“இந்த மண் எங்களின் பாத ஸ்பரிசத்திற்குத் தரும் அன்பு உங்கள் கால்களின் கீழ் உங்களுக்கு கிடைக்காது. ஏனென்றால் அது எங்கள் முன்னோர்களின் சிதைச் சாம்பல்தான். அதன் கருணையைப்பற்றி பிரக்ஞையுள்ளவை தான் எங்கள் பாதங்கள். அந்தளவு இந்த மண் எங்கள் இனத்தின் உயிரால் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிறது”

– செவ்விந்திய பழங்குடி தலைவன் துவாமிஷ்

‘பயப்படவேண்டாம். இப்போதெல்லாம் நாங்கள் மனித மாமிசம் சாப்பிடுவதில்லை. காட்டுப்பன்றிகள், மீன்கள், சக்கரைவள்ளி கிழங்குக்கு மாறிவிட்டோம்’’

‘நான் சிறுவயதில் என் அப்பாவோடு சேர்ந்து நரபலியை கண்டுள்ளேன். அது ஒரு சடங்கு. மாமிசத்தில் ஒரு துண்டையாவது சாப்பிடவேண்டும். இல்லையென்றால் அது நாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு செய்யும் துரோகமல்லவா? ’

ஒரு கக்கூவா அவர்களிடம் சிக்கினால் என்ன செய்வார்கள் என்பதை அவர்களின் வாயிலாகவே கேட்டுக்கொண்டிருந்தேன். முதலில் கக்கூவா கழுத்தை தனியாக அறுத்துவைப்பார்கள். பின்பு வயிற்றுப்பகுதியை கிழித்து குடலை தனியாக பிரித்து விட்டு அதற்கு மேல் இருக்கும் நெஞ்சுக்கூட்டை இரண்டாக பிரிப்பார்கள். பழைய நரபலியில் மிச்சம் இருந்த சிவப்பு துண்டில் கட்டியிருந்த மண்டை ஓடுகளை என்னிடம் காட்டினார்.

ஜேக்கப் ஏன் என்னை கக்கூவா என கூறினான். அந்த வார்த்தையை கூறிப்பார்த்தேன். என் முதுகுத்தண்டு ஜிலிரீட்டது. ‘கக்கூவா’ எனும் வார்த்தையே அவர்களின் நாக்கில் மனிதமாமிசத்தை புசிக்கும் அமிலத்தை சுரக்கவைத்துவிடும். அவர்களை பழைய காலத்திற்கு இழுத்துச்செல்லும் என எண்ணும் போது இதயம் வேகமாக துடிக்க துவங்கி பதட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

ஜேக்கப் என் கையைப்பிடித்துக்கொண்டு, ‘இங்கிருந்து எப்படியாவது தப்பித்து ஓடிவிடு..உன்னை ஒரு வழி செய்து விடுவார்கள்.. ஒரு கக்கூவாவை அடையாளம் கண்டுவிட்டால் சும்மாவிடமாட்டார்கள். உடம்புக்குள் துர்தேவதைகள் புகுந்துவிட்டது என நம்பிவிட்டால் அவர்களை நரபலியாக்காமல் விட்டதேயில்லை. அப்படிவிட்டால் அவர்களுக்கு பெரிய இழப்பு வரும். வாயெல்லாம் மனிதவேட்டைக்கு எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது ‘ என்றான்.

‘நான் ஒன்றுமே செய்யவில்லையே..’ என்றேன் பதைபதைப்புடன்.

‘சரி அதைவிடு.. நீயும் என்னோடு வந்துவிடு ஜேக்கப்..உன்னையும் ஏதாவது செய்துவிடுவார்கள்..’

‘என்னை ஒன்றும் செய்யமாட்டார்கள். நான் உன்னோடு ஓடிவந்துவிட்டால், பழங்குடிகளில் மீண்டும் என்னை சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள்…. நீ இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிடு….’

அவன் என் கையைப்பிடித்து வழியனுப்பிவைத்த சூடுகூட இன்னும் என் உடலைவிட்டு நீங்கவில்லை. நான் இந்த காட்டிற்குள் எங்கே ஓடுவது என்ற குழப்பம் ஒரு புறம், இன்னொரு பக்கம் பிழைப்போமா மாட்டோமோ என்ற படபடப்பு. எனக்கு குறிவைத்த ஈட்டி கம்புகளும், அம்புகளும் என்னை தொடர்ந்து வந்து விழுந்துக்கொண்டிருக்கின்றன.

உயிர் பயத்தின் காரணமாக ஓடும் இந்த கால்களின் வேகம் இதயத்தின் துடிப்பை கூட்டி பதட்டத்தை உருவாக்குகிறது. பதட்டத்தில் எடுக்கும் எந்தவொரு முடிவும் தோல்வியிலேயே முடியும் என்று எனக்கு தெரியும். பதட்டமான சூழலில் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது. நான் கடந்து வந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக என் மூளை வரிசைப்படுத்த ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஒரு எண்ணுருவில் நுழைத்து சிந்தனையை சீராக்குவேன்.

மூன்று நாட்களுக்கு முன்புதான் சுற்றுலா வழிகாட்டி ஜேக்கப் எனக்கு விபரங்களை ஈமெயில் செய்திருந்தான். ஓராங் ஊட்டான் அத்திப்பழங்களை உண்ணும் காணொளி, இணைக்கப்பட்ட அவனது ஈமெயில் கடிதத்திற்கு கீழே ஒரு கொடியிருந்தது. மேல் பாதியில் கருப்பு நிறம், கீழ் பாதியில் சிகப்பு நிறம். நடுவே மஞ்சள் வட்டம். இதில் கருப்பு என்பது மேற்கு பப்புவா பழங்குடி மக்களையும், சிகப்பு என்பது நிலத்தையும் மஞ்சள் எல்லா உயிர்களும் ஒளிப்பெறக்காரணமான கதிரவனை சுட்டும். நான் அவனோடு பயணத்தில் செய்யவேண்டியவை/ செய்யக்கூடாதவைகள் என நீண்ட பட்டியலிட்டு இருந்தான். அவனுக்கான மூன்று நாள் தொகையை அதற்கு முன்பே அனுப்பியிருந்தேன். அதற்கான ரெமிட்டன்ஸ் ரசீதை எனது மடிக்கணினி மேசையில் வைத்திருந்தேன். அப்பாவிடம் ‘இது ஒரு அலுவலக பயணம்’ என்று பொய் சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பினேன்.

சிங்கப்பூரிலிருந்து பாலி, பின்பு பாலியிலிருந்து ஜெயப்புரா விமான நிலையம். ஜேக்கப், விமான நிலையத்திலிருந்து என்னை காரில் அழைத்துக்கொண்டான். இந்தோனேசியர்கள் ஆங்கில எழுத்துரு ‘சி’ ன் உச்சரிப்பு உச்சரிப்பை ‘ச்ச’ என்றே உச்சரிப்பார்கள். ஜேக்கப் உரையில் அதிகமான ‘ச்ச’ வந்து கொண்டேயிருந்தது. நான் போகவேண்டிய இடங்களைப் பற்றிய குறிப்புகளை வழியெங்கும் பள்ளி மாணவன் போல் ஒப்புவித்துக்கொண்டே வந்தான். ஒரு சுற்றுலா வழிகாட்டி அப்படிதான் இருக்கவேண்டும். அவன் விவரிக்கும் தகவல்களிலேயே உங்களுக்கு நம்பிக்கை வந்துவிடும். ஜேக்கப் வழிகாட்டுதல் குறித்து நம்பிக்கையான நேர்மறையான விமர்சனங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. உலகெங்கும் பயணங்களுக்கான வழிகாட்டி குழு இருக்கின்றது. ஹிப்பி, டிரெக்கர், ஊஃபிங் புகைப்படகலைஞர்களுடனான இந்த நெட்வொர்க் மூலம் எந்த நாடுகளிலும் உங்களது வழிகாட்டிகளை பெற்றுக்கொள்ளலாம்.

விமான நிலையத்தில் சிகரெட்டை புகைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தவன், பின்பு காரில் ஏறி நாங்கள் செல்லும் பாதையில் சிகரெட்டை ஊதிக்கோண்டே வந்தான். வழியில் ஓரிடத்தில் மட்டும் வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையோர பழக்கடையில் கொஞ்சம் ரம்புத்தான் பழங்களை வாங்கி காலுக்கு கீழே போட்டுக்கொண்டேன். வழியெங்கும் நான் உரித்து சாப்பிட்டுக்கொண்டே வந்த ரம்புத்தான் மீது அவனுக்கு விருப்பமில்லை. சிகரெட்டையே போதுமென ஜேக்கப் நினைத்துவிட்டான் போல். கூட்டம் கூட்டமாய் சிறு சிறு தீவுகள், அதுவும் ஆயிரக்கணக்கில் தீவுகள் இருக்கும் இந்தோனேசியாவில் சிகரெட் மலிவாக கிடைக்கும். ஒரு கையில் கருங்கோப்பியும் மறுகையில் சிகரெட்டும் வைத்துக்கொண்டிருக்கும் இந்தோனேசியர்களை பரவலாக காணலாம்.

விமான நிலையத்திலிருந்து வந்த வாகனத்தை ஜேக்கப் அனுப்பிவைத்துவிட்டு இருவரும் ஒரு சிறிய படகு குழாமை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். படகு துறைமுகத்திற்கு பின்பு நீண்ட பச்சைவெளியில் எங்களுக்காக சிறிய ரகவிமானம் காந்திருந்தது. நாங்கள் ஏறுவதற்கு முன்பு , என் கையைப்பிடித்து நிறுத்தியவன்,

‘ இவர்கள் மற்ற பழங்குடியினரைப்போல் அல்ல. கொஞ்சம் வித்தியாசமானவர்கள். கொஞ்சம் பிசகினாலும் நம் உயிருக்கு ஆபத்து. இதுபோன்ற விபரீதங்களில் நான் முன்பு இறங்கியதில்லை’ என்றான்.

அவன் கூறியதை நான் ஆமோதித்தேன். மீண்டும் கடிதத்தில் கூறிய விதிமுறைகளை ஒப்புவித்தான். அதில் முக்கியமான ஒன்றை நினைவிருக்கிறதா என்பதற்காக ஜேக்கப் சோதித்தான்.

‘ எக்காரணம் கொண்டும் அவர்கள் முன் தீப்பந்தத்தை கையிலெடுப்பதோ அல்லது தீப்பற்ற வைப்பதோ கூடாது. அது அவர்களை கோபமூட்டும்’ என நானும் அவனோடு சேர்ந்து கோரஸாக கூறினேன்.

ஜேக்கப் தொழில் ரீதியாக வழிகாட்டி என்றாலும், அவன் மேற்கு பப்புவா பழங்குடியினர்களின் உரிமைகளுக்காக போராடுபவன். அவ்வப்போது திடீர் என காடுகளில் பற்ற வைக்கப்படும் தீ, அதை காரணம் காட்டி அரசாங்கம் பழங்குடியினரை காட்டிலிருந்து அப்புறப்படுத்த நினைக்கும் போதெல்லாம் அவனது குரல் போராட்டகளங்களில் ஒலிக்கும். உலகநாடுகளுக்கு மத்தியில் பப்புவா பழங்குடிகள் மீதுவெளிச்சத்தை கொண்டுவர அவன் உருவாக்கிய கொடி மிகவும் இணையத்தில் கவனத்தை ஈர்த்தது.

அந்தமான்,ஆஸ்திரேலியா,அமேசான், செவ்விந்திய பழங்குடிகள் என உலகின் எல்லா பழங்குடிகளும் எதிர்கொள்ளும் பிரச்னை ஒரே தன்மை கொண்டவை. அவர்களின் வாழ்விடங்களை பறித்துக்கொண்டு, ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அவர்களை நகரங்களில் கொண்டுப்போய் இறக்கிவிடுவார்கள். வளர்ச்சியடைந்த உலகம் என்பது அவர்களுக்கு நெடுஞ்சாலைகளில் வழிதவறி சிக்கிக்கொண்ட நெருப்பு கோழிகளைப்போல் திகைப்பும் பயத்தையும் தருவதையன்றி வேறெதையும் அவர்களுக்கு தரப்போவதில்லை என்பதில் ஜேக்கப் உறுதியாக இருந்தான். நகரத்தில் வாழ்ந்தாலும் மனதளவில் தானொரு காட்டுவாசியாகவே உணர்வதாக என்னிடம் ஒரு முறை கூறினான். அதற்கு அவன் கூறிய காரணத்தை நான் மட்டுமல்ல, யார் கேட்டாலும் ஆமோதிப்பார்கள்.

‘நகரவாழ்க்கையில் அமைதி என்று எதுவுமில்லை. அது வசந்தகாலத்தை பற்றியோ, இலையுதிர்காலத்தை பற்றியோ பருவநிலைகளை பற்றியோ எதைப்பற்றியும் பிரக்ஞையற்ற இரும்பு இதயம். அவ்வளவு தான், ஆனால் காடு அப்படியல்ல. உலகின் நுரையீரல், சுத்தமான காற்றை மழைமேகங்களை மனிதர்களுக்கு பரிசளிக்கிறது’

ஆகாயத்தின் நடுவழியில் விமானத்தின் ஜன்னல் வழியாக பார்த்தேன். திட்டு திட்டுகளாக பச்சை தீவுகள் நீலக்கடலில் மிதந்துக்கொண்டிருந்து. அதன் இடைவெளிக்குள் வளைந்து நெளிந்து செல்லும் பாம்புகள் போல் சிற்றாறுகள். மூன்று மணிநேர விமானப்பயணம், பிறகு நிலம் வழியாக ஒரு மணிநேரம், மீண்டும் விமான பயணம் என்பது அலுப்பையும் சோம்பலையும் தருவது. அதையும் மீறி ஒரு புகைப்பட கலைஞனாக, எனக்கு இருக்கும் ஆர்வமெல்லாம், நாங்கள் சந்திக்கபோகும் ஆதிவாசிகளைப்பற்றி.

நாம் காத்திருக்கும் அல்லது விரும்பும் கணத்தை ஒரு புகைப்படத்தின் வழியாக உறையவைப்பதன் மூலம் கிடைக்கும் கண்டடைதல் ஒரு தரிசனம். ஒருமுறை இந்தோனேசிய சுலவேசி டோரஜன் பழங்குடிகள், தங்களது மூதாதையர்களை வருடந்தோறும் புதைக்குழியில் இருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு பிடித்த உணவு உடையைக்கொண்டு அலங்கரிக்கும் சடங்கு, நான் அதில் பதிவுசெய்த புகைப்படங்களை வீட்டுக்கு வந்து புகைப்படங்களை பார்த்தேன். அதன் சடலங்களில் ஒழுங்கு தெரிந்தது. அது தான் அப்பா கூறும் அமைதியா என்று தெரியவில்லை. ஒருகட்டத்தில் நான் எடுத்த எல்லா புகைப்படங்களிலும் ரகசிய ஒழுங்கு அடுக்குகளாக இருப்பதை உணர்ந்தேன். ஒழுங்கு என்பது ஒளி, கோணம், தனித்த பார்வை இதில் ஏதாவது ஒன்றில் இலங்கும் ஒற்றுமை, தொடர்ச்சியாக எனது எல்லா புகைப்படங்களிலும் எதிரொலித்தது.

ஒரு புகைப்படம் புறத்தோற்றத்தை பதிவு செய்வதை விடவும் ஒளி,வர்ணம், கோணம் வழியாக அக உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க முயலும்போது ஓவியமாக மாறிவிடும் என்பார் அப்பா. அப்பாவும் அப்படித்தான். அவருக்கு வினோதமான பழக்கம் இருந்தது. ஊரில் இறந்தவர்களில் முன்னூறுக்கும் அதிகமான நபர்களின் இறுதிசடங்கு புகைப்படங்களை பொழுதுபோக்காக எடுத்துவைத்துள்ளார். விதவிதமான பிணங்கள், வித்தியாசமான கோணம், நெற்றியில் பொட்டு வைத்து, நாற்காலியில் சரிந்துக்கொண்டு.. கையிள் அரிவாளும் வேல் கம்புமாய்.. இப்படி பலகோணங்கள். அந்த புகைப்படங்களை பார்த்த பின்பு. ஒரு மனிதன் இறந்த பின் அவன் பிண்டத்தில் என்ன உணர்ச்சி இருக்கப்போகிறது என்று அவரிடம் கேட்டேன். மனிதன் மரணத்தை தழுவியபின் உடல் மீது படரும் ஒருவிதமான அமைதி..தியானம் போல் ..நீ அதைக் கண்டதில்லையா என்றார்.

மேகங்களுக்கு கீழே பறந்த விமானம் லேசான ஆட்டம் கண்டது. விமானத்தின் பைலட், சமோயோசிதமாக சமநிலையை அடைவதற்கு முயற்சித்துக்கொண்டிருந்தார். விமானத்திற்கு கீழே ஐலந்தான் ஆறு. வடக்கு தெற்குமாய் இருநூறு மைலுக்கு ஓடும் ஆறு, ஜெயவிஜயா மலையிலிருந்து குதித்து ஓடுகிறது.

‘சாம்பா’ , ஆறு பயணிக்கும் காடுகள் மீதும், அதன் ஆதிமூலம் ஜெயவிஜயா மலை மீதும், அதனை நம்பி பிழைக்கும் மேற்கு கரை பப்புவா பழங்குடிகள் மீதும் ஆதிக்கம் செலுத்துபவன். அவனை கரையோரங்களில் வாழும் மீன்பிடி பழங்குடியினர் ஓராங் ஊட்டான் வடிவத்தில் திரியும் ‘நியோன்’ என்றும் அழைப்பதுண்டு. நியோன் என்றால் ஒளி. சாம்பா, காடுகளில் வழிதவறியவர்களுக்கு பருந்தாக மாறி அவர்களுக்கு திசைநோக்கி பறந்து வழிகாட்டுவதாகவும், மலைகளில் மரங்களில் ஏறும் பழங்குடியினருக்கு அவனது மந்திரகைகள் அவர்களுக்கு உதவியாகவும், மீன்வேட்டையில் நீருக்குள் குத்தும் கூர்மையான மூங்கில் கழிகளுக்கு கைநிறைய அள்ள அள்ள மீன்களை தருவதாகவும் பழங்குடிகள் நம்புகிறார்கள். அவன் ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவன் அல்ல. ஆனால் அவன் வாழ்ந்த காலம் முழுதும் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக வாழ்ந்தான். ஒரு காட்டு வேட்டையின் ஈடுபட்டபோது குண்டடிப்பட்டு இறந்துப்போய்விட்டான். அதனை இங்கே சிலர் நம்ப தயாராக இருப்பதில்லை. அவன் உயிரோடு தான் இருக்கிறான். அங்கிருந்த பழங்குடிகளை அகற்றிவிட்டு பன்றி பண்ணையை தனியார் நிறுவனங்கள் நிறுவ முயன்றபோது, ஆயிரக்கணக்கான பன்றிகள் கழுத்தறுப்பட்டு இரத்தமும் சதையுமாக ஐலந்தான் ஆற்றில் மிதந்தன. அறுப்பட்ட பன்றி தலைகளை எடுத்துக்கொண்டு ஜெயவிஜயா மலையை நோக்கி நடந்துப்போன காக்கி உடையணிந்த வேட்டைக்காரன், சாம்பா தான் எனக்கூறுபவர்களும் இருந்தார்கள்.

‘காடழிப்பு’ திட்டங்களுக்காக மூலம் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் எக்காரணமுமின்றி பாதியிலே நின்றுப்போயின. அதில் வினோத ஒலியெழுப்பும் பறவைகளும் கூகை கூட்டங்களும் காட்டில் அமானுஷ்யமாக திரியும் செய்திகளுக்கு பின்னால் சாம்பாவின் அசட்டுப்புன்னகை இருந்தது. பழங்குடிகள் சாம்பா தாங்கள் தோளோடு தோள் நிற்பதாக நம்புகிறார்கள். காடுகளில் தீயை உருவாக்கி , அதன் மூலம் உயரமான மரவீடுகளில் வாழும் தவ்ஃபோ இனத்தை பிடித்துக்கொண்டுப்போய் வளர்ந்துவிட்ட கிராமங்களில் விடும்போதெல்லாம், அங்கு இருக்கமுடியாமல் பைத்தியம் பிடித்தாற்போல் காட்டை நோக்கி ஓடிவருகிறார்கள். ‘ஏன் திரும்புகிறீர்கள்’ என கேட்டால், ‘எங்களை சாம்பா சும்மா விடுவதில்லை. காக்கி உடையணிந்தவன், எங்கள் கைகளில் விலங்கிட்டு இழுத்துவருகிறான்’ என்பார்கள்.

முதன்முதலில் அவனைப்பற்றி நான் தெரிந்துக்கொண்டது ஜகர்த்தா அருங்காட்சியகத்தில். வனாய்வாளர் டக்ளஸ் ரிட்லியுடன் இறந்துகிடக்கும் சாம்பாவின் ஓவியம், அதற்கு அருகில் இறந்துக்கிடக்கும் ஓராங் ஊட்டான். காக்கி உடையில் மிடுக்குடன் மார்பில் இரத்த காயங்களுடன் கண்களை மூடிகிடந்தான். முன்பு அப்பா கூறியதுபோல் எல்லோருடைய மரணத்திலும் சம்பவிக்கும் அமைதி, அவனிடம் இல்லை. மாறாக அவன் கண்களில் உக்கிரம் தெரிந்தது. அது தான் எத்தனை நாட்கள் என்னை தூங்கவிடாமல் துரத்திக்கொண்டேயிருந்தது.

இதுபோன்ற நிகழ்வுகளை பிரிட்டிஷ் ஆவணங்களில் வன விபத்துகளாக வகைப்படுத்திவிடுவார்கள். புலியை வேட்டையாடும் போது, யானை மிதித்து, விஷப்பாம்பு தீண்டி இப்படி காரணங்களில் ஒன்றாக இருக்கும். சாம்பாவின் இறப்பு, ஓராங் ஊட்டானுக்கு குறிவைத்த டக்ளஸ் துரையின் நாட்டுத்துப்பாக்கி, அதன் குண்டுகளுக்கு தவறுதலாக பலி என்று டக்ளஸ் துரையாலே எழுதப்பட்டது. ஏட்டறிவில்லாத சாம்பாவின் காட்டுஞானத்தின் மீது டக்ளஸ் துரையின் பொறாமை படிந்திருந்தது. ஒரு அறிஞனுக்கு முன்பு எந்த பட்டறிவும் பொறாமையை தான் விளைவிக்கும். சாம்பாவின் கூர்மையான அறிவும், வனப்புலமையும் யாருக்கும் வாய்க்காது. சுமத்ரா,மலேயா, போர்னியா காடுகளில் அவனது கால்கள் கரைக்கண்டது. டக்ளஸ் துரையின் வன்மம் சரியான தருணத்தில் அவனை வெட்டிவீழ்த்தியது.

தவ்ஃபோ பழங்குடியிடம் கேட்டால் வேறுவிதமான ‘நாட்டார் கதையை’ கூறுவார்கள். டக்ளஸ் துரை குறிவைத்த நிறைமாதமாக இருந்த ஓராங் ஊட்டானை காப்பாற்றப்போய்,

‘எனக்கே கட்டளை போடுகிறாயா’ என்று சாம்பாவை துரை சுட்டான் என்பார்கள்.

சாம்பாவின் ஆவி அருகிலிருந்த மூங்கில் மரத்திற்குள் புகுந்துக்கொண்டது என்பார்கள். காடு பிந்தைய இரவில் மங்கிய பச்சையில் ஒளிர்வதுக்கு பின்னால், பிற்காலத்தில் அந்தகாட்டுமூங்கில் தொகுதியில் குடியேறிய இன்னொரு ஓராங் ஊட்டான் ‘நியோன்’ எனும் ஓராங் ஊட்டானாக உருமாறி காடு முழுதும் ஒளிபரப்புகிறது என்பார்கள்.

சாம்பாவைப்பற்றி மேற்கு பப்புவா ஆற்றுப்படுகைகளில் இருக்கும் ஒவ்வொரு பழங்குடியினரத்திலும் ஒவ்வொரு விதமான கதை உண்டு. அவர்கள் சாம்பா மீது வைத்துள்ள தெய்வீக நம்பிக்கை என்பது காட்டு தென்னையை பிளந்து எடுத்து சாப்பிடும் ‘குருத்து’ இனிப்புக்கு ஒப்பானது.

ஒரு மணிநேர விமான பயணத்திற்கு பின்பு, விமானம் புல்தரையில் இறங்கிய போது , ஜேக்கப்பிடம் கேட்டேன்.

‘நியோன் கண்டிப்பாக சாகாவுக்கு வரவேண்டும் என்பது தான் எனது பிரார்த்தனை.. ‘

‘எனது பிரார்த்தனையும் கூட’ என்றான் ஜேக்கப்.

கடலைநோக்கி செல்லும் கிளையாற்றில் ஒரு படகு எங்களுக்காக காத்திருந்தது. பப்புவா பழங்குடி மூதாதைகளின் அவ்யூ-தமூத்தின் மொழியிலான ‘காட்டுமரங்களின் பாடல்’ ஒன்றை பாடிகொண்டே படகை மீனவகிழவன் கரைக்கு வந்தான். எங்கள் சுமைகளையும் எங்களையும் படகில் ஏற்றிக்கொண்டு இடுப்பளவு ஆற்றுத்தண்ணீரில் படகை தள்ளிக்கொண்டே போனான். கிழவனின் இடுப்பில் அமர்ந்திருந்த சிறுவன் சுருள் சுருளான முடிகளோடு எங்களை மலைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான். ஜேக்கப்பை கண்டதும் அவன் முகத்தில் ஏதோ ஒரு மகிழ்ச்சி. கையை நீட்டி கேட்டான். நீட்டிய கையில் இரண்டு சிகரட் குச்சிகளை ஜேக்கப் திணித்தான். சிறுவன் சிகரெட்டை வாங்கியதும் ஒன்றை பற்றி அவன் ஊதிய ஒரு புகைச்சுருள் நாங்கள் போகும் படகிற்கு முன்பு போய் கொண்டிருந்தது. ஆற்றுநீர்போக்கு சற்று மாறியதும், புகை பிடித்துக்கொண்டிருந்த சிறுவன், படகிலிருந்து குதித்தான். படகை கிழவனோடு சேர்ந்துக்கொண்டு தள்ள ஆரம்பித்தான். வழிப்பாதையில் இருந்த மற்ற பழங்குடிகள் எங்கள் படகை மறித்துவிட்டனர். ஒருவழியாக ஜேக்கப் சமாதானம் பேசினான். இந்தோனேசிய ரூபாய் 35 ஆயிரமும், இரண்டு சிகரெட் பாக்கெட்டும் கொடுத்தான்.

இவ்வளவு மெனக்கெடலும், எல்லாம் ஒரு புகைப்படத்திற்காக. இரவின் கடைசியில் தரிசன தரப்போகும் ‘நியோன்’னுக்காக. எனது அப்பாவிற்கு இது மட்டும் தெரிந்தால், நிச்சயம் என்னை போகவிடாமல் தடுத்திருப்பார். அதுவும் எழுபது ஆண்டுகளுக்கு முன்புவரை ‘மனித மாமிசம் சாப்பிட்ட’ பழங்குடியினரை சந்திப்பதற்கு யாருக்கு தான் திராணி வரும்.

மூன்று மணிநேர படகு பயணத்திற்கு பின்னர் தவ்ஃபோ பழங்குடியினரின் காட்டுப்பகுதியை அடைந்திருந்தோம். வழியெங்கும் கிழவனின் பாடலோடு உடன்சேர்ந்து பாடிக்கொண்டு வந்த ஜேக்கப் அவர்களது குடியிருப்பு வந்ததும் பாடுவதை நிறுத்திவிட்டான். எங்களை இறக்கிவிட்ட படகு, மீண்டும் இருளுக்குள் பாடலோடு திரும்பிக்கொண்டிருந்தது. மஞ்சள் தீயின் வெளிச்சத்தில் படகின் நுனியில் உடலில் ஆடையின்றி அமர்ந்திருந்த சிறுவன், கொடுத்த சிகரெட்டிற்கு விசுவாசமாய் , மந்திர புன்னகைத்த உதடுகளும் அவன் உருட்டிய கண்களும் எனக்கு பயத்தை தந்தது. தவறான முடிவு எடுத்துவிட்டோமோ என்று கூட எனக்கு தோன்றியது.

இரவு ‘சாகா’ திருவிழாவிற்காக தயாராகி கொண்டிருந்தது. இரவின் நாவற்பழ இருள் பிராம்மாண்ட வனத்தை கருப்பாக்கியிருந்தது. சில் வண்டுகளுக்கு மத்தியில் காடு உள்ளரங்கமாக மங்கிய பச்சை ஒளி எங்கும் பரவியிருந்தது. ஜேக்கப் கையிலிருந்த டார்ச்லைட்டை தட்டியதும், முயல்குட்டி தாவுவது போல. ஒளிக்கீற்று பாய்ந்துக்கொண்டு காட்டிற்குள் புகுந்துக்கொண்டது. வழியெங்கும் ‘X’ முத்திரை குறியீடு இருக்கிறதா என்பதை உறுதி செய்துவந்தான். அவை தடைசெய்யப்பட்ட பகுதி. பழங்குடிகளின் அந்தரங்க பகுதிகளுக்கு மற்றவர்களை நுழையவிடுவதில்லை எனும் குறியீடு, இரண்டு மூங்கிலை குறுக்கும் மறுக்குமாக வெட்டி நிறுத்தியிருந்தார்கள். தவ்ஃபோ பழங்குடியினரின் விரிந்த பாதங்களை விட வேறு கால்களின் அச்சு குறுகியதாக நிலத்தில் தெரிந்தால், வெளியுலக மனிதர்கள் காட்டிற்குள் நுழைந்துவிட்டதாக அறிந்துக்கொள்வார்கள். ஆனால் ஜேக்கப் இம்முறை அவர்களின் விரிந்த பாதங்களின் தடங்களை வெளிச்சத்தில் பின்தொடர்ந்தான். அது அவர்களின் குடியிருப்பை நோக்கி எங்களை இழுத்துச்சென்றது. ஜேக்கப் பழங்குடி இனத்தை சார்ந்தவன். அவர்களைப்போல் காடுகளில் வாழாமல் நகரத்தில் போய்ப்படித்தான். ஜெயப்புராவில் நடக்கும் ‘புழு உண்ணும் திருவிழா’ விற்கு நிர்வாண சிறுவனாக காட்டிலிருந்து வந்தவன், அங்கே தனது டச்சு வளர்ப்பு பெற்றோர்களை அடையளம் கண்டு ‘நகரமயமாகி’ கொண்டான்.

காட்டிற்குள் இருந்து புல்லாங்குழல் இசையும், கோட்டோ எனும் காட்டெருது தோலால் செய்யப்பட்ட பறை ஒலியின் இசையும் கூடுகளில் உறங்கும் பறவைகளை நிம்மதியிழக்க செய்தது. ஜேக்கப் சடங்கு நடக்கும் இடத்திற்கு வெளிப்பகுதியில் நின்றுக்கொண்டு ‘கோன்றி.. கோன்றி’ என அனுமதி கேட்டான். அது ஒரு சடங்கு. அனுமதி கேட்டு தான் உள்நுழையவேண்டும்.
அனுமதியை தொடர்ந்து உள்ளே சென்றோம். தவ்ஃபோ பழங்குடியினரின் தலைவரிடம் எனை ‘ஒரு பழங்குடி’ என்றே அறிமுகப்படுத்தினான். சாகாவிற்குள் பழங்குடிகளை தவிர வேறு யாரையும் அனுமதிப்பதில்லை நெருப்பை சுற்றி வட்டமாக அமர்ந்திருந்த பழங்குடிகளோடு நாங்களும் சேர்ந்து அமர்ந்துக்கொண்டோம். பேச்சின் ஊடாக தானொரு அந்தமான் நிக்கோபர் பழங்குடிகளான ஜாரவாவின் வழித்தோன்றல் என அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். இதற்கு முன் நரபலியிட்ட எலும்புகளை சிவப்பு துணியிலிருந்து பிரித்து காட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒவ்வொரு மண்டை ஓட்டிற்கும் ஒவ்வொரு ‘ கக்கூவா’ கதையிருந்தது

‘சாகா’ என்பது எரியூட்டு சடங்கு. அங்கு எரிப்பதற்காக மூன்று பொம்மைகள் அங்கே இருந்தன. ஒவ்வொரு ‘சாகா’ வின்போதும், எரியூட்டும் சடங்கில் மூன்று பொம்மைகளும் தீயிலிடப்படும்போது, தீ மெல்ல மெல்ல வளரும். சாம்பாவின் முழுத்தோற்றம் தீச்சுவாலையில் சித்திரமாக உருவெடுக்கும். முழு சித்திர தரிசனமும் அதனை தொடர்ந்து அதிகாலையில் மூங்கில் மரத்திலிருந்து வருடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு புலப்படும் சாம்பாவின் ஜடவடிவம் ‘நியோன்’ ஓராங் ஊட்டானும் தவ்ஃபோவின் அதிர்ஷ்ட தேவதைகள்.நியோன் ஆற்றில் இறங்குவதை கண்டுவிட்டால் அவ்வருடம் அவர்களுக்கு அதிர்ஷ்டமானதாகிவிடும்.
சாம்பாவின் நெருப்பு சித்திரம் எவ்வளவு துல்லியமாக துலங்குமோ அவ்வளவு அவர்களுக்கு வருடம் முழுதும் உண்ணுவதற்கு பஞ்சமில்லாமல் காட்டுப்பன்றிகளும் ஆற்றுக்கெண்டை மீன்களும் கிடைக்கும்.

மூன்று பொம்மைகளுல் ஒன்று சாம்பா. மற்றொன்று சாம்பாவின் தாய் ஷாமா. சாம்பாவின் அப்பா யாரென்று யாருக்குமே தெரியாது. மற்றொன்று டக்ளஸ் துரை. இதில் மூன்றாவது பொம்மையாக இருக்கும் ஷாமா ஒரு பழங்குடி இனத்தவள். மருத்துவச்சி மற்றும் போமோ சூன்யத்தை பற்றி நன்கு அறிந்தவள். சக்கரவள்ளி கிழங்கு பறிக்க போனபோது ஆற்றங்கரையில் வலியெடுத்து சாம்பாவை ஈன்றெடுத்தாள். சாம்பா பிறந்த நேரமும் தவ்ஃபோ பழங்குடி இனத்தலைவர் வலிப்பு வியாதியால் இறந்த நேரமும் ஒன்று. அது ஒன்று போதும், ஆதிவாசிகள் தங்கள் இடத்தில் துர்தேவதைகள் புகுந்துவிட்டதாக நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ‘கக்கூவா’ புகுந்துவிட்ட சாம்பாவை காட்டுக்குள் தேடி அழைந்தார்கள். இதையறிந்த ஷாமா ஆற்றங்கரையில் குழந்தையாக இருந்த சாம்பாவை வாழை இலையில் சுருட்டி, சிறிய மரப்பெட்டியில் வைத்து மேற்கு பப்புவா காடுகளின் கிளையாற்றில் ஒன்றில் விட்டுவிட்டாள். மலை,நீர்,காடு என பஞ்சபூதங்களில் பிழைத்தவன் சாம்பா, ஆதலால் தான் இந்த மண்ணும் மலையும் அவனுக்கானது என்றார் தவ்ஃபோ இனத்தலைவர்.

இரவு இருண்டு உக்கிரம் அடையத் தொடங்கியது. காட்டெருது தோலில் செய்யப்பட்ட பறை ஒலியும் , மூங்கிலில் செய்யப்பட்ட’பிக்கோன்’ கொம்பு ஒலியும் , சிப்பிகளை கோர்த்து உருவாக்கிய இசைக்கருவியும், உக்கிர இசைவாத்தியம் அங்கே இரவு நகர நகர பழங்குடியினரிடத்தில் கூட்டு வெறியை உருவாக்கியது. தீப்பந்தந்தின் மஞ்சள் வெளிச்சம், மங்கிய பச்சை வெளிச்சம் மறைந்து துல்லிய மஞ்சள் நிறத்திற்கு இரவு மாறிக்கொண்டிருந்தது. சிவப்பு திரைகளுக்கு மத்தியில் நிர்வாண பெண்களின் நெருப்பு நடனம் சாம்பாவுக்கு காணிக்கையாகி கொண்டிருந்தது. அளவில்லா பனங்கள்ளும், காட்டுப்பன்றி இறைச்சியும், சக்கரைவள்ளி கிழங்கு படையலுமாய் நெருப்பு கங்கங்களுக்கு மேலே வெந்துக்கொண்டிருந்தது. வாழையிலையில் கட்டி நெருப்பில் சுடப்பட்ட பச்சை பாம்புவும் , பனங்கள்ளும் சாம்பாவின் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது.

சாம்பாவை துரத்தும் டக்ளஸ் துரை, சாம்பாவிற்கு முன்பாக ஓடும் ஓராங் ஊட்டான் என மூன்று நிர்வாண மங்கைகள் அதனை தத்ரூபமாக நடித்துக்கொண்டிருந்தார்கள். சாம்பாவாக நடித்த பெண், தன் உடலில் தென்னை மட்டைகளை கட்டியிருந்தாள். டக்ளஸ் துரையாக நடித்தவள், துப்பாக்கி பதிலாக கையில் வைத்திருந்த ஈட்டியை நிஜமாகாவே சாம்பாவின் மார்பில் குத்திவிட்டாள். அவளது கருத்த மார்புகளுக்கு மத்தியில் வழியும் இரத்தத்தை துணியில் துடைத்து தீச்சுவாலையில் படையலிடுகிறார்கள்.

தீயில் மெல்ல மெல்ல வளரும் சாம்பாவின் கோட்டோவியம், ஒருகட்டத்தில் உச்சக்கட்டமாக ஈட்டி தைக்கப்பட்டவளை தூக்கி தீயிலிடப்போனதும் நான் மதுபோதையில் பாய்ந்துப்போய் நரபலியை தடுத்துவிட்டேன். அவ்வளவு தான் தீச்சுவாலையில் தான்தானாக வளர்ந்துக்கொண்டிருந்த சித்திரம் நின்றுவிட்டது. அதற்கு மேல் வளரவில்லை. எல்லோரும் என்னைப்பார்த்து கொண்டிருந்தார்கள். எனைப்பார்ப்பதும் தீச்சுவாலையை திரும்பி பார்ப்பதுமாய் பழங்குடிகள் ஓலமிட ஆரம்பித்தார்கள். நான் அவ்விடத்தை நகரமுயன்றாலும் அவர்களை என்னை சூழ்ந்துவிட்டார்கள். என்னைச்சுற்றி ஆயுதங்கள் ! பையை துலாவினேன். அதற்குள் இருந்த டாமி பிஸ்டலை எடுத்து காட்டினேன். சுற்றியிருந்த வட்டம் எனக்காக வழியை திறந்துவைத்தது. நான் ஓடத்தொடங்கினேன்.

***************************

அரைமயக்கத்தில் ஆற்றின் சலசலப்பு கேட்டு எழுந்துப்பார்த்தேன். காலை புலர்ந்தும் புலராத அரைப்பொழுது, எங்கோ தூரத்தில் கிழவன் பாடும் ‘காட்டு மரங்களின்’ பாடல் கேட்டுக்கொண்டிருந்தது. நதியின் மீது படகு, சலசலத்து நீர் ஓடும் சத்தம். நான் ஓடிய இடத்திற்கும் இப்பொழுது எழுந்திருக்கும் இடமும் வேறு வேறான இடங்கள். காட்டில் தன்னை பச்சையொளியாக மாற்றிக்கொண்ட விட்டில் பூச்சிகள் ஒவ்வொன்றாக தனது நிறத்தை மங்கச்செய்துக்கொண்டே வந்தன. தூரத்தில் ஆற்றுப்படுகையில் கிளைகள் ஒடியும் சத்தம் கேட்டன. வினோத விழுதுகள் கயிறுகள் போல் ஆகயாத்திலிருந்து ஒவ்வொன்றாக வந்து விழுந்தன. ஒரு விழுதிலிருந்து மற்றொன்று வழியாக தாவி பறந்தது. கண்ணை மூடி திறப்பதற்குள் ஒரு கிளையிலிருந்து, மற்றொரு கிளை தாவல். சர்க்கஸ் பெண்களை போல அத்தனை சாசகசம்! ஒரு மரத்திற்கு பின்னால் பிரம்மாண்டமான கரிய உருவம் வெளிப்பட்டது. என் மனதுக்குள் கூறிக்கொண்டேன். அதுவே தான். நியோன் வாயை குவித்து ஒலியெழுப்பியது. மரங்களிலிருந்து வெளியேறிய தனது உருண்டை கண்களை சுழற்றி அங்குமிங்கும் பார்த்தது. அதுவும் ஆற்றுக்குள். பொதுவாக ஊராங் ஊட்டான் ஆற்றுக்குள் இறங்குவதில்லை. அவற்றுக்கு முதலைகள் என்றால் பயம். ஆனால் நியோன் கம்பீரமாக ஆற்றுக்குள் குதித்தது. மெல்ல என்னை கண்டதும் , சிறிய பயத்துடன் மரத்திற்கு பின்னால் மறைய ஆரம்பித்தது. நான் பையுக்குள் கையை துலாவி, கேமராவை தேடிக்கொண்டிருந்தேன்.

காட்டு மரங்களின் கிளையை பிடித்துக்கொண்டும் ஆற்றில் நின்றுக்கொண்டும் பயத்தோடு மரத்திற்கு பின் மறையும் ஓராங் ஊட்டான் புகைப்படம், அவ்வாண்டு ‘நேஷனல் ஜியக்ராபிக் சேனல் , சிறந்த புகைப்படமாக தேர்வு செய்திருந்தது. அப்பா தான் முதலில் அந்த செய்தியை படித்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பிக்கூறினார். குரங்கின் முகத்தில் இருக்கும் பயத்தை நான் துல்லியமாக பதிவு செய்ததை பற்றி மிகவும் சிலாகித்தார். நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். வீட்டு வாசலை யாரோ தட்டும் ஓசை கேட்டது.

வீட்டிற்கு அப்பாவை தேடி போலீசார் வந்தனர். ‘பையன் எங்க போறான்னு வாறான்னு கூட தெரியாம தான் அனுப்பி வைப்பீங்களா’ என்று இறந்த உடலின் புகைப்படங்களை மேசையில் எடுத்துப்போட்டனர்.

அப்பா ஒன்றும் புரியாமல் அறையை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். என் படுக்கை காலியாக இருந்தது. வெளிநாட்டு புகைப்படகலைஞரை அனுமதியில்லாமல் காட்டிற்குள் அழைத்துச்சென்று நரபலி செய்த குற்றத்திற்காக பழங்குடி இனப்போராளியும் சுற்றுலா வழிகாட்டியுமான ஜேக்கப்பை போலிஸ் கைது செய்திருந்தனர். தவ்ஃபோ பழங்குடியினர் குழுவை துப்பாக்கி முனையில் கைதுசெய்து குண்டுகட்டாக படகுகளில் ஏற்றிக்கொண்டிருக்கும் வேளையில், தவ்ஃபோ பழங்குடிகளுடைய மரவீடுகளின் மூங்கில்களுக்கு கீழே ‘தக தக’ வென தங்க சுரங்கம் மின்னிக்கொண்டிருந்தது.

***

-முகம்மது ரியாஸ்

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *