கையில் காணுதல். நாம் மரமாகவோ, பனித்துளியாகவே இருந்திருக்கலாம் என்கிற எண்ணம். ஆனால் நாம் திரும்ப முடியாத தொலைவைக் கடந்து வெகுகாலம் ஆகிவிட்டதால் எங்கெங்கிலும் நிரம்பியிருக்கும் வன்முறையின் நடுவே இப்போது நாம் தப்பியிருக்கிறோம் என்பதுவே ஆறுதல். நல்ல கவிதை

  2. ஒரு கவிஞனாக நான் இன்று எழுத நினைத்த பொருள் பற்றிய கவிதை.சில இடங்களில் நானும் வரிகளுள் முயங்கினேன்.இவ்வளவு வடிவாக கோர்வையாக எழுதி முடிக்க என்னால் இயலாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *