“இந்தா… வர்றேன்” என இரைந்து சொல்லிவிட்டு இரவு உடையைக் களைந்து சேலைக்கு மாறுவதற்குள் மூன்றாவது முறையாக காலிங்பெல் அலறியது. இந்த முறை நீண்டு, ஒரு முறைப்பைப் போல, மனசுக்குள் திட்டுகின்ற – நான் கேள்விப்பட்டுப் பழகிப்போன ஏதோ ஒரு வார்த்தையைப் போல காலிங்பெல் உள்நாக்கு அதிர்ந்தெழக் கத்தியது. ஏறத்தாழ சேலையை மாற்றி முடித்து கிளம்புவதற்கான ஒத்திகையில் எனது செருப்புகளை கட்டிலுக்கு அடியில் கால்களால் துழாவி எடுத்தேன். “வந்துட்டேன்” என்கின்ற ஒற்றைக்குரலில் இந்த தீப்பற்றி எரிகின்ற காலிங்பெல்லின் அவஸ்தையை நிறுத்தலாம். ஆனால் நான் முன்னிருந்த பதட்டம் நீங்கி வழக்கமாக என்முன்னே உரிமையோடு தொண்டை கிழிய பேசுகின்ற முகங்களை ஏதோ பிணங்களைப் பார்ப்பதைப்போல பார்க்கின்ற பார்வையை காலிங்பெல்லின் மீதும் வீசினேன். பதுமை காதைப்பொத்தியபடி கட்டிலின் ஓரம் சுருண்டு கொண்டாள். முகம் முழுக்க இந்த ஆங்காரமான அலறலைப் பொருட்படுத்தித் தடுமாறுகின்ற எரிச்சல் இருந்தது. அந்த எரிச்சலோடு, சிலைபோல செருப்பை எடுத்துப் பதறாமல் மாட்டுகின்ற எனது உடலசைவுகளின் நிதானத்தைப் பார்த்து வழக்கமாக அவள் கொள்கின்ற மென்மையான புன்னகையும் சேர்ந்து வந்தது.

தூசிபடிந்த அரசாங்க விடுதியின் நீண்ட வராந்தாவில் போர்வையைத் தாறுமாறாக அள்ளிப்போட்டுக் கொண்டு பதுமையும் என்னுடன் நடந்து வந்தாள். மாடிப்படியில் இறங்கிவரும்போதுதான் வேண்டாவெறுப்புடன் விரல்களை எடுத்தார் அவ்விடுதியின் சமையல்காரர். அவரது செய்கையால் நான் சீறிவிழுவேன் என்கின்ற எதிர்பார்ப்பும், சட்டென வினாடி கணத்தில் ஒரு மோசமான குழைவோடு அதை சமாளிப்பதற்கான யுக்தியையும் கைவசம் கொண்டுள்ள உடலசைவுகள். எத்தனை நூறுபேர் முன்னில் திரும்பத்திரும்ப நிகழ்த்தப்பட்ட பாவனைகள்.  அதிர்ச்சியோ கோபமோ அற்ற வழக்கமான எனது கல்முகத்தோடு அவரை எதிர்கொண்டேன். பதுமை எனது சேலை நுனியைப் பற்றிக் கொண்டாள்.

“உங்களைப் பார்த்தே ஆகணுமுன்னு மூணுமணிநேரம் தோட்டத்துல நிக்குறாங்க”

அவர் கைகாட்டிய திசையின் இருளில் கையில் சிறிய மஞ்சள்பையைச் சுருட்டிக்கொண்டு, என்னைப் பார்த்து அபத்தமாகக் கும்பிட்டவாறு இருந்த பெண்ணையும் அவளருகே நிற்கின்ற ஒரு சிறுவனையும் வயதான பெரியவர் ஒருவரையும் அதே அமைதியோடு பார்த்தேன்.

”விசிட்டர்ஸை இப்படி ராத்திரில கெஸ்ட்டுக்கு ரிப்போர்ட் குடுக்காம உள்ள அனுமதிக்கலாமா?”

தோளிலிருந்த குற்றாலத்துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தபடி என்னை தர்மசங்கடமாகப் பார்த்தார்.  நான் மீண்டும் திடமாக அதே கேள்வியைக் கேட்டேன்.

“இல்லை. தோட்டக்காரன் காளி சொந்தம்னு கூப்பிட்டு வந்தான். அதான்…”

சற்றுத்தள்ளிய மரத்தின் கீழே எனது பணியின் நிமித்தம் வழங்கப்பட்ட காரை, டயர்களைப் பரிசோதிப்பவனாக பாவித்து நடித்துக் கொண்டிருந்தான் டிரைவர். அவனருகே கெஸ்ட் ஹவுஸின் தோட்டக்காரன் அசர்ந்தப்பமான புன்னகையோடு என்னைப் பார்த்தபடி நின்றிருந்தான். டிரைவர் கேசவனின் கண்கள் தயக்கமோ சங்கோஜமோ இன்றி எனது செயல்பாடுகளை வெளிப்படையாகக் கண்காணித்துக் கொண்டிருக்க, கண்களில் லேசான ஆனால் கூர்மையான கேலியை உள்ளடக்கிய மொழி.

பதுமையைக் காரிடார் தூண் அருகே அமரச்சொல்லிவிட்டு, அவர்களைச் சமீபித்தேன். முற்பகலிலேயே அவர்கள் கிளம்பி வந்திருக்க வேண்டும். இருவேளை உணவு உண்ணாத முகங்களிலும் கண்களிலும் இறங்கிவிடுகிற கலங்கிய தொணியை நீண்ட காலமாகவே அனுபவித்துக் கடந்தவர்களின் சாயல்.

பெரியவர் என்னை மேலும் குனிந்து கும்பிட்டார். அந்தப்பெண் அவசர அவசரமாக தனது மஞ்சள்பைக்குள் கைவிட்டு முனைகள் மடங்கிய சில காகிதங்களை வெளியே எடுத்தாள்.

எனது கல்போன்ற முகத்தில் அந்த கும்பிடுக்கோ, அவளது பதற்றத்திற்கோ எவ்வித வினையுமில்லை. அந்த இளைஞன் – சமீபத்தில்தான் கல்லூரி வகுப்பை முடித்திருப்பான் போல.

நான் அமைதியும் தீர்க்கமுமான குரலில்,

“எதுவும் எடுக்க வேணாம். இந்த நேரத்தில் இப்படி வருவது தவறு. முன் அனுமதியில்லாமல் இந்த வளாகத்திற்குள் நுழைவதும், அலுவலகரீதியான இந்தக் கோரிக்கைகளை இப்படிக் கையாளச் செய்வதும் மோசமான விசயம்.” என்றேன். அவர்களது கண்களில் ஒரு ஏமாற்றத்தின் சாயல் படிவதைப் பார்த்தேன். இதுவரை ஏமாந்திருப்பவர்கள்தான். ஆனால் இப்போது அடைந்தது உள்ளூரப் பிணைந்திருந்த ஏதோவொரு உரிமையின் மீதான ஏமாற்றம். அவர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையிழந்து, வெவ்வேறு சமாதானச் சொற்களோடு என்னை, அந்தக் காகிதங்களை அதில் இருக்கின்ற கோரிக்கைகளைப் பார்த்து செவி சாய்க்குமாறு கெஞ்சத் துவங்கினார்கள். டிரைவர் கேசவன் சுவாரஸ்யமிழந்தவனாக குத்துக்கால் வைத்து அமர்ந்து வாகனத்தின் ஏதோவொரு பாகத்தைச் சீர்படுத்தத் துவங்கினான். என் பின்னால் நின்றிருந்த பதுமையை,

”பாப்பா, பனி விழுந்துக்கிட்டு இருக்கு. அம்மா வருவாங்க, இப்படி ரூம்ல வந்து உக்காரு”

என்றான்.  ஆனால் பதுமை அதைச் சட்டை செய்யாதவளாக எனது பார்வை செல்கின்ற தடத்திலேயே பின்வந்தாள். வந்திருந்தவர்களில் அந்தச் சிறுவனின் முகத்தில், ஒரு ஆழ்ந்த கசப்பை முதன்முதலாக நேர்கொண்டதன் அதிர்ச்சியும் அதைத் தொடர்ந்து மெலிதானதொரு இளங்கோபமும் சுடர்விடத்துவங்கியிருந்தன. நான் மீண்டும் அந்தக் கோபத்தின் முகத்தைப் பார்த்தேன். கசப்போடு சேர்ந்து வருகின்ற அழுகையை எரித்துவிட்டு ஆவேசமாக முன்வந்து சீறுகின்ற கோபம். திருப்தியடைந்தவளாகத் திரும்பி நடக்கத் துவங்கினேன்.

தோட்டக்காரன் ஏதேதோ சமாதானம் சொல்லியபடி அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்லத் தொடங்கினான். நான் நிதானமாகப் படிகளில் ஏறியவாறு எனது முதுகிற்குப் பின்னால் அதிர்ச்சியடைந்து நிற்கின்ற சமையல்காரனின் உடலில் வந்த நேர்த்தியை, தனது பணியில் ஆழ்ந்துவிட்ட கேசவனிடமிருந்து உதிர்ந்துவிட்ட கேலியான பார்வையை, அந்தச் சிறுவனின் கண்களில் ஒருமுறை வந்துசென்ற – மீண்டும் பார்க்க விரும்பிய – அந்தக் கோபத்தை மனதினுள் எண்ணிக்கொண்டவளாக அறைக்குத் திரும்பினேன்.

பூம்பிடாகை என்பது என் ஆயியின் பெயர். அதனை மிகச் சொற்பமான முறையே யாரேனும் உச்சரித்திருப்பார்கள். தோட்டிக் கூடையும் சாம்பல் பையுமாக அவள் போய் நிற்கின்ற வீடுகளில் அவளை எதிர்பார்த்துக் காத்திருப்பது மிகச்சிறிய செவ்வகத் தகர மூடி மட்டும்தான். மூடியையும் தாண்டி வழிந்து கொண்டிருக்கின்ற நீர்க்கரைசலைப் பொருட்படுத்தாமல் கொண்டி நீக்கி, உள்ளே பொதும்பிக் காத்திருக்கின்ற மலங்களைத் தனது சிறிய சுரண்டியால இழுத்து கூடையில் நிரப்பிக் கொள்வாள். அந்த அருவருப்பின்மீது வீசிக்கொள்வதற்கு முந்தைய தினம் மிஞ்சிய அடுப்புச் சாம்பலைக் கருணையென வாசலில் கொட்டிவைத்திருப்பார்கள். ஆயி அந்தக் கருணையை ஒருபோதும் அள்ளிக் கொண்டவளில்லை.

மலக்கரைசல் வழிந்து வழிந்து புண்வந்து குழிந்துவிட்ட அவளது முதுகுத்தண்டில் தினசரி எடுப்புக்குப் போய் வந்தவுடன் அம்மா டிஞ்சர் வைப்பாள். முனிசிபாலிட்டிக்குப் பின்னிருக்கும் ரஸ்தாவில் எடுப்புக் காரிகளுக்கென இலவசமாகத் தரப்படுகின்ற எரிப்பானைக் கூட அவள் அருந்திக்கொள்வதில்லை.

வீட்டின் மூலை இருளில் படித்துக் கொண்டிருக்கும் என் பக்கம் பார்த்தவளாக அமர்ந்து முதுகுப் புறத்தில் அம்மா டிஞ்சர் வைக்கும் வரை ஒவ்வொருமுறையும் அவள் ஹ்ம்..ஹ்ம்.. என்கிற ஒலியோடு தனது வேதனையை மென்றபடி தனக்குள்ளேயே சீறி அலைவாள். ஆயியின் கண்களில் திரண்டெழுந்த கண்ணீர் கீழே வழியாதபடிக்கு அந்தச் சீறலின் ஜ்வாலை எரித்துச் செல்லும். கடைநிலை ஊழியராக நான் பணியில் சேர்ந்த சில மாதங்களில் ஆயி இறந்தாள். பிறகும் நீண்ட நாட்கள் அந்தத் தோட்டிக்கூடை எங்களது வீட்டில் மெல்லிய வாடையை சுவாசம்போல உமிழ்ந்தபடி கிடந்தது. நான் ஒவ்வொருநாளும் அதனை சுவாசித்தபடி வளர்ந்தேன். ஆனால் ஆயி ஒருபோதும் உபயோகிக்காத அந்த சாம்பலினால் நிறைந்த மஞ்சள்பையை அவள் இறந்த அன்றே தூக்கி எறிந்தேன்.

எனக்கும் எனது பணிக்குமிடையே ஆயிரக்கணக்கான ரகசிய மரங்களுண்டு. எப்போதும் கசப்பைப் பூக்களாகச் சொரிகின்ற அந்தக்காட்டைக் கடந்துதான் எனது மேஜையில் எனது கோப்புகளை நான் அடைந்து கொண்டிருந்தேன். முழுவதும் கசப்பைப் பருகுவதின் ஒரு நற்பலன் என்னவெனில், நீங்கள் ருசித்தே இராத கருணையை கனவு கண்டு ஏமாற வேண்டியதில்லை.

இளநிலை உதவியாளராக எனது துவக்கக் காலங்களில் இருந்தபோது, முன்னைவிட பொதுவிடங்களில் என்னை மரியாதைக்குரியவளாக நானே உணர்ந்து கொண்டேன். அதற்கான சந்தர்ப்பங்களும் நிகழ்ந்தன. எனக்கு வருகின்ற அலுவலகரீதியான தொலைபேசி அழைப்புகளில் நான் சிரத்தையும் பதட்டமுமாக மூழ்கிக்கொண்டிருக்கும் கணங்களிலெல்லாம் ஏதேனும் சமையல்வேலை செய்துகொண்டே வெளிப்படுத்தவியலாத துயரமும், மகிழ்வுமான கண்களாக அம்மா என்னைப் பார்ப்பதை உள்ளூர உணர்வேன். அப்போது நான் இவ்வளவு கசப்பானவளாக என்னை மாற்றிக்கொள்ளவில்லை. எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது: எண்ணற்ற புன்னகைகளுள் எனது புன்னகையும் பேதமின்றிப் பார்க்கப்படும் என; எவ்வித வேறுபாடுமின்றி எனது கையைக்குலுக்கிக் கொண்டிருக்கும் கரமொன்று அதே இயல்பில் பேசிக்கொண்டிருக்குமென; ஒரு உரையாடலின் முடிவில் நான் முன்வைக்கின்ற கருத்துக்களின் திறன் அடிப்படையில் அது எல்லோராலும் விரும்பி அணிந்து கொள்ளக்கூடிய ஒரு பதக்கமென உருமாறுமென. ஆனால், நான் மகிழ்ந்து சிரிக்கும் ஒவ்வொருமுறையும் சட்டெனத் தங்களைச் சுருக்கிக் கொள்கின்ற புன்னகைகள், நான் மேலும் மேலுமென விரும்பிப் பற்றியிருக்கும் கைகுலுக்குகின்ற கரத்தில் பளீரென வந்துவிடுகின்ற தளர்வு,  மிடுக்கான ராணியைப்போல எனது கருத்துக்கள் சிம்மாசனத்தில் அமரும்போது எல்லோரும் வெளியேறிவிட்ட வெறிச்சிட்ட அரசசபை என உலகம் எனக்குச் செருப்புக் கொடுத்தது. ஆனால் அதை முகத்தில் அணிந்து நடக்கச் சொன்னது. எனது படிப்பு, உற்சாகமான வேலைத்திறன் ஆகியவற்றைப் பெருமிதமாக யாரேனும் கூறிக்கொண்டே சட்டெனச் சிறிய பரிதாபம் வழிய குரலைத்தாழ்த்தி அவர்கள் கூறிக்கொள்கின்ற எனது அடையாளத்தின் மீதான கருணைகளை நான் கவனமாக உன்னித்தேன். அதைவிடக் குரூரமாக உங்களை யாராலும் அவமானப்படுத்தமுடியாது. அந்தச் சொற்களுக்குள்ளெல்லாம் வெதுவெதுப்பான சாம்பல் கட்டிகளை நான் உணர்ந்தேன்.

ஒரு சாதாரண வேலைநாளின் மிகச்சாதாரண மதியவேளை. தொடர்ந்து மூன்று நாட்களாக ஏதோவொரு வேலை முடியவேண்டி எங்களது அலுவலகத்திற்குக் காலையும் மதியமுமாக அலைகின்ற நபர் அந்த மதியவேளையில் முகத்தில் அதே அலுப்பும் சிடுசிடுப்புமாக வந்து நின்றார். அழகாக மடிக்கப்பட்ட செய்தித்தாள் அவரது சிறிய பர்ஸோடு கையில் இருந்தது. இளநிலை உதவியாளரான எனது இருக்கை வெயில் அலையைப்போல வந்து செல்கின்ற அலுவலக வாசலில் இருந்தது.

தள்ளாடுகின்ற டேபிளின் காலுக்கு ரெண்டு ஆணி அடிக்கின்ற விசயம், அரசாங்கக் கோப்புகளில் விண்ணப்பமாக பரிசீலனையாக இன்னபிறவாக எவ்வாறு கொஞ்சங்கொஞ்சமாக உயிர்போக நசுக்கி எடுத்துச் சவமாக்கப்படுகிறது என்பதை நான் கண்முன்னே பார்த்தபடி வளர்ந்துகொண்டிருந்தேன். நான் செய்ய வேண்டியது செய்ய வேண்டாதது என்கின்ற வேலிகள் என்னைச் சுற்றிப் பதிக்கப்படுவதை ஆச்சரியமாகவும் குறுகுறுப்பாகவும் நான் உணர்ந்துகொண்டிருந்த நாட்களும் கூட. எனக்குள்ளிருந்த வெள்ளாட்டுத்தனமிக்க இயல்பான குறும்புகளை, சட்டெனத் தரையில் அமர்ந்து சாலையில் சிதறிய தானியங்களை கைகளால் தூசிபடப்பட வழித்து அள்ளிக்கொடுக்கின்ற ஒரு மனுஷியை நான் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

வந்திருந்த மனிதர் சோர்ந்து நின்றார். அவர் கண்முன்னே மலைப்பாம்பின் சோம்பலுடன் நகர்ந்து கொண்டிருந்தது அலுவலகம். யார் மேஜையில் தூசிபடர்ந்து கிடக்கிறது தனது கோப்பு என்பதைத் தேடிச்சலித்துவிட்ட முகத்தோடு அவர் நின்றிருந்தார். அந்தத் தேடலின் நடுவே என்முகத்தைப்  பார்த்தவர், ஒருமுறை என்னிடம் கேட்கலாமாவெனக் குழம்பி – உண்மையில் அது குழப்பம் இல்லை. மெல்லிய இழிவு வழியும் கண்கள் ஒரு எலியைப்போல என்னைப் பார்த்துக் கடந்தன – பிறகு வேறு யாரிடமோ கேட்க நகர்ந்தார். நான் அமைதியாக எனது பழுப்புக் காகிதங்களுக்குள் மீண்டும் அமிழ்ந்தேன். அர்த்தமற்ற எண்களால் ஏதேதோ குறிக்கப்பட்ட காகிதங்கள்.  அதன் பூடகத்தன்மையில் ஏதோ ஒரு பெரும் சக்கரமே இந்தக் குறிப்புகளின் வழியாகச் செயல்படுவது போன்ற பிரமையை உருவாக்கி வைத்திருக்கின்ற பக்கங்கள். இந்தச் சக்கரத்தில் எந்தச் சிறிய ஆணி நான் எனத் தெரியாது. ஆனால் கண்ணால் உணரமுடியாத மந்தத்தில் அது சுழல்கிறது. இந்த சாயங்கால சோம்பலான வெயிலைப்போல. அந்த மனிதர் மீண்டும் என்னைக்கடந்து வந்து வாசலில் நின்றார். இம்முறை நான் அவரைப் பொருட்படுத்தவேண்டியதில்லை. அலுவலகம் முடிவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்க அவர் வாசலில் பொறுமையிழந்தவராக மெல்ல நடந்துகொண்டிருந்தார். எனது பொருட்களை நான் ஹேண்ட்பேகில் எடுத்துவைக்கத் துவங்கினேன். அடுத்த கணம், “யாருக்குமே பொறுப்பில்லைங்க. என்ன மனுசங்க இவனுக. இன்னியோட நாலாவது தடவை வந்து அலைஞ்சு திரும்புறேன். என் வயசுக்கு இந்த வியாதி உடம்போட…”

சன்னதம் வந்த குரலில் அவர் வராண்டாவில் நின்றவர்களிடம் கத்தத் தொடங்கினார். அரசாங்க அலுவலகங்களில் அதன் தாமதத்திற்காக கொந்தளிப்பவர்களுக்கு வருகின்ற இயலாமையும் கொஞ்சம் அழுகையின் சாயலும் கொண்ட குரல். டிபன் பாக்ஸையும் பைக் சாவிகளையும் தேடிக்கொண்டிருந்த முகங்கள் ஒருமுறை அவரை நிமிர்ந்து பார்த்தன. பிறகு அவரது இருப்பை அலுவலகத்திலிருந்து, இன்னும் சொல்லப்போனால் இந்தப் பிரபஞ்சத்திலிருந்தே புறக்கணித்துவிட்டு கிளம்புவதற்கான ஆயத்தங்களில் தங்களைத் திருப்பிக்கொண்டன.

அவர் இன்னமும் கத்திக் கொண்டிருந்தார்.  

”படிச்சு என்ன மசிறு பிரயோசனம். மனுஷத் தன்மை வேணும். நான் என்ன பைத்தியக்காரனா?”

நான் மெல்லத் தலையை நிமிர்த்தி அவரைப் பார்க்க நினைத்தேன். அருகே இருந்த வேணி, “ப்ச், நிமிராத. பேசாம கிளம்பு. அப்படித்தான். நீயும் நானும் சின்ன குண்டூசிதான். புரிஞ்சதா? அப்படியே கிளம்பு” என்றாள்.

அத்தனை பேர்களது அசமந்தத்தின் நடுவே பற்றி எரிகின்ற காகிதம் போல ஒரு மனிதன் அலைவதை நான் எனக்குள் மிக நெருக்கமான ஞாபகப்படுத்தலாக உணர்ந்தேன். என்னை அறியாமல் அவரை நோக்கி, ”இப்படி உட்காருங்க” என்றேன்.

அவரது பதட்டத்தைத் தணிக்கும் விதமான எவ்வித உத்தரவையும் வழங்குவதற்கான அதிகாரம் எனக்குக் கிடையாது. ஆனால் குறைந்தபட்சமாக அந்த அவதியோடு கைகோர்க்கத் துடித்தெழுந்த ஒன்று உள்ளுக்குள் இருந்தது. அவர் என்னை அதே வினோதமான கண்களோடு பார்த்தார். அவரால் அவரது கத்தல்களால் ஒருபோதும் உள்நுழைய முடியாத பிரம்மாண்ட கட்டிடத்தின் ஒரு சிறிய ஜன்னல் திறப்பைப் போல எனது குரலை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.

வியர்வையைத் துடைத்தபடி அவர் திரும்பத் திரும்ப, ”என்ன மனுசங்க இவங்க..” எனத் திணறிக் கொண்டே இருந்தார். ஒருவகையில் அவரது முழு ஆங்காரத்தையும் என்மீது காட்டுவதன் வழியாக தான் லேசாகிக் கொள்வதற்கான ஏதோ ஒன்றை உணர்ந்திருந்தார். நான் கோர்க்க விரும்பிய விரல்கள் எனது தலைமுடியைப் பற்றியது போல ஒரு ஏமாற்றம் உள்ளுக்குள் கடந்தது. ஆனால் அவர் கூறிக் கொண்டே இருந்த ”என்ன மனுஷங்க..” என்பதை இப்போது கோபத்தின் வெளிப்பாடு என்பதற்குப் பதிலாக ஒரு நிலை கீழான ஒரு குரலாக உணர்ந்தபோது உள்ளுக்குள் எங்கோ மோசமாக உடைந்தேன். என்னதான் நடக்குமெனப் பார்ப்பவளைப் போல வேணி கிளம்பாமல் அருகிலேயே நின்றாள். சிடுசிடுப்பும் ஒவ்வாமையுமான முகத்துடன் எங்கோ வெறித்தவராக என் பக்கம் திரும்பக் கூட செய்யாமல் அவர் முணக முணக நான் உடைந்து அழத் தொடங்கினேன். பதறியவளாக வேணி என்னருகே வரும் முன்பாகவே நான் தரையில் முழந்தாளிட்டு மேலும் மேலுமென அழுகை பரப்பிக் கொண்டிருந்தேன். அவர் திகிலுற்ற கண்களோடு எனது அழுகையைப் பார்த்து உறைந்து நின்றிருக்க, வேணி எனது தோள்பட்டையைப் பற்றி பின்னால் அவள் பக்கம் இழுத்துத் தொடையோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

நோயல் வெறும் நண்பனாக மட்டுமே என்னிடம் பேசிக் கொண்டிருந்த நாட்கள் அவை. வழக்கமான மாலை சந்திப்பின் தேநீர் வேளையில் அழுது ஓய்ந்து வெளியேறிவிட்டு, இலேசான மனதோடு அவனிடம் நிகழ்ந்ததைக் கூறிக் கொண்டிருந்தேன். நான் கூறக்கூற தேநீர் குடிப்பதை நிறுத்திவிட்டு அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். முழுவதும் சொல்லிமுடித்துவிட்டு சாந்தமான நிறைமனுஷியைப் போல அவனை ஏறிட்டேன். சட்டென என் கன்னத்தில் அறைந்தான். அவனது கண்களில் சூடான நீர்ப்படலம் சேர்ந்திருக்க முகம் முழுக்க மின்னல் இழுப்புகளைப் போல உணர்ச்சிகள் தோன்றி மறைந்தன. குழப்பமும் அதிர்ச்சியுமாக அவனை ஏன்? எனும் விதமாகப் பார்த்தபடியிருந்தேன். அவன் கோப்பையின் மீதான ஸ்டிக்கர் எழுத்துக்களை விரலால் சுரண்டிக் கொண்டபடி,

”அழுதாளாமாம்… அழுகை. அதுவும் முழங்கால் போட்டு. த்தூ…”

”பின்ன நான் மனுஷி இல்லையா நோயல்?”

எனது குரலுக்குள் நானே உணரும்படி ஏதோ தவறிழைத்துவிட்ட உணர்வு வந்திருந்தது. இப்படி நான் கேட்டது கூட அபத்தமாகத் தெரிந்தது.

”’மனுஷி”, அந்த நாய்க தர்ற பட்டம். நாம இன்னும் உயிருள்ள ஒரு பொருளாக்கூட கணக்கு கிடையாது அவங்களுக்கு. மனுஷி, தெய்வம்லாம் உன் கண்ணீருக்குப் பூசற சாம்பல்தூள். புரியுதா? என்றபடி எங்கோ திரும்பிக் கொண்டான். அவனது அடியின் வலி மீச்சிறு ஒன்றாகக் கரைந்து கொண்டிருக்க நான் முதலும் கடைசியுமாக எனது அழுகையைக் கசந்து வெறுத்தேன். அதன் பிறகு நான் எப்போதும் அழவில்லை. கருணையற்றவளென என்னை யாராவது ரகசியமாகக் கிண்டல் அடிக்கும் போதெல்லாம் யார் யாரோ நிகழ்த்திய கருணையின்மையை அந்தக் கருணையற்ற காலத்தின் பிரதிநிதியாக இவர்களுக்குத் திரும்பத் திரும்ப ஞாபகம் ஊட்டுபவளாக இருந்தேன்.

குறுகிய கால அடிப்படையில் இந்த ஊருக்குப் பணி நிமித்தமாக வந்து இரண்டாவது நாளிலேயே பதுமை சரியான காய்ச்சல் கண்டாள். தற்காலிகமாக எனக்கு ஒதுக்கித்தரப்பட்ட – எந்த நேரமும் சுண்ணாம்புக்காரையோடு மூத்திர வாசம் வீசுகின்ற – அந்தச் சிறிய அறையின் நடுவே கோப்புகளோடு நான் போராடிக் கொண்டிருந்தபோது பதுமையையும் அருகிலேயே உட்கார வைத்துப் பராமரிக்க வேண்டியிருந்தது. எனது இரண்டாவது இக்கட்டு கூலித்தொழிலாளர்கள் வடிவில் வந்தது. நான் அரசாங்கம் சார்பில் இந்த வேலையை மேற்பார்வையிடுவதற்காக வந்து சேர்ந்த நாட்களுக்குள் இங்கே அடிப்படைக் கூலியை உயர்த்தித் தரவேண்டுமென்கிற தொழிலாளர்களின் பிரச்சனை போய்க்கொண்டிருந்தது. மிக பலவீனமான ஒப்பந்தகாரர் தொழிலாளர்களிடமும் என்னிடமும் மாறி மாறி மன்றாடிக் கொண்டிருந்தார். வியர்வை வழிந்த முகத்தைத் துடைத்தபடி அருவருப்பான மினுங்கலோடு கழுத்துச் செயின் குழைந்து கிடக்கும் சிரிப்போடு அவர் புதிது புதிதான சமாதானங்களை என்னிடம் எடுத்து வருவார். வருகின்ற ஒவ்வொரு முறையும் அவர் பதுமையைக் கொஞ்சுகின்ற நாடகத்தனத்தை நான் அறவே வெறுத்தேன்.

போதாதற்கு இப்படிக் காய்ச்சலில் வாடியவளாக பதுமை சோர்ந்து கிடக்கின்ற தருணங்களில் அவரைப் போன்றவர்கள் வெளிப்படுத்தும் கருணையின்வழியாக  நான் பதுமையின்மீதும் எரிச்சல் கொண்டவளானேன்.

“புது இடம் பாருங்க… கெஸ்ட் ஹவுஸ்லேலாம் பிள்ளையைத் தனியா விட்டுட்டு வர்றது எனக்கென்னவோ சரியாப் படலைங்க. நம்ம வீட்லேயும் இது வயசுக்கு பிள்ளைங்க இருக்கு. முடியுமட்டும் இங்கன ஒண்ணுமண்ணா இருக்கட்டுமே”

ஒப்பந்த காலத்தை நீட்டித்தரும்படியான வாய்தா நோட்டீஸ்களை மேஜையில் வைத்துவிட்டு அவர் சொல்லிக்கொண்டிருந்தார். அதிலிருந்த மட்டமான சமாதான வரிகளை நான் சிவப்புமையால் பாரபட்சமின்றி அடித்துக்கொண்டே வந்தேன். இறுதியாக எஞ்சிய காரணத்தில், இது கட்டுபடியாகாத வேலை என்கின்ற உள்ளர்த்தமே எஞ்சிநின்றது. அவர் என்னைப்பரிதாபமாகப் பார்த்தார். அருகே நின்றிருந்த சீனிவாசன் நோட்டீஸ்பேப்பர்களை அடுக்கி சீராக்கியபடி,

“என்ன பூமிநாதா! பாதிக்கிணறு தாண்டுனவாக்குல திணறிக்கிட்டு…” என்றார்.

சீனிவாசன் உள்ளூர் ஆசாமி. அலுவலகத்தின் ஒட்டுமொத்த வரைபடத்தையும் அறிந்த மூளை.

“உனக்கோசரம் சார்கிட்ட போய் அம்மா ஒவ்வொருவாட்டியும் நிக்கணுமா?”

உண்மையில் அதை நினைக்கும்போதே சோர்வாகத்தான் இருந்தது. எனக்கும் மேலதிகாரியான அந்த மனிதர் நான் வந்து ஒருவாரமாகியும் என்னைச் சந்திப்பதற்கு அவகாசமே அளிக்கவில்லை. இதற்குமுன் இரண்டுமுறை இந்தப் பணியின் தாமதம் குறித்து நான் அலுவல்ரீதியாக அளித்த கோப்புகளுக்கும் ஒரு சலிப்பான பெருமூச்சைப்போன்ற அமைதியே அவரிடமிருந்து வந்தது.

“ராஜநாயகம் கம்பெனி வேலையை எடுத்திருந்தா சுதாரிப்பா பார்ப்பாரு சார். எல்லாம் ஒரே மணவாடுல.”

நான் சிரிப்பேன் என நினைத்திருப்பார் போல. எனக்கு யார்மீது கோபம் கொள்வதெனத் தெரியாத ஆத்திரம் பெருகிக்கொண்டிருந்தது. நோயல் அழைத்தான். செல்போனைப் பதுமையிடம் நீட்டினேன். அவள் காய்ச்சல்படிந்த கண்களுக்கேயுரிய அழகான ஒளியுடன் அதனை வாங்கி பேச ஆரம்பித்தாள்.

கோப்புகளோடு வெளியேறிய சீனிவாசனிடம் குழைந்தபடி ஒப்பந்தகாரர் சென்றார். அருகே இருந்த ஜன்னலின்வழியே சிறிய குன்றைப்போலிருந்த மலையின்மீது அசைவற்று நின்றிருந்த புதர்காடுகளில் வெளிச்சம் திகழ்ந்துகொண்டிருப்பதையே பார்த்தேன்.

எனக்கு நகர்ந்துகொண்டே இருக்கவேண்டும். இப்படி முட்டி நிற்கும் எதிர்பாராத வளைவுகளில் இதுவரை பாய்ந்துவந்ததன் ஒட்டுமொத்தக் களைப்பும் உடலிலும் மனதிலும் பரவிவிடும். பிறகு நோயல் விடிய விடிய பேசிச் சீராக்க நேரிடுகிற, நினைத்தாலே சோர்வளிக்கும் இரவுகள் வந்து போகும்.

மேகக்கூட்டங்களைப்போல செம்மறிகள் மலையேறிக்கொண்டிருந்தன. பதுமை “பேசுகிறாயா” எனும் விதம் சங்கேதமாக என்னைக்கேட்டவாறு பேசிக்கொண்டிருந்தாள். நான் தலையசைத்து மறுத்தேன். பிறகு மீண்டும் ஜன்னலின் காட்சிகளில் புதைந்து கொண்டேன்.

எந்தவடிவிலான தோல்விகளையும் நான் உள்ளூர எனது அடையாளத்தின் மீதான இறுதி மதிப்பீடாக உணர்ந்து அதற்காக வெகுண்டெழுந்து முட்டி மோதப்பழகி நாளாகின்றன. என்னால் அந்தப் பந்தயத்திடலை விட்டு ஒருபோதும் வெளிவர முடியாது. நானும் அதனை விரும்பவில்லை. பதுமையைப் பெற்றபிறகு, ஸ்திரமான ஒரு பதவியை வேலையில் அடைந்தபிறகு, சராசரி மானுட உணர்வுகளையும் பெருமிதங்களையும் நீ ஏற்றுக்கொள்ள முயற்சிக்கலாம், தவறில்லை எனும் பொருள்படும்விதம் நோயல் ஒருமுறை பேச்சினூடே குறிப்பிட்டான். ஏதோ வேலைக்கு நடுவே அதைச் சரியாகக் கேட்டும் கேட்காமலும் நான் புன்னகைத்துக்கொண்டிருக்கும்போதே எனக்குள் சன்னதம் வந்ததுபோல ஒரு திடுக்கிடல் எழுந்து வந்தது. உடலுக்குள் யாரோ ஆவேசத்துடன் ஓடி வருவதைப்போன்ற சீறலோடு என்னால் கட்டுப்படுத்தவே முடியாத வேகத்தில் வார்த்தைகள் தெறித்து விழுந்தன.

“நீ வேணா போய் அப்படிப் பிச்சையெடுத்துத் தின்னு”

மடியில் பதுமையை வைத்துக் கொஞ்சியபடி இருந்த நோயல் புன்னகை சிதறிய முகத்தோடு என்னைப் பார்த்தான். அவனுக்குத் தன்னை எப்படி வைத்துக்கொள்ளவேண்டுமென்கிற பிடிமானமே அப்போது இல்லாமலாகி வெதுவெதுப்பான சாம்பல் கட்டிகளைப்போல உதிர்ந்து கொண்டிருந்தான்.  

அன்று இரவிலும்கூட நோயலிடம் எனக்கு மன்னிப்புக் கேட்கத் தோன்றவேயில்லை. நான் முற்றாக வேறொரு மனுஷியாகவே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கசப்புகளைக் குடித்துக்குடித்து வளர்ந்த மரமாக. மிகமிக பாரமான ஒரு மனுஷியாக தூக்கம் வராமல் வீடு முழுக்க நான் நடந்துகொண்டேயிருந்தேன். நள்ளிரவுக்குப் பிறகு நோயல் மென்மையாக என்னைத் தோள்பிடித்து நிறுத்தினான். ஆறுதலான புன்னகையையோ வார்த்தைகளையோ அவன் அப்போது சொல்லியிருந்தால் நிச்சயம் அறைந்திருப்பேன். ஆனால் ஒரு மூன்றாவது மனுஷனுக்கேயுரிய எவ்வித உணர்வுமற்ற கண்களோடு, “போய்ப்படு” என்றான். அந்த விலகலை அப்போது நான் மிகவும் விரும்பினேன்.

மேலும் சில தினங்கள் அதே தோல்விமுகத்தோடு சென்றுகொண்டிருந்தன. இரண்டுமுறை அந்த மேலதிகாரியிடம் எனது பணியின் தேக்கநிலை குறித்து விளக்கம்தர வேண்டியிருந்தது. ஒரு வசீகர மரியாதையோடு அவர் என்னை நடத்தினார். இது உனக்குப் புதிதாக இருக்கிறதா என வினவும் தொனி அதில் இருந்தது. ஆனால் அவர் எனது அடையாளம் குறித்துப் பெரிதாக லட்சியம் கொள்ளாத மனிதராகவும் இருந்தார். அவரது ஒரே வெறுப்பு பணம் சம்பந்தமான விஷயத்தில் எனது தலையீடு குறித்ததாக மட்டுமே இருந்தது. அது இயல்பானதும்கூட. நான் கொஞ்சம் ஆசுவாசமாகக்கூட உணர்ந்தேன்.

இதை வெற்றிகரமாக முடிக்காவிட்டால் என்னாகிவிடும் என நோயல் கேட்டான். எனக்கு உடனே பதில்சொல்லத் தெரியவில்லை. ஒன்றும் பிரமாதமாக ஆகாது. கிடப்பில் போடப்படும். அரசாங்க கோப்புகளின் கல்லறைக்குள் லட்சத்தில் ஒன்றாக. வினோதமான சிலையைப்போல பாதியில் நிற்கின்ற பணிகளோடும் பக்கவாட்டில் துருத்திய கம்பிகளோடும் இந்தப் பால வேலை அப்படியே வெறித்துக்கிடக்கும். பிறகு, இருப்பதைக்கொண்டு அதனை முடிப்பதற்கென குறுகிய திட்டமுடிவுகள் கொண்டு என்றோ ஒருநாள் சரிசெய்யப்படும். சட்டென எனது பங்கீடுகளின் தனித்தன்மையே இல்லாத இந்த வேலைமீது உள்ளூர கசப்பும் சோர்வும் கூடிவந்தது. இரண்டொரு நாள் எங்கேனும் வெளியே சென்றுவரலாமென நோயல் கூறியபோது தன்னுணர்வே இன்றி தலையசைத்தேன்.

நிறைய மனிதர்கள், நிறைய சிரிப்புகள் சிதறவிட்ட வர்ணங்களைப்போல பார்க்கும் இடங்களிலெல்லாம் பொங்கிவழிந்த மகிழ்ச்சியின் புகைப்படங்களோடு எனது விடுமுறை நாட்களை கொடைக்கானலில் நாங்கள் கழித்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு சிறிய மகிழ்ச்சியையும் கையில் எடுத்துக்கொள்ளும் முன்பாக, எல்லோரையும் அவர்களுடைய அசைவுகளின் மொழியையும் நுண்ணித்து நுண்ணித்து தன்னிச்சையாக உரக்கச் சிரித்து மகிழ்வதை நான் இழந்து எவ்வளவு நாட்களாகிவிட்டன. பதுமைக்கும் நோயலுக்கும் அங்கிருந்து திரும்ப மனதேயில்லை. குறிப்பாக, சரிக்கு சரியாக அவர்களோடு இணைந்துகொள்ளாவிட்டாலும் ஒரு புன்னகையோடு அவர்களது கொண்டாட்டத்தை வேடிக்கை பார்த்தபடி இருந்த என்னை அங்கே ஒரு புகைப்படம்போல இழந்துவர அவர்களுக்கு விருப்பமில்லை.

விடுமுறை முடித்து அலுவலகம் வந்த அன்றே நான் பாதியில் வைத்துவிட்டுச் சென்றிருந்த ஒப்பந்த விவகாரத்தில் மிக மோசமான பின்னடைவுகள் நிகழ்ந்திருப்பதை அறிந்துகொண்டேன். அந்த ஒப்பந்ததாரர் அதிலிருந்து தானே விலகியிருந்தார். எனக்கு முன்னிருந்த சவால் சட்டென ஆவியாகி, நான் அமர்கின்ற நாற்காலி வெறுமனே ஒரு மரப்பொருளைப் போலாகி விட்டிருந்தது.

”அதெல்லாம் அவ்ளோதாம்மா தாங்கும்… நீங்க புதுசில்ல… உங்கமேல என்ன தப்பிருக்கு” என்றபடி சீனிவாசன் கோப்புகளை எண்ணிட்டு அடுக்கிக்கொண்டிருந்தார். இது எவ்விதத்திலும் எனது திறமையைக் குறுகச் செய்கின்ற நிகழ்வல்ல என எனக்கு உணரவைக்க அவர் முயன்றுகொண்டிருந்தார். சில சமரசங்கள் தோல்வியைவிட அவமானமானவை. நான் வெறுமனே புன்னகைத்தபடி,

”நினைச்சமாதிரியே சார் பார்ட்டிக்கு டீல் மாறி போயிடுச்சு, இல்லையா…”

நுனி நாக்கைக் கடித்தபடி ரகசியக் குழைவோடு சீனிவாசன் தலையாட்டினார்.

”இனி பாருங்க, வேலை எப்படி மலையேறி முடியப்போகுதுன்னு…”

சீனிவாசன் போய்விட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் ஏதேதோ சிறிதுநேரம் செய்துகொண்டிருந்தேன். நோயல் கூறுவதுபோல, இது எனது தனிப்பட்ட தோல்வியுமல்ல; முற்றிலும் நிகழாத விஷயத்தின்மீது எனது அகங்காரத்தை உரசி ஏன் காயப்பட்டுக்கொள்ள வேண்டும். விட்டுவிடலாம். அகங்காரத்தின் விசை அளப்பரியது. அதன்மூலம் எதிலிருந்தும் விடுபட்டு மேலேறிச்செல்லலாம். ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை மீது பிணைத்துக்கொள்கிற அகங்காரம் நீர்மீது அம்பு தொடுப்பதைப்போல. அங்கே மூழ்கி எதிலேனும் சிக்கிக்கொள்கிற அது பிறகு எய்த கரங்களையும் மூழ்கச் செய்வதுகூட. நோயலே என்னுள் அமர்ந்து பேசுவதைபோல இருந்தது. மெல்ல சிரித்துக் கொண்டேன். கூடவே, ஒரு லேசான வலியும் வந்துபோனது.

நான் தோற்கிறேன் என்கின்ற வரி திரும்பத் திரும்ப மனதின் சுவர்களிலிருந்த மணற்துகளை அரிந்து போய்க்கொண்டேயிருக்கின்றவளாக, இனம்புரியாத சோர்வுடன் நான் வீடுதிரும்பும்போது நோயலும் பதுமையும் இரவு உணவுடன் காத்திருந்தார்கள். மழை வரும் போலிருந்தது.

நோயல் என்னை இதமாக்கும் புன்னகையோடு சாப்பாட்டைப் பரிமாறிவிட்டு, பதுமையோடு இணைந்து பேசிச் சிரித்துக்கொள்ள ஆரம்பித்தான். இப்போதெல்லாம் அவர்கள் தனி உலகமாகச் சென்று விடுகிறார்கள். குறிப்பாக என்னோடு முற்றுப்பெற்றுவிட்ட எனது அடையாள அழுத்தங்கள் பதுமையிடம் சிறிதும் படியாமல் அவள் மிகப்புதியவளாக பூமிக்கு வந்திருந்தாள். எனது ரத்தத்தின் ஒரு பகுதியில் எவ்வித வர்ணமோ திகைப்பூட்டும் மணமோ இல்லாத கண்ணாடி மலரைப் போல அவள் நோயலின் தோள்களில் முகம் வைத்து என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். நெடுந்தொலைவிற்குத் தள்ளி நின்றிருக்கும் எனது கரங்களை நீட்டி அவளைக் கன்னம் கிள்ள வேண்டும் போல எழுகின்ற மென்மையான உந்துதல்களை நான் அவ்வப்போது உணரும்போது, மிக மிக மெல்லிய நரம்பொன்றில் ஒருவலி மீனைப் போல நீந்தி மூளையில் மோதும்.

வாசலில் யாரோ வந்து நிற்பது போலிருந்தது. ஒரு உத்தேசம்தான். ஆனால் அந்தப் புதிய வீட்டின் தோட்டத்திற்கு வெளியே இருளுக்குள் சில உருவங்கள் அசைந்தன. நோயல் என்னைப் பார்த்து விட்டு எழுந்து சென்றான். கேட்டின் கொண்டியைப் பற்றியபடி இருளுக்குள் நின்றிருந்தவர்களிடம் அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே நான் எழுந்து வந்தேன். கெஸ்ட் ஹவுஸில் நான் திருப்பி அனுப்பிய அதே தோட்டத்து மனிதர்கள். தனது தாய் தந்தையோடு, கையில் காகிதங்கள் துருத்தும் ஃபைலோடு அந்தப் பையனும் நின்றிருந்தான். அவனது அம்மா தனது இடுப்பில் இருந்த நார்ப்பெட்டிக்குள் இருந்து கொஞ்சம் காய்கறிகளை ஒரு மஞ்சள் பையில் அள்ளி வைத்தபடி நோயலிடம், 

”செத்த அம்மாகிட்ட சொல்லுங்கைய்யா, இன்னமும் எத்தினி நாளைக்கு பீ மணக்குற கையோட சோத்துக்கு உட்கார்றது…”

அவள் அழவில்லை. ஆனால் அந்தக் குரலுக்குள் வந்து செல்கிற ஒரு கேவலின் முனை கேட்கும்போதே எங்கோ அறுத்தபடி சென்றது. அந்தப் பெரியவர் வெறுமனே கேட்டைப் பிடித்தபடி நின்றார். பழைய கைலியை மடித்துக் கட்டியிருந்த அவரது கால்களில் ஒன்று வீங்கிக் கிடந்தது. அவர் வெறுமனே நின்றார். எப்படிப் பேசுவது என்றே பழகியிராத உதடுகளில் நிரந்தரமாகத் தேங்கிவிட்ட ஒரு தயக்கச் சிரிப்போடு அவர் வெறுமனே நின்றார்.

”இதெல்லாம் வேண்டாம்மா. தம்பி சொல்லுய்யா” என்றபடி நோயல் தயங்கிக் கொண்டிருந்தான்.

சான்றிதழ்கள் சரிகின்ற கோப்போடு அவன் நோயலிடம், 

“ரெண்டு கையெழுத்துதான் சார். இவங்க ஒன்னு, இன்னொன்னு சென்னையில இருக்காராம். அதைக் கட்சி வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கு. இப்படி சர்டிபிகேட்டோட பிச்சைக்கு நிக்குற அவஸ்தையாவது போய் ஒழியட்டும் சார்… கொஞ்சம் சொல்லுங்க சார். ப்ளீஸ்…”

நோயல் என்னைப் பார்த்தான். கொஞ்சம் திருப்பி விட்டால் ஒரு ஓடைநீரின் மகிழ்ச்சியோடு போய்விடுகின்ற அவனது வாழ்க்கையின் பாதையைத் திறக்க எனக்குத் தெரியும். ஆனால் மோதி உடைக்க வேண்டிய எண்ணற்ற மதகுகளை அவன் பிறகு அறியவே போவதில்லை. எண்ணெய் மினுங்கும் கருப்பட்டிச் சில்லைப் போன்ற அவனது இளம் முகத்தில் அன்றிருந்த அதே கசப்பும், இந்த இரந்து நிற்கும் சூழலின் தகிப்பும் வேர்வைகளாக ஒழுகிக் கொண்டிருந்தன.

ஒரு உரசில் தீப்பிடித்துக் கொள்பவனைப் போல தனது கால்களை நிலை மாற்றியபடி அவன் கேட்டின் முன்பும் சாலையிலும் துடித்துக் கொண்டிருந்தான். ஆவேசத்திற்கும் அழுகைக்கும் நடுவிலான மெழுகைப் போன்ற திரையைக் கிழித்தபடி அவனது கண்களில் ஊறி எழுகின்ற கண்ணீரை ஒரே ஒரு கணம் நேருக்கு நேராகப் பார்த்தேன். ஒருபோதும் அது அங்கிருந்து சொட்டிக் கீழே வீழ்ந்து விடக்கூடாது என என்னையே அறியாமல் அரற்றுகின்ற கண்களால் அவனை வெறித்தேன். நோயல் கைநீட்டிப் பற்றிய எனது கைகளை உதறியபடி காற்றின் விசையில் சேலையின் விளிம்புகள் தீப்பற்றி எழுவதைப் போல வீட்டினில் நுழைந்து, அவனது முகத்தில் அறைவதைப் போல கதவை மூடினேன். 

***

– பா .திருச்செந்தாழை

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *