I
நடேசன் தனது மனைவிக்குத் தன்னால் மிகத் துல்லியமாக வரையறுக்கப்பட்ட பயிற்சிகளையே தந்து வந்தார். கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் அருளிய கீதையில் அடக்குவதற்குக் காற்றைப்போல் கடினமான மனதையும் பயிற்சியாலும் மனோதிடத்தாலும் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறான். இங்கு மனோதிடம் என்பதை நடேசன் பயிற்சி பெறுபவரின் மனோதிடம் என்றில்லாமல் பயிற்சி தருபவரின் மனோதிடம் என்றே புரிந்து வைத்திருந்தார்.
எந்த ஒரு பயனுள்ள பயிற்சியும் நல்ல கணக்குப்பாடம்போல. பயிற்சி பெறுகிறவரிடமிருந்து எத்தனைதான் அசூயையும் வெறுப்பும் வெளிப்பட்டாலும் அவை அனைத்தையும் தாண்டி நீண்ட காலமாய் இடைவிடாமல் பயிற்சி அளிப்பதற்கு வைரம்போன்ற மன உறுதியும் கடவுளைப்போன்ற பெருங்கருணையும் வேண்டும். மனதைப்போலவே பெண்களும் அடக்குவதற்குச் சிரமமானவர்கள். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் ஆளையே ஒரே அடியாய் அடித்துப் புரட்டிப் போட்டுவிடக் கூடியவர்கள். அடங்குவதைப்போல் அடங்கிச் சற்றும் எதிர்ப்பாராத வேளையில் திடீரென்று பாதங்களுக்கு அடியில் காட்டாறாய்ப் பெருகிப் பெரும்விசையோடு இழுத்துக் கொண்டு போகக் கூடிய தந்திரம் மிக்கவர்கள். மனதினை அடக்கப் பயிற்சியும், சலிக்காத மனோதிடமும் வேண்டும் என்கிறான் கண்ணன்.
இந்த உவமைகளை மீண்டும் ஒருமுறை தனது மனதுக்குள் உருட்டிச் சிந்திக்க நடேசன் கறுப்புநிற வெல்வெட் துணியில் விலையுயர்ந்த வைரங்களைக் கொட்டிவைத்ததுபோல் தனக்குள் சிரித்துக் கொண்டார். அவருடைய பிரம்மாண்டமான மேனியோடு குளிர்ச்சிமிகுந்த நீர்த்தாவரத்தின் கூம்புவடிவ மலராய் இணைக்கப்பட்டிருந்த அவருடைய நளினமான கைவிரல்களும் கையும் சாப்பாட்டுத் தட்டுக்கு இருபுறமும் கழற்றிப்போட்ட கையுறைகளாகக் கிடந்தன.
“சாப்பாட்டுத் தட்டை மேசைமேல வைக்குறப்பத் தட்டோட இந்த விளிம்புல போட்டிருக்கிற பூ டிசைன் சாப்பிடுறவனுக்குத் தூரமா இருக்குற மாதிரி நேர் எதிர்க்க வைக்கணும்னு எத்தனை தடவை உன்கிட்ட சொல்லிருக்கேன், சுஜாதா. நீ சுட்டு வச்சிருக்கிற தோசையைப் பாரு. அழகா, ஒரு முக்கோணமா மடியாம இந்த ஓரம் கொஞ்சம் விலகி மடிஞ்சிருக்கு.”
பிறகு தோசையின்மீது அளவுக்கதிகமாக விடப்பட்டிருந்த நெய்யைப் பற்றிய ஓர் சிறு உரையாடல். ஒரே சீராக இல்லாமல் கெட்டியாகும் நீர்த்துப்போயும் அரைக்கப்பட்டிருந்த சட்டினையைப் பற்றிய ஒரு ஓரிரண்டு வார்த்தைகள். கழற்றிப்போட்ட கையுறைகளைப்போன்ற அவருடைய நளினமான கைவிரல் நுனிகள் தட்டின் இரண்டு பக்கமும் மேசையின்மீது பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடியின்மீது பலமாக அழுந்தி முதலில் சிவந்து பின்பு வெளுத்துப்போகும் வரையிலும் சின்னச் சின்ன கற்களாய் நடேசன் வெகு துல்லியமாய் வார்த்தைகளை ஏவி விடுவார். வார்த்தைக் கற்களால் அவள்மீது பட்டுத் தெறிக்க நெற்றியிலும் கழுத்து வளைவுகளிலும் கனத்த மார்புகளின் இடையிலிருக்கும் நிழல்கள் நிறைந்த பள்ளத்திலும் வியர்வைபொங்கச் சேலையில் நிற்கும் சுஜாதா அடிபட்ட பறவையாய், நிழலாய்ச் சடசடப்பது நடேசனுக்குப் பெருத்த நிம்மதியைத் தந்தது.
நடேசன் கோபத்தில் குரலை உயர்த்திக் கத்துவதே இல்லை. நிற்க ஓர் இடமும் போதுமான அளவுக்கு நீளமான ஒரு நெம்புக்கோலையும் கொடு, உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன் என்றானாம் கிரேக்கக் கணக்கியல் அறிஞன் ஆர்க்கிமிடிஸ். தன் அலுவலகத்தில் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ளும் கடைநிலை அதிகாரியாகச் சேர்ந்த சுஜாதாவை மனைவியாகத் தேர்ந்தெடுத்து தெண்டாயுதபாணி கோவில் மண்டபத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்ட போதே நடேசன் தான் நிற்க வேண்டிய இடத்தைச் சரியாகத் தேர்வு செய்திருந்தார். குடும்ப வியாபாரத்திலேயே தனது இளமையின் பெரும்பகுதியைக் கழித்துவிட்டு நாற்பத்தைந்தாவது வயது நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருக்கும் பரம்பரை வியாபாரிக்கு வாழ்க்கையைப் பற்றிய எந்தவிதமான பெரிய அபிப்பிராயங்களும் இல்லாத, படுக்கைச் சுகங்களைப் பற்றித் தெரிந்திருந்தாலும் அவற்றை அதிகம் லட்சியம் செய்யாத இருபத்து நான்கு வயது பெண் பெரிய அனுகூலம்.
ஆனால் கடினமான வார்த்தைகளையும் குரலுயர்த்திப் பேசுவதையும்விட மௌனமும் மற்றவர் தவறுக்குத் தன்னைத் தானே தண்டித்துக் கொள்வதுபோல் காரியங்களை நடத்துவதும்தான் மிகச் சரியான நெம்புகோல் என்று திருமணமாகிச் சில மாதங்களுக்குப் பிறகுதான் நடேசனுக்குப் பிடிபட்டது.
காலைநேர அவசரத்தில் சரியான முக்கோண வடிவத்தில் மடிக்கப்படாமல் பரிமாறப்பட்டிருந்த தோசையை முகம் துடைத்து கசங்கிய கைக்குட்டைபோல், ராத்திரியிலிருந்து சாப்பிடாமல் ஒரு குவியலாய் கிடக்கும் தனது பசியின் அடர்த்திபோல் சாப்பாட்டு மேசையின் கண்ணாடிமீது மிக லேசாய் விசிறிவிட்டுப்போகும்போதே நடேசன் மனதுக்குள் செசில் தெருவிலிருக்கும் தன் கடைக்கு அருகே உள்ள புரோட்டா கடையில் அன்று காலை பசியாறிவிடலாம் என்று முடிவெடுத்திருந்தார்.
நடேசனும் சுஜாதாவும் குடியிருந்தது தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை ஒட்டியிருந்த மூன்று மாடிகளைக் கொண்ட மிக விரிவான வீடு. காலை நேர வெயில் அதற்குள் பளபளப்பான மரக்கட்டைகளாய்ச் சரிந்துவிழ வீட்டிற்குள்ளிருந்த அலங்கார வளைவுகள், தரையில் பதித்திருந்த பளிங்குக் கற்கள், பூச்செடிகள், தேக்குமர அலமாரிகள் என்ற அனைத்திலும் சுற்றியிருந்த சீக்கிய பெரும்பணக்காரர்களின் வீட்டுச் சமையலறையிலிருந்து எழுந்த பலமான நெய்வாசம் பரவி நின்றது.
சாப்பாட்டு மேசையிலிருந்து வெகு தூரத்திலிருந்த வாசலைத் தாண்டி வீட்டிற்கு முன்புறமாக இருந்த சிறிய புல்திட்டில் நடேசனின் விலையுயர்ந்த காலணிகளின் டக்-டக் ஓசை அமிழ்ந்து மறையும் வரைக்கும் சுஜாதா வீட்டில் கட்டாயமாக்கப்பட்டிருந்த சேலை தோளிலிருந்து லேசாய் நழுவ, மார்பு வியர்வையில் தாலிச் சங்கிலி உரசி கனக்கச் சுட்டெடுத்தெடுத்த தோசைகளை எப்படி எந்தப் பிசிறியுமில்லாமல் மடித்துப் பரிமாறுவது என்று மீண்டும் மீண்டும் தனது மனதுக்குள்ளேயே ஒத்திகை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
காற்றில் கையசைத்துத் தோசை வார்ப்பதுபோல் பாவனை செய்கிறாளே அந்த ஏகாந்த வெளிச்ச வெளிக்குள் உடம்பின் எல்லைகள் கரைந்து போய்க் கொண்டிருப்பதைப்போன்ற சற்றே கருப்பான ஒடிசலான தேகம். நெற்றி, கண், காது, மூக்கு, முகவாய் என்று ஒவ்வொன்றையும் தனியாகத் தாமிரத்தில் செய்து மீதமுள்ள சதையைச் சமரசமே இல்லாமல் வழித்து எடுத்தது போன்ற திருத்தமான முகம். அகலத் திறந்திருக்கும் வெள்ளித் தகடுகளாய்ப் பெரிய கண்கள். அவள் மனதில் பெருகிக் கொண்டிருக்கும் கவலை, பயம், படபடப்பு போன்ற கறுப்பு எண்ணங்கள் தலையின் உச்சியிலிருந்து இடுப்புவரை வழியும் நீண்ட சுருண்ட கூந்தல்.
எப்போதோ ஒரு பிரகாசம் மிகுந்த வேளையிலே சுஜாதா தீபாவளி இனிப்புக்களைச் சரியாகச் செய்யவில்லை என்று முறுக்கு அச்சின் மெல்லிய கம்பியால் நடேசன் வைத்த சூட்டின் தளும்பு அவள் கற்பனையில் தோசை வார்த்துக் காற்றில் இப்படியும் அப்படியும் திருப்பிப் போட்டு முக்கோணங்களாய்ப் பரிமாற அவள் கையில் கோமேதகமாய் ஒளிர்ந்தது. நடேசன் அவள் கையில் சூடு வைத்தபோது ஏற்பட்ட நுண்மையான வலியில் எப்படி அவள் கண்களை அன்று ஒரு வெளிச்சம் மறைந்ததோ அப்படியே தோசைகளை வார்ப்பதாய்க் காற்றில் பாவனை செய்து கொண்டிருந்த அந்த நேரத்திலும் சுஜாதாவின் கண்களை அதே பேரொளி மறைத்தது. சுஜாதா தனது கனமான சேலையின் முனையால் தன் கண்ணில் திரண்டிருந்த கண்ணீரை ஒற்றியெடுத்துக் கொண்டாள்.
II
வீட்டிற்கு வெளியே நின்ற பதினைந்து வருடத்துக்கு முந்திய பழைய மாடல் பென்ஸ் காரில் ஏறி அமர்ந்த நடேசனுக்கு லேசாய் மூச்சு வாங்கியது. தனது வயிற்றில் தொடங்கி நெஞ்சின் நடுப்பகுதிக்கு ஏறும் கலவரத்தை அவர் அச்சத்துடன் கவனித்தாலும் அவர் நாக்கின் நுனியில் புரோட்டாவின் இனிப்பும் புரோட்டாவோடு காதர் அண்ணன் தரும் குழம்பின் கசப்பும் சிறிய வெள்ளை நிறப் பூக்களாக பூத்து நின்றன. டாக்டர் கடைசியாக அவர் இதயத்தைப் பரிசோதித்துவிட்டுச் சொன்ன அறிவுரைகளை நடேசன் நினைவுக்குக் கொண்டுவந்து பார்த்துக் கொண்டார். ஆனால் நாக்கின் நுனியில் பூத்திருந்த அந்தப் பூக்களின் மணத்துக்கும் ருசிக்கும் முன்னால் டாக்டரின் அறிவுரைகளும், அவர் காட்டிய மருத்துவ அறிக்கைகளும் நீர்த்துப் போன மண்ணாய், கார்க் கண்ணாடிகளைத் தாண்டி வாகனத்தின் முன்புறத்திலும் இருக்கைகளிலும் கொட்டிக் கிடக்கும் மொட்டை வெயிலின் வெம்மையாய் நடேசனுக்குத் தோன்றின. அவர் தனது பழைய காரின் ஸ்டீரிங்குக்கு அடியிலிருந்த துவாரத்தில் சாவியை நுழைத்துத் திருப்பி இன்றும் வாகனம் மெல்ல தடதடத்துத் தொடங்கி ஓட ஆரம்பிக்குமா என்ற மெல்லிய எதிர்ப்பார்ப்புடன் அமர்ந்திருந்தார்.
மனிதனுடைய ருசியை அனுபவிக்கும் ஆற்றலுக்கும் அவன் வயதுக்கும் இடையே இதோ இந்தச் சாவிக்கும் இந்த வாகனத்தின் இஞ்சினுக்கும் உள்ள தூரம் இருக்கிறது. வயது ஏற ஏறச் சாவி போட்டுத் திருப்ப வாகனம் மெல்ல அதிர்ந்து தனது இதயப் பகுதிக்குள் உள்ள மீட்டர் நீள, கிலோமீட்டர்கள் நீள குழாய்கள் கமறக் காறித் துப்பி, தடதடத்து ஓரளவு இயங்குவதே பெரும் வரமாக ஆகிவிடுகிறது.
அன்றைய நாளைக்கு முந்திய இரவில் நடேசன் ஏதோ ஒரு பெரிய வியாபாரிகள் சங்கத்தின் வருடாந்திர விருந்தில் கலந்து கொண்டு மூச்சில் விஸ்கி மணக்க வீட்டிற்கு லேசாய்த் தள்ளாடியபடி வந்தார். வழக்கம்போல் சுஜாதா அவர் விரும்பும்படியே பதினொரு மணி இரவில் புடவையில் வாசல்வரை வந்து வரவேற்றாள். ஆனால் இம்முறை அவள் உடுத்தியிருந்த சேலை அவள் உடம்பின் அழகு மொத்தத்தையும் காட்டுவதாக அமைந்திருந்ததை நடேசன் கவனிக்கத் தவறவில்லை. இப்போதும் அவர் முகத்தில் பூக்கள் பூக்கத்தான் செய்தன. ஆனால் இம்முறை பூத்திருந்தவை நாக்கு நுனியில் இனிப்பும் கசப்புமாக இதழ் விரித்திருக்கும் சின்ன வெள்ளை நிறப் பூக்களல்ல. நடேசனின் கன்னங்களிலும் உதடுகளிலும் செம்பருத்திகள் பூத்திருந்தன. ரத்தச் சிவப்பு நிறத்தில் மஞ்சள் நிறக் காம்புகள் சரிய நிற்கும் ராட்சச மலர்கள். அவற்றின் வாசம் நடேசனின் தலைக்கு ஏறி கிறங்கடித்தன. விஸ்கி மணக்கும் குரலில் நடேசன் சுஜாதாவைச் சீக்கிரம் படுக்கைக்கு வரச் சொன்னார். தனது அலுவலகப் பையை வீட்டில் அவர் அலுவல் பார்க்கும் அறையில் உள்ள மேசைமீது வைத்துவிட்டு வரும் சாக்கில் இழுப்பறையில் இருந்த டப்பாவில் இருந்த சின்ன நீல நிற மாத்திரைகளில் ஒன்றை எடுத்து வாய்க்குள் அடக்கிக் கொண்டார். மருந்தின் வீரியத்தை எள்ளளவும் இழக்கக் கூடாது என்ற கவலையில் குளிக்கக் கூடச் செய்யாமல் நேரே படுக்கைக்கே போனார். “
சுஜாதா கூரையை வெறித்துப் பார்த்தபடித் தோளிலிருந்து சேலை சரிய இருட்டிலிருந்து ஆயிரமாயிரம் வெளிச்சப் புள்ளிகளை வாங்கி ஒளிவீசும் கறுப்பு நிழலாகப் படுக்கையில் மல்லாக்கப் படுத்திருந்தாள். படுக்கையறை விளக்கின் மங்கிய பிரகாசத்தில் அவள் வெள்ளி நிறக் கண்கள் உயிரற்றுக் கிடந்தன. அன்றைய நாள் காலையிலும் வேறொரு காரியத்துக்காக நடேசன் அவளைக் கேவலமாகப் பேசிய வார்த்தைகளின் காடி மணம் அவளது முகத்தில் பிரேதக் களையாக அப்பியிருந்தது.
“கீழ விளக்கை எல்லாம் அணைச்சுட்டியா?”
“ம்.”
”எப்பவும் பண்றதுமாதிரி வாசல் விளக்கை விடியவிடிய எரிய விட்டுட்டு வந்திருக்கப் போற. கரண்ட் பில்ல உன் அப்பனா கட்டுவான்.”
“இல்ல, பார்த்துட்டுத்தான் வந்தேன்.”
“நல்லாப் பார்த்திருப்பியே.”
அவர் வார்த்தைகள் குளறுவது நடேசனுக்கே நன்றாகத் தெரிந்தது. ஒரு மல்யுத்த வீரன் எதிராளியை விரல்களாலும் கரங்களாலும் பிடித்து முறுக்கித் தலைக்குமேல் தூக்கி எறிய சரியான கோணத்தை ஆராய்வதைப்போல் சிறிது நேரம் தனது உடலை முறுக்கியும் தளர்த்தியும் படுக்கையைப் பார்த்தபிறகு சுஜாதாவின் முழங்கால்கள் இருந்த திசையிலிருந்து நெருங்கிக் கட்டிலில் சாய்ந்தார். அந்த முற்றுகையை நீட்டிக்கச் செய்ய நடேசன் பயன்படுத்திய உத்தியும் அவர் வழக்கமாய்ப் பயன்படுத்துவதுதான். அவர் எப்போதோ எதற்காகவோ இணையத்தளத்தில் படித்தது.
“ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு…எதாவது செய்யேண்டி. சவம்மாதிரி கிடக்குற.”
“…”
“ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு…”
நடேசன் எவ்வகையிலாவது தனது கவனத்தை அவர் ஈடுபட்டிருந்த செயலிலிருந்து விலக்கி இணையதளத்தில் சொல்லித் தந்திருந்ததுபோலவே வேறெதிலாவது ஈடுபடுத்த மிகுந்த பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தார். கிட்டித்ததுபோல் வைத்திருந்த பற்களின் இடையிலிருந்து இப்போது புறப்பட்ட அவருடைய குரல் அவருக்கே அந்நியமாய்த் தோன்றியது. நடேசன் அந்தக் குரலில் மனது தோய்ந்துவிடாமல் தனது கவனத்தை அந்தப் படுக்கையறையின் தூரத்து மூலையிலிருந்த ஓவியத்தின்மீது, பிளந்த வாயாய் ஒரு கூம்புவடிவ உறைக்குள் சிரித்துக் கொண்டிருந்த விளக்கின்மீது, அவற்றையெல்லாம் மீறி அவர்கள் இருவரையும் சுற்றியிருந்த சுவர்களின் வெளிர் வெறுமைமீது பதிக்க முயன்றார். ஆனால் சுஜாதாவின் மௌனம் அவரை ஏதோ செய்தது.
“ஒண்ணு, ரெண்டு….என்ன – நான் சொல்லிகிட்டே இருக்கேன். எதுவும் பேச மாட்டியா?”
“…”
“கேட்குறன்ல. ஒண்ணு…மூணு, நாலு…”
“என்ன பேச?”
“எதாவது கெட்ட வார்த்தை பேசு… ஒண்ணு, ரெண்டு…ப்ச்ச்.”
கண்கள் செருகத் தனது ஆழ்மனதின் ஆசையை வெளியிட்டது தப்பாய்ப் போயிற்று. எவ்வளவு முயன்றும் மூன்று நிமிடங்களுக்குமேல் முற்றுகையைத் தொடர முடியாமல் படுக்கையில் புரண்டபோது எதுவும் பேசாமல் முகத்தில் மெல்லிய அலட்சியத்தோடு ஒரு கணம் திரும்பிப் படுத்திருந்த சுஜாதாவின்மீது நடேசனுக்கு மிகப் பெரிய வன்மம் கிளம்பியது. பிரிந்திருந்த தனது ஆடைகளின் விளிம்புகளை வாரிச் சுருட்டிக் கொண்டு கிளம்பியவளை எப்படியாவது கதறடிக்க வேண்டும் என்று நடேசன் பெரும் விருப்பம் கொண்டார். யாருக்கும் அடங்காத காட்டு விலங்காகத்தானே உன்னைப் பாவித்துக் கொண்டிருக்கிறாய். வா – உன்னை என் மிகத் துல்லியமான பயிற்சிகளால் வளையங்களைத் தாண்டும் வெறும் சர்க்கஸ் விலங்காக்குகிறேன் என்று நடேசன் தனது மனதுக்குள் கறுவினார்.
ஆனால் இந்த வன்மம் அவருக்குப் புதிதல்ல. திருமணமான சில மாதங்களிலேயே நடேசன் சுஜாதாவை அடக்குவதற்குச் சகல தந்திரங்களையும் கையாள ஆரம்பித்திருந்தார். அவருக்கு இருந்தது பெரு வியாபாரிகளின் தந்திரம் நிறைந்த மூளை. நடேசன் தன் அப்பாவைத் தாண்டித் தன் தாத்தா காலத்திலிருந்தே வைர வியாபாரி. இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் சிங்கப்பூரில் வைர வியாபாரம் பார்த்து வந்த ஒரு ஆர்மீனியனின் வீட்டின் மது கலந்து கொடுக்கும் பார் பாயாக அவன் தாத்தா இருந்தார். ஜப்பானியர் படையெடுத்து வந்தபோது உயிருக்குப் பயந்து ஆர்மீனிய வணிகன் தனது குடும்பத்தோடு இந்தோனேசியாவுக்குக் கப்பலேறிப் போனான். தனது விருந்துகளில் தனது ருசி அறிந்து மது வகைகளை ஊற்றிக் கொடுத்த இந்தியன் தனக்கு விசுவாசமாக இருப்பான் என்று நினைத்தும் கொஞ்சக் காலம்தான் நீடிக்கப் போகும் போருக்காகத் தன்னிடமிருந்து இருக்கும் வைரங்களை கப்பலில் எடுத்துச் சென்று எங்கேயாவது தொலைப்பது முட்டாள்தனம் என்று கருதியும் கப்பலில் போவதற்கு முன்னால் அவனிடமிருந்த வைரங்களை நடேசனின் தாத்தாவிடம் ஒப்படைத்தான். மூன்றரை ஆண்டு போர்க்காலத்துக்குப் பிறகு ஆர்மீனியன் திரும்ப வராமல் போகவே நடேசனின் தாத்தா அவன் கொடுத்து வைத்திருந்த வைரங்களைக் கொண்டு தனது வைர வியாபாரத்தை நிறுவினார்.
காணாமல்போன ஆர்மீனியனின் சார்பில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவன் சொத்தைப் பற்றிக் கேட்டு அவன் மச்சினனோ ஒன்றுவிட்ட தம்பியோ வந்து கேட்டபோது அது வேறு பணம், இது வேறு என்று சொல்லி உரக்க வாதிட்டார். ஆர்மீனியன் ஈராக் நாட்டைச் சேர்ந்தவன். அப்போது ஈராக்கில் நிலவரங்கள் சரியாக இல்லை. அப்போதிருந்த சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளின்மீதும் அந்த இளம் ஆர்மீனியனுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவனும் தன் பங்குக்குக் கத்திவிட்டு இல்லாத சாபங்களை எல்லாம் நடேசனின் தாத்தாவின்மேல் பொழிந்துவிட்டுத் தன் ஊரைப் பார்க்கப் போனான். அவன் அப்படிப் போனதை நடேசனின் தாத்தா கணேசன் தன் புது வியாபாரத்துக்குக் கிடைத்த ஆண்டவனின் வாழ்த்து என்றே கொண்டாடினார்.
படுக்கையறையின் தூரத்து மூலையில் இருந்த குளியலறையின் வெளிச்சத்துக்குள் நிழலாய் கரைந்து கொண்டிருந்த சுஜாதாவை ஏதேனும் ஒரு வகையில் தாக்கியே தீர வேண்டும் என்று நடேசனுக்குப் பரபரத்தது. முழங்கைகளில் தனது கனத்த உடம்பை முட்டுக் கொடுத்தபடி எழுந்தவர் குளியலறையில் மறைந்து கொண்டிருந்த உருவத்தைப் பார்த்து இப்படி உறுமினார்:
”விளக்கை ஒழுங்கா அணைச்சுட்டு வா. உன் தேவடியா மூஞ்சி மாதிரி திறந்து வச்சுகிட்டு வராத.”
அவர் குரல் இப்போது அவருக்கு வெறும் தகர ஓசையாய், வெற்றுப் பெட்டியின் சடசடப்பாய் மட்டும் கேட்டது.
தட-தட-தட். வாகனமும் உயிர்பெற்று தீனமான குரலில் ஒலியெழுப்பியது. நடேசனுடையது பரம்பரையான வைர வியாபாரம் என்றாலும் அது இப்போது நன்றாகப் போகவில்லை. அவர் குடியிருந்த பிரம்மாண்டமான வீட்டைப்போலவே வாகனமும் பழுதடைந்து வருகிறது. ஆனால் ஒரு மதிப்புக்காக இரண்டையும் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நடேசன் இருந்தார்.
வாகனம் கிளம்பி வீட்டிலிருந்து முக்கியச் சாலைக்கு ஓடும் பாதையில் அவரை இழுத்துக் கொண்டு போகும்போது நடேசன் லேசாய்ப் பயந்தார். அவரது கண்களின் முன்னால் பிடறி பறக்கப் பாயும் ஏழெட்டு காட்டுக் குதிரைகள் தோன்றின. அவர் தனக்கு முன்னாலிருந்த ஸ்டீரிங்கை குதிரை லகானைப்போல் இறுகப் பிடித்துக் கொண்டார்.
வாழ்க்கை தனது கையை விட்டுப் போய்விடாமல் இருக்கத் தளர்வே இல்லாத பயிற்சியும் மிகுந்த மனோதிடமும் அவசியம் என்று அவர் மீண்டும் ஒருமுறை தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டார்.
அந்த நேரத்தில் தனது பழைய வாகனத்தைப் பற்றி நினைத்ததை எல்லாம் சுஜாதாவும் தன்னைப் பற்றி நினைத்திருந்தால் என்ற எண்ணம் அவர் மனதில் மின்னலாய்த் தோன்றி மறைந்தது. ஏன் இதை இன்னமும் வைத்துக் கொண்டு மாரடிக்கிறோம். நடேசன் அதை மறுபடியும் யோசித்துப் பார்ப்பதற்கு முன்னால் வாகனம் தறிகெட்டு ஓடும் முரட்டுக் குதிரையாய்ச் சின்னக் கனைப்புடன் முக்கியச் சாலையின் போக்குவரத்துக்குள் சென்று கலந்தது.
நடேசனின் கண்களைச் சாலையில் வைரங்களாய்க் கொட்டிக் கிடந்த வெயிலின் பளபளப்பு மறைத்துக் கொண்டது.
.III
நடேசன் தோசையை மேசைமீது வார்த்தைகளே இல்லாமல் விசிறி எறிந்துவிட்டு அலுவலகத்துச் சென்ற பிறகு சுஜாதா அந்த நாளை எப்படி கழித்தாள்?
முதலாளியின் மனைவி அலுவலகத்துக்குப் போவது அசிங்கம் என்று நடேசன் சுஜாதாவைத் திருமணத்திற்குப் பின் வேலைக்குப் போவதற்குத் தடை விதித்திருந்தார்.
வெளியே போய்விட்டுப் பிற்பகலில் வீட்டுக்குத் திரும்பிய சுஜாதா சாப்பாட்டு மேசையில் நடேசன் தனக்கு வாங்கித் தந்திருந்த மிக விலையுயர்ந்த கைப்பையை நிற்க வைத்துவிட்டு மேசைக்கு அருகிலிருந்த தேக்குமர அலமாரியின் இழுப்பறையிலிருந்து ஓர் ஓவிய நோட்டை எடுத்து மேசைமீது போட்டாள். சுலபமாய் நூற்றைம்பது பக்கங்களிலிருந்து நூற்றெண்பது பக்கங்களைவரை வரக்கூடிய நோட்டு. அதில் ஒவ்வொரு பக்கத்திலும் பல நாள்களாக, வாரங்களாக, மாதங்களாக சுஜாதா நடேசன் அலுவலகத்துக்குப் போயிருக்கும் நேரத்தில் வரிசை வரிசையாக எலுமிச்சைப்பழ அளவில் இருக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வட்டங்களை பென்சிலால் வரைந்து வைத்திருந்தாள். ஒவ்வொரு வட்டத்தினுள்ளும் சின்னச் சின்ன வட்டங்கள், சதுரங்கள், முக்கோணங்கள் விரிந்திருக்கும் பூக்களின் இதழ்களாக என்று வரையப்பட்டிருந்தன. பெரிய வட்டங்களுக்குள்ளிருந்த இந்த வடிவங்கள் ஒன்றோடொன்று பிணைந்தும் இணைந்தும் பல அடுக்குத் தாமரைகளாகக் காட்சி தந்தன.
சுஜாதாவின் கண்களுக்கு அவள் வரைந்த வட்டங்களுக்குள் தெரிந்த வடிவங்கள் தடித்த சிவந்த நாக்குகள் புரள எப்போதும் திறந்திருக்கும் வாய்களாகத் தெரிந்தன. தடித்த சிவந்த நாக்குகள் புரள எப்போதும் பேசத் தயாராய் இருக்கும் நூற்றுக்கணக்கான மௌன வாய்கள். பல நேரங்களில் அவளுக்கு முன்னால் தோன்றிய நடேசனின் வாய்கள்.
அவள் நடேசனின் நிறுவனத்தில் சேர்ந்த ஆறு மாதங்களில் நடேசன் அவளையும் கேட்காமல் அவளுடைய அப்பாவிடமும் அம்மாவிடமும் நேரடியாக அவளைப் பெண் பேசி முடித்திருந்தார். இரண்டு தலைமுறைகளாய் நெரிசல் மிகுந்த வீடமைப்புப் பேட்டைகளில் தீக்குச்சிப் பெட்டிகளின் அளவே இருந்த அரசாங்க வீடுகளில் வாழ்ந்த அவர்களுக்கு நடேசனின் மூன்று மாடி பங்களாவின் விவரணையே மூச்சுமுட்டச் செய்தது. அவர்களும் எப்போதாவது ஒரு நாள் எவனோ ஒருவனுக்குத் தர வேண்டிய பெண்தானே என்று சுஜாதாவைக் கேட்காமலேயே திருமணத்துக்குச் சரி என்று சொன்னார்கள். அவர்கள் அப்படிச் சரி என்று சொன்னதாக அவளுக்குத் தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து சுஜாதா தனது முதல் ஓவிய நோட்டை வாங்கி வட்டங்களை வரையத் தொடங்கினாள். வீட்டுப் படுக்கையறை அலமாரியில் அவள் அணிய வேண்டும் என்று நடேசனே வாங்கித் தந்த எண்ணற்ற புடவைகளுக்கு அடியில் அந்த எண்ணற்ற நோட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
சுஜாதா வரைந்த வட்டங்களுக்குள் பின்னியிருக்கும் வடிவங்களால் உருவான தளங்கள் நாள்கள் செல்லச் செல்லப் பெருகிக் கொண்டே வந்தன. நடேசன் அவளை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகத்துக்குப் போகும் நேரங்களில் அவள் வரையும் வட்டங்களுக்குள் இருக்கும் தளங்களையே நெடு நேரமாகக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பாள். அவளே அந்த வட்டங்களுக்குள் புகுந்து வாழ்வதாகவும் உலவுவதாகவும் அவள் கற்பனை செய்வாள்.
சுஜாதா வரைந்திருந்த சித்திர வட்டங்கள் மெல்ல மெல்ல அவள் வாழ்ந்து வர ஆரம்பித்திருந்த ஒரு மாற்று உலகாக, வன்முறையும் கேவலமும் உள்ளே புகுந்து தீண்டவே முடியாத சுவர் வைத்த கோட்டைகளாக மாறியிருந்தன. அவள் எழுப்பியிருந்த கோட்டைகளைத் தனது சகல ஆற்றல்களோடும் அனைத்து வன்முறையோடும் தற்காத்துக் கொள்ளச் சுஜாதா ஆயத்தமாகியிருந்தாள்.
சுஜாதா மேசையின் அதே இழுப்பறையில் வைத்திருந்த பென்சில்களையும் பேனாக் கத்தியையும் கையில் கொத்தாய் அள்ளி மேசையில் அமர்ந்து கொண்டாள். அவள் உடுத்தியிருந்த சேலையின் தலைப்பு நழுவி அவள் மடியில் தேங்கியிருந்தது. சேலைக்கு இடையில் அவளுடைய வயிறு வெள்ளையாய், பெருகி நிற்கும் நிலவாய்த் தெரிந்தது. மேசைக்கு ஓரமாக வைக்கப்பட்டிருந்த அவளுடைய கைப்பையிலிருந்து டாக்டர் அப்போதுதான் அவளிடம் கொடுத்திருந்த மருத்துவ அறிக்கையிருந்த பழுப்பு நிற உறையின் ஒரு விளிம்பு தெரிந்தது.
சுஜாதா வழக்கம்போல் தனக்கு முன்னாலிருந்த காகிதம் நிறைய வட்டங்களை வரைந்தாள். காகிதத்தில் இன்னும் இரண்டு மூன்று வட்டங்களையே வரையக்கூடிய அளவிருக்கும்போது அவள் நிறுத்தி நிதானித்து கைப்பையிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவ அறிக்கையின் உறையைப் பார்த்தாள். பின்பு தனது சேலைத் துணியின் மடிப்புகளிலிருந்து வெள்ளை வெளேரென்று துருத்திக் கொண்டிருந்த தனது வயிற்றைப் பார்த்தாள். ஏதோ உணர்ச்சியால் உந்தப்பட்டவளாகத் தனக்கு முன்னால் கொட்டிக் கிடந்த பென்சில்களை விரல்களால் அலசி எதையோ தேடினாள்.
அவள் தேடியது கிடைக்கவில்லை. ஆனால் பென்சில் சீவுவதற்காக வைக்கப்பட்டிருந்த பேனா கத்தி தெரிந்தது. அவள் அதைக் கையில் எடுத்துத் தன் வலது கையின் ஆள்காட்டி விரலை அறுத்துக் கொண்டாள். விரலிலிருந்து பொங்கிய ரத்தத்தில் ஒரு துளியை ஒவ்வொரு வட்டத்தின் நடுவிலும் கவனமாக வைத்தாள். பிறகு தனது விரலில் தொடர்ந்து பொங்கிய ரத்தத்தை எடுத்து தன் வெள்ளை வெளேரென்ற வயிற்றில் பூசிக் கொண்டாள்.
காகிதத்தில் சிவப்புப் புள்ளியோடு இருந்த வட்டங்கள் இப்போது சுஜாதாவுக்குச் சூலுற்றிருந்த இருந்த அவள் கருப்பையாகவும், ஓயாமல் தன்னைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கும் நடேசனின் வாய்களாகவுமே தெரிந்தன.
தனது விருப்பப்படி நடக்காவிட்டால் அவளை நின்ற இடத்திலேயே கொளுத்திவிடப் போவதாக அந்த வாய்கள் ஓயாமல் நாக்கு புரளச் சொல்லிக் கொண்டிருந்தன.
சுஜாதா வரிசையான அந்த வட்டங்கள் உள்ள அந்தச் சின்னஞ்சிறீய ரத்தப் பொட்டை நடேசனின் ஆத்திரத்திலிருந்து காப்பாற்ற நினைத்திருப்பவளைப்போல் தனக்கு முன்னாலிருந்த பேனாக் கத்தியைக் கையில் இறுகப் பிடித்துக் கொண்டாள்.
IV
மாலை நேரத்தில் நடேசனின் வாகனம் வீட்டிற்குள் திரும்பிய போது வழக்கம்போல் சுஜாதா சேலை உடுத்திக் கொண்டு வாசலில் நின்றிருப்பதைப் பார்த்தார். ஆனால் இன்று அவள் தனது வயிற்றில் சாய்த்தபடி நடுவில் சிவப்புப் புள்ளிகள் போட்ட வட்டங்கள் நிறைந்த ஓவிய நோட்டைப் பிடித்திருந்தாள்.
நடேசனுக்குத் தான் வீட்டில் இல்லாத நேரத்தில் சுஜாதா மணிக்கணக்கில் அமர்ந்து ஓயாமல் வட்டங்கள் வரைவது தெரியும். அதை அவர் தனது துல்லியமான பயிற்சிக்கு எதிரான செயலாகவே கருதினார். சுஜாதா வட்டங்கள் வரையும்போது அவளுக்குள்ளிருந்து வெளிப்பட்ட கட்டுப்பாடற்ற தன்மை அவரைப் பயமுறுத்தியது.
எல்லா மனிதர்களுக்கும் தமது வாழ்க்கையின் அடுத்த சில பத்தாண்டுகளை முடிவெடுக்கும் தருணங்கள் அவ்வப்போது வந்துதான் போகின்றன. நடேசன் அப்படித் தோன்றிய ஒரு கணத்தைச் சுஜாதாவின் கட்டுப்பாடற்ற தன்மையை முளையிலேயே அழித்துத் துவைத்துத் தன் பயிற்சியின் லட்சியங்களை நிலைநாட்டுவதென்று முடிவு செய்தார். கடந்த இரவில் படுக்கையறையில் சுஜாதா காட்டிய அலட்சியம் அவர் வன்மத்தைப் புதுப்பித்து மேலும் கூட்டியது.
வீட்டின் வாசலை நெருங்கி வந்து கொண்டிருந்த நடேசனிடம் தனது ஓவிய நோட்டை முன்னால் நீட்டியபடிச் சுஜாதா ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அந்த நோட்டுக்குப் பின்னால் ஒரு பழுப்பு நிற உறையின் முனை நீட்டிக் கொண்டிருந்தது. ஆனால் தன்னுள் எழுந்த வன்மத்தில் நடேசன் அதைக் கவனிக்கவில்லை. சுஜாதாவின் கைகளிலிருந்து அவளுடைய ஓவிய நோட்டைப் பிடுங்கி நடேசன் அதைத் தரையில் விசிறி அடித்தார். பின்பு வீட்டிற்கு முன்னாலிருந்த புற்களின்மீது நடந்து அழுக்காகி இருந்த தனது காலணிகளால் அந்த நோட்டைப் பலமுறை மிதித்தார். மறு வார்த்தை ஒன்றும் பேசாமல் வீட்டிற்குள் தடதடவென்று நடந்து போனார். ஒரு மிகக் கடினமான பயிற்சியின் முக்கியப் பகுதியைப் பிசிறில்லாமல் நடத்தி முடித்த கர்வம் அவர் நடையில் இருந்தது.
”காபி எடுத்துகிட்டு வாடி. தேவடியா.”
எல்லா மனிதர்களுக்கும் தமது வாழ்க்கையின் அடுத்த சில பத்தாண்டுகளை முடிவெடுக்கும் தருணங்கள் அவ்வப்போது வந்துதான் போகின்றன. சுஜாதா அழுக்குக் காலணிகளின் சுவட்டோடு தரையில் சிதறிக் கிடந்த காகிதங்களில் கசங்கிப்போயிருந்த வட்டங்களை உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். இப்போது அந்த வட்டங்கள் அவளுக்குப் பால் குடிக்கத் திறந்த கைக்குழந்தையின் வாய்களாகத் தெரிந்தன.
மௌனமும் அன்பில்லாத அலட்சியமும் முடிவே இல்லாமல் தொடர்ந்து தமக்குள் வெறுமையைச் சுமந்து உருவாகிக் கொண்டேபோகும் வட்டங்கள்தான். அல்லது தடித்த சிவந்த நாக்குகள் புரள் ஓயாமல் பேசத் தயாராய் இருக்கும் வாய்கள்.
மாலை நேரத்துச் சூரியனின் கதிர்கள் அந்த நிலைவாசலில் சிவப்பாய் எரிந்து கொண்டிருந்தன. சுஜாதா தனது உள்ளங்கைக்குள் அடக்கி வைத்திருந்த பேனாக் கத்தியை ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.
பின்பு கீழே குவிந்து கிடந்த காகிதங்களைக் கையில் அள்ளிக் கொண்டு மெல்ல வீட்டிற்குள் நடந்தாள்.
***
-சித்துராஜ் பொன்ராஜ்
Wowow…wonderful