“பாலத்தாண்ட நிப்பாட்டு செத்த..” சைக்கிளை அழுத்திக்கொண்டிருந்த வீரமணிக்கு சொல்லியது கேட்டதோ இல்லையோ.. கேரியரிலிருந்த தினகரன் காலையூன்றி, தடுமாறி இறங்கியிருந்தான்.

“என்னாச்சுரா.. இவடுத்த என்னத்துக்கு..” சைக்கிளை நிறுத்தி கேட்டான். பாலத்தின் பிடிச்சுவற்றை நோக்கி நடந்துகொண்டிருந்த தினகரன் திரும்பவில்லை. “ஒன்னுக்கு போறதுக்கு எடமாடா இது.. தெருலைட்டு ஏதும் இல்லாம இருட்டுக்குள்ள போற.. பூச்சிவட்டு எதாச்சும் கெடக்கப்போவுது..”

பதிலே சொல்லாமல் போனவன் திட்டுச்சுவற்றில் ஏறி உட்கார்ந்துகொண்டான். தாடை நடுங்க குளிரடித்தாலும் மூட்டம் பார்வையை மறைக்குமளவிற்கு இருக்கவில்லை. பிறையொளி இங்குமங்குமாக தண்ணீரில் மினுங்கிக்கொண்டிருந்தது.

“கேக்குறன்ல.. நட்டன மசுரா.. எதுக்கிப்ப இங்கின வந்து குந்திருக்க..”

தினகரன் வலப்பக்க உடலை மட்டும் சற்று எக்கி இடுப்பு வாரில் செருகியிருந்த பாட்டிலை எடுத்தான்.

“இத குடிக்கவாடா எடம்பாத்த.. அதும் இந்த இருட்டுக்குள்ள வந்து..”

“சனியன ச்சீந்தாமதான கெடந்த.. இப்ப என்னத்துக்கு திரும்ப ஆரம்பிக்கிற..”

“ஏன்டா.. கேட்டுட்டே இருக்கேன்.. மொகரைய எதுக்கிப்ப எலவுக்கொடுத்தவனாட்டம் வெச்சிக்கிட்டு இருக்க..”

திருகிக்கொண்ட மூடியை சட்டைக்கு அடியில் கொடுத்து திறக்க முயன்றபடியே தினகரன் ஒரு வழியாக வாயைத் திறந்தான், “ஆனந்துக்கு ஒன்னு ரெண்டு நாளெய்க்குள்ள முடிஞ்சு போயிரும் போல”

வீரமணிக்கு சட்டென வார்த்தையெழாமல் போனது.. மெல்ல அருகில் வந்து உட்கார்ந்துகொண்டான்; கண்கள் அதற்குள் இருளுக்கு உடன்பட்டிருந்தன. கரையையொட்டிய கோரைப் படலின் மக்கலும் மேற்கே நிற்கும் ஆரஸ்பதி காட்டின் வைத்திய நெடியும் காற்றை நிரப்பியிருந்தன. பாட்டிலை வாங்கி அடியுள்ளங்கையில் வைத்து அழுத்தித் திருகி அவனிடமே நீட்டி, “விட்டுத் தொல அவன.. எத்தன காலத்துக்குத்தான் அதயே போட்டு ஒலப்பிக்கிட்டு கெடப்ப..” ‘குடி’ என்பதைப் போல செய்கை காட்டினான்.

“நீ அவன பாத்து எத்தன மாசமிருக்கும்?”

வீரமணிக்கு யோசித்துச் சொல்ல சற்று நேரம் பிடித்தது. “போன வருசம் கோயிலுக்கு காப்பு கட்றதுக்கு முந்தி பாத்தது.. அதான்.. அதுக்கப்பறம் அங்குட்டு போவேயில்ல..”

தினகரன் முகத்தைச் சுழித்துக்கொண்டு பாட்டிலில் பாதி வரை விழுங்கினான்.

“அட கெரவந் தண்ணி கலந்தாச்சும் குடிச்சு தொலச்சாயென்ன.. கொடலக்கீது பொத்தூட்ற போவுது..”

“யிப்ப நீ அவன பாக்கணுண்டா.. எலும்புந்தோலுமா.. நெஞ்சுக்கூடு பொடச்சு போயி.. கண்ணெல்லாம் காமால கண்ட மாதிரி..”

“அதையே ஏன்டா.. விட்டுத்தொலங்கறன்ல..” உடனடியாக வேறு எப்படியும் ஆறுதல் சொல்லமுடியாமல் வீரமணி இதையே சொல்லிக்கொண்டிருந்தான்.

“ஆனந்தம்மா இன்னிக்கும் அதே வச.. எத்தனவாட்டி கேட்டாலும் கொலய அறுத்துப்போடுறமாரியிருக்கு அந்த வார்த்தையெல்லாம்.. திடீர்ன்னு மண்ண தூத்தியடிக்கும்.. காறி துப்பிட்டு போவும்..”

“நீ யெதுக்கு அங்கிட்டு போற திரும்ப திரும்ப.. மொடையா ஒனக்கு போயி வாசாப்ப வாங்கி கெட்டிக்கறதுக்கு..”

ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தவன் நிறுத்தி மீண்டும் ஒரு மிடறு குடிக்க முயன்றான்.. காரத்தில் அடித்தொண்டை இடறி புரைக்கேறியது.. ஆரம்பித்த இருமல் ஓய முழுதாக ஒன்றரை நிமிடம் பிடித்தது.

“பாட்டில குடு யிங்க.. நெனச்சன் இதான்னு.. இந்த பாலக்கட்டைக்கிட்ட நிறுத்த ச்சொல்லும்போதே..”

தினகரன் அமைதியாக இருந்தான்.

“நீயாடா புடிச்சு அவன தள்ளிவுட்ட.. அவன் ஆத்தாக்காரி எதாச்சும் வவுத்தெரிச்சல்ல சொல்ரான்னா.. அதுக்காண்டி நீ யெதுக்கு கெடந்து ச்சொணங்கிட்டிருக்க..”

“இப்டிதான்டா ஒக்காந்திருந்தான் வொல்க்கக்குடிக்கிமவன் அன்னிக்கு..” விட்டேத்தியாக சொன்னான். கை இயலாமையை காற்றில் பிடித்துக்காட்டியது. “சட்டுன்னு அண்ணாத்திவுட்டு அப்புடியே கவுந்துட்டான்..”

வீரமணி சலிப்பாக தலையில் கை வைத்துக்கொண்டான். “அட அது விதின்னு நெனச்சு வுட்டுத்தொலைக்காம.. அன்னிக்கு நீ யென்ன பொத்துனாப்ல வேடிக்கயா பாத்துட்டிருந்த.. சொதாரிக்கறதுக்குள்ள நடந்ததுதான.. வொரு வருசம் ஆச்சு அதுவும்.. ஆமா.. கரெட்டா இந்த கார்த்தியலோட ஒரு வருசம்.. இன்னுந் அதையே புடிச்சி தொங்கிட்டிருந்தா..”

பாட்டிலை வாயருகில் கொண்டுபோன தினகர் நிறுத்தி ஏதோ யோசித்தவாறிருந்தான். பின்வாங்கிக்கொண்டவனுக்கு சில நிமிடங்களுக்கு வார்த்தையே இல்லை.

“மொடா தண்ணி அன்னிக்கு.. புடிச்சிருந்துருக்கணும்..”

“புடுங்கிருப்ப.. அவன் வெயிட்டுக்கு ஒன்னயுஞ் சேத்து இலுத்து கவுத்தூட்ருப்பான்..”

“அந்த வீட்டுக்கு போனாலே என்னமோ.. “ மேற்கொண்டு பேச வரவில்லை. வீரமணிக்கும் சொல்ல எதுவுமில்லை என்பதைப் போல இருவரும் இருட்டுக்குள் பார்வையை வைத்துக்கொண்டார்கள். தினகர் ஒருமுறை குனிந்து கீழே பார்த்தான்.
“தண்ணீ ஓடிருந்தா கூட தப்பிச்சிருப்பான்”

“ம்ம்.. அன்னிக்கே அவஞ் செத்துத்தொலஞ்சிருக்கலாம்.. இப்படி கெடந்து ஓத்திரியப்பட்ருக்க வேணாம்..”

“மண்டகிண்டல அடிபட்டு மூச்சு போயிருந்தா கூட அத்தோட போயிருக்கும்.. காலுசுருந் அரவுசுருமா கெடந்து ஒரு வருசமா.. ரோதனைக்கி மேல ரோதன.. பாக்குறப்பல்லாம் அப்டியே..”

தினகர் எஞ்சிய மதுவைக் குடித்து முடித்திருந்தான். விட்டெறிந்த பாட்டில் தொலைவில் விழுந்து தெறிக்கும் சத்தம் துல்லியமாகக் கேட்டது. மேல்வயிறு திகுதிகுவென எரிந்தது.

“அந்த கல்யாணத்த மட்டும் கெட்டாம இருந்துருந்தான்னா இப்ப.. நெசத்துக்கு சொல்றேன்.. அவஞ் சாவறதுல எந்த தொந்தரவுந் இருக்காது.. அந்த புள்ள பாண்டிதான் பருதாம நிப்பா.. கைப்புள்ளய வேற வெச்சிக்கிட்டு.. நா கடேசியா அங்க போனப்ப நெற மாசம் அவளுக்கு.. பாக்கவே மனசு கொள்ளல..”

வீரமணி சொல்லியதும் தினகர் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஓசையெழ மூச்சை இழுத்துப்பிடித்து, குரலைக் கமறி முடிந்தவரை எட்டி துப்பினான்.. “ச்சின்னாப்பின்னமாயிட்டா..”

“புள்ள இல்லாமலாச்சுந் இருந்துர்க்கலாம்.. அத கெடந்து ச்சொமக்கனுந் இப்ப..”

சிறு குச்சியொன்றைக் கொண்டு, பாலக்கட்டையிலிருந்த வெடிப்பை நிரடியபடி இருந்தவன் கனத்த மெளனத்திற்குள் போய்விட்டான். ஒரு பக்கமாக சப்பலாங்கால் போட்டுக்கொண்டவன் யோசனையிலிருந்து வெளிவறவே நிமிடங்கள் ஆனது.

“இத்தினி மாசமும்.. ச்சும்மால்லாம் இல்ல.. அப்புடி வெச்சு பாத்துக்கிட்டா அவன.. இதுலயே ஒருமாரி கல்லுகணக்கா ஆயிட்டா ஆளு.. பயமவனுக்கு கையுங்காலும் வராதுன்னு டாட்டரு சொன்னப்பயுஞ் சொட்டு தண்ணியில்ல கண்ணுல அவளுக்கு.. ஆனந்தம்மா ஆஸ்பத்திரியே இடிஞ்சு போறமாரி கெடந்து ஒப்பாரி வெக்கிது.. இவ பொட்டுக்காச்சுங்கூட அலுங்கல.. புள்ள பொறந்தப்பயுந் அப்பமூட்டுக்கு போவல.. இவனுக்காண்டி இங்கயே கெடந்து.. அள்ளி கட்டி.. குளிப்பாட்டி.. பொரட்டி போட்டு.. இவனுக்கு பீயள்ளி.. வேற எவளுஞ் செஞ்சிருக்க மாட்டா இதல்லாம்..”

வீரமணி ஆமோதித்துத் தலையசைத்தான், “அவ நேரம்.. இப்புடித்தான் வந்து விடியனும்ன்னு இருந்திருக்கு..”

“ஆத்தாளும்மொவனும் என்னா பாடுபடுத்திருக்கோவோ தெரியுமா அவள.. எந்தவூரு வந்துபாருன்னு.. ச்சய்..”

“தெரியுந்தெரியுந் அந்த கதயெல்லாம்.. சொஸைட்டிக்கி வர்றப்பல்லாம் அவ தர்த்தரியந்தான் இப்டி ஆயிருச்சு ஆனந்தம்மா ஒரே பாடு.. இந்த பய குடிச்சி கவுந்தடிச்சதுக்கு அவள புடிச்சு லம்பாடிக்கிட்டு.. நிறுத்திக்கூட பேசமாட்டென் அந்த பொம்பளைக்கிட்ட.. புள்ளக்காரன் ரொம்ப யோக்கியமசுருன்னு..”

“அதுன்னு மட்டுயில்ல.. வீட்லயுமே.. இந்த பய கூப்டுறதே யேய் தேவ்டியாசிறுக்கின்னுதான் கூப்டுவான்..” ஒவ்வொரு முறையும் தான் அங்கு நிற்கும்போதுதான் அப்படி அழுத்தி விளிக்கிறான் என்று தினகருக்கு தோன்றியிருக்கிறது; வீரமணியிடம் அதைச் சொல்லவில்லை. “கண்ணுபெறத்துல காணவுட மாட்டான் அவள.. பேண்டு வெச்சுட்டு கெளிப்பாம்பாரு.. அவ சுத்தம் பண்ணி பவுடரு போடுற வரைக்கும் வாய் ஓயாது வப்பம்மொவனுக்கு.. கேக்க முடியாது கிட்ட நின்னு.. இவ.. ஒரு வார்த்த பேசணுமே ஏட்டிக்குப்போட்டியா..” உதட்டைப் பிதுக்கி இடவலமாக தலையசைத்தான், “ரெண்டு நா மூணு நா கொட வேற.. நாத்தம் நிக்க முடியாது.. மூஞ்சி சுளிக்காம கலுவி ச்சுத்தம் பண்ணுவா..”

“விட்டுட்டு ஓடிருக்கணும் அவல்லாம் அப்பயே..” வீரமணி அக்கறையுடன்தான் சொன்னான்.

தினகரனுக்கு அந்தக் கூற்றை ஆமோபிப்பதில் என்னவோ தயக்கம். கட்டையிலிருந்த சிமெண்ட் காரையைப் பிடுங்கி வலுவில்லாமல் தண்ணீருக்குள் வீச, நிலவிய நிசப்தத்தில் ‘த்லொப்’ தனித்து ஒலித்தது.

“எப்டியிருப்பா அவ முன்னாடி..” குமுறும் மனது வெடித்து வெளியேறியதைப் போலிருந்தது.

வீரமணி பதிலே சொல்லவில்லை.

“தையக்கடைல வேலைக்கு வந்தப்பல்லாம் தாவணி பாவடைல.. அப்டியே புடிச்சு வெச்ச மாதிரி இருப்பா.. செல கணக்கா.. இப்பம்பாரு..”

“நீயும் அங்கிட்டேதான சுத்திக்கிட்டு கெடப்ப அப்பல்லாம்..” வீரமணியின் குரலில் கேலியெதுவும் இல்லை.

பாண்டிமதியைப் பார்ப்பதற்காகவே தையற்கடை வைத்திருந்த சுப்பையனிடம் சினேகம் பாராட்டிய நாட்கள் அவை. அவளும் பழக்கவழக்கத்தில் இறுக்கமாகவெல்லாம் இருக்கமாட்டாள்; வெகுளிப் பேச்சில் துளியளவும் கிரக்கம் இருக்காது. மிகச் சாதாரணமாக அவள் ‘தெனகரு..’ என விளித்துப் பேசுவது அவனுக்கு அத்தனை இஷ்டம். லட்சணத்திற்கான இறுமாப்பு இல்லாத முகம்; சாணை பிடிக்கப்பட்ட கூர்மையுடன் முட்டைக்கண்கள். சின்ன சீரகத்தை வறுத்து இடித்ததைப் போன்றதொரு அடுப்படி வாசனை அவளிடம். முனுக்கென்றால் சிரித்துவிடுவாள். தினகரும் தமாசு பேச்சில் கெட்டிக்காரன்தான். ஏனோ கேலிப்பேச்சையும் சிரிப்பையும் தாண்டி அது வளரவேயில்லை. ஒரு வருடம்தான் – சவுதிக்கு காண்ட்ராக்ட்டில் போய்விட்டு வருவதற்குள் ஆனந்தின் சம்சாரமாக புடவை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.

“கலியாணத்துக்கப்றம் என்னய பேரு சொல்லியே கூப்ட்டதில்லடா அவ.. மொதவாட்டி அவ வாங்கன்னு சொன்னதே எதோ வெகாரமா.. வா போன்னு பேசுனதெல்லாம் மறந்தே போச்சு.. அதும் அவனுக்கு இப்டி ஆனதுலேந்து மூஞ்சி கொடுத்து கூட எங்கிட்ட ஒரு வார்த்த பேசுறதில்ல..”

“ம்ம்.. அட அதையே ஏன்டா..”

“இல்லடா.. அந்தம்மா பேசுறது கூட பெர்சில்ல.. இவளுமே எதோ நாந்தான் அவன கொண்டாந்து தள்ளிவுட்டு அவ்வோ குடிய கெடுத்த மாதிரி பாக்குறாளோன்னு இருக்கு.. அதான் வேதனையா வருது..”

“நீயாச்சும் ஒருவாட்டி நிறுத்தி பேசித் தொலைக்க வேண்டிதான..”

“எம்முன்னால அவங்கிட்ட வந்து வசவு வாங்க புடிக்கும்போல அவளுக்கு.. செல நாள்ல்லாம் அவ நாம்போறப்ப அந்த ரூம்புக்குள்ளயே வர வேணாமுன்னு எனக்கே இருக்கும்.. இந்த வப்பனோலி வாய்க்கு வந்த வார்த்தயெல்லாம் போட்டு திட்டுவான்.. கையிக்கீது மட்டும் வெளங்கிருந்தா அவள அடிச்சே கொன்னுபோட்ருப்பான்..”

“மண்ட கலண்டுவோச்சு அந்த பயலுக்கு..”

“அவளுக்கு தேம்பிக்கிட்டு வரும் வார்த்த.. அடக்கி முலுங்கிக்கிட்டு நிப்பா.. என்னாலயுந் அவன எதுங் கேக்க முடியாது.. மலுங்க மலுங்க நின்னு என்னய பாப்பா..”

“நீ அங்கிட்டு அப்பப்ப போயிட்டு வர்றது சப்போட்டா நெனப்பா போல..”

கையைக் கட்டிக்கொண்டு சற்றுநேரம் எதுவும் பேசாமல் இருந்தவன் காலைத் திருப்பி இந்தப் பக்கம் போட்டுக்கொண்டு சொன்னான், “எனக்குந் அப்டித்தான் தோனிருக்கு.. அவ சைடு ஆளா என்னய பாக்குறான்னு அப்பப்ப தோணும்.. ஆனா மொகங்கொடுத்தே பேச முடியமாட்டங்கிது..”

“நீயா எதாச்சும் போட்டு ரோசிச்சிட்டு இருக்காத.. கலுந்தெரிச்சு வா.. போவோம்.. ராவா குடிச்சது வேற காந்தித் தொலயும்.. ரெண்டு சோத்த போயி தின்னு.. கலுந்தெரி..”

“அவனுக்கு சூத்தாமட்டைக்கு மேல.. இத்தத்தண்டிக்கு குழிவிட்டு கெடக்கு புண்ணு.. படுக்கைலயே கெடந்து கெடந்து.. ரெண்டு மாசமா அந்த ரூம்புக்குள்ளயே போவ முடியல.. அந்தாவொரு நாத்தம்..”

“கொடுமய்யா இதெல்லாம்.. வெசத்தகீது ஊத்தியூட்டு முடிச்சுவிட்றலாம் இதுக்கு.. கெடந்து யிப்பிடி அலுவி ச்சாவறதுக்கு..”

“நெதைக்கும் அவன பொரட்டி போட்டு அத ச்சுத்தம் பண்ணியுடனும்.. நாம்போறப்ப அப்பப்ப நின்னு பொரட்டியுடுவேன்.. அவளுமா நிப்பா கூட.. கை ஒதறுந் அவளுக்கு.. வய்த்தெறிச்சலா இருக்கும் பாக்கவே..”

“அவ எடத்துலேந்து பார்ரா இத.. வயசு என்ன இருக்கும் அவளுக்கு.. இருவத்தி அஞ்சு இருக்குமா.. புருசன் அப்பைக்கு மொடமா கெடந்தா.. இன்னமும் யெப்புடி அவ அந்த வீட்டுல இருக்காங்கறதே வீரனாருக்குத்தான் வெளிச்சம்..”

“ச்செத்து தொலஞ்சான்னா அவ கெதியென்னன்னுதான் ரோசிக்கவே முடியல..”

“புரியாம இல்லயிவனே.. அதது இப்புடித்தான் நடக்கனும் இருக்கு யெளவு.. இப்பயென்ன ரொம்ப சீரீஸா இருக்கா அந்த பயலுக்கு..”

“மூச்சே செரியில்ல.. ரெண்டு நாளா.. டாட்டர கூட்டியாந்து காமிச்சதுக்கு பெட்ல ச்சேக்க சொல்லிருக்காரு.. இதுக ஒன்னும் அசயறாப்ல இல்ல..”

“முடிவு பண்ணிருச்சுதுங்களா இருக்கும்.. போதும்ன்னு.. அதாஞ்சரி.. போய் ச்சேரட்டும்.. கெடந்து ஓத்திரியப்படுறதுக்கு..”

“ஆனந்தம்மா எப்பயோ இந்த முடிவுக்கு வந்துருச்சு.. சின்னப் பய கல்யாணத்துக்கு சாதகம் பாக்கற சோலிதான் யிப்ப அதுக்கு.. இவஞ் செத்ததும் பாண்டிய அண்டவுடாது இங்கிட்டு..” – பெருமூச்சு – “அவ பொறப்ப பாரு..”

“நல்லா இலுத்துக்கட்டி குடும்பம்பண்ணியிருப்பா.. இந்த பய மட்டும் ஒலுங்கா இருந்திருந்தான்னா.. கெட்டிக்காரிமவ..”

“அவளுக்கு ஆனா இவஞ் செத்துறக்கூடாதுன்னு இருக்கு போலிருக்கு.. இன்னிக்கு டாட்டரு வந்து சொல்லிட்டு போனதும் வெதுக்கு வெதுக்குன்னு கெடந்து முலிக்கிறா.. நா வீட்டவுட்டு கெளம்பும்போதுந் வாச வரைக்கும் வந்து நின்னா.. யிப்படில்லாம் வந்ததில்ல முந்தில்லாம்.. என்னன்னு கேட்டுத்தொலய வாமசுருந் வரமாட்டங்குது எனக்கு..”

“ச்செத்தான்னா பாஞ்சு நா பாடு.. அத்தோட தலைய முலுவிட்டு வுட்றலாம்.. கெடந்து லோல்படனுங்குறாளா? கூறுகெட்டவ..”

“அட அவ பாவண்டா நீ வேற.. அப்பமூட்டுக்கு புள்ளய தூக்கிட்டு போயி நிக்கமுடியாதுனுட்டு நெனைக்கிறா போல.. அதுவொரு கேவலப்பட்ட குடும்போந்..” நிறுத்தியவன் முணுமுணுப்பாகச் சொன்னான், “நாதியில்லாம போயிர போறா.”

“தீவன இதல்லாம்.. ரெண்டு வருசந்தான் பாரு.. பூரா மாறிப்போச்சு லைபே அவளுக்கு.. கவுத்துப்போட்டமாரி.. செறு வயசு.. ஆரம்பிக்கறதுக்குள்ளயே ஆட்டம் முடிஞ்சாப்ல போயிருச்சு..”

தினகரன் கைப்பேசியில் ஆனந்தனின் வாட்சப் முகப்புப்படத்தைப் பெரிதாக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான் – மணக்கோலத்திலிருக்கும் ஆனந்தனும் பாண்டிமதியும் – வீரமணியிடம் அந்தப் புகைப்படத்தை நீட்டினான்.

“இப்பயுந் இப்டியேதான் இருக்கா.. முருகேசு அப்பா ச்செத்த அன்னிக்கு பாத்தேன் கடேசியா.. புள்ளபெத்தவமாரியா இருக்கா.. பாவம்..”

தினகரன் கைப்பேசியை வாங்கி சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு இலக்கற்று எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தான். வீரமணி பாலக்கட்டையிலிருந்து எழுந்துகொண்டு புட்டத்தில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டபடி சொன்னான். “சோத்துல தண்ணியூத்திற போறோவொ வீட்ல.. வா ஒக்காரு.. கெளம்புவோம்..” சாய்மானத்திலிருந்த சைக்கிளை எடுக்கப் போனான்.

“அவளுக்கு அவன வெச்சு வைத்தியம் பாக்கனும்ன்னுட்டு இருக்கு போல.. அதாஞ் சொல்ல முடியாம நின்னுருக்கா..” யூகிப்பதைப் போல சொன்னான்.

“இலேய்.. கெளம்பு மொதல்ல.. இல்லேன்னா நீயே அத்து கட்டி கூட்டியாந்து ஒங்கூட வெச்சுக்கோ அவள.. வெச்சு வாழ்க்க குடு அவளுக்கு.. கெளம்புடான்னா ஒக்காந்து பொலம்பிக்கிட்டு இருக்கான்..”

தினகரன் மெல்ல எழுந்து வந்தான். “போலாம் வா”

தெருவிளக்கு இருக்கும் வீதிக்குள் சைக்கிள் நுழைந்தது. “நீ திரும்ப சவுதிக்கு போற காரியத்த பாரு.. அப்பயே போயிருக்க வேண்டிது நீயுந்.. இதுலயே மைண்ட போட்டு உருட்டிக்கிட்டு.. இந்தா ஒரு வருசம் ஓடிருச்சு..”

வீரமணி சொல்லிவரும் எதுவுமே தினகரனுக்கு செவி சேரவில்லை. தடுமாறிக்கொண்டிருந்த பாண்டிமதியின் முகம்தான் கண்ணுக்குள் குறுக்கும்நெடுக்குமாக ஊசலாடியது.

“கிட்டயிருந்து பாத்துக்கிட்டே இருந்தா எதுவுமே நகராதமாரிதான் யிருக்கும்.. ரெண்டு வருசம் எங்கிட்டாவது போயிட்டு வா.. அதது ஒரு சைசுக்கு வந்துரும் அதுக்குள்ள.. வெளிய வா மொதல்ல அந்தவூட்டு சேதிலேந்து..”

“ம்ம்..”

“ஊரெல்லாம் முந்திமாரியில்ல.. அத்துட்டு கெட்றதெல்லாம் பெரிய விசயமில்லன்னு ஆயிட்டு இப்ப.. சுப்பையண்ணன் மவளுக்கு பாத்தேயில்ல.. ரெண்டு புள்ளய வெச்சிக்கிட்டிருந்தவ.. கெட்டி வெச்சிட்டாய்ங்க யிப்ப.. பாண்டிக்குங் கூட அப்புடி என்னமாச்சும் தெவஞ்சுரும்.. நாளாச்சுன்னா அதெல்லாம் அப்டிஅப்டியே செட்டில் ஆயிக்கும்.”

“ம்ம்..”

“ஆளு இன்னுங் கிளிமாரிதான இருக்கா.. அதெல்லாம் எவனாச்சும் ஆப்ட்டுப்பானுக..”

தினகருக்கு உடனடியாக இந்தப் பேச்சு கசப்பு தட்டியது.

“வேற பேசு”

வீரமணி நிறுத்தவில்லை, “முந்திலாம் தையக்கடைல வேல பாக்கும்போது என்னிக்காச்சும் தாவணிக்கு பின்னடிக்காம வருவா.. வெலாவுக்கு கீழ ஒரு வெரக்கட அளவுக்கு மச்சொந் ஒன்னு இருக்கும் அவளுக்கு.. அத்தினி அம்சமா இடுப்புக்கு மேல..”

சைக்கிளிலிருந்து குதித்திறங்கிய தினகர் எட்டி பின் ரோதையில் மிதித்தான். சைக்கிளோடு வீரமணி சரிந்துவிழ இவன் வீட்டை நோக்கி இருட்டுக்குள் நடக்க ஆரம்பித்தான். ஆங்காரமாக அடிவைத்து நடப்பதில் வயிறு எரிச்சலும் குலுங்கலுமாகக் குமட்டிக்கொண்டு வந்தது. போகும் வழி நெடுக்க பாண்டிமதியைத் தவிர எதைப் பற்றியும் யோசிக்கமுடியவில்லை. அடுத்த நாள் காலை எழுந்ததும் நேரே அந்த வீட்டிற்கு போய், அவள் விரும்பினால் ஆனந்தனைக் கொண்டுபோய் ஆஸ்ப்பத்திரியில் சேர்த்துவிட வேண்டும் என்று தோன்றியபடி இருந்தது. சுமக்க அவசியமற்ற பாவத்திற்கு இன்னொரு பிராயச்சித்தமாக இருந்துவிட்டுப் போகட்டும். சேர்த்த கையோடு, ஊரைவிட்டு புறப்பட்டுவிட்டால் கூட சற்று நிம்மதி மிஞ்சும் என்று பட்டது. கண்ணயரும்வரை வேறு எதைப் பற்றியும் யோசிக்க முடியவில்லை. நீண்ட நாளுக்கு பிறகான குடியென்பதால் குப்பென்ற லாகிரி; எளிதில் உறக்கம் கூடிவிட்டது.

காலை எழுந்ததும் கைப்பேசி உயிரற்றிருப்பதைப் பார்த்தான். ச்சார்ஜ் போட்டு பார்த்தபோது பின்னிரவு இரண்டு மணியிலிருந்து அடுத்த அரை மணி நேரத்திற்குள் பதினான்கு அழைப்புகள் ஆனந்தனின் எண்ணிலிருந்து வந்திருந்தன. எத்தனை மோசமான உறக்கம். நிச்சயம் பாண்டிமதிதான் அழைத்திருக்கவேண்டும். ஓராண்டாக அந்த எண்ணிலிருந்து அழைப்பெதுவும் வந்ததில்லை. கூடவே வாட்சப்பில் ஒலிக்குறிப்பொன்றும் வந்திருந்தது; அவளேதான் – சேதியென எதுவுமில்லை; வெறும் அழுகுரல். விஷயம் புரிந்துவிட்டது. நேற்றே கொண்டுபோய் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வந்திருக்கலாம். அவளது உடைவை அனுமதித்திருக்கவேண்டும் – கடைசியாக ஒரு முறை அவனை மருத்துவமனையில் சேர்த்து முயன்ற திருப்தியாவது அவளுக்கு எஞ்சியிருக்கும். ‘ஆஸ்ப்பத்திரி ச்சாவு’ என்பதொரு மனமருந்து. நிச்சயம் அவளுக்காக மட்டுமேனும் அதைச் செய்திருக்கவேண்டும். வாயெடுத்துச் சொல்ல தவித்துக்கொண்டிருந்த கண்கள் நினைவில் வந்து நோகடித்தன. ‘எப்படி போயி யிப்ப அவ மூஞ்சில முலிக்கறது?’

குவளை நீரெடுத்து கொப்பளித்து துப்பிவிட்டு சட்டையை எடுத்து போட்டுக்கொண்டான். தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தபோதே தூரத்தில் பறையடிப்பது கேட்க ஆரம்பித்தது. இரு தொடைகளுக்கு நடுவே வேஷ்டியை சிறு கொத்தாக ஒரு கையில் பற்றித் தூக்கிக்கொண்டு, மறு கையை வீசி வேகமாக நடந்தான். முச்சந்தி வளைவுக்குள் திரும்பியபோது இனம்புரியாத குற்றவுணர்ச்சி பிடுங்கித் தின்றது. பாலக்கட்டையில் ஆனந்தனுடன் உட்கார்ந்து குடித்த இரவு கண் முன்னே வந்துபோனது. எங்கிருந்தோ ஆனந்தம்மாவின் ஒப்பாரி மட்டும் தனித்துவந்து காதடைத்தது. சட்டென நடை தளர, திரும்பிப் போய்விடலாமா என ஒரு கணம் யோசித்தான் – இனி ஊருக்கே வராமால் எங்காவது ஓடிவிடலாமா?

கட்டப்பட்டுக்கொண்டிருந்த பந்தலுக்குள் நுழைந்தபோது முன்வரிசை பிளாஸ்டிக் நாற்காலியில் வீரமணி உட்கார்ந்திருந்தான். தலையைத் தொங்கவிட்டிருந்தான் – நிச்சயமாக இவன் வருவதை உணர்ந்திருக்கவேண்டும். பறை ஓய்ச்சலின் உடனடி மெளனம் அச்சமளிப்பதாக இருந்தது. காத்திருந்த நாளெனினும் நடுக்கம் இல்லாமலில்லை. முன்னேறி உள்ளே போகவேண்டாமென எதிர்விசை இழுத்துப் பிடிப்பதைப்போலிருந்தது. கூட்டத்திற்கு நடுவே உறுத்தலாக எதுவோ தெரிய, படுதாவில் சிதறியிருந்த சனத்தைத் தாண்டி பார்வையை உள்ளே குவித்தான். அனிச்சையாக கால்கள் முன்னேறின. அருகே போகும்போதுதான் துலக்கமாக அதைப் பார்க்கமுடிந்தது – மஞ்சள் புடவையிலிருந்த பாண்டிமதியை பெஞ்சிலிருந்து ஐஸ்பெட்டிக்கு மாற்றினார்கள். அவளது கால் பெருவிரல்கள் இணைத்துக் கட்டப்பட்டிருந்தன. சீலைத் துணியின் முடிச்சு அவிழ்க்கப்படாமல் வெட்டப்பட்ட புளியமரத்துக் கிளை வெளிச்சுவற்றின் பக்கவாட்டில் கிடந்தது. “தெனகரு.. தெனகரு..” என்ற அந்த ஒலிக்குறிப்பின் விசும்பலுக்கு இடையிலான கிசுகிசுப்பான வார்த்தைகள் மீண்டும் காதுக்குள் ஒலித்து அடங்கின. நிலைவாசல் திண்டில் இடிந்துபோய் உட்கார்ந்தவனுக்கு உள்ளறையிலிருந்து வரும் பீநாற்றம் மூக்கை அடைத்தது.

முற்றும்.

***

-மயிலன் ஜி சின்னப்பன்

 

 

 

 

 

 

 

Please follow and like us:

1 thought on “ஸ்படிகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *