விதுஷ் ரப்பானியார் (600) யூகலிஸ தத்துவத்தின் முதன்மையான புத்திஜீவி. வரலாற்றின் புனைவு வாதம் குறித்த காத்திரமான உரையாடலினை நிகழ்த்தியவர். யூகலிஸம் எனும் நான், வந்தேறிகள், ஹக், மச்சு, ராகுலன் போன்ற நாவல்களையும், யூகலிஸப் பீய்ச்சல், முன்னூறு வாதங்கள், விதுஷ் ரப்பானியார் உரையாடல் போன்ற கட்டுரைத் தொகுப்புக்களையும் தந்தவர். விருதுகளுக்கும், மாமூலான இலக்கியச் செயற்பாட்டிற்கும் பெரும் நிராகரிப்பாளராய் செயற்பட்டவர். மதி கெட்டான் சோலையில் மறைமுகமா வசித்து வந்தவரை வனம் இதழுக்காக நேர்காணல் செய்தேன்.

 

 

கேள்வி: வரலாற்றின் புனைவுத்தன்மை குறித்து மிக நீண்ட காலமாகப் பேசி வருகிறீர்கள். யூகலிஸம் பற்றிய உங்களது கோட்பாட்டுப் பார்வை மிகுந்த சர்ச்சையினை கிளப்பியிருக்கிறது. கண்டனப் பத்திரிகைகள் கூட வெளியிடப்பட்டிருக்கின்றன. இம்மாதிரியான செயற்பாடுகளுக்கான எதிர்வினையினை இதுவரைகாலத்திற்கும் நீங்கள் முன்வைத்ததாகத் தெரியவில்லை. இத்தருணத்திலாவது பேசுவதற்கான வாய்ப்புகள் உண்டா?

பதில்: வரலாற்றின் புனைவுத்தன்மை பற்றிய ஆய்வில் மிகத் தீவிரமாக இயங்கியவர்கள் குறித்து முதலில் பேசிவிடுகிறேன். பின்னர் உங்களது கேள்விக்கான பதிலானது எனது பேச்சில் இல்லாமல் போனால் மறு கேள்வியில் இதனை நாம் தொடர முடியும். ஏழு நூற்றாண்டுகளாக வரலாற்றின் புனைவுத்தன்மை பற்றி எழுதியும், பேசியும் வந்திருக்கிறேன். இங்கு நான் பிரதானப்படுத்தக்கூடிய முதன்மைக் கருத்தியலானது வரலாறு என்பது புனைவின் உருவாக்கம் என்பதுதான். பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த கருத்தியல்களின் அடிப்படையில் நாம் இதனை அணுக முடியும். சார்பு மனநிலையோடு வகைப்படுத்தப்பட்ட அரசியலின் விளைவாக வரலாறு எனும் சொல் உருவாகியது. வெடிப்புக்களோடு சம்பந்தப்படுத்தி உருவாக்கப்பட்ட வரலாற்றின் ஆழமான பார்வையினை நேர்த்தியாக முன்வைத்தவர்கள் இங்கில்லை. எனது ஆய்வு நிலைப்பாட்டினைப் பொறுத்தவரை வரலாறு எனும் சொல்லினை முழுவதுமாக நிராகரிக்கிறேன். அதற்கான பிரிதொரு சொல்லினை நான் எப்பொழுதும் பயன்படுத்தி வந்திருக்கிறேன். யூகலிஸம் என்பதுதான் அது. நீங்கள் சொல்வது போன்று சிக்கல்களை நிரப்பிய சொல்லது.
இதற்காகவே நித்திய கல்யாணியின் கதையோடு இந்த உரையாடலை தொடர்ந்து செல்லாம் என நினைக்கிறேன். யூகலிஸத்தின் ஆய்வுகள் குறித்து பெரும் ஈடுபாட்டாளராக இயங்கிய நித்திய கல்யாணி தன்னுடைய பெரும்பாலான படைப்புக்கள் அனைத்திலும் வரலாற்று எனும் சொல்லின் அதிகார முறைக்கு எதிரான நிலைப்பாட்டினை காரமாக முன்வைத்தார். ‘யூகலிஸம் – அதிகார அறிமுகம்’ எனும் தன்னுடைய பிரதியில் முழுமையான வரலாற்று புனைவுத்தன்மையின்; பகுதிகளை காரசாரமான விவாத நிலைக்குக் கொண்டு சென்றார். 326ல் ஹர்த்தோமில் பிறந்த நித்திய கல்யாணி தன்னுடைய வாழ்வில் பெரும் துயரத்தினை அனுபவித்த படைப்பாளி. ‘யூகலிஸம் – அதிகார அறிமுகம்’ பிரதியில் எழுதப்பட்டிருக்கும் முன்னுரைக் குறிப்பே இதற்கு பெருத்த உதாரணமாகக் கருதப்பட்டது. தன் வாழ்க்கையில் நேரிட்ட துன்ப துயரங்களையும் இழிவுகளையும் நினைத்துத் தற்கொலை செய்து கொள்ள முனைந்தார். உடலில் நஞ்சூட்டப்பட்டும் பிழைத்துக் கொண்டார்.

பின் பல வேலைகளில் உழன்று 348ஆம் ஆண்டு ராஸ்கோ சென்று சியோ மோலாவைச் சந்திக்க முடியாமல் திரும்பினார். மாரலன்கொ எனும் புகழ் மிக்க எழுத்தாளரைச் சந்தித்து தாம் எழுதிய கவிதையைப் பரிசீலிக்கத் கொடுத்தார்;. 423ஆம் ஆண்டு ஹர்த்தோமி முழுவதும் முக்கிய இடங்களுக்கு சுற்றுப் பணயம் சென்று வந்தார். இடையில் அவருடைய ~காலம் கடத்திய சிசு| எனும் கவிதைப் பிரதி வெளிவந்தது. தொடர்ந்து பல கவிதைகளும், கதைகளும், புதினங்களும் எழுதினார். வரலாறு குறித்து தீவிரமாப் பேசி வந்த ரத்தேனியர்கள் நித்திய கல்யாணியை உயிருடன் எரித்தனர். உடம்பு முழுக்க தீப் பற்றலுடன் கிழக்கு திசை நோக்கி வேமாக ஓடினார். பொசுங்கிய உடலுடன் நித்திய கல்யாணியின் உடலினை நாங்கள்தான் புதைத்தோம். வரலாற்றுவாதிகள் அதிகாரத்தின் வங்குரோத்துத்ன்மையின் மீது வெறித்தமாக இயங்கிக் கொண்டிருந்தனர். யூகலிஸம் அவர்களை குழப்பிக் கொண்டிருந்தது. நித்திய கல்யாணிக்குப் பிறகு அவர்களால் கொல்லப்பட்டவர்களின் பட்டடியல் மிகப் பெரிது.
அடுத்ததாக, யூகலிஸ எழுத்தாளரும், ஆய்வாளரும், விமர்சகருமான எஸ். முஸ்லிம் செய்தினார் கருத்தியல் சார்ந்த எழுத்துலகின் தனித்துவமிக்க ஆளுமையாவாகவிருந்தார். இலக்கியவாதியாகவும், திறனாய்வாளராகவும், கதைகள், புதின எழுத்துக்கள் என இவரின் படைப்புலகம் மிகவும் விரிந்துபட்டது. சாதுருக்ஜிய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றிய எஸ். முஸ்லிம் செய்தினார் மாதுகேந்திர மாநிலக் குப்பம் நகரில் உள்ள சூழலியல் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். மலையாளம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் நன்கு பரிட்சயம் பெற்றவர். இதுவே இவரின் படைப்புகளுக்கு பெரும் சக்தியாய் அமைந்தன. யூகலிஸம் ஒரு கோட்பாடா?, யூகலிஸம்;: வரலாறும் அதன் பிற்பாடான படைப்பும் புனைவும், தமிழில் இலக்கணம், தமிழ்ச் சூழலில் யூகலிஸக் கோட்பாடு, யூகலிஸத்தின் வரைபடம், வரலாற்றின் பிற்போக்குக் கதையாடலில் நூற்றாண்டு காலச் சிந்தனை போன்ற தமிழின் இலக்கியப் போக்கினை மாற்றியமைத்த மிக முக்கியமான ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். எஸ். முஸ்லிம் செய்தினாரின் கதைகள், சரித்திரத்தில் குழறுபடிகள், யூகலிஸத்தில் ஒரு கடவுள், இருண்மைச் சொற்கள் போன்றன எஸ். முஸ்லிம் செய்தினாரது படைப்பிலக்கியங்களாகும். ~மறுவெளி| எனும் இலக்கிய இயக்கத்தினை நடாத்தி 635ம் காலப்பகுதிகளில் யதார்த்தமும் வரலாற்று நாவல்களும், புதிய யூகலிஸத்தில் பிரக்ஞை போன்ற பல கருத்தரங்குகளை எஸ்.முஸ்லிம் செய்தினார் நடாத்தினார். மிகக் காத்திரமான இக் கருத்தாடல்கள் தமிழின் விரிந்த பரப்பிற்கு காரணியாக அமைந்தன.

யூகலிஸம் பற்றிய எதிர்வினைகளுக்கு திரும்புவோம். வரலாற்றின் மாற்றுப் பார்வையாக யூகலிஸத்தினை முன்வைக்கிறேன் எனப் புரிந்து கொண்டதன் விளைவாகவே கண்டனங்களை அணுக முடிகிறது. ஒரு போதும் வரலாற்றுக்கான மாற்றுப் பார்வையாக யூகலிஸம் இருந்துவிட முடியாது. வரலாற்றினை நிராகரிப்பதாகவே யூகலிஸம் செயற்படுகிறது. வரலாறு எனும் சொல்லாடலை மறுத்து அதற்கான பதிலீடாகவே யூகலிஸத்தின அணுக வேண்டியுள்ளது. இது பெயருக்கான மாற்றம் என நீங்கள் நினைத்தால் கூட தவறான நிலைப்பாடகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. யூகலிஸம் வரலாற்றுக்கான மாற்றுப் பெயரல்ல, வரலாற்றின் அம்சங்களை நிராகரிக்கும் இயங்கியல். பெரும் உரையாடலின் ஊடாக கடத்தப்பட்;டு செயல் முறைக்குள் நீந்தித்திரியும் திமிங்கிலம் போன்றது.

வரலாற்றுப் புனைவுத்தன்மையின் அதிகார வங்குரோத்து குறித்த சூழலின் விம்பங்களை விட்டு பிரபஞ்சமானது வெகு தூரமாக நகர்ந்து விட்டது. காலத்தின் ஓட்டத்தில் குமிந்திருக்கும் வரலாற்றின் மாய விளையாட்டுக்களாக சரித்திரங்கள் நகர்த்தப்படுவதும், அதன் விரிவாக்க கருத்தியல்களில் அதிகார அரசியல் நிரம்பிவழிவதுமாக நம்பிக் கொண்டிருந்த புத்திஜீவிகளின் மத்தியில். தீவிரமான உரையாடலாக யூகலிஸம் பரப்பப்பட்டது. பிரதிகளின் உணர்வுத்தளமாக அமைந்திருந்த வரலாற்று ஆய்வுகள் எதிர் கதையாடலுக்கான வெளியினை உருவாக்கியிருக்கின. யூகலிஸத்தை புரிந்து கொள்ளுதல் எனும் நிலைப்பாட்டிற்கு அப்பாலாக வரலாற்றின் முரண்பாடுகள் பற்றி பேச முனைகின்ற ஊடறுப்பு மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.

வரலாற்றின் மொழி வழித் தொடர்புகள் புனைவுகளின் பக்கம் சார்ந்தவையாக இயங்கத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து மாற்றியல் பார்வைக்கான பெருத்த கீறல்களை யூகலிஸம் ஏற்படுத்தியது. யூகலிஸம் கொண்டியங்குகின்ற ஆய்வு நுட்பங்கள் காலத்தின் மேம் போக்கானவையாகவும் அவற்றினை நுகர்கின்ற போது கிடைக்கக் கூடிய அனுபவங்கள் யூகலிஸம் மீதான ஆராய்ச்சிப் புரிதல் என்றே கூற முடியுமாயிருக்கிறது. யூகலிஸம் எவ்வகையான நிலைப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதினை எவராலும் வரையறுக்க முடியாதிருப்பினும் இன்று உலக வடிவமைப்பின் கூறுகள் பற்றிய எல்லா சமாச்சாரங்களையும் யூகலிஸம் உரையாடலுக்கு முற்படுத்தியிருக்கிறது. காலத்தின் மீது காத்திரமான முன்வைப்புக்களை செய்கின்ற விசித்திரமான புத்திஜீவிகள் யூகலிஸப் பிரபஞ்சம் பற்றிப் பேசுவதோடு அவை பற்றிய தேடல்களிலும் ஈடுபட்டனர். கடந்து சென்ற காலங்கள் யாருக்கு சொந்தமானது எனும் கேள்வி எழுகின்றபோது அதற்கான பதில் யூகலிஸத்திற்குச் சொந்தமானது என்பதேயாகும்.

இலக்கியச் சூழலில் யூகலிஸம் கொண்டிருக்கும் பெருத்த இடமானது பிரதி வடிவினையும் தாண்டி உரையாடல் வாயிலாகவும், துண்டுப்பிரசுரங்களின் ஊடாகவும்; பரப்பிவிடப்பட்டிருக்கின்றன. யூகலிஸம் குறித்த அனைத்துப் பிரதிகளும் தீவிரவாசிப்பிற்குரியதா? என்பதினை தொடர்ச்சியான வாசகன் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. பிற்போக்குத்தனமான வரலாற்றின் வருகையானது பிரபஞ்சம் மீதான அதிகாரக் குவியலின் பக்கம் எம்மை அழைத்துச் செல்கிறது. கடந்த கால நிகழ்வுகள் குறிப்பிட்ட வட்டத்திற்குள் முடக்கப்பட்டு, உரையாடுவதற்கான களம் உருவாக்கப்படாமல் மழுங்கடிக்கப்பட்டது. கடந்த காலங்களின் பார்வையில் வரலாறு என சொல்லப்படுவது எவ்வாறாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது? யூகலிஸம் எவ்வகையான வாசிப்பினை வேண்டி நிற்கின்றது? என்பவற்றை ஆய்வு செய்யக் கூடிய அமைப்புக்கள் எம்மத்தியில் உருவாக்கப்படவில்லை.

யூகலிஸம் தன் வசப்படுத்தியிருக்கும் கட்டமைப்பான அமைப்பியலிருந்து உருவாகிறது. யூகலிஸ மொழியானது அதனுடைய கோட்பாட்டினை வெளிப்படுத்தும் கருவியாயிருக்கிறது. யூகலிஸ மொழியினைத் தாண்டி வெளியே நிற்கின்ற கடந்த கால நிகழ்வுகள் நாடகத் தன்மையினைக் கொண்டிருக்கின்றன. யூகலிஸத்தின் மொழியே கடந்த கால நிகழ்வுகளுக்கும், வரலாற்று நாடகத்திற்கும் இடையிலான வேறுபாட்டினை காட்டுகின்றது.

நித்திய கல்யாணியும், எஸ். முஸ்லிம் செய்தினாரும் இதற்காகவே இயங்கினார்கள். இதற்காகவே கொல்லப்பட்டார்கள். எஸ். முஸ்லிம் செய்தினாரின் படுகொலைபற்றி பெருவெளி இதழில் விரிவாக பேசியிருக்கிறேன். வரலாற்றுவாதிகள் மிக மோசமாக நடந்து கொண்ட காலங்களவை. இன்றும் வரலாற்றுவாதிகளின் கருத்துக்கள் புத்திஜீவிகளை அச்சுருத்துக்கின்றன. யூகலிஸம் குறித்த உரையாடல்களை நிறுத்துவதற்காக பெருமுயற்சியினை மேற்கொள்கின்றனர். யூகலிஸம் வரலாற்றின் மிகுதியான எச்சங்களை அழித்துவிடாத வரை உரையாடலுக்கான வெளியினை உருவாக்கிக் கொண்டேயிருக்கும் என்பதினை மாத்திரம் இப்போதைக்கு நான் உறுதியாகச் சொல்ல முடியும்.

 

 

கேள்வி: பின்நவீனம் இலக்கியப் பரப்பின் மாறுதல் வளர்ச்சியாக இன்றளவும் விவாதிக்கப்படுகிறது. யூகலிஸம் இலக்கியப் பரப்பில் வெகுவாக நுழைந்தும் விட்டது. புனைவிலக்கிய இயங்கியலில் இலக்கிய படைப்புகள எவ்வாறெல்லாம் நகர்ந்திருந்திருப்பதாக உணர்கிறீர்கள்?

பதில்: மரபு, நவீனம், பின்நவீனம், என எல்லாவற்றையும் கடந்து சென்றிருப்பதாகவே இலக்கியத்தினைப் பார்க்கிறேன். மேற்குறித்த எல்லா அடையாளங்களை விட்டும் இலக்கியம் கடந்திருக்கிறது. தனித்துவமான அல்லது படைப்பாளிகளின் வசதிக்கேற்ற போக்கில் அது கடத்தப்பட்டிருக்கிறது. இலக்கியத்தின் நகர்தலைப்பற்றி நீங்கள் கேட்டிருக்கறீர்கள். இலக்கியத்தினால் நகரமுடியாது. இலக்கியப் படைப்புக்களின் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி குறித்துப் பேசுகின்ற போது நான் வடிவம் எனும் சொல்லாடலையே பயன்படுத்தி வந்திருக்கிறேன். இங்கு இலக்கியங்களின் வடிவங்களில்தான் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இலக்கியத்தில் நிகழ்த்தப்பட்ட வடிவ மாற்றங்களில்தான் அதற்கான சூழல் விரிவடைந்திருக்கிறது.

மிகத் தீவிரமான வடிவ மாற்றங்கள், அவற்றின் மீதான உரையாடல்கள், பிரதிகளின் வடிவ இயங்கியலாக அமைந்திருந்த எழுத்துக்களின் வருகையானது, எதிர் கதையாடலுக்கான வெளியினை உருவாக்கியது. யூகலிஸ தீவிர வாசிப்பல் நிலைக்கவும், அக்காலத்தின் மறைவிடங்களை குறித்து பேசுவதும் பெரும் குற்றங்களாக்கப்பட்ட சூழலில், அவற்றினை மறுதலித்து தமது பிரதிகளினூடே பெரும் அரசியலினை இலக்கியங்களின் மாற்று வடிவங்கள் செயற்படுத்திக் கொண்டிருந்தன. நவீனம் – பின்நவீனமென இவர்கள் பேசிக் கொண்டதும், விவாதித்துக் கொண்டதும் இலக்கியத்தின் வளர்ச்சிப் வடிவங்களைப் பற்றித்தான். இலக்கியச் சூழலின் விரிந்த அடையாளமென்பது வடிவங்கள் கொண்டியங்கும் மாற்றியல் போக்கினையேயாகும். விமர்சனப் பாங்கும்; எழுத்துக்களின் வளர்ச்சியும் வடிவங்களில் தங்கியிருந்தன. கவிதைகள் கதைகளைச் சொல்லும் அழகியல் எனும் பெரும் பரப்பினை இங்கு பிரகடனப்படுத்திவிட்டு, காத்திரமான உரையாடல் மொழியினை இலக்கியங்களின் வடிவம் தோற்றுவித்தது. கோட்படுகளைக் காட்டிலும் வடிவங்களை பராமரிக்கும் பிரதிகளாக இலக்கியங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வடிவங்களைப் பொறுத்தவரை இலக்கிய மொழியானது பொது வெளியில் நிகழ்வதாகிவிட்ட அல்லது, பொது வெளியில் மதிப்பிடப்படும் பெருத்த விவாதக்காரணியாக மாறிவிட்டிருக்கின்றன. வடிவங்கள் உருவாக்குகின்ற சிக்கலை, பல்லாயிரம் கேள்விகளை, பிரதிகளோடு நாம் புரிகின்ற மரபு, நவீனம், பின்நவீனம் என்கின்ற இன்னோரன்ன பலவற்றை யூகலிஸம் மிக வேகமாகக் கட்டுடைத்தது.

யூகலிஸத்தினை இலக்கியப் பரப்பிற்குள் பேசியவர்கள் வடிவம் குறித்தான நிலைப்பாட்டில் ஒருமைப்பட்டிருந்தனர். கவிதைகள், கதைகள், நாவல்கள் எனும் இலக்கிய வடிவங்களை நிராகரித்தனர். பிரதி எனும் அடிப்படையில் எல்லாப் படைப்புக்களையும் அணுக முற்பட்டனர். மறுதலித்தல் என்கின்ற நிலைப்பாட்டில் வடிவங்களை யாவற்றையும் மாற்று வாசிப்பிற்கு உட்படுத்தினர். யூகலிஸம் கடந்த கால நிகழ்வுகளின் தடயங்களை மாத்திரமன்றி அதனூடாக பிரதி வடிவங்களையும், தீவிர எழுத்துக்களையும் உருவாக்கியது.

இலக்கியங்களின் வடிவங்கள் பற்றிய புதிய மாயைகளை ஏற்படுத்திய படைப்பாளியும் ஹர்த்தோமி மொழியானது நவீன இலக்கியத்திற்கு தந்த மிகப்பெரும் சொத்துமான புத்திஜீவி ராசுக்கல்லின் படைப்புக்கள், கதை சொல்லல் பாங்கு, புதிய மொழி, ஜாலங்களின் கட்டுடைப்பு, யூகலிஸ இலக்கியங்கள் மாற்று வடிவங்கள் பற்றியதான புதுமையினை இங்கு உருவாக்கியது. வுடிவங்களின் எழுத்துருவாக்கத் தாக்கமானது ராசுக்கல்லின் இலக்கியங்களில் பெருத்த இருப்பின் அடையாளத்தினை பெற்றிருந்தது. மறைந்த பொழுதில், வடிவங்களின்; இளையுதிர்காலம், யூகலிஸ காலத்தில் காதல், இலக்கியத்தில் வடிவங்களும் பிற அசுரர்களும், நூறு கதைகள், நிர்வாண உரையாடல் என ஆறு நாவல்களும் சச்சரவுகளை எழுதுவதில்லை, முன் அறிவிக்கப்பட்ட வரலாற்றின் பித்தலாட்டங்கள், துக்கம் நிரம்பிய மனைவியின் நினைவுகள் என மூன்று குறுநாவல்களும் நானாகி நான் எனும் தன் வரலாறு தொகுப்பும் ஏராளமான சிறுகதைகளையும், புலனாய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ள ராசுக்கல் வடிவ இலக்கியத்தின் முதன்மை உரையாடலுக்குரியவர். மூர்டோனிஸ் விக்டர் மயூகோ, அலஸ்பியர், போன்ற புத்திஜீவிகளை தனது இலக்கியத்தின், நேர்காணலின், பேச்சுக்களின் மூலமாக் எழுத்துருவாக்கம் செய்த பெரும் கலைஞன். யூகலிஸ ஆதவாளராக இருந்து தரோபியா, சாதுருக்ஜியம், செலஷ்ரியா நாடுகளில் நடந்த புரட்சிகளில் பங்கேற்று அதற்காக தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தார்.

 

 

 

 

கேள்வி: இருப்பியலினை கேள்விக்குட்படுத்தும் மாற்றியல் வடிவப் போக்கினை உங்களது மருவி நாவல் வெளிப்படுத்துகிறது. நாவலின் அட்டைப்படத்தில் சிறுமியொருத்தியின் நிர்வாணப் படம் பெரும் சர்ச்சையினை கிளப்பியிருந்தது. பின்குறிப்பு வாசகமும் ஆணாதிக்க கருத்தியலை மையப்படுத்தியாக அமைந்திருந்மை இச்சிக்கல்களுக்கு பிரதான காரணமாகும். மருவியின் அரசியல்தான் என்ன?

பதில்: மருவி வரலாற்றினால் பாதிக்கப்பட்ட பரம்பரையின் அரசியலினைப் பேசும் இயக்கவியல். இதன் அட்டைப்படம் குறித்து பதிப்பக குழுவினரிடம்தான் கேள்விகளைத் தொடுக்க வேண்டும். மருவியின் அரசியல் குறித்த தெளிவான போக்கினை அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதே எழுத்துக்களின் மாற்றியல் வடிவம் என நான் நம்புகிறேன். இலக்கியம் மறுக்கப்பட்ட பரம்பரையானது சமூக அமைப்பிலிருந்து எப்படியெல்லாம் விரட்டப்பட்டது என்பதும், வரலாற்று பாதிப்பு எவ்வாறெல்லாம் நிகழ்ந்தன என்பதும் மருவியின் பிரதான பாடு பொருளாக இருந்தன.

இந்த நூற்றாண்டின் விலைமதிக்க முடியாத பாத்திரங்களுல் மருவியில் வரும் ஷிராத்தேயின் பங்கு அளப்பரியது. தியானத்தின் வழிபாட்டோடும், பகுத்தறிவுச் சிந்தனையின் மூத்த வாரிசாகவும் இவ்வுலக மக்களுக்கு ஷிராத்தேயின் ஆற்றிய பணிகள் எண்ணிறந்தவை. நித்திய கல்யாணியின் சீடர்களில் தனித்துவமிக்க அடையாமான ஷிராத்தேயின் இயங்குதல் தமிழ் மீதான உயிர்ப்பினை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டியது. எஸ். முஸ்லிம் செய்தினாரின் மற்றைய சீடர்களோடு ஷிராத்தேயின் துறவறம் இப்பூவுலகில் தோற்றம் பெற்றது. சாதுருக்ஜியத்தின்; கடல் நடுவே அமைந்திருந்ந படகின் மீதேறி மூன்று நாட்கள் ஓயாத தியானத்தினை ஷிராத்தே மேற் கொண்டார். ஆங்கிலேயரின் வங்குரோத்து ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த இந்திய தேசத்தினை மீட்பதற்கான தியானமாகவே அது அமைந்திருந்தது. இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்த தியானமாக அமைந்திருந்ததினை பின்பொரு நாளில் அவர் சுட்டிக் காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும். ஷிராத்தேயில் அமைந்துள்ள அந்தப் பாறை இன்று வரைக்கும் நித்திய கல்யாணியின் நினைவிடமாக பார்க்கப்படுவதினை நாம் அவதானிக்கலாம்.

யூகலிஸவாதிகளே நீங்கள் என்னை விட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் எனும் வேத வாக்கினை பறைசாட்டிய எஸ். முஸ்லிம் செய்தினாரை விட சிறந்த மகானை நாம் தரிசிக்கவே முடியாது.

மனிதர்கள் இயல்பாகவே தெய்வீகத் தன்மை கொண்டவர்கள், அதனை வெளிப்படுத்துவதே அவர்களது வாழ்வின் சாரம் என்பதினை தனது வார்த்தைகளின் ஒவ்வொரு நொடியிலும் அவர் கூறிக் கொண்டேயிருந்தார். காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்ற ரிஷிகளிடம் காணப்படும் ஆன்மீகம் என்கின்ற மெய்ஞான கீற்றானது இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்து மனிதர்களிடமும் பரவ வேண்டுமென விரும்பினார். சமூகத்தில் எந்தப் பணியினைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்ய முடியும் எனும்; கருத்து உலகத்தின் ஒருமைக்கு தூணாகி நிற்பதினை நாம் அறியலாம். இக் கொள்கையின் அடிப்படையிலேதான் யூகலிஸ மடத்தினை நிறுவி, புத்திஜீவிகளின் வாழ்விற்கு ஒளியேற்றினார்.

 

கேள்வி: வனம் இதழினை வாசிக்கிறீர்களா?
பதில்: இங்குதான் நான் குறித்த உரையாடலை நிகழ்த்தலாம் என நினைக்கிறேன். வனம் இதழின் போக்கு குறித்து எனக்கு மாற்றுப் பார்வைகளும் உண்டு. யூகலிஸம் பற்றிய வனக்காரர்கள் இன்னும் பேசவில்லை என்பதுதான் அது. இந்த நேர்காணலின் ஊடாக இதற்கான தொடக்கம் நிகழலாம் என நினைக்கிறேன்.
காலத்தின் மிகத் தீவிரமான உருவாக்கம், அவற்றின் மீதான உரையாடல்கள், பிரதிகளின் உணர்வுத்தளமாக அமைந்திருந்த சொற்களின் தொகுப்புக்களாக இவைகளின் வருகை எதிர் கதையாடலுக்கான வெளியினை வனம் உருவாக்கியிருக்கிறது. போரியல் காலத்தின் உக்கிரமான பேரிருப்பின் மூலையில் வசிக்கவும், அக்காலத்தின் மறைவிடங்களை பேசுவதும் பெரும் குற்றங்களாக்கப்பட்ட சூழலில், அவற்றினை மறுதலித்து தமது பிரதிகளினூடே பெரும் அரசியலினை நிகழ்த்திய எனது படைப்புக்களின் எழுத்திமைப் போக்கு, தமிழ் – முஸ்லிம் சூழலின் விரிந்த அடையாளமாக பார்க்கப்பட்டது. கவிதைகள் கொண்டியங்கும் மாற்றியல் போக்கினை பெரும் விவாதத்திற்கு அழைக்கும் விமர்சனப் பாங்கும்; எனது எழுத்துக்களில் தங்கியிருந்தன. கவிதைகள் கதை சொல்லும் அழகியல் எனும் பெரும் பரப்பினை இங்கு ஏவிவிட்டு, காத்திரமான உரையாடல் மொழியினை நான் தோற்றுவித்தேன்.
முரண்டபாட்டைக் காட்டிலும் கவிதைகளை பராமரிக்கும் முரண்பாடாக இயங்கினேன். எனது எழுத்துக்களைப் பொறுத்தவரை கவிதைகளும், கதை மொழியும் பொது வெளியில் நிகழ்வதாகிவிட்ட அல்லது, பொது வெளியில் மதிப்பிடப்படும் பெருத்த விவாதக்காரணியாக மாறிவிட்டிருந்தன.

ஒரு பிரதி உருவாக்குகின்ற சிக்கலை, பல்லாயிரம் கேள்விகளை, பிரதிகளோடு நாம் புரிகின்ற வினைகளை எனது இயங்குதளம் மிக வேகமாக கட்டுடைத்தது.
மொழிகளின் போக்கினை தனக்கான ஒன்றாக உருவாக்கிக் கொண்ட எதிர்பார்ப்புகளுக்கும், வெற்றிகளுக்கும், தோல்விகளுக்கும், நிராசைகளுக்கும் ஆரம்பமாகவிருக்கின்ற குறுகிய வெளியிலிருந்து வெளியேறுகின்ற உபவழிகளை அவை சொல்லித்தந்தன. யதார்த்தங்களைக் காட்டிலும் பிரமாண்டமான பெருவெளியின் இயற்கையினை, தனது மொழிக் கூட்டிற்குள் நகர்த்திச் செல்லும் பண்புகளை தனது சொற்களுக்கு கற்றுக் கொடுத்த கவிதைகள். சாவகாசமான மொழிப் போக்கில் அமைந்த சித்தரிப்புக்களின் ஊடே, எதிர்பார்க்கப்படாத கூரிய ஆழ்படிமங்களானது, மொழியினில் செலுத்துகின்ற அதிகாரத்தின் வடிவம், முற்போக்கான கலாச்சாரத் தேடுதல், உடைத்து விடப்படுகின்ற சமூகக் கட்டமைப்பின் விரிசல்கள் என பெரும் போக்கு முறைமைகள் பிரதிகளாக வெளிப்பட்டு நிற்கின்றன. நிறுவன சூழ்ச்சிகளுக்கு ஆட்பட மறுக்கின்ற, நிறுவன வங்குரோத்தின் மீது பிரிதொரு எதிர்வினையினை பாய்ச்சுகின்ற அமைப்பியல் சார் வடிவம் கொண்ட எனது மொழி என்பதே பெரும் உபாயமாகும்.

***

-ஏ. எம். சாஜித் அஹமட்

 

Please follow and like us:

1 thought on “விதுஷ் ரப்பானியார் – யூகலிஸத் தகப்பனுடனான ஒரு உரையாடல்

  1. அருமையான கேள்விகளும்
    சிந்தனையைத் தூண்டிவிட்ட மிகப் பிரமாதமான பதில்களும்.
    வனம் இன்னும் பல காத்திரமான உரையாடல்களை படைக்க வேண்டும் அது படைப்பாளிகளுக்கு சிறந்த களமாக அமையுமென்றும் வேண்டியவளாக.

    வானம்பாடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *