1

1) கடவுளின் கரங்களிலிருந்து ஒளிபெறும் பூமியென என் முகம் மிளிர்கிறது.

2) கடவுளைப் போலவே எனக்கும் மனிதர்கள் வெறும் புள்ளிகளாகத் தெரிகிறார்கள்.

கணினி திரைக்கு முன்பாக அமரும்போதெல்லாம் இப்படித்தான் இருக்கிறேன். மனிதர்களை அறியவே  இந்த மென்பொருளை உருவாக்கினேன். பெயர், ஊர், அடையாளம் என அவர்கள் ஏற்கனவே சுமந்துகொண்டிருக்கும் பொதியின் ஊடாக அவர்களையடைவது அயர்ச்சி அளிக்கிறது.  காரணம், இவற்றைக்கொண்டு ஒருவரைத் தேடலாம், ஆனால் அறிய இயலாது. அதனால் தன்னை முழுவதும் வெளிப்படுத்திக்கொள்ளும் அல்லது நேர்மையாக இருக்கும் தருணங்களிலிருந்து இந்த மென்பொருள் ஒருவரையறிய முயல்கிறது. ஆகவே நீங்கள் கணினி, அலைபேசி போன்ற ஏதாவதொரு வெளிச்சத்திரைக்கு முன்பாக தோன்றும்போதெல்லாம் 800 துண்டுகளாக / தரவு புள்ளிகளாக இந்த மென்பொருளில் சேமிக்கப்படுகிறீர்கள். மேலும், பதினோரு மணிக்கு மேல் நீங்கள் காணும் காணொளியை எங்கு நிறுத்தி எதைத் தொட்டு பெரிதாக்குகிறீர்கள் என்பதை வைத்தும்கூட தொகுக்கப்படுகிறீர்கள், ஒரு புள்ளியாய்.

 

இந்த மென்பொருளை உருவாக்கி உபயோகிக்க ஆரம்பித்ததிலிருந்து தெரிந்தே தொலைந்தவனைப் போல உணர்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு கல்லூரி நாட்களில் என் ஆதர்சமாக இருந்த பேராசிரியர் ஒருவரை, “Frequent visitor of Child Porn Sites” என்ற தரவு தொகுப்பிற்குள் ஒரு புள்ளியாகப் பார்த்தபிறகு, என் மென்பொருளைப் பயன்படுத்தாமல் தான் இருந்தேன்.

2

நண்பனுக்கு காதல் தோல்வி. நீண்ட நாட்களுக்கு பிறகு என்னைப் பார்க்க வந்திருந்தான். “இழக்க இருக்கும் ஒரு உறவு இது என்பதற்கான எந்தவொரு சிறு குறிப்பையும் இந்த இரண்டாண்டுகளில் நாங்கள் பரிமாறிக்கொண்டதில்லை. நல்லவள். அழகி. இந்த விலகலுக்குக்  காரணமான விரிசலைப் பார்க்கவோ, கேட்கவோ ஏன் புரிந்துகொள்ளவோ கூட என்னால் இயலவில்லை”  என்று அவன் சொல்லி நிறுத்தியபோது அழுகைக்காகக் காத்திருந்தது போலிருந்தது.

“அவளைப்பற்றி  நீ புரிந்து வைத்திருந்ததைச் சொல்”

“அவளது அணுவையும் அறிந்தவன் நான்”

“சொல்”

“என் காதுக்கு இருப்பாள். ஊடலுக்கு பிந்தைய முதல் குரல் பெரும்பாலும் அவளுடையது  தான். எவராக இருந்தாலும் என்ன சேதி என கேட்கும் தைரியம். சுத்தம். பல் தேய்ப்பதும், குளிப்பதும் இரண்டு முறை. கூடலுக்குப் பிறகு ‘உன்னை நானறிவேன், என்னையன்றி யார் அறிவார்’ என்ற பாடலைத்தான் பெரும்பாலும் அவள்  பாடக் கேட்டிருக்கிறேன். தளர்வான உடைகள் தான் எப்போதும், அவற்றில் அதிகம் அடர் பச்சை நிறத்தில். சில ஆண் நண்பர்கள் உண்டு. உணவகங்களில் கூட அதிகம் அவள் பணம் செலுத்தியதாகத்தான் நினைவு. போனவாரம் கூட எனக்கு உடைகள் வாங்கித்தந்து அஞ்சப்பரில் விருந்து தந்தாள். இரண்டு இலக்கங்களில் கூடியிருக்கிறோம், பிரிவுக்கு முந்தைய சேர்க்கையில் பெருகிய வியர்வையிலும் கூட விலகலின்  நெடி இல்லை. பிறகு எப்படி இதெல்லாம் நேர்ந்தது? நித்திரையில் விழுந்த கணமென அல்லது மரணத்தில் விழுந்த பொழுதா? சொல்ல தெரியவில்லை. அவளது அழகும் அழுத்தமும் என்னிடம் ஒரு ஆழத்தை உற்பத்தி செய்திருக்கிறது. இப்போது எதையிட்டு அதை நிரப்புவது என்று தான் யோசித்து கொண்டிருக்கிறேன். மேலும், பிரிவைக் காட்டிலும் அவள் முகம் மறதிக்குள் வேகமாக சென்றுகொண்டிருப்பது தான் துயரத்தை மேலும் கூட்டுகிறது. பிரிவை அறிவிக்கும் ஒரு சிறு அசைவு கூட அவளது எந்தவொரு மெய் நிகர் இருப்பிலும் இல்லை. எனக்கென்று எதுவும் இல்லாததைப் போன்றதொரு உணர்வு”. மின்விசிறி  சுழன்றடங்கிய  சில நொடிகளில் தன் மூன்றாண்டு காதலியைச் சொல்லி முடித்து காற்றுக்காக ஜன்னலைத்  திறந்துவிட்டான் நண்பன்.

“நீ சொன்னதை எழுதினால் பதினைந்து வரிகள் மிஞ்சாது. அவ்வளவு தானா  உன் காதலி? தீர்ந்துவிட்டாளா?”

” உனக்கு வேறென்ன வேண்டும்? அவளது ப்ரா சைஸா?”

“தெரியுமா?”

“அவளிடமே கேட்கிறாயா? நம்பர் தரட்டுமா?”

நான் ஏன் அவளிடம் கேட்கவேண்டும். என் மென்பொருளைத்திறந்தேன்.

3

1) ஆரஞ்சு நிற கவரில் வரும் சதுர வடிவ  விஸ்பர் லார்ஜ் பயன்டுத்துகிறாள்

2) ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்து உண்பது  வெண் பன்றிக்கறி வறுவல்

3)இளவரசன் என்பவனை நட்பு பட்டியலிலிருந்து நீக்கி, பிறகு இவளே நட்பழைப்பு  விடுத்திருக்கிறாள்

4) பிரிவுக்கு முந்தைய பதினைந்து நாட்களில் அதிகம் கடன் வாங்கியிருக்கிறாள்

5) “எளிய தற்கொலை முறைகள்”- கூகுளில் அதிகம் தேடியது.

6) அருணின் மொபைல் நம்பரைச் சேமிக்கப் பருவங்களுக்கு ஏற்ப அவர், அவன், நல்லவன், பொறுக்கி, புடுங்கி, டுபுக்கு, சப்ப, பொட்ட என பல பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறாள்.

7) இப்போது அருண் “தூமை”யாக  அவள் மொபைலில் இருக்கிறான்

8) அவளது மொபைல் கேலரியில் இருப்பவை அனைத்தும் செல்பிகள்

9) பின்னிரவு இரண்டு மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை 74 முறை தனது மொபைல் போனை அன்லாக் செய்கிறாள் .

10) “லெஸ்பியன் பார்ட்டி” – பார்ன்ஹப்பில் சமீபமாக அதிகம் தேடியது

11) கல்லூரி நாட்களில், முகத்தைத் துப்பட்டாவால் மூடி கையில் சிகரெட்டுடன் இருக்கும் படமொன்று பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டு நாற்பது நொடிகள் கழித்து அழிக்கப்பட்டு இருக்கிறது.

12) சராசரியாக 4 நிமிடங்கள் ஓடும் ஒரு யூடியூப் வீடியோவை, 27 முறை தொட்டு , நொடிகளில் பார்த்துமுடிக்க விரும்புகிறாள்

13) இதய வடிவ சிவப்பு நிற எமோஜியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறாள்.

14) 7 நாட்களுக்கு முன்பு சுஜா என்ற பெயரோடு டார்லிங் சேர்க்கப்பட்டு போனில் சேமிக்கப்பட்டிருக்கிறது.

15)  அவளது ப்ரா சைஸ் 34, கப் D.

இவை என் மென்பொருளிலிருந்து அவன் காதலி  குறித்து  எடுக்கப்பட்டவை. இதுபோல மொத்தம் 180 பக்கங்களை நண்பனிடம் கொடுத்தேன். ஐந்து நிமிடங்கள் கூட அவனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. காகிதங்களை விசிறிவிட்டு மல்லாந்து படுத்தான். மீண்டும் எழுந்து அவன் எடுத்த காகிதத்தை வாசிக்கும் முன்பு என்னை நோக்கினான், முடிச்சை அவிழ்த்த குழந்தையின் கண்களுடன்.

“முடிவோட தான் இருந்திருக்கா பசப்பி, இல்ல?” என்று கேட்டதும் தன் சோகம் நினைவுக்கு வரவே, அவசரமாகக் குனிந்துகொண்டான்.

“….”

“என்னைப் பற்றியும் இதுபோல எடுக்க இயலுமா? உன் மென்பொருளில்?”

“உனக்கு வேணுமா அருண்?”

சிதறிக்கிடந்த காகிதங்களை நிதானமாக அடுக்கி தன் தோள் பையில் வைத்துக்கொண்டான். அறைக்கதவு வரை அமைதியாக நடந்தவன் திரும்பாமல் “வரேன்” என்றான்.

அவன் இனி ஒருபோதும் வரப்போவதில்லை.

4

பந்தியில் சுவையான பண்டம் இவர்கள், சீக்கிரம் தீர்ந்துவிடுகிறார்கள். நாற்பது ஆண்டுகள் கணவனோடு வாழ்ந்தவள் அவரை இவ்வாறாகப் புரிந்து வைத்திருப்பதாகச் சொல்கிறாள், “அவரு டீ குடிச்சிட்டுத்தான் ஆய் போவாரு, தினமும் துண்ட மறந்துகொண்டு போய்டுவாரு”. ஒருவர் குறித்து வெற்று தகவல்களைச் சொல்வது ஒன்று தான் அவரோடு நமக்கிருக்கும் புரிதலா? அப்படி அடுக்கப்படுபவை கூட மீண்டும் அன்றாடத்தைத் தானே உப்பு சப்பில்லாமல் நிகழ்த்திக் காட்டுகின்றன. எனில், இருவர் புரிதலோடு வாழ்தல் என்பதெல்லாம் மற்றுமொரு பொய்யா? மொழியின் எல்லைக்கு உட்படாதது இவையெல்லாம் என்ற சப்பை கட்டை உங்கள் இடதுகையால் புறந்தள்ளுங்கள்.  தன் காதலி தரவு துண்டுகளாகக் காகிதங்களில் கிடந்ததைப் பார்த்த பொழுது, நண்பனின் விழிகள் விரிந்ததை நான் அருகிலிருந்து கண்டேன். அவனை விடவும் அவன் காதலி குறித்து அதிகம் தெரிந்தவன் என்ற வகையில் கேட்கிறேன், அவளைக் காதலிக்க அதிக தகுதி படைத்தவன் நான் தான் இல்லையா?

5

எனக்கு தெரிந்தவர்களையெல்லாம் விதவிதமாக தேடிப்பார்த்துவிட்டேன், ஏதாவதொரு தரவு தொகுப்பிற்குள் ஒரு புள்ளியாக ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். போர்னோ படத் தரவுகளில் நல்லவேளை இன்னார் இல்லையென்று சாய்ந்தமர்ந்த சற்று நேரத்தில், அவரே  ஆடியோ போர்ன் தளத்தின் நிரந்தர சந்தாதாரராக இருக்கிறார், அழுகிய பண்டத்தின் மீது மொய்க்கும் ஈயென. மெய் நிகரில் மட்டுமே இனி வாழ்வு என்றானால் ஆண்களுக்கு அகம் – வன்முறை, புறம் – காமம். இவ்விரண்டும் கைவரப்பெறாத ஆண்களைப் பெண்கள் தங்களை நாவால் பூஜிக்க நியமித்துக்கொள்வார்கள்.  இம்மென்பொருளின் தொகுப்புகளை ஒரு வட்டமாகக் கொண்டால், அதற்கு வெளியே நிற்கும் அல்லது  குறைந்தபட்சம் நீளும் கால்களாகக் கூட எவரும் இல்லை. எல்லோரும் ஏதேனும் ஒரு தொகுப்பிற்குள் அடங்கிவிடுகிறார்கள், கவனிக்க வேண்டியது அவர்கள் ஒட்டிக்கொண்டிருப்பது ஒரு வேசியின் நிலைக்கண்ணாடியில் பொட்டாகவா அல்லது அவளுடலில் அலங்கார மச்சங்களாகவா என்பதை மட்டும் தான். இரண்டாம் விதம் கொஞ்சம் தேவலை, அவர்களுக்குள் இறங்கிப்பார்க்க ஏதாவதொன்று இருக்கிறது. அவர்களைத் தேடிப் போனேன்

6

பேயைப் புணர்ந்தவன்

முதலில் நான் கண்டறிந்தது சுந்தரைத் தான். பேயைப்  புணர்தல் என்ற தொகுப்பிற்குள் கிடந்தார். நீண்ட யோசனைக்குப் பிறகு என் மென்பொருளை திறந்து காண்பித்த பிறகே பேசத் தொடங்கினார்.

“நான் நேரடியாகத்தான் சொன்னேன். அவள் இரட்டையர்த்தமாக எடுத்துக்கொண்டு சப்தமாகவே சிரித்தாள். அதன்பிறகு வந்த பெருமூச்சின் நீளத்தை அளந்ததும் தான் அவளைத் தொடத் துணிந்தேன். வற்புறுத்தலில் விருப்பமில்லை அதனால் காதலிப்பதாகச் சொன்னேன்”.

பாக்கியம் “நல்லாயிருக்கு கத. கல்யாணம் ஆகி ரெண்டு குட்டிபோட்ட பொம்பளையவா?” என்றாள்.

“இப்ப இல்லை. நீ சடங்காவரத்துக்கு முந்தியே”.

“எப்போ  ரெடி பண்ணக் கதையிது?”

“கதையெல்லாம் இல்லை. பத்து வருசத்துக்கு முன்னாடியே உனக்கு லவ் லெட்டர் எழுதியிருக்கேன். இன்னும் கூட பத்திரமா வெச்சிருக்கேன்”.

அவள் நம்பமாட்டாள் என்றுதான் நினைத்தேன். கொஞ்சமும் யோசிக்காமல் “நாளைக்குக் கொண்டு வா” என்றாள்.

அப்பா பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கித் தோற்ற லாரி தொழிலின் பழைய புக்கிங் நோட் ஒன்று அன்றிரவு கையில் கிடைத்தது. அதில் மிகக் கொச்சையாக அவளை வர்ணித்து காதல் கடிதம் ஒன்றை எழுதி மறுநாள் கொடுத்தேன். அப்படியொன்றை அவளிடம் தந்ததற்காகக் கொஞ்சம் சங்கடமாகக் கூட இருந்தது. பிறகு ஒருநாள் அவள் சர்பத் கடை பழனியோடு சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அப்புறம் சன் டிவி நாடகமொன்றில் நடிக்க இருப்பதாகவும், விழுப்புரத்திற்கு அருகே இரவு கடையின் கல்லா பெட்டியில் அமர்ந்திருந்ததாகவும் ஊரில் நிறையக் கதைகள் அவளைப்பற்றி பேசிக்கொண்டார்கள்.  இரண்டு மாதங்கள் கழித்து  நைட்டி அணிந்து எங்களூர்  சந்தைக்கு வந்திருந்தாள். அது எனக்கான அழைப்பு. அவள் அங்கே  கண்டுகொள்ளப்படாமல்  நின்றுகொண்டிருந்தது  தான்  உறுத்தலாக இருந்தது. கருக்கலில் ஒட்டாத அதிவெண்மை நிறத்திலிருந்தாள். ராஜேந்திரனின் காட்டு வரப்பின் வழியாக அனுமார் கோயில் மேட்டை அடைந்தோம். இரவின் குளிர்ச்சி பாறையில் எஞ்சியிருந்தது. பாறையின்  உச்சியில் ஊறி சரிவில் வழியும் ஒரு ஊற்றாக அப்போது நாங்களிருந்தோம். அவள் என்னிலிருந்து பெருக்கெடுத்து கிடந்தாள். சரிவைச் சமன் செய்ய தன் இரண்டு கைகளையும் பாறையில் ஊன்றியிருந்ததால் அவளிடுப்பு சேதி சொல்லவருவது போல மேலெழுந்தது. நான் இயங்க ஆரம்பித்தேன். பாறையின் சுரசுரப்பு  அவளுடலில், அல்லது அவளது வழுவழுப்பு பாறையில். செய்கை நிகழும் போதோ அல்லது முடிந்த பிறகோ உண்டாகும் அவசரம் அன்று எங்களுக்கு இடையே இல்லை. பலமுறை கூடியறிந்த உடல்களாய் அவை செய்து அடங்கின.  அவள் நிதானமாக வானம் பார்த்துப் படுத்திருந்தாள்,  ஆடைகள் குறித்த ப்ரக்னஞ துளியுமின்றி. என்னைத்தான் முதலில் கிளம்பச் சொன்னாள். நான் உடுத்திக்கொண்டு பாறையை விட்டிறங்கி அங்கிருந்த சந்தனமரத்திற்குப் பின்பாக ஒளிந்திருந்தேன். அவள் ஒரு குழந்தையின் தட்டிலிருந்து சிதறியிருக்கும் வெண் பருக்கைகளாய் கிடந்த தனது ஆடைகளை கவனிக்காது கோயில் சுவருக்குப் பின்பாக போய் மறைந்தாள், வரம் தந்துவிட்டுக் கரையும் கடவுளென.

நான் இறங்கி வழக்கமாக டீ குடிக்கும் கடையில் பீடி பற்றவைத்தேன். பாக்கியத்தின் கணவன் ஓடிவந்து வெறியுடன் கத்தி சொன்னான். அவன் கிட்டத்தட்டப் பல ஆண்டுகளாக விளையாடி வந்ததை வென்றுவிட்டதொரு மனநிலையிலிருந்தான். நான் திரும்பவும் அனுமார் கோயில் மேட்டிற்கு ஓடினேன். அங்கே அவளது ஆடைகள் இல்லை. வீட்டிற்குத் திரும்பிப்  படுக்கையில் விழுந்தேன். எனக்கு எளிமையான சில கேள்விகள் தாம். ” பாக்கியம்  நேற்றிரவிலிருந்தே தண்டவாளத்தில்  பிணமாகக்  கிடக்கிறாள் என்றால், என்னோடு சற்றுமுன்  கூடியது யார்?.அவள் அங்கே  நிர்வாணமாகக்  கிடக்கிறாள் என்றால், அவளது ஆடைகள் எங்கே?”

“அப்படியென்றால் அது  பேயா?”

“பிறகு வேறென்ன?”.

“ஏன் பேயாக அவள் உங்களைத் தேடி வரவேண்டும்?”

“லவ்வு சார்.’

7

தன்னைத்தானே தேடி அடைந்தவன்

யாரையும் தேடி அந்தக் காட்டுக்குள்  செல்லவில்லை. எதையாவது தொலைக்க முடியுமா என்று பார்க்கவே சென்றேன். காடு தனக்கான அத்தனை அடையாளங்களையும் இழந்து வெட்டுக்காயங்களுடன் நின்றுகொண்டிருந்தது. இக்காடு அவ்வூருக்கு மாபெரும் கழிவறை. அங்கே ஊறி ஓடும் எவையும் அம்மக்களின் புட்டம் நனைப்பவை. உச்சி வெய்யிலுக்கு மலம் காயும் வாடை வேறு. எனக்கு வியர்த்து நா வறண்டது. தொலைக்க வந்த இடம் மேலும் தொல்லை தருவதாய் இருந்தது. உள்ளே நுழையும்போதே அங்கிருந்தவர்கள், வெளியேற நாய் தடத்தை ஒட்டி நடக்கச் சொல்லியிருந்தார்கள். அதைத்  தீவிரமாக  தேட ஆரம்பித்தேன். ஊருக்குள் பார்த்த வெள்ளாடுகள் கூட இங்கே இல்லை, உள்ளே வந்ததிலிருந்து ஒற்றைக் கழுகை மட்டுமே இதுவரை பார்த்திருக்கிறேன். காடென்ற பெயரைக்கொண்ட அந்த வெட்டவெளி அழுத்தத்தை மேலும் கூட்டுவதாய் இருந்தது. கண்கள் வழியே எதுவும் உள்ளே நுழைய மறுத்தது. என்னுடல் வெப்பத்தையும், மூச்சுக்காற்றையும் மட்டும் உணர்ந்தேன். பிரம்மாண்டம் என்று நம்பிய இடத்தில் ஒற்றை தடத்தையே தேடிக்கொண்டு அலைந்தேன். ஒரு மண் திட்டை ஏறியிறங்கியபொழுது தூரத்தில் ஒப்பாரிக் கூடுகையென மரங்கள் எதையோ மறைப்பதுபோல சுற்றி நின்றுகொண்டிருந்தன. நடக்க நடக்க மரங்களிடையே ஒரு காட்டுக்கோயில்  இருந்தது தெரிந்தது. மஞ்சள் பூசி அகன்ற விழிகளுடன் பெரிய பொட்டுவைத்துச்  சிவப்பு சட்டையும், பச்சை பாவாடையும் அணிந்த ஒரு சிறுமி சிலை அங்கே, அருகில் ஒரு நாய். காட்டில் கண்ட முதல் நிழலிலமர்ந்து சோலி உருட்டிக்கொண்டிருந்தேன். அந்த திட்டிலேயே படுத்து உறங்கிப்போனேன். மழைத்துளி முகத்தில் விழுந்து எழுந்தமர்ந்து போது இருந்த உணர்வு, உறக்கத்தின் தரத்தைச் சொன்னது. தெரியாத இடத்தில் இவ்வளவு ஆழ்ந்து உறங்கமுடியுமா என்ற குழப்பத்துடன் மழையைக் கவனிக்கத் தொடங்கினேன். இந்த மழையில் நாய் தடத்தை எங்கே தேடுவது? மழை நின்றதும் கோயிலிலிருந்து இடதுபக்கம் நடக்கத் தொடங்கினேன்.

“எனில், இறுதிவரை நீங்கள் நாய் தடத்தை பார்க்கவே இல்லையா?”

தூரத்தில் ஊரைக் கண்ணில் கண்டதும் அப்படியே காட்டுத்தரையில் உடலைக் கிடத்தினேன். எனக்குப் பின்னால் அதுவரை நான் நடந்து வந்ததன் கால் தடம். உண்மையில் நாய் தடம் என்ற ஒன்றில்லை அல்லது அவர்கள் என்னைத்தான் நாயென்று சொல்லியிருப்பார்கள்.

8

செத்துப் பிழைத்தவள் – தங்கப்பாப்பு

“அட குழியில எறக்கிட்டாங்க சாமி. ஒவ்வொரு  எழவுக்கும் போய்ட்டுவரும்போதும் சுடுகாட்டை ஒவ்வொரு விதமா நெனச்சு வெச்சிருந்தேன். எழவு, இந்தக்காடு வெறும் சாம்பலா கெடந்துச்சு. எந்திரிச்சு உக்காந்ததும் எம்மவங்காரன் விழுந்து எந்திரிச்சி ஓட்றான். சின்னவயசுல பள்ளியோடத்துக்குப் போவ மாட்டேன்னு அம்மணகுண்டியோட அவம் அடம்புடிச்சு ஓடினது,  எனக்கு சவக்குழிலே ஒக்காந்துக்கிட்டு நெனப்பு வருது. எந்திரிக்கணும் தா நெனைக்கிறேன், உடம்பு உட மாட்டேங்கிது, மேலெல்லாம் மணத்து கெடக்குது. இவரு செத்த அன்னைக்கிகூட மழையான மழ சாமி. குழியில ஒரே தண்ணியாமா, இவரு செத்தும் இறங்க மாட்டேன்னு அடம் புடிச்சுகிட்டு குழிக்கு பக்கத்துல படுத்து கெடந்திருக்காரு. எம்பொறந்தவந்தான் தண்ணிய மோந்து வெளிய ஊத்திருக்கான். நமக்கு அந்த  இம்சையெல்லாம் இல்ல, மொட்ட  வெய்யிலு. எப்புடியோ நா குழில கைய கால ஊனி எந்திருச்சு நின்னுக்கிட்டேன்”.

“மொதல்ல என்ன சொன்னீங்க?”

“எம்மவங்காரன தான் கூப்ட்டேன். டேய் சுப்பு, நான் முழிச்சுகிட்டேன் டா, அப்படின்னேன். பேரங்காரன் நாலு நாள் கழிச்சுத்தான் கிட்டக்கவே வந்தான். ஆயா ஆயாங்கறத  தவற அவனுக்கு வேற வார்த்தை வரல. வரும்போது மால மரியாதையோடு தோள்ல தூக்கிட்டு வந்த எவனும், காட்லர்ந்து திரும்பி வீட்டுக்கு போறதுக்கு வண்டீல ஏத்த மாட்டேங்கறான். அப்படியே ஏழு மைலு நட தான். தடத்துல பாக்குற ஆம்பளையெல்லாம் ஒதுங்கி போறான். பாறைக்காட்டு சுமதி மட்டும் நிறுத்திக் குடிக்க தண்ணிக்குடுத்தா , ஒரு மடக்கு குடிச்சதும் உசுரு உள்ளுக்குள்ள நனையறது தெரிஞ்சிச்சு சாமி. வீட்டு வாசல்ல ஒக்காத்தி வெச்சு கொடம் கொடமா தலைல ஊத்தி உள்ள கூட்டிகிட்டு போனாங்க. அன்னைலர்ந்து கட்டல்ல மண்டைய சாச்சு படுத்தாலே மண்ணுக்குள்ளே கெடக்க மாரி  மூச்சு தெணறுது .

“உங்களை வித்தியாசமா பாக்குறாங்களா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல சாமி. குறி கேட்டு வர்றாங்க. நானும் நல்லதா நாலு சொல்லி விடறேன்”.

“உங்களைச்  செத்து  பொழச்சவ, அப்படீன்னு சொல்றாங்களே?”

“அட ஏஞ்சாமி, அவரு விட்டு வெச்சிருந்த கம்மல் ஒன்று காதோட கழட்டாம போட்ருந்தேன். கண்ண மூடி முழிச்சதுலேர்ந்து அத காணோம். ஊருக்கே குறி சொல்றேன், வீட்டுக்குள்ள அந்த கம்மல் எங்கடீன்னு கேட்டா ஒரு கூதியாளும் உள்ளத சொல்ல மாட்டிக்கிறாளுக”.

9

கடவுளைக் கண்டவர்கள் என்று தேடிப்பார்த்தேன். ஊருக்குள் நாலு பேராவது கடவுளைக் கண்டிருக்கிறார்கள். தன்னைத்தானே காதலித்து திருமணம் செய்துகொண்டவனை பார்க்க எண்ணியிருந்து பிறகு ஆர்வமிழந்தேன். நினைத்த மாத்திரத்தில் அழும் பெண்ணை சந்தித்தேன். அவள் அழுகையில் வெளிப்படுவது கண்ணீரல்ல, சீழ்.

10

இந்த பயணங்களுக்குப் பிறகு நான் சாக விரும்பினேன். அதற்கு முன்பாக அந்த மென்பொருளில் நான் யாராக இருக்கிறேன் என்பதைக் கண்டறிய முயன்றேன். என் சாதனைகளை, அவமானங்களை, அழுக்குகளை, ஏமாற்றங்களை, துரோகங்களை என எல்லாவற்றையும் தேடித் பார்த்துவிட்டேன். கிணற்றுக்குள் கல்லாகிக் கிடந்தேனே ஒழிய, எந்தத் தொகுப்பின் மீதும் ஒற்றைப் புள்ளியாக, தனித்தவனாக என்னால் இருக்க இயலவில்லை. சுமந்துகொண்டிருந்த மதிப்பீடுகள் எல்லாம் என்னிலிருந்து உதிர தொடங்கின. பர்சில் எவ்வளவு பணமிருக்கிறது  எனத் திறந்து பார்த்தேன். இனிப்பு சாப்பிட வேண்டும் போலிருந்தது. அந்த நேரத்திற்கு ஒரு காமம் தேவைப்பட்டது. வீட்டை ஒதுங்க வைத்தேன். படியேறி எங்கள் 14 மாடி குடியிருப்பின் மாடிக்குச் சென்றேன். சூரிய வெளிச்சம் படும்போது தான் அது இல்லாத இடத்தில் எத்தனை நாட்கள் இருந்திருக்கிறேன் என்று யோசிக்கத் தோன்றியது. மாலை மஞ்சள் வெய்யிலால் நகரம் நனைந்துகொண்டிருந்தது. பக்கத்து மாடியில் ஒரு தகப்பன் தனது மகனுக்காக தன் பெருந்தொப்பையையும் தூக்கிக்கொண்டு ஓடியோடி பட்டத்தைப் பறக்கவிட முயன்றுகொண்டிருந்தார். அது மாட்டேன் மாட்டேன் என்று தலையாட்டி பறக்க மறுத்தது.  ஒரு கட்டத்தில் இருவருமே ஓய்ந்து வானம் பார்த்து மாடியில் படுத்துக்கொண்டனர். மகனுக்குக் கண்கள் கூசவே தந்தை அவரிடமிருந்த பட்டத்தை வைத்து அவனது முகத்தை மூடி மூடி விளையாடினார். மஞ்சள்நிற வெய்யில் பட்டத்தின் வழியாக வேறொன்றாக மாறி மகனது முகத்தில் விழுந்தது. தந்தை தன் பெருநாவால் மகனது கன்னத்தை நக்கினார், அவன் அதையும் அந்த பட்டத்தைக்கொண்டே துடைத்துக்கொண்டு ‘அய்யே’ என்றான். ஒருகணம் மேற்கில் மறைய இருந்த அந்த புள்ளியைப் பார்த்தேன், அவசரமாக என் அறைக்குத் திரும்பி தாழிட்டுக்கொண்டேன். என்னால் சாகவெல்லாம் முடியாது.

***

-ரூபியா ரிஷி

 

Please follow and like us:

1 thought on “வெளிச்சத்திரையை மொய்க்கும் புள்ளிகள் – ரூபியா ரிஷி

  1. வாசிக்க வாசிக்க வாசித்துமுடிக்க வைக்கும் மொழிநடை அற்புதம். நான் வனத்தின் வாசகனாக்கியது வாழ்த்துகள்.
    -லிவா ன்சதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *