கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ஏழுட்டு முறை இந்த காவல் நிலையத்திற்கு வந்திருப்பேன். நான் வழக்கறிஞர் ஜிலானிக்கானிடம் ஜூனியராகச் சேர்ந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. நான் ஒரு எளிய மனிதனாக இந்த காவல் நிலையத்திற்கு வருவது இது மூன்றாவது முறை. உண்மையில் சென்ற முறை நான் பொதுப் பிரஜையாக கூட வரவில்லை. குற்றம் சுமத்தப்பட்டவனாக அழைத்து வரப்பட்டிருந்தேன். இப்போது கடவுச்சீட்டு தகவல் சரிபார்ப்புக்காக வரச்சொல்லியிருந்தார்கள். முன்னர் இருந்த எஸ்.ஐ. பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். என்னை என் வீட்டிலிருந்து அடித்து இழுத்துச் சென்ற காவலர்களுள் ஒருவர் என்னைப் பார்த்து சிறு சங்கடமான புன்னகையுடன் கடந்தார். ஒரு பெண் காவலர் என் சான்றுகளைச் சரிபார்த்துவிட்டு , எல்லாம் சரியாக இருக்கிறது , நாங்கள் எங்களது ரிப்போர்ட்டை அனுப்பிவிடுகிறோம் என்றார். நான் வெளியே வந்து நின்றேன். நாவல் மரத்திலிருந்து கனிகள் எங்கும் சிதறிக் கிடந்தன. புதிதாக பணியில் சேர்ந்த எஸ்.ஐ.தர்மராஜ் காவல் நிலையத்துக்குள் சென்றார். அவர் என்னைக் கண்டுகொண்டதாக காண்பித்துக் கொள்ளவில்லை. தன் துறையைச் சேர்ந்த தன்னைப் போன்ற ஒரு எஸ்.ஐ.யின் பணியிடை நீக்கத்திற்கு காரணமானவனைப் பார்த்து முகமன் தெரிவிக்க அவர் விரும்பாதது இயல்பானது தான். முன்னர் இருந்த எஸ்.ஐ.மறுபடியும் வேலையில் சேர சிலகாலம் ஆகும்.
இன்று நான் ஒரு வழக்கறிஞன். ஆனால் உண்மையில் நான் ஒரு இயற்பியலாளனாக வர வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தேன். அனைத்தும் ஓர் இரவு மாறியது. என் தந்தை இரு சக்கர வாகனங்களுக்கான உதிரிப் பாகங்கள் விற்கும் கடையை நடத்தி வந்தார். நான் இயற்பியல் இளங்கலை இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கான வாழ்வாதாரம் அந்தக் கடை தான். எங்களுக்கு வேறு எந்த நிதி ஊற்றும் இல்லை. அன்று எங்கள் கடை இருந்த பஜார் தெரு வழியாக சென்ற ஊர்வலத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தில் எங்கள் கடை உடைக்கப்பட்டது. அது திட்டமிட்டும் நிகழ்த்தப்பட்டிருக்கலாம். ஏனெனில் அனைத்துக் கடைகளும் நொறுக்கப்படவில்லை. அவர்களிடம் ஒரு தேர்வு இருந்தது. ஓடையை தாண்டும் மெல்லிய கால்கள் நிலை தடுமாறுவது போல என் தந்தை குலைந்தார். அவர் கூழாங்கற்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்குவது போல கடையை மீண்டும் ஒழுங்குக்கு கொண்டு வந்தார். அதற்கு ஒரு வருட காலம் எடுத்தது. நான் மூன்றாம் வருடத்திற்குள் நுழைந்தேன். ஒரு நாள் தீப்பிழம்பு போல கொதித்துக்கொண்டிருந்த அந்திப் பொழுதில் எங்கள் தொழில் முடங்கியதிற்கும் கடை அழிக்கப்பட்டதற்கும் நஷ்ட ஈடு கோர முடியுமா என்று அறிந்துகொள்ள நாங்கள் இருவரும் வழக்கறிஞர் ஜிலானிக்கானின் வீட்டுக்குச் சென்றோம். அவர் இதில் குற்றத்தை நிரூபிப்பதும் நஷ்ட ஈடு கிடைப்பதும் அத்தனை எளிதானதல்ல என்று எங்களுக்கு விளக்கினார். நாங்கள் வெறும் கைகளை வீசிக்கொண்டு வீடு திரும்பினோம். கடைகளை மூடிக்கொண்டிருந்தார்கள். இரவுக்குள் சுருண்டு கொள்ள ஆயுத்தமாகிக் கொண்டிருந்தது நகரம். பாம்பு போல வளைந்து செல்லும் குறுகலானத் தெருக்கள். உறைந்து போன நகரத்தின் வெம்மை பாதாளச் சாக்கடைக்கு வெளியே கொப்பளித்துக் கொண்டிருந்தது. மரங்கள் காற்று அற்று இறுகிப்போய் நின்றன. குழந்தை ஒன்று வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. அமைதியாக வந்துக்கொண்டிருந்த வாப்பா சட்டென்று நான் சட்டம் படித்து வழக்கறிஞராக வேண்டும் என்று பேசத் தொடங்கினார். இன்று நமக்கு செல்வதற்கு ஒரு வீடு இருக்கிறது. அது நாளையும் இருக்க வேண்டும். கத்திக் கத்தி தான் நாம் நமது குரல்வளைகளை பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். நமது ஓலங்கள் இடி முழக்கங்களாக மாற வேண்டும். நமது உரிமைகளுக்கு நாம் தான் போராட வேண்டும் என்று பேசியபடியே வந்தார். அவர் தனக்குத்தானே பேசிக்கொள்வது போல இவற்றைச் சொன்னார். நான் அவரை குழப்பத்தோடு பார்த்தேன். எனக்கு இயற்பியல் மீது உண்மையான ஆர்வம் இருந்தது. பொறியியல் படிக்க நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தும் நான் இதைத் தான் தேர்வு செய்தேன். பிரபஞ்சத்தை கேள்வி கேட்க தத்துவத்திற்கும் , இலக்கியத்திற்கும் , இயற்பியலுக்கும் அனுமதி உண்டு என்ற எண்ணம் எனக்கு இருந்தது. நாம் இந்த லோகத்தின் கேள்விகளுக்கான விடைகளை கண்டடைவோம் , பிரபஞ்சத்தின் கேள்விகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார். வழக்கறிஞராக பெயர் வாங்க பல காலம் ஆகும். சிலர் பெயர் வாங்காமலேயே மறைந்து விடுகிறார்கள். நாங்கள் ஒன்றும் செல்வந்தர்கள் அல்ல. காத்திருப்புகள் எளிதானவை அல்ல. நான் என் தந்தையிடம் விளக்கினேன். நான் சம்பாதிக்கிறேன், நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். புழு ஒன்று ஊர்ந்து செல்வது போல நீண்டிருந்தது அன்றைய இரவு. தண்ணீர் குடிக்க படுக்கையிலிருந்து எழுந்த போது என் தந்தை வெளியில் நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்.
நான் இயற்பியல் முடித்தப் பின்னர் என் தந்தையின் எண்ணப்படி சட்டம் படிக்க விண்ணப்பித்தேன். எங்கள் மாவட்டத்தின் அரசு சட்டக் கல்லூரியிலேயே இடம் கிடைத்தது. நான் மூன்றாவது வருடத்திற்குள் நுழைந்த ஒரு மாதக் காலத்தில் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த தந்தை மாரடைப்பில் இறந்து போனார். நான் தலையற்ற முண்டமாக உணர்ந்தேன். அந்தக் கடையை இன்னொருவருக்கு விற்றோம். வந்த பணத்தையும் இருந்த சேமிப்பையும் கொண்டு அந்த வருட படிப்பை முடித்தேன். சட்டக் கல்லூரியில் படிக்கும் போதே ஜிலானிக்கானிடம் அழைத்துச் சென்று ரசூலுக்கு நீங்கள் தான் தொழில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எந்தை இறந்த பின்னர் நான் தினசரி செலவுக்காக ஜிலானிக்கானின் அலுவலகம் சென்று தட்டச்சு வேலைகள் , எழுத்துப்பணிகளை செய்யத் தொடங்கினேன்.
இன்று செல்வதற்கு நமக்கு வீடென்று ஒன்று உள்ளது , அது நாளையும் இருக்க வேண்டும் என்று என் தந்தை சொன்னது எனக்குத் தொடர்ந்து ஒரு அசரீரி போல ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எங்கள் இல்லம் எங்களிடமிருந்து பறிக்கப்படக்கூடும் என்று அவர் அஞ்சினாரா என்று எனக்குத் தெரியவில்லை. யார் பறிக்கக்கூடும், எதன் பொருட்டு பறிக்கக்கூடும் என்றும் எனக்குப் புரியவில்லை. நான் அவரிடம் அதைக்குறித்து கேட்டதுமில்லை. என் வாப்பா முதலில் ஒரு சோடா ஃபேக்டரி நடத்தினார். பின்னர் தான் உதிரிப் பாகங்கள் கடையைத் துவங்கினார். அந்த சோடா ஃபேக்டரியின் அருகில் தான் எங்கள் வீடு. எங்கள் வீட்டுக்கு முன் நிவாஸின் வீடு. அவனது வீடு கிழக்கு நோக்கி சாலை பார்த்து இருந்தது. அவனது தந்தை மோகனரங்கனும் என் தந்தையும் நண்பர்கள். இருவரும் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்தார்கள். அதன் வழி உருவான சிநேகம். இணைந்து தான் இந்த இடத்தை வாங்கினார்கள். நிவாஸ் வீட்டின் பக்கவாட்டிலிருந்த ஏழு அடி அகலம் உள்ள பொதுப் பாதை வழியாக சென்றால் தெற்கு பார்த்த வீடு எங்களுடையது. எங்கள் வீட்டுக்குப் பின்னர் ஒரு அரச மரமும் ஆல மரமும் இருந்தன. அருகில் பாழ்பட்டு நின்ற எங்கள் சோடா ஃபேக்ட்ரி.பின்னர் ஏரிக்கரைத் தெருவும் பின்னே ஏரியும். முதலில் நிவாஸின் வீட்டுக்கும் எங்கள் இல்லத்திற்கும் மத்தியில் மதில் சுவர் இல்லை. நிவாஸின் அன்னை வீட்டின் பின் வாசல் வழியாக வந்து எங்கள் அன்னையுடன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார். நிவாஸ் என்னை விட பத்து வயது பெரியவன். நான் நன்றாக பந்து வீசுவேன் என்பதால் அவர்களின் கிரிக்கெட் டீமில் என்னையும் ஒரு முறை சேர்த்துக் கொண்டார்கள். ஒரு கோடைக்காலத்தின் பின் மதியப் பொழுதில் மோகனரங்கன் என் தந்தையிடம் வந்து நான் வீட்டைச் சுற்றி மதில் அமைக்கப் போகிறேன் என்றார். அவர் அமைத்த மதில் எங்கள் நிலத்தின் இரண்டு அடிகளை எடுத்துக்கொண்டது. எங்கள் குடும்பங்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டது. ஆனால் என் தந்தை இப்ராஹிம் கசப்பை மென்று முழுங்கினார். வெளியே உமிழவில்லை. நிவாஸின் திருமணத்திற்கு அவனது தந்தை வந்து அழைத்தார். அப்போது நிவாஸூக்கு மேடையில் கைகுலுக்கி வாழ்த்துச்சொன்னேன். நிமோனியா பாதிப்புக்குள்ளாகி மோகனரங்கன்இறந்த போது நாங்கள் சென்றோம். என் தந்தை இறந்த போது நிவாஸ் இல்லம் வந்து என் கரம் பற்றி நின்று ஆறுதல் சொல்லிச் சென்றான்.
நான் வழக்கறிஞருக்கு பதிவு செய்து இரண்டு மாதம் கழிந்திருந்தது. நீதிமன்றம் செல்லத் துவங்கியிருந்தேன். சட்டத்துறையை பொறுத்தவரை நாம் முதலில் கற்க வேண்டியது சட்டத்தை அல்ல , சட்ட நுணுக்கங்களை அல்ல, அதன் அன்றாடங்களை. அதன் அன்றாடங்கள் மிகப்பெரிய சடங்குகள். அந்த சடங்குகளை கற்று அதன் வழி என்ன செய்ய இயலுமோ அதைச் செய்யலாம். புரட்சிகள் நீதிமன்றங்களின் வழி நிகழ்த்த இயலாது. அதே நேரத்தில் சட்டத்தின் வழி நிகழ்த்தக்கூடியவை ஏராளம். அங்கு மனித உரிமைகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்களும், அதன் வழி சென்று நீதிபதி ஆனவர்களும் எளிய மக்களின் நம்பிக்கைகள்.
மார்கழி மாதத்தின் இரவு ஒன்றில் ஜிலானிக்கானின் இல்லத்திலிருந்து வீடு திரும்பிய போது நிவாஸ் வீட்டின் பக்கவாட்டு பாதையில் செங்கல்களும், சிமெண்டும், மணலும் கொட்டப்பட்டிருப்பதை பார்த்தேன்.நிவாஸின் வீட்டின் மேல் மாடிக்கு பக்கவாட்டு வழியாகச் செல்ல படிக்கட்டுகள் கட்டப்போகிறார்கள் என்றார்கள்.
என் இல்லத்திற்கு செல்வதற்கான பொது வழி ஏழு அடி அகலம் கொண்டது.இரு சக்கர வாகனங்கள் எளிதில் செல்ல முடியும்.இப்போது படிக்கட்டுகள் கட்டினால் இரண்டிலிருந்து மூன்று அடிகள் போய்விடும்.பிரதான சாலையிலிருந்து இந்த வழியாக வந்தால் தான் என் இல்லத்திற்கு எளிதில் செல்ல முடியும். இல்லையென்றால் நான் ஒரு கீலோ மீட்டர் சுற்றி ஏரிக்கரைச் சாலை வழியாக செல்ல வேண்டும். நிவாஸ் பல் மருத்துவன். இப்போது சில வருடங்களாக அவன் பிரபலம் அடைந்து வருகிறான். தொலைக்காட்சிகளில் பேசுகிறான். பருமனாக இருந்தவன் மேலும் பருமனானான். அவன் அவனுடன் படித்த அவன் ஜாதிப் பெண்ணை திருமணம் செய்து கொண்டான். நகரத்தின் முக்கிய சர்க்கிளுக்கு அருகில் கிளினிக் தொடங்கினான். வெளிநாட்டு மாநாடுகளுக்கு சென்று திரும்பினான். ஊரின் பணக்காரர்களுடன் நட்பு கொண்டான். வைத்திருந்த காரை விற்றுவிட்டு மினி கூப்பரை வாங்கினான். ஒரு கறுப்பு நிற டேஷண்ட் நாய் வளர்த்தான். அது எப்போதும் குரைத்துக்கொண்டே இருந்தது. பன்றிக்குட்டிகள் போல அவனுக்கு செல்வம் பெருகியது. மாடி கட்டினான். மாடிக்குச்செல்ல படிக்கட்டு கட்டினான். நான் அவனைச் சாலையில் பார்ப்பது குறைந்து போனது. அவன் எப்போதாவது நடைபயிற்சி செய்ய முற்படுவான். ஆனால் இரண்டு நாட்களில் அது நின்று விடும். அவனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. அந்தக் குழந்தைகளும் சாலையில் விளையாடி நான் பார்த்ததில்லை. ஒரு முறை ஆள் அனுப்பி எங்கள் வீட்டையும் சோடா ஃபேக்டரி இருந்த இடத்தையும் வாங்கிக் கொள்ள விரும்புவதாகவும் நல்ல விலை தருவதாகவும் சொன்னான். என் தந்தை மறுத்துவிட்டார்.
நான் அவனிடம் சென்று படிக்கட்டுகள் குறித்து பேசினேன்.எனது பால்ய காலத்திலிருந்து என்னை அறிந்தவன். நாங்கள் இருவரும் ஒரே காற்றையும் ஒரே நிலத்தடி நீரையும் பருகி வளர்ந்தவர்கள். பருமனாக இருந்தவன் பல்கிப்பெருத்திருந்தான். அவனது வீட்டின் பால்கனியில் அவன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். இருந்த மற்றொரு நாற்காலியில் என்னை அவன் அமரச்சொல்லவில்லை. பால்கனி முழுதும் இருந்த கிரோட்டன் செடிகளில் தண்ணீர் ஊற்றியிருந்தான். படிக்கட்டுகள் கட்டுவேன் , உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்றான். இது பொது வழி என்றேன். வசைச் சொற்களை பேசுவதற்கு முன் இங்கிருந்து சென்று விடு என்றான். நான் அதன் பின் அங்கே அதிக நேரம் நிற்கவில்லை. அப்போது என்னிடம் இரண்டு தேர்வுகள் மட்டுமே இருந்தன. ஒன்று அதை அப்படியே விட்டுவிடுவது. இரண்டாவது அவன் மீது வழக்கு தொடுப்பது. நான் முதலாவதை தேர்வு செய்தேன். அவன் படிக்கட்டுகளை கட்டி முடித்தான். அந்தப்படிக்கட்டுகளை பார்க்கும் போதெல்லாம் என் மீது யாரோ மூத்திரம் பெய்வது போலவே இருந்தது. சில மாதங்களில் அந்தப் படிக்கட்டுகளுக்கு கீரில் கதவை அமைக்கத் துவங்கினான். யாரோ அவன் வைத்திருந்த விலையுயர்ந்த காலணிகளையும் குழந்தைகளின் கீயர் சைக்கிள்களையும் திருடி விட்டனராம். கீரில் கேட்டுக்காக இன்னும் அரை அடி நிலம் போகும். நான் பொறுமை இழந்தேன்.
இது பொது வழி, இந்த இடத்தை ஆக்கிரமிக்க உங்களுக்கு உரிமை இல்லை , உங்கள் மீது ஏன் வழக்குத்தொடுக்கக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். நான் எதிர்பார்த்தது போலவே அவனிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. வேறு வழியின்றி எங்கள் நகரத்தின் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். வழக்கையும் நிவாஸ் எதிர்கொள்ளவில்லை. எக்ஸ் பார்ட்டி அடிப்படையில் எனக்கு சாதகமான இடைக்காலத் தீர்ப்பு வந்தது. தற்காலிகமான இன்ஜக்ஷ்ன் அளித்து நீதிமன்றம் ஆணையிட்டது. அந்தத் தீர்ப்பை கொண்டு போய் காவல் நிலையத்தில் காண்பித்து அவர் கீரில் கேட் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று கோரினேன். முதல் முறையாக அப்போது தான் நான் எனது நகரத்தின் காவல் நிலையத்திற்கு சென்றேன். எஸ்.ஐ.தாமோதரனைப் பார்த்து புகார் அளித்தேன். என் புகார் ஏற்கப்பட்டது. ரசீதும் அளித்தார்கள். ஆனால் அது உண்மையில் இரு தரப்புக்கான நிலத்தகராறு என்று பின்னர் புகாரை முடித்து வைத்தார்கள்.
காவல் நிலையத்தில் புகார் அளித்து வீடு திரும்பிய அன்று இரவு நான் எதிர்பார்த்திராத நிகழ்வுகள் அரங்கேறின. அன்றுடன் என் வாப்பா இறந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. என் அன்னை எனக்கு உணவு பரிமாறிவிட்டு என் தந்தையின் புகைப்படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். எங்கள் தெருவில் இரவு ஒண்பது மணிக்கு மேல் நிசப்தம் நிலவும். எங்கள் வீட்டுக்குப் பின் இல்லங்கள் இல்லை என்பதால் வண்டிகளின் சத்தம் அதிகம் கேட்பதில்லை. ஒரு ஜீப் வந்து நிற்கும் அரவம் கேட்டது. நிறைய காலடிகளின் ஒலி. என் வீட்டின் கதவு வேகமாக தட்டப்பட்டது. எஸ்.ஐ.தாமோதரனும் இரண்டு காவலாளிகளும் நின்றிருந்தார்கள். உன்னை கைது செய்கிறோம் என்றார்கள்.ஏன் என்று கேட்டேன். காவல் நிலையம் சென்று பேசிக்கொள்ளலாம் என்றார்கள்.நான் லுங்கியிலும் பணியனிலும் இருந்தேன்.கையில் சோற்றுப் பருக்கைகள். நான் உடை மாற்றிக்கொண்டு வருவதாகச் சொன்னேன். அவர்கள் அதற்குக் கூட அனுமதிக்காமல் உடனே வரச்சொல்லி பணியனைப் பற்றி இழுத்தார்கள்.நான் சட்டம் படித்திருக்கிறேன் , வழக்கறிஞன் என்றேன். பணியனிலிருந்து கைகளை எடுத்த தாமோதரன் அதுக்கு என்னடா வோத்தா என்று கேட்டு பிடரியைப் பற்றி வெளியே தள்ளினான்.
என்னை வண்டியில் ஏற்றி இரு காவலர்களுக்கு மத்தியில் அமர்த்தினர். என் அன்னை வண்டி முன் நின்று கெஞ்சினார். அந்த எஸ்.ஐ என் தாயைத் தள்ளிவிட்டான். அவர் அருகிலிருந்த அரச மரத்தை தாங்கி நின்றார். ஏரிக்கரை சாலை வழியாக வண்டி பிரதான சாலையை அடைந்தது. வண்டியை எவருமற்ற புறவழிச்சாலையில் நிறுத்தினர்.இறங்கச் சொன்னார்கள்.என் கைகள் விலங்கிடப்பட்டிருந்தன. நான் நீதிமன்ற வளாகத்திற்குள் மட்டுமே வழக்கறிஞன், ஆனால் தான் இருபத்தி நான்கு மணி நேரமும் போலீஸ்காரன் என்று சொல்லி என் முன்னே பேண்ட் ஜிப்பை கழற்றி மூத்திரம் பெய்தான் தாமோதரன். என்னை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் எனக்கான ஒரே விடியல் அவனின் பேச்சைக் கேட்பது தான் என்றும் சொன்னான். அப்போது அவன் என்னை ஓங்கி அறைந்ததில் உதடு கிழிந்து ரத்தம் வந்தது.
காவல் நிலையத்தின் முதல் மாடிக்கு பின் பக்கம் வழியாக அழைத்துச் சென்றார்கள்.அங்கே ஒரு மர ஃபேஞ்சில் அமரச் சொன்னான் கான்ஸ்டபிள். வேறொருவன் வெறும் ஜட்டியுடன் சுவற்றில் சாய்ந்து சரிந்திருந்தான். அவன் உடல் முழுக்க ரத்தம். மாடியின் முகப்பு அருகில் மர நாற்காலியில் ஒரு காவலாளி அமரந்திருந்தான். வேறு யாரும் இல்லை. சிறிது நேரத்தில் அங்கு வந்த எஸ்.ஐ. உன்னை எவன்டா பேஞ்சு மேல உக்காரச்சொன்னது என்று சொல்லி பேஞ்சை உதைத்தான். நான் எழுந்து கொண்டேன். பணியனைக் கழற்றச் சொன்னான். நான் ஏதும் செய்யாமல் நின்றேன். அவன் காதில் விழும் படியாக வேகமாக அறைந்தான். தலை கிண்ணென்று சுற்றியது. மறுபடியும் கழற்றச் சொன்னான். நான் செய்வதறியாது நின்றேன். அவன் சட்டென்று பணியனைப் பற்றி கிழித்தான்.என் வயிற்றைத் தொட்டு என்ன வயிறு வழுவழுன்னு இருக்கு என்று சொல்லி இளித்தான். என்னைச் சுவற்றை நோக்கி தள்ளி கீழே அமரச் சொன்னான். என் அன்னையும் எனது மாமா நிஜாமும் எனக்கு சட்டை ஃபேண்ட்டை எடுத்து வந்திருந்தார்கள். ஒரு காவலாளி அதை மேல்மாடிக்கு கொண்டு வந்தான். ஆனால் என்னிடம் கொடுக்கவில்லை.
நீ தான் நிவாஸ் வீட்டின் காலணிகளையும் சைக்கிள்களையும் திருடினாய் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்கள். நான் எப்போது திருடினேன், நான் திருடவில்லையே என்றேன்.ஒருவன் லத்தியைக் கொண்டு சட்டென்று என் மணிக்கட்டில் அடித்தான்.வலி தாள முடியாமல் நான் அலறினேன். நீ ஓப்புக்கொள்ளவில்லை என்றால் உன் தாயையும் கைது செய்ய வேண்டியிருக்கும் என்றான். வழக்கறிஞர் ஜிலானிக்கான் ஊரில் இல்லை. எனக்கென்று அங்கு வந்து நிற்க யாருமில்லை என்பதையும் அவர்கள் ஊகித்திருந்தார்கள். நான் ஒப்புக்கொண்டேன். கையெழுத்திட்டு தருவதாகச் சொன்னேன். அவர்கள் விரும்பியது போல எழுதி கையெழுத்து வாங்கிய பின்னர் அன்றிரவு லாக்கப்பில் அடைத்தனர். வேறு ஒருவனும் லாக்கிப்பில் இருந்தான். அறையின் துர்நாற்றத்தில் எனக்கு குமட்டியது. நான் முழு இரவும் அரை நிர்வாண நிலையில் அமர்ந்திருந்தேன்.
மறுநாள் மதியம் சட்டை ஃபேண்ட்டை அணிந்து கொண்டு வரச்சொன்னார்கள்.நிவாஸ் வீட்டுக்கு அழைத்துச் சென்று எப்படித் திருடினேன் என்பதை விளக்கச் சொன்னார்கள்.எனக்கு அந்த நொடியில் தோன்றிய வகையில் செய்து காட்டினேன்.திருடிய பொருட்களை என்ன செய்தாய் என்று கேட்டார்கள்.காலணிகளை குப்பைத்தொட்டியில் போட்டதாகவும் சைக்கிள்களை ஒரு டெம்போவில் எடுத்துச் சென்று நாற்சந்தியில் போட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் சொன்னேன்.ஒரு கான்ஸ்டபிள் நான் சொல்வதை குறிப்பு எடுத்துக்கொண்டான்.அன்று மாலை என்னை மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் சென்றார்கள்.என்னை ஜாமீனில் எடுக்க என் அன்னையும் வழக்கறிஞர் ஜிலானிக்கானும் என் மாமா நிஜாமும் வந்திருந்தார்கள்.
அரசு தரப்பு வழக்கறிஞர் என்னை ஜாமீனில் விடுவிக்கக்கூடாது என்றும் குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வாதாடினார். மாஜிஸ்திரேட் என்னைப் பார்த்து அடித்தார்களா என்று கேட்டார். நான் அந்த நிமிடத்திற்காக காத்திருந்தேன். சமீபத்தில் பரீட்சை முடிந்து மாஜிஸ்திரேட்டானவர். பெயர் நந்தன். அவரின் கேள்வி முக்கியமானது. பெரும்பாலும் இந்தக் கேள்வியை குற்றவியல் நீதிமன்றங்களின் மாஜிஸ்திரேட்டுகள் கேட்பதில்லை. மிக இயந்திரத்தனமாக ஐந்து நாட்கள் காவல் கொடுத்துவிடுவார்கள். அங்கே நம்மை மேலும் அடித்து துன்புறுத்தி நமது ஆன்மாவை சிதைத்துவிடுவார்கள்.
நான் காவல் நிலையத்தில் கையெழுத்து ஈட்டதற்கும் நான் குற்றத்தை எப்படிச் செய்தேன் என்று விளக்கியதற்கும் காரணம் மிக எளிமையானது. அதைச் செய்யாவிட்டால் என்னை மேலும் வதைத்திருப்பார்கள். அவமானப்படுத்தியிருப்பார்கள். மேலும் என் அன்னையைக் கூட கைது செய்திருப்பார்கள். குற்றம் சுமத்தப்பட்டவரையே குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தக்கூடாது என்று இந்திய அரசியலைப்பின் பிரிவு 20(3)சொல்கிறது.அது மட்டுமல்ல என் மீது பதியப்பட்டவை திருட்டு வழக்குகள். ஐபிசி 447 மற்றும் ஐபசி 379 பிரிவுகள். அவை மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை பெற்றுத் தரக்கூடியவை. அதற்கு உடனடியான கைதுகள் அவசியமற்றவை என்கிறது சிஆர்பிசி பிரிவு 41A.இவற்றை கொண்டு வாதாடலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. நான் நீதிபதி நந்தனிடம் ஆம் என்னை அடித்தார்கள் என்று சொன்னேன்.
நமது நாளிதழ்களில் உச்சநீதிமன்றங்களும் உயர்நீதிமன்றங்களும் தான் பேசுபெருட்கள். ஆனால் ஓர் எளிய இந்திய பிரஜைக்கு கீழமை நீதிமன்றங்கள் அதிலும் சிஜிஎம் என்று சொல்லப்படும் குற்றவியல் நீதிமன்றங்களின் மாஜிஸ்திரேட்டுகள் தான் முக்கியமானவர்கள். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்ல. அவன் ஒரு போதும் அவரை சந்திக்க போவதுமில்லை அங்கு நிகழ்பவை அவனுக்கு பொருட்டுமில்லை. பெரும்பாலான குற்றவியல் குற்றங்களின் ஜாமீன் வழக்குகள் முதலில் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் தான் நிகழ்கின்றன. அங்கே நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். நடந்தவற்றை விளக்கினேன். உங்களை ஜாமீனில் எடுக்க ஷூரிட்டி இருக்கிறதா என்று கேட்டார். என் மாமா நிஜாம் தன் வீட்டுப் பத்திரத்தின் நகல்களையும் ஆதார் கார்ட்டையும் உறுதிமொழியையும் தாக்கல் செய்திருந்தார். ஐம்பதாயிர ரூபாய் ஷூரிட்டியில் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டேன். தன் தீர்ப்பில் எஸ்.ஐ.தாமோதரன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் மாஜிஸ்திரேட் நந்தன்.
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த உடன் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அதற்கான மருந்துச்சீட்டையும் அறிக்கையையும் பெற்றேன். இரவு உறங்கச் சென்றவன் மறுநாள் மதியம் வரை படுக்கையில் கிடந்தேன். என் அன்னை பாதம் அருகே அமர்ந்து என் கால்களை பற்றி அழுத்தினார். அந்த ஸ்பரிஸத்தில் ஈரம் வழிந்தோடியது. சூக்கு டீ கொண்டு வந்திருந்தார். வாயைக் கொப்பளித்துவிட்டு பருகினேன். அவர் என் கைகளை பற்றிக்கொண்டு பார்த்தபடியே இருந்தார். அவர் கண்களிலிருந்து நீர் கொட்டியது.நாம் இந்த வீட்டைக் காலி செய்து விடலாம் ரசூல் என்றார். இங்கே நிகழ்பவை எல்லாம் இந்த வீட்டுக்குத்தான். நாம் இதை நிவாஸூக்கே விற்றுவிட்டு சென்றுவிடலாம். உன்னையும் பறிகொடுக்க நான் தயாராக இல்லை என்றார். என் அன்னை வீட்டை விட்டு அதிகம் வெளியே செல்பவர் அல்லர். காய்கறி வாங்குவார். பக்கத்து நகரில் இருக்கும் உறவினர்கள் வீட்டுக்கு பஸ் பிடித்து செல்வார். இந்த நகரத்திலேயே ஃசோபா, பெட் கடை வைத்திருக்கும் என் மாமா நிஜாம் வீட்டுக்கு சில நேரங்களில் சென்று திரும்புவார். நான் அதுவரை என் கைதுக்கான காரணத்தை முழுமையாக புரிந்து கொள்ள இயலாமல் திணறிக்கொண்டிருந்தேன். அவர் மிக எளிதாக அந்தக் புள்ளிகளை இணைத்தார்.
நான் திருடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். நிவாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் தான் நான் கைதுசெய்யப்பட்டேன். வாப்பா நமது உரிமைகளுக்கு போராடத்தான் சட்டம் படிக்கச் சொன்னார் , நாம் ஓடி ஒளியக்கூடாது என்றேன். கண்களை தாழ்த்தி தரையை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்த அன்னை காலி டம்பளரை எடுத்துக்கொண்டு வெளியேறினார். செல்லும் போது என் தலையை கோதிவிட்டுப் போனார்.
ஜிலானிக்கான் அழைத்திருந்தார்.அடுத்த நாள் வருவதாகச் சொன்னேன். வீட்டுக்குள் சுருண்டு கிடக்காதே , புறப்பட்டு வா, பிழை செய்யாதவர்கள் துவளக்கூடாது என்றார்.என் ஜாமீன் வழக்கை என்னையே வாதாடச் சொல்லி ஊக்கப்படுத்தியவர் அவர் தான். ஜிலானிக்கான் அதிகம் பேசமாட்டார். ஆனால் அவரில் இருப்பு எனக்கு என் தந்தையின் நிழல் போல உடன் இருந்தது. துவாலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றேன். என் வயிற்றில் சோப் போடும் போது அந்த எஸ்.ஐ. சொன்ன வாக்கியம் நினைவில் வந்தது. நான் குளித்து உடை மாட்டிக்கொண்டு காவல் நிலையம் சென்றேன். சர்க்கிள் இன்ஸ்பெக்டரிடம் என் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி புகார் அளித்து எஸ்.ஐ.தாமோதரன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னேன். நான் காவலாளிகளை அதில் சேர்க்கவில்லை. புகாரின் நகல்களை டிஜிபி அலுவலகத்திற்கும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கும் முதல் அமைச்சருக்கும் உள்துறை அமைச்சருக்கும் அனுப்பினேன். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படபோவதில்லை என்பதை ஊகித்திருந்தேன். எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.
ஒரு வாரம் கழித்து உயர்நீதிமன்றத்தில் ஒரு ரீட் மனுவை தாக்கல் செய்தேன்.இந்திய அரசியலமைப்பில் இரண்டு பிரிவுகள் தனி மனிதர்களுக்கு தீர்வுகளை , நிவாரணங்களை அளிப்பவையாக அமைந்திருக்கின்றன. அவை பிரிவு முப்பத்திரண்டும் பிரிவு இருநூற்றி இருபத்தி ஆறும். ஒருவனுக்கு இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போது அவன் பிரிவு 32யைக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தனக்கான தீர்வைக்கோரலாம். அதே போல 226 பிரிவின் அடிப்படையில் ஒருவன் தனது பிராதை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாம். நான் 226 பிரிவைக் கொண்டு என் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மீதான நடவடிக்கை கோரி மனு ஒன்றை அளித்தேன்.
என் தந்தை என்னை மனித உரிமைகளுக்கு போராட வேண்டும் என்று சட்டம் படிக்கச் சொன்னார். நான் எனக்கான உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடுவேன் என்று நினைக்கவில்லை. உயர்நீதிமன்றத்தின் வழக்காடு முறைமைகள் கீழமை நீதிமன்றங்களிலிருந்து வேறானாவை. மேலும் இங்கு வழக்காடும் மொழி ஆங்கிலம். நீதிமன்றங்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் வழக்கறிஞர் மற்றவர் நீதிபதி. வழக்கறிஞர் மனித உரிமைகள் மீறப்பட்டது என்று கூப்பாடு போட்டால் நீதி கிடைக்காது. இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவின் அடிப்படையில் என் உரிமை மீறிப்பட்டது என்பதை நிறுவ வேண்டும். சிஆர்பிசி படி ஏன் என் கைது தவறானது என்று சொல்ல வேண்டும்.
ஆனால் வழக்கறிஞர் எத்துணைத் தீவிரத்தோடு வாதிட்டாலும் நீதியரசரும் அந்த நோக்கை பிரதிபலிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எப்படி குற்றவாளிகள் வெறும் குற்றவாளிகள் இல்லையோ அதே போல நீதிபதிகள் வெறும் நீதிபதிகள் அல்லர். அவர்கள் சமூக மனிதர்கள் என்பதால் அவர்களுக்கும் சார்புகள் உண்டு. அந்தச் சார்புகள் அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையும் பாதிக்கும்.
என் வழக்கு நீதியரசர் கிருஷ்ணன் அமர்வுக்கு வந்தது. என் தரப்பு வழக்கறிஞர் அபுபக்கர். ஜிலானிக்கானின் நண்பர். ஜிலானிக்கானும் அபுபக்கரும் பாண்டிச்சேரியில் ஒன்றாகச் சட்டம் படித்தார்கள். அபுபக்கர் பின்னர் மாஜிஸ்திரேட்டாகப் பணிபுரிந்தார்.ஓய்வுக்குப் பின்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். அகலமான நெற்றி. விரிந்த தோள்கள். வார்த்தைகளுக்கு மத்தியில் இடைவெளி விட்டு மிக அழுத்தமாகப் பேசினார். அவர் முகம் எப்போதும் மெல்லிய புன்னகையுடனே இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஒரு வேளை நான் என் நகரத்தை விடுத்து சென்னைக்கு குடிபெயர்ந்தால் இவரிடம் தான் பணிபுரிய வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். நான் வழக்குக்காக சென்னைக்கு போகும் போது அவரின் இல்லத்திலேயே தங்கிக்கொண்டேன். அவரது இரு சக்கர வாகனத்தில் என்னையும் அழைத்துக்கொண்டு நீதிமன்றம் சென்றார். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மனம் புதிய தீர்வுகளை கண்டடைகிறது என்று என்னிடம் சொன்னார். சென்னையில் இத்தனை வாகனங்கள் ஒரு சாலையில் எப்படி இத்தனை ஒத்திசைவோடு செல்கின்றன என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். அபுபக்கர் மூன்று வாதங்களை முன்வைத்தார். முதலாவது என் மீதான திருட்டுக் குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை அளிக்க இயலும். அதற்கு உடனடியான கைதுகள் தேவையில்லை. இரண்டு குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி என்னை வற்புறுத்தியது இந்திய அரசியலமைப்பின் படி பிழை. மூன்றாவது இது நிலம் தொடர்பான பகையால் உருவாக்கப்பட்ட வழக்கு என்பதற்கான சான்றுகள். மேலும் நான் ஜாமீனிலிருந்து வெளிவந்த பின்னர் எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் விபரங்கள்.
அரசு தரப்பு வழக்கறிஞர் என் மீதான கைது சிஆர்பிசி படி தவறானது இல்லை என்று வாதிட்டார். மேலும் நானே குற்றத்தை ஒப்புக்கொண்டு கையெழுத்து ஈட்டதாகவும் என் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டது என்று சொல்வது என் விருப்பக் கற்பனை மட்டுமே என்றும் சொன்னார். நான் எனது கட்டளை மனுவில் எனக்கு நிகழ்ந்த அநீதிக்கு எஸ்.ஐ.தாமோதரன் மீது துறை சார்ந்த விசாரணை நிகழ்த்தப்பட வேண்டும் என்று கேட்டிருந்தேன். இரண்டாவது எனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரினேன். நீதியரசர் கிருஷ்ணன் என் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் வருத்தமளிப்பதாக தன் தீரப்பில் கூறினார். நான் வழக்கறிஞன் என்கிற நிலையில் இது மிகவும் கவலையளிப்பதாகச் சொன்னார். எத்தகைய தருணங்களில் கைதுகள் நிகழ்த்த வேண்டும் என்பதை அர்னேஷ் குமார் எதிராக பீகார் மாநிலம் வழக்கிலும் பிற வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதை சுட்டிக்காட்டி இருந்த போதும் காவல் துறை பல்வேறு வழக்குகளில் அதை பின்பற்றாமல் இருக்கிறது என்று கூறினார்.
எனக்கு நிகழ்ந்தவற்றை மாற்ற இயலாது என்றாலும் எனக்கு ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் எஸ்.ஐ.தாமோதரன் மீது நான் அளித்த புகாரில் வழக்கு தொடுத்தப் பின்னர் தான் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அந்தப் புகார் மீது துறை சார்ந்த விசாரணை நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் அது வரை அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பில் சொன்னார். மேலும் எனக்கு வழங்கப்பட்ட நஷ்ட ஈடு துறை விசாரணையில் தவறிழைத்தவராக கண்டறியப் படுபவர்களிடம் இருந்து மீட்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கடவுச்சீட்டு சரிபார்ப்பு முடிந்து பக்கத்தில் பஜாரிலிருந்த என் மாமா நிஜாம் கடைக்குச் சென்றேன். எதிரிலிருந்த காய்கறி கடையில் எஸ்.ஐ.தாமோதரன் அவன் மனைவியுடன் நின்று கொண்டிருந்தான். என்னைக் கவனித்தவன் முகம் இறுகினான். வரிசையில் நின்றிருந்த அவனது மனைவியிடமிருந்த காய்கறிக் கூடையை பிடுங்கி எறிந்துவிட்டுஅவரை இழுத்துக்கொண்டு வெளியேறினான். தாமோதரன் என்னை அடித்ததற்கும் பாலியல் ரீதியில் அவமானப்படுத்தியதற்கும் காரணம் எளிமையானது. நான் குரலெழுப்ப இயலானதவனாக ஆன்மாவை இழந்தவனாக மாறிவிடுவேன் என்று அவர்கள் ஊகித்தனர். அதன் பின் நான் ஒன்றுமில்லை. வெறும் சக்கை. என்னால் எந்தப் பிரச்சனையும் இருக்காது. நிலத்தை பிடுங்கிக் கொள்ளலாம் என்று கணக்கிட்டார்கள்.
என் மாமா அவன் விறுவிறுவென்று ஓடுவதைப் பார்த்து சிரித்தார். ஓடுறான் பாரு பேடிப்பயல் என்றார். பேடிப்பயல். நான் அந்த வார்த்தையை அவ்வளவாக ரசிக்கவில்லை. அவன் நிவாஸ் வழங்கிய ஐந்து லட்ச ரூபாய்க்காக இதைச் செய்திருக்கிறான். என் மீதான திருட்டு வழக்கு எப்படியும் தானாக நீர்த்து போய்விடும். நான் நிவாஸ் மீது அளித்த சிவில் வழக்கு அப்படியே இருக்கிறது. நான் வீட்டுக்குச் சென்றேன். நான் செல்லவும் நிவாஸின் மனைவி என் வீட்டிலிருந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. அவர் அதன் முன் என் வீட்டுக்கு வந்ததில்லை. என்னைப் பார்த்து அசட்டுத்தனமான புன்னகையை உதிர்த்துவிட்டுச் சென்றார். அவர் நகைக்காமலே சென்றிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன்.
நான் என் அன்னையை பார்த்தேன்.அவர் கண் சிமிட்டிச்சிரித்தார். படிக்கட்டுகள் இடிக்கப்படும் என்ற இனியச்செய்தியை சொல்வதற்காக அவர் வீட்டுக்கு வந்திருக்கிறார். இந்த நிலத்தை எழுதி வாங்க விரும்பியவர் படிக்கட்டுகளை இடிப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். நான் உணவருந்திவிட்டு சிறிது நேரம் உறங்கினேன். எழுந்த போது அந்திப் பொழுதில் மங்களம் பூத்திருந்தது.நான் மூன்று ரஸ்குகளை எடுத்துக்கொண்டு வாசல்படியில் சென்று அமர்ந்து கொண்டேன். ஏரிக்கரையில் பனைமரங்களுக்கு பின்னே ஆரெஞ்சு வானம். காகங்கள் கரைந்தன. வானம் , பறவைகள், மரங்கள் அனைத்தும் மஞ்சளை பூசிக்கொண்டு ஆனந்தத்தில் கிடந்தன. நான் ரஸ்குகளை மென்றவாறு எழுந்து சுற்றும் முற்றும் நடந்தேன். யாரோ என்னை கவனிப்பது போல தோன்றவே நிமிர்ந்து நோக்கினேன். நிவாஸ் மாடியில் நின்று கொண்டு என்னைப் பார்த்தபடியே இருந்தான். சிவப்பு நிற டீசர்ட்டும் அரைச்சாயரும் அணிந்திருந்தான். அவன் மீது படர்ந்த மஞ்சள் ஒளியில் அவன் சோபையாகத்தெரிந்தான். அவன் முகத்தை திருப்பிக் கொள்ளாமல் பார்த்தபடியே நின்றான். நான் அவனைப் பார்ப்பதை தவிர்த்து திசைமாற்றி நடக்கத் தொடங்கினேன். அரச மரத்தின் கிளைகளிலிருந்து பீட்ரூட் நிறக் கொண்டை கொண்ட புல்புல் ஒன்று பறந்து சென்றது. நான் அது பறக்கும் திசையை பார்த்தவாறு திரும்பினேன். அது நிவாஸ் வீட்டு மதில் சுவர் மீது அமர்ந்தது. பின்னர் வானம் நோக்கி பறக்கத் துவங்கியது. இப்போது நிவாஸ் அங்கிருந்து சென்றிருந்தான். இந்த வீடு இந்த மரங்கள் இந்தப் பறவைகள் நான் என் அன்னை இங்கு தான் இருக்கப்போகிறோம். இன்று செல்வதற்கு நமக்கு வீடு என்று ஒன்று உள்ளது என்ற என் தந்தையின் வரி என்னுள் அசரரீயாக ஒலித்தது. என் அன்னை எனக்கு டீ போட்டு எடுத்து வந்தார். என்னிடம் கோப்பையை கொடுத்து விட்டு என் அருகில் இன்னொரு கோப்பையுடன் அமர்ந்துகொண்டார். நாங்கள் தேநீர் குடித்துக்கொண்டு பேராக்கு பார்த்தோம்.
***
– சர்வோத்தமன் சடகோபன்