வாழ்வின் வர்ணங்கள்

இலைகளின் உதிர்வு
இருளின் முன்னறிவிப்பு
எனினும்..
பேரழகின் காட்சியாய்
மாற்றத்தின் சாட்சியாய்
பரந்து கிடக்கின்றன
வர்ணம் தோய்ந்த இலைகள்
துளிர்த்தும்
விரிந்தும்
சடைத்தும்
உதிர்ந்தும்
சருகாய் காற்றில் அலைந்தும்
நதியில் மிதந்தும்
உறைபனியில் அமிழ்ந்தும்
மண்ணில் புதைந்து பயிர் வளர்த்தும்
வடிவம் மாறும் இலைகள்
நிலையாமையின் நித்தியப் பாடல்
காலக்குணங்களை முன்னறிவிக்கின்ற
காலக்கணக்கினை வகுத்தளிக்கின்ற
இலைகளின் ஜீவிதத்தில்
ஒட்டிக் கிடக்கின்றது
வாழ்வின் வர்ணங்கள்

 

 

இரவின் நிதானம்

கருமை படர்ந்த வெளியிலும்
வெண்மை ஒளிந்த வானத்திலும்
அசைவு ஓய்ந்த மரங்களிலும்
வெறிச்சோடிய சாலைகளிலும்
உறைந்திருக்கிறது
இரவின் நிதானம்
நிசப்தத்தை மொழிபெயர்க்க
அவிழ்வது
வாழ்வின் புதிர்
இருளின் விரிப்பில்
படர்வது
ஒளியின் விம்பம்
இருளின் நெருக்கத்தில்
உணரப்‌படுவது
சொற்களின் நிர்வாணம்
இரவு
ரசனையின் விருந்து
படைப்பின் அழகு
எந்தச் சொற்களும்
ஈடாவதில்லை
இரவின் நிதானத்திற்கு

 

 

 

இரவும் கனவும் கவிதையும்!

இந்த இரவும்
இந்தக் கனவும்
இந்தக் கவிதையும்
மனதின் தீராப்பக்கங்களை
நிரப்புகின்றன
இரவுக்கு உருவம் உண்டு
இரவுக்கு உயிர் உண்டு
இரவுக்கு பசி தாகமும் உண்டு
இரவின் உயிராய் கனவுகள்
இரவின் பசிக்கு சில தானியங்களாய்
கவிதைகள்
மலைகளின் முகட்டிலிருந்து
வழிகின்ற துளிகளாய்
இரவின் முலைக் காம்புகளில்
சுரக்கின்ற கவிதைகள்
மலைகளுக்கு அப்பால்
எழுகின்ற ஓசையில்
விடியலுக்குப் பிந்திய கணங்களின்
முன்னறிவிப்பு‌‌ நிகழ்ந்துகொண்டிருக்கிறது

 

 

காலம்

கதைத்துத் தீர்த்த பொழுதுகள்
நிகழ்கால நிழலாய்
தொடர்கின்றன
விழித்திருந்த இரவுகள்
நினைவொளியின் நீட்சியாய்
விரிகின்றன
தாலாட்டின் சொற்களால்
தன் கவிதையை
எழுதிக் கடக்கிறது
வேனில்
தீராப் பொழுதுகளினதும்
உறங்கா இரவுகளினதும்
பாடலை
தவிப்பின் காயத்தில்
கசிய விடுகிறது
காலம்

 

 

தூரமென்பது

பௌதீக இடைவெளி
அந்த வெளிகள்
நேசத்தை நிரப்பிவைத்திருக்கின்றன!
தூரமென்பது
தொடுகையற்ற நெருக்கம்
நினைவில் கரைவது
சிறகை விரிப்பது
கவிதைகளின் பிரவாகம்
கனவுகளின் ஊற்று
படைப்பின் அழகியல்
தூரமென்பது
பறத்தலின் வேட்கை
வாழ்தலின் உத்வேகம்
காதலின் பெருங்கடல்
தேடலின் அகத்தூண்டல்
மனதின் பெருவெளி
அன்பின் அகவொளி
தூரமென்பது
புரிதலின் தத்துவம்
காலவிதைகளின்
மீள் விளைச்சல்

 

 

 

மரங்களின் சாவு மனிதனின் சதி

பேதங்கள் கடந்த
உயிர்களின் தரிசனமாய்
பாஷைகள் கடந்த
உரையாடல் உன்னதமாய்
விரிந்து கிடந்தது காடு
தொழில்நுட்பம் தேடாத
கலைநுட்ப ஓவியமாய்
செயற்கையில் சேராத
நிர்வாண பேரெழிலாய்
விரிந்து கிடந்தது காடு
சடைத்த கிளைகளை
அரவணைத்து
நெடுத்த மரங்களை
உயர்வித்து
ஆழவேரினில் காலூன்றி
நின்றிருந்தாள் ஆதித்தாய்
பெருந்தோகை காற்றசைய
ஆடி நின்றாள்
அடவிப்பெண்
விரிந்து கிடந்தது காடு
மரங்களைக் கொல்லாத
வாழ்வுக்குத் தன்னை
ஒப்பு கொடுத்தான்
ஆதிமனிதன்
அன்றைய காடு
மனிதனின் வீடு
இன்று
கொப்புகள் முறித்து
கிளைகள் ஒடித்து
வேர்கள் அறுத்து
கொலையுண்டு போனபின்…
மனிதனின் சாவு
இயற்கையின் விதி
மரங்களின் சாவு
மனிதனின் சதி

***

 

 

 

-ரூபன் சிவராஜா

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *