கண்களை பத்துநிமிடத்திற்கு மேல் மூடிக்கொண்டிருக்க முடியவில்லை. எண்ணங்கள் அணுத்துகள்கள் என ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறுகின்றன. கண்களைத் திறந்தவுடன் ஏற்படும் ஆறுதல் சிறுதுநேரத்தில் நெடுஞ்சாலைகளில் வரிசையாக வரும் வாகனம் போன்ற எண்ணங்களால் கலைந்துவிடுகின்றது. தான் அந்த நெடுஞ்சாலையைக் கடக்க நினைப்பவள் போல தொடர் அர்த்தமற்ற எண்ண வரிசையை வெறித்துப்பார்த்துகொண்டிருந்தாள்.
எழுந்து மொபைலை எடுத்து செயலிக்குள் சென்று அவர்கள் உரையாடல்களை படிக்க ஆரம்பித்தாள். தன் முகங்களாகவும் அவன் முகங்களாகவும் மாறிப்போன இளிப்பான்களை பார்த்துகொண்டு செல்வது காலவெளியில் நிரந்தரமாக சிக்கிக்கொண்டதுபோல் இருந்தது. தான் பேசின சொற்களை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டு, அதே இடத்தில் அதே நிமிடத்தில் உறைந்துவிட்டது போல.

நாளைக்கு அணிய வேண்டிய உடைகளை நான்கு முறை சரிசெய்து அடுக்கிவைத்துவிட்டாள். இருமுறை துப்பட்டாவை மாற்றி அது தேவைதானா என சந்தேகித்து அதை அணிந்தால் நன்றாக இருக்குமா என்று நினைத்து உள்ளே எடுத்துவைத்துவிட்டாள். அறைக்குள் இவள் செய்துகொண்டிருக்கும் செயல்களை யாரோ உற்று நோக்கிக்கொண்டிருப்பது போல் இருந்தது. சுற்றி அறையை பார்த்தாள். வெளியே கார்கள் வழுக்கிச்செல்லும் ஒலிதான் கேட்டது. மீண்டும் பார்வையை உணரவே மொபைல் போனை இழுப்பறையில் போட்டு உள்ளே வைத்தாள்.
இப்போது பரவாயில்லை என்பது போல் இருந்தது. எழுந்து டாய்லட் சென்று முகம் கழுவி மெத்தையில் படுத்துக்கொண்டாள். எப்போதும் கைகள் என ஏந்திக்கொள்ளும் மெத்தை தரைபோல் மட்டமாக இருந்தது. கால்களை நேராக ஆக்கி கைகளை உடலுடன் இணைத்து, முகம் மேற்கூரையை நோக்க எண்ணங்களை கவனியாது தூங்க முயற்சி செய்தாள். உடல் நேராக இருக்கும்போது எண்ணங்களும் நேராவது போல் அவள் உணர்வதுண்டு.

தடுக்கி கிழே விழுவது போல் உடல் அதிர திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். கண்களின் நீர் அலையோய்ந்து மனம் விழிப்படைந்தது. கனவில் தொடர்பற்ற ஏதேதோ காட்சிகள் சென்று பால்கனிப் படிக்கட்டுகளில் தவறி விழும்போது முழிப்பு வந்தது. கண்கள் தெளிந்து மூளைக்கு காற்று சென்றது. மணியை மட்டும் பார்க்கக்கூடாது என்ற எண்ணம் அவள் மனதில் புன்னகையை வரவழைத்தது. மணி ஒன்னறையாகி இருந்தது. அவள் ஒருமணிக்கு படுத்தாள். அவளுக்கு இரவுகள் நீண்டு செல்வது புதிதில்லை. வேலைகளிலும் கொண்டாட்டங்களிலும் வாசிப்பிலும் முழு இரவையும் செலவழித்தவள் அவள். இரவு அவளுக்கு மிகவும் பிடித்தமானது. அதில் படகைப் போல மிதப்பதாக நினைத்துக்கொள்வாள். அப்போது அவளுக்கு தேவதேவன் கவிதை ஞாபகம் வரும். இப்போது மனுஷ்யபுத்திரன் கவிதைகள்தான் மிக நெருக்கமானவைகளாக தோன்றுகிறது. தனிமையை போர்வை போன்று போர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கும் கவிஞன். பண்டிகைகளில், கொண்டாட்டங்களில், மனிதத்திரள் முன் தன்னை மட்டும் உணரும் ஒருவன், அங்கெல்லாம் கைவிடப்பட்டு அழுதுகொண்டிருக்கும் ஒருவன்.
இப்போது எடுத்து வாசிக்கலாமா என்று தோன்றியது. ஆனால் சொற்கள் உள்ளே செல்லும் என்று தோன்றவில்லை. அவர் அவருடைய இடத்தில் இருக்கட்டும் நான் அவர் கவிதைகளுடன் இருந்துகொள்கிறேன் என்று நினைத்துக்கொண்டாள். இதுவும் அவர் கவிதைகளின் வரியைப் போல இருப்பதாக நினைத்துக்கொண்டாள். அந்த நினைப்பு மெல்லிய சிரிப்பை வரவழைத்தது அவளுக்கு. அச்சிரிப்பு உடலில் இனிமையை செலுத்தியது. கைகளிலும் கால்களிலும் தாளம் ஏறியது. இசைக்காமலேயே இசையில் திளைக்கமுடிந்தது. எழுந்து கட்டிலைச் சுற்றி துப்பட்டாவை போட்டாள். அது மேகம் தரையில் இறங்குவதுபோல் அசைந்து மிதந்து பறந்து கட்டிலில் படிந்தது.

இசைவெளியில் நழுவி விழுந்ததுபோல் நடனம் எழுந்து வந்தது. பள்ளி நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பாள். மால்களில் கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையை கல்லூரி நாட்களில் செய்துவந்திருந்தாள். தலைக்குள் டரம்ஸின் ஒலி அதிர ஆரம்பித்தது. தலையணைகளை சுற்றி விசிறியெறிந்தாள். கால்கள் நீர்மேல் நடப்பதுபோல தரையில் படாமல் மெல்ல எழுந்தெழுந்து பறந்து ஆடின. பழங்குடி மக்களின் சடங்குகளில் ஆடும் நடனம் போல் சுழன்று சுற்றி ஆடினாள். காற்றில் இறகசைவதுபோல் அவள் உடல் மிதந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது, காதில் வெளியொலிகள் கேட்காமல் அகவெளியில் மனம் எம்பிக்கொண்டிருந்தது.
ஆடியாடி அவள் உடல் களைப்படைய ஆரம்பித்தது. அதை மனம் அறிந்த கணம் உடல் முழுக்க அதைச்செலுத்தி எடைகொண்டவளாக அவளை ஆக்கியது. உடல் தளர்ந்து அப்படியே முகம் மெத்தையின் மேல் அறைய விழுந்தாள். உடல் வியர்வை வழிய அது நறுமணமாக நாசியில் ஏறியது. உடல் தளர்ந்திருந்தாலும் மனம் துள்ளலோடு இருந்தது. ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. சாப்பிடுவதை நினைத்தவுடன் தண்ணீரின் நினைவு மோகம் போல் உடலுக்குள்ளிருந்து மேலெழுந்து வந்தது. ஆனால் எழுந்துகொள்வதற்கு மனமில்லா குழந்தை போல் அடம்பிடித்தது உடல். மழையின்றி வானை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலமென விடாய் அதிகரித்தது. முழுவிசையாலும் உடலை உந்தி எழுந்து கிச்சனுக்குச் சென்று நீர் அருந்தினாள்.

குருதிவிடாய் கொண்ட தெய்வம் போல் எவ்வளவு குடித்தும் நீர் போதவில்லை. மூச்சு ஏறியிறங்க குடித்து பின் மூச்சுவாங்க மீண்டும் பானையிலிருந்து மொண்டு குடித்தாள். இப்போது மழைபெய்து முடித்த வானம் போல் உடல் அமைதியாக இருந்தது. கண்களைத் திறக்காமலே அவளுடைய அறையை நோக்கி சென்றாள். நேராகச் சென்று கதவ தாழ்ப்பாள் போட்டு கட்டிலில் நீருக்குள் விழும் மழைத்துளியாக விழுந்து கரைந்து போய்விட நினைத்தாள். உடல் மெத்தையில் அழுந்த மனமும் அதில் அழுந்திப்பொருத்திக்கொண்டது. அடியாழங்களில் விழுந்துகொண்டே இருப்பது போல் இருந்தது. கண்களை மூடிக்கொள்வதற்கு இத்தனை சுகமாக இருக்கும் என்று அவள் நினைத்துப் பார்க்கவேயில்லை. இனிய கனவுகளைக் காண மனம் ஏங்கியது, அல்லது கனவற்றவெளியில் சென்று விழவேண்டும். கால்களை அகட்டி போர்வையை போர்த்திக்கொண்டாள். ஏசியை ஆன் செய்தாள். இவ்வளவு நேரம் ஏசி இல்லாமலேயா இருந்தோம் என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள். ஏசியின் குளிர் ஊதுபத்தியின் நறுமணமாக அறைக்குள் பரவியது. குளிர் உடலில் ஏற மெத்தைக்குள் தன்னை மேலும் சுருட்டிப் புதைத்துக்கொண்டாள். கைகள் நழுவி நீர் வழிவதுபோல் அவள் பெண்சுழிக்குள் சென்று பொருந்தியது.

பச்சைப்புல் பரப்பில் மழைத்துளிகளை மிதித்துக்கொண்டு கால்களில் ஈரம் கிச்சுகிச்சு மூட்ட நடந்து சென்றுகொண்டிருந்தாள். முதல் மழை கொட்டி வானம் இரண்டாம் மழைக்கு, பள்ளியைவிட்டு செல்லத்துடிக்கும் சிறுவன் போல் ஆவலாகக் காத்திருந்தது. அவள் மட்டும் தனியே இருந்தாள், அங்கே ஏன் தனியாக இருக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுந்தது. பின் அகம் நான் தனியாக இருக்கிறேன் என்று சொல்லியது. நான் தனியாக இருக்கிறேன் என்று வானத்தைப் பார்த்து கத்தினாள், அது அவளைப்பார்த்து ஆம் தனியாக இருக்கிறாய் என்று கத்தியது. அவள் சிரித்துக்கொண்டு காலை ஆட்டியாட்டி வேகமாக ஓட ஆரம்பித்தாள். மலைவிளிம்புக்குச் சென்று ஓவென்று கத்தி மீண்டும் அவள் இருந்த இடத்திற்கே ஓடிவந்தாள். உடல் இன்னும் சற்று நேரத்தில் இனிமையால் வெடித்துவிடும் என்று தோன்றியது. அது இன்னும் இனிமையான பயமாக உடல்முழுக்க சென்று சிலிர்க்கவைத்தது.

மூச்சை உள்ளே வேகமாக இழுத்துவிட்டாள். பின் ஏன் இவ்வளவு வேகமாக மூச்சை இழுக்கிறோம் என்று நிதானமாக இழுத்துவிட்டாள். பச்சைப்புல் பரப்பு மனிதர்கள் வரிசையாக குனிந்து அமர்ந்திருப்பது போல் ஏறியேறிச் சென்றுகொண்டிருந்தது. காற்று அவளைத் தழுவி அம்முதுகுப் பரப்பில் அன்னையின் கனிவான கையென தடவிச்சென்றது. அந்தக் கற்பனை உற்சாகத்தை அளித்தது. ‘ஓ’ என்று கத்தினாள். வானம் அவளைப்பார்த்து கத்தத்தொடங்கியது. கிட்டாரின் மெல்லிய அதிர்வாக உடல் அதிர அவளுக்கு முழிப்பு வந்தது. கண்கள் மங்கலாகத் தெரிய யாரையோ தேடுவது போல் அறையை சுற்றிப் பார்த்தாள். கைகளில் பிசுபிசுப்பை உணர்ந்து அதை முகர்ந்து பார்த்து சிரித்துக் கொண்டாள்.

நிறைய நேரம் தூங்கியது போல் இருந்தது மனம். இனிய சோர்வில் ஆழ்ந்திருந்தது. சோம்பல் முறித்து மணியை பார்த்தாள். மணி ஐந்தாகி இருந்தது. அவளுக்கு நீண்ட நேரம் எதையோ மறந்திருப்பது போல் மனம் ஏங்கியவாறு இருந்தது. வெளியே யாரோ குப்பைகொட்டும் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. “அம்மா எழும் நேரம், சிறிது நேரம் கழித்து மொட்டைமாடிக்குச் செல்லலாம்” என்று நினைத்தாள். சிறிது நேரம்தான் தூங்கியிருப்பாள். ஆனால் அதுவே போதுமானதாக இருந்தது. மெத்தையிலேயே படுத்துக்கொண்டிருப்பது என்னவோபோல் இருந்தது. வேலைக்கு விடுப்பு எடுத்தாகிவிட்டது, இரவே கிளம்பிவிட்டதாக தகவல் அனுப்பினான். ஆனால் மதியம் ஆகிவிடும் சந்திப்பதற்கு என்று சொல்லியிருந்தான். அதுவரை என்ன செய்வது? மீண்டும் தூங்கிவிடலாம். ஆனால் அது முடியாதென்றும் உடனே தோன்றியது. இப்போது வண்டியை எடுத்துக்கொண்டு கடற்கரைவரை சென்று வந்தால் என்ன என்று நினைத்தாள். வேண்டாம். அப்படியெல்லம் எங்கும் செல்லமுடியும் என்று தோன்றவில்லை.
இது வெறும் சந்திப்புதானே? இன்னும் அவர்கள் உறவு அத்தனை பலமானதாக ஆகவில்லையே! சிறிதுகாலம், வெறும் ஒன்றரை மாத உறவு… செயலியில் பேசிக்கொண்டிருக்கிறோம். இதில் என்ன ரகசியம், மயக்கம் இத்தனை உற்சாகம்! ஆனால் இவைகளை அவள் நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவளுடைய மனம் இசையரங்கில் பொருத்தப்பட்ட பியானோபோல் அதிர்ந்து துள்ளிக்கொண்டிருக்கிறது. “மனம் சந்தோஷமடைய ஏங்கிக்கொண்டிருந்ததோ! அத்தனை தனிமையாகவா இருந்தேன் நான்? இப்போது எனக்கு ஏதாவது துக்கம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் மனம் பொங்கிப் பொங்கி வெடித்து விடும். ஏன் மனிதன் இத்தனை துக்கத்தை தக்கவைத்துக்கொள்கிறான்? அவனால் அதை தூக்கிச் சுமந்தால் மட்டுமே, துக்கம் தங்கியிருக்கும், படகு நீர்ப்பெருக்கில் அடித்துச் செல்லாமல் இருக்கும் பொருட்டு படகை கரையில் கட்டிவைப்பது போல், மனிதன் காலத்துடன் அடித்துச்செல்லாமல் இருக்க தன் துக்கத்தை கற்களில் ஏற்றிவைத்தானோ? கற்கால மனிதன் பெரும்கற்களை அதற்குத்தான் எழுப்பிவைத்தானோ? பின் வரும் தலைமுறைக்கு அத்துக்கத்தை அவர்கள் கூறும் கதைகளில் வழியாக ஏற்றிவிட்டு தான் கரைந்து விடுகிறான். என்னால் உண்மையில் இந்த இனிமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை, மயிர்த்துளைகள் வழியாக ரத்தம் வந்து இறந்துவிடுவேன்”.

இரவிலிருந்து எந்தச் செய்தியையும் படிக்கவில்லை என்று நினைவுக்கு வந்தது. “அது அப்படியே இருக்கட்டும், ஜின்னை விளக்குள் அடைத்துவிட்ட நிம்மதி ஏற்படுகிறது”.
மொபைல் இழுப்பறைக்குள் இருப்பது அவளுக்கு தானும் சிறைக்குள் இருக்கும் உணர்வை தந்தது. அங்கே அவள் பிறிதொருத்தியாக இருந்தாள். தன் எல்லையை தானே கடக்கும் கடலலை போல் தான் கடந்து செல்வதை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கே தான் ஒருபோதும் வெளியில் சொல்லாத சொற்களை சொன்னாள். தன்னைத் தானே கண்ணாடியில் சரிசெய்து கொள்வது போல ஒவ்வொரு சொற்களுக்கும் தன்னை அழகுபடுத்திக்கொண்டு சென்றுகொண்டிருந்தாள். தனக்குள் அப்படியொருத்தி இருக்கிறாள் என்று அவள் எண்ணியிருக்கவில்லை. அவள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவள் என்றும் நினைத்திருக்கவில்லை.

அவள் வெளிவருவதற்கான வெளி இதுவரை அவளுக்கு அமையவில்லையோ? தன் நிறுவனத்திற்காக வாடிக்கையாளர்களிடம் பேசும்போது மிகத்தேர்ந்த விற்பனையாளராக அவள் தன்னை உணர்வாள். அவர்களுடன் சிரிக்கும்போதும் நகைச்சுவைகளை பகிர்ந்துகொள்ளும் போதும் எந்தவித அசெளகரியத்தையோ உணர்வையோ வெளிப்படுத்திக்கொள்பவள் அல்ல. மேல் தோலில் ஊசிபோடுவது போல் அவை அவளை பாதிக்கவில்லை. அங்கே சிரிக்கும் சிரிப்புக்கு எந்தவித அர்த்தமும் இல்லை. மணல்வெளிக் குப்பைகள் அவை அவளுக்கு.
இவன் அனுப்பும் செய்திகள் அவளை பட்டாசுகளாக வெடிக்கவைக்கின்றன. இளிப்பான்களில் தன்னை அனுப்பிவைத்துவிட்டு மிச்சப் புன்னகையாக மேற்கூரையை பார்த்துக்கொண்டிருப்பது அவளை இருளில் ஒளிரும் மின்மினிப்பூச்சியாக்கியது. அதை மேலும் அழகாக்க ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து வடிவமைக்கத்தொடங்கினாள், தான் வடிவமைத்த ஆடையை கடைசி நிமிடம்வரை சீர்செய்துகொண்டிருக்கும் ஓர் ஆடைவடிவமைப்பாளர் செய்வது போல். அவனுடன் காமத்தைப் பேசிய தருணங்களில் மொட்டைமாடியில் பெரும் கட்டிடங்களின் நிழல் மறைவில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பாள். தன் அழகை அவன் எப்போது பேச வேண்டும் என்பதை அவள்தான் முடிவுசெய்வாள்.

அவர்கள் உரையாடல் வெகு சீக்கிரத்தில் ஒத்திசைவை அடைந்தது. அவன் அவளை சிரிக்கவைத்தான். நாணி முகம் சிவக்க கோபம்கொள்ளச் செய்தான். தன்னை கடும் கோபம் கொண்டவளாகவும் தன்னிடம் ஜாக்கிரதையாகத்தான் பேச வேண்டும் என்பது போலவும் நடந்துகொண்டாள். காதல் பேசி வளைத்து முத்தமிடும் தருணத்தில் விலகிவிடுவாள். அவர்கள் பந்தயக்குதிரை போன்று யார் யாரை செலுத்துகிறார்கள் என்பது தெரியாமல் அதன் விசைகளில் சென்று கொண்டிருந்தார்கள்.

அவன் “இதற்கு முன் யாரையாவது காதலித்திருக்கிறாயா?” என்றான்.
அவள் “ஆம்” என்றாள்.
“எத்தனை பேர்”
“மூன்று”
“அவ்வளவுதானா?”
“நினைவில் இருப்பது அவ்வளவுதான்”
“ஹ ஹ.. என்ன ஆகியது?”
“இறந்துவிட்டனர்”
“அனைவருமா”
“ஆம்”
“எதனால்? ”
“தெரியவில்லையே”
“ஏன்?”
“நான் பார்க்கவில்லையே”
“நான் கூறட்டுமா…”
“கூறுங்கள்”
“…..”
“கூறுங்கள்”
“அவர்கள் பயத்தில் இறந்திருப்பார்கள்”
“என்ன பயம்?”
” உன்னை தவறவிட்டுவிடக்கூடாதே என்ற பயம்”
“…….”
“நான் ஒன்று கூறவா?”
“ம்”
“நானும் ஒரு முறை இறக்க ஆசைப்படுகிறேன்” என்றான்.
அவள் ஒரு கணம் தயங்கினாள். டைப் செய்தாள் “நானும் இறக்க” அழித்தாள், மீண்டும் “உன்” டைப் செய்து அழித்தாள். மனதில் ராக் இசையின் இரைச்சல் கேட்க அழுத்தத்தில், கன்னங்கள் வெட்கத்தால் சிவந்த இளிப்பான்களை அள்ளிவிட்டாள்.

அவர்கள் ஒரு ஆடலில் இருக்கிறார்கள் என்பது சில நாட்களில் தெரிந்தது. அது அவளை பரவசத்தில் ஆழ்த்தியது. அவன் முன் தன்னை ஒவியம் வரைவது போல் வரைய ஆரம்பித்தாள். தான் விரும்பிய வண்ணங்களை சேர்த்தாள். அசடாக, பதற்றங்கொண்டவளாக, அவை முழுமையானவுடன் அதன் மேல் மேலும் வண்ணக்கலவைகளை தீட்டுவாள். வரைய வரைய அவளுக்கு வண்ணங்களின் கலவை பேதம் முடிவில்லாமல் கிட்டியது. ஓவியத்திரையில் வழியும் வண்ணக்கலவையில் முடிவில்லா ஓவியங்களில் ஒரு ஓவியம் மட்டுமே வரையும் சாத்தியத்தை எண்ணி அலுப்புற்றாள்.

அவனைச் சீண்டுவது அவளுக்கு இயல்பாக வந்தது, அதை செய்துவிட்டு நாள் முழுக்க செயலிக்குச் செல்லாமல் இருந்துவிடுவாள். பின் ஏதும் நடக்காதது போல் உரையாடலை அவளே துவங்குவாள். சில நாட்களில் அது மகாபாரதத்தில் சித்திராங்கதனை மூழ்கடித்த மாயத்தடாகம் போல் அவளை இழுத்து மூழ்கடிக்க ஆரம்பித்தது. மொபைலையே வெறித்துப்பார்த்துகொண்டு குறுஞ்செய்திக்காக காத்திருந்தாள். அதன் திரையில் வெளிச்சம் பரவி அது உயிர்கொண்டவுடன் தன்னை காப்பாற்ற வந்த தேவனைக் கண்டது போல் மகிழ்ச்சியடைந்தாள்.

இதன் வழியாக பேசும் நபர் உண்மையாகவே இருக்கிறானா என்று தோன்ற ஆரம்பித்தது அவளுக்கு. வேலைப் பளுவில் அவன் கேட்கும் கேள்விக்கு குறுஞ்செய்தியுடன் இளிப்பான்களை தட்டிவிடுவாள், எந்த உணர்ச்சியுமின்றி. அதனாலேயே அவனும் தனக்கும் அப்படித்தான் அனுப்புகிறானோ என்று சந்தேகம் வந்தது. இளிப்பான்களை பார்க்கும்போது துவேஷம் பொங்கி வந்தது, அதன் இளித்தவாயை மேலும் கிழிக்கவேண்டும் போல் இருந்தது. அதை அனுப்பும் அவன் மேல் குரோதமும் வெறியும் எழுந்து வந்தது. இதெல்லாம் என்ன என்று தோன்றி குளியலறைக்குச் சென்று நீர் குழாயைத் திருகி அதன் முன் அமர்ந்துவிடுவாள்.

எண்ணங்கள் அவள் உடலில் அசைவை உண்டாக்கவில்லை. மேற்கூரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். சிறுநீர் வருவது போல் இருந்தது. எழுந்து சென்று போய் வந்தாள். முகம் கழுவி கண்ணாடியில் முகத்தை பார்த்துக்கொண்டாள். முகம் அப்பழுக்கற்று தெளிவாக இருந்தது. தூக்கம் புத்துணர்ச்சியை அளித்திருந்தது. ஆனால் ஏதோ குறையாக இருப்பது போல் இருந்தது. நீரையள்ளி முகத்தில் தெளித்துக்கொண்டாள். சிறுவயதில் ஏற்பட்ட காயம்… அவள் அதைப் பார்த்து வெகுகாலம் ஆகியிருந்தது. நெற்றியின் இடக்கோடியில் முடிக்குப்பின் மறைவாகத்தான் இருந்தது. மீண்டும் முகத்தில் நீரைத்தெளித்து முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

தொண்டைக்கு தண்ணீர் தேவைப்பட்டது. நீரையள்ளி குடித்துவிட்டு டீ போட்டுக்கொண்டு மாடிக்கு சென்றாள்.

காகங்களின் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. அவளுக்கு காகங்களை பிடிக்கும். அதன் கரிய நிறம் மதியவெயிலில் மினுமினுப்பாகத்தெரியும். காகம் வெயிலுக்கும் பகலுக்கும் உரியது என்று நினைத்தாள். பகலில் பறக்கும் இரவு, காகம். அதன் கரையும் ஒலி வானத்தை எச்சரிக்கைப்படுத்துவது போல் இருப்பதாக நினைத்துக்கொள்வாள், சில சமயம் கெஞ்சுவது போல.

“அவனை ஏன் சந்திக்க வேண்டும்? அதனால் என்ன ஏற்படப்போகிறது. அவன் உன்னை சந்திக்க வருகிறேன் என்று சொன்னவுடன் ஏன் என் மனம் அத்தனை எழுச்சிகொள்கிறது?” மீண்டும் மீண்டும் எழும் கேள்வி இது. அவர்கள் அத்தனை ஆழமாகவா சென்றுவிட்டார்கள்? அவனும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதை அவனது குறுஞ்செய்திகள் மூலமாக பார்த்துக்கொண்டிருந்தாள். ஏக்கம் என்ற சொல் அப்போதுதான் தன் வாழ்வில் பொருள்கொள்வதாக நினைத்தாள். இதுவரையான தன் வாழ்க்கையில் ஒருவித நிறைவோடுதான் இருந்தாள், அல்லது அப்படி இருந்தது போல் இருந்தது.
அவள் ஆண்களை அறிந்தவள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அறியாதவள் என்றும் சொல்லிவிட முடியாது. எதிர்ப்பாலினம் என்பதால் ஒரு ஈர்ப்பும் அவர்கள் மேல் கவனமும் இருந்து வந்தது. தனிப்பட்ட முறையில் அவளை ஈர்த்தவர்கள் பெரும்பாலும் இல்லை. அல்லது இன்னும் அவள் வாழ்வில் வரவில்லை. அவள் கவனித்து பேசிய சிலர் பேசியவுடன் சிதறிவிட்டனர். “பெரும்பாலும் இவனுடன் குறுஞ்செய்தி வழியாகவே பேசிக்கொண்டிருப்பதால் இந்த ஈர்ப்பு இருக்கலாம்.” போனில் பேசிய போதும் அவனே பெரிதும் பேசிக்கொண்டே சென்றான். அவள் அவன் பரவசத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவன் பேசுபொருட்கள் தொய்யும் போது அவள் எடுத்துக்கொடுத்தாள்.

அவளுடைய வேலை பளுதான் அவனுடனான தீவிர ஈர்ப்பை பாதுகாத்தது. அதில் முழுகி வெளிவந்து பார்க்கையில் தூர இருந்து பார்ப்பது போல் தெளிவாகத் தெரிந்தன. அவனிடும் இளிப்பான்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தின, அசந்தர்ப்பமாக அனுப்பும் இளிப்பான்கள் கடும் வெறுப்பை உண்டாக்கின. அதன் சிரித்த முகத்திற்குப் பின் வஞ்சனை கொண்ட முகம் ஒன்று இருப்பது போல, தன்னைப் பார்த்து கேலி செய்து இளிக்கும், இளித்தவாய் முகம்.
டீ நன்றாக இருந்தது. அதன் வாசம் நாசியில் சென்று குட்டி இளைப்பாறுதலை தந்தது. யாரோ வானத்தின் மூலையில் தீமூட்டினார்கள். அது சிவந்து ஆரஞ்சு நிறம் ஆகியது போல் இருந்தது. மேகம் மணல் திட்டுகள் போல குவிந்து, பின் எறும்புத்தின்னியின் முதுகுபோல் செதில் செதிலாக மாறியது. முருங்கை மரத்தில் அணில்கள் ஓடிப்பிடித்தபடி அன்றைய நாளை துவக்கின. “வாழ்க்கை முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் உயிரினங்களில் இதுவும் ஒன்று. அதன் உடலுக்குள் இருக்கின்ற ஒன்று, அதை எப்போதும் பரவசத்தில் ஆழ்த்தி அதை ஓடவைத்துக்கொண்டே இருக்கிறது போலும்”.

அவர்கள் உரையாடாத நாட்கள் சேற்றில் புதையுண்ட நாட்களாக நகர மறுத்தன. எங்கும் அமைதியின்மை ஏற்பட்டு எதிலும் கவனம் கூடாமல் நாட்கள் சிதறிய துண்டுகளாகிப் போயின. அவன் ஒருமுறைதான் அலுவல் காரணமாக வெளியூர் சென்றிருந்தான். அந்நாட்களில் எடைக்கற்களை தலையில் சுமப்பவள் போல ஓரிடத்திலேயே அழுந்தி தேய்ந்துவிட்டிருந்தவளானாள். அவள் மனம் தன்னால் ஆனமட்டும் உடலை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. ஒருவர் மேல் கோபித்துக்கொள்ள அவர் நமக்கு உரிமைதர வேண்டும். அப்போதுதான் நாம் கோபித்துக்கொள்ள முடியும். உரிமை தராதபோது நாம் என்ன செய்துவிட முடியும்? அவன் மேல் உள்ள கோபத்தால் அந்நாட்கள் கருகி வீணாகிப்போனதைத் தவிர வேறு பிரயோசனமில்லை. மொபைலை எடுப்பதும் பின் ஆன்கூட செய்யாமல் மீண்டும் வைப்பதுமாக அர்த்தமற்ற செயல்கள் வழியாக ஒழுகிச்சென்றன அவனுடன் பேசாத நாட்கள்.

இவ்வளவுதான்… இங்கே இதை முடித்துக்கொள்வோம் என்று, தினமும் அவன் பக்கத்திலிருந்து காலை வணக்கம் திரையில் எழுவதுவரை காத்திருப்பாள். காலையில் இளிப்பான்களுடன் அங்கே அது இருக்கையில், ஏமாற்றமே வந்து செல்லும். வராதபோது அவ்வளவுதானா என்று மனம் அரற்றத்தொடங்கி பெருமூச்சுகள் விட்டு மனம் காற்றாக மாறிவிடத் துடித்துக்கொண்டிருக்கும். அவனுடைய பக்கத்திற்குச் சென்று அதை வெறுமனே சுற்றிக்கொண்டிருந்துவிட்டு அங்கே அவனைக் காணாமல் கோபம் தலைக்கேற பல்கிட்டித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவுடன் தான் எளிதாக முயற்சி செய்வாள். அவன் என்னைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான் என்று நினைப்பாள். அழுகை மட்டும் வந்துவிடக்கூடாது என்று மனதை திசைதிருப்பச் செய்யும் வேலைகள் அவனை துல்லியமாக நினைவுபடுத்தும். மனதிற்கு குழந்தையிடம் சொல்லுவது போல அவன் எனக்குரியவன் அல்லன் என்று புரியவைத்த முயற்சிகள், பாலைக்காற்றாக அனல்கொள்ள செய்கின்றன. “அவன் செயலியில் இருந்துகொண்டு என்னுடன் பேசாமல் நான் அவன் ஆன்லைனில் இருப்பதை பார்த்துக்கொண்டிருக்கும் தருணங்கள், உடலே புண்ணாகமாறி அதில் டிஞ்சரைக் கொட்டியது போல் எரிந்துகொண்டிருக்கும். நாம் பிரபஞ்சத்துடன் கடும் வஞ்சம் கொள்ளும் தருணம் இவை”.
ஏதோ தோன்ற “இப்போதே இன்றே இதை முடித்துக்கொள்வோம், இனிமேல் இதுவேண்டாம்” என்று எண்ண ஆரம்பித்த கணம் கைகள் மொபைல் போனை தேடின. அது கிழே இருப்பதால்தான் மனம் இப்படி நடிக்கிறதா என்று அவ்வெண்ணத்தை எதிர்திசையில் சென்று ஆராய்ந்தது அவளுடைய வேறோர் மனம்.

இந்தச் செயலி வாழ்க்கை பொய் என்று தோன்றியது. இளிப்பான்களுக்குப் பின் இருக்கும் முகத்தை யார் அறியமுடியும்? கோபத்தில் இருப்பவர் இடும் இளிப்பான் என்னவாக இருந்தாலும் அது அவரை காட்டப் போவதில்லை. இளிப்பான்களால் கட்டி எழுப்பப்படும் வாழ்க்கையால் ஆனது இது, அதை நினைக்க அவளுக்கு வாய் குமட்டிக்கொண்டுவந்தது.
கண்கள் சூரியனின் ஒளியால் கூச ஆரம்பித்தன. “எத்தனை நேரம் இங்கே இதை யோசித்துக்கொண்டிருக்கிறேன்? எண்ணங்கள் கழிவு நுரைகள் என நுரைத்துக்கொண்டிருக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் நாற்றம் வெளியே தெரியத்துவங்கிவிடும் என்பது போல. இன்றே இதை முடித்துக்கொள்வோம். ஒரு குறுஞ்செய்தி, பின் அவனை செயலியிலிருந்து நீக்கிவிட்டால் அனைத்தும் முடிந்துவிடும். ஆம், இது சரியான தருணம். இனிமேலும் இதை நீட்டித்து அவஸ்தைக்குள்ளாவதை விட இங்கே நிறுத்திக்கொள்வதே மேல். போதும்… இம்மாய வெளியில் என்னை நான் வைத்து விளையாடிக்கொண்டிருந்தது”.
கிழே இறங்க படிகளில் கால்வைத்த போது முருங்கை மரத்திலிருந்து குயில் கூவியது. இவளைப் பார்த்து இடைவிடாது ஏக்கத்துடன் கூவியது. சற்று நிறுத்தி மீண்டும் கூவியது. “இத்தனை ஏக்கம் ஒரு உயிருக்குள் எப்படி வந்தது? எதற்காக ஏங்கி ஏங்கி கத்துகிறது?” அதன் பக்கத்துக் கிளையில் அதன் இணைப் பெண்குயில் வெறுமனே அதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது. “அது ஒருமுறை கூவினால் இது நிறுத்திவிடுமா? இல்லை, அதற்கு அது ஒரு பொருட்டே இல்லையா? அந்தச் சின்ன உயிருக்குள்ளிருந்து இந்த அண்டத்தை நிகராகவைக்கும் ஏக்கம் எப்படி வந்தது?” அது மீண்டும் உக்கிரமாக வெளியை நோக்கி கத்தத்துவங்கியது.
அவள் அறைக்குச் சென்று மொபைலை எடுத்து செயலிக்குச்சென்று இளிப்பானை இட்டாள் அவனுக்கு அனுப்புவதற்கு.

***

-அனங்கன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *