உனது இதயம் எப்போதோ மரத்துப் போய்விட்டதை
நான் அறிவேன்.
இப்போது
உனது உயிரும் அடங்கிப் போய்விட்டதை அறிகிறேன்.
ஒரு கணம்
மனம் ஆர்ப்பரித்து அலைமோதி அடங்கியது.
துயரம்தான்.
ஒரு காலத்தில்
அயல்வீட்டிலிருந்து
கிட்டிப்புள்ளும் கிளித்தட்டும் விளையாடி
முட்டைத்தோசையும், சம்பலும்
எள்ளுருண்டையும்
ஒன்றாயிருந்து
உண்டு மகிழ்ந்த காலங்கள்
நினைவுக்கு வர
மனம் துயரில் நனைந்தது.

அம்மா, அப்பா, அக்கா என
அன்பில் விரிந்த குடும்பத்தில்
சாந்தசொரூபி நீ.

மக்கள் மனங்களில் ஈழக்கனவின்
ஆசை விரிந்தபோது
உனது கனவும்,
எனது கனவும்
ஒன்றாக இருந்தன.
ஆனால்
நாங்கள் இருவேறு திசைகளில் பறந்தோம்.

பிறகு
நீயும் நானும் சந்திக்க முடியாமல்
எமது பாதைகளின் திசைகள்
விரிந்தே சென்றன.
மக்கள் உன்னைக் கொலைகாரன் என்றார்கள்
கொடூரன் என்றார்கள்
வதைமுகாமின் பொறுப்பாளர் என்றார்கள்
இன்னும் நம்பமுடியாத பல கதைகளையும் சொன்னார்கள்
நீ சுடுவதில் வீரனாம்
நகம் பிடுங்கி உண்மை அறியும் வல்லவனாம்
எதையுமே நான் அறியேன்
மக்கள் சொன்னார்கள்.

இப்போது என்னிடம் பல கேள்விகள் உள்ளன.
கேட்பதற்கு நீ இல்லை
நீ இருந்திருந்தாலும் கூட
கேள்விகளை அனுமதித்திருக்க மாட்டாய்
கேள்விகளை அனுமதிக்காத விடுதலைப்பாதை உனதானபின்
கேள்விகளுக்கேது இடம்?
எனினும்
இப்போதாவது கேட்டுவிடத்துடிக்கிறது மனம்.

கொடூரங்கள் புரிகையில்
ஆத்மதிருப்தியோடு இருந்தாயா?
கொலையும், வதையும் தொழிலாக மாறிற்றா?
வதைமுகாமின் பொறுப்பை
மனதார ஏற்றாயா?
பதவி ஆசையில் மயங்கிப் போனாயா?
ஆணையின் விளைவா?
அறிவின் மயக்கமா?

-கவிஞர் அவ்வை

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *