குணமடைதல்
எனக்குக் காய்ச்சல் அடிக்கிறது என்று
சப்தமாகச் சொல்கிறாள் ஒருத்தி.
அவளிடம்
“இதெல்லாம் ஒரு காரணமா?
வெளியே வந்து பார்” என
அழைக்கிறது பூமி.
வெளியில் வந்து நின்றால்
“ஆகஸ்டு காற்று
உன்னை மிஸ் செய்வதை
நீ உணரவில்லையா?”
விசாரிக்கின்றன மரங்கள்.
“தூரத்து மலைக்கு
உனது பார்வை
எவ்வளவு முக்கியம் தெரியுமா?” எனக்
கேட்கின்றன பறவைகள்.
மேகங்கள் அவளைப் பார்த்துக் குரைக்கின்றன
“விளையாட வா” என்று கூப்பிடுவது போல.
காய்ச்சலடிக்கிறதா எனப் பார்க்கும்
அன்னையின் கரம் போல
சூரிய ஒளி
அவள் நெற்றியை தொட்டுப்பார்க்கிறது.
அடுத்த நொடியே அவள் வானத்தைப்
பார்த்து சொல்லிவிட்டாள்
“இப்ப பரவால்லை… இப்ப பரவால்லை”
**
கூண்டுகள்
காதலில்
இருவர்
கைகளைக் கோர்க்கும்போது
இரு கைகளும்
இணைந்து
மிகச்சிறிய கூண்டை
உருவாக்கிவிடுகின்றன.
அடுத்து என்ன?
மறுகணம் அதனுள் சிக்கிக்கொள்கிறது
பிரிவு எனும் மிருகம்.
ஆரம்பத்தில்
கூண்டினுள்
அங்கும் இங்கும்
உறுமியலைகிறது அந்த மிருகம்.
பின்பு கம்பிகளின் இடைவெளியினூடே
கடும்பசியில் பார்க்கிறது
காதலர்களை
அவர்களது விரிசலுற்ற கரிய நிழல்களை.
**
இனிமையாலானது
விடியற்காலை
இனிய புல்லாங்குழலோசை என
புறப்பட்டுவந்து
என்னை எழுப்பியது.
இடையறாத கொட்டுச்சப்தமாக
உயிரில் கனத்தது பளிச்சென்ற பகல்.
படிக்கட்டில் அமர்ந்து
கேட்டுக் கிறங்கினேன்
ஒரு காதல் பாடலைப் போலிருந்த
சாயங்காலத்தை.
இரவுப்பொழுதில்
இருளின் இசைக்கச்சேரியில்
முதல் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
உறங்க முயலும்போது கூட
கேட்டுக்கொண்டேயிருந்தது
வாழ்க்கை எனும் இசைக்கருவியிலிருந்து
ஓர் இன்னிசை.
அப்புறம் நான் தூங்கவுமில்லை
விழித்திருக்கவுமில்லை
என் சிறிய உலகம்
இனிமையால்  விழுங்கப்பட்டுக்கொண்டிருப்பதைப்
பார்த்துக்கொண்டிருந்தேன்.
**
Please follow and like us:

1 thought on “ரோஸ்லின் கவிதைகள்

  1. ஏன் பெண்கள் பெயரில் எழுதப்படும் கவிதைகளுக்குக் கீழ் புகைப்படம் இல்லை? அவர்களுக்கு விருப்பமில்லையென்றால் பரவாயில்லை, நேயர் விருப்பம் என்றாவது சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *