இச்சமூகத்தின் கருத்தியலில் நீதிக்கும் அறத்துக்கும் நாம் மிகையான மதிப்பீடுகளை வழங்கி வைத்திருக்கிறோம் என்று சில சமயங்களில் தோன்றும். அறமோ அதன் பிழையோ எது கூடினாலும் குறைந்தாலும் சமூக இயக்கத்தின் சமன்பாட்டில் தள்ளாட்டம் ஏற்பட்டுவிடுகிறது. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் விசாரிக்கப்பட்டு ஒருவிதமான சமரசப் புள்ளியை எட்டும் அமைப்பிலேயே முரணியக்கத்தின் சமநிலையைப் பேண முடியும். மாறுபாடுள்ள எதிரெதிர் விசைகள் ஊடுபாவும் சமுதாயத்திலேயே மனத்தின் வெவ்வேறு இயல்புகளைப் பற்றின ஏற்புநிலை உருவாவதற்குச் சாத்தியமும் உள்ளது. பிணக்குகள் முற்றிலுமாகக் களையப்பட்டு அழுக்காறு ஆன்மாக்கள் தூய்மையடைந்து விட்டன என வைத்துக்கொள்வோம். எது மிஞ்சி நிற்கும்? அதர்மமும் தீமையும் அணிவகுக்கிற வரைதான் நமது தேடல்களுக்கும் தெளிவுபெறும் முயற்சிகளுக்கும் மெய்ப்புண்டு. ஓர் இலட்சியச் சமூகம் உருவாகிவிட்ட பின்னர் நம்மை ஊக்கிச் செலுத்திய நியாயங்கள் உடனடியாகப் பொருளிழந்துவிடுகின்றன. அப்போதாவது நம்மை உவகை நிறைக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. அங்கே அவற்றுக்குப் பதிலீடாக வேறு சில புதிய கனவுகளுக்கு இடமளிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், நாம் துரத்திச் செல்வதற்கு எப்போதும் ஏதேனும் காரணம் இருந்தாக வேண்டும் என்கிற உள்ளத்தீ தணிந்தபாடில்லை. அது இல்லாவிட்டால் நோவு பீடித்துவிடும். குறைந்தபட்சம், துரத்தப்படுகிற பாவனையையாவது வருவித்துக்கொண்டு ஆட்படுதல் நலம். துரத்தல் இன்றி தப்பித்தல் இல்லை. இதுவோர் ஒடுக்கச்சுழி. வைக்கோல் சுருளையை உருட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிற கைகொட்டல் மனோபாவம். சுருட்டியதை விரிக்க வேண்டும், விரித்ததை அகலப்படுத்த வேண்டும்.

எல்லாவற்றிலும் ஒரு முடிவைத் தேடுவதிலிருந்தே நம்முடைய பிரச்சினைகள் தொடங்குகின்றன. இதற்கு மாறாக, அனைத்திலும் தொடர்ச்சியைக் கண்டுகொள்ள முடிந்தால், அதைப் புரிந்துகொள்ள முயன்றால், எதையும் உட்கண் துணையுடன் சீர்தூக்கித் தொடர்புறுத்துகிற அணுகுமுறை வசப்பட்டுவிடும். நம்முடைய அக்கறை தீர்ப்பெழுதுவதில் அல்லாமல் எல்லாக் கோணங்களையும் ஆழ்ந்து கவனிப்பதில் இருந்தால் போதுமானது. ஓர் எளிய உதாரணம் சொல்கிறேன். நமக்கு உயிர் இருக்கிறது. அது எடையற்றதாக இருக்கிறது. அதைக்கொண்டு நாம் முட்டி மோதுகிற கலக்கமான வாழ்க்கை இருக்கிறது. இவ்விரண்டுமே உள்ளத்தின் சலனங்களினால் வெளிப்பட்டவாறு இருக்கின்றன. உயிரோ வாழ்வோ அதன் உட்சாரம் அந்த அசைவுதான். உயிருடனான நம்முடைய உறவும் சாராம்சமும் சூக்குமமாக ஒளி கொண்டிருக்கையில் அதைப் பற்றிக்கொண்டு தேடித் திரிகிற வாழ்வில் மட்டும் எடைக்கற்களைச் சுமப்பானேன்? ஒற்றைச்சரடில் கோர்க்கப்பட்டு அடைப்பட்டுக் கிடப்பதற்கா இவ்வுயிர் விசைகொண்டுள்ளது? உயிரின் கொக்கிதான் மனம். அதில் நமது சித்தாந்தங்களையும் கனவுகளையும் உணர்ச்சிகளையும் கழற்றி மாற்றி மாட்டி வைக்கிறோம். எடை கூடும்போது கொக்கி தாழ்ந்து வளைகிறது. கொக்கி வளையும்போது உயிர் இழுபடுகிறது. நமது எண்ணங்கள் முடிவுகளாகச் சேகரம் ஆகுந்தோறும் சுய கண்டறிதலுக்கான தடைகள் ஓயாது பெருகிக்கொண்டே இருக்கும். இதிலிருந்து எங்கனம் விடுபடுவது? நம்முடைய அறங்கள், இலட்சியங்கள், நியாயங்கள், தீர்ப்புகள், தீமைகள், கீழ்மைகள் என அனைத்தையுமே “முடிவுகள்” என வகுத்துவிடலாம். முடிவு என்பது உறைதல். அது சலனமுள்ள உயிருக்கும் வாழ்வுக்கும் எதிரானது. ஆக்கத்திற்கும் அழிப்புக்கும் இடையே அலைபாய்வதே மனிதனால் ஆகக்கூடிய பாசாங்கற்ற செயல். குழிக்குள் கிடந்தாலும் நத்தை நகர வேண்டும்.

 

நானொரு முடிவெடுக்கிறேன். அதன்படி வழுவாது நடக்கிறேன். இங்கே இயல்பான சகஜ மனநிலையானது சற்றே இறுக்கம் கொண்டுவிடுகிறது. அதற்கொரு விசேஷ அந்தஸ்தையும் விசுவாசத்தையும் என்னையறிமாலேயே அளிக்கத் தொடங்குகிறேன். இரண்டு விதங்களில் அம்முடிவு நிறைவுறலாம். ஒன்று, எனது தீர்மானத்திற்குத் தக்கவாறு எனது செயல்கள் அமைந்து, எல்லாம் கைகூடி, நான் எதிர்பார்த்த விளைவுகள் ஏற்பட்டுவிட்டாலோ அல்லது சிற்சில சமரசங்களுடன் அந்த இலக்கை எட்டிவிட்டாலோ அம்முடிவின் தேவை தீர்ந்துவிடுகிறது. மிதப்பான தற்காலிக நிறைவை மனம் உணர்ந்தாலும் இந்த இடத்தில் மானசீகமாகவேனும் ஓர் இழப்பு ஏற்படுகிறது. நான் வேறொரு காரணத்திற்காகவோ அடுத்தகட்ட நகர்வுக்காகவோ இன்னொன்றை விரட்டத் தொடங்குகிறேன். புதிய முடிவுகள், புதிய கனவுகள் பிறக்கின்றன. எனது உள்ளோட்டங்களுக்கான முக்கியத்துவம் குறைவுபட்டு அவ்விடத்தை உலக நியதிகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. இரண்டு, நான் எடுத்த முடிவு தவறாகி பாதியில் அதைக் கைவிட நேரலாம். இங்கும் ஓர் இழப்பு உண்டாகிறது. இப்போது இரண்டு விதங்களில் எனது முடிவு நிறைவுற்றதா அல்லது இரண்டும் ஒன்றுதானா? முதலாம் எடுத்துக்காட்டில் எனது இழப்பிற்குச் சான்றாதாரமாக ஒரு விளைவு அல்லது லாபக் கணக்கு அல்லது பருப்பொருள் இருக்கிறது. இரண்டாவதில் அது இல்லை. அவ்வளவுதான் வேறுபாடு. இத்தகைய இழப்புகளைத் தாண்டிச்செல்ல ஒரே வழி, எதையும் “முடிவுகளாக்காமல்” வெறும் “எண்ணங்களாக” அவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதுதான். மனிதர்களை முறைப்படுத்துவதற்கு எண்ணத்தின் தீவிரமே அதிகப்படியானது. எண்ணங்களிலுள்ள இலகுவான நெகிழ்வுத்தன்மை முடிவுகளில் இல்லை எனும் போது எங்கேயாவது சரிந்துவிட்டுத் தடுமாறி நிற்கும்போது நமது ஆவேசப் பரிதவிப்புகளைக் கொஞ்சம் விலக்கி வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. கண்காணிக்கப்படும் காரியம் சீர்குலைவதில்லை.

இவையெல்லாம் எளிமையான அடிப்படை விஷயங்கள். ஏற்கனவே நிறுவப்பட்டதும் மறுக்கப்பட்டதுமான விவாதச் சுழற்சிப் பரிமாணங்கள். இந்த நிலையற்ற விஷயங்களில் புதிர்த்தன்மையைச் சேர்க்கிறார் என்பதில்தான் ஃபிலிப்பைன்ஸ் நாட்டு இயக்குநர் லாவ் டியாஸின் (Lav Diaz) தனித்துவம் முன்னிற்கிறது. அவர் இலட்சியவாதத்திலோ சித்தாந்தங்களிலோ ஸ்திரமற்றத் தன்மையைக் காண்பதில்லை. அவற்றின் மீது ஆங்காரமான உறுதிப்பாடு அவருக்குண்டு. மாறாக, எக்காலத்திலும் தீராத வசீகரம் நிரம்பிய மனிதப் பண்புகளைப் பின்தொடர்வதிலேயே டியாஸின் கலைப்பெறுமானம் பிரவாகமெடுக்கிறது, நிலைகொள்கிறது. அவரது ஒவ்வொரு படத்திலும் இரண்டு டியாஸ்கள் வெளிப்படுகிறார்கள் என வரையறுக்கலாம். ஒருவர், அனலடித்தாலும் புகைமூட்டம் சூழ்ந்தாலும் நிச்சலனமற்று உறைந்துவிட்ட வெட்டவெளியைப் போன்றவர். தான் வாழ்கிற தேசத்தின் சர்வாதிகாரிகளையும் காட்டுமிராண்டி அமைப்பையும் இடிமுழக்கக் குரலில் விமர்சித்து சத்தியாவேசத்துடன் வலம் வருவதற்கான புறக்கட்டுமானம் என்று இதனைச் சுட்டலாம். இதில் புழங்குகிற மனிதர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகள். அதிகாரத்தின் மாதிரி வடிவங்கள் (samples). அவர்களுக்கெனத் திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட இயக்குநரின் உள்நோக்கங்கள் மட்டுமே இங்கே தொழிற்படுகின்றன. தான் காட்ட விரும்புவதையே காட்டுகிறார். அவர் பார்க்க விரும்புவதையே நாம் பார்க்கிறோம். ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள் போல எல்லோரும் நடந்துகொள்கிறார்கள். ஒரு நாடக அரங்கேற்றம் போல எல்லாம் நிகழ்கின்றன. ஒரு படைப்பாளி தன் புனைவின் வழியாகச் சென்றடையும் உச்சங்கள் ஏதுமின்றி “புரட்சிகரமான” இயக்குநரின் பிரச்சாரத் தொனியே இதில் மேவி நிற்கிறது.

 

இரண்டாமவரே நமக்கு முக்கியமானவர். கதாகலாட்சேபம் பண்ணுவது போல ஆற அமர விடிய விடிய கதை சொல்லத் தொடங்குகிறார். நாம் கொட்டாவி விடுகிறோமா சோம்பல் முறிக்கிறோமா தூங்கி வழிகிறோமா என்பது குறித்து அவருக்குக் கவலையே இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருக்கும் வெட்டவெளியில் சாமான்ய மனிதர்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள். தங்களது விதியை நிர்ணயம் செய்பவர்களுடன் முடிவறிந்துவிட்ட விளையாட்டை அவர்கள் ஆட நேர்கிறது. சிலர் காலூன்றுகிறார்கள், சிலர் விரட்டியடிக்கப்படுகிறார்கள், சிலர் காணாமற் போகிறார்கள், சிலர் காணாமலாக்கப்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய காலத்தை நிதானமாக எடுத்துக்கொள்கிறார்கள். சிறிய கதாபாத்திரம், மையக் கதாபாத்திரம் போன்ற வேறுபாடுகளின்றி அவர்களை முழுமையாக வெளிப்பட அனுமதிப்பதே இங்கே இயக்குநரின் கடமையாகிறது. அதனாலேயே, விதிவிலக்கின்றி, எல்லோரும் அவரவர்க்கான வர்ண பேதங்களுடன் நம் நினைவில் அழுத்தமாகப் பதிகிறார்கள். டியாஸைப் பொறுத்தவரை படமெடுப்பதென்பது நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல. சீரான தப்படிகளில் வலுவைத் திரட்டிக்கொண்டும் ஆற்றல் குன்றாமலும் கடக்க வேண்டிய மாரத்தான் ஓட்டம். ஓடும்போது ஒவ்வொரு கணத்தையும் உங்கள் கவனம் மூச்சுவிடுவதில் தியானிக்கப் போவதில்லை. ஏதேதோ தெருக்காட்சிகளைக் கடந்துசெல்கிறீர்கள், வெறிபிடித்தோடும் எருதுக்கூட்டம் கிளப்பும் புழுதிப்புயல் போல அகவுணர்வுகளின் நெரிசல் மேலெழக்கூடும், குட்டி நீர்த்தேக்கத்தில் வெடிக்கும் தவளை வாய்மொட்டுகள் போல உள்ளம் அடங்கியொலிக்கவும் கூடும். எதுவானாலும் அவதானிப்பதற்கு நிறைய சமயம் இருக்கிறது. பிரச்சார டியாஸைப் போலன்றி ஸ்டீரியோடைப் செய்வதை அடியோடு விலக்கிவிடும் “நாவலாசிரியர்” டியாஸ், கதாபாத்திரங்களின் எண்ணவோட்டங்கள் உருமாறியும் பிறழ்ந்தும் தத்தம் தரப்புகளின் குரலாக ஒலிப்பதையும் மற்றவர் மீது தாக்கம் செலுத்துவதையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொண்டு அடுக்கிச் செல்கிறார். முன்னதில், அவர் சீறியெழுந்து சுடர்விடுகிற தீப்பந்தம் எனில் பின்னதில் அணையாது துடிக்கிற தீக்கங்கு.

தஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட “Norte, the end of history” (2013) படத்தைத் தவிர மற்ற அனைத்தையுமே கருப்பு வெள்ளையிலேயே லாவ் டியாஸ் படம் பிடித்திருக்கிறார். பேலா தார் (ஹங்கேரி), மைக்கேல் ஹானகே (ஜெர்மனி) போன்ற இருபத்தியோராம் நூற்றாண்டின் ‘மாஸ்டர்’கள் பலருக்கும் மோனோக்ரோம் (monochrome) படமாக்கல் முறைமை மீதுள்ள பித்தைப் பற்றி தனியாக எழுத வேண்டும் என்பது என் அவா! அது அவர்கள் பார்வையாளர்களிடையே உருவாக்கத் தலைப்படுகிற மனநிலையைத் (mood-setting) தக்க வைப்பதற்குப் பெரும்பாலும் உதவியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, லாவ் டியாஸுக்கு! காட்சிச் சட்டகங்களுக்குள் டியாஸ் ஒளியைப் பாய்ச்சுகிற விதத்தைப் பிரமிப்புடனேயே எப்போதும் பயின்றிருக்கிறேன். இவரது படங்களில் லைட்டிங்கின் குவிமையமாகக் கதாபாத்திரத்தின் முகங்கள் இருப்பதில்லை. ஒளியானது நேரிடையாக உடல்களில் பட்டுத் தெறிக்காமல் அவற்றைச் சுற்றியிருக்கும் பொருட்கள் மீது திட்டுத் திட்டாகப் படர்ந்து அதன் கட்டுப்படுத்தப்பட்ட பிரதிபலிப்பே (reflection) முகங்களில் சிதறுகிறது. இதன் மூலம் பகலுக்கும் இரவுக்குமான துலக்கமான வேறுபாடுகள் அழிந்து மெல்லிய light and shade-லேயே வெளிப்புறக் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரை எடுத்துக்கொண்டிருக்கிற “The Woman Who Left” (2016) படத்திலும் இக்கதைக்கருவின் தன்மைக்கேற்ப அதன் ஒளியிலும் விலகலிலும் இருண்மை குடியேறிவிடுகிறது. இந்தப் படத்தில்தான் முதன்முறையாக காட்சித்துளிகளைத் (shots) தொண்ணூறு பாகை நேர்க்கோட்டில் கம்போஸ் செய்யாமல் ஒன்றிரண்டு கோணலான டிகிரிகள் சாய்வுகொண்ட (tilted) காட்சிகளைப் படமாக்கத் தொடங்கினார். அவை பார்வையாளர்களுக்கு உறுத்தாத வண்ணம் இருக்கும் பொருட்டு காமெரா கோணங்களையும் z-axis-லிருந்து x-axis-ஐ எதிர்க்கோண விட்டங்களில் (diagonal) சந்திக்கும் விதமாகத் திருத்தி அமைத்தார். இந்தப் பாணியைத் தனது சமீபத்திய படமான “The Halt” (2019) வரைக்குமே பின்பற்றிக்கொண்டிருக்கிறார். அவற்றின் குறியீட்டு ரீதியிலான பொருளைப் படம் பார்க்கும் எவருமே உணரலாம். இவரது சிறந்த காட்சிக் கட்டமைப்புக்கான சான்றாகவும் மேதைமையை எடுத்துரைக்கவும் “The Woman Who Left” படத்தின் இறுதி முப்பது நிமிடங்களை எடுத்துக்கொள்ளலாம். அதுவரைக்கும் தெள்ளிய பளிங்குக் கண்ணாடி போல நகர்கிற காட்சிகள், படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தின் மனக்குழப்பத்தைச் சித்தரிக்கும் விதமாக மர்மமான கலங்கலைத் தேர்வுசெய்துகொண்டு நடுங்குகின்றன. பின்மதியச் சூரியனைப் மெல்லிய பட்டுச்சீலை வழியாகப் பார்ப்பதைப் போலக் காட்சிகள் மங்கலாகத் தெரியத் தொடங்குகின்றன.

 

Norte படத்திற்குத் தஸ்தாயேவ்ஸ்கியின் கதை என்றால் இப்படத்தைத் தல்ஸ்தோயின் “God sees the truth, but waits” சிறுகதையை அடியொற்றி இயக்கியுள்ளார். தல்ஸ்தோய் கதையானாலும் அதற்குத் தஸ்தாயேவ்ஸ்கியின் உளவியல் பார்வையையே தன் இயல்புப்படி டியாஸ் வழங்கியிருக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஒரு பைத்தியக்காரி, பாலியல் தொழிலாளியான திருநங்கை, தெரு வியாபாரி ஆகியோரைத் துணைக் கதாபாத்திரங்களாக வைத்துக்கொண்டு பழிவாங்கல் கதையைக் கொஞ்சம்கூடப் புலம்பல் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையைப் பற்றின பார்வை இருக்கிறது. அதன் சக்கரச் சுழற்சியில் மிதிபடுவதும் மேலேறுவதுமாக ஓர் எல்லையிலிருந்து மறுஎல்லைக்கு அவர்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பொறாமையும் வக்கிரமும் கொண்ட மனதுடையவன் பாவ மன்னிப்பு கேட்பது பற்றி குற்றவுணர்ச்சியுடன் ஆலோசனை பெறுகிறான். மன்னிக்கும் இயல்பினளோ அவனைக் கொல்வதற்குக் கள்ளத்துப்பாக்கி வாங்குகிறாள். அந்தத் திரிபையும் குண வேறுபாடுகள் நொடிப்பொழுதில் உருக்கொள்வதையும் அவர்கள் கேள்விக்குட்படுத்துவதில்லை. அவர்தம் உணர்ச்சி வெளிப்பாட்டினைச் சமன்படுத்தும் விசையாக இன்னொரு தரித்திரவாசிதான் இருக்கிறான் என்கிறபோது தங்களைச் சமாதானப்படுத்துகிற கூர்மையான பதிலைப் பெற்றுவிட முடியாது என்பதை அறிந்துகொண்டு விட்டவர்கள் எனலாம். நல்லதோ கெட்டதோ அதைத் தீவிரமாகச் செயல்படுத்துவதில் அவர்களுக்குத் தயக்கங்கள் இருக்கின்றன. தொடர்ச்சியான புறக்கணிப்புகளால் உருவான சோம்பல் மனநிலை அது. பழியுணர்ச்சியைக்கூட அது மட்டுப்படுத்திவிடுகிறது. வழக்கமாக, தனிமைக்கு விதிக்கப்பட்டவர்களை எதையும் செய்யத் துணிகிற அசட்டு உத்வேகம் கொண்டவர்களாகவோ எதிலிருந்தும் விலகி நிற்கிற பயந்தாங்கொள்ளிகளாகவோ சித்தரிப்பார்கள். லாவ் டியாஸ் இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நிலையைக் காட்சிப்படுத்துகிறார். அதைத் தஸ்தாயேவ்ஸ்கியின் கைவிளக்குடன் நெருங்கிக் காட்டுகிற போது மற்றவர்களால் தொட முடியாத உள்ளாழத்தைத் தொட்டுவிடுகிறார். அதை நாம் எதிர்ப்பின்றி நம்ப வேண்டியிருக்கிறது.

லாவ் டியாஸ் நடைமுறைவாதி. அவர் எந்தச் சூழலிலும் மனிதர்களை “வெளியேற்றுவதில்லை”. அயர்ச்சியும் உச்சபட்ச விரக்தியும் அடைகிற சமயங்களிலும் ஒரு விசையிலிருந்து தங்களை துண்டித்துக்கொண்டு இன்னொரு விசையில் போய் சேர்ந்துகொள்கிறார்கள். அங்கே தற்காலிகமான இணைவுகளை ஏற்படுத்திக்கொண்டு நடப்பவற்றில் பொருந்திக்கொள்ள முயல்கிறார்கள். இனி அவர்களது வாழ்வில் மகிழ்ச்சி இல்லை, தேடல் இல்லை, தொலைதல் மட்டுமே மிச்சமிருக்கிறது. வெளியேறாதே, தொலைந்து போ என்று டியாஸ் சொல்கிறார். நாம் தொலைந்துபோனால் விசைகளில் ஒன்று அறுபடுகிறது. சமன்பாட்டில் ஒரு குலைவு ஏற்படுகிறது. இந்த அமைப்புக்கு எதிராகக் கதியற்றவர்களால் செய்ய முடிந்த பழிவாங்கல் இது மட்டுமே! அதுவும் உருப்படியற்றது! படம் முடிந்தபோது, நான்கு மணிநேரப் படமானாலும், ஒரு துண்டு வாழ்க்கையைப் பார்த்த திருப்தியின்மையே சூழ்ந்தது. தல்ஸ்தோயின் சிறுகதை அளித்த முழுமையுணர்வைத் தராமல் வெளிறிப் போயிருந்த உணர்வே ஏற்பட்டது. டியாஸின் எண்ணமும் அதுவாகவே இருந்திருக்கும்.

***

-கோகுல் பிரசாத்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *