ஏழு காடுகள்

இது வரை ஏழு காடுகளுக்குள் புகுந்து வந்திருக்கிறேன். ஒரு நாள் தற்செயலாக ஒரு காட்டுக்குள் போன போது அது ஒரு வகையில் நிறம் மாறி இருந்தது. அப்படியே உள்ளே நுழைந்து போனால் வெள்ளி நிற மரங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் நீர் என அங்கு எல்லாமே வெள்ளி நிறத்தில் இருந்தன. நான் மட்டும் தனிப்பட்டுத் தெரிந்ததால் ஓர் ஆட்டின் அறிவுரைப்படி அங்கிருந்த நீரைப் பருகியவுடன் வெள்ளி நிறத்திற்கு மாறினேன். அந்த வெள்ளி நிறக்காடு ஒரு கட்டத்திற்குப் பின் திகட்டத் தொடங்கியதால்  அங்கிருந்து நகர்ந்து வேறொரு காட்டுக்குள் சென்றுவிட்டேன். அங்கிருப்பவற்றைத் தொட்டால் கல்லாக மாறிவிட்டன. அந்த விபரீதத்தைப் பொறுக்க முடியாமல் வேறொரு காட்டிற்குச் சென்றேன். அங்கு ஒளிவீசும் பாறைகளும், செடிகளும், நட்சத்திரங்களைப் போன்ற மலர்களும் இருந்தன. அங்கிருந்த எதையும் தொட முடியாது, பசி வந்தால் உண்ணவும் முடியாது. அதனால் அடுத்த காட்டைத் தேடினேன். அது ஓர் இருள் நிறைந்த புதர். ஆனால் அளவிலா கனிகள் நிறைந்திருந்தது. அவற்றில் ஒன்றைப் பறித்துத் தின்றவுடன் மிகப்பெரிய உருவமாக மாறிவிட்டேன். அத்தனை உயரத்திலிருந்து பார்த்தால் எல்லாம் சிறியதாகத் தெரிந்தன. ஆனால் அந்தப் பெரிய உருவம் உவப்பாக இல்லாததால் மற்றொரு காட்டுக்குப் போனேன். அங்கிருந்த ஓர் அணில் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு தான் கடித்த பழத்தைத் தூக்கிப் போட்டது. அதை உண்டவுடன் மீண்டும் பழைய உருவம் வந்தது. அங்கு விலங்குகள் எல்லாம் நண்பர்களாகிவிட்டன. அங்கிருந்த ஓர் மரம், அந்தக் காட்டில் சுற்றித் திரிவதைவிட அடுத்த காட்டிற்குப் போனால் மோட்சத்தை அடையலாம் என்றது. அந்தக் காட்டைத் தேடிப் போய் அடைந்தேன். அங்கு போனவுடன் சிறுவயதிலிருந்து செய்த தவறுகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர கதி கலங்கியது. அங்கிருந்து ஓடி முடிவாக இந்தக் காட்டுக்கு வந்தடைந்தேன். எந்த ஆசையும் இல்லை; எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இங்கே எல்லாம் அமைதியாகிவிட்டது. ஆனால் என்ன ஆனது என்றால் இங்கு இந்த மிளாவின் கண்களுக்குள் சிக்கிவிட்டதால் மற்ற காடுகளுக்குச் சென்று வந்ததைத் தவிர வேறெதுவும் நினைவில் இல்லை.

***

கத்தியுடன் ஒரு பெண்

அவள் கத்தியுடன் அலைந்து கொண்டிருந்தாள். அவளைத் தொல்லைப்படுத்தக் கூடாது, எந்தச் சீற்றமும் அடையச் செய்யக்கூடாது என அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை உற்றுப் பார்க்கக்கூட இல்லை. அவளைக் கனிவாகப் பார்த்து என் அரவணைப்புக்குள் வர அழைக்கும் பாவனை மட்டும் கொண்டிருந்தேன். அவள் பின்னணியை அறிய எந்த விருப்பமும் இல்லை. ஏதோ ஒரு காரணம் இன்றி அவள் இப்படி கத்தியை வைத்துக் கொண்டு அலையமாட்டாள் என உறுதியாக நம்பினேன். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வையே உறையச் செய்தது. அவள் கையிலிருந்த கத்தியை எடுத்துப் பதம் பார்ப்பது போல் நீவிவிட்டு என் மீதிருந்த பார்வையை விலக்கினாள். எனக்குச் சிறிது அச்சமாக இருந்தது. இவள் எப்படிப் போனால் எனக்கென்ன, நான் ஏன் கவலைப்பட வேண்டும், என் வழியில் போய்விடலாம் என நினைத்தேன். இருந்தாலும் அவள் படும் அவஸ்தை தடுத்தது. அவளை என்னுடன் அழைத்துச் சென்றுவிட வேண்டும் எனப் பிடிவாதமாகத் தோன்றியது. அவள் அருகே சென்றேன். அவள் முன் மண்டியிட்டு என் தலையை அவள் கொய்து கொள்ளலாம் என்பது போல் பலியாடாக நின்றேன். அவள் என்னைத் தீர்க்கமாகப் பார்த்தாள். என்னை விட்டு விலகிச் செல்ல முயன்றாள். மீண்டும் அவளைப் பின்தொடர்ந்து சென்று அவள் கவனத்தை என் பக்கம் திருப்ப முயன்றேன். சாக விருப்பமா என்றாள். ஆம் என்றேன். உனக்குத் தகுதியில்லை என்றாள். என்ன செய்யவேண்டும் என்றேன். குழந்தையைக் கொன்று சாக்கடையில் வீச வேண்டும்; அதைப் பார்ப்பவர்களின் கண்களைக் குத்த வேண்டும்; எதிர்த்தால் கொலை செய்யத் துரத்தி வரவேண்டும் என்றாள். இப்படிச் செய்தவர்களைத் தீர்த்துக்கட்ட இந்தக் கத்தி போதுமா என்றேன். வேறு ஏதாவது ஆயுதம் இருக்கிறதா என்றாள். ஆம் என்றேன். அதைத் தரச் சொன்னாள். என்னுடன் வரும்படி அழைத்தேன். வந்தாள். வீட்டுக்கு அழைத்து வந்து நினைவை அழிக்கும் மூலிகை பானத்தை எடுத்து அருந்தத் தந்தேன்.

***

கண்கள் சொல்லும் பொய்

அன்று அவள் கடுங்கோபத்தில் இருந்தாள். அவளுடைய கணவனிடம் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வலுத்தது. அவன் வெளியில் சென்றுவிட்டான். அப்போது பெரிய இடி மழை பொழிந்து கொண்டிருந்தது. அவன் மீது சிறிதும் கரிசனம் அவளுக்குத் தோன்றவே இல்லை. எப்படியாவது போகட்டும் என எண்ணிக் கொண்டாள். அப்படியே தூங்கிப் போனாள். காலை வரை அவளது கணவன் வீடு திரும்பவில்லை. மெதுவாக எழுந்து மலைப்பாதையில் நடந்தாள். தூரத்தில் ஒரு பூங்காவில் அவள் கணவன் அமர்ந்திருப்பது தெரிந்தது. அருகில் சென்று அமர்ந்தாள். என்ன ஆயிற்று என்றாள். முந்தைய நாளின் இடி மின்னலில் தன் பார்வை பறி போய்விட்டது என்றான். அவளுக்குச் சங்கடமாக இருந்தது. அவன் கைகளைப் பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தாள். இனி தங்களுடைய பரந்து விரிந்த தொழில் சாம்ராஜ்யத்தைத் தானே பார்த்துக் கொள்வதாகவும் அவன் அவளுக்கு உதவினால் மட்டும் போதும் என்றும் கூறினாள். அவன் அமைதியாக இருந்தான். அலுவலகம் அழைத்துப் போனாள். அவன் எதுவும் பேசவில்லை. வீட்டுக்குத் திரும்பிய போது அவள் கணவன் போலவே ஒருவன் அமர்ந்திருந்தான். அவளுக்குச் சற்று குழப்பமாக இருந்தது. அவளுடன் இருப்பவனைப் பார்த்து யார் இவன் என்று அவன் கேட்டான். நீ யார் என்றாள் அவள். ஒரே நாளில் என்னை மறந்துவிட்டாயா என்றான் அவன். நடித்தது போதும் முதலில் அவனை வெளியேறுமாறு சொன்னாள். அவன் திகைத்து நின்றான். பின் வெளியேறிவிட்டான். அவள் யோசித்துப் பார்த்தாள். வெளியேறிவிட்டவன்தான் தன் கணவன் என அவளுக்குப் புரிந்தது. அவனைப் போலவே இருக்கும் இந்தப் பார்வையற்றவனைக் கணவனாக்கிக் கொண்டால் தனக்கு எந்தச் சிக்கலும் இல்லை என முடிவெடுத்தாள். கணவனிடமிருந்து பிரிதல், விவாகரத்து, போன்ற எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தனக்கு ஓர் எளிமையான தீர்வு கிடைத்திருப்பதை எண்ணி பெரிதும் மகிழ்ந்து போனாள்.

***

வித்தை

அவள் தன் தந்தையிடம் கற்ற மாயாஜால வித்தைகளை மெருகேற்றி பல இடங்களில் நிகழ்ச்சிகளாக நடத்திவந்தாள். அதற்கான சில புதிய எந்திரங்களையும் அவள் வடிவமைத்து உருவாக்கினாள். அதில் ஒன்று குழந்தைகளைச் சிறிய பெட்டிகளில் வைத்துவிட்டு ஒரு சுற்று சுற்றிவிட்டால் அவை பொம்மைகளாகிவிடும். மீண்டும் ஒரு சுற்று சுற்றிவிட்டால் அவை குழந்தைகளாகிவிடும். இதற்கான ஓர் எந்திரத்தை வடிவமைத்து வித்தை காட்டினாள். அங்கு வந்திருந்தவர்களின் குழந்தைகளை வாங்கி அந்தப் பெட்டிகளில் வைத்து வித்தை செய்துகாட்டினாள். குழந்தைகளைக் கொடுத்தவர்கள் மீண்டும் அவைகளைப் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்கள். ஒரே ஒரு குழந்தையை மட்டும் யாரும் வாங்கவரவில்லை. என்ன செய்வது என யோசித்து அந்தக் குழந்தையைத் தானே வளர்க்கலாம் என முடிவெடுத்தாள். அந்தக் குழந்தை வளரும் போதே பல வித்தைகளைக் காட்டும் திறன் பெற்றிருந்தது. அவளுக்கு அது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. சிறிது வளர்ந்து சிறுவனாகிவிட்ட அந்தக் குழந்தை ஒரு நாள் அவளிடம் தனக்கு வித்தை காட்டுவதற்கு ஒரு பெண் மற்றும் ஆண் பொம்மை வேண்டும் எனக் கேட்டான். அவளும் ஏதோ ஒரு புதிய வித்தையாக இருக்கும் என எண்ணி ஆண்-பெண் பொம்மைகளை வாங்கி வந்து கொடுத்தாள். அன்றைய காட்சியில் அவள் வடிவமைத்த குழந்தைகளைப் பொம்மைகளாகவும் பொம்மைகளைக் குழந்தைகளாகவும் எந்திரத்தில் அந்த ஆண்-பெண் பொம்மைகளை அவன் வைத்தான். தன்னுடைய பெற்றோர் யாரென்று தனக்குத் தெரியாது. அந்தப் பொம்மைகள் உயிர் பெற்றுவந்தால் அவர்கள்தான் தனக்குப் பெற்றோர்கள் என்றான். இத்துடன் இனி தான்  வித்தைகாட்டப் போவதில்லை என்று கூறி அந்த எந்திரத்தைச் சுற்றிவிட்டான். பொம்மைகள் உயிர் பெற்றன. அவர்களுடன் அவன் விடைபெற்றான்.

***

கொடுக்கு

அவளுக்குப் பச்சைக்குத்திக் கொள்ளும் பெரும் ஆவல் தோன்றியது. ஒரு கடைக்குப் போய் தன் கையில் சிறிய தேள் உருவத்தைப் பச்சைக்குத்துமாறு அங்கிருந்த பெண்ணிடம் கூறினாள். அவளும் ஒரு சிறிய அழகிய தேளை அவள் கையில் பச்சைக் குத்திவிட்டாள். லேசாக வலித்தது. அடுத்த நாள் சிறிய கருந்தேள் அவள் கையில் இருந்தது. அதைப் பார்த்தவர்கள் அது உயிருள்ள தேள் என்று பயந்துபோனார்கள். அவளுக்குப் பெருமையாக இருந்தது. அடுத்த  நாள் காலை எழுந்து பார்த்தவளுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கையில் இருந்த தேள் காணாமல் போயிருந்தது. எழுந்து செருப்பைப் போடும் போது அது காலில் இருந்ததைக் கண்டாள். அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகி விக்கித்துப் போய் அமர்ந்தாள். உடனடியாக அந்தப் பச்சைக்குத்தப்பட்ட தேள் சின்னத்தை அழித்துவிட மருத்துவர்களைத் தேடிப் போனாள். அவர்களிடம் மன்றாடி அந்தச் சின்னத்தை அழிக்க வேண்டினாள். அவர்களும் புதிதாக வந்திருந்த லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதை அழிக்க முயற்சி மேற்கொண்டார்கள். கையில் இருக்கும் தேள் சின்னத்தை அழிக்கப் பார்த்தால் அது முகத்திற்குத் தாவியது. முகத்திலிருந்து காலுக்கு இப்படி ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்துகொண்டே இருந்ததால் மருத்துவர்கள் அதனை அழிக்கும் முயற்சியைக் கைவிட்டார்கள். அவளும் இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பது என்று புரியாமல் வீடு வந்து சேர்ந்தாள். அந்தப் பச்சை குத்திய பெண்ணிடம் சென்று நடந்ததைக் கூறினாள். அந்தப் பெண் அதைக் கேட்டுச் சிரித்துவிட்டு இது போல் பலருக்கும் நடந்திருப்பதாகவும் தேளைக் குத்திக் கொண்டால் இப்படி நடக்கும் என்றும் அதை அழிப்பதற்குத் தன்னிடம் ஒரு மை இருப்பதாகவும் அதைக் கொண்டு அந்தச் சின்னத்தை அழித்துவிடலாம்  என்றும் ஆனால் அந்த இடத்தில் வேறு ஒரு சின்னத்தைப் பச்சைக் குத்திக் கொள்ளவேண்டும் என்றும் கூறினாள். அதை ஏற்றுக்கொண்டு தேள் இருந்த இடத்தில் ஒரு சிறிய பாம்பின் சின்னத்தைப் பச்சைக்குத்துமாறு கூறினாள். இரவு நிம்மதியாக உறங்கினாள். அவள் கட்டிலைச் சுற்றி ஒரு பாம்பு படுத்து உறங்கியது.

***

-முபீன் சாதிகா

Please follow and like us:

1 thought on “முபீன் சாதிகா குறுங்கதைகள்

  1. ஐந்து கதைகளும் ஐந்து விதம். இன்றைய கதைகளில் வழகககமாக காண்ப்படும் பிரச்சார நெடி, காதல் , காமம் , கண்ணீர் , கழிவிரக்கம் போன்ற எவையும் இன்றி கதைகள்” வருவதே பேராச்சர்யம்

    தேளைக் கொடுத்து பாம்பை ஈட்டுதல் , வசதியாக இருப்பதால் பொய்யுடனேயே வாழ்தல் ” கத்தியை மழுங்கடிக்கும் காதல் , ஏழு காடுகள் அதன் பின் அமைதி என சித்தர் பரிபாஷை , பெற்றோர்களை பெற்றெடுப்பவன் என அன்றாட யதார்த்த்தை மீறிச்செல்லும் நடையில் மேல்மனதை பைபாஸ் செய்துவிட்டு நேரடியாக ஆழ்மனதை அடைகின்றன கதைகள்.

    மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *